New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter -2
உன் வருகைக்காகக்
காத்திருக்கும்
என் மன ஊஞ்சல்,
நீ வந்து ஆடிட தான்
தவமிருக்கிறது.
காலையில் எழுந்ததும், அப்பாவை எழுப்பி குளிக்க வைத்து எல்லாம் செய்து படுக்க வைத்தாள். அதன் பிறகு தானும் குளித்து, கஞ்சி செய்து இருவரும் சாப்பிட்டனர்.
“அப்பா நான் வேலை கேட்க போறேன். மதியம் வந்திடறேன்”... என்றாள் அவர் அருகில் சென்று.
அவருக்கு பெண் வேலை தேடி அலைவதே வருத்தமாக இருந்தது. தேவையானி வெள்ளை நிறம் இல்லை. நல்ல கோதுமை நிறம். இப்போது சில நாட்களாக வெய்யிலில் அலைந்து கொஞ்சம் கருத்து போயிருந்தவளை பார்க்க பார்க்க மனதில் வலி அதிகமானது.
அவர் சங்கடபட்டால் அவளும் வருந்துவாள் என்பதால் கண்களை மட்டும் மூடி சரி என்பதாக தலையசைத்தார்.
எளிய காட்டன் சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டாள். அந்த வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி கூட இல்லை. அது அவசியம் என்று தோன்றாததால் அவள் வாங்கவில்லை. நெற்றிக்கு நடுவில் பொட்டை உத்தேசமாக வைத்து கொண்டாள். தலை முடியை இறுக பின்னலிட்டு கொண்டு கிளம்பினாள். முதலில் நேராக கற்பகம் வீட்டிற்கு சென்றாள்.
”அக்கா அக்கா” உள்ளே செல்ல தயக்கமாக இருக்க வெளியே நின்றபடியே அழைத்தாள்.
“வா தேவி, உள்ளே வா”... என அழைத்தாள் கற்பகம்.
மரியாதைக்காக உள்ளே சென்றவள் நின்ற வாக்கிலேயே, “வேலை கேட்க போகலாமா” என கேட்டாள். அப்போது தான் அவள் கணவன் உள்ளிருந்து வெளியே வந்தான்.
“வாம்மா” என அழைத்தான், அவனுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தவள் கற்பகத்தை பார்த்தாள். கற்பகம் கணவனை பார்த்தாள். இருவரும் ஏதோ பார்வை பரிமாறி கொண்டனர்.
“நீ ஒரு அரைமணி நேரம் இங்கே இரும்மா, நான் போய் பேசிட்டு கற்பகத்துக்கு போன் போடறேன் அப்பறம் வா”... என்றான்.
இவள் சரி என தலையசைத்தாள். அவன் கிளம்பி வெளியே செல்ல, “இரு தேவவி வரேன்”... என கணவன் பின்னாலேயே ஓடினாள் கற்பகம்.
“ஏங்க அந்த பொண்ணு வேற நம்பி வந்திருக்கு எப்படியாவது பேசி ஏற்பாடு பண்ணுங்க”... என்றாள் கெஞ்சலாக.
“நீ எனக்கு அவன் கிட்ட மிதி வாங்கி கொடுக்காம விட மாட்ட போல”... என முனகிக்கொண்டே கிளம்பினான்.
உள்ளே வந்த கற்பகத்தை கலவர முகத்துடன் பார்த்தாள் தேவி, “என்னக்கா ஏதாவது பிரெச்சனையா”... என கேட்டாள்.
அதெல்லாம் ஒண்ணுமில்லை தேவி, “நேத்தே கேட்டு வைக்க சொன்னேன் இது மறந்துருச்சி”... என்றாள் கணவனை.
“சரிக்கா, அண்ணன் கூப்பிட்டதும் சொல்லுங்க நான் வீட்டுல இருக்கேன்”... என கிளம்பினாள்.
“அட அங்க போய் தான் என்ன பண்ண போற, உட்காரு”... என டிவியை ஆன் செய்து விட்டு அவளும் அமர்ந்தாள்.
சிமெண்ட்டும் சிப்ஸ் மண்ணும் சேர்ந்த கலவையை பெரிய பெரிய ஹாலோபிளாக் அச்சில் வார்த்து கொண்டு இருந்தான் அவன். அந்த தெருவின் கடைகோடியில் இருக்கும் இடம் அது. கிட்டதட்ட மூன்று நான்கு கிரவுண்ட் இருக்கும். அதில் ஒரு பக்கம் வரிசையாக சிறிய சிறிய அறைகள் ஐந்து ஆறு இருந்தது. பெரிய கலவை இயந்திரங்கள் இரண்டும், லோடு ஏற்றும் லாரிகள் மூன்றும் நின்று இருந்தன. வாசலிலேயே ஒரு சிறிய அறை ஆபீஸ் என்பது போல ஒரு மேசை நாற்காலியுடன் இருந்தது. அதற்கு பக்கத்தில் ஒரு அறை மூடி கிடந்தது. அதற்கு பக்கத்தில் தண்ணீர் டாங்க். கலவை மண் பூசிய லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு ஆர்ம் கட் பனியன் அணிந்தபடி கீழே குனிந்து வேலை செய்து கொண்டிருந்தான் அவன். அப்போதுதான் வெய்யில் ஏற துவங்கி இருந்தாலும் அவன் உடலில் வியர்வை ஆறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது. குனிந்து நிமிர்ந்து அவன் வேலை செய்ததில் அவனின் சதை கோலங்கள் அந்த வெயில் பட்டு வியர்வையில் மினுமினுத்தது. தலையில் கர்சீப் கட்டி இருந்தான்.
அவன் பின் புறமாக நின்று வாசு என அழைத்தான் கோபால்.
திரும்பி பார்க்காமலே, “லோட் ஏத்தியாச்சு, வவுச்சர் அங்க டேபிள் மேல வச்சிருக்கேன் எடுத்துக்கோ”... என்றவன் கவனம் எல்லாம் வேலையில் தான் இருந்தது.
அங்கே கிட்டதட்ட ஒரு இருபது பேர் வேலை செய்வார்கள். எல்லாரும் அவர்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள். சுற்றிலும் பார்வையை ஓட்டிய கோபால், வாசு என மீண்டும் அழைத்தான்.
இன்னும் அவன் போகாமல் இருப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான் அந்த வாசு.
“ஆபீஸ் வேலைக்கு ஒரு ஆள் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தல்ல ஒரு ஆள் கிடைச்சிருக்கு வர சொல்லவா”... என்று கேட்டான் தயங்கி தயங்கி.
“ம் வர சொல்லு பார்க்கலாம்”... என்றவன் தலையில் இருந்த கர்சீபை கழட்டி முகத்தை துடைத்தான்.
அப்போதும் கோபால் அங்கிருந்து போகாமல் அப்படியே நிற்க இன்னும் என்ன என்பதாய் பார்த்தான்.
“அது ஒரு பொண்ணு”... என்றான் ஒரு எட்டு பின்னடைந்து கொண்டே
அதை கேட்ட வாசு புருவம் சுருக்கி அவனை பார்த்து “இப்ப ஏன் பின்னாடி போற”... என்றான்.
“ஆ நீ பட்டுனு அடிச்சுட்டா”...
“அடிப்பேன்னு தெரியுதுல்ல அப்பறம் எதுக்கு பிடிக்காததை பேசற”... என்றான் சாதாரண குரலில்.
“ஆமா இவனுக்கு அப்படியே பொண்ணுங்கன்னா பிடிக்காது பாரு. கண்டவளையும் கூட்டிட்டு வந்து கூத்தடிக்கறது யாருக்கும் தெரியாமலா இருக்கு”... என முனகிகொண்டான் கோபால்.
அவன் முனகலை கூட அறிந்து கொண்டவன், “வேலை நேரத்தில எனக்கு வேலை மட்டும் தான் முக்கியம். அவளுங்க என்ன பன்றாளுங்கன்னு எல்லாம் என்னால பார்த்துட்டு இருக்க முடியாது. ஏதாவது பசங்க இருந்தா சொல்லு”... என்றான்.
‘இங்க கூடத்தான் நிறைய பொம்பளைங்க வேலை செய்றாங்க’ என வாய் வரை வந்ததை அப்படியே நிறுத்தி கொண்டான் கோபால். அவன் இன்னும் போகாமல் இருப்பதை கண்டவன் புருவம் நெருங்க அவனை பார்த்தான்.
“வாசு வாசு, நான் சொல்ல வந்ததை கடகடன்னு சொல்லிடறேன். அப்பறம் நீ என்ன முடிவு சொல்றியோ சொல்லு" என்றான் வேகமாக. வாசு ஒரு நொடி அமைதியாக நெற்றியை கீறியபடி நின்றான். அதுவே சொல்லு என்பதாக பொருள் பட கோபால் கூற துவங்கினான்.
“அந்த பொண்ணு நம்ம தெருவுக்கு வந்து ஆறு மாசம் தான் இருக்கும். கூட யாரும் இல்லை, வயசான அப்பா மட்டும் தான். அவரும் கைகால் விழுந்து படுத்த படுக்கையா இருக்காரு. ரொம்ப தூரமா வேலைக்கு போனா அப்பாவை பார்த்துக்க முடியாதுன்னு அந்த பொண்ணு பக்கத்திலேயே வேலை தேடிட்டு இருக்கு. பாவம் நல்ல பொண்ணு செலவுக்கு இல்லாம திண்டாடுது. பார்க்கவே கஷ்டமா இருக்குன்னு என் பொண்டாட்டி வேற கண்ணை கசக்கறா”... கடகடவென சொல்லி முடித்தான்.
அங்கு ஓரமாக தொங்க விடப்பட்டது இருந்த சட்டையில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தபடியே. “அதுக்கு”... என்றான் வாசு.
‘அடப்பாவி தொண்டை தண்ணி வத்த இவ்வளவு சொல்லிறுக்கேன் ஒரே வார்த்தையிலே இப்படி ஆஃப் பண்ணிட்டானே’.. என நினைத்தவன், “அதுக்கில்லை வாசு” என கோபால் துவங்க, கையை உயர்த்தி நிறுத்த சொன்னவன் “என்கிட்ட பொம்பளைங்க சிம்பதி எல்லாம் வொர்க்அவுட் ஆகாது. அதனால நீ இதுக்கு மேல ட்ரை பண்ணாத கிளம்பு”... என்று விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டான்.
இனி இவங்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை என நினைத்து கொண்டே வவுச்சர் எடுத்துகொண்டு வெளியே வந்தான் கோபால். அதற்குள் கற்பகம் போன் செய்தாள்.
“என்னடி”...
“என்னடின்னா என்ன சொன்னாரு அவரு”...
“ம்ம் என்னை உதைக்காம விட்டானே அதுவே பெருசுன்னு நினைச்சுட்டு இருக்கேன்”... என்றான் கடுப்புடன்.
“என்னங்க இப்படி சொல்லிட்டீங்க அவ வேற நம்பிக்கையா உட்கார்ந்து இருக்கா. இப்போ அவகிட்ட என்ன சொல்வேன்”... புரியாமல் தவித்தாள் கற்பகம்.
“எனக்கும் புரியுது கற்பகம், ஆனா அவன் ஒரு விடாகண்டன். அவன் நினைச்சது தான் நடக்கும். என்ன செய்ய சொல்ற. வேற ஏதாவது வேலை கிடைக்குதா பார்க்கறேன் கொஞ்சம் பொறுத்து போக சொல்லு” என்றான்.
“சரி நான் சொல்றேன்”... என கூறி வைத்து விட்டாள் கற்பகம்.
இதை எப்படி தேவியிடம் சொல்வது என தெரியாமல் அவள் தவித்து நிற்க அதற்கு வேலையே வைக்காமல், “என்னக்கா வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்களா”... என்று கேட்டாள் அங்கு வந்த தேவி.
“அவன் லூசு தேவி, பொண்ணுங்களை வேலைக்கு வச்சுக்க மாட்டானாம், ஆனா பொண்ணுங்ககிட்ட எல்லா வேலையும் காட்டுவானாம். பெரிய கொள்கை வாதின்னு நினைப்பு. அங்கேயே ஆந்திராகாரங்க குடும்பமா வேலை செய்யுறாங்க. அவங்க எல்லாம் பொண்ணுங்க இல்லையா. பெரிய இவனாட்டம்”... என சகட்டு மேனிக்கு திட்டினாள் கற்பகம்.
தேவிக்கு சிரிப்பு தான் வந்தது, இதழ் பிரிக்காமல் சிரித்தவள், “அக்கா விடுங்க எனக்கு இதெல்லாம் பழகி போச்சு. அதுக்காக மத்தவங்களை திட்டி என்ன ஆக போகுது சொல்லுங்க, பார்த்துக்கலாம்”... என்று விட்டாள்.
கற்பகத்துக்கு அவளின் குணம் தெரியும், ஆனால் அவள் படும் கஷ்டம் அதுவும் தெரிகிறதே என்ன சொல்வது. ஒற்றை பெண்ணாய் உடம்புக்கு முடியாத பெற்றவரை வைத்து கொண்டு அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறாள். எப்படியாவது வேறு எங்காவது வேலைக்கு பார்த்து கொடுக்க வேண்டும் என எண்ணிக்கொண்டாள்.
தேவியின் வேலை தேடும் படலம் ஆரம்பம் ஆனது. ஆனால் பக்கத்திலேயே எத்தனை இடத்தில் தான் வேலை கிடைக்கும்.
மூன்று நாட்கள் சென்றிருக்கும், இரவில் கற்பகத்தின் வீட்டு கதவு தட்டப்பட்டது. கோபால் தான் வந்து திறந்தான். தேவி கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தாள்.
“ஏய் கற்பகம் இங்க வா” என குரல் கொடுத்து கொண்டே, என்னம்மா ஆச்சு”... என கேட்டான்.
“அண்ணா அப்பாக்கு ரொம்ப முடியலை, ஹாஸ்பிடல் போகணும். ஆம்புலன்ஸ் எதுவும் கிடைக்கலை வண்டி ஏதாவது கிடைக்குமா”...பதட்டமாக கேட்டாள் தேவி.
“அந்த பாரதி ஆட்டோ வச்சிருப்பான் நான் போய் கேட்கறேன்”... என கிளம்பினான்.
“இல்லைன்னா அந்த அண்ணன் கோயம்பேடு கிளம்பிட்டாராம், கேட்டுட்டு தான் வந்தேன்.”... என்றாள் அவசரமாக.
“வேற யாருகிட்ட” என யோசித்தவன், கற்பகம் என் போனை எடு வாசுகிட்ட கேட்போம்”... என்றான்.
“அவர்கிட்ட வண்டி இருக்கா” என்றபடியே போனை எடுத்து கொடுத்தாள் கற்பகம்.
அவளுக்கு பதில் ஏதும் கூறாமல், போனை எடுத்து பேசினான். “ஒரு அவசரம் வாசு கொஞ்சம் வண்டி வேணுமே, அந்த பொண்ணோட அப்பாக்கு முடியலைடா” என பேசிக்கொண்டிருக்கும்போதே போன் கட் ஆனது.
“ம்ச் புல்லா குடிச்சிருப்பான் போல”, என கூறியவன் “நீ இரும்மா நான் நேரா போய் கேட்டுட்டு வரேன்” என்று கிளம்பினான்.
“அண்ணா நானும் வரேன், நானே கெஞ்சியாவது கேட்கறேன், அக்கா நீங்க கொஞ்சம் அப்பாவை பார்த்துகோங்க”... என்று கூறிவிட்டு அவனுடன் ஓடினாள்.