• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 11, 2025
Messages
39
“ஆனா ஒரு நொடி தயங்கியவள், அவன் வந்து பேசிட்டு போனப்ப உங்க முகமே மாறிடுச்சி, உங்க பார்வையிலே நான் தப்பானவளா இருக்க கூடாதுன்னு மனசு கிடந்து அடிச்சுகிட்டு இருந்தது. அதனால தான் இதெல்லாம் உங்ககிட்ட சொல்ல வந்தேன். வேற எதுக்காகவும் இல்லை. நாளைக்கே அவன் என்னை தேடி வரலாம், வயசான அப்பாவை வச்சிட்டு ரொம்ப தூரம் ஓட முடியாம தான் இப்படி கண்ணுக்கு மறைவா வாழந்துட்டு இருந்தேன். கடைசி காலத்திலேயாவது அவர் நிம்மதியா போய் சேந்தாரே எனக்கு அதுவே போதும். இனி என்னோட வாழ்க்கையை நான்”... அவள் பேசி முடிக்கும் முன் அமர்ந்து இருந்தவன் எழுந்து நின்றான்.

கையை உயர்த்தி அவள் பேச்சை தடுத்தவன், “சொல்ல வேண்டியது முடிஞ்சதுன்னா கிளம்பு” என்றான் கடுமையான குரலில்.

இதற்கு முன் இது போன்ற கடுமையான முகத்தை அவனிடம் கண்டது இல்லை, சிரித்து சிரித்து பேசுபவன் இல்லை என்றாலும் அவன் கோபமுகம் கொண்டு எப்போதும் அவளிடம் திரும்பியது இல்லை. ஒரே ஒரு முறை அவளை திட்டினான், அதுவும் அவளை பாராமல் வேறு எங்கோ பார்த்து கொண்டு தான் பேசினான். அதற்கே அவளுக்கு தாங்க முடியாத வேதனையாக இருந்தது. இப்போது அதை விட கடுமையாக இங்கே இருந்து போ என்று அவன் கூறும்போது ஏதோ இதயத்தின் மீது பாறையை தூக்கி வைத்தது போல கணத்தது. தந்தையை இழந்து நிராதரவாக நிற்கும் இந்த நிலையில் அவனின் அலட்சிய சொல் அவளை மிகவுமே ரணப்படுத்தியது.

கண்கள் கலங்கி கண்ணீர் முட்டிகொண்டு நிற்க எங்கே அழுது விடுவோமோ என்ற தவிப்பில் உதட்டை அழுந்த கடித்தவள் அங்கிருந்து தளர்ந்த நடையுடன் வெளியேறினாள். இது வரையில் யாருடைய அனுதாபத்தையும் பெற நினைத்தது இல்லை. ஆனால் இன்று தாய் மடி தேடும் பிள்ளை போல மனதில் கணத்து கொண்டிருந்த விஷயங்களை அவனிடம் கொட்டி தீர்த்து விட வேண்டும் என்று வந்தவள். அவனின் செயலில் மொத்த ஜீவனும் தொலைந்தது போல உணர்ந்து அங்கிருந்து வெளியேறி இருந்தாள்.

காலில் கல் குத்தியதா இல்லை கண்ணாடி கீறியதா என்று கூட கவனிக்கும் நிலையில் இல்லாமல், வெறித்த பார்வையுடன் தளர்ந்த நடையுடன் வெளியேறி செல்பவளை கூர் பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான் வாசு.

இருள் சூழ்ந்த சாலையில் ஒளியின் கீற்றை தேடி சென்றவள், அந்த பாதை மொத்தமும் கரும்புகை சூழ்ந்து கொள்ள செல்லும் திசை தெரியாமல் வந்த வழியே திரும்பி வந்திருந்தாள்.

வீட்டில் விளக்கின் கீழே புகைப்பட சட்டத்தினுள் சிரித்து கொண்டிருந்தார் சோமு, “அப்பா ஏன்பா என்னை விட்டு போனீங்க, நான் இப்போ அனாதையா ஆகிட்டேன் பா. யாரை நம்பி என்னை விட்டுட்டு போனீங்களோ அவர் கூட என்னை புரிஞ்சுக்கலை. என் பக்க நியாயம் அவருக்கு புரியலை. இங்கே இருந்து போன்னு சொல்லிட்டாரு. உங்களுக்கு அப்பறம் ஒரு அம்பளைய நம்பினேன்னா அது அவரா தான் இருக்கும். ஆனா இப்போ.. இப்பவும் நான் அவரை நம்பரேன், அவர் என்னை நம்ப தயாரா இல்லை. இங்கே பாருங்க தனியா இருக்கேன். தைரியமா இருக்கணும்னு சொல்லி சொல்லி வளர்த்தீங்க அதனால தவறான முடிவு எடுக்க தெரியலை. என்னை ஏன்பா கோழையா வளர்க்கலை. அப்படி வளர்த்திருந்தா அன்னைக்கு அவனை எதிர்த்து வந்திருக்க மாட்டேன். யாருக்கோ என்னவோ நடந்தா நமக்கு என்னனு அவனோடவே சுமாரா வாழ்ந்து இருப்பேனோ என்னவோ. ஆனா நீங்க கொடுத்த தைரியம், நேர்மை, கண்ணெதிரே நடக்கற அநியாயத்தை தட்டி கேட்கனும்ற எண்ணம் இதெல்லாம் தானே என்னை இந்த நிலைக்கு தள்ளிருக்கு. நானும் எல்லாரை போலவும் நம்ம வாழ்க்கை நமக்கு முக்கியம்னு இருந்திருக்கனுமோ, இல்லை இல்லை என்னால அப்படி எல்லாம் கண்ணை மூடிக்கிட்டு வாழ முடியாது. எனக்கு யார் இருந்தாலும் இல்லைன்னாளும் பரவாயில்லை, நான் என்ன தப்பு செய்தேன் நான் அழ மாட்டேன். நான் அழ மாட்டேன் என கூறிக்கொண்டே கண்ணை துடைத்தவள். ஆனா அப்பா கொஞ்சம் காலமா எனக்குன்னு சாய்ஞ்சுக்க ஒரு தோள் இருக்குன்னு நம்பிட்டேன். இப்போ அது இல்லாம போய்டுமோன்னு பயமா இருக்கு. கைக்கெட்டு தூரத்திலே விடியலை காட்டி மீண்டு வரவே முடியாத இருட்டுக்குள்ள தள்ளினா எப்படி இருக்கும் அப்படி இருக்குப்பா. உங்க பொண்ணு தனியா என்ன பண்ணுவான்னு உங்களுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லையா. இல்லை நீ எப்படியாவது போ நான் நிம்மதியா போறேன்னு போய்ட்டீங்களா. என்னையும் கூட்டிட்டு போய்ருக்கலாம்ல, நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது ஆனா அந்த அருண் திரும்ப இங்கே வந்து நிக்கும்போது ஒண்ணு நான் உயிரோட இருக்க கூடாது, இல்லைன்னா அவனே என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போற மாதிரி ஏதாவது பண்ணுங்க சரியா” என கேள்வியோடு முடித்தாள்..

அழுது அழுந்து முகம் முழுவதும் வீங்கி கிடந்தவள் சோர்வுடன் அப்படியே உறங்கி போனாள். உறக்கம் என்பது தற்காலிக மரணம் தானே. நடந்த இனி நடக்க வேண்டிய செயல்களை மறந்து நிம்மதியாக சிறிது நேரம் உறங்க முடியும் என்றாலும் அது வரம் தான்.

தந்தையின் புகைப்படத்தை பார்த்தபடியே, உறங்கி இருந்தவளை தொட்டு உலுக்கினாள் கற்பகம். கண் விழித்து பார்த்தவள் மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.

“தேவி அவர்... வாசு.. எங்கே போனார் தெரியுமா” என்று கேட்டாள்.

இவள் புரியாமல் பார்க்க, “இவர் லோடு அடிக்கணும்னு போனாரு பார்த்தா கம்பெனி இழுத்து மூடி இருந்துச்சாம். அவருக்கு போன் போட்டா எடுக்கவே இல்லையாம். அதான் உன்னை கேட்கலாம்னு”...

அவள் புரியாமல் விழிப்பதை கண்டவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது. ஆனால் இந்த பெண்ணை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை. ஆனாலும் இந்த வாசு இப்படி செய்திருக்க வேண்டாம், என்ன நடந்தது என்று ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம், இவள் முகத்தை பார்த்தால் தப்பாக நினைக்க தோன்றுமா. என்னவோ இவள் தான் வேண்டும் என்று பிடிவாதமாக நின்றது எல்லாம் மறந்து போனதா. கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாமல் அப்படி என்ன காதல். உண்மையாக காதலித்து இருந்தால் குறைந்த பட்சம் என்ன நடந்தது என்றாவது கேட்டிருப்பான். ச்சா என்ன மனிதர்களோ, வெறித்த பார்வையுடம் அமர்ந்து இருந்தவளை பார்க்க பார்க்க மனம் பொறுக்கவில்லை அவளுக்கு.

“தேவி எழுந்து வேலையை பாரு” அவள் கூற என்ன வேலை இருக்கு என்பதை போல பார்த்தாள் பெண்.

தந்தை இருந்தவரை அவரையே சுற்றி வந்தவள், எப்போதும் இறுக்கம் சூழ்ந்த முகமாக இருந்தவள் சில நாட்களாகத்தான் கொஞ்சம் இளகி சிரித்த முகமாக இருந்தாள். அந்த சிரிப்பை தந்தை பாதி எடுத்து கொண்டு சென்று விட்டார், என்றால் அவளின் மொத்த ஜீவனையும் இவன் எடுத்து கொண்டானே. இப்படி வாடிய கொடி போல கிடக்கிறாளே என்று மனதிற்குள் காந்தியது.

“எழுந்து குளி அப்பா படத்துக்கு விளக்கு ஏத்து, எல்லாம் நல்லபடியா நடக்கும், அப்பாவை வேண்டிக்கோ நான் போய் உனக்கு ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வரேன்” என்றாள்.

தேவி ஏதும் பேசவில்லை, அமர்ந்தபடியே இருந்தாள். அவள் கையை பற்றி அழுத்தி கொடுத்து விட்டு கற்பகம் சென்று விட்டாள்.

எதற்காக இந்த பிறவி, தாயை இழந்து ஒரு குழந்தை பருவம், தந்தை நோயில் கிடக்க ஒரு பதிண்பருவம், இன்னதென தெரியும் முன்னே விலகி வந்த ஒரு திருமண பந்தம், நான் இருக்கிறேன் எல்லாமாக என மென்சாரலை வீசிய ஒரு காதல் காலம், தந்தைக்கு பிறகு அணைத்து ஆறுதல் கூறி ஆசையாக மலர்ந்து இப்போது அப்படியே வாடி போக விட்டு சென்றது என்ன விதியின் செயலா அல்லது எனது வினைப்பயனா விரக்தியாக புன்னகை பிறந்தது அவளிடம் இருந்து. அப்படியே சுருண்டு படுத்து கொண்டாள்.

இரண்டு நாட்கள் முடியும் நேரம் அவன் வந்து நிற்பான் என்ன செய்வது என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. இன்னமும் கூட அவள் நெஞ்சில் தைரியம் ஒட்டி கொண்டு இருந்தது. விவாகரத்து ஆன பிறகு அவன் வந்து பிரெச்சனை செய்தால் அதை சட்ட ரீதியாக சந்திக்க அவள் தயாராகத்தான் இருந்தாள். ஆனால் வாசுவின் பாராமுகம் மட்டுமே இப்போது அவளை பலவீனம் அடைய செய்திருந்தது. ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றாலே வீடு தேடி வருபவன். இப்போது அவளை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறான் என்றால் அவளை வெறுத்து விட்டதாக தானே அர்த்தம்.

நேசிக்க ஜீவன் இன்றி வாழ்ந்த இரு உள்ளங்கள், உனக்கு நான் இருக்கிறேன் என்று வார்த்தையாய் கூறிக்கொள்ளவில்லை என்றாலும் மனதால் உணர்ந்து கொண்டிருந்த நேரத்தில் இப்படி நடுவில் விட்டு சென்றது மனதின் வேதனையை கூட்டுவதாக இருந்தது.

கற்பகம் மட்டும் இல்லை என்றால் ஊண் உறக்கம் இன்றி அப்படியே கிடந்து மடிந்து போய்ருப்பாள், ஆனால் கற்பகமும் கோபாலும் அவளை அப்படி தனியாக விடவில்லை. அதற்காக கூடவே இருந்தனர் என்றும் சொல்ல முடியாது. அவ்வப்போது வந்து கவனித்து கொண்டனர்.

மறுநாளில் கற்பகத்தை தேடி சென்றாள் தேவி, “அக்கா கடைசியா ஒரு உதவி செய்யறீங்களா”

“என்னடி கடைசி அது இதுன்னு பேசிட்டு, சொல்லு என்ன செய்யனும்” உரிமையாக கடிந்து கொண்டாள்.

“இந்த.. இதை வித்து காசு வாங்கி தர முடியுமா” அவள் கையில் இருந்ததை கண்ட கற்பகம், அதிர்ந்து போய் அவளை பார்த்தாள்.

அவள் அதிர்வை புரிந்து கொண்ட தேவி, “நீங்க நினைக்கிற மாதிரி இது என்னோடது கிடையாது, என்னோடதை எப்போவோ கழட்டி அவன் முகத்துல வீசிட்டு, முறையா விவாகரத்து வாங்கிட்டு தான் பிரிஞ்சு வந்தேன். இது என்னோட அம்மாவோடது, எவ்வளவு கஷ்டம் வந்தப்ப கூட அப்பா இதை விற்க நினைக்கலை, நானும் அப்படியே தான் வச்சிருக்க நினைச்சேன். ஆனா இப்போ அதுக்கான நேரம் வந்திருச்சு”

அந்த தாலி சரடை அப்படியும் இப்படியுமாக, திருப்பி பார்த்த கற்பகம் “இதை இப்ப விற்க என்ன அவசரம் தேவி” என கேட்டாள்.

“அவசரம் மட்டுமில்லை அக்கா அவசியமும் கூட, அவர் கடனை திரும்ப குடுக்கனுமே, ஏற்கனவே வாங்கினது, அப்பா கடைசி செலவுக்கு கொடுத்தது. எல்லாம் சேர்த்து நிறைய வந்திருக்கு இதை வித்தா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்” என்றாள்.

“தேவி, அவர் எங்கே போனார் என்னனு தெரியலை நீ இப்படி அவசரப்பட வேண்டாம்னு நினைக்கிறேன்”

“இல்லைக்கா அவசரப்படலை, என்னோட கஷ்டத்துக்கு இன்னொருத்தர் ஏன் நஷ்டப்படனும். நீங்க வித்து தாங்க அக்கா” என்று அவள் கையில் கொடுத்து விட்டு சென்றாள்.

அந்த நகையை பார்த்தபடியே நின்று இருந்த கற்பகத்தை வந்து உலுக்கினான் கோபால், “என்னடி இது யாரோடது நீ ஏன் கையில வச்சிருக்க”.

“தேவி அம்மாவோட நகையாம், வித்து கொடுக்க சொல்றா. உங்க வாசுவோட கடனை அடைக்கனுமாம். ஆமா நான் தெரியாம தான் கேட்கிறேன் அந்த மனுஷன் என்ன நினைச்சுட்டு இருக்காரு. என்ன நடந்ததுன்னு நேர்ல அந்த பொண்ணுகிட்ட கேட்டிருக்கலாம், அதை விட்டுட்டு இப்படி எங்கே போனாரு என்ன ஆனாரு தெரியாம அவர் பாட்டுக்கு கிளம்பி போய்ட்டாரு. நாளைக்கு அவன் வந்து நிப்பான். பாவம் அவளுக்கு ஆதரவுக்கு யார் இருக்கா. அவளை பார்த்தா ஒருத்தனை ஏமாத்திட்டு ஓடி வந்தவ மாதிரியா இருக்கு. அதுவும் உடம்புக்கு முடியாத அப்பனை கூட்டிட்டு தான் ஒருத்தி வருவாளா. இதெல்லாம் யோசிக்க மாட்டாரா அவரு. அவர் மட்டும் என்ன அப்படியே உத்தமனா” அடுத்து அவள் பேச எத்தனிக்கும் முன் “ஏய் நிறுத்துடி” என கத்தினான் கோபால்.

“இங்கே பாரு கற்பகம் உனக்கு இருக்கறது கோபம், அந்த பொண்ணை நினைச்சு ஆதங்கம் இது எல்லாமே எனக்கும் இருக்கு. ஆனால் அதை விட வாசு மேலே நம்பிக்கை இருக்கு. அவன் கண்ணுல நான் பார்த்தேன்டி. தேவி மேலே ஒரு தூசி பட்டா கூட துடிச்சு போவான். ஆனால் என்ன எதையும் வெளியே காட்டிக்க தெரியாம கல்லுங்களோட கல்லாவே வாழ்ந்துட்டான். அதனால அவன் காதல் பொய்ன்னு சொன்னா என்னால அதை ஏத்துக்க முடியாது. என்ன காரணமோ தெரியலை, ஆனா நிச்சயம் ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்கும். தேவியை அவசரப்பட வேண்டாம்னு சொல்லு. வாசு நிச்சயம் திரும்ப வருவான்.

“அவன் கோபக்காரன், பாசம் காட்ட தெரியாதவன் தான் ஆனா நேர்மையானவன், அப்படியே அம்போன்னு விட்டுட்டு போக மாட்டான்”. கணவன் உறுதியாக சொன்னாலும் கற்பகத்திற்கு மனம் சமாதானம் அடைய மறுத்தது.

‘எப்படியாவது அந்த எடுபட்ட பய வந்து நிக்கறதுக்குள்ள ஏதாவது நடந்து அந்த பொண்ணை காப்பாத்திடு கடவுளே’ என்று வேண்டிகொண்டாள்.
 
Active member
Joined
May 9, 2025
Messages
121
Avalada ex ah Theda poettana
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top