New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter 16
நினைவலைகளில் நீந்துவதால்
நானும் மீனினம் தானோ!
அதனால் தானோ என்னவோ,
என் கண்ணீரின் சுவடுகள் கூட,
தண்ணீராய் தெரிகிறது.
தலைக்கு அடியில் ஒரு கையும் நெஞ்சின் மீது ஒரு கையும் வைத்து விட்டத்தை பார்த்தபடி படுத்து இருந்தான் வாசு.
லோடு இறக்கிவிட்டு சாவியை விரலில் சுழற்றியபடியே வந்த கோபால் ரிப்பீட் மோடில் ஒரே பாடல் ஒலித்து கொண்டிருப்பதை கண்டு திகைத்து நின்றான்.
இங்கே பாட்டு சத்தம் கேட்கறதே பெரிசு இதுல ஒரே பாட்டு திரும்ப திரும்ப கேட்பதை கண்டவன் என்னடா நடக்குது இங்கே என்று தலையை சொறிந்து கொண்டே அலுவலக அறைக்கு வந்தான், அங்கே வாசு படுத்திருந்த தோரணையும் கேட்டுக்கொண்டிருந்த பாடலும் அவன் கவனத்தை ஈர்க்க, சாவியை அதனிடத்தில் வைத்தவன் அங்கேயே நின்றான்.
கண்கள் திறந்திருந்த போதும், சுற்றிலும் நடக்கும் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை வாசு. அதை கவனித்தவன், வாசு வாசு என மெதுவாக அழைத்தான்.
அவன் அசையாமல் அப்படியே இருக்க, வாசு என்று சத்தமாக அழைத்தான்.
செவிக்கும் மனதிற்கும் இதத்தை கொடுத்து கொண்டிருந்த இனிய பாடலின் இடையே அபஸ்வரமாக கேட்ட கோபாலின் குரலில் எரிச்சலுற்றவன் “என்னடா” என கத்தி இருந்தான்.
அவன் அதட்டலில் அதிர்ந்த கோபால், “இல்லப்பா ஒரே பாட்டு திரும்ப திரும்ப கேட்குதே அதான் தூங்கிட்டியோன்னு நினைச்சு கூப்பிட்டு பார்த்தேன்” என்றான் தயங்கி.
“ஏண்டா தூங்கிட்டனான்னு, எழுப்பி தான் பார்ப்பியா போடா இங்கே இருந்து” என்றான் எரிச்சலுடன்.
“தூங்குறவங்களை தூங்குறாங்களான்னு எழுப்பி தானே பார்க்க முடியும்” என முனகிகொண்டே சென்றான் கோபால்.
அவன் வாசலை அடையும் முன் “கோபால் இங்கே வா” என அழைத்தான் வாசு.
அய்யயோ அடிப்பானோ என பயந்த கோபால், “இருக்கட்டும்பா நான் நாளைக்கு காலையில வரேன்” என அவசரமாக செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்ப எத்தனிக்க, “டேய் உன்னை இங்கே வர சொன்னேன்” என்றான் அதிகாரமாக.
“வாசு, நீ தூங்கற மாதிரி தெரியலை” அதான் என பயத்தில் வாய் குழறி ஏதோ பேச போக, “த்து இங்கே வாடா” என அழைத்தான் வாசு.
இனி போகலைன்னா எழுந்து வந்து அடிச்சாலும் அடிப்பான் என அறிந்தவன், மெல்ல உள்ளே அடி எடுத்து வைத்து “சொல்லுப்பா” என்றான்.
“ஏண்டா இப்படி பம்மற, நான் என்ன உன்னை ரேப் பன்னவா போறேன் இங்கே பக்கத்துல வா” என்றான் சாதாரணமாக.
இப்போது அவன் மீது கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை வர, அருகில் வந்தவன் “என்னப்பா” என்று கேட்டான்.
கையை நீட்டி மடக்கி சோம்பல் முறித்தவன், “எனக்காக ஒரு உதவி செய்யனுமே” என்றான்.
“என்ன வாசு உதவி அது இதுன்னு, சொன்னா செய்ய போறேன்”
“நீ மட்டும் இல்லை உன் பொண்டாட்டியும் செய்யனும்”
“என்ன என் பொண்டாட்டியுமா” இப்போது வெளிப்படையாக அதிர்ந்தான் கோபால்.
“ம்ம் நீயும் உன் பொண்டாட்டியும், என்கூட வரனும் தேவாவை பொண்ணு கேட்க”
“பொண்ணு கேட்க போறியா என்னப்பா சொல்ற, அந்த பொண்ணு இதுக்கு ஒத்துக்குமா”
“ஏன் உனக்கு இவ்வளவு சந்தேகம்”, அவன் பதட்டம் கண்டு புருவம் சுருக்கினான் வாசு.
“அதுகில்லைப்பா, அந்த பொண்ணு இதுக்கு.. சம்மதிக்குமான்னு?”
“ஏண்டா உணக்கெல்லாம் அந்த பொண்ணு கேட்குதான்னு தானே நினைக்கற”..
“ச்ச அப்படி இல்லை, ஆனா”
“தேவா ஒத்துக்குவா, அவங்க அப்பா சம்மதிச்சா போதும், தனியா போய் கேட்க ஒரு மாதிரி இருக்குடா” என்றான் கழுத்தை தேய்த்து கொண்டே.
“அப்படியா சொல்ற, தேவிக்கு சம்மதம்னா கேட்டுடலாம், நீ எப்போன்னு சொல்லு”
“நாளைக்கு”
“நாளைக்கா நாள் கிழமை எல்லாம் பார்க்க வேண்டாமா”
“இல்லைடா எனக்கு அதெல்லாம் பார்க்க பொறுமை இல்லை”
“சரி நாளைக்கு காலையில வந்துரு போய் பேசிடுவோம்” சொல்லிவிட்டு எழுந்து சென்றவன் மீண்டும் திரும்பி வந்தான். என்னவென வாசு பார்க்க,
“வாசு எனக்கு ஒரு விஷயம் கேட்கனும், தப்பா நினைக்க மாட்டியே”. என அருகில் வந்து அமர்ந்தான்.
“இல்லை சொல்லு”
“நீ கல்யாணத்துக்கு அப்பறம் உன்னோட அந்த பழைய சகவாசத்தை எல்லாம் விட்டுடுவ தானே, ஏன்னா பாவம் அந்த பொண்ணு உடம்பு முடியாத அப்பாதான் வாழ்க்கைன்னு வாழ்ந்துட்டு இருக்கு. தனக்குன்னு எதுவுமே செஞ்சுக்காது. அதை பார்க்கும்போது பாவமா இருக்கும். ஆனா வெளியே எதையுமே காட்டிக்காது. அந்த பொண்ணு இனியாவது சந்தோஷமா இருக்கணும். எனக்கு தங்கச்சி இல்லை அதை என் தங்கச்சியா தான் பார்க்கறேன், நீ தப்பா எடுத்துக்காதப்பா” என்றான்.
இல்லை என்று தலையைசைத்தான் வாசு.
“அப்போ நாளைக்கு காலையிலே வந்திருப்பா நாம போய் பேசிடலாம்”. அவன் உற்சாகமாக சொல்லி விட்டு எழுந்து கிளம்பினான்.
அவ என்னை நம்பறா அதனால யாருக்கும் நான் விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை என்று தான் நினைத்து கொண்டிருந்தான். ஆனால் கோபால், தேவா மீது இருக்கும் அக்கறையால் பேசும்போது அவனுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. செல்பவனை அழைத்தான்.
கோபால் திரும்பி பார்க்க, “இதுவரைக்கும் என் மனசால யாரையும் நினைச்சது இல்லை, இங்கே வந்த முதல் பொண்ணும் கடைசி பொண்ணும் அவ தான்” என்றான் நெஞ்சை தொட்டு காட்டி.
காதல் திருமணம் செய்து கொண்டு, பெற்றோர் ஊர் உறவை எல்லாம் விட்டுவிட்டு காதல் தான் பெரிதென்று வாழும் கோபாலுக்கு அவன் காதல் புரியாமல் இருக்குமா என்ன. சமீபகாலமாக அவன் தேவியை பார்க்கும் பார்வையில் எத்தனையோ வித்யாசம். அவள் எங்கே இருந்தாலும் கூட அவன் பார்வை அவளை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதை எல்லாம் கோபால் பார்த்துகொண்டு தானே இருக்கிறான். இது எல்லாவற்றிற்கும் மேலாக, தேவா அவனை அறைந்தது, அதன் பிறகு அவன் சோமுவுக்காக வந்தது, அவள் மயங்கி சரிந்ததும் இரவெல்லாம் கண் விழித்தே அமர்ந்து இருந்தது, மறுநாளும் அவளுக்காக வண்டி கொண்டு வந்தது, அவளை வேலைக்கு வர சொன்னது, அவளை ஒருவன் குறை சொன்னதற்காக அவனை அடித்தது, என்று வரிசையாக அவன் குணத்திற்கு மாறாக நடந்து கொண்ட வாசு கண் முன்னே வந்து சென்றான். இது எல்லாமே காதல் செய்த மாற்றமாகத்தான் இருக்கும் வேறென்ன இருக்க முடியும் என்று தான் தோன்றியது.
வீட்டிற்கு வந்து கற்பகத்திடம் சொன்னதற்கு “என்னங்க சொல்றீங்க” என பெரிதாக அதிர்ந்தாள்.
“இதுல இவ்வளவு ஷோக் ஆக என்ன இருக்கு, எனக்கு இது ஏற்கனவே தெரியும்” என்றான் அவள் கணவன்.
“என்ன தெரியுமாம் உனக்கு, அவர் குணமே சரியில்லைன்னு உனக்கே தெரியும் அந்த பொண்ணை அங்கே வேலைக்கு சேர்த்து விட்டதே தப்புன்னு எனக்கு தோணுது. நீ என்னவோ சாதாரணமா சொல்ற” அவள் படபடவென பொறிந்து தள்ள, “அடி யாருடி இவ என்ன சொல்ல வறேன்னு கூட கேட்காம பேசிட்டே இருக்க” என்று இடை நிறுத்தினான் கோபால்.
“சரிங்க சொல்லுங்க அவர் நல்லவர் வல்லவர் எது சொன்னாலும், நம்ம தேவி குணத்துக்கு ஈடாகுமா. இதோ இந்த ஊருக்கு வந்து இத்தனை நாள் ஆகுதே ஒருத்தரை நிமிர்ந்து பார்த்து இருக்குமா அந்த பொண்ணு. அது உண்டு அது வேலை உண்டுன்னு இருக்கும். ஆனா அவர் அப்படியா கண்டவங்க கூட”..
“கொஞ்சம் நிறுத்தறியா, அவன் என்ன போற வர்றவளை எல்லாம் கையை பிடிச்சு இழுத்துட்டு சுத்திக்கிட்டு இருந்த பொறுக்கியா. ஏதோ பெரியவங்க இல்லாம வளர்ந்தவன் அறிவுக்கெட்ட தனமா மனம் போன போக்கில வாழந்துட்டு இருந்தான். இப்போ திருந்தி நல்லபடியா குடும்பம் குட்டியா வாழணும்னு நினைக்கறான். ஏன் தப்பு செஞ்சவன் திருந்த கூடாதா. நல்லபடியா வாழ கூடாதா” மனைவியிடம் காய்ந்தான் கோபால்.
“நல்லா இருக்கு உன் நியாயம் அதுக்காக, அவர் திருந்தி வாழ நம்ம தேவி வாழ்க்கை தான் கிடைச்சுதா. அப்பாவை தவிர வேற சிந்தனை இல்லாத பொண்ணு, இனியாவது நல்லா இருக்க வேண்டாமா” கண்கள் கலங்கி போனது அவளுக்கு.
“ஏய் என்னடி நான் என்னவோ அந்த பொண்ணை கட்டாயகல்யாணம் பண்ண வைக்கற மாதிரி பேசற, அந்த பொண்ணு ஒத்துகிட்டு தான் இந்த விஷயமே நடக்க போகுது”
“என்னங்க சொல்றீங்க”
“ஆமாடி, அவங்களுக்குள்ள ஒரு பிடித்தம் இருக்கு, அதனால தான் வாசு கல்யாணத்துக்கு கேட்கறான். அப்படி தப்பான எண்ணம் இருக்கறவன் கல்யாணம் பண்ணிக்க கேட்க மாட்டான். நம்ம தேவியை பார்த்தா கொலைகாரன் கூட திருந்திடுவான்டி அப்படி ஒரு தெய்வீகமான பொண்ணு. நம்ம வாசு அவ்வளவு எல்லாம் மோசம் இல்லை. அவன் திருந்தியும் ரொம்ப நாள் ஆச்சு”.
அதுக்காக... கற்பகம் தயங்க, “கற்பகம் அவங்க விருப்பபட்டா அதுல தடை சொல்ல நீ யாரு இல்லை நான் தான் யாரு. வாசு நாளைக்கு நம்மளை துணைக்கு கூப்பிட்டு இருக்கான், நாம போறோம் முடிவு தேவி அவங்க அப்பா கையில தான் இருக்கு” என்றான்.
அதுவும் சரி தான் என்று இருவரும் படுத்து விட்டனர். காலையில் சொன்னது போலவே வாசு வந்து நின்றான். கற்பகம் ஏற்கனவே தேவி வீட்டில் இருந்தாலும் அவளிடம் எதுவும் தெரிந்தது போல காட்டிக்கொள்ளவில்லை.
கோபால் தனியாக இருப்பது கண்டு “எங்கே உன் வீட்டம்மா வரலையா” என்று கேட்டான் வாசு.
“அவ ஏற்கனவே அங்கே தான்பா இருக்கா நீ வா நாம போவோம்” என்று அவனை அழைத்து கொண்டே சோமுவை பார்க்க சென்றனர்.
முதலில் கோபால் உள்ளே நுழைய, வாசுவிற்காக சமைத்து கொண்டிருந்தவள், “அக்கா அண்ணா வந்துட்டாரு உங்களை தேடி” என கற்பகத்தை கேலி பேசி கொண்டே பின்னால் வாசு வருவதை கண்டதும் கண்கள் சுருக்கி வெளியே வந்தாள். கோபால் அருகேயே இருந்தாலும் அடிக்கடி எல்லாம் வீட்டிற்கு வர மாட்டான். எப்போதாவது ஏதாவது உதவி என்று கேட்டால் மட்டுமே வந்து செல்வான். அவன் வாசு இருவரும் ஒன்றாக வர இவளுக்குள் குழப்ப ரேகைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடியது.
இருவரையும் ஒருசேர வாங்க என வரவேற்றவள், "என்ன இங்கே" என வாசுவை பார்த்து கேட்டாள்.
“வரணும்னு தோணுச்சி” என்றான் அவன்.
இப்படி சொன்ன பிறகு ஏன் தோணுச்சு என்றா கேட்க முடியும் என அவள் நினைக்க, “அப்பா முழுச்சிருக்காராம்மா” என்று கேட்டான் கோபால்.
“ஆ..ஆமாண்ணா இப்போ தான் சாப்பிட்டார், முழுச்சி தான் இருக்கார்” என்று வாசுவை பார்த்து கொண்டே கூறினாள். அவள் பார்வை வாசுவை கூர்ந்ததை மனைவியிடம் கண்ணால் காட்டினான் கோபால்.
வாசு எழுந்து சோமுவின் அறைக்கு செல்ல, அவனை பின் தொடர்ந்து கோபாலும் சென்றான் அவன் பின்னே சற்று தயங்கி நின்ற கற்பகம் தேவியை பார்க்க, என்னக்கா என்று கேட்டாள் விழியால்.
இரு இரு என சைகை செய்தவள் அவர் அறை வாசலிலேயே ஓரமாக நின்று கொண்டாள்.
உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று எதுவும் கேட்கவில்லை, பின்னேயே சென்று பார்க்கவும் அவளுக்கு விருப்பமில்லை. சமயலறைக்கு சென்றவள் காப்பி கலந்து எடுத்து கொண்டு அவர்களிடம் சென்றாள்.
வாசு சோமுவின் கையை பற்றி இருக்க, அவரோ கண்கள் பனிக்க இருந்தார். என்ன ஆச்சு என அவள் பதறும் முன்பே உள்ளே போ தேவி என அவளை அனுப்பி வைத்தாள் கற்பகம்.
உள்ளே சென்றவள் அடுத்த ஐந்தே நிமிடத்தில் வேகமாக வெளியே வந்து அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள். அங்கே நின்று பாத்திரங்களை எடுத்து வைப்பதும் துடைப்பதுமாக இருந்தவள் சமையலறை வாசலையே எதிர் நோக்கி இருந்தாள். அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அங்கே வந்து நின்றான் வாசு.
அவன் தான் என்று தெரிந்ததும் பார்வையை கூட அவன் பக்கம் திருப்பாமல் நின்று இருந்தவளை, பின் கையை கட்டிகொண்டு சுவற்றில் ஒரு பக்க தோளை சாய்த்து நின்று பார்த்து கொண்டிருந்தான்.
ஒரு நெடுமூச்சை வெளியிட்டவள் “என்னை பத்தி என்ன தெரியும்னு இங்கே வந்து பேசிட்டு இருக்கீங்க” என்றாள் சீறலாக.
“என்னம்மா தெரியனும், உன்னை கண்ணெதிரே பார்த்துட்டு இருக்கேன் வேற என்ன தெரிஞ்சுக்கணும்”. அவன் சாதாரணமாக கூறினான்.
“இங்கே நீங்க பார்க்கறது மட்டும் இல்லை நான். எனக்கு வேற கடந்த காலம் இருக்கும், அது எப்படி வேணும்னா இருக்கலாம். எதுவுமே உங்களுக்கு தெரியாது. இப்படி அவசரப்பட்டு கல்யாணம் பேச வந்துட்டீங்க”