New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter 10
பூக்கள் கோபம் கொள்ளுமா?
கருப்பு வெள்ளைப் பூக்களாய் மின்னும்
உன் கண்களில் கண்டேன்
என் மீதான கோபத்தை.
வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் அடைத்து வைத்திருந்த கோபமும் அழுகையும் ஒரு சேர முட்டிமோதி கொண்டு வந்தது தேவிக்கு. என்ன நினைப்பில் என்னை அப்படி கேட்டான். அவனுடன் பழகும் தாராள குணம் கொண்ட பெண்களை போல என்னையும் நினைத்து கொண்டானா. அவன் எப்படி வேண்டுமானாலும் நினைத்து கொள்ளட்டும் அதற்காக என்னுடைய தரம் குறைந்து போகுமா என்ன. தனக்கு தானே சமாதானம் கூறிக்கொண்டாள்.
வீட்டிற்கு வந்திருந்தவள் தந்தையை கூட பார்க்காமல் அப்படியே கூடத்தில் அமர்ந்து விட்டாள். உடலெல்லாம் தகித்து கொண்டிருந்தது, அந்த வேலு சொன்னதற்கும் இவன் கேட்டதற்கும் என்ன வித்யாசம் இருக்கிறது. அவன் எல்லாருடைய எதிரில் வைத்து சொன்னான், இவன் அறைக்குள் வைத்து கேட்டான். இரண்டுமே ஒன்றுதான். இவன் கேட்டதை செய்தால் அவன் சொன்னது உண்மையாகி விடும்.
தந்தை உயிருக்காக இவனிடம் பணம் வாங்கி இருக்க கூடாது, அதனால் தானே அங்கே வேலை பார்க்க நேர்ந்தது. இல்லை இல்லை அவன் உதவி செய்வதற்கு முன்னரே அவனிடம் வேலைக்கு செல்லலாம் என்று இவள் முடிவெடுத்திருந்தாள். ஆனால் இப்போது அவனுக்கு கடன் கொடுக்க வேண்டுமே என்ற கட்டாயத்தினாலேயே அங்கே வேலைக்கு சென்றது தவறாக போனது. அதனால் தான் பணத்திற்காக எதையும் செய்வாள் இவள் என்ற எண்ணம் வந்திருக்கும் போல.
உலைகலனாக கொதித்து கொண்டிருந்த மனதை ஆற்றுவார் தேற்றுவார் யாரும் இன்றி அப்படியே தரையில் படுத்து விட்டாள். கண்களில் கண்ணீர் வழிந்து கன்னம் நனைத்திருக்க உறங்கி போய்ருந்தாள்.
மாலை கவிழ்ந்து இரவும் வந்து கூட விளக்கு இல்லாமல் இருள் அடைந்து கிடந்த வீட்டை பார்த்த கற்பகம், வேகமாக தேவியின் வீட்டிற்கு வந்தாள். அங்கே தரையில் தலையணை கூட இல்லாமல் படுத்திருந்த தேவியை பார்த்து விட்டு விளக்கை போட்டாள். திடீரென கண்களில் பட்ட ஒளிவெள்ளத்தில் திடுக்கிட்டு போனவள் கண்களை கசக்கி எழுந்து அமர்ந்தாள்.
“என்னடி அப்படியே படுத்துட்ட, அந்த வேலு நாய் சொன்னதை நினைச்சு கவலைபட்டுட்டு இருக்கியா” என கேட்டாள்.
அது மட்டுமா என மனதினுள் நினைத்தவள், அமைதியாக இருந்தாள். அவள் அமைதியே அது தான் காரணம் என்பது போல இருக்க, “விடுடி இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஒரு பொண்ணு கண்ணு முன்னாடி நல்லா இருந்தா பொறுக்காது. அதுவே அவ கஷ்டப்பட்டுட்டு இருந்தா கண்டுக்க மாட்டாங்க. இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா ஆகுமா. விடு கழுதையை” என கூறினாள்.
கோபால் அங்கே நடந்ததை மனைவியிடம் கூறி இருந்தான். ஆனால் அறைக்குள் நடந்தது அவனுக்கு தெரியாதே. அதனால் வேலு பேசியதற்கு தான் தேவி வருந்துகிறாள் என்று கற்பகம் நினைத்து கொண்டாள்.
“ராத்திரிக்கு நீ எதுவும் சமைக்காத நான் செஞ்சு கொண்டு வரேன் சரியா, போய் முகத்தை கழுவிட்டு விளக்கை ஏத்து” என கூறிகொண்டிருக்கும்போதே சோமுவின் இறுமல் சத்தம் கேட்க, “நீ அப்பாவை போய் பாரு” என எழுந்து சென்று விட்டாள்.
அவள் சென்றதும் கூந்தலை அள்ளி கொண்டையாக போட்டு கொண்டவள் வேகமாக முகத்தை கழுவிகொண்டு சுடு தண்ணீர் வைத்து தம்பளரில் எடுத்து கொண்டு தந்தையை பார்க்க சென்றாள்.
அவரை எழுப்பி மெதுவாக தண்ணீரை புகட்டியவள் மீண்டும் படுக்க வைத்தாள். மகளின் முக வாட்டத்தை வைத்து ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டவர் கண்கள் கலங்க, “என்னம்மா வேலை கஷ்டமா இருக்கா” என கேட்டார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா, சிமெண்ட் தூசி கண்ணுல பட்டுடுச்சி” என்றாள் சமாளிப்பாக.
“நல்ல தண்ணிய கண்ணுல அடிச்சு கழுவும்மா, எப்படியோ இருக்க வேண்டிய பொண்ணு என்னால தானே இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்க” என்றார் வருந்தியபடி.
“அப்பா” என அவரை மெதுவே அதட்டியவள் வெளியே வந்து விட்டாள்.
உறக்கம் கூட ஒரு வரம் தான், சிலருக்கு எளிதாக கிடைத்து விடும். சிலருக்கு கடும் தவத்திற்கு பிறகே கிடைக்கும். புரண்டு புரண்டு படுத்தவளுக்கு உறக்கம் என்பது எட்டாக்கனியாக போனது.
அவளும் தந்தையும் இருந்த காலத்தில் எத்தனையோ சிரமங்களை எளிதாக சமாளித்து வந்தனர். இவள் பிறந்து மூன்று வயதிலேயே அன்னை வசந்தி கிட்னி பழுதடைந்து இறந்து போனாள். ஆனால் அந்த இழப்பு தெரியாமலே தந்தை அவளை நன்றாகவே வளர்த்தார்.
மனைவி இறந்ததும் வேறு ஒரு பெண்ணை பார்த்து உறவினர்கள் திருமணம் செய்து வைக்க முயற்சிக்க, வேண்டாம் என மறுத்து விட்டார்.
“சோமு பொம்பளை பிள்ளையை பெத்து வச்சிருக்க நாளைக்கு அதை கட்டி கொடுக்கற இடத்தில பொண்ணை ஒழுங்கா வளர்க்கலைன்னு யாரும் சொல்லிட கூடாது. ஒரு பொண்ணு வீட்டோட இருந்து நாளும் சொல்லி குடுத்து வளர்க்கற மாதிரி வருமா” என்று கேட்டார்கள்.
“அதே எனக்கு மனைவியா வர இன்னொரு பொண்ணு என் மகளை அவ மகளா பார்த்துப்பான்னு என்ன நிச்சயம். நானே என்னோட பொண்ணை நல்லபடியா வளர்த்துக்கறேன்” என்று கூறி விட்டார் அவர்.
தங்கள் பேச்சை கேட்கவில்லையே என்று உறவுகளுக்கு கொஞ்சம் மனவருத்தம் இருக்க அவர்கள் விலகி கொண்டனர்.
ஆனால் சோமு பிடிவாதமாக இன்னொரு திருமணமே செய்து கொள்ளாமல் மகளை வளர்த்தார். நேர்மையாய் நடக்க வேண்டும், நியாயத்தை கடைபிடிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் குணத்தை மாற்றிக்கொள்ள கூடாது. என்று தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தார். ஆனால் அவளோ தந்தைக்கு மிஞ்சிய குணத்துடன் வளர்ந்து நின்றாள். நன்றாக படித்தாள். ஒழுக்கத்தை உயிராக மதித்தாள். எல்லாருடனும் அன்பாக கனிவாக நடந்து கொண்டாள். பொறுப்பான பெண்ணாக வளர்ந்தாள்.
உறவினர்கள் கூட “உன் பொண்ணை நல்லா வளர்த்திருக்க சோமு” என கூறும் அளவிற்கு அவளின் செயல்கள் பேச்சு எல்லாமே இருக்கும். தனக்குள் எப்போதும் ஒரு கோட்பாடு வைத்து கொண்டு வாழ்பவள் அவள். தனக்கு பிடிக்காத எதையும் எவருக்காகவும் ஏற்க மாட்டாள். அதே நேரம் தனக்கு வேண்டும் என்பதற்காக யாரையும் கட்டாயப்படுத்தவும் மாட்டாள்.
அவள் வகுத்த பாதையில் அவள் பயணம் சீராக சென்று கொண்டு இருந்தது. அது எல்லாமே அவள் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வரை மட்டுமே தான். திடீரென்று ஒரு நாள் அவள் வாழ்வில் எல்லாமே மாறி போகும் என அவள் அறிந்திருக்கவில்லை.
தான் அறிந்த நியாயத்தை விட்டுவிட்டு அவளால் வாழவும் முடியவில்லை. அதற்காக அவள் இழந்ததும் வேண்டாமலே அவளுக்கு கிடைத்ததும் அதிகம் தான்.
அதை பற்றி இப்போதும் கூட அவள் அப்படி ஒன்றும் கவலை படவில்லை. ஆனால் தந்தை அவளை நினைத்து கவலை படுவது தான் தாங்க முடியாததாக இருந்தது.
பழைய நினைவுகள் எல்லாம் நெஞ்சில் அலைமோத அப்படியே அமர்ந்து இருந்தாள். இரவு கையில் உணவுடன் வந்த கற்பகம் ஏதேதோ பேசி கொண்டிருக்க அவள் பேச்சிற்கு ம் கொட்டினாளே தவிர என்ன பேசினாள் என்று கேட்டாள் அவளுக்கு தெரியாது.
இயந்திரம் போல உணவை உண்டு விட்டு படுக்கையில் விழுந்தாள். உறக்கத்திலும் கடலலை போல நினைவுகளின் அலை ஓயாமல் அடித்து கொண்டிருக்க புரண்டு புரண்டு படுத்தவள் விடியலிலேயே கண் மூடினாள்.
கதவை தட்டும் சத்தம் கேட்க அப்போது தான் கண்விழித்து பார்த்தாள். விடிந்து வெகு நேரம் ஆகி இருந்தது. கதவை சென்று திறக்க கற்பகம் தான் நின்று இருந்தாள்.
“என்ன தேவி ரொம்ப நேரம் தூங்கிட்ட உடம்புக்கு ஏதும் சரியில்லையா” என அக்கறையாக விசாரித்தாள்.
“இல்லைக்கா நல்லா தான் இருக்கேன், ஆனா” என தயங்கினாள்.
“என்னம்மா”
“இனிமேல் அங்க வேலைக்கு போக வேண்டாம்னு நினைக்கிறேன்” என்றாள்.
“நினைச்சேன் தேவி நேத்துல இருந்து உன்னோட முகமே சரியில்லை, நீ இப்படி தான் முடிவு பண்ணுவன்னு நானும் நினைச்சேன். அந்த கழிசடை பேச்சை எல்லாம் வச்சு நீ இந்த மாதிரி நினைக்கலாமா” என கேட்டாள்.
இல்லை அவன் கூறியதால் மட்டுமில்லை, சமீபகாலமாக அவளை தொடரும் வாசுவின் பார்வை. தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னை தீண்டி செல்லும் அவன் பார்வையின் வீரியம் அவளை துளைக்கிறது. தன் மனம் தன்னுடைய கட்டுபாட்டில்தான் இருக்கிறது, ஆனால் அவன் மனம் அவளால் சஞ்சல பட்டு விட்டதே அதற்கு என்ன செய்வது.
எதையும் முதலிலேயே கிள்ளி எறிய வேண்டும். வேர் விட்டு வளர்ந்து விருட்சமான பிறகு அதை அசைக்க கூட முடியாது.
“என்ன தேவி யோசிக்கற” என கேட்டாள் கற்பகம்.
“அக்கா ஒரு உதவி பண்ணுங்க, நான் கொஞ்சம் கடைக்கு போய்ட்டு வரேன். அப்பாவை பார்த்துக்கறீங்களா?”
“என்னடி அப்படி கேட்டுட்ட, நீ போய்ட்டு வா நான் பார்த்துக்கறேன்”.
“தாங்க்ஸ்கா” என்றவள் கடகடவென வேலைகளை முடித்து கொண்டு கிளம்பி சென்றாள்.
கடைக்கு சென்று விட்டு வேகமாக வீட்டிற்கு வந்தாள். கற்பகத்திடம் தந்தையை பார்த்து கொள்ள கூறிவிட்டு வந்தோமே என்ற பரபரப்புடன் வேகமாக வீட்டிற்கு வந்தாள்.
அவள் உள்ளே நுழையும் போதே சோமுவின் பேச்சு குரல் கேட்டது, கற்பகத்திடம் பேசிக்கொண்டிருக்கிறார் போல என்று எண்ணிக்கொண்டே உள்ளே வந்தவள், “கற்பகம் அக்கா ரொம்ப லேட் ஆகிடுச்சா, சாரி” என கூறிக்கொண்டே தந்தை அறைக்குள் நுழைய அங்கே நாற்காலியில் அமர்ந்து இருந்தான் வாசு.