Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 218
- Thread Author
- #1
உன் விழியோடு நானாகிறேன் - 16
தர்ஷனின் பெற்றோர் முறைப்படி ஆதிரையை சந்தித்து பேசினார்கள்.அவளுக்கும் அவர்களை கண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது.மகனின் விருப்பமும் வாழ்வும் முக்கியமாக இருப்பதால் அவர்களுக்கும் இதில் முழு விருப்பம்.அதோடு ஆதிரையை தர்ஷனின் அம்மா ஏற்கனவே ஒருமுறை சந்தித்து பேசியிருப்பதால் ஆதிரைக்கும் பேசிக் கொள்வது எளிதாக இருந்தது.
இரண்டு மாதங்களுக்கு பிறகு தர்ஷன் மற்றும் ஆதிரையின் முழு விருப்பத்தோடு அவர்கள் இருவரும் சந்தித்து பேசி இரசித்த இடமான கேரளாவின் மூணாற்றில் மதனுடைய வீட்டில் தான் இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது.
இம்முறை மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் வைக்காமல் நேராக திருமணத்தை மட்டும் வைக்க முடிவெடுத்து இருந்தார்கள் மணமக்கள்.
திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே வந்து இருவரும் சேர்ந்தே என்ன தேவை என்று முடிவெடுத்து தங்கள் வாழ்வின் சிறந்த நாளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
இருவருடைய குடும்பம் மற்றும் மதனின் குடும்ப உறுப்பினர்களோடு மொத்தமே நூறு பேருக்குள்ளான இந்த கல்யாண நிகழ்வு அமைதியாக தயாராகிக் கொண்டிருந்தது.சிந்தியாவோ பாதி மயக்கத்திலும் பாதி தெளிவாகவும் இருக்கிறாள்.இரண்டு மாதக் கருவை சுமந்துக் கொண்டிருக்கிறாள்.
ஆதிரையிடம் “அன்றைக்கு வீட்டுக்கு வந்து இருந்தப்போ உன்கிட்டே ஒன்னு சொல்ல மறந்துட்டேன்”
“என்ன விஷயம்?”
“எங்க ரிசப்ஷன் அன்றைக்கு டிரெஸ் எடுக்க போன பொழுது உனக்கு ரெண்டு கலர்ல டிரெஸ் எடுத்து வைச்சேன் அப்போ தர்ஷன் தான் அந்த இளஞ்சிவப்பு நிற டிரெஸ்ஸை தன்னோட உடைக்கு பொருத்தமா எடுக்கச் சொன்னான்னு மதன் என்கிட்டே சொன்னாரு அப்பவே இவங்க ரெண்டு பேருக்குள்ளே என்னவோ இருக்குன்னு சொன்னாரு அதே மாதிரி இப்போ நடந்துடுச்சு” என்று சொல்லி சிரித்தாள் சிந்தியா.
அதைக் கேட்டதும் ஆதிரை மனதினுள் “என்னை நம்ப வைக்க என்னவெல்லாம் கதை சொல்லி இருக்காங்க ” என்று தர்ஷனிடம் அதைப் பற்றி கேட்க அவனோ அசட்டையாக “நானும் நீயும் மேட்ச்சிங்கா போடனும் நினைச்சேன் சும்மா விளையாட்டா பொய் சொன்னேன் பாவம் நம்பிட்டீங்க” என்று சொல்லி சிரித்தான்.
அவனை பார்த்து முறைத்தவள் “இன்னும் எத்தனை பொய் காத்திட்டு இருக்கு?”
கையை விரித்துக் காட்டி “நிறைய இருக்கு சொல்லட்டுமா?” என்றதற்கு அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவனோ சிரித்துக் கொண்டே “வேணும்னு சொல்லனும் இல்லன்னா வேண்டாம்னு முடிக்கனும் அப்படியே முகத்தை திருப்பிக் கொண்டால் நான் என்னன்னு பதில் எடுக்கிறது?” என்று கேள்வியாகக் கேட்டான்.
“பொய் சொல்ல தெரியுறவங்களுக்கு இதைக் கண்டுபிடிக்க தெரியலை” என்று அவனை கிண்டல் செய்தாள்.இருவரும் இப்படி தங்களுக்குள் எல்லாவற்றையும் பேசிக் கொள்வதில் தானே புரிதலோடு கூடிய அன்பும் நிறைந்து போகுது.
பேசுவதற்கே இங்கே யோசிக்கும் போதே உறவுகளின் விரிசலும் சேர்ந்தே ஆரம்பிக்கிறது.
எப்போதும் கொஞ்சிக் கொண்டிருந்தாலும் சில நேரங்களில் அதே ஒருவித சலிப்பைத் தந்துவிட அதற்கு தன்னுடைய விருப்பத்தை கேள்வியை துணையானவர்களிடம் உரிமையாய் கேட்டு விடும் ஆரோக்கியமான ஊடல்களும் அன்பை இன்னும் ஆழப்படுத்தும்.
அது இங்கே இருவருக்கும் தேவையாக இருந்தது.எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவளை பின்னால் நின்றபடி “நாளைக்கு இந்த சண்டையை கண்டினியூ பண்ணலாமா? தூக்கம் வருது” என்றான்.
அவளோ சிரித்துக் கொண்டே “ம்ம்… சரி போய் தூங்குங்க இந்த மருதாணி கொஞ்சம் காயுற வரைக்கும் நான் வெயிட் பண்ணனும்” என்று மருதாணி போட்டு இருந்த தன் கரங்களைப் பார்த்து சொன்னாள்.
“சரி சரி நானும் வெயிட் பண்றேன் கல்யாண மாப்பிள்ளையோட பெயரை மருதாணியில் போடுவாங்களாம் நான் எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கட்டுமா?”
“வேண்டாம்”
“ஏன்? என்னாச்சு?”
“நான் போட வேண்டாம்னு சொல்லிட்டேன் என்னைக்கும் நிலைச்சு இருக்க வேண்டிய உங்களை சட்டுனு அழிஞ்சுப் போகிற மருதாணியில் சேர்க்க எனக்கு விருப்பம் இல்லை” என்றாள்.
அவள் சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் அவன் மீதான கொள்ளை பிரியம் அவளை இப்படி நினைக்க வைத்தது.
அவனோ எதுவும் சொல்லாமல் நெற்றியில் முத்தமிட்டவன் “இந்த அன்பு என் ஆயுள் முழுக்க கிடைக்கனும் ஆதி” என்ற போது லேசான சாரலாக தூரல் போட்டது மழை.
மறுநாள் எல்லோரின் கண்களும் மனமும் மகிழ்ச்சியில் நிறைந்துப் போய் இருக்க மணமேடையில் ருத்ரதர்ஷனும் ஆதிரையும் மணமக்களாக அமர்ந்திருக்க எல்லோருடைய மற்றும் இருவருடைய பெற்றவர்களின் ஆசிர்வாதத்தால் ஆதிரையின் கழுத்தில் தன் கரங்களால் மாங்கல்யத்தை கட்டி தானே மூன்று முடிச்சுயையும் போடுவேன் என்று அன்பாக போட்டு விட்டான்.
அடுத்ததாக காலில் மெட்டி அணிவித்தவன் ஆதிரையிடம் “ஒரு நிமிசம்” என்று சொன்னவன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சின்னப் பெட்டியை எடுத்தவன் அதில் இருந்த அந்த அழகான மோதிரத்தை அவளுக்கு அணிவித்து விட்டவன் இன்னொரு மோதிரத்தை ஆதிரையிடம் கொடுத்து அவன் கையில் போட்டு விடச் சொன்னான்.
ஆதிரைக்கு அந்த மோதிரத்தை பார்க்கவும் நினைவுக்கு வந்தது.”தர்ஷன் இது நான் அன்றைக்கு கடையில் வைச்சு செலக்ட் பண்ணியது தானே” என்று ஆர்வம் மேலிட கேட்டாள்.
அவனோ சிரித்துக் கொண்டே “ஆமாம் அந்த மோதிரம் தான் நானும் நீயும் தேர்வு செய்த முதல் பொருள் நம்முடைய முக்கியமான இந்த நாள்ல தான் கொடுக்கனும் இத்தனை நாளாக நானே பத்திரமாக வைச்சு இருந்தேன்” என்றதும் விழிகளில் ஆனந்தக் கண்ணீரோடு அவனுக்கு அணிவித்ததும் ஏனோ பெருமூச்சை ஒன்றை விட்டான் தர்ஷன்.
உன் கையில் உயிர்
வாழ்ந்தேன் இது தவமா?
வரமா? புரியவில்லை
உன்னோடு என் சொந்தம்
ஈரேழு ஜென்மங்கள் உன்
வார்த்தை இது போதும்
வேண்டாமே சொர்க்கங்கள்…
அவனும் அவளும் யோசித்து பேசி குழப்பமடைந்து காதலித்து காத்திருந்த தருணமல்லவா! அந்த நாளை தங்கள் வாழ்வின் புதிய வாழ்வுக்கான ஆரம்பமாக நினைத்தனர்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு
வியன்காவின் பள்ளியில் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக தர்ஷன் தயாராகிக் கொண்டிருந்தான்.ஆதிரை ஒரு ஓரமாக கவலையோடு உட்கார்ந்துக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்து தர்ஷன் “என்ன ஆதி நேரமாகுது சீக்கிரம் கிளம்பு”
“நான் வரலை”
“ஏன் என்னாச்சு?” என்று அவளுக்கு அருகில் வந்து நின்று அவளது முகத்தை தன் கரங்களால் ஏந்தியவன் “காலையில் வரேன்னு வியன்கிட்டே சொல்லிட்டு இப்போ வரலைன்னு சொன்னா என் பொண்ணு கஷ்டப்படுவாளே!” என்றான் பெரிய கவலையோடு…
அவளோ “அப்போ சரின்னு சொன்னேன் இப்போ முடியாது”
“ஏன் என்னாச்சு?”
“அ..து அது எனக்கு வெளியே வரவே வெட்கமா இருக்கு”
“ஏன் என்ன வெட்கம்?” ஒன்றும் தெரியாதது போல் கேட்டான்.
“தர்ஷன் ஏற்கனவே பாப்பாவை கையில்ல வைச்சு அடுத்து இப்படி வயிற்றில் ஐந்து மாசம் ஆகவும் வெளியே வயிறு தெரியுற மாதிரி நடக்க வெட்கமா இருக்கு நேற்றுக் கூட சிந்தியா போன் போட்டு பேசும் போது இங்கே ஒரு பிள்ளையை பெத்துட்டு அதை வளர்க்கவே நான் கஷ்டப்படுறேன் இதுல எப்படி அடுத்து? அப்படின்னு சொல்லி சிரிச்சிட்டே கிண்டலாக சொல்றாள்” என்று தன் தோழியைப் பற்றி குற்றப் பத்திரிக்கை வாசித்து தலைக் குனிந்துக் கொண்டே சொன்னாள்.
அவனோ சிரித்துக் கொண்டே “எவ்வளவு தைரியம்?மதனுக்கு போன் போட்டு மிரட்டினால் தான் சரி வரும் அப்போத் தான் சிந்தியா இந்த மாதிரி பேசாமல் இருப்பாங்க” என்றான்.
அவளோ சிரித்துக் கொண்டே “நீங்க தப்பா சொல்றீங்க தர்ஷன் மதன் தான் சிந்தியாக்கு பயந்து போய் இருக்காரு அதனால உங்க மிரட்டல் எல்லாம் வேலைக்கு ஆகாது” என்று கவலையாகச் சொன்னாள்.
தனது கையோடு அவளது கரங்களைப் பிடித்துக் கொண்டபடி “இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான் நீ தூக்கப் போற அப்புறம் நான் தானே தூக்கப் போறேன் உனக்கென்ன கவலை நம்ம அன்போட அடையாளம்” என்று அவளின் லேசாக மேடிட்ட வயிற்றை தடவி விட்டவன் “வியன் தன்னோட ப்ரெண்ட்ஸ்கிட்ட எங்க வீட்டுக்கு அடுத்து ஒரு பேபி வரப் போறாங்கன்னு சொல்லி இருக்கா அதை யாருமே நம்பலையாம் நீ இன்றைக்கு ஸ்கூல் போனால் தான் இது பொய் இல்லை உண்மைன்னு நிரூபிச்சு வந்தால் தான் வியன் சந்தோஷப்படுவா அதனால கவலையை விட்டுட்டு நம்ம பொண்ணோட ஆசையை நிறைவேத்து சிக்கீரம் கிளம்பு” என்று அவளின் கன்னத்திலும் மேடிட்ட வயிற்றிலும் அன்பாக முத்தமிட்டு அவளை அவசரப்படுத்தினான்.
ஆதிரையும் வேறு வழியில்லாமல் அவன் சொன்னற்கு சரியென்று தலையாட்டி விட்டு அவனோடு மகளின் பள்ளிக்கு கிளம்பினாள்
ஆதிரை இப்போது எல்லாம் இப்படித் தான் இருக்கிறாள்.
தர்ஷன் என்னச் சொன்னாலும் அவனுக்கு தலையாட்டிக் கொண்டு இருக்கிறாள்.
அக்கறையான அன்பும் நேசமும் அளவில்லாமல் திகட்ட திகட்ட தரும் போது கேள்விக்கும் யோசனைக்கும் வழியில்லாமல் அங்கே மனம் சொல்வதே வாழ்க்கையாகிப் போனது.
மூவருமாக வியனின் பள்ளிக்குச் சென்று காரை ஓரமாக நிறுத்தி விட்டு உள்ளே நுழையவும் அங்கே இவர்களுக்காக காத்திருந்த வியன்கா தர்ஷனை கண்டதும் “அப்பா அப்பா” என்று ஓடி வந்தாள்.
மகளின் அழைப்பினில் மனம் நிறைந்தவளுக்கு இதற்கு மேல் வேற என்ன இன்பம் வேண்டும்? என்ற நிலையில் தாயாக நினைத்தாள்.
பிறந்ததும் ஒரு குழந்தைக்கு தந்தையால் கிடைக்க வேண்டிய உரிமையும் பாசமும் இப்போது வியன்காவிற்கு முழுதாக கிடைத்தது.
“வாடாச் செல்லம்” என்று கையில் ஒரு வயது பெண் குழந்தையை கையில் ஏந்தியபடி மூத்த மகளை கட்டியணைத்தான்.
“அப்பா வாங்க அந்தப் பக்கம்மா போகனும்” என்று கைக் காட்டியவள் “அம்மா உங்க வயிற்றுல பேபி இருக்காங்கல்ல என் ப்ரெண்ட்ஸ்கிட்டே காட்டனும் நான் பிடிச்சி இருக்கேன் நீங்க நிதானமா மெதுவாக நடந்து வாங்க” என்று தாயின் கரங்களைப் பிடித்துக் கொண்டாள் ஆதரவாக…
ஆதிரையின் இன்னொரு கரங்களை ஆதரவாக தர்ஷன் பற்றிக் கொண்டு “வா ஆதி போகலாம்” என்று தன் பக்கம் லேசாக சாய்த்துக் கொண்டு நடந்தான் தர்ஷன்.
இரண்டு பக்கமும் அன்பும் அக்கறையும் நிறைந்து இருக்க மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்க இருவரின் விழிகளும் தங்கது அன்புக்குரியவளை(னை) நிறைத்துக் கொண்டனர்.
ஒரு அன்பான சிறந்த துணை அவளுக்கான சிறிய உலகில் அவன் அமைத்து வைத்த உறவு மிகப்பெரிய வரமாக அவர்களது வாழ்க்கை.
இனி எல்லாம் வசந்தமே
முற்றும்.