- Joined
- Aug 31, 2024
- Messages
- 11
- Thread Author
- #1
அத்தியாயம் – 4
வீட்டிற்கு வந்த கவின் தன் அறைக்குச் சென்று குளித்து முடித்து மெல்ல கீழே இறங்கி வர, அவன் வரவுக்காகச் சாப்பாட்டு மேசையில் காத்திருந்த பாலன், தாரிகா, ஈஸ்வரி மூவருடனும் தானும் இணைந்து கொண்டான்.
“என்னண்ணா காலையில் அடித்துப் பிடித்து ஓடினீங்க. இன்னைக்கும் கனவு இருக்கா?” இட்லியைப் பிய்த்து வாயில் போட்டபடித் தமையனிடம் கேலியாகக் கேட்டாள் தாரிகா.
“கனவு வருதா என்னன்னு தெரியாது. இந்த வழக்கு முடியறதுக்குள்ள பைத்தியம் பிடிக்காம இருந்தா சரி” துப்பு எதுவும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் சொன்னான்.
“ஏன்? என்ன ஆச்சு? சாப்பிடும்போது எதுக்கு வழக்கைப் பற்றிப் பேசிட்டு இருக்கீங்க? வேலையை மறந்து நிம்மதியா சாப்பிடுங்க” ஒவ்வொரு காவலர்களின் வேலை எப்படி என்று தெரியும். அதுவும் கொலையைப் பார்த்தப் பிறகு சாப்பிடவே தோன்றாது என்று ஈஸ்வரி அந்தப் பேச்சைத் தவிர்க்க நினைத்தார்.
“நீ ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்க? நான் போலீஸ் ஆனதே அப்பாக்கு பிடிக்கலை. உனக்கு அந்த ஆசை இருக்கா என்ன?” என்று தாரிகாவைப் பார்த்தான் கவின்.
“த்ரிலிங்கா இருக்கேன்னு கேட்டேன். அதுக்காக நான் போலீஸ் வேலைக்கு வந்திருவேன்னு நினைக்காதீங்கண்ணா. எனக்கு இந்தக் கொலை எல்லாம் பார்த்தா எனக்கு நெஞ்சுவலி வந்து போய்ச் சேர்ந்திருவேன்” என்றவளைத் தலையில் தட்டினான் கவின்.
“கொலைகாரன் ஒரு கோமாளியா இருப்பானோன்னு தோனுது” கவின் சொன்னதைக் கேட்டு மூவரும் புரியாமல் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு கவின் முகம் பார்க்க, கொலை செய்தபிறகு குளித்துச் சாப்பிட்டு சென்றதைச் சொன்னதும், மூவரும் மேடை அதிரச் சிரித்தனர்.
“கோமாளின்னு அவ்வளவு எளிதில் எடை போட்டுராதே. இந்த மாதிரி கோமாளிங்க உள்ளுக்குள்ள வெறி பிடித்த மிருகமா இருப்பாங்க. அடுத்தக் கொலை நடக்கிறதுக்குள்ள அவனைக் கண்டு பிடிச்சிரு” என்று எச்சரித்தார் பாலன். இரவு உணவு உண்டு முடிக்கும் வரை குடும்பத்தாருடன் பல விஷயங்களைப் பேசிய பிறகே ஓய்வெடுக்கச் சென்றான் கவின்.
மாடிப்படி ஏறியவன் நின்று, “தாரிகா, காலேஜ் முடிந்ததும் வீட்டுக்கு வந்திரு. வேற எங்கேயும் போறதா இருந்தா, எனக்குக் கால் பண்ணி எங்க போறன்னு சொல்லிட்டுப் போ” என்றான்.
“ஏண்ணா…” என்று இழுத்தவளை, “நான் சொல்றதை மட்டும் கேள்” என்று கண்டிப்புடன் சொன்னான்.
“என்ன ஐபிஎஸ்! உயிருக்குப் பயந்து எதுக்குப் போலீஸ் வேலையில் இருக்கனும்?” எனப் புலம்ப, ஈஸ்வரி அவள் முதுகில் அடிக்க,
“என் உயிரைப் பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. ஆனால், என்னைச் சார்ந்த யாருக்கும் என்னால் எதுவும் ஆகிடக் கூடாது” என மேலிருந்து சத்தமாகச் சொன்னான். அதற்கு மேல் வாயைத் திறப்பேனா என்று தன்னறைக்குச் சென்று புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டாள்.
******
மறுநாள் காலை இரயில் நிலையத்திலிருந்து வந்த அகிலன் நண்பர்களை வழக்கு முடியும்வரை வேறு இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொள்ளக் கூறினாள் சந்தியா.
நால்வரும் ஊரில் இருந்தபடியே ஏற்பாடு செய்துவிட்டோம் என்றனர். தங்களுடையை உடைமைகளையும் பொருட்களையும் எடுத்துச் செல்ல வந்தோம் என்றவர்களிடம், “நீங்க உங்களுக்குரியதை மட்டும்தான் எடுக்கனும். எடுத்த பிறகு எங்களிடம் காட்டிட்டுதான் போகனும். அகிலன் பற்றி விபரங்கள் கேட்கனும் வாங்க” என்ற சந்தியாவைப் பின் தொடர்ந்தார்கள்.
நான்கு மாதங்களுக்கு முன் சென்னை வந்த அகிலன் தங்குவதற்கு வீடு கிடைக்காமல் திண்டாடியவனிடம், வீடு கிடைக்கும் வரை தங்களுடன் தங்கிக் கொள் என்று நால்வரும் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.
இரண்டு மாதங்கள் அவர்களுடன் இருக்கும்போது வாடகையிலிருந்து பொதுவாக செய்யும் செலவுகள் அனைத்திற்கும் பணத்தைப் பாக்கி இல்லாமல் கொடுத்துவிடுவான் அகிலன். அவனிடம் ஒரு பங்கு பகிர்வதால் தங்களுக்குப் பணம் மிச்சாமாகிறது என்று தங்களுடன் நிரந்தரமாகவே தங்க சொல்லிவிட்டனர்.
நால்வருடன் இருந்த இந்த நான்கு மாதங்களில் அகிலன் யாருடனும் நெருங்கிப் பழகியதில்லை. வெளியில் செல்லும் பொழுதெல்லாம் அகிலனை உடன் அழைத்தாலும் வர மறுத்துவிடுவான்.
அகிலன் வராதது நால்வருக்குச் சந்தேகத்தை வரவழைக்க, ஒரு நாள் வெளியில் சென்றவர்கள் வழக்கத்திற்கும் மாறாகச் சீக்கிரம் வந்தனர். வீட்டில் ஒரு பெண் அவனுடன் இருப்பதைக் கண்டு யாரென்று விபரங்கள் கேட்க, தன்னுடைய தங்கை என்று அந்தப் பெண்ணை அவசர அவசரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தான்.
வழக்கத்திற்கு மாறான அவன் நடவடிக்கையில் சந்தேகம் எழவும் நால்வரும் பேசி அகிலனை வேறு வீடு பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டனர். அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டனர்.
அதனால், அவன் என்ன செய்கிறான். எங்கு போகிறான் என்று எதுவும் அவர்களுக்குத் தெரியாமல் போனது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்றதால் நால்வரும் ஊட்டிக்குச் சுற்றுலா சென்ற நேரத்தில் அகிலன் கொலை செய்யப்படிருந்தான்.
“அகிலனுடைய சொந்த ஊர், அவன் உறவுகள் பற்றி எதுவுமே தெரியாதா? அந்தப் பொண்ணைத் திரும்பப் பார்த்தீங்களா?”
“இல்லை மேம் பார்க்கலை. நாங்க பலமுறை கேட்டும் அவன் குடும்பம் பற்றி எதுவுமே அவன் சொன்னதில்லை. யாரிடமும் அவன் பேசிப் பார்த்ததில்லை. அவன் தங்கைன்னு சொன்னது பொய்யாத்தான் இருக்கும்” என்றான் ஒருவன்.
பல கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்டும் சந்தியாவுக்கும் அகிலன் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. இனிமேல் இவர்களிடம் பேசுவது வீண் என்று அங்கிருந்து புறப்பட்டாள்.
சந்தியாவின் நிலைமையைவிடத் தாரிணியின் பெற்றோரிடம் விசாரித்த தான்யாவின் நிலைமை மிக மோசமாக இருந்தது. பெற்றவர்களுக்குத் தாரிணி நல்ல மகளாகவே இருந்திருக்கிறாள். குடும்பத்திற்காகத் தங்களை விட்டுப் பிரிந்து கஷ்டப்பட்டு உழைக்கிறாள் என்பதைத் தவிர, தாரிணி எங்கு வேலை பார்க்கிறாள் என்பதும் தெரியாமல் இருந்தார்கள்.
தாரிணி சம்பாதித்துக் கொடுத்த பணம் அவள் குடும்பத்திற்குப் பக்கபலமாக இருந்திருக்கு. அதனால், தங்கள் மகளின் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பவர்களிடம், இந்த நிலைமையில் எதையும் சொல்ல வேண்டாமென்று மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்காமல், மருத்துவமனையில் சம்பிரதாயங்கள் முடிந்து தாரிணியின் பாடி வரும்வரை உடன் இருந்து அனுப்பி வைத்தாள்.
******
மாலை ஐந்து மணிக்கு கவின் முன் மூவரும் அமர்ந்திருந்தனர். விசாரணையில் சின்னத் தகவல் கூடக் கிடைக்கவில்லை என்றதும் கவின் எண்ணங்கள் கடிகார முள்ளாகச் சுழன்று கொண்டே இருந்தது.
“கவின், நீ சொன்னது போல ஒரு பேப்பரில் நித்திரை கொள் இதயமேன்னு எழுதி வைத்திருக்கான். அதை மாதேஷ் ஃபைல் பண்ணி வச்சிருக்கான்” என்றான் சரண்.
“அகிலன் நண்பர்கள் அவனுடன் ஒரு பொண்ணு இருந்தான்னு சொன்னாங்க. ஆனால், அந்தப் பொண்ணைப் பற்றிய விபரம் அவங்களுக்குத் தெரியலை. பக்கத்து வீடு, எதிர் வீடுன்னு விசாரிச்சப்போ. எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி ஃபுட்டேஜில் பார்த்தேன். இங்கு வந்த நான்கு மாதத்தில் அவன் நண்பர்கள் இல்லாத நேரத்தில் ஒரு பொண்ணு இல்லை. வேற வேற பொண்ணுங்க வந்திருக்காங்க.”
சந்தியா சொன்னதைக் கேட்டதும் மூவரும் அதிர, “அப்போ அகிலன் தப்பானவனா? இல்லை, பொண்ணுங்க தேடி வந்ததுக்கு வேறு எதுவும் காரணம் இருக்குமா?” சரண் சந்தேகத்தில் கேட்க,