- Joined
- Aug 31, 2024
- Messages
- 21
- Thread Author
- #1
அத்தியாயம் – 3
கவின் விசாரணையைத் தொடங்குவதற்காக, பத்து பேரின் முன் வந்து நின்றதும், அவன் தோற்றம் கண்டு பயத்தில் நடுக்கத்துடன் நின்றிருந்தவர்களில் ஒருவன் மயக்கமாகி கீழே விழ, தண்ணீர் தெளிப்பதற்காக மேசையில் இருந்த பாட்டிலை எடுத்த தான்யா அதில் நீர் இல்லை என்றதும் பிடித்து வர வெளியில் ஓடினாள்.
மயக்கமாகி விழுந்தவனை நீர் தெளித்து எழுப்பி உட்கார வைத்ததும், “விசாரணைக்குதானே கூப்பிட்டேன். உங்களைக் குற்றவாளின்னு சொல்லலையே. அதுக்கு ஏன் இவ்வளவு பயம்? உங்களிடம் தப்பு இருந்தால்தான் பயப்படனும். நீங்க எல்லாம் நடுங்குறதைப் பார்த்தா, எனக்குச் சந்தேகமா இருக்கு” என ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்தான் கவின்.
“சார், அப்படிப் பார்க்காதீங்க. தாரிணி கூடப் பழகினது தவிர, இந்தக் கொலைக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவ இத்தனை பேரிடம் பழகியிருக்கான்றதே, நீங்க எங்களைக் கூப்பிட்டப் பிறகுதான் தெரியும்.”
கவினும், தான்யாவும் அதிர, “என்ன சொல்றீங்க? ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கீங்க. தாரிணியிடம் ஒருத்தர் பழகினது இன்னொருத்தருக்குத் தெரியாதா?”
பத்து பேரும் திருதிருவென முழிக்க, “என்ன முழிக்கீங்க? சார் கேட்கிறது புரியலையா?” என தான்யா அதட்ட,
தாரிணியின் அழகிலும் அவள் பழகும் விதத்திலும் அவள்தான் தனக்கு ஏற்றவள். தனக்கு வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்ற கற்பனையில், அவளிடம் காதலைச் சொல்ல, முதலில் காதலை ஏற்காதது போல் செல்பவள், கொஞ்ச நாள்கள் அலையவிட்டுப் பின் காதலை ஏற்பது போல் ஏற்று, மெல்ல மெல்ல நெருக்கமாகப் பழகத் தொடங்குவாள்.
அவள் காதல் உண்மையென்று நம்பி அவளிடம் உள்ள மோகத்தில் அவள் சொல்வதை எல்லாம் கேட்கத் தொடங்கும் நேரத்தில், சிறிது சிறிதாகத் தனக்குத் தேவையென்று அதிகம் விலையுள்ள பொருட்களை வாங்கித் தரச் சொல்லிக் கேட்க, முதலில் சரியென்று வாங்கிக் கொடுத்தவர்கள் நாளாக நாளாக அவளின் போக்குச் சரியில்லை என்பது புரியத் தொடங்கியதும் தாரிணியிடமிருந்து தானாக விலகத் தொடங்கிவிடுவார்கள்.
ஒருத்தர் விலகிச் சென்றதும் அடுத்தவர் என்று ஒவ்வொருவரையாகத் தன் காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறாள் தாரிணி. ஒருத்தன் சொல்ல மற்றவர்கள் பேய் அறைந்ததைப் போல் பார்த்திருக்க, “என்ன எல்லாம் அதிர்ச்சியில் நிற்கீங்க?” எனக் கேட்ட கவின் பக்கம் திரும்பியவர்கள் ஒவ்வொருவரும் அதே கதையைச் சொன்னார்கள்.
“அலுவலகத்தில் தாரிணி ரொம்ப நல்லவ. வெளியில் பணத்துக்காக எதையும் செய்வாள் தாரிணி. அது சரி இவங்க ஆறு பேரும் தாரிணி கூட வேலை பார்த்தாங்க பழக்கமாச்சு. உங்க நாலு பேருக்கும் எப்படிப் பழக்கம்?” கவின் கேட்க,
“முகநூல் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டில் இருந்தா. நாங்க ஃப்ரெண்டை டேக் பண்ணி போடுற எல்லாப் பதிவுக்கும் அவளும் பதில் கொடுப்பா. அப்படித்தான் நாங்க பழக ஆரம்பிச்சோம்” என்றனர்.
“சார், முகநூல் பழக்கம்னா இன்னும் எத்தனை பேர் இவங்களைப் போல் இருக்காங்களோ தெரியலை. அதில் கொலைகாரன் யாருன்னு கண்டுபிடிக்கனும்” என்ற தான்யாவுக்கு இந்த வழக்கை நினைத்துத் தலைச் சுற்றியது.
“தான்யா, இந்தப் பத்து பேர் தவிர அவ வேற யாரிடமும் பழகலைன்னு நினைக்கிறேன். அப்படிப் பழகியிருந்தா அவ கைப்பேசியில் அவங்க புகைப்படமும் இருந்திருக்கும்” என்றான் கவின்.
“ஆமா சார். அவளோட புகைப்படம் எங்க யாரிடமும் இருக்காது. ஏன்னா, அவ எங்களைப் புகைப்படம் எடுக்க விடவே மாட்டா. அப்படியே எடுத்தாலும் அவ கைப்பேசியில்தான் எடுப்பா. அதை எங்களுக்கு அனுப்பவும் மாட்டா” ஒருவன் சொல்ல மற்றவர்கள் தலையை மேலும் கீழும் ஆட்டினார்கள்.
“எங்ககூட வெளியில் எங்கேயும் வரமாட்டா. அப்படியே வந்தாலும் ரொம்பத் தூரம் போற இடமா இருந்தா வருவா. அதுவும் அவ செலக்ட் பண்ற இடமாத்தான் இருக்கும்” என்றான் மற்றொருவன்.
“ரொம்பத் தூரமா? அப்படின்னா எப்படியும் மூன்று நாள்களாவது ஆகும். அப்போ உங்களுக்குள்ள எல்லை மீறிய உறவும் இருந்திருக்கும் சரிதானே?” கவின் கேட்க, பத்து பேரும் தலை கவிழ்ந்து நின்றனர்.
“என்னமோ உங்க காதல் தெய்வீக காதல்ன்ற அளவுக்கு அவ மட்டும்தான் தப்பு பண்ண மாதிரி பேசினீங்க. இதான் உங்க காதலோட இலட்சணமா? அவ சாக்கடைன்னா நீங்களும் அதே சாக்கடைதான். சார், இவங்க யாரும் யோக்கியமில்லை. நல்லா முட்டிக்கு முட்டித் தட்டி விசாரிங்க. உண்மை தானா வெளிய வரும்” தான்யா லத்தியைக் கையில் எடுத்தாள்.
பத்து பேரும் அரண்டு எழுந்து நிற்க, தான்யாவின் கோபம் கண்டு, யாருக்கும் தெரியாமல் மென்னகை புரிந்த கவின், அவளிடமிருந்து லத்தியை வாங்க, “நீங்க எல்லோரும் போங்க. போறதுக்கு முன்னாடி சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாவிடம் உங்க முகவரி, கைப்பேசி எண் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க. எப்ப விசாரணைக்குக் கூப்பிட்டாலும் வரனும். வெளியூர் போனா எங்களுக்குச் சொல்லிட்டுத்தான் போகனும்” என்று எச்சரித்து அனுப்பினான் கவின்.
பத்து பேரும் தங்கள் விபரங்களைக் கொடுத்துவிட்டுச் செல்லும் வரை காத்திருந்த கவின் தான்யாவின் அருகில் வந்து, “உனக்கேன் இவ்வளவு கோபம்? அவங்க கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திகிட்டாங்க. நானும் வாய்ப்பு…” என்று கவின் முடிப்பதற்குள்,
“ம்க்கூம் இங்க காதலுக்கே வழியில்லை. இதில் இவர் எல்லை தாண்டிடுவார் நம்பிட்டோம். அப்படியே தாண்டி வந்தாலும் சிவப்புக் கம்பளம் விரிப்பேன்னு நினைக்காதீங்க. தான்யா லத்தி சார்ஜ் எப்படி இருக்கும்னு தெரியும்ல” கவினை முறைத்தபடி விறைப்பாக நின்றாள்.
இரு கைகளையும் கட்டிக் கொண்டு புன்னகை புரிய, கல்லாக நிற்கும் தான்யாவின் மீதுள்ள பார்வையை அகற்றாமல் பார்த்திருக்க, வழக்கமான அவன் பார்வையில் வித்தியாசம் தெரிய, அவன் உதிர்த்த சிரிப்பூக்கள் தான்யாவின் கண்களில் ஊடுருவி நரம்புகளை மீட்டிட சிலையாக நின்றவளின் மேனி தளர்ந்து கன்னங்கள் சிவப்பு நிறத்தைத் தத்தெடுத்ததை மறைத்திருந்தது அவளின் மாநிறம்.
கவினிடத்தில் என்றைக்கும் இல்லாத மாற்றத்தைக் கண்டதும் தான்யாவின் கால்கள் பழமிழக்கத் தொடங்கியது. அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்து நகரத் தொடங்கினாள்.