• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

GMK

New member
Joined
Nov 30, 2024
Messages
2
ஓம் சரவணபவ.!

வணக்கம், தூர நிலவு சாதாரண ஒரு பெண்ணின் மன உணர்வுகளையும், புரிதல் ஆகப்பெரும் வரம் என்பதும் அதுவே இல்லறத்தின் அடித்தளம் என்பதையும் பதிவு செய்யும் முயற்சி. வாசித்து விட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள் வாசக நட்புகளே...

தூர நிலவு

யாழினி அன்று எழும் போதே அத்தனை உற்சாகமாக இருந்தாள். வேக வேகமாய் மகனுக்கு இருவேளை உணவையும் சமைத்து, அவனைக் கிளம்ப வைத்துப் பள்ளிக்கு அனுப்பி விட்டாள். மாமியாருக்கு காலை உணவை எடுத்து வைத்து விட்டு, அவள் புடவை மாற்றவும்,


“வெளிய போறியா யாழினி?” புவனா கேட்க,

“ஆமா அத்த… அவருக்குப் பிடிச்ச தின்பண்டம் செய்யக் கொஞ்சம் பொருள் இல்ல. அதெல்லாம் வாங்கிட்டு, கூடவே காயும் வாங்க போறேன். உங்களுக்கு எதுவும் வேணுமா அத்த?” யாழினி கேட்க,

“எனக்கு எதும் வேண்டாம். நித்யா, ஷர்மிளா எல்லாரும் வருவாங்க, தலைக்கு வைக்க மல்லிகை பூ வாங்கிக்கோ.” புவனா சொல்ல, சரியெனத் தலையாட்டி இருந்தாள்.

கணவனுக்காகத் தேடித்தேடி நிறைய யோசித்து, அவனுக்குப் பிடிக்கும் என வாங்கி, அவள் வீடு வந்து சேரவே மதியம் மூன்றை தொட்டு இருந்தது. மாமியார் உண்டாரா எனக் கேட்டவள், கணவனுக்குப் பிடித்த அதிரசம் செய்ய வேண்டி வெல்லபாகை காய்ச்சி, மாவில் கலந்து வைத்தாள். அடுத்து முறுக்கு, சீடை, தட்டையெனச் செய்து வைத்தவள்.

அதற்குள் மகன் வரவும், அவனுக்குப் பால் கலந்து கொடுத்தவள், மகனுக்கும் மாமியாருக்கும் தின்பண்டம் எடுத்துக் கொடுத்தாள். அதன்பின் மரவள்ளி கிழங்கில் வத்தல் செய்து மிளகாய் தூளை கொஞ்சமாய் சேர்த்து கலந்து வைத்தாள். அவளைச் சுத்தம் செய்து வந்தவள் காபி போட்டு விட்டு வந்து அமர, அலைபேசி அடித்தது, இவள் ஆவலாக அதை எடுக்க,

“கிளம்பிட்டேன். நாளைக்கு காலையில வந்துடுவேன்.” சொன்னவன் சட்டென வைத்து இருந்தான்.

“சசியா யாழினி?” புவனா கேட்க,

“ஆமா அத்த. கிளம்பிட்டாறாம். நாளைக்கு காலையில இங்க இருப்பேன். சொன்னாங்க.” யாழினி புன்னகை முகமாகக் கூற, புவனா அழைத்து அவரின் மகளிடமும், மகனிடமும் சொல்லி இருந்தார்.

யாழினி இரவு உணவு என்ன செய்ய என்னும் யோசனையில் அடுப்பறைக்குள் செல்ல, புவனா வந்து அவள் முன் நின்றார்.

“நித்யாவும் சரண் மாப்பிள்ளையும் வராங்க யாழினி, இடியாப்பம் குருமா வைக்கிறியா? நான் உனக்கு உதவி பண்றேன்.” சொன்னவர் வேலையைத் தொடங்க, யாழினியும் உடன் உதவி இருந்தாள்.

புவனா ராகவேந்திரன் இருவரின் இளைய மகன் சசிதரன். அவனுக்கு முன்னே அண்ணன் சுரேந்தரன், அடுத்து தங்கை நித்யா. ராகவேந்திரன் உழைத்துப் பிள்ளைகளுக்குக் கொடுத்த சொத்துப் படிப்பு. சசிதரன் இயந்திர பொறியியல் படித்துச் சிறு சிறு நிறுவனங்களில் வேலை பார்த்து, இப்போது ஜெர்மனியில் தலை சிறந்த கார் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் உயற்பதிவியில் இருக்கிறான். சுரேந்தரன் அரசு வங்கியில் மேனேஜராக இருக்கிறான். அவனின் மனைவியான சந்திரா அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்புக்குக் கணிதம் கற்பிக்கும் ஆசிரியை. நித்யாவும் சரணும் ஐடி துறையில் வேலை பார்க்கிறார்கள்.

அரை மணி நேரத்தில், நித்யா, சரண் இருவரும் வந்தவர்கள் மாமியாரின் அறையில் உடை மாற்றி விட்டு வந்து ஹாலில் அமர்ந்து மருமகன் உடன் டிவியில் மூழ்கி இருந்தனர். இரவு உணவு தயாராகவும் யாழினி அனைவருக்கும் வைத்துக்கொடுத்து விட்டு அவளும் உண்டு இருந்தாள். இரவு மகனுடன் படுக்கையில் விழுந்தவளுக்கு கணவனின் நினைவு. தூக்கமே இல்லாது நேரமே எழுந்தவள் குளித்து, காபி தயாரித்து, வாசல் கூட்டி கோலமிட்டு நிமிரச் சசிதரன் வந்திருந்தான். இவள் மொத்த பிரியத்தையும் சேர்த்து அவனைப் பார்த்துச் சிரிக்க, அவனோ நேராய் வீட்டின் உள்ளே சென்று இருந்தான்.

தாயின் அருகில் அமர்ந்து அவன் நலம் விசாரிக்க, நித்யா, சரண், என அனைவரும் அவனின் நலத்தை விசாரித்து இருந்தனர்.

“ஶ்ரீ எங்க?” சசி கேட்க,

“தூங்குறான் சசி. இன்னிக்கி லீவ் தானே? நீ போய்க் குளிச்சுட்டு வா, காலைச் சாப்பாடு சாப்பிட்டு ஓய்வு எடுக்கலாம்.” புவனா சொல்லவும் சரியென அறைக்குள் சென்று இருந்தான்.

கணவன் அறைக்குள் செல்லவும் பின்னே சென்றவள் கண்டது மகனை முத்தமிடும் தன்னவனை தான். யாழினி முகத்தில் புன்னகை பிறக்க, அதே நேரம் ஶ்ரீ எழுந்து இருந்தான். தகப்பனை கண்ட ஆனந்தத்தில் கழுத்தோடு அவனைக் கட்டிக்கொண்டு கட்டிலில் குதித்து இருந்தான்.

மகனை அள்ளி முத்தம் வைத்தவன் குளியல் அறைக்கு மகனைத் தூக்கிக்கொண்டு சென்று இருந்தான். அவனே கதை பேசி மகனைக் குளிக்க வைக்கத் தொடங்க, யாழினி வேக வேகமாய் காலைச் சமையலை தொடங்கி இருந்தாள். புவனா மகனுக்குப் பிடித்த சட்னிகளை எல்லாம் அரைக்க, நித்யாவும் இப்போதும் உதவ, சமையல் வேலை முடிந்திருந்தது. யாழினி உளுந்த வடை போட்டு எடுக்க, சசிதரன் யாழினியெனக் கத்தி அழைத்து இருந்தான். இவள் அறைக்குள் நுழைந்து அவன் முகம் பார்க்க,

“இந்தத் துண்டு கட்டிட்டே வீட்டுக்குள் அலையவா? ஒரு துணி கூட எடுத்து வைக்காம அப்படி என்ன வேலை உனக்கு?” சசி கேட்க, அவனின் கப்போர்ட் சாவி எடுத்துத் திறந்து அவனின் உடைகளை அவசர அவசரமாக எடுத்து வைத்தாள்.

“வருஷத்துக்கு ஒருமுறை தான் வரேன். அதுக்கே நல்ல கவனிப்பு.” புலம்பியவன் உடை மாற்றி வெளியே செல்ல, யாழினி கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

கணவனுக்கு முதலில் தட்டு வைத்து அவள் உணவைப் பரிமாற, அதற்கும் முறைத்தான்.

“சரணுக்கு யார் வைப்பா? அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை.” சசி சிறுகுரலில் அவளை அதட்ட, நித்யா, சரண், புவனா, ஶ்ரீயென அனைவரையும் அமர வைத்துப் பரிமாறி இருந்தாள்.

அவனின் தட்டைப் பார்த்துப் பார்த்துப் பரிமாறி அவன் போதும் என்றதும், மதிய உணவுக்கான வேலையைத் தொடங்கி இருந்தாள். சசிதரன் நேராய் படுக்கையில் விழுந்து இருந்தான். யாழினி இரண்டு வகை பொரியல், கூட்டு, சாம்பார், மோர் குழம்பு, வத்த குழம்பு என இவள் சமைத்து வைக்க, மதியம் உண்டு விட்டுத் தங்கை, தாயிடம் பேசிக்கொண்டு பொழுதைக் கழித்து இருந்தான்.

ஜெர்மன் வாழ்க்கை பற்றி, அவனின் வேலைகளைப் பற்றி, அங்கே அவனுக்கு இருக்கும் அவனின் நண்பர்கள்பற்றியென அவன் கூறும் கதைகளைக் கேட்க யாழினிக்கும் ஆசை தான். ஆனால் அவளிடம் எதையும் எதையுமே வெளிப்படையாகப் பேசாதவன். அதனால் இப்படி அவன் தாயோடும், தங்கையோடும் சில நாள் இரவில் தன் மகனோடும் அவன் பேசும்போது இவளும் ஒட்டுக்கேட்டுக் கொள்வாள்.

மாலை அவனுக்குப் பிடித்த மசாலா டீ வைத்து, அதிரசம் சூடாய் சுட்டு, உடன் காரமான தின்பண்டத்தைத் தட்டில் நிறைத்து அவன் முன் வைக்க, சத்தம் இல்லாது அதை எல்லாம் எடுத்து உண்டிருந்தவன் தாயோடும் மகனோடும் வெளியே சென்று இருந்தான். நித்யாவும் சரண் உடன் கிளம்பி இருக்க, இரவு உணவு அவர்களுக்கு வேண்டாம் என்று கூறி விட்டான்.

யாழினி சமையல் அறையைச் சுத்தம் செய்து, அவளையும் சுத்தம் செய்து விட்டு வந்து ஹாலில் காத்து இருந்தாள். இரவு ஒன்பது முப்பது மணிக்கு இல்லம் வந்தவர்கள் கை நிறைய பொருட்களுடன் வந்திருந்தனர். அவள் கையில் புவனா சில பைகளைக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டாள்.

“சாப்பிடீங்களா அத்த?” யாழினி கேட்க,

“சாப்பிட்டோம் யாழினி. இதுல உனக்குப் புது புடவை இருக்கு. அதோட ஒரு ஆரமும் இருக்கு ஏழு பவுன் யாழினி. பத்திரம்.” புவனா சொல்ல, சரியெனக் கூறி சென்றவள் அதைக் கணவனின் கப்போர்டு உள்ளே வைத்துப் பூட்டி இருந்தாள்.

மகனுக்கு உடைமாற்றி விட்டு, பால் கொடுத்து அவனை உறங்க வைத்தவள், கணவனின் படுக்கையைச் சரி செய்து விட்டு, அவளின் படுக்கையைத் தரையில் விரித்து இருந்தாள். சசிதரன் வந்து கட்டிலில் அமர்ந்தவன்,

“நகை எங்க?”

“உங்க கப்போர்டு உள்ள வெச்சு பூட்டிட்டேன்.”

“ம்ம்… பால் வேணும் எனக்கு…” சசி சொல்லவும், யாழினி பாலில் பனகற்கண்டு கலந்து கொண்டு வந்து கொடுக்க, வாங்கி குடித்தவன் அலைபேசியில் மூழ்கி விட்டான்.

எதேனும் பேசுவான், எதேனும் கேட்பான் என்று யாழினி பத்து நிமிடம் அமர்ந்து அவன் முகத்தையே பார்க்க, சசி அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. யாழினி சோர்ந்து போய்ப் படுக்கையில் சரிந்தவள் உறங்கி இருந்தாள்.

அடுத்த நாள் காலையில், சுரேந்தரன், சந்திரா அவர்களின் இரு மகள்களும் இல்லம் வர, அன்று அவர்களுடன் கதைப்பேசி நாளைக் கழித்து இருந்தான். யாழினிக்கு எப்போதும் போலச் சமையல் அறையில் அவளுக்கென்று வேலைகள் இருந்தது.

“யாழினி…” சந்திரா சமையல் அறைக்குள் நுழைந்தவள் குரல் கொடுக்க,

“சொல்லுங்க அக்கா. எதாவது வேணுமா?”

“இந்த முறையாவது சசி உன்னோட பேசினாரா?” சந்திரா கேட்க,

“உங்களுக்குச் சிக்கன் உதிர்த்து, செய்யுற தொக்கு பிடிக்கும் தானே? மிளகு பூண்டு கூடச் சேர்த்து செய்யட்டுமா?” யாழினி பதில் கூறாது கேள்வி கேட்க, அவள் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லையெனப் புரிந்து கொண்டார் சந்திரா.

“நான் ரெண்டு நாள் அத்தையை கூப்பிட்டு போகாட்டுமா?” சந்திரா கேட்க,

“அத்தை வந்தா, அவர் சரின்னு சொன்னா, கூப்பிட்டு போங்க அக்கா. என்கிட்ட இதெல்லாம் கேட்காதீங்க.” யாழினி சொல்ல,

“சரி எதும் உதவி வேணுமா?”

“அதெல்லாம் வேண்டாம் அக்கா. இதோ சமையல் முடிஞ்சுது.” யாழினி சொல்ல, சந்திரா அனைத்தையும் எடுத்து வைக்க, அனைவரும் மதிய உணவை உண்டு இருந்தனர்.

“சசி நாங்க அத்தையை எங்க வீட்டுக்கு ஒருவாரம் கூப்பிட்டு போகட்டுமா? நீங்க என்ன சொல்றீங்க அத்த?” சந்திரா கேட்க, சசி அண்ணியை முறைத்து இருந்தான்.

“நீங்க எல்லாரும் ஒவ்வொரு வேலையா வெளிய போயிடுவீங்க. நான் தனியா அங்க என்ன செய்வேன் சந்திரா? ஸ்கூல் லீவ் விடவும் ஶ்ரீயை கூப்பிட்டு வரேன்.” புவனா சொல்ல, அதற்குள் மேல் சந்திராவிற்கு என்ன கூறுவது எனத் தெரியவில்லை. அவர்களும் மாலை கிளம்பி விட, மகன் உடன் படுக்கை அறையில் ஓய்வாகப் படுத்துக் கொண்டான் சசிதரன்.

அன்று நடுஇரவில் மனைவியை அவன் தழுவ, யாழினி தூக்கத்தில் அரை கண் விழித்து அவனைப் பார்க்க, முகத்தில் இறுக்கத்துடன் கடமையாய் கலவியில் இருந்தான். யாழினி தடுக்க,

“இதுக்கு தான எங்க அம்மாவை, அண்ணி கூப்பிட்டு போறேன் சொன்னாங்க? இப்ப என்ன? வேண்டாமா?”

சசி வந்த நிமிடத்திலிருந்து இப்போது தான் அவளின் கண் பார்த்துப் பேசி இருக்கிறான். அதுவும் இப்படியொரு வார்த்தைகளை.!
 
Last edited:

GMK

New member
Joined
Nov 30, 2024
Messages
2
“நான் எதும் சொல்லவே இல்ல. எதுவா இருந்தாலும் உங்களையும் அத்தையையும் தான் கேட்கச் சொன்னேன். அக்காவா தான் இதையே கேட்டாங்க.”

“எனக்கு உன்னைப் பிடிக்கலடி புரியுதா உனக்கு? எங்க அப்பா உன்னை என் தலையில் கட்டாம இருந்திருந்தா, இந்நேரம் நிம்மதியா இருந்திருப்பேன்.” சொன்னவன் எழுந்து குளிக்கச் சென்று இருந்தான். யாழினி உடையைச் சரி செய்தவள் படுக்கையில் அமைதியாய் சரிந்து இருந்தாள்.

சசிதரன் காதலித்த பெண்ணின் வீட்டில் வசதி அதிகம் என்றாலும் அவர்களின் காதலுக்கு சம்மதம் கூறி இருந்தனர். சசிதரன் வீட்டோடு மாப்பிள்ளையாக வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையோடு, ராகவேந்திரன் மறுப்பு சொன்னதோடு விடாது, அவரின் நண்பருக்குச் சொந்தமான குடும்பத்திலிருந்து யாழினியை பெண் பார்த்துத் திருமணம் முடித்து வைத்து இருந்தார். தகப்பனின் பேச்சை மீற முடியாத சசிதரன், அப்பனின் முன் சரியெனக் கூறிவிட்டு யாழினியை சந்தித்து திருமணம் வேண்டாம் என்றும் அவன் வேறொரு பெண்ணை விருப்பும் செய்தியையும் கூறி இருந்தான்.

யாழினி வீட்டில் நான்கு பெண் பிள்ளைகள். தகப்பன் இல்லாத வீட்டில், தகப்பனாக அண்ணன் ஒருவனே இருக்கே, அவனுக்குச் சுமை வேண்டாமெனப் பள்ளி படிப்புடன் படிப்பை நிறுத்தி இருந்தாள் யாழினி. மூத்தவள் இவளுக்குப் பின்னே இன்னும் மூன்று பேர் இருக்க, எப்படி மறுப்பால் இந்தத் திருமணத்தை? இருந்தும் அண்ணனிடம் சசிதரன் கூறிய விவரங்களை அவள் கூற, அவனோ நேராய் ராகவேந்திரன் முன்னே வந்து நின்று இருந்தான். மகனின் செயலில் கோபம் கொண்டவர் அவனைப் பிடிவாதமாக யாழினியின் கையில் பிடித்துக் கொடுத்து இருந்தார்.

திருமணம் முடிந்த நான்கு மாதத்தில் ராகவேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக உயிர் இழந்திருக்க, அதன் பின் சசிதரன் யாழினியிடம் வெளிப்படையாக வெறுப்பை காட்ட தொடங்கி இருந்தான். யாழினி வீட்டிலிருந்து யாரும் அவளைக் காண வரக் கூடாது என்று கூறியவன், அவளையும் செல்லக் கூடாது எனத் தடைவிதித்து இருந்தான். அலைபேசியில் மட்டுமே பேச அனுமதி கிடைத்தது.

தாயின் வேண்டுதலுக்காக அவளோடு குடும்பம் நடந்தியவன் அவள் வயிற்றில் மகன் உதித்த செய்தி கிடைத்ததும் ஜெர்மன் பறந்திருந்தான். அவளுக்குப் புடவை, நகை, சாப்பாடு, வசதியென எதிலும் குறை இல்லை. தாராளமாகத் தாயின் கையில் பணத்தை கொடுத்து அவளிடம் சேர்த்து விடுவான். ஆனால் அவளிடம் எதையும் கேட்கவோ, பேசவோ, பகிரவோ மாட்டான். மகனின் முதல் பிறந்த நாளுக்கு வந்தவன் அவளை ஒதுக்கி வைக்க, யாழினி ஏக்கத்தோடு அவனைப் பின் தொடர்ந்திருந்தாள். இதோ இப்போது மகனுக்கு வயது எட்டு. ஒவ்வொரு வருடமும் இல்லம் வருகிறான். கேட்காது அன்பை அனைவரின் மீதும் காட்டுகிறான்.

அவன் இருந்த இருபது நாளும் மகனும், அவனும் வெளியே நிறைய இடத்திற்கு சென்று வந்திருந்தனர். பதினெட்டாம் நாளே அவன் பெட்டிக்கட்ட தொடங்க, யாழினி அவனுக்கு உதவி செய்யத் தொடங்கி இருந்தாள். அவனுக்குப் பிடித்த, அனுமதிக்கப்பட்ட சில உணவுகளை மட்டும் அவனுக்குச் செய்து கொடுத்தாள். அதை எல்லாம் எடுத்துக் கொண்டவன், அவளிடம் மருந்துக்குக் கூட ஒரு நன்றி கூறவில்லை.

அன்று அவன் கிளம்ப வேண்டிய நாள். அன்னையிடம் ஆயிரம் அறிவுரை, பத்திரம், பிரியாவிடை கொடுத்தவன், மகனுக்கு ஆயிரம் முத்தங்களைக் கொடுத்து இருந்தான். சமையல் அறையில் ஒதுங்கி நின்று அவனையே பார்த்து இருந்தவளுக்கு ஒரு தலையாட்டால் கூட இல்லாது கிளம்பி இருந்தான். அடுத்த வருடமோ, அதற்கு அடுத்த வருடமோ, அல்லது அவளின் ஆயுள் தீருவதற்குள் என்றேனும் ஒரு நாள், அவனின் நேசம் உணர காத்திருக்கிறாள். அதுவரை அவளின் இன்பம் என்பது தூர நிலவு. 💜

அன்பு அனைத்தும் செய்யும்.
அன்புடன்,
கௌரி முத்துகிருஷ்ணன்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
அன்பு அனைத்தையும் மாற்றும். அதுக்கு அவனும் மனது வைக்கணும். பையனுக்கு எட்டு வயசு ஆகுது. இன்னும் மனைவியின் அன்பு புரியலை அவனுக்கு. தனிமை மனைவியின் அன்பைப் புரியவைக்கலாம்.

தேங்க்ஸ் கெளரி :love::love::love:
 
Last edited:
Member
Joined
Sep 3, 2024
Messages
31
ஒன்பது வருடங்கள் ஆகியும் யாழினியின் அன்பு புரியாதவனுக்கு யாழினி தூர நிலவாக இருப்பதே சரி. அருமை சகி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
 
Top