• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
6


“ஏலேய் சீனு! ஏன்ல இப்படிப் பண்ணுனா? வீட்ல கோவம்னா எங்கிட்ட வந்திருக்கலாம்ல. ஒன்னக் காணாம எப்படித் தவிச்சிட்டோம் தெரியுமா? ஏழு வருஷமாகப் போகுதுல ஒன்னப் பாத்து. எங்களயெல்லாம் மறந்து, எங்கனயோ இருந்துட்டு டிமிக்கு குடுத்திட்டிருக்கியால நீ?” என அடிகள் போட்டபடியே திட்டித்தீர்க்க,

“ஹையோ அக்கா! ப்ளீஸ் வேண்டாம். என்னோட குட்டி மருமக்கமார் முன்னாடி, அவங்க தாய்மாமனை அடிச்சா பிற்காலத்தில், என்னை எப்படி மதிப்பாங்க? இதோ வேடிக்கை பார்த்திட்டிருக்காங்களே எங்க அத்தான்.. என்னை மதிச்சி எப்படி பொண்ணு குடுப்பாங்க” என்று மேலே சொல்ல வாய் திறக்கும் முன்,

“அச்சோ மாமா! நான்லாம் ஒங்களக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அதுக்குள்ள நீங்க எங்கப்பா மாதிரி ஓல்டாகிருவிய” என்றாள் இடையிட்ட குரலில் அவனின் எட்டு வயது மருமகள் மலர்.

“எவ அவ” என்று வடிவேலு போல் சொல்லி, “ச்சே... க்ரேட் இன்சல்டுடா சீனு.” தன்னைத்தானே சொல்லியவன், “எட்டு வயசுப் பிள்ளையைக் கூட கெடுத்து வச்சிருக்கீங்க. நம்பர் ஒன் பிசினஸ் மேனை ஒரு பொண்ணு மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்னு மறுப்பதா? ஐயகோ! எங்க பாலிடாய்ல்? எங்க தூக்குக்கயிறு? திருமணத்திற்கு தன் அக்கா பெண்ணே மறுத்ததால், வாலிபன் தற்கொலைன்னு நியூஸ் பேப்பர்ல சாயங்காலம் வந்திரும்” என்றான் விளையாட்டாய்.

அவனுக்கு இரண்டு அடிகள் போட்டு, “நல்ல நாள் அதுவுமா கிறுக்குப்பய மாதிரி பேசாதல” என்று அவனை அதட்டி, “ஒடம்பு முடியலையால குரல் வித்தியாசமா இருக்கு.”

“‘கோல்ட் பிடிச்சிக்கிட்டுக்கா. விடமாட்டேன்னு அடம் பண்ணுது. அதான் சரியாகிறது வரை வேறொருத்தர் குரலை கடன் வாங்கியிருக்கேன்” என்றான் சிரிப்புடன்.

“நக்கல் மட்டும் கொறையல பாருலே ஒனக்கு. சரி இவ்வளவு தொலைவில் இருந்து வந்திருக்கோமே கொஞ்சமாவது எங்களை கவனிக்கனும்னு தோணுதா? வந்ததிலிருந்து வாசல்லயே நிக்க வச்சிட்டிருக்க. சரி ஒன்னோட தத்து சித்தப்பா எங்க?’ என்றாள்.

“கவனிக்கலாமே!” என்று மகேந்திரன் குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்து, “சிந்துமா நீ அக்காவைக் கூட்டிட்டுப் போயி எல்லாத்தையும் காண்பி. நான் வெளியில நிற்கிறேன்” என்பதற்குள், “அண்ணா இந்தாங்க மிளகுப்பால்” என அவனிடம் நீட்டினாள்.

“எதுக்குமா இதெல்லாம்?” என்றாலும் வாங்கிக் குடித்து முடித்து டம்ளரை திருப்பிக் கொடுத்தவன், “இருந்தாலும், இந்த ஜலதோஷம் வந்தாலும் வந்தது இப்படிப் பாடாய்படுத்தக் கூடாது. அது ஒருபக்கம் படுத்துதுன்னா, மருந்து தர்றேன்னு சொல்லி நீ ஒருபக்கம் படுத்துற பாரு. அது அதை விடக்கொடுமை. என்னுடைய ஒரிஜினல் வாய்ஸ் என்னைக்குத்தான் வருமோ. சரி நீ அக்காவைக் கூட்டிட்டுப் போ” என்று அவளிடம் ஒப்படைத்து வெளியே வந்தான்.

ஸ்ரீனிவாசனின் உடன்பிறந்த சகோதரி சுகந்தி. அவனின் படிப்பிற்காகவும், தற்பொழுது தொழிலுக்காகவும் என நிறைய பணம் வாங்கிவிட்டான் தன் அக்காவிடம். தம்பி கேட்கவும் மறுக்காமல் கணவனிடம் பேசி, பணம் இல்லாத பொழுதும், தங்களுக்குச் சொந்தமான ஒரு சில நிலங்களை விற்று கொடுத்திருக்கிறாள், தன் தம்பியை முழுதாக நம்பி. அதில் இன்னும் ஒரு பைசா கூட திருப்பித் தரவில்லையென்பது தான் நிஜம். இருப்பினும் அதே அன்போடு, பாசமான அக்காவாக, தம்பிக்காக திருநெல்வேலியிலிருந்து வந்திருக்கிறாள்.

ஸ்ரீனிவாசன் தன் அத்தானிடம் பெண் கேட்க, அதை மறுத்து சிறுமி பேசியது என அனைத்தையும் பார்க்க முடியாவிடினும் காது வழி வந்த வார்த்தைகளைக் கேட்டிருந்த, தாயும், மகளும் சிரித்து, “நல்ல ஃபேமிலி இல்லம்மா?” என்ற மகளின் வார்த்தைக்கு,

“ ம்... நல்ல கலகலப்பான குடும்பம்” என்பவருக்குள் பழைய நினைவுகள் அவர்கள் பேசிய தமிழைக் கேட்டு. அதற்குள் கணபதி வர, “அப்பா வந்திட்டாங்க வா” என தாய் சொன்னதும் திரும்பிப் பார்த்தவள், புன்னகைத்தபடியே வந்த தந்தையிடம் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்குமா? என்பதை நம்பத்தான் முடியவில்லை அவளால். அவளாக பார்க்காமல் விசாரிக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக கடவுளே சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டாள்தான். அந்த எண்ணம் வந்ததும் முகம் சுருங்க, வேடிக்கை பார்ப்பது போல் கண்களைச் சுற்றிலும் சுழலவிட்டாள்.

மகளின் மனமாற்றம் தெரியாமல், “வாங்க போகலாம்” என்று பார்க்கிங் தாண்டி உள்ளே செல்ல,

அதற்குள் ஸ்ரீனிவாசன் அவர்களைக் கண்டு வரவேற்று, காட்சியறை (ஷோரூம்) வெளிப்புறமாக இருந்த அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்று உபசரித்தவன், “சார் நீங்க ஃபேமிலியோட வருவீங்கன்னு கனவுல கூட நினைக்கல. ரொம்ப தேங்க்ஸ் சார். தேங்க்யூ மேடம்” என்றவன் அதன் பிறகே பாகீரதியைப் பார்க்க, ‘அட நம்ம முறைப்பொண்ணு!’ கண்கள் அவளை முழுவதுமாக அளவிட, இடமறிந்து பார்வையை மாற்றி, “சிந்துமா” என்று தங்கைக்கு ஜாடை செய்ய அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

அவன் அழைத்தது முதல், உள்ளே வந்தும் இதுவரை அவனையும், அவனது அக்காவையும் விட்டு பார்வையை விலக்காத சந்திரா, ஏற்கனவே காதில் விழுந்த சீனு என்ற பெயரும் சேர்ந்துகொள்ள, கணபதியை நோக்கி கண்களால் ஏதோ கேட்டார்.

அவரின் சம்மதமான கண்மூடலில், தன் செல்கள் எல்லாம் புத்துணர்ச்சியாகி சந்தோஷத்தில் அவர்களைக் கண்டார்.

“சார் காஃபி. மேடம் நீங்களும் எடுத்துக்கோங்க. இன்னும் பத்து நிமிஷத்துல நல்ல நேரம் ஆரம்பிக்குது. அப்பவே ஆரம்பிச்சிரலாம்” என்றதும்தான் ஆர்வத்தில் வீட்டிலுள்ளவர்களை சீக்கிரம் அழைத்து வந்தது தெரிந்தது கணபதிக்கு. எப்பொழுதும் சரியாக அந்நேரத்திற்குச் சென்று, ஐந்து நிமிடத்தில் திரும்பிவிடுபவராயிற்றே!

“மேடம் வேண்டாம்பா. அத்தை சொல்லு” என்று சந்திரா சொல்ல... கணபதி, ‘இப்பொழுது வேண்டாம்’ என்பதுபோல் சைகை செய்ய, அதைக் கவனிக்கும் நிலையில் சந்திரா இல்லை. கவனமெல்லாம் தன் அண்ணனின் பிள்ளைகள் மேலேயே இருந்தது.

ஆம். அண்ணன் பிள்ளைகள்தான்! சந்திரா என்ற சந்திரகலாவின், உடன்பிறந்த அண்ணன் அண்ணாமலையின் பிள்ளைகள். சந்தர்ப்ப சூழ்நிலையில் இரு குடும்பத்திற்குமிடையில் ஏற்பட்ட பிரிவு இன்றும் தொடர்கிறது. தொடர்கதையாக!

ஒரு வினாடி புரியாமல் விழித்தாலும் புரிந்ததும் “மேடம்! நாங்க எப்படி உங்களை?” என்று தயங்கினான்..

“நானும் உங்க ஊர் சைடுதான்பா. அங்கெல்லாம் மேடம், ஆன்ட்டின்னு யாரைக் கூப்பிட்டிருப்போம் சொல்லு? அக்கா இல்லை அத்தைதான. அக்காக்கான வயசை நான் தாண்டியாச்சி. அதனால, அத்தை சரியா?” என்றார் அவர்களுக்கான விளக்கமாய்.

சுகந்தி மட்டும் ஏதோ யோசனையாய் இருந்தவள், “ஒங்கள எங்கவோ பாத்தாப்ல இருக்கு. எங்கனன்னுதான் தெரியல. ஆனா, பாத்து பழகியிருக்கேன்” என்றாள் தன் சந்தேகத்தை அவரிடம் வைத்து.

அவள் குழப்பத்திலிருப்பதால் ஒன்றை மட்டும் கவனிக்க மறந்தாள். தன் தம்பிக்கும், அவருக்குமான முக அமைப்பை. அதை அறிந்திருந்தால் அடுத்த நிமிடமே கூட கண்டுபிடித்திருப்பாள்.

அவளின் கணவன் சங்கர் அந்த உருவ ஒற்றுமையை கண்டிருந்தான். ஆனால், கேட்கவில்லை. தன் மனைவியிடம் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். அவர் அத்தை என்று சொல்லச் சொன்னதில் அதை முடிவே செய்துவிட்டான்.

“ஊர்லயிருந்து தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி யாரும் வரலையாமா?” என்று சந்திரா சுகந்தியிடம் கேட்டார்.

‘எப்படித் தெரியும்?’ கேட்க நினைத்தவள், ‘பொதுவா கேட்டிருப்பாங்க’ என்றெண்ணி, “அது இவன் ப்ளஸ்டூ முடிச்சப்ப ஒரு பிரச்சனை. அதுல அப்பா இவன் சொன்னத கேக்கல. அதான் நீங்க என்னை நம்பலதானன்னு கோவிச்சிட்டு போயிட்டான்” என்றாள்.

‘என்னிடம் மட்டும்தான் நம்பிக்கையில்லை என்றால் பெற்ற பையனிடமுமா நம்பிக்கையில்லை.’ ஏனோ ஸ்ரீ(சீ)னிவாசன் மேலுள்ள அன்பு அதிகமானது அவருக்கு.

“இவனுக்கு ரோஷம் ஜாஸ்திங்க. கோவிச்சிட்டு வந்து படிச்சி தன்னைத்தானே பக்குவப்படுத்திக்கிட்டான். இதுவே வேற பையனாயிருந்தா அப்பா மேல உள்ள கோவத்த, வேற வகையில காட்டி கெட்டுச் சீரழிஞ்சிருப்பாங்க. அதுவரையில என் தம்பி தங்கக் கம்பியாத்தான் இருக்கான்” என்று தம்பியைப்பற்றி பெருமையடித்தாள்.

அதுவரை ஏனோ தானோவென்று கேட்டிருந்த பாகீரதியின் மனம் “ம்... க்ரேட்” என நற்சான்றிதழ் கொடுத்தது. அவர்களிடம் அதிகம் ஒட்டாவிட்டாலும் ஒவ்வொருவரையும் ஆராய்ந்து கொண்டிருந்தாள். ஸ்ரீனிவாசனின் குறும்பு. அக்கா தங்கையிடம் உள்ள பாசம். உழைத்து முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனின் உத்வேகம். அனைவரையும் புரிந்து அவரவருக்கு ஏற்றார்போல் பேசுவது என்பதை கணித்திருந்தாள். ஏனோ அந்த குணம் அவளுக்கு பிடித்திருந்தது.

அவ்வப்பொழுது அவன் கைக்குட்டை எடுத்து முகத்திற்கு வைத்து தனியே செல்ல, முதலில் ஏனென்று யோசித்தவள், அதன்பின்தான் ஜலதோஷம் பிடித்திருப்பதாக தன் அக்காவிடம் அவன் சொன்னது நினைவு வந்தது. ‘அச்சோ பாவம்’ என்றுதான் தோன்றியது. அவன் அக்கா அவனே அப்படியென்றால் அவனின் அக்கா எப்படியிருப்பேன் என்பதை கண்முன் நிரூபித்தாள். தங்கையாக வந்தவள் அவர்கள் முன் சரிவர நிற்காததால் அவளை அடையாளம் காணவில்லை பாகீரதி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
“தம்பி டைமாகிருச்சி பாருங்க” என்று மகேந்திரன், அவரின் மனைவி ராதாவும் அழைக்க... “சார் வாங்க டைமாகுது. மேடம் வாங்க” என்று அழைத்ததும், “இப்பத்தான பெரிய லெக்சரே எடுத்தேன் அத்தைன்னு கூப்பிடச்சொல்லி” என்று சந்திரா முகம் சுருங்கச் சொன்னார்.

“சாரி மே... சாரி அத்தை. வாங்க மாமா” என்று அவர்களை அழைத்து முன்னே நடந்தான்.

“பார்த்தியா சந்திரா. முகம்தான் உன்னோட ஒட்டுதுன்னா, குணமும் அப்படியே உன்னைப் போலத்தான் இருக்கு உன் மருமகனுக்கு” என்றார் சந்தோஷமாகவே.

“ஆமா. நிஜம்தான். தேங்க்ஸ் ராம். ரொம்ப வருஷம் கழிச்சி என் ரெத்த உறவுகளை சந்திச்சிருக்கேன். சந்தோஷத்துல கண்ணீரே வருது ராம்.”

“சந்திரா கண்ட்ரோல். நாம யாருன்னு அவங்களுக்குத் தெரியாது. தெரியாத வரைக்கும் நல்லதுன்னு நினைச்சிட்டிருக்கேன். அழுது நீயே காட்டிக் குடுத்திருவ போல. படிச்சி முடிச்சி ரெண்டு வருஷத்துல உன் மருமகன் இந்த லெவல்கு வந்திருக்கான். இது அதுக்கான பங்க்ஷன். சோ, மற்றதை மறந்து சந்தோஷமா கொண்டாடு” என்று சற்று கண்டிப்புடன் சொல்லி அவர் கண்ணீர் துடைத்து, “வா போகலாம்” என்றழைத்து வர,

முன்னே சென்று கொண்டிருந்த பாகீரதி, வாசலுக்குச் சென்று திரும்பிப் பார்க்கையில், தாய் ஏதோ சொல்ல, தந்தை அவருக்கு ஆறுதல் சொல்லி கண்ணீர் துடைக்க என பார்க்கவே பாந்தமாக இருந்தது. ‘காலத்திற்கும் இவர்கள் இப்படியே இருந்தால் எப்படியிருக்கும்?’ மனம் ஏங்கியது.

“என்ன அம்மு? இங்கேயே நின்னுட்ட? வா போகலாம்” என தாய் அழைத்ததும், “ம்.. போகலாம்மா” என்று அவர்களுடன் சென்றாள்.

எ.எஸ்.ஆர் டெக்ஸ்டைல்ஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கச்சொல்லி கணபதியிடம் கத்தரிக்கோல் கொடுக்க, அவரோ, “சந்திரா நீ திற” என்று அவருக்கு ஆறுதலாக இருக்குமென்று கொடுத்தார்.

சந்திராவோ பின்னால் நின்றிருந்த மகளை அழைத்து தன்னருகில் நிறுத்தி, “இதைப்போல் பல மடங்கு உயர்ந்து, நல்லா தழைத்தோங்கணும்னு வேண்டிட்டு கட் பண்ணுமா” என்று மகள் கையில் கொடுத்தார்.

“ம்மா... நானா? நான் எதுக்கும்மா? நான் சின்னப்பொண்ணு தான” என்றாள் தாயின் காதோரம் கிசுகிசுப்பாக.

“பாகீமா சொன்னா கேட்கணும். இதை நீதான் திறக்கணும்” என்று முடிக்க,

“ஆமாமா நீயே திற” என்று சுகந்தியும் சொன்னாள்.

“ரதி ஏன் தயங்குற? இது உன்னோடதும்தான். நல்லா பாரு ஆர் ஃபார் ரதி! மாட்டேன்னு மறுக்காம திற. உனக்கு நானிருக்கேன்!” எனும்போது அன்றைய குரலின் சாயல் இருந்ததோ! குரலைக் கவனித்தவள் அவனின் விளக்கத்தைக் கவனிக்காமல் விட்டாள்.

அந்த குரலில் சட்டென்று திரும்பியவள் யாரென்று பார்க்க, அதற்கு வழியேயில்லாமல் தன் அக்காவிடம் வந்து நின்றிருந்தான் ஸ்ரீனிவாசன். சில வினாடிகள் சுற்றிலும் பார்த்தவள், ‘பொது இடத்தில் நான் ஏன் யாரையோ தேடுகிறேன்?’ என்று தன்னைத்தானே மானசீகமாக கொட்டிக்கொண்டவளுக்கு, ஏனோ தன் தாயிடம் கொடுத்த வாக்கு நினைவு வந்து தேடலை தடுத்து நிறுத்தியது.

இதை யார் கவனித்தார்களோ இல்லையோ சிந்து கண்டுகொண்டாள். பாகீரதி வந்ததிலிருந்து மற்ற வேலைகள் இருந்தாலும், அவளையே அவ்வப்பொழுது பார்த்திருந்தாள். அதாவது ரசித்துக் கொண்டிருந்தாள். அதைப்போல் தன் அண்ணனையும் அவ்வப்பொழுது கவனிக்க, அவனோ அவளைப் பார்ப்பது போல் தெரியுதே என்று பார்த்தால் பார்க்காமல் இருப்பான். ‘அடப்பாவி அண்ணா! அன்னைக்கு தெரியுமா கேட்டதுக்கு, தெரியாதுன்னு அப்படி ஒரு சீனைப் போட்டாங்க. இன்னைக்கு என்னடான்னா, அந்தப் பொண்ணுகிட்ட நெருங்கி நின்னு பேசுறாங்க. என்னங்கடா நடக்குது?’ என்பதுபோல் பார்த்திருந்தாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top