- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
4
முதல் வருடம் ஆயுத பூஜையன்று ரதி கார்மெண்ட்ஸ் அல்லோலகப்பட, அன்று விடுமுறை நாள் அதனுடன் தன்னுடைய பிறந்தநாள் என்பதால் ஸ்ரீனிவாசன் மகேந்திரன் வீடு வந்திருந்தான். அவரோ வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை சொல்ல, தானும் வருவதாகக் கிளம்ப, பழகிய அனைத்து முகங்களும் அவனை புன்னகையுடன் வரவேற்றனர்.
அன்றுதான் முதன்முறையாக ரதி கார்மெண்ட்ஸ் உரிமையாளரைச் சந்தித்தான் ஸ்ரீனிவாசன். அவரை மட்டுமல்ல, அவரின் செல்லப் பெண் பாகீரதியையும் தான். காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தவரைப் பார்த்தவன் கண்கள் விரிய, ‘ஷப்பா! செம ஹாண்ட்சம் பெர்சனாலிட்டி. இந்த வயசிலும் இவ்வளவு யங்கா இருக்கார்’ என்றவன் யோசனைகளின் நடுவே,
“சாரி. ஃபர்ஸ்ட் யூனிட்ல பூஜை முடிச்சிட்டு வந்ததுல கொஞ்சம் லேட்டாயிருச்சி” என்று தாமதத்திற்காக பொதுவாக மன்னிப்பு கேட்க, அனைவரின் சந்தோஷம் முகத்தில் தெரிந்தது. காரணம் அவ்வளவு பெரிய பணக்காரன் தன் தவறை ஒத்துக் கொள்கிறானே என்று.
மெல்ல மகேந்திரனிடம் குனிந்தவன், “சித்தப்பா அவினாசி ரோட்ல இருக்கிற அவங்க மெய்ன் யூனிட்ல எத்தனை பேர் வேலை செய்யுறாங்க?” என்றான் சந்தேகமாய்.
“இங்க நூறு பேர்னா, அங்க ஐநூறு பேர். ஏன் கேட்கிற?”
“எல்லாம் ஜெனரல் நாலேஜை வளர்த்துக்கதான். நானும் இப்படி செகண்ட் தேர்டுன்னு ஆரம்பிக்க வேண்டாமா.”
“கண்டிப்பா ஆரம்பிப்பீங்க தம்பி நீங்க” என்றார் மகேந்திரன்.
பூஜை முடித்து தனியாக அனைவருக்கும் சாக்லேட்டும் கேக்கும் கொடுக்க, ‘பார்றா! என் பிறந்தநாளுக்கு இவர் சாக்லேட் தர்றார்” என ஸ்ரீனிவாசன் மனதினுள் நினைத்தான்.
“இவன் என்னோட பையன் ப்ரவீண். இவ என்னோட பொண்ணு பாகீரதி. இவளுக்கு இன்னைக்குப் பிறந்தநாள். அதனாலதான் இந்த எக்ஸ்ட்ரா சாக்லேட்ஸ்” என்றபொழுதுதான் கவனித்தான், தன்னை விட ஒன்றிரெண்டு வயது மூத்த ஒரு பையனும், பதிமூன்று வயதுச் சிறுமியும் நின்றிருந்ததை. அந்தப் பெயரின் வித்தியாசமும், தன் பிறந்தநாளில் அவளும் பிறந்திருந்ததாலேயே அவளைப் பார்த்தான். அதன்பின் அதை மறந்தே போனான் என்பதுதான் உண்மை.
பி.எஸ்ஸி முடித்து அதே கல்லூரியிலேயே, MBA (Apparel Business (UnderII) Apparel Merchanting) படிப்பு முடிந்ததும் திரும்பவும் அவர்களிடமே பணம் கடனாக வாங்கி A.S.Garments & Fashion Wear ஆரம்பித்தவன், அடுத்த ஒரு வருடத்திற்குள் சென்னையில் ஜவுளிக்கடை கொஞ்சம் பெரிய அளவில் ஆரம்பிக்க இடம் பார்க்கையில், திருப்பூரில் தன்னுடன் படித்து தற்பொழுது சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பன் சுதர்ஷனின் வீட்டிற்கு வந்திருந்தான்.
அப்பொழுது தங்களின் கல்லூரி கல்ச்சுரல் ப்ரோகிராமிற்கு மதன் தன் அண்ணன் சுதர்ஷனை அழைத்திருக்க, அவன் தன் நண்பனையும் இழுத்து வந்திருந்தான்.
“என்ன தர்ஷா இதெல்லாம்? எனக்கு இஷ்டமில்லைன்னு தெரிஞ்சும் அதை இதை சொல்லி இழுத்துட்டு வந்துட்ட?” என்றான் சலிப்பாய்.
“ஸ்ரீ உனக்கே ஓவரா தெரியலயா. உன்னை என்ன பப்புக்கும், பாருக்குமா கூப்பிட்டு வந்திருக்கேன். காலேஜ்கு தானடா என்ஜாய்.”
“பொண்ணுங்க இருக்கிற இடத்துல என்னடா என்ஜாய் வேண்டிக்கிடக்கு. இரு வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட வத்தி வைக்கிறேன்.”
“வத்தி மீன் நண்பா?” என்றான் கேள்வியாய்.
“ம்... மீனிங்கு...” என கேலியாய் கேட்டு, “பத்த வைக்கிறேன்னு இல்லல்ல.. அப்புறம் பத்த மீன்னு கேட்ப நானே சொல்லிருறேன். திட்டு வாங்கித் தர்றதுன்னு அர்த்தம்.”
“ஓ... செய் செய். அப்பத்தான் வயசுக்கு வந்த பையன் ஒருத்தன் வளர்ந்து வீட்ல இருக்கான்னு நினைப்பாங்க” என்றான் அசால்ட்டாக.
அவனுக்கு இரண்டு அடிகள் போட்டு, “இருபத்தி நாலு வயசாகப்போகுது இன்னும் வளராமலா இருக்கப்போற. ஆனா, இந்த வளர்ச்சி வேண்டாம்டா தர்ஷா” என்று பெண்களை நோக்கி கைநீட்டும் பொழுது, மதன் முகம் கொள்ளா சிரிப்புடன் வர, “அப்பா அம்மாவால வர முடியலடா” என்றதும், “பரவாயில்லண்ணா. நீங்க ரெண்டு பேர் வந்திருக்கீங்களே அதுவே போதும்” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.
உள்ளே அவர்களுக்கு அமர இடம் தேடுவதற்குள் ஆரம்ப நிகழ்ச்சியாக பரதநாட்டியம் முடிந்து, அடுத்து இரண்டாம் ஆண்டு மாணவிகளின் இயற்கையா, செயற்கையா என்ற நாடகம் ஆரம்பித்தது. அதற்கு மேல் பொறுமையில்லாமல், “டேய் தர்ஷா! இதுக்குமேல என்னால முடியாது. நான் கிளம்பறேன்” என்று எழப்போனான்.
“BFT (Bachelor of Fashion Technology) Firsy Year Student பாகீரதியின் கவிதைக் கிறுக்கல்கள்” என்றதும் கைதட்டலால் அவளை வரவேற்க, வெளியேற எழுந்தவன், “பாகீரதி” என்ற பெயரில் அமர்ந்து மேடைக்கு வந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்தான். ‘அவளா இது! அவளேதானா!’ இத்தனை ஆண்டுகள் கழித்தும் மாறாதிருந்த அந்த முகம். இன்னொரு முறை கண்டால் தனக்கு நினைவிருக்குமோ என எண்ணிய முகம் கண்முன்னே. இமை மூடாமல் அவளையே பார்த்திருந்தான்.
மேடைக்கு வந்தவள், “அனைவருக்கும் என் மாலை வணக்கங்கள். நான் பாகீரதி பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட். ஆண்கள் கொஞ்சமே கொஞ்சம் என்னை மன்னிக்கணும். இப்ப நான் பேசப்போறது தனியார் சேனல்ல சமீபத்துல ஒரு ப்ரோக்ராம் பார்த்தேன். அதுல பாதிச்ச ஒரு விஷயம்தான் இப்படி எழுதத் தூண்டியது. என்னடா போரடிக்கப் போறாளேன்னு புலம்பாதீங்க.”
“அந்த ப்ரோக்ராம்ல, பையன்கள் எப்பப்பாரு பின்னாடியே சுத்தினா அவங்க மேல எப்படி லவ் வரும்னு பொண்ணுங்களும், நாங்க பின்னாடி சுத்தலன்னா எங்களை எப்படி அவங்களுக்கு பிடிக்க வைக்கிறதுன்னு பையன்களும் பேசினாங்க. ஒரு பையன் நாற்பது தடவை காரித்துப்பினாலும் துடைச்சிப் போட்டுட்டு பின்னாடியே சுத்துவேன்னு சொல்றான். இதைக் கேட்ட அவன் பேரண்ட்ஸ் மனசளவுல எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு அவன் கவலைப்படல. இந்த மாதிரி பையன்கள்தான் கல்யாணத்துக்குப் பின்னாடி சின்னதா ஒரு சண்டை வந்தாலே போய் சூஸைட் பண்ணவோ, இல்ல டைவர்ஸ் பண்ணவோ செய்வாங்கன்னு சைன்ஸ் சொல்லுது.”
“அதுலயும், ஒன்றிரெண்டு பொண்ணுங்க, அவங்களைக் கவர்ற மாதிரி செய்தா நாங்க லவ் பண்ண ரெடின்னு சொன்னாங்க. ஆனா, ஒரு பொண்ணு மட்டும் தொந்தரவு செய்யுற பையனை எப்படிங்க லவ் பண்ணத்தோணும். எரிச்சல்ல ஆரம்பிச்சி அவன் மேல வெறுப்புத்தான் வரும். நான் அவாய்ட் பண்ணத்தான் செய்வேன்னு கடைசிவரை தன்னோட நிலையில தெளிவா இருந்தாங்க. கடைசிவரை அவங்க பாய்ண்டை யாரும் கண்டுக்கவே இல்லைன்றது தான் உண்மை.”
“ஒரு சாங் பாடி பாக்ஸுக்குள்ள பலூன், டெடிபியர் பொம்மையை வைச்சி சர்ப்ரைஸ் கொடுத்ததும், ஒரு பொண்ணு இப்படி வித்தியாசமா லவ் ப்ரொபோஸ் பண்ண கத்துக்கோங்களேன்டான்னு பசங்களைப் பார்த்து சொல்றா. அந்தப் பொண்ணுக்கு பரிசு கொடுத்து என்கரேஜ் பண்றாங்க அந்த சேனல்காரங்க. ஏன்னா பப்ளிக்கா பொண்ணுங்களுக்கு இப்படி பண்ணினா பிடிக்கும்னு ஓபனா உண்மையை ஒத்துக்கிட்டாளாமாம்! எல்லா பொண்ணுங்களும் அவளைப்போல இருப்பாங்களா என்ன? அப்ப கடைசிவரை ஒரே நிலையில இருந்த அந்த பொண்ணுக்கு பெயர் அவங்க அகராதியில என்ன? ஒரு பொண்ணு நல்லவளா இருக்கிறது தப்பா என்ன?”
“இல்லவே இல்லை. ஷி இஸ் குட் கேர்ள். அன்ட் குட் கேரக்டர்” என்ற குரல்கள் மாணவிகளிடமிருந்து பாய்ந்து வந்தது.
“ம்... நானும் அதைத்தான் ஃபீல் பண்ணினேன். ஆண்கள் சார்பா பேச வந்திருந்த அந்த இளம் பாடலாசிரியர் கொடுத்த கமண்ட் எனக்கு இன்னும் கடுப்பாயிருக்கு. பசங்க நம்ம பின்னாடி சுத்தினா நாம மயங்கிருவோமாம். அது இயற்கையாம். அதென்ன பொண்ணுங்க லவ் பண்ணமாட்டோம்னா, ஏகப்பட்ட இல்லைகள். போன் பில் கட்டத்தேவையில்லை. ஈ.பி பில் கட்டத் தேவையில்லைன்னு கவி வடித்தேன்னு சீன் போடுறாரு. ஏங்க பொண்ணுங்க அவ்வளவு மோசமா இருக்கோம்னு இவங்களே கணிச்சிருவாங்களா? அவருக்கும் அக்கா, தங்கைன்னு இருந்திருந்தா பொண்ணுங்களைப் பற்றிய தவறான கமெண்ட் கொடுத்திருக்க மாட்டாரோ! அதுக்கான மறுப்புக் கவிதைதான் இது. உடனே பெர்சனலா லவ் பெயிலியரா கேட்டுராதீங்க. இது அப்படி இல்லை ஒரு ஆதங்கம்தான். இதுக்கே எங்க மேம்கிட்ட கெஞ்சிக்கேட்டு பெர்மிஷன் வாங்கியிருக்கேன். இந்த கவிதை லவ் பெயிலியரானவங்களுக்கும் பொருந்தும். ஆண்கள் அமைதிகாக்கவும்” என்று நிதானமாக ஆரம்பித்தாள்.
அக்கவிதையை அவனுள்ளும் விதைத்து!
உன் நினைவுகள் - எனை
நெருங்கத் தேவையில்லை!
உண்ணாமல் உறங்காமல்
உனக்காக உருகத் தேவையில்லை!
உனக்காக ஏங்கி வாசலில்
வாசமிருக்கத் தேவையில்லை!
உன்னுறவுகளை என்னுறவாக
எண்ணத் தேவையில்லை!
உனைக்காண - என் தாயிடத்தில்
பொய்யுரைக்கத் தேவையில்லை!
மறைந்து மறைத்து
உனை சந்திக்கத் தேவையில்லை!
தோழிகளின் சீண்டல் பேச்சுக்களை
கேட்கத் தேவையில்லை!
வாட்சப்பில் வம்படியாகப்
பேசத் தேவையில்லை!
கைபேசியை கையிலேயே
வைத்திருக்கத் தேவையில்லை!
கடன்காரி போல் கால்கடுக்க
காத்திருக்கத் தேவையில்லை!
உன் வரவு இல்லையெனில்
மனம் மரண வலியை
உணரத் தேவையில்லை!
எனைப் பொய்யாக வர்ணிக்கும்
உன் பசப்பு வார்த்தைகளை
ரசிக்கத் தேவையில்லை!
நான் காணும் காட்சிகளை
உன்னிடம் பகிரத் தேவையில்லை!
ஒரு தோல்வியில்
துவழ்ந்து விடுவேனென்று
நீ எண்ணத் தேவையில்லை!
நீ மறுத்ததால்
இத்தனை தேவையில்லைகள்
என் வாழ்வில்!
ஆனால்,
தேவை! எனக்கேயே எனக்கான
எனைப் புரிந்துணர்ந்து,
என் வாழ்வை மலர வைக்க
ஒரு அன்பான கணவன்!
காத்திருக்கிறேன்
என் கணவனை காதலனாக்க!
தேவை எந்தன் தே(கண)வனே!
பேசி முடித்ததும் ஆண்களை விட பெண்கள் கரகோஷம் காதைப் பிளக்க, அனைவருக்கும் நன்றி சொல்லி கீழே இறங்கி வரவும் அவளுக்கு கைகொடுத்து வாழ்த்துச் சொல்லி அவளை ஒரு விஐபி ஆக்கினார்கள்.
ஸ்ரீனிவாசன் தூர நின்று அவளையே பார்த்திருக்க, மதன் தன் நண்பர்களுடன் அவளை நெருங்குவதைப் பார்த்தவன், என்ன என்ற ஆர்வத்தில் நண்பனிடம் இதோ வருகிறேனென்று அவர்களை நோக்கிச் செல்ல, அங்கே ஒருவன் அவளிடம் “ஐ லவ் யூ” சொல்லி பூ கொடுத்துக் கொண்டிருந்தான். மனதில் எழுந்த அதிர்வை மறைத்து அவளின் பதில் என்னவாக இருக்குமென்று பதற்றத்துடன் பார்த்திருந்தான்.
அவளோ சட்டென்று சிரித்து, “என்ன கூட்டத்தோட வந்து ஜோக்கடிக்கிறீங்களா? லவ் பண்ற வயசா இது. போங்க போயி படிக்கிற வேலையைப் பாருங்க” என்று அவர்களை விரட்ட, அவர்களின் முகம் சுருங்கியது. அதைப் பார்த்தவள், “நல்லா பாரு. உனக்கு இன்னும் மீசை கூட சரியா முளைக்கலை. அதுக்குள்ள பொண்ணு தேட ஆரம்பிச்சிட்ட. இதெல்லாம் தப்புப்பா” என்றாள் பெரிய மனுஷியாக.
“அப்ப எனக்கு மீசை பெருசா முளைச்சதும், சொன்னா லவ் பண்ணுவியா?” என்றான் அப்பாவியாக.
வந்த சிரிப்பை அடக்கி “சான்ஸ் இல்லதான். இருந்தாலும் உனக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம். பட், என் பின்னாடி சுத்தின மவனே கொன்னுருவேன் உன்னை. இப்ப நான் பேசினதே பொண்ணுங்க பின்னாடி பசங்க சுத்துறது பிடிக்காதுன்னுதான். அதைக் கேட்டும் வந்திருக்கன்னா உனக்கு தைரியம் ஜாஸ்திதான். மீசை தானாவே வளரும். படிப்பு அப்படியில்லை. அதனால முதல்ல அதைக் கவனி” என்று அவனை மிரட்டி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
அவள் பேசியதில் நிம்மதியடைந்த ஸ்ரீனிவாசன், ‘அவள் அனைத்தையும் சமாளிப்பாள்’ என்ற எண்ணத்தில் அவளைத் தேடிய மனதைக் கட்டுப்படுத்தி நண்பனுடன் கிளம்பினான்.
தற்பொழுது, ‘அது தப்போ! அவளை அவ்வப்பொழுது கண்காணித்திருக்க வேண்டுமோ! அவளுக்கு தனியாக எதாவது பிரச்சனையா? என்ன பண்ணிட்டிருக்கா அவ?’ ஒரு நொடியில் அவளை தவறவிடப் பார்த்த தன்னையே நொந்து தலையைப் பிடித்தபடி அமர்ந்தான். ‘என்ன செய்யலாம்?’ என யோசித்தவன் நினைவில் மதன் வர, தற்சமயத்திற்கு அவனை உபயோகப்படுத்திக்கலாம் என்று மதனை கைபேசியில் அழைத்து, மாலையில் கல்லூரியில் அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லி வைத்தான்.