• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
26

தனியாக தங்கள் அறைக்குள் வந்த சந்திராவின் கண்கள் பழைய நினைவில் கலங்கியது. அங்கிருந்த பழைய மர பீரோவின் மேல்தட்டில் உள்ள சாவியை எடுத்து உள்ளே லாக்கரில் இருந்ததை எடுத்துத் தரையில் பரப்பி அதனருகில் அமர்ந்த சந்திராவின் கண்களில் ஒருவித பரபரப்பு! தேடல்! கீழே கிடந்த காகிதங்கள், புகைப்படங்களின் நடுவில் சிம்மாசனமாய் அந்த பத்திரிக்கையும், புகைப்படமும்! மனதளவில் கணவனானவனை தன் பெயரருகில் பத்திரிக்கையிலும்! உடலளவில் திருமணப் புகப்படத்திலும் இணைத்த முதல் தருணங்கள். தொட்டுத்தடவி தூசு தட்டி தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தவர் மனம் ஊமையாக அழ, கண்களில் நீர் பிரவாகமெடுக்க, வாய் முணுமுணுத்தது “ஐ லவ் யூ” என்ற வார்த்தைகளை மட்டுமே!

கணவனின் இறப்புக்குப் பின் அண்ணன் குடும்பத்தோடு தொடர்பு விட்டபிறகு, ஒருமுறை சென்னை வந்து சென்ற மாமனாரிடம் கொடுத்து அனுப்பிய தனது வாழ்க்கைப் பொக்கிஷங்கள். “நாங்கள் சந்தேகப்படவில்லை எங்களுடன் வந்துவிடு” என்ற மாமனாரிடம், “நீங்க எங்களோட வந்திருங்க” என்று சந்திரா கேட்க, “சொந்த ஊரே சொர்க்கம்” என்றவரின் வார்த்தையையும் மீற வழியில்லாமல் போனது.

“உங்க பையன் ஆரம்பித்த தொழில் இங்கதான் இருக்கு மாமா. அவர் இடத்திலிருந்து உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் எனக்கு இருக்கு. உங்களையும் சேர்த்து நான் பார்த்துக்கறேன்” என்றார் உறுதியாய். ஊருக்கு கிளம்பியவரிடம், “இந்த பொருள் இங்கே இருந்தா ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல, உங்க பேத்தி கண்ணுலபட்டு அது கேள்விக்குறியாகும். இதை நீங்க பத்திரமா வச்சிருங்க” என்று கொடுத்தனுப்பிய புகைப்படங்கள், தான் எங்கு இருக்க வேண்டுமென்று சொல்லி அனுப்பினாரோ அந்த இடத்தில்தான் இருந்தது.

“என்னை விட்டுப்போக எப்படிங்க மனசு வந்தது? உங்க பொண்ணு மட்டும் இல்லன்னா, அப்பவே நானும் உங்களோட வந்துருப்பேன். விதி உங்களை நினைச்சே உயிர் வாழணும்னு இருந்திருக்கு.. திருமணத்திற்கு முன்னாடியும், பின்னாடியும்.”

வெகுநேரம் தங்களது திருமணப் புகைப்படத்தில் பதிந்திருந்த பார்வை மாறாதிருந்தது. கணவனின் அருகில் இருப்பதைப் போன்ற உணர்வில் மூழ்கியிருந்த சந்திராவின் தோளில் ஆதரவாய் விழுந்த கையைப் பிடித்து, “என்னங்க!” என்று சந்தோஷத்தில் ஆசையாய்த் திரும்பினார்.

அங்கே மகளைக் கண்டதும் நிதர்சனம் புரிய ஊமையாய் அழுத மனம், உண்மை வேறென்றதும் வெடித்துக் கிளம்பியது.

மகளின் தோள் சாய்ந்து சத்தமாக அழ, ஏனையவர்களும் அவ்வறைக்குள் பிரவேசிக்க, ஸ்ரீனிவாசன், பாகீரதி தவிர சிறியவர்களை பாரதி கீழே அனுப்பி, சந்திராவை நெருங்கி தன்புறம் திருப்பியவர் அவரின் கண்ணீர் துடைத்து, “சந்திரா எப்பவும் அழக்கூடாது” என்றார்.

“என்னால முடியலக்கா. இந்த அறைக்குள்ள வரும்போதே என்னை எதுவும் பாதிக்கக்கூடாதுன்னு ரொம்ப கண்ட்ரோலா தான் வந்தேன். ஆனா, ஒவ்வொரு இடத்திலும் நின்னு அவங்க என்னைப் பார்க்கிற மாதிரியே இருக்குக்கா. என்னை என்னால கண்ட்ரோல் பண்ணமுடியல. நான் என்ன தப்பு பண்ணினேன்னு என்னைவிட்டுப் போயிட்டாங்க. எத்தனை வருஷ காத்திருப்பு. எல்லாம் யாருக்காக? அவங்க ஒருத்தருக்காக மட்டும்தானே. ஆனா, என்னை என் பொண்ணை நினைச்சிப் பார்க்கலையே. விட்டுட்டுப் போயிட்டாங்களே” என்று அழுது அரற்ற, சுற்றி நின்றிருந்தவர்களின் கண்களுமே கலங்கியது.

“இத்தனை வருஷமா இங்க வரவே கூடாதுன்னு வைராக்கியமா இருந்தது இதுக்காகத்தான். என்னோட பலம், பலவீனம் எல்லாமே அவங்கதானக்கா. அவங்களை வரச்சொல்லுங்க ப்ளீஸ். ராம் அவங்க உங்க தம்பிதான? நீங்க சொன்னா கேட்பாங்க. ப்ளீஸ் வரச்சொல்லுங்க. வரச்சொல்லுங்க!” என்று பித்துபிடித்தாற்போல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவருக்கு, வலுக்கட்டாயமாக பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து, கட்டிலில் படுக்க வைத்ததும், சற்று நேர புலம்பலுக்குப் பின் மெல்ல கண்மூடினார்.

அதற்குள் இன்னுமொரு அழுகைக்குரல் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். பாகீரதி முட்டியைக் கட்டிக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். பதற்றத்துடன் பெரியவர்கள் அவளை நெருங்கி விசாரிக்கப்போக, “நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்” என்று ஸ்ரீனிவாசன் சொல்ல, அங்கேயே நின்றிருந்த ராம கிருஷ்ணனிடம், “என்ன மாமா? அத்தையைக் கூப்பிட்டுக் கிளம்புங்க” என்றான்.

“சீனு... ரதி?” என்றவரின் பார்வை அவளையே வேதனையாய் பார்த்திருந்தது.

அவரின் பாசம் தெரியாதவனா அவன். “உங்க ரதிதான் மாமா. அவ அழுதா உங்க கண் கலங்குது பாருங்க. அவ என் மனைவி மாமா. போங்க நான் இருக்கேன்ல. என்மேல் நம்பிக்கையில்லையா?” என்றதும் இருவரும் வெளியேற, அங்கே நின்றிருந்த ராமகிருஷ்ணனின் அப்பாவையும், மேனகாவின் அப்பா அம்மாவையும் பார்த்து, “உங்களுக்கு வேற தனியா சொல்லணுமா. ம்.. கிளம்புங்க” என வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க அவர்களும் சென்றார்கள்.

அவர்கள் சென்றதும் மனைவியின் முன் முட்டிப் போட்டு அவளின் முகம்தொட்டு உயர்த்தி, “ரதி” என்றழைத்ததுதான் தாமதம், கண்மூடித்திறக்கும் நேரத்தில் கணவனை ஆவேசமாக கட்டியணைத்து முகமெல்லாம் முத்தமிட்டபடி, “ஐ லவ் யூ சீனு! ஐ லவ் யூ. நீங்க எனக்கு எப்பவும் வேணும்!” என்றவள் கைகள் கணவனின் உடலை அழுத்தமாய் பிடித்தபடி இருக்க, கண்களில் நீர் கட்டியிருக்க, இதழ்கள் தன் முத்த யுத்தத்தை நடத்தியபடி இருக்க, சில நிமிடங்கள் அந்த ஆவேசத்தில் திணறித்தான் போனான்.

“ஹேய்! ரதிமா என்னாச்சிடா? இங்க பாரு. என் முகத்தைப் பாருமா?” என்று அவளைத் தடுக்க போட்ட அணைகள் யாவும் தூள்தூளாக, அவனைத் தன்னுடன் சேர்த்தணைத்துக் கொண்டாள்.

சற்றுநேரம் அவளைத் தன்போக்கில் விட்டவன் அவளின் முதுகை வருடிக் கொடுத்தபடி, “ரதிமா உனக்கு நான் இருக்கேன்ல. ஏன் அழற? எந்த சூழ்நிலையிலயும் உன்னைவிட்டுப் போகமாட்டேன். ப்ராமிஸ்!” என்றான் அவளின் அழுகைக்கான காரணத்தை ஓரளவு உணர்ந்தவனாய்.

அந்தக் குரலின் மென்மையில் இறுகிய அணைப்பை லேசாக்கி கணவனைப் பார்த்து, “இந்தக் குரல்தான் எப்பவும் என்னை தவறா எதையும் செய்யவிடாமல் தடுக்கிறது. எப்பவும் என்னோடவே இருக்கிற ஒரு உணர்வு. எந்த சூழ்நிலையிலும் என்னைத் தடம் மாறாம பாதுகாக்கிற குரல்! என்னை உங்களை நோக்கி இழுத்துட்டு வர்றதும் இந்தக் குரல்தான்!” என்று மென்மையான குரலில் கணவன் கண்பார்த்து பேசியவள், “நீங்க என்னைவிட்டுப் போயிரமாட்டீங்க தானே? எங்கம்மா மாதிரி நான் ஸ்ட்ராங்க்லாம் கிடையாது. பொண்ணு, பையன்னு எதையும் பார்க்கமாட்டேன். இது சுயநலம்தான். ஆனா, எங்கம்மா அவஸ்தை படுற அளவுக்கு என் மனம் பலம் கிடையாது. உங்களுக்கு ஒண்ணுன்னா அந்த செகண்ட் நானும் இல்ல! இட்ஸ் ப்ராமிஸ்!” என்றவளின் வாய்மூடினான் ஸ்ரீனிவாசன்.

“வாழ்வோ! சாவோ! அது உன்னோடதான் ரதி. உன்னை விட்டு எப்பவும் பிரியமாட்டேன். அப்படி ஒரு சூழ்நிலை வந்தா உன்னோட நிலையிலதான் நான். நீ என் தேவதைடா! உனக்கு நியாபகமிருக்கா? காலேஜ் பர்ஸ்ட் இயர்ல ஒரு கவிதை சொன்னியே? அன்னைக்குத்தான் நான் உன்னை பெரிய பொண்ணா பார்த்தது. நீ எனக்குத்தான்னு தோன்றிய நிமிடங்கள்.”

உன் நினைவுகள் என்னுள்,


நெருங்கிக் கரைகிறதடி!

உண்ணாமல் உறங்காமல்,

உனக்காக உருகிக் காத்திருந்தேன்!

உனக்காக ஏங்கி வாசலில்,

வாசமிருந்தே வசமிழந்தேன்!

உன்னுறவு என்னுறவாக,

மாறியது மாயம்தானோ!

மறந்தாலும் மறக்காது,

உனைச் சந்தித்த நிமிடங்கள்!

தோழமைச் சீண்டலில் மனம் மகிழ,

உனக்காகக் கடன்காரனாய்க்

காத்திருக்கவும் சித்தமாயிருக்கிறேனடி!

உன் வரவு இல்லையெனில்,

அந்த மனவலி

மரணத்தைவிடக் கொடுமை

என்பதையறிவாயா!

உனை வர்ணிக்கையில்,

அதை ரசிக்கும் உன்னழகு கோடியடி!

கண்ணில்லா குருடனாய் திண்டாடினேன்

உன் காதலுக்காக!

தோல்வியில்லா வாழ்வுக்கு சாட்சியாய்

நம் காதல்!

வருடங்கடந்து

காத்திருந்து கரம்பிடித்தேனடி உனை!

எனக்கானாய் எந்தன் தேவதையே!

அவளின் கவிதைக்கு பதில் கவிதை கொடுத்து, “உன் படிப்பு முடியுறதுக்காகத்தான் காத்திருந்தேன் ரதி” என்றான் நிதானமாக.

ஒருவித லயிப்பிலேயே கணவனின் கண்களையே பார்த்திருந்தவள், “நான் எதிர்பார்க்கலங்க இந்த சர்ப்ரைஸ. காலேஜ் பங்க்ஷன் வந்திருந்தப்ப பார்த்ததுன்னா, அப்ப சின்ன வயசுல என்னைப் பார்த்தது நினைவில் இருக்கா?” என்றாள் ஆர்வமாய்.

“இல்லமா. உன் பதிமூன்றாவது பிறந்தநாளுக்கு திருப்பூர் வந்திருந்தியே அதுதான் முதல்ல பார்த்தது.”

“அப்பவேவா!” என ஆச்சர்யமாய் கேட்டவளுக்கு, ‘அதெப்படி அந்த வயசுல தோணும்?’ என்ற எண்ணம் வந்தது.

“சே...சே... அப்ப நீயும் சின்னப்பொண்ணு. நானும் படிச்சிட்டிருந்த பையன். அதுமாதிரி எண்ணம்லாம் தோணல. உன்னோட பெயரும், இன்னொன்னும் நமக்குள்ள ஒற்றுமையா இருந்ததால கவனிச்சேன்” என்றவன் இருவரின் பிறந்தநாளை அவளிடம் குறிப்பிடவில்லை. அவளின் அடுத்த ஆச்சர்யத்துக்காக. “மத்தபடி சின்னப்பொண்ணை லவ் பண்றேன்னு சொல்றளவுக்கு கேடுகெட்டவனா எங்க வீட்டுல வளர்க்கல. செகண்ட் டைம் காலேஜ்ல பார்த்தப்பத்தான் நமக்குள்ள எதோ ஒரு பந்தம் இருக்குதுன்னு தெரிஞ்சது.”

“சாரி இந்த ஒருமுறை மட்டும்” என்றவன், “மறுமுறை பார்க்கும் பொழுது திருப்பதியில நீ நின்ன கோலம், என்னால நம்பவே முடியலை.” அவள் தலைகவிழ, “சாரிமா” என்றான்.

“ம் பரவாயில்லை சொல்லுங்க” என்றவள் குரலில் சுரத்தேயில்லை.

“நீ மட்டும் அந்த முடிவு எடுக்கலைன்னா அன்னைக்கே நீ என் மனைவியாகிருப்ப” என்றான்.

“ம்... ஏற்கனவே சொல்லியிருக்கீங்க” என்றவள் குரலில் ஒருவித பெருமிதமும் வெட்கமும்.

“ரதி ப்ளீஸ் கொஞ்சம்” என்ற கணவனின் கெஞ்சலான பார்வையில் என்னவென்பது போல் பார்த்தவளுக்கு, ‘முத்தம் கேட்கிறானோ’ என்றெண்ணி, “எ...என்ன கொஞ்சம்?” என்று திணற,

“இல்ல என் முட்டி வலிக்குது.” அவளோ புரியாமல் பார்க்க, “கொஞ்சம் உட்கார்ந்துக்கலாமா? நீயும்தான் முட்டி போட்டுருக்க அப்ப உனக்கும் வலிக்கும்தான?”

“ஐயே இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா. உங்களை...” என்று சகட்டுமேனிக்கு அடிக்க, அதில் நிதானம் தவறியவன் கீழேவிழ அவள் மேலே விழுந்தாள். அவனோ எதுவும் நடக்காதது போல் கால்மேல் கால்போட்டு, இருகைகளையும் தலைக்கு தலையணையாக்கி உல்லாசமாக விசிலடித்தான்.

மார்பில் கைவைத்து அதில் முகம் புதைத்து கணவன் முகம் பார்த்து, “என்னைப் பிடிக்கும்னு என்கிட்ட சொல்லாம ஊருக்கே தம்பட்டம் அடிச்சிருக்கீங்க!” என்றதும் அசட்டுத்தனமாய் சிரித்த கணவனின் கண் நோக்கி, “கஷ்டம்னா என்னன்னு தெரியாம சந்தோஷமான பகுதியையே பார்த்து வளர்ந்த எனக்கு, எங்கம்மாவோட இன்னொரு பக்கம் எவ்வளவு வேதனையானது கொடுமையானதுன்னு நினைக்கிறப்ப, எனக்கு அந்த மாதிரி ஒரு வாழ்க்கை இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதுக்கு நீங்க என்னோடவே இருந்தா போதும்ங்க. வேற எதுவும் வேண்டாம். என் லைஃப்ல நடந்த நல்லது நம்ம கல்யாணம்!”

“அதுவும் வலுக்கட்டாயமா சம்மதிக்க வச்சிருக்கோம். நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்” என்று தோள் குலுக்கியபடி சிரித்தான்.

“ஏய் முறைப்பையா! அடிக்கடி இந்த தோள் குலுக்குறது, ஹஸ்கி வாய்ஸ்ல பேசுறது இதெல்லாம் வச்சிக்கக்கூடாது. ஓகேவா?”

“ஏன்?” என்றவன் குரலில் அதே மென்மையிருந்தது.

“ஏன்னா அது என்னை ரொம்ப இம்சிக்குது.” அவளின் குரல் ஒருவித மயக்கத்திலிருக்க,

“ஹேய் முறைப்பொண்ணு! நிஜமாவா?” மனம் சந்தோஷத்தில் துள்ளியது.

“அஹான்பா!” என்றாள் அதே குரலில். “அட்ரா அட்ரா!” என்று அட்டகாசமாக சிரித்து தன்னோடு சேர்த்தணைத்து, “ஐம் சோ ஹேப்பி ரதி. நீ கிடைப்பியா என்பதே ஒரு கேள்விக்குறியா இருந்தது. இப்ப...

காற்றை தரும் காடுகள் வேண்டாம்


தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்

நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்

வேறு எதுவும் தேவையில்லை

தேவை எந்தன் தேவதையே!”

மெல்லிய குரலில் பாட.. சட்டென்று கன்னத்தில் முத்தமிட்டு. “தேங்க்ஸ்” என்றாள் மனம் நிறைந்து.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
இரவு பத்தரை மணிபோல் எழுந்த சந்திராவின் கால்கள் சற்று தள்ளாட, தலையை உதறி முகம் கழுவி வந்தவரிடம், “ஃபீலிங் பெட்டர்மா?” கேட்ட மகளிடம், “ம்..இப்ப ஓகே அம்மு. ரொம்ப வருஷம் கழிச்சி உங்க அப்பாவோட இருந்த ஒரு ஃபீல்” என்றார் நெகிழ்ந்த குரலில்.

“அத்தை உங்க ஃபீலைக்கொட்டி தூங்கிட்டீங்க. இங்க ஒருத்தி மூலையில உட்கார்ந்து அழுததுல ட்ரம் நிறைஞ்சிருச்சி. தண்ணிப்பஞ்சம் இருக்கிற இந்த நேரத்துல உங்க பொண்ணு, ரதி பால்ஸ்னு ஒண்ணு ஓபன் பண்ணியிருக்கா. உவ்வே! சரியான உப்புத்தண்ணீர்” என்று முகம் சுழித்தபடி பாவனையாகச் சொல்ல,

“சீ...னு” பல்லைக்கடித்தபடி கணவனை அடிக்க வர, அதைக்கண்டு சந்திரா வாய்விட்டுச் சிரித்தார். “ம்மா நீங்களுமா? இந்த சீனு என்னை கேலி பண்றான். நீங்க சிரிக்கிறீங்க?” என்று சிணுங்கினாள்.

“அம்மு இப்படித்தான் மரியாதை இல்லாம பேசுறதா. அவன் உன் புருஷன். அதுக்கான மரியாதையை எப்பவும் கொடுக்கணும்.”

“நீங்க வேற அத்தை. அவ என்னை ‘டா’ மட்டும்தான் சொல்லல. அது கூட மனசுக்குள்ள சொல்லியிருப்பா” என மாமியாரிடம் அவளை மாட்டிவிட்ட கணவனை முறைத்து, “நோமா. இனிமேல் சீ...னு அப்படின்னு கூப்பிடமாட்டேன். முறைப்பையான்னே கூப்பிடுறேன்” என்றாள் குறும்புச் சிரிப்புடன்.

“ஹா...ஹா... அம்மு எதுவாயிருந்தாலும் ரூம்குள்ளாரவே வச்சிக்கோங்க. பப்ளிக்ல வேண்டாமுங்” என்ற பாரதியுமே, ‘கணவனுக்கான மரியாதையைக் கொடு’ என்பதைத்தான் மறைமுகமாக சொன்னது.

“ஹ்ம்... ஓகே சீனு முறைப்பையா. உன்னை சாரி உங்களை இனிமேல் அத்தான், மச்சான்னே கூப்பிடுறேன்” என்று வேண்டா வெறுப்பாகச் சொல்ல, அதிலேயே அனைவருக்கும் புரிந்தது.

“சீனு உன்பாடு திண்டாட்டம்” என்றார்கள் கோரஸாக.

“பரவாயில்ல நல்ல உள்ளங்களே! நான் அதை கொண்டாட்டமா ஆக்கிக்குறேன்” என்றான்.

“சரி நேரமாகுது சாப்பிட வாங்க” என்ற தாயின் அழைப்பில், “என்னம்மா இன்னுமா யாரும் சாப்பிடலை?” என சந்திரா கேட்க,

“எத்தனை மணியானாலும் நீ எழுந்து வந்தால்தான் சாப்பிடுவோம்னு இருக்காங்க” என்றதும் அவர்களின் அன்பில் மனம் கனிந்தவர், “வாங்க நானே பரிமாறுறேன். வயசாகுதுதே நேரத்துக்கு சாப்பிட வேண்டாமா?” என்றபடி அடுப்படி சென்றார்.

மறுநாள் ஞாயிறு காலை ஒன்பது மணியளவில் ஐயப்பனும், நாகலட்சுமியும் ஜெகன் வீட்டிற்கு வந்து கதவு தட்டுமுன் நாகலட்சுமியின் பார்வை போன திசையைப் பார்த்த ஐயப்பனுக்கு பக்கென்றானது.

“இவன் இங்கேயா இருக்கான்” என அதிர்ந்து, “சே... எத்தனை மூளைச்சலவை செய்து இவளை இழுத்துட்டு வந்திருக்கேன். அதுக்குள்ள இப்படியா ஆகணும்” என்று புலம்பியவர் மனது ஸ்ரீனிவாசன் வீடு வந்து சென்ற இரவு நடந்தது நினைவு வந்தது.

“நாகு சீனு வந்திருந்தானா? எப்ப? வீட்டுக்குள்ள வந்தானா?” என்றவர் மனதிற்குத் தெரியும் வீட்டினுள் வந்திருக்க மாட்டானென்று.

“இல்லங்க. வீட்டுக்குள்ள வரமாட்டேன்னுட்டான் ரோச பரம்பரை. அவங்கப்பா, அத்தைக்கு உள்ள அதே வீம்பு.”

‘எனக்குள்ளும் உண்டு அதே வீம்பு. வெளிப்படுத்தத்தான் மனமில்லை’ என்றது மனம். “சரி அதென்ன சொத்து ப்ரச்சனை?”

“ம்... எல்லாம் உங்களைப் பெத்தவரு செஞ்ச வேலைதான். இப்ப வந்த பேரனுக்கு அவ்வளவு சொத்தையும் கொடுப்பாராம். நாம என்ன தெருவுலயா நிற்கிறது. நமக்கு குழந்தை இல்லாததால பங்கு கிடையாதாமாம். அதான் வளர்மதியை என் வாரிசுன்னு சொல்லிட்டேன். என் உயிரைக் காப்பாத்தினவ அவ. அவளும் அவ அண்ணன் மட்டும்தான் தனியா இருக்காங்க. நல்லபொண்ணு நமக்கு ஆதரவா இருப்பா.”

“சொத்துதான் பிரச்சனையா? இல்ல வேற எதாவதுமா?” மனைவியை அறிந்து ஆராய்ந்தபடி கேட்டார்.

“அ..அது சொத்துதான் பிரச்சனை. வேற என்னை பிரச்சனை இருக்கப்போகுது?” என்றார் வேகமாக.

“யாரோ ஒரு பொண்ணுக்காகல்லாம் சொத்து தரமாட்டாங்கமா. வேணும்னா நீ தப்பா எடுத்துக்கலன்னா ஒண்ணு பண்ணலாம்?”

“என்ன?” என்ற மனைவியின் வித்தியாசமான பார்வையில், “சீனுவுக்கு அவளைக் கட்டிக் கொடுத்திரலாம். சொத்துக்கு சொத்துமாச்சி. அந்தப்பொண்ணுக்கு மேரேஜ் நடத்தின பெருமையும் உன்னையேச் சாரும்” என்றார் நயமாக.

நாகுவோ, ஐயப்பன் என்ற விடாக்கண்டனுக்குக் கொடாக்கண்டனாக, “அவனுக்கு நம்ம புள்ளையையா? சேச்சே என்ன அர்த்தத்துல பேசுறீங்க? உங்க அண்ணன் பையனுக்கு வளர் ஜோடியா நினைப்பே சகிக்கலை. வேறெதாவது ஐடியா சொல்லுங்க?”

“என்னமா நீ புரியாதவளா இருக்கா. இந்தப் பொண்ண நம்ம பையனுக்கு முடிச்சா சொத்துப் பிரிவினைன்னு எதுவும் வராது. அதுவும் இல்லாம இத்தனை வருஷத்துல என்மேல கூட நம்பிக்கை வச்சதில்லை. அவளை அப்படி நம்புற. நல்ல பொண்ணுதான். நம்ம பையனும் நல்லவன்தான். வீம்புக்காக அவனை எதுவும் சொல்லாம நிஜமா யோசிச்சி சொல்லு” என்றார்.

நிறைய யோசித்த நாகுவின் மூளைக்குள்ளும் இந்த யோசனையே நிலைத்திருக்க, “நீங்க என்கிட்ட எதுவும் விளையாடலல்ல? இது நடக்குமா? ஏற்கனவே அப்பா பிள்ளை பேசமாட்டாங்க.” சந்தேகமாகக் கேட்க,

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றதும், “அப்ப எனக்கு சம்மதம்ங்க. சீக்கிரமே பேசி முடிங்க” எனவும்தான் இன்று இங்கே வந்திருக்கிறார்கள்.

ஜெகன் இருப்பது மூர்த்தி வீடென்பது நாகுவிற்குத் தெரியாது. கணபதி தலையெடுத்து திருமணத்திற்கு சிலமாதங்கள் முன் கட்டியதுதான், அவர்கள் இப்பொழுது இருக்கும் அந்த பெரிய வீடு. வசதியான குடும்பம் என்பதை பரைசாற்றுவது அதன் கட்டுமானத்திலேயே தெரியும். இரண்டு வீட்டிற்கும் இடையில் இரண்டு வீடுகள் உண்டு.

பெரிய வீட்டு முன் எதற்கோ வாதாடிக் கொண்டிருந்த இருவரும் பட, முதலில் சந்தேகமாக பார்த்த கண்கள், கணவன் சொன்னதை மனதில் வைத்துப் பார்த்ததும், ஒரு வகையில் இதுவும் நல்லதே என்று தோன்றியது. இருவரையும் அருகருகே பார்க்கையில் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. ஏனோ வளர்மதியை ஏற்ற மனதிற்கு ஸ்ரீனிவாசனை ஏற்க முடியவில்லை. அவன் முகம் நாகுவை மிகவும் இம்சித்து நோகடித்தது. இந்த சிறிய வீடு இருப்பது நாகுவிற்கு தெரியாது. தெரிந்துகொள்ள விரும்பாததுதான் உண்மை.

கதவை தட்டியதும் கதவு திறந்து கால் ஊனமான ஒரு பெண் வருவதைப் பார்த்த நாகுவின் புருவங்கள் தூக்க, “யார் வேணும்?” என்ற ராஜியின் கேள்வியில்.

“இது வளர்மதி வீடுதான?” என்ற தன் சந்தேகத்தை முகத்தில்காட்டி கேட்டார்.

‘வளர்மதியா? யாரது?’ என வாய்திறந்து கேட்குமுன், உள்ளிருந்து வந்த ஜெகன், “வாங்க வாங்க. என்ன இந்தப்பக்கம்? ஒரு போன் பண்ணியிருந்தா நானே வந்திருப்பேனே” என்று அவர்களை அமரச்சொல்லி நாற்காலி எடுத்துப்போட்டான்.

“ஏன் சொல்லாம வந்ததால என்ன பிரச்சனையாச்சி?” எதையுமே ஏடாகூடமாகவே புரிந்துகொள்ளும் நாகுவிடம் இருந்து கேள்வியும் அவ்வாறே வந்தது.

“உங்களுக்கு உடம்பு சரியில்லைல்ல. அதான் ஏன் அலைச்சல்னு பார்த்தேன்.”

“ஓ... இது யாரு?”

“இவ என் மனைவி. இங்க பக்கத்தி இருக்கிற ஸ்கூல்ல டீச்சராயிருக்கா” என்றான் பெருமையாகவே.

“நீயே சின்னப்பையன போலயிருக்கா. ஒன் தங்கச்சிக்கு முடிச்சதும் நீ கல்யாணம் முடிச்சிருக்கலாமே? அப்படி என்ன அவசரம்? அதுவும்...” பார்வையிலேயே காட்டி நிறுத்தியதிலேயே தெரிந்தது மனைவியின் ஊனத்தை சொல்கிறார் என்று.

‘இவளுக்கு உடம்புல ஊனம். உங்களுக்கு மனசுல’ என்பதை வெளியிடவில்லை. காரணம் பாகீரதியும், ஸ்ரீனிவாசனுமே. அவர்களுக்காகவும், நாகலட்சுமியின் வயதை மனதில் வைத்தும் பொறுத்துக்கொண்டான். பின், “அது சூழ்நிலை அப்படியாகிருச்சி. தப்பா நினைக்காதீங்க. இவளோட பேரண்ட்ஸ் இவளுக்கு சரியா நடக்கவராதுன்றதால, இவ அப்பா வயசு ஆளுக்கு கல்யாணத்துக்கு பேசிட்டாங்க. அதான் நாங்க சீக்கிரமா முடிக்க வேண்டியதாகிருச்சி” என்றான்.

அதற்குள் தண்ணீர் கொடுத்து, “காஃபியா? டீ தரவா? என்று ராஜி கேட்க, “இல்லமா நீயும் உட்காரு. நாங்க உங்ககிட்ட ஒரு விஷயமா பேச வந்தோம்” என்று வந்த காரணத்தைச் சொன்னார்.

“என்னது? திரும்பவுமா?” என்ற ஜெகன் சட்டென்று சுதாரித்து, “இல்ல ஏற்கனவே ஒரு இடம் பார்த்து அது தப்பாபோச்சி. அதான் யோசனை” என்றான் தடுமாறியபடி.

அவனையே பார்த்திருந்த ஐயப்பனுக்கு, ‘திரும்பவுமான்னா? அப்ப ஏற்கனவே முடிஞ்சிருச்சா? எங்களுக்குத் தெரியாமலேவா?’ என்ற சந்தேக முடிச்சி புருவ மத்தியில் விழ, மனம் ஏமாற்றத்தையும் உணர்ந்தது.

அவஸ்தையாய் ஜெகன் நெளிய, “ஒங்க அப்பா அம்மா எங்க? என கேட்டு, “ஓ... இல்லயா. அதான் தனியா இருக்கீயளா?” பதிலையும் தானே கூறி, “வேற யாராவது பெரியவங்க இருக்காவளா? இல்ல ஒங்க முடிவுதானா?”

“இ... இல்ல சித்தி இருக்காங்க. நான் பேசிட்டு உங்களை கான்டாக்ட் பண்றேன்” என்றதும், சற்றுநேரத்தில் அவர்கள் வெளியேற, வந்த வியர்வையைத் துடைத்து, “ஷப்பா! ஒரு செகண்ட் தாமதமா வந்திருந்தாலும், நீ உளறியிருப்ப ராஜி” என்றான்.

“நானா? ஆமா யார் அந்த வளர்மதி?” சட்டென்று நினைவு வர, “ஓ... பாகீ அக்காவா? சாரிங்க நான் மறந்துட்டேன். இப்ப என்னங்க பண்றது?”

“ஒண்ணும் பண்ண வேண்டாம். எனக்குத் தேவையான உண்மைகளை சொன்னா மட்டும் போதும்” என்று அவர்களின் பேச்சினூடே ஐயப்பன் வர, ஜெகன் வெலவெலத்துப் போனான். எவ்வளவுதான் பொறுப்பானவனாக இருந்தாலும் இதை எப்படி கையாளுவது என்றே தெரியவில்லை. தன் பதற்றத்தை முகத்திலேயே காட்டி, “சா... அங்கிள் நீங்களா?”

“ஏன் நான்தான். எதிர்பார்க்கலை இல்லையா? சொல்லு எங்கக்கா பொண்ணுக்கு கல்யாணமாகிருச்சா? மாப்பிள்ளை எங்க பையன் சீனுவா?” என கொஞ்சம் அழுத்தமாகவே கேட்டார்.

“அ...அது அங்கிள்” என்று எச்சில் விழுங்கினான்.

“நீ அவளோட அண்ணன்னு சொன்னதை தொடரணும்னு நினைக்காத. அது உண்மை இல்லன்னு அன்னைக்கே தெரியும். அதனால உண்மையை மறைக்காம சொல்லு. அவ எப்படி உங்க கூட? இங்க இருக்காளா? இல்ல எங்க மயினி வீட்ல இருக்காளா?” உண்மை மட்டுமே வேண்டுமென்ற தொனியில் நின்றார்.

“நீங்க சொன்னது நிஜம்தான். எனக்கு அவங்களை இப்ப நாலு நாளாத்தான் தெரியும். அவங்க பாட்டி வீட்லதான் இருக்காங்க” என தனக்குத் தெரிந்ததைச் சொன்னான்.

வெளியே சென்றவர் மனைவியிடம், “திருநெல்வேலி வரை போகணும்னு அண்ணன் சொன்னாங்க. நீ ஊருக்கு போ” என அனுப்பி வைத்தவர் கால்களும், கண்களும், அண்ணன் பையனையும், அக்கா பெண்ணையும் தேடிச்சென்றது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top