New member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 5
- Thread Author
- #1
தனக்கென்ற வாழ்வு
கடல் அலைகளின் ஆர்ப்பரின் நடுவில் மெல்ல மெல்ல தன் முகத்தைக் காட்டும் ஆதவனின் ஒளிக் கதிர்வீச்சில் பிரகாசிக்கும் ஆழியின் அழகில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? என்று சிறுவயது முதல் தன் வீட்டின் பால்கனியில் நின்று ரசிக்கும் சங்கவி கடலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற தீராத ஆர்வத்தில் பள்ளிப் படிப்பை முடித்ததும், கடல்சார்ந்த படிப்பு வேண்டாமென்று மாதவன் சொல்லியும் பிடிவாதமாக நின்று முதுநிலை கடல் பொறியியல் (Marine Engineering) படிப்பை முடித்துவிட்டாள்.
கல்லூரி படிப்பை முடித்த கையோடு பல தேர்வுகளை எழுதியும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்று ஆஸ்திரேலியாவில் கடல் சார்ந்த வேலை கிடைக்கவும், திருமணத் தேதியையும் குறித்துவிட்டார் மாதவன். திருமணம் முடிந்த கையோடு ஒன்றரை இலட்சம் சம்பளத்துடன் தனக்குப் பிடித்த வேலையுடன் தேன்நிலவையும் கொண்டாட இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கணவன் பிரேமுடன் ஆஸ்திரேலியா பயணமானாள்.
ஐந்து வருட ஒப்பந்தத்தில் சென்றதால் தாய் நாட்டிற்கும் வீட்டிற்கும் வர முடியாமல், இரண்டு பெண் குழந்தைகளோடு ஐந்து வருடங்கள் கழித்து ஒரு மாத விடுமுறையில் பெற்றவர்களைப் பார்க்கப் போகும் ஆவலில் குடும்பத்தோடு சென்னை விமான நிலையம் வந்து இறங்கினாள்.
தன்னை வரவேற்க விமான நிலையத்திற்குப் பெற்றவர்கள் வந்திருப்பார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்து வந்தவளுக்குப் பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. மனதில் எழுந்த பிரளயத்தை வெளிப்படுத்தாமல் தாய் வீடு நோக்கிப் பயணமானாள்.
பெற்ற மகளையும் பேரக் குழந்தைகளையும் மகிழ்ச்சியோடு ஓடி வந்து அரவணைத்து முத்தங்களோடு வரவேற்க துடிக்கும் பெற்றவர்கள், நடக்கத் திராணியற்று இருப்பதைக் கண்டவளின் இதயம் அடுத்த நொடி வெடித்துச் சிதறத் தொடங்கியது.
கமலா, மாதவனின் நிலை கண்டு பிரேமும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். வாரத்தில் ஒரு முறை காணொளிக் காட்சி மூலம் அவர்களின் முகத்தை மட்டுமே பார்த்தவர்களுக்கு அவர்களின் உடல்நிலையின் நிலை தெரியாமல் போனது. வெகுதூரத்தில் இருப்பவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாமென்று இருவரும் மறைத்துவிட்டனர்.
குழந்தைகளைப் பிரேமிடம் விட்டுவிட்டுப் பெற்றவர்களை உடனே அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள். ஒரு மணி நேரமாக வெளி நோயாளிகள் பிரிவில் கமலாவுடனும் மாதவனுடனும் காத்திருந்தவள் செவிலியரின் அழைப்புக்கு உள்ளே சென்றாள்.
எப்பொழுதும் தனியாக வருபவர்கள் சங்கவியுடன் வந்ததைக் கண்ட மருத்துவர் யாரென்று புருவங்களை உயர்த்த, “என் மக ஆஸ்திரேலியாவிலிருந்து லீவுக்கு வந்திருக்கா” என்றார் கமலா.
புன்னகைத்த மருத்துவர், “ரெண்டு பேரையும் ஏன் தனியா விட்டீங்க? யாராவது ஆள் வைத்தாவது பார்த்திருக்கலாமில்ல? யாருமில்லாம ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க” மருத்துவர் சொன்னதும் சங்கவியின் கண்களில் நீர் தேங்க சங்கடமாக அமர்ந்திருந்தாள்.
“என்னிடம் எதையுமே அவங்க சொல்லலை டாக்டர். இப்பவும் நாங்க நேரில் வந்ததால்தான் தெரிந்தது. இல்லைன்னா என்ன நடந்தாலும் எங்களுக்குத் தெரிந்திருக்காது” என்ற சங்கவியின் குரல் தழுதழுத்தது.
“சிஸ்டர், ரெண்டு பேரையும் பரிசோதனைச் செய்யக் கூட்டிட்டுப் போங்க” என்றதும் இருவரும் எழுந்து செவிலியரின் பின்னால் சென்றனர். சங்கவி மட்டும் மருத்துவரிடம் பேச அமர்ந்திருந்தாள்.
“டாக்டர், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன ஆச்சு? நல்லா இருந்தவங்க ஏன் இப்படி ஆயிட்டாங்க?” சங்கவி கேட்க,
“அப்பாக்கு வயசானா வர வலிகள்தான். பிஸியோ தெராபி கொடுத்தா நல்லா நடமாட ஆரம்பிச்சிருவார். அம்மாவுக்கு…” என்று தயங்கியவர், “புற்று நோய் அதுவும் கடைசி ஸ்டேஜ் ஒன்னும் பண்ண முடியாது. சிகிச்சை கொடுத்தாலும் அவங்களை வதைப்பது போல்தான். அதனால், அவங்க இருக்கிற வரை பக்கத்திலிருந்து சந்தோஷமா வச்சுக்கோங்க. உங்க கூடக் கூட்டிட்டுப் போக முடியும்னா கூட்டிட்டுப் போங்க” என்றார் மருத்துவர். விழிகளில் நீர் வழிய சங்கவியால் சரியெனத் தலையை மட்டுமே அசைக்க முடிந்தது.
சில ஆறுதலான வார்த்தைகளைக் கூறிய மருத்துவர் இருவரையும் பரிசோதிக்கச் சென்றுவிட்டார். சில நேரங்கள் கடந்த பிறகு அறையைவிட்டு வெளியில் வந்த இருவரையும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்.
வீட்டிற்கு வந்ததும் இருவரையும் அவர்கள் அறையில் படுக்க வைத்துவிட்டு, தன் அறைக்கு வந்த சங்கவி பிரேமிடம் அனைத்தையும் கூற, இருவரும் பல விஷயங்களை விவாதித்த பிறகு இருவரும் நன்றாக இருக்கும் போதே உடன் வர மறுத்தவர்கள்.
இந்த நிலையில் கண்டிப்பாக வர இயலாது. அதனால், ஆட்கள் வைத்துப் பார்க்கலாம் என்றால் நாம் இருக்கும் வரை நன்றாகப் பார்த்துவிட்டு, நாம் சென்ற பிறகு கவனிக்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வதென்று அந்த முடிவையும் விட்டனர்.
நல்ல நிலைமையில் இருக்கும் போதே எட்டிப் பார்க்காத உறவுகள் இந்த நிலைமையிலா வந்துவிடுவார்கள் என்று யாரையும் அழைக்கும் எண்ணத்தைக் கைவிட்டனர். கடைசியில் வேறு எந்த வழியுமின்றிச் சங்கவி தன் நிறுவன மின்னஞ்சலுக்கு, பெற்றவர்களின் சூழ்நிலையைச் சொல்லி ஒரு வருட விடுப்பிற்கு விண்ணப்பித்தாள்.
விடுப்பு கிடைத்தால் ஒரு வருடத்தில் மாதவனின் உடல்நிலையைத் தேற்றிவிடலாம். இருவருக்கும் தன் நிலையை எடுத்துக் கூறி தன்னுடனே அழைத்துச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தனர்.
சங்கவி வர முடியாத காரணத்தால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன்னைப் பெற்றவர்களையும் உடன் பிறந்தவனையும் காணச் சென்றான் பிரேம். விபரங்கள் கேள்விப்பட்டதும் பத்து நாட்கள் கழித்துப் பிரேமுடன் அனைவரும் வந்து கமலா, மாதவன் இருவரையும் பார்த்துச் சென்றவர்கள் விடுமுறை முடிந்து பிரேம் புறப்படும் போதே மீண்டும் வந்தார்கள்.
பிரேம் இருந்தவரை குழந்தைகளைக் கவனித்துக் கொண்டான். வீட்டு வேலைகளுக்கும் உதவி செய்தான். அதனால், சங்கவிக்கு எல்லாம் சுலபமாக இருந்தது. அவன் சென்ற பிறகு அனைத்தையும் ஒருவளே செய்ய வேண்டிய நிலைமை ஆனது.
குழந்தைகளை அருகில் இருந்த பள்ளியில் சேர்த்துவிட்டாள். வீட்டிலிருந்த பெரிய குழந்தைகளைத் தன் முழு நேரக் கவனிப்பில் வைத்திருந்தாள். சங்கவியின் தீவிர கவனிப்பால் மாதவன் மூன்று மாதங்களிலே நன்றாக நடக்க ஆரம்பித்திருந்தார். தனக்காகச் சில மணி நேரங்களை ஒதுக்கிக் கொண்டாள். அந்த நேரத்தில் அருகில் உள்ள மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளில் வீட்டிலிருந்து கற்பிக்க ஆரம்பித்தாள் சங்கவி. வெள்ளிக்கிழமையில் அருகில் உள்ள கோயிலுக்கு வாரம் தவறாமல் சென்று வந்தாள்.
எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருக்க, உயிர்கொல்லி நோய் ஆட்கொண்ட கமலாவின் தேகம் மெல்ல மெல்ல மெலிய ஆரம்பித்தது. ஆனாலும் சங்கவியின் அருகாமை எழுந்து நடமாட முடியாமல் இருந்தவரை நன்றாக நடமாட வைத்திருந்தது.
இருவரின் உடல் கொஞ்ச கொஞ்சமாகத் தேற, நாட்களும் ஓடி ஒரு வருடத்தைக் கடக்கக் காந்திருந்தது. சங்கவிக்கு ஒரு வருட விடுப்பு முடிய ஒரு மாதமே இருந்த நேரத்தில், கட்டிலிருந்து இறங்கும் போது நிற்க முடியாமல் கீழே விழுந்தார் கமலா.