• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

பேரன்பு - ஐ ஆர் கரோலின்

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
11
பேரன்பு
(ஐ ஆர் கரோலின்)

WhatsApp Image 2024-09-17 at 22.03.30_b7bb2575.jpg

வானம் மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக ஒளிக் கதிர்களை அகல்யாவின் மீது வீச முகம் சுளித்துக் கண்களைத் திறந்தவளின் காதுகளில் வரதனின் வார்த்தைகள் ஈயத்தைக் காய்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. தன் அருகில் இருந்த கைப்பேசி குரலைச் சத்தமாக எழுப்ப, அதன் திரையைக் கண்டவளின் முகம் தொட்டாச் சிணுங்கியாகச் சுருங்கியது.

வேண்டா வெறுப்பாகக் கைப்பேசியைக் காதில் வைத்தவள், “என்னம்மா?” என்று காதை மூடிக் கொண்டாள்.

அகல்யாவின் குரலிலே அவள் இன்னும் எழவில்லை என்பதை உணர்ந்த மதுரம், “இன்னுமா எந்திரிக்கலை? மருமகன் ஆபீஸ் கிளம்பனும், சஞ்சீவும், யாத்திகாவும் ஸ்கூல் போகனும். நீ ஒன்னுமே அவங்களுக்குச் சமைத்துக் கொடுக்காம இருந்தா, அவங்க எதைக் கொண்டு போவாங்க?” எனத் தினமும் பாடும் பாட்டைப் பாடத் தொடங்கினார்.

அகல்யாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை என்றதும் அவள் கைப்பேசியைக் கீழே வைத்துவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட மதுரம், தன் கணவர் தாமோதரனிடம் சீறினார்.

“எல்லாம் நீங்க செல்லம் கொடுத்து வளர்த்த லட்சணம். நான் பேசிட்டே இருக்கேன். அவப்பாட்டுக்கு மொபைலை வச்சிட்டு போயிருக்கா” என்றார் கோபமாக,

“நீ சொல்றதைக் கேட்கிறியா? இல்லை. அப்ப உன் பொண்ணு மட்டும் எப்படிக் கேட்பா? உன்னை மாதிரிதானே இருப்பா. மருமகன் எது சொன்னாலும் உடனே அவளுக்குப் போன் போட்டுக் கேட்காதேன்னு சொல்றேன். அதை நீ கேட்கிறியா?” செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தவர் குழாயை மூடிவிட்டு வந்தார்.

“என்னங்க அவ பண்றது சரியில்லைன்னு தெரிஞ்சும், அமைதியா இருக்கச் சொல்றீங்களா? மருமகன் என்ன நினைப்பார்?”

“அகல்யா சின்னக் குழந்தை இல்லை. அவளுக்குக் கல்யாணம் முடிஞ்சு பத்து வருஷம் ஆச்சு. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னாடி வரைக்கும் அவளைப் பற்றி ஒரு வார்த்தைத் தப்பா சொல்லியிருப்பாரா? அப்ப அவ சரியாதானே இருந்திருக்கா. இப்ப ஒரு மாதமா பிரச்சனைன்னா அதுக்கான காரணத்தைத் தேடனும் அதைவிட்டுட்டு ரெண்டு பேரும் அவளுக்கு மேல மேல பிரச்சனையைக் கொடுத்துட்டு இருக்கீங்க.”

‘தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்து எட்டு மணிக்குள் மூனு பேரையும் அனுப்பிட்டுப் பத்து மணிக்குள்ள மற்ற வேலையும் முடிச்சிட்டுத் தன்னிடம் பேசும் அகல்யா ஒரு மாதமாகக் காணமல் போனது போலவே இருக்கு. ஏன்?’ என்ற யோசனையில் ஆழ்ந்தார் மதுரம்.

சிறிது நாள்களாகவே அகல்யா அவள் உடல்நிலையில் மாற்றத்தை உணர்ந்தாள். முன் மாதிரி இழுத்துப் போட்டு எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. சின்ன வேலை செய்வதற்குள் சோர்ந்து உட்கார்ந்து விடுகிறாள். ஒவ்வொரு வேலையும் செய்து முடிப்பதற்குள் மாலை ஆகிவிடுகிறது.

திருமணத்திற்கு முன் வீட்டில் அம்மா, அப்பா, அண்ணன் அலுவகத்தில் தோழிகள் என எல்லோருடனும் இருந்தவளால், திருமணத்திற்கு இரு குழந்தைகள் பிறந்ததும், பிள்ளைகளைப் பெரியவர்கள் பொறுப்பில் விட்டு அவர்களைக் கஷ்டப்படுத்த வேண்டாமென்று வேலையை இராஜினாமா செய்துவிட்டாள்.

குழந்தைகள் பள்ளி செல்லும் வரை அகல்யாவுக்குத் தனிமை என்பது பெரிதாகத் தெரியவில்லை. பிள்ளைகள் பள்ளிச் செல்லத் தொடங்கியதும் காலை முதல் மாலைவரை இருந்த தனிமை சுகமாக இல்லாமல் பெருஞ் சுமையாக மாறத் தொடங்கியது.

நாளடைவில் அதுவே வெறுப்பாக மாற, சரியாகச் சாப்பிடாமல் ஏனோ தானோவென்று உண்ட உணவு தன் வேலையைச் சிறிது சிறிதாகக் காட்டத் தொடங்கி இருந்தது. மனதில் அழுத்தம் கூடக் கூட சரீரம் தன் பலத்தை இழந்து கொண்டிருந்தது.

காலை எட்டு மணிக்குச் சென்று இரவு வீடு வர வரதனுக்குப் பத்து மணி ஆகிவிடுகிறது. காலை, இரவு இரண்டு வேளை அகல்யாவுக்காக நேரம் ஒதுக்கி அவளிடம் பேச அவனுக்கும் நேரமில்லை என்ற காரணம் முன் நிற்கிறது.

அகல்யா பலமுறை வரதனிடம் சின்ன வேலை செய்தாலும் மூச்சு வாங்குது. சோர்வா இருக்கு என்று கூறியும், நல்லா சாப்பிடு, எல்லா வேலையும் முடிச்சிட்டு நல்லா தூங்கி எழுந்திரு என்று சொல்கிறானே தவிர, அவள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்காமல், அவளைப் பற்றிய சிந்தனை இல்லாமல், தன் நேரமின்மையைக் காரணம் காட்டிச் சென்றுவிடுகிறான்.

தன்னிலை மோசமாவதைக் கண்டு அருகில் இருந்த மருத்துவனைக்குச் சென்று மருத்துவரை பார்த்தப் பிறகு அவர் சில இரத்தப் பரிசோதனைக்கு எழுதித் தர, அதை வரும் வழியிலே பரிசோதனை நிலையத்தில் கொடுத்துவிட்டு, பத்து நாள்கள் கழித்து மீண்டும் மருத்துவரை சென்று பார்த்தாள்.

ஒவ்வாமை அதிகமாகி இரத்தச் சிவப்பணுக்கள் மிகவும் குறைந்ததே சோர்வுக்கும் அசதிக்கும் காரணம். நல்ல சத்துள்ள உணவாகச் சாப்பிட சொல்லி, ஒவ்வாமை குறைய மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்திருந்தார் மருத்துவர்.

மாத்திரைகளைச் சாப்பிட முடிந்தவளால் சத்தாண உணவுகளைச் செய்து சாப்பிட முடியவில்லை. ஏற்கனவே இருந்த சோர்வில் மாத்திரை போட்டது வேறு பாடாய்ப் படுத்த, காலை விடிவதும் தெரிவதில்லை. தன்னைப் புரிந்து கொள்ளாமல் தாயும் கணவரும் பேசுவது எரிச்சலைத்தான் கொடுத்தது.

மதியம் சாப்பிட அமர்ந்த வரதன் தன் முன் இருக்கும் தயிர் சாதத்தைச் சாப்பிட மனம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அவன் கைப்பேசி சத்தம் போட்டுக் கூப்பிட்டது. அம்மா என்று திரையில் தெரியவும் உடனே காதில் வைத்தவன், “என்னம்மா, சாப்டீங்களா?” என்றான்.

“ஆமாப்பா இப்பத்தான் அப்பா வந்தாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டோம். மருமக எப்படி இருக்கா? தினமும் எங்க ரெண்டு பேரிடமும் பேசுவா. இப்ப பேசுறதே இல்லை. ஏதோ வேலையா இருப்பான்னு நினைச்சோம் ரொம்ப நாளா பேசலைன்னு நான் இன்னைக்குப் பண்ணேன். அவ குரலே சரியில்லை. கேட்டா தூங்குறேன் அப்புறம் பேசுறேன்னு சொல்றா. இந்த நேரம் அவ தூங்க மாட்டாளே. என்ன ஆச்சு அவளுக்கு?” என்றார் தவிப்பாக,

அம்மா, அப்பா இருவரிடமும் பேசாதது, மதிய நேரம் தூங்குவது வரதனுக்கும் அதிர்ச்சியாக இருக்க, “என்னனு தெரியலைமா அவ முன்ன மாதிரி இல்லை. எப்ப பார்த்தாலும் தூங்கிட்டே இருக்கா” என ஒரு மாதமாக வீட்டில் நடப்பதைக் கூறினான்.

சிறிது நேரம் யோசனையில் இருந்த புஷ்பா, “அவளிடம் என்னன்னு நீ கேட்டியா? டாக்டரிடம் கூட்டிட்டு போனியா? அவ உடம்புக்கு முடியலைன்னு சொல்லி நீ எதுவும் கவனிக்காம இருக்கியா?” தாயின் எந்தக் கேள்விக்கும் வரதனிடம் பதில் இல்லை.

வரதனின் அமைதியே அவன் அகல்யாவைக் கவனிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டார் புஷ்பா. தாய், மகன் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வரதனின் அப்பா, “என்ன வேலையிருந்தாலும் அதையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு முதல்ல மருமகளை டாக்டரிடம் கூட்டிட்டுப் போய் என்னன்னு கேட்டுட்டு எங்களுக்குச் சொல். ஒரு நாள் லீவ் போட்டா உன் தலையை யாரும் எடுத்திரமாட்டாங்க” என்று வேலனின் பேச்சிலிருந்த கண்டிப்பை உணர்ந்தவன் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
11
வீடு பூட்டியிருப்பதைக் கண்டு தன்னிடம் இருந்த மாற்றுச் சாவியால் திறந்து உள்ளே சென்றவன் தன்னை மறந்து ஆழ்ந்து தூங்கும் அகல்யாவைக் கண்டதும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதை உணர்ந்தவன் அவள் எழுந்திருக்கும் வரை சத்தம் இல்லாமல் அமர்ந்திருந்தான்.

மேசையில் காகிதம் காற்றில் பறந்து கொண்டு சத்தம் எழுப்ப அதைக் கையில் எடுக்க மருந்துச் சீட்டு என்பதைக் கண்டதும், அதை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் புறப்பட்டுச் சென்று, அகல்யா பார்த்த மருத்துவரிடம் மருந்துசீட்டைக் காண்பித்து விபரங்கள் கேட்டதும் தன்னையே தன் மனதிற்குள் திட்டிக் கொண்டவன் வரும் வழியிலே, மருத்துவர் என்னவெல்லாம் கொடுக்கலாம் என்று சொன்னாரோ அனைத்தையும் வாங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்கு வந்ததும் தன் அன்னையை அழைத்து விபரங்கள் கூற, “முதல்ல மருமகளை இங்க கொண்டு வந்துவிடு. ஆறு மாதம் எங்களுடன் இருக்கட்டும். அவளுக்குத் தேவையானதை நாங்க செய்து கொடுத்துத் தேற்றி அனுப்பறோம்” என்றார் புஷ்பா.

“ஆறு மாதமா! அம்மா நானே அவளைக் கவனிச்சிக்கிறேன். சஞ்சீவ், யாத்திகாவைப் பார்த்துக்கனும், வீட்டு வேலை அது இதுன்னு…” இழுத்தான் வரதன்.

“நீதானே பார்த்துக் கிழிப்ப. ஒரு மாதமா மருமக எவ்வளவு கஷ்டப்படிருக்கா, அப்ப நீ கிழிச்ச இலட்சணம் என்னன்னு தெரியுதே. ரெண்டு நாள் பார்ப்ப, அப்புறம் வேலை வேலைன்னு போற உன்னைப் பற்றித் தெரியாது எனக்கு.”

“ஆறு மாசம் வெறும் தயிர் சாதத்தை எப்படிச் சாப்பிட? அம்மா, அத்தை பக்கத்தில்தானே இருக்காங்க. அவங்களை வைத்து அகல்யாவைக் கவனிச்சிக்கிறேன்” வரதன் பரிதாபமாகக் கேட்டான்.

“யாரு உன் மாமியாரா? இப்பவும் நீ சொல்றதைக் கேட்டு அகல்யாவைத்தான் திட்டிட்டு இருப்பாங்க. அவங்களையும் மருமகளைக் கவனிக்க விடமாட்ட. நீயே கூட்டிட்டு வந்துவிடுறியா? இல்லை, அடுத்தப் பஸ்ஸில் நான் ஏறவா?” என்று வேலன் கேட்க,

“நானே கூட்டிட்டு வரேன்பா. கொஞ்சம் யோசிங்கப்பா. ஆறு மாதம் நாங்க சாப்பாட்டுக்கு என்ன செய்ய?”

“உன்னைப் பற்றி மட்டுமே யோசிக்க மருமகளைப் பற்றி யோசிக்கமாட்டியா? மருமக செஞ்சு தந்ததை வக்கனையா உட்கார்ந்து சாப்பிட்டல்ல. ஒரு நாளாவது அவளிடம் மனசுவிட்டுப் பேசி, அவ என்ன நினைக்காச் சாப்பிடுறான்னு கவனிச்சிருந்தா, இந்தப் பிரச்சனை வந்திருக்காதுல்ல. உன் மாமியாரைத் தினமும் சமைத்துத் தரச் சொல்லு. அகல்யாவை இங்க கொண்டு வந்துவிடு” புஷ்பா கறாராகக் கூறினார்.

மேலும் வாக்குவாதம் பண்ணுவதைவிட அகல்யாவின் ஆரோக்கியமே முக்கியமென்று அவளுக்குத் தேவையான துணிமணிகளை எடுத்துச் சூட்கேசில் அடுக்கத் தொடங்கினான். மதுரத்தையும் அழைத்து விபரத்தைக் கூறினான். அவர் இங்குக் கூட்டிட்டு வருமாறு கேட்க, புஷ்பா சொன்னதைச் சொன்னான்.

அகல்யா எழவும் குழந்தைகள் வரவும் சரியாக இருக்க, என்ன ஏதென்று கூறாமல் மூவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்ட வரதன், குழந்தைகளை மதுரத்தின் பொறுப்பில் விட்டுச் சென்றான்.

அகல்யா, வரதன் இருவரும் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மதுரம், “என்னங்க இப்படிச் சொல்லிட்டாங்க. பெற்ற மகளை நான் கவனிக்கமாட்டேனா?” கவலையாகச் சொல்ல,

“நீ கவனிப்ப அதை இல்லைன்னு சொல்லலை. மருமகன் சொன்னதைக் கேட்டு நீ அகல்யாவை எப்படிக் கவனிச்ச? அவ இங்க வந்தாலும் நீ மருமகன்னு அவரைத்தான் கவனிப்ப. அதான் சம்பந்தியம்மா அங்க கூட்டிட்டு வரச் சொல்லியியிருக்காங்க. அகல்யா அங்க போறதுதான் சரி. நீ எப்பவும் போல உன் மருமகனை நல்லா கவனி” என்றார் தாமோதரன். ‘ம்க்கூம்’ என்று கழுத்தைத் திருப்பிக் கொண்டு சென்றார் மதுரம்.

அகல்யாவைப் தன் பெற்றவர்களிடம் விட்டதும் புறப்பட்டவனை அகல்யா தடுத்து நிறுத்த, “இப்ப எதுக்கு என்னை இங்க விட்டுட்டு எதுவும் சொல்லாம போறீங்க?” வரதனின் கையை இறுகப் பற்றினாள்.

“ஏன்மா உனக்கு ஒன்னுன்னா பார்க்கமாட்டேனா? என்னைக் கல் நெஞ்சக்காரன்னு நினைச்சிட்டியா? நீ சொல்ல வந்தப்ப நான் வேலைன்னு போனது தப்புதான். அதுக்காகச் சொல்லாமலே இருந்திருவியா? உனக்கு ஏதாவது ஆச்சுன்னா…”

“வாய்க்கு ருசியா சமைத்துப் போட ஆள் கிடைக்காதுன்னு பயமாக்கும். மருமகளே அவன் பேச்சில் மயங்கிராதே. இவனைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். அவன் கூடக் கூட்டிட்டுப் போக டிராமா பண்றான்” பின்னிருந்து குரல் கொடுத்தார் புஷ்பா.

“அம்மா…” என்று வரதன் பல்லைக் கடிக்க, அகல்யா வாய் பொத்தி சிரிக்க, பல நாட்கள் கழித்து அவள் முகத்தில் கண்ட மலர்ச்சியைக் கண்டு, அவளை அணைத்து நெற்றியில் இதழ்களைப் பதித்து, “நான் உன்னைத் திரும்பப் பார்க்க வரும்போது நீ பழைய மாதிரி இப்படியே இருக்கனும்” என்று புறப்பட்டான்.

மூன்று மாதங்களிலே புஷ்பாவும் வேலனும் அகல்யாவைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்திருந்தார்கள். வரதன் இடையிடையே ஊருக்கு வந்து அகல்யாவைப் பார்த்துச் சென்றான். தன் உடல்நிலைத் தேறி இருப்பதை உணர்ந்த அகல்யா, ஊருக்குச் செல்லக் கேட்க, அவளை விடாமல் விடாப்பிடியாக இருக்க வைத்து ஆறு மாதங்கள் நன்றாகக் கவனித்து அவள் நன்றாகத் தேறிய பிறகே வரதனிடம் அனுப்பி வைத்தார்கள்.

குணமாகி வருபவளை வேலைக்கு அனுப்பிக் கஷ்டப்படுத்த வேண்டாமென்று, அவள் தனிமையைப் போக்க வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தான். வேலையைக் காரணம் காண்பித்து மீண்டும் சரியாகச் சாப்பிடாம இருந்தால் என்ன செய்வதென்று யோசிக்க, தன் பெற்றவர்கள் கிராமத்திலிருந்து பழக்கப்பட்டவர்கள் அதனால், இங்கு அழைத்தால் வரமாட்டார்கள். அதனால், மதுரம் அருகிலிருந்து கவனித்துக் கொள்வதற்கு வசதியாக மாமியார் வீட்டின் அருகிலே வீடு மாற்றி வந்துவிட்டான் வரதன்.

குழந்தைகளைப் பள்ளிக்குத் தான் அழைத்துச் செல்லாமல், பள்ளி பேருந்தில் அனுப்பிவிட்டுக் காலை அகல்யாவுடன் அமர்ந்து காலை உணவு உண்ணவும், மதியம் மதுரம், தமோதரன் இருவருடனும் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்று கட்டளையாகக் கூறியிருந்தான் வரதன்.

சனி, ஞாயிறு விடுமுறையில் தன் தாய் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்து மதுரம், தாமோதரனும் கண்டிப்பாக உடன் வர வேண்டும் என்று அனுமதி வாங்கியிருந்தான். இனிமேல் தனிமை அகல்யாவுக்கு மட்டுமில்லை யாருக்கும் இருக்கக் கூடாதென்று முடிவு செய்துவிட்டான். அகல்யாவுடன் மாலையும் தான் உடன் இருக்க வேண்டுமென்று ஆறு மணிக்குள் வீடு வருவதற்காக வேறு வேலையைத் தேடிக் கொண்டான் வரதன்.

அகல்யா திரும்ப வந்ததும் காணாமல் போன பொருள் மீண்டும் கிடைத்து விட்டதைவிடப் பல மடங்கு மகிழ்ச்சியில் அகல்யாவைப் பார்க்க, கன்னங்கள் சற்றுப் பூசியிருக்க, தேகமும் மெருகேறியிருக்க, அம்மா, அப்பா இருவரும் அகல்யாவின் மீது காட்டிய பேரன்பும், அத்தை, மாமா இருவரும் தன் மீது காட்டிய பேரன்பையும் சொல்ல வார்த்தைகளைத் தேடினான்.

“தூங்காம எதுக்கு என்னையே பார்த்துட்டு இருக்கீங்க?” என்றவளைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்து ஒன்றுமில்லை என்று மெல்ல புன்னகைத்து, பல நாள்கள் அகல்யா இல்லாத தனிமையைப் போக்க அவளுக்குள் சங்கமம் ஆகிக் கொண்டிருந்தான்.

பொருளாதார வசதிக்காக ஓடுவதால் பல சின்னச் சின்னச் சந்தோஷங்களை இழந்து விடுகிறோம் என்பதைவிட அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. அன்றாட வாழ்க்கையை இயந்திரத்தனமாக மாற்றிக் கொள்வதும் பசுமையானத் தோட்டமாக மாற்றிக் கொள்வதும் நம்மிடம்தான் இருக்கிறது.
******
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
ஷார்ட் அன்ட் ஸ்வீட் ஸ்டோரி கரோ. நிறைய வீடுகள்ல கவனிக்கபடாத ஒண்ணு. நம்ம சிறு அலட்சியம் நிறைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிஜம். 👏👏👏
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
11
ஷார்ட் அன்ட் ஸ்வீட் ஸ்டோரி கரோ. நிறைய வீடுகள்ல கவனிக்கபடாத ஒண்ணு. நம்ம சிறு அலட்சியம் நிறைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிஜம். 👏👏👏
ரொம்ப நன்றி சொர்ணா 🙏🏻.
 
Top