• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
158
தீமையே 🔱 வெ[கொ]ல்லும்

✨படலம் - 18

இடம் கதிரின் இல்லம்...

அந்த மாலை நேரத்தில் ஒரு விசித்திரமான அமைதியால் சூழப்பட்டிருந்தது.

வீட்டு முன் நிழற்குடையில் நின்றபடி ரம்யா அவனை எதிர்பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் கண்களில் ஒரு ஆவலும், உதடுகளின் முனையில் ஒரு மறைமுகக் கோபமும் கலந்திருந்தது.

அந்த நேரத்தில் வாசல் கதவு திறக்க, கதிர், வெங்கட், மீனா என்று மூவரும் ஒன்றாக உள்ளே வந்தார்கள்.

“டேய், எங்க போன நீ?” என்று கதிரின் அம்மா பரமேஸ்வரி கூர்மையான குரலில் கேட்க,
அவள் பார்வை நேராக கதிரைத் துளைத்தது.

கதிர் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான்.
அவனது முகத்தில் ஓர் அலட்சிய அமைதி.

மீனா, அந்த கேள்விகளை காதில் வாங்கவே இல்லை போல, யாரையும் பார்க்காமல் நேராக அவள் அறைக்குள் சென்று கதவை மூடி கொண்டாள்.

அந்த அமைதியை உடைத்தது சாமுண்டியின் குரல்.
“வெங்கட், நீ எங்க போன?” என்று அவள் தன் மகனை நோக்கி கேட்டாள்.

வெங்கட் வாயைத் திறப்பதற்குள், ரம்யா முன்வந்தாள்.
“இவங்க மூணு பேரும் எங்க போனாங்கன்னு தெரியல ஆன்டி,” என்று மெதுவாக, ஆனால் வத்தி வைக்கும் தொனியில் சொன்னாள்.

அந்த வார்த்தைகள் கதிருக்கு கடுப்பை ஏற்படுத்த, அவன் அவளை நோக்கி முறைத்தான்.

“டேய்...உன்னை ரம்யா பேர்ல அவ அப்பா இடம் வாங்க போகுறதுக்காக கூட தானே இருக்க சொன்னே!” என்று பரமேஸ்வரி மீண்டும் கேள்வி எழுப்பினார்.

“ஆனா...நான் எவ்வளவு சொல்லியும் கதிர் மீனா கூட போயிட்டாரு,” என்று ரம்யா மீண்டும் தீயில் எண்ணெய் ஊற்றினாள்.

சாமுண்டிஸ்வரி கதிரை முறைத்து பார்க்க,
“இடமும் முடியல, நீயும் இவ கூட இல்ல, அப்படி எங்க தான் போன?” என்று பரமேஸ்வரி சற்றே கோபத்துடன் கேட்டார்.

ஒரு நிமிடம் அமைதி.
அனைவரின் பார்வையும் கதிரின் மேல் இருக்க,கதிர் உள்ளுக்குள் தீவிரமாக யோசித்தான்.

உண்மையையும் பொய்யையும் கலந்த ஒரு பதில் இப்போது அவனுக்கு தேவைப்பட்டது

“ரம்யா வாங்க வேண்டிய இடம் மட்டும் இல்ல. நம்ம இடம்ன்னு ரெண்டுமே முடியாம போக யாரு காரணமோ அவள பழி வாங்க என்ன பண்ணலாம்னு யோசிச்சு, அவகிட்ட வேலை பாக்குற ஆளோட பொண்ணை வச்சி அவள பழி வாங்க பிளான் போட சிலரை பார்க்க போனேன்,” என்று முழுமூச்சாக சொல்லி முடித்தான் கதிர்.

அவன் சொன்னது முழு உண்மை இல்லை.
முழு பொய்யும் இல்லை.
ஆனால் அவன் சொன்ன விதம் தப்பிக்க ரம்யாவை நம்ப வைத்தது.

அங்கே ஒரு கணம் அமைதி நிலவியது.
அந்த அமைதியை உடைத்தது ரம்யாவின் குரல்.

“ஐ, அப்போ அவளை நம்ம பழி வாங்கிடலாமா?” என்று கண்கள் மிளிர, சதி கலந்த உற்சாகத்துடன் கேட்டாள்.

கதிர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ரம்யாவின் மனதில் உறுதியான நம்பிக்கையாக பதிந்தது.

ஆனால் அவன் பெரியம்மா சாமுண்டிஸ்வரியின் மனதில் மட்டும் ஏதோ குழப்பம்.

அவள் சட்டென்று கேட்டாள்:
“அப்படி என்ன பண்ணப் போறே கதிர்?” என்று கேட்க,சற்றுக் கசப்புடன் சிரித்தான் கதிர்.

“நம்ம வாங்க நினைத்த இடம் கூட அந்த ராங்கினாலதான் நமக்கு கிடைக்கலை பெரியம்மா. அதுவும் இல்லாம அவ சாதாரண பொண்ணு இல்ல பெரியம்மா. அதான் அவளைப் பழி தீர்க்க சில காரியங்கள் பண்ண வேண்டியதுதான்.”என்று
அவனின் குரலில் பழிவாங்கும் தீ தெளிவாக தெரிந்தது.

ஆனாலும் கதிரின் வார்த்தையில் நம்பிக்கை கொள்ளாத சாமுண்டி,
“அவ்ளோ பெரிய ஆளா அவ?” என்று சிரித்தபடி கேட்டாள்.

“ஆமாம் பெரியம்மா, அவ கொலை கூட பண்ணிருக்கா போல. அது நிரூபணமா ஆனா அவள உள்ளே தூக்கி வைக்கலாம்.” என்றான் கதிர் உறுதியுடன்.

அவன் சொன்னதை ரம்யாவும் பரமேஸ்வரியும் தயக்கமின்றி நம்பினார்கள். ஆனால் சாமுண்டிஸ்வரிக்கு மட்டும் கதிரின் மனதில் இன்னும் முல்லை வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.

அவன் கோபமும் பழியும் காதலின் மறைவாக இருக்கலாம் என்ற சந்தேகம் அவள் மனதில் தோன்றியது.

“சரி, சரி, இதெல்லாம் அப்புறமா பார்க்கலாம்,” என்று உரையாடலை மாற்றிய பரமேஸ்வரி,
“நாளைக்கு நீயும் வெங்கட்டும் ரம்யா வீட்டுக்கு எங்க கூட வரணும்.”என்றார்.

“ஏன்?” என்று உடனே கதிர் கேட்க,
“ஏன் சொன்னா தான் வருவியா?” என்று சற்றுக் கடுமையாக மிரட்டினாள் சமுண்டி.

தன் பெரியம்மா குரலில்
கதிர் பதில் சொல்லாமல் உள்ளே சென்றான்.

அவனின் மௌனத்தை சமாளிக்க,
“என் மகனுக்கு இப்போவே கல்யாண வெக்கம் தான்,” என்று பரமேஸ்வரி ரம்யாவை பார்த்து சிரித்தபடி சொன்னாள்.

“சரி ஆன்ட்டி, எல்லாரும் நாளைக்கு நேரத்தோட வந்துடுங்க, இப்போ நான் கிளம்புறேன்,” என்று ரம்யா மகிழிச்சியாக எழுந்து சென்றாள்.

அவள் வெளியேறியவுடன், வெங்கட் அமைதியாக கதிரின் அறைக்குள் சென்றான்.

இருவரின் கண்களிலும் சொல்லப்படாத உணர்வுகள். அவர்கள் இருவரும் மனதில் மலர்ந்த காதலை குடும்பத்தின் பயத்தால் மறைத்து வைத்திருந்தார்கள்.

அந்த அமைதிக்குள் பல சொல்லாத வார்த்தைகள் மறைந்திருந்தன.
நாளைய தினம் இவர்களுக்கு என்ன மாற்றத்தை கொண்டு வரும் என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால் கதிரின் மனதில் காதலும், கோபமும், ரகசியங்களும் கலந்த ஒரு புயல் மெதுவாக உருவாகிக் கொண்டிருந்தது.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

மறுபக்கம்
VCR பங்களாவில் இரவு பத்து மணியைத் தாண்டியும் ஈஷாவும் சித்ராங்கியும் உறங்கிய பாடு இல்லை.

மாடி அறையில் மங்கலான விளக்கொளியில், மடிக்கணினி முன் ஈஷாவுடன் வேலை செய்து கொண்டிருந்தாள் சித்ராங்கி.

வெளியே நிலவொளி தோட்டத்தை மெதுவாக வருடிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், பங்களா வாசலில் சில அசாதாரண அசைவுகள் அவளது கவனத்தை ஈர்த்தன.

சிசிடிவி திரையில் கண்கள் பதித்த சித்ராங்கியின் விழிகளுக்கு முகத்தை துணியால் மறைத்த நான்கு ஐந்து ஆட்கள் கேட்டை தாண்டி உள்ளே நுழைய முயல்வதை தெளிவாகக் கண்டாள்.

ஆனால் அந்த காட்சியையும் பார்த்தும்
கடுகளவு கூட பதற்றமடையவில்லை அவள்.

மடிக்கணினியை அமைதியாக ஓரமாக வைத்தாள். தலையணையின் கீழ் பதுக்கியிருந்த துப்பாக்கியை எடுத்து கையில் பிடித்தவள் கதவைத் திறந்து வெளியேறினாள்.

அவளது திடீர் செயலை புரிந்து கொள்ள முடியாமல், “மேடம், என்னாச்சு?” என்று ஈஷா பின் தொடர்ந்தாள்.

மாடியில் இருந்து கீழே இறங்கி சென்று பெரிய கேட்டை சித்ராங்கி திறந்தபோது,
“மேடம், நீங்க இருக்குங்க, நான் பார்த்துக்கறேன்,” என்று ஈஷா முன்வர,
“நீ போ. நான் பார்த்துக்கறேன்.” என்றாள் சித்ராங்கி உறுதியான குரலில்.

அடுத்த நொடியே, முன் நின்ற ஒருவனின் மூக்கில் பாய்ந்தது அவளது குத்து. ரத்தம் சிதற, மீதமிருந்த நால்வரும் ஒரே நேரத்தில் அவளை நோக்கி விரைந்தனர்.

அடியாட்களை பார்த்த
சித்ராங்கி ஒரு வார்த்தையும் பேசவில்லை.

ஆனால் இதழ் வளைத்து சிரித்தவள்,அவள் விரலை மெதுவாக சுண்டினாள்.

அந்த சின்ன சைகை போதுமானது.
சித்ராங்கி வளர்க்கும் வேட்டை நாய் மின்னல் வேகத்தில் பாய்ந்து, நால்வரையும் சிதறடித்தது.

அவர்கள் உயிர் பிழைக்க ஓட, நாய் அவர்களைத் துரத்தியது.

இதைப் பார்த்து அங்கு பணிபுரியும் பெண்களும் பதற்றத்துடன் வெளியே வந்தனர்.

“Everyone go inside, now.” என்று ஆங்கிலத்தில் கட்டளையிட்டாள் சித்ராங்கி.

அவள் குரலில் இருந்த அதிகாரம் யாரையும் எதிர்க்க விடவில்லை.

ஓடிச் செல்ல முயன்ற ஐவரில் ஒருவனின் சட்டை காலரை சித்ராங்கி இரும்புப் பிடியாய் பற்றிக் கொண்டு,மூக்கில் ரத்தம் வடிந்தவனை மீண்டும் ஒரு அடியால் தள்ளி,
“உன்ன யார் அனுப்பினாங்க? யாரு அந்த வாடகை வாயனா?” என்று குளிர்ந்த கோபத்தில் சரியாக கேட்டாள்.

“அய்யோ மேடம், விடுங்க, சம்பத் ஐயா தான், உங்களை அவரோட இடத்துக்கு தூக்கிட்டு வர சொன்னாரு,” என்று நடுங்கியபடி ஒப்புக்கொண்டான் அவன்.

சித்ராங்கியின் கண்களில் இமையாத தீ.
“ஒரு ஆம்பளைக்கு இதுதான் தைரியமா? ஒரு பெண்ணை நைட்ல லைட்டா தூக்கிட்டு வர சொல்லுறானா? அவன் சொன்னான் என்றால் நீங்களும் கிளம்பி வருவீங்களா?” என்று கடிந்துகொண்டாள்.

அவனோ உயிர் பயத்தில் விழி பிதுங்கி போக, அவனை நெருங்கி, மெதுவாக, ஆனால் உயிரை உறைய வைக்கும் குரலில்
“நான் கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள இந்த இடத்திலிருந்து நீ மறைந்து போகணும் இல்லைன்னா இந்த நொடியே நீ நிரந்தரமா கண்ணை மூடிடுவ.” என்றாள்.

அவள் சொல்லி முடித்து, அவளது கை காலரிலிருந்து விலகியவுடன், அவன் உயிர் தப்பியவன் போல ஓடினான்.

“மேடம், அவனை விட்டுட்டீங்களே, அவனை நம்ம ஏதாவது பண்ணணும்
மேடம் ,” என்று ஈஷா கோவமாக சொன்னாள்.

“பண்ணலாம்,” என்று சுருக்கமாக சித்ராங்கி பதில் அளிக்க .
அந்த நேரம், வேட்டை நாய் திரும்பி வந்து அவள் அருகே அமர்ந்தது.

நாக்கை வெளியே நீட்டி, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி அவளை நோக்கி பார்க்க,சித்ராங்கி அதன் தலையை மெதுவாக தடவினாள்.

மை இருட்டில், பங்களா வாசலில் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த அவள், சுற்றிலும் இன்னும் யாராவது பதுங்கி இருக்கிறார்களா என ஒருமுறை கண் பார்வையால் ஆராய்ந்தாள்.

அனைத்தும் சரியாக இருக்க,
அவள் உள்ளே செல்ல,
நாய் தன் கூண்டை நோக்கி தோட்டத்துக்குச் சென்று படுத்துக் கொண்டது.

உடனே
ஈஷா ரிமோட்டால் கேட்டை மூட,
அங்கு பணிபுரிபவர்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் புதிதல்ல என்பதால் சில நிமிடங்களில் எல்லோரும் தங்கள் இடங்களுக்கு சென்று உறங்கத் தொடங்கினர்.

“மீதியை நாளைக்கு பேசிக்கலாம். நீ போய் தூங்கு. Good night.” என்று ஈஷாவை அனுப்பிவைத்த சித்ராங்கி, மாடியிலுள்ள தன் அறைக்குச் சென்றாள்.

ஆனால் இதே நேரம்
மறுபக்கம்,
தன் இடத்தில் ஆவலுடன் காத்திருந்த Xmla சம்பத்திற்கு,
சித்ராங்கி தன் அடியாட்களை துவைத்து தொங்க விட்ட கதை தெரியாமல் இருக்க, அவனோ அவள் வருகைக்காக காத்து இருந்தவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top