• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
151
தீமையே 🔱 வெ[கொ]ல்லும்
✨படலம் - 15

மறுநாள் காலைப்பொழுது, யாருக்காகவும் காத்திருக்காமல் எப்போதும் போலவே விடிந்தது.

சித்ராங்கி தன் வழக்கமான வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, ஹாலில் இருக்கும் சோபாவில் அமர்ந்து, கையில் இருந்த கடிகாரத்திற்கு வந்த செய்தியை கவனமாக வாசித்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம், உணவருந்தும் மேசையில் ஈஷா, மாறன், கந்தன் மூவரும் காலை உணவுக்காக அமர்ந்திருந்தார்கள்.

“என்ன மாறா. முல்லை இன்னும் சாப்பிட வரலையா?” என்று ஈஷா கேட்டாள்.

“இன்னைக்கு காலேஜ் லீவு தானே, அதான் அக்கா லேட்டா தான் எந்திரிப்பாங்க போல,” என்று கந்தன் சாதாரணமாகச் சொன்னான்.

உடனே,“டேய். இப்பவாவது சொல்லுடா. நேத்து நைட்டு பெரிய மேடம் கூட நீ எங்க போன?” என்று கந்தனை நச்சரித்தான் மாறன்.

“அண்ணா. ஒரு தடவை சொன்னா புரியாதா? சும்மா சும்மா இப்படி கேள்வி கேக்காதே. அதெல்லாம் பரம ரகசியம்,” என்று கந்தன் சலிப்புடன் பதிலளித்தான்.

“என்னைக்காவது ஒரு நாள் நீ என்கிட்ட உண்மையை சொல்லித் தான் தீருவ,” என்ற மாறன் முகத்தை கோவமாக வைத்துக்கொண்டான்.

அண்ணன் தம்பி இருவரின் வாக்குவாதத்தை ரசித்தபடி ஈஷா அமைதியாக அமர்ந்திருக்க..
அந்த நேரம், முல்லை உணவருந்தும் மேசைக்கு வந்து அமர்ந்தாள்.

மாறன், கந்தன் இருவரை பார்த்து மெதுவாக புன்னகைத்தவள், ஈஷாவையும் சித்ராங்கியையும் பார்த்ததும் முகம் சுளித்தாள்.

முல்லை வந்ததைக் கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாத சித்ராங்கி, முன்பு போலவே தன் வேலைக்குள் மூழ்கியிருந்தாள்.

“குட் மார்னிங் முல்லை,” என்று ஈஷா சொல்ல, முல்லை அதற்கு பதில் சொல்லவே இல்லை.

“அண்ணா. இன்னைக்கு நமக்கு லீவு தானே? நம்ம மூணு பேரும் வெளியே போயிட்டு வரலாம்,” என்று முல்லை சொன்னாள்.

“எங்க போகணும்?” என்று ஈஷா கேட்க,
உடனே முல்லை முகம் சுளித்தாள்.

“ஹலோ. நான் ஒன்னும் உங்ககிட்ட பேசல. என் அண்ணன்கிட்டயும் தம்பிக்கிட்டயும் தான் பேசுறேன்,” என்றாள் கடுப்புடன்.

“சரி சரி. நீ உன் அண்ணன் தம்பிக்கிட்டயே பேசு. ஆனா எங்க போகணும்னு சொல்லு.. because உங்களை அழைச்சிட்டு போக வேண்டியது நான் தான்" என்று ஈஷா அமைதியாகச் சொன்னாள்.

“எங்கள யாரும் அழைச்சிட்டு போக தேவையில்லை. நாங்க பஸ்ல போவோம்,” என்று முல்லை எதிர்த்தாள்.

“எத்தனை முறை சொல்றது முல்லை. முருகன் சார் வர வரைக்கும் நீங்க எங்க போனாலும் அது என் கூட தான்,” என்று ஈஷா கண்டிப்பாகச் சொன்னாள்.

அதற்கு முல்லை மேலும் சீறியவள்,
“இங்க பாருங்க. நாங்க எங்க வேணாலும் போவோம். சினிமா போவோம், பீச் போவோம், பார்க் போவோம். ஏன் யாருன்னே தெரியாதவங்க வீட்டு கல்யாணத்துல கூட போய் உட்கார்ந்து சாப்பிடுவோம். அப்போ அங்கெல்லாம் எங்களை நீங்க அழைச்சிட்டு போவீங்களா ?” என்று கேள்வி மேல் கேள்வி வீசினாள்.

ஈஷா பதில் சொல்லாமல் திரும்பி சித்ராங்கியை பார்க்க,
அவளோ இவர்கள் பேசிக்கொண்டிருந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும், எதையும் கவனிக்காதவள் போல தன் கை கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

முல்லை தொடர்ந்து ஈஷாவிடம் பேசிக் கொண்டிருக்க, அந்த பங்களாவில் பணிபுரியும் பணியாளர்கள் காலை உணவை மேசைக்கு எடுத்து வந்து வைத்தார்கள்.

“சரி சரி. முதல்ல சாப்பிடுவோம். அப்புறம் பேசலாம்,” என்று ஈஷா சொல்ல,

அதே நேரத்தில் தொலைக்காட்சியில் அன்றைய செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.

📌முக்கிய செய்திகள். அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!

பிரபல இயக்குனர் ஆதி சேஷன் இல்லத்தில் நிகழ்ந்துள்ள துர்மரணம் தமிழ்த் திரையுலகையும், பொதுமக்களையும் உறைய வைத்திருக்கிறது.

ஆம்...ஆதி சேஷனின் குடும்பத்தைச் சேர்ந்த கலா மற்றும் சுனில் ஆகிய இருவரும், அடுத்தடுத்த நாட்களில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரு கொலைகளின் பின்னணியில் என்ன இருக்கிறது?
யார் இதற்குக் காரணம்?

இந்த கேள்விகளுக்கான விடையைத் தேடி காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில், வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்த விசாரணை CBI அதிகாரி விக்ராந்திடம் ஒப்படைக்கப்படுவதாக உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரிப்பதற்காகவே, அவர் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Mr.விக்ராந்த்—
தன் பணிக்காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை நேரடியாக கையாள்ந்த,
நேர்மையும், துணிச்சலும் கொண்ட கண்ணியமான அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை வழக்கில் மேலும் என்னென்ன திருப்பங்கள்?
உண்மை வெளிச்சத்துக்கு எப்போது வரும்?

இதற்கான உடனுக்குடன் வெளியாகும் தகவல்களை தெரிந்து கொள்ள,
எங்களின் செய்தி ஊடகத்தை தொடர்ந்து பாருங்கள்.'

என்ற செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அந்த வேளையில்,
முல்லையின் கண்கள் திரையை விட்டு விலகவில்லை.

அவளின் காதுகள்
ஒவ்வொரு வார்த்தையையும் கூர்மையாக உள்வாங்கிக் கொண்டிருந்தன.

“இந்த போலீஸ் அதிகாரி விக்ராந்த் யார்? இவரை நேரில் சந்தித்து, இந்தக் கொலைகளுக்கெல்லாம் காரணம் இவள்தான் என்று உண்மையை சொன்னால், இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கும்தானே?” என்று முல்லை தனக்குள் எண்ணிக்கொண்டாள்.

ஆனால் அந்த உண்மையை தனியாகச் சென்று சொல்லும் தைரியம் அவளுக்கில்லை.

"நான் மட்டும் எப்படி இதைச் செய்வது? கதிரை துணைக்கு அழைத்தால் என்ன?” என்ற யோசனையும் அவளின் மனதில் எழுந்தது.

அதனால், அடுத்தமுறை கதிரை சந்திக்கும் போது இந்த விஷயத்தை அவனிடம் சொல்லவேண்டும் என்ற உறுதியுடன் முல்லை இருந்தாள்.

செய்தியை கேட்டபொழுது முல்லையின் முகபாவனைகள் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டிருப்பதை, சித்ராங்கி தன் மனக்கண்ணால் துல்லியமாக கணித்துக் கொண்டிருந்தாள்.

முல்லையின் கண்களில் தெரிந்த அந்த பதற்றம், பயம், தீர்மானம் அனைத்தையும் அவள் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.

அந்த எண்ணமே போதும் என, சட்டென்று தன் இருக்கையிலிருந்து எழுந்தாள் சித்ராங்கி.

யாரிடமும் எதுவும் பேசாமல் சமையலறைக்குள் சென்று தனக்கான உணவை எடுத்துக் கொண்டு வந்து, உணவருந்தும் மேசையில் அமைதியாக அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள்.

அவள் திடீர் செயலால் மேசையில் இருந்தவர்களின் கவனம் அவள் மீது திரும்பியது.

“நீங்களே இந்த சாப்பாடு செஞ்சீங்களா?” என்று கந்தன் ஆர்வமாகக் கேட்டான்.

சித்ராங்கி பதிலாக வார்த்தை பேசவில்லை.
மெதுவாகத் தலை "ம்".. என்று அசைக்க,
“நான் சாப்பிட்டு பாக்கலாமா?” என சட்டென்று ஆர்வமாக கேட்டான் கந்தன்.

அவன் கேள்விக்கு ஈஷா மறுப்பு சொல்லும் முன்பே, சித்ராங்கி தன் தட்டில் இருந்த உணவின் பாதியை அவன் தட்டில் மாற்றி இருந்தாள்.

அந்த நொடி,
ஈஷாவின் கண்களில் உண்மையான ஆச்சரியம் தெரிந்தது.

ஈஷாவிற்கு தெரிந்த நாளிலிருந்து,
சித்ராங்கி யாரிடமிருந்தும் ஒரு நெல் மணிப்பருக்கையைக் கூட வாங்கிக் கொண்டதில்லை.

அவள் தட்டிலிருந்தும் யாருக்காவது உணவு கொடுத்ததை, ஈஷா இதுவரை பார்த்ததும் இல்லை. என்று அவள் அறிந்து இருந்தாள்.

கந்தனின் செயலை பார்த்து “டேய் பைத்தியம். யார் என்ன கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவியா?” என்று முல்லை கந்தனை கண்டித்தாள்.

ஆனால் கந்தன், அவள் வார்த்தைகளை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

ஒரு கவளம் சாப்பிட்டு,
“சாப்பாடு சூப்பரா இருக்கு,” என்று சித்ராங்கியை பார்த்து நேர்மையாகப் பாராட்ட...

முல்லை அங்கே இருந்ததே இல்லை என்பதுபோல் அவளை முழுவதுமாகப் புறக்கணித்தான் கந்தன்.

அந்தச் சின்ன நிகழ்வில்,
கந்தனுக்கும் சித்ராங்கிக்கும் இடையே ஒரு நல்ல உறவு உருவாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த ஈஷாவிற்கு, மனதுக்குள் ஓர் இனிமையான சந்தோஷம் எழ... முல்லையோ கடுப்பின் உச்சத்தில் தான் இருந்தாள்.

இப்படியாக அவர்கள் அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டிருக்க,

“மேடம். நம்ம பத்து மணிக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் கிளம்பணும்,” என்று ஈஷா நினைவூட்டினாள்.

“ஓ. அந்த பனைமரத் தோப்பை அந்தப் பிள்ளை கிட்ட இருந்து பிடுங்கி, நீங்களே வச்சிக்க போறீங்களா? என்னதான் ஜென்மமோ நீங்க எல்லாம்,” என்று சித்ராங்கியை திட்டியபடியே முல்லை தன் அறைக்குள் சென்று விட்டாள்.

முல்லை போனதும்,
“உங்க தங்கச்சி என்ன லூசா? அந்த பனைமரத் தோப்பை வாங்கப் போறதே. முல்லை யார ஹீரோவா நினைச்சுகிட்டு இருக்காலோ, அந்த கதிர் கட்டிக்கப் போற பொண்ணு ரம்யாதான்,” என்று ஈஷா சாதாரணமாகச் சொன்னாள்.

“என்ன? கதிருக்கு வேற பொண்ணு கூட கல்யாணம் நடக்கப் போகுதா?” என்று மாறன் ஆச்சரியமாகக் கேட்டான்.

“ஏன்? நீங்க கதிருக்கு மச்சான் ஆகணும்னு ஆசையா?” என்று சிரித்தபடி ஈஷா கேட்டாள்.

“ஐயையோ வேண்டாம். அந்த ரவுடி பையன் என் சகோதரிக்கு வேண்டவே வேண்டாம்,” என்று மாறன் முகம் சுளித்தபடி சொல்ல,

அவர்களின் பேச்சில் தலையிடாத சித்ராங்கி, தன் சாப்பாட்டு தட்டை அவளாக் சுத்தம் செய்தவள்,

பிறகு எதுவும் பேசாமல்
மாடியில் இருக்கும் தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இடம் : கதிரின் தோழன் உதயாவின் பங்களா.

“என்னப்பா இது. நேரா வீட்டுக்கே வராம ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு ஏன் போனீங்க?”
என்று உதயா, தன் தந்தை சம்பத்திடம் கைபேசி வழியாகக் கேட்டான்.

“அட. எனக்கு எங்கடா நேரம் இருக்கு? அப்பா ரொம்ப பிஸி,”
என்று அலட்சியத்தோடு பதிலளித்தார் சம்பத்.

“அப்படி என்ன அவ்வளவு பிஸி?”
உதயாவின் குரலில் கோபம் தெளிவாகத் தெரிந்தது.

“அதெல்லாம் நேர்ல பார்த்து பேசிக்கலாம் தம்பி. நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்க? ரம்யாவை கூட்டிக்கிட்டு சீக்கிரமா ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு வா,”
என்று சொன்னார் சம்பத்.

“அப்பா. உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்,”
என்று உதயா சொல்ல முயன்றதும்,
“அட. நீ நேரா வா. அப்போ எல்லாம் பேசிக்கலாம்,”
என்று அழுத்தமாகக் கூறி அழைப்பை முடித்தார் சம்பத்.

கோபத்தோடு கைபேசியை அணைத்த உதயா, “ரம்யா. கிளம்பு. நம்ம ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு போகணும்,”என்றான்.

“போகும் வழியில கதிரையும் அழைச்சிட்டு போகலாமே,” என்று சொன்னாள் ரம்யா.

உதயாவும் ரம்யாவும் நேராக கதிரின் வீட்டை அடைய, அங்கே மீனாவுடன் நின்றிருந்த கதிர், “போகலாமா?” என்று சாதாரணமாகக் கேட்டான்.

மீனாவைக் கண்டவுடனே ரம்யாவின் முகபாவனை மாறியது.

“என்ன பேபி. மீன் ஏன் நம்ம கூட வரணும்?” என்று தயக்கத்தோடு கேட்டாள்.

அந்தக் கேள்வி கதிரை சீற்றமடையச் செய்தது. “ஏய். அவ என் மாமா பொண்ணு. அவ என் கூட வந்தா உனக்கு என்ன பிரச்சனை?” என்று கடுப்புடன் கேட்டான்.

“இல்ல பேபி.” என்று ரம்யா தொடர முயன்றபோதே,
“அதுவும் இல்லாம. இவ எனக்கு மட்டும் தான் ‘மீன்’. நீ அவளை மரியாதையா மீனான்னு தான் கூப்பிடணும்" என்று கதிர் உறுதியாகச் சொல்லிவிட்டான்.

அதை கேட்டதும், மீனா திமிர் கலந்த நடையோடு சென்று காரின் பின்சீட்டில் அமர்ந்துக் கொண்டாள்.

அவளின் அந்தச் செயல் ரம்யாவின் கோபத்தை மேலும் தூண்டியது.

‘முதல்ல எனக்கு பேபியோட கல்யாணம் முடிஞ்சிடட்டும். அப்புறம் இருக்கு பாரு உங்களுக்கெல்லாம்,’
என்று உள்ளுக்குள் கறாராக எண்ணிக்கொண்டவள், அதே கோபத்தோடு காரின் முன்சீட்டில் அமர்ந்தாள்.
அவளுக்குப் பின்னால், மீனாவின் அருகில் வந்து அமர்ந்த கதிரை பார்த்து,
“டேய் மாமா. என்னை எங்கடா அழைச்சிட்டு போற?” என்று கேட்டாள் மீனா.

“நான் எங்க அழைச்சிட்டு போறேன்னு தெரியாமத்தான் என் கூட வரியா?”
என்று கதிர் அவளை முறைத்துப் பார்த்தான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top