Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 137
- Thread Author
- #1
'இல்ல... எனக்கு காதல் தான் முக்கியம். நான் அவரோட பொஞ்சாதியா மாறி,புள்ள குட்டி பெத்து அவங்க வீட்டுக்கு மருமகளா மட்டும் இருந்துக்குறேன்னு நீ நினைச்சா! நான் வேணும்னா இப்போவே போய் உன்னை அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துடுறேன்' என்ற மாறன் முல்லையின் கையை பிடித்து அறையின் வாசலை நோக்கி நடந்தான்.
மாறனின் செயலில் கோவமடைந்த முல்லை அவன் கையை தட்டி விட்டவள், 'என்னை என்ன கல்யாணத்துக்கு அலைற ஆளுன்னு நினைக்கிறியா' என்று கேட்க, மாறனும் அவனை முறைத்து இருந்தான்.
'நான் அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன் தானே! நான் டாக்டர் ஆகாம கதிரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். இன்னைக்கு நான் அவர் கூப்பிட்டதும் வெளிய போனது தப்பு இல்ல. ஆனா காலேஜ் நேரத்துல வெளிய போனது தப்பு தான்' என்று முல்லை தன் பக்க நியாயத்தை சொன்னாள்.
'எனக்கு இங்க இருக்க பிடிக்கவே இல்ல. இந்த வீட்டுல இருக்குற பொம்பள ஒரு கொலைக்காரி. அவங்க கொலை பண்ணதை நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன். ஆனா நீங்க யாரும் நான் சொல்றதை நம்பவே மாட்டுறீங்க. அதான் நான் கதிர்கிட்ட என் மனசுல இருக்குற விஷயத்தை சொல்லலாமுன்னு நினைச்சேன்' என்று முல்லை சொல்ல. கந்தன் அவள் அக்காவை பார்த்து சிரித்தான்.
வயதில் சின்ன பையனாக இருந்தாலும் பல நேரங்களில் விவரமாக பேசும் கந்தனோ,'அக்கா... இங்க கேள்வியே...நீ ஏன் காலேஜ் போகாம அந்த ரவுடி பையன் கூட போனன்னு தான். ஆனா நீ என்ன தேவையில்லாம அந்த மேடத்தை பற்றி குறை சொல்லிக்கிட்டு இருக்க' என்று கந்தன் கேட்க, அவனையும் முல்லை முறைத்து பார்த்தாள்.
'இங்க பாரு பாப்பா... நம்ம ஊர் விட்டு ஊர் வந்து இங்க தங்கி இருக்கோம். நம்ம எப்படி இங்க வந்தமோ அதே மாதிரியே இங்க இருந்து போகணும். அதுவும் இல்லாம அப்பாவுக்கு நீ சித்ரா மேடத்தை இப்படி பேசுறது தெரிஞ்சுதா அவர் உன் மேல தான் கோவப்படுவாரு.அதனால..' என்று மாறன் தன் வார்த்தையை முடிக்கும் முன்னே முல்லை அவள் கட்டிலில் கோவமாக சென்று அமர்ந்து இருந்தாள்.
'நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். ஒழுங்கா படி. இல்லைனா நானே அப்பாவுக்கு போன் பண்ணி இங்க நடக்குறதை எல்லாம் சொல்லிடுவேன்' என்ற மாறன் தன் கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு முல்லையின் அறையில் இருந்து வெளியே வர... அங்கே ஈஷா ஒரு மூலையில் கையை கட்டிக்கொண்டு நின்று இருக்க. சித்ராவோ சோபாவில் அமர்ந்து,அவள் எதிரே இருந்த நாய்க்கு கறி துண்டை தூக்கி வீசி இருந்தாள்.
அறையில் இருந்து வெளியே வந்த மாறன் ஈஷாவையும் சித்ராவையும் மாறி மாறி பார்த்தவன்.'நான் பாப்பாகிட்ட பேசிட்டேன். இனி இப்படி ஒரு தப்பு நடக்காது' என்றவனை பார்த்த ஈஷா..அப்படியே தன் பார்வையை சித்ராவின் பக்கம் திருப்பினாள்.
வெள்ளை நிற சோபாவில் கருப்பு ஆடையில் கையில் ஒரு தட்டில் கறி துண்டை வைத்து இருந்த சித்ரா இறுதியாக மீண்டும் ஒரு கறியை நாய்க்கு தூக்கி வீச... இதுவரை அவள் போட்ட எந்த கறி தூண்டுகளையும் உண்ணாமல் நாக்கை தொங்கவிட்டு மூச்சு இரைக்க நின்று இருந்தது அந்த கருப்பு நிற வேட்டை நாய்.
சித்ரா தட்டை மேசை மேல் வைத்தவள், ஈஷாவை அழுத்தமாக பார்த்ததும்,அவள் பார்வையின் அர்த்தத்தை அறிந்து இருந்த ஈஷா,'நாளையில இருந்து நானே உங்கள ட்ரோப் பண்ணிட்டு வரேன் மாறா ' என்று மாறனை பார்த்து சொன்னதும், அவனும் சம்மதமாக தலையாட்டினான்.
'ஐ அண்ணா.. கெட்டத்துல ஒரு நல்லது மாதிரி உன் ஆளு நம்மள ட்ரோப் பண்ண வரப்போறாங்களா' என்று கந்தன் கேட்க,'டேய் வாயை மூடு டா... அங்க பாரு அந்த வேட்டை நாய் நம்மள தான் முறைக்குது' என்றான் மாறன்.
'ஆமா ஏன் அந்த நாய் இன்னும் கறியை சாப்பிடாம அப்படியே வச்சிட்டு இருக்கு' என்று கந்தன் கேட்க, சித்ரா அங்கிருந்து மாடி படியில் கால் எடுத்து வைத்தவள் தன் விரல் கொண்டு சுண்டும் சத்தம் கேட்டு அந்த வேட்டை நாய் கண் இமைக்கும் நொடியில் அங்குள்ள எல்லா கிறியையும் விழுங்கி நாக்கால் அதன் வாயை சுத்தம் செய்துகொண்டது.
நாய் சாப்பிட்டு முடிக்கும் நொடியில் சித்ரா அவள் அறைக்குள் சென்று இருக்க,'அண்ணா... அந்த நாய் கூட அவங்க சொல்லுக்கு கட்டுப்படுது பார்த்தியா' என்று கந்தன் சொல்ல...'சொல்லுக்கு இல்ல டா. அவங்க பார்வைக்கே அடங்கி இருக்கு' என்றான் மாறன்.
'சரி நீங்க மூணு பேரும் சாப்பிடுங்க. நம்ம காலையில மீட் பண்ணலாம்' என்ற ஈஷாவும் மாடியில் உள்ள சித்ராவின் அறைக்கு சென்று இருக்க. முல்லையின் மனதில் கதிரின் நினைவுகள் ஓயாத அலையென அடித்துக்கொண்டே இருந்தது.
மறுபக்கம், அதே நேரம்—
ஒரு நொடி கூட மருத்துவமனையில் தங்க முடியாது என்று தீர்மானித்த கதிர்,
கையில் கட்டுடன் தன் வீட்டிற்கே வந்து சேர்ந்தான்.
மருந்து வாசனை, இயந்திர சத்தங்கள்
அவை எல்லாம் அவனுக்கு மூச்சை அடைத்தது போலிருந்தது.
உடம்பில் இருந்த வலியைவிட, மனசுக்குள்ள அடங்காத கலக்கம் தான் அவனை அதிகமாக வாட்டியது.
அவன் கையில் கட்டப்பட்டிருந்த கட்டை பார்த்ததும்,
பாட்டி தேவி அதிர்ச்சியடைந்தாள்.
“அய்யோ… என்னடா இது?”
அவள் அவன் கையைப் பிடித்தபடியே,
“எங்க தான் போய் இப்படி விழுந்து வாறிட்டு வந்த?”
என்று கவலையுடன் கேட்டாள்.
அதை பார்த்த பரந்தாமனின் முகம் கடுமையாக மாறியது.
“அப்படி எங்க போய் நீ விழுந்தன்னு இப்போவது சொல்லு?”
என்று குரல் உயர்த்திக் கேட்டார் கதிரின் அப்பா.
கதிர் பதில் சொல்லும் முன்னே,
அவன் முகத்தில் தெரிந்த வலி, கண்களில் இருந்த சோர்வு
அதை எல்லாம் கவனித்த வெங்கட் உடனே இடையில் பேசினான்.
“சித்தப்பா… அவனே வலி பொறுக்க முடியாம, தூக்கம் வராம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கான்.
இப்போ போய் அவனை கேள்வி மேல கேள்வி கேக்குறீங்களே…”
வெங்கட்டின் வார்த்தைகள் பரந்தாமனை சற்றே அமைதிப்படுத்தின.
ஒரு நொடி கதிரை உற்றுப் பார்த்தவர்,
எதுவும் பேசாமல் திரும்பி, அங்கிருந்து வெளியேறி சென்றார்.
அவரின் பின்னால் மூடப்பட்ட கதவு சத்ததை தாண்டி
கதிரின் மனதில் மட்டும் சித்ராவின் குரல்
இன்னும் பெருசாக ஒலித்துக் கொண்டே இருந்தது…
கதிரின் முகத்தைப் பார்த்த நொடிலேயே, அவன் மனதுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த கோபத்தை உணர்ந்தான் வெங்கட்.
“என்னாச்சு டா… எதாவது பிரச்சனையா?” என்று அவன் கேட்க,
“முதல்ல அந்த கதவை பூட்டி வா,” என்றான் கதிர்.
“ஏன்டா… என்ன நடந்துச்சு!?” என்று பதறினான் வெங்கட்.
“சொல்றத செய் டா வெண்ண…” என்று சொல்லியபடி, கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை எடுத்தான் கதிர்.
“டேய்… டேய்… என்னடா பண்ற!” என்று வெங்கட் அலறியபோதும், அவன் பேச்சை காதில் வாங்காமல், ஒரே மூச்சில் பாதி பாட்டிலை காலி செய்தான் கதிர்.
“டேய்! மருந்து போட்டு இருக்க டா!”
வேகமாக வந்து மது பாட்டிலை பிடுங்கிய வெங்கட்,
“நீ என்ன பைத்தியமா டா? ஊசி, மாத்திரைன்னு இவ்வளவு மருந்து போட்டு இருக்கும்போது யாராவது தண்ணி அடிப்பாங்களா!?” என்று கோபத்துடன் கேட்டான்.
அதற்கு பதிலாக, தாழ்ந்த குரலில் கதிர் சொன்ன ஒரு வாக்கியம், வெங்கட்டின் கோபத்தையே உறைய வைத்தது.
“நான்… மீண்டும் அவளை பார்த்தேன்”என்றான்
“என்னடா சொல்ற… யார பார்த்த?” என்று குழப்பத்துடன் கேட்டான் வெங்கட்.
“முல்லையை பார்த்தேன் டா…
என் முல்லையை பார்த்தேன்…”
அந்த நொடி, கதிரின் இதயத்தில் அவனை அறியாமலேயே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தாள் ரத்தினமுல்லை.
“ஆனா அந்த பொண்ணு ஹாஸ்டல்ல படிக்கிறதா மீனா சொன்னாளே?” என்று வெங்கட் கேட்டான்.
“எனக்கு எதுவுமே தெளிவா தெரியல வெங்கட்.
ஆனா… என் முல்ல என்னை காதலிக்கிறா டா,” என்றான் கதிர்.
அவன் உதடுகளில் தெரியாமல் ஒரு புன்னகை தவழ்ந்தது.
“டேய்… என்னடா சொல்ற… காதலா!?” என்று வெங்கட் அதிர்ச்சியுடன் கேட்க,
“ஆமா… அவ அப்படித்தான் சொன்னா.
என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறான்னு…” என்றான் கதிர்.
“அவ ஆசைப்படுறது இருக்கட்டும்…
நீ என்ன பதில் சொன்ன?” என்று வெங்கட் கேட்டான்.
கதிர் மௌனமாக இருந்தான்.
தன் குடும்பம் ஒருபோதும் முல்லையை இந்த வீட்டின் மருமகளாக ஏற்றுக்கொள்ளாது என்பதையும், அந்த உண்மை முல்லையின் காதலை நொறுக்கிவிடும் என்பதையும் நன்கு அறிந்திருந்தான் கதிர்.
அதனால் தான், அவள்மீது கொண்ட காதலை தன் உள்ளத்திலேயே அடக்கி வைத்திருந்தான்.
ஆனால்…
எதிர்பாராத அந்த சந்திப்பு, அவன் இதயத்தில் மறைந்து கிடந்த காதலை மீண்டும் துளிர்க்க வைத்திருந்தது.
கதிரின் மௌனத்திற்குப் பின்னால் இருந்த காரணத்தை வெங்கட்டும் உணர்ந்தான்.
“ஆனா… முல்லையை நீ எங்க பார்த்த?
அவ இருக்குற பக்கம் கூட போக மாட்டேன்னு வீம்பா இருந்தியே டா…” என்று கேட்டான்.
“அவளை நான்… அந்த ரா… ராங்கி…
அந்த ராங்கி வீட்டுல தான் என் Flower-ஐ பார்த்தேன்…” என்று சொல்லிய கதிர், அப்படியே கட்டிலில் சரிந்து, வலியையும் நினைவுகளையும் மறந்து உறங்கிப் போனான்.
அதே நேரம்…
VCR பங்களாவில், முல்லைக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில், அவளும் கதிரின் நினைவுகளை சுமந்தபடியே படுத்திருந்தாள்.
“யார் என்ன சொன்னாலும் சரி…
நான் டாக்டர் படிச்சு முடிச்சிட்டு,
என் கதிரைதான் கல்யாணம் பண்ணிப்பேன்…”என்று
கண்களை மூடிய முல்லை, அவனை முதன்முதலில் சந்தித்த அந்த நிமிடங்களை, மனதுக்குள் மீண்டும் மீண்டும் அசைபோட்டு பார்த்தாள்.
முல்லை மருத்து கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பெண்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து, அவளும் அந்த கலாச்சார விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தாள்.
அவளை இங்கே கொண்டு வந்தது ஒரே ஆசை தான் நடனம்.
மேடையில் ஆடி, தன் திறமையை நிரூபித்து, ஒரு பரிசுடன் வீடு திரும்ப வேண்டும் என்பதே அவள் கனவு.
“சார்… இன்னைக்கு சாயங்காலம் தானே போட்டி?
அப்போ போடலாமே… இப்போவே ஏன் இந்த டிரஸ் போட்டு பாக்க சொல்றீங்க?”
என்று முல்லை, அவளுக்கு நடனம் கற்றுக் கொடுத்தும், அவளுடன் சேர்ந்து மேடையில் ஆடப் போகும் திவாகரிடம் கேட்டாள்.
“இப்போவே போட்டுப் பாரு முல்ல…
அப்போதான் சரியா இருக்கு இல்லையா தெரியும்,”
என்று அவன் அவசரமான குரலில் சொன்னான்.
முல்லை வெளிப்படையாக எதுவும் சொல்லாதபோதும்,
அவள் மனதுக்குள் ஒரு அசௌகரியம் மெதுவாக ஊறிக் கொண்டே இருந்தது.
“சார்… performanceக்கு முன்னாடி போட்டுப் பாக்கறேன்,”
என்று மீண்டும் சொன்னபோது,
“நான் சொல்றத கேளு. போய் போட்டுட்டு வா,”
என்ற அவன் குரலில் இருந்த கோபம் அவளை மேலும் பதற வைத்தது.
அவன் கொடுத்த உடையை வாங்கிக்கொண்டு,
அருகில் இருந்த சிறிய அறைக்குள் நுழைந்தாள் முல்லை.
அந்த அறை…
மூச்சு அடைக்கிற அளவுக்கு சின்னதாய் இருந்தது.
மனசுக்குள்ள இருந்த பதற்றம், கதவை அடைக்க போகும் முன் இன்னும் பெருசா வளர்ந்தது.
அவள் திரும்பிப் பார்க்கும் முன்னே
அறைக்குள் யாரோ வந்த சத்தம் கேட்டு,
“சார்…?”
என்று பயத்துடன் கேட்ட முல்லையின் குரல் அதிர்ந்தது.
அந்த நொடியில்,
ஒரு பெண் எவ்வளவு தைரியமானவளாக இருந்தாலும்,
எதிர்பாராத அத்துமீறல் சந்தேகம் எழும் போது,
பயம் அவளை ஊமையாக்கிவிடும் என்ற உண்மை,
முல்லையின் உடல் நடுக்கத்தில் வெளிப்பட்டது.
அவள் அசைய முடியாமல்,
கண்களில் கண்ணீர் தேங்க,
அந்த இடத்திலேயே உறைந்து நின்றாள்.
அவள் அதிர்ச்சியை தனக்கு சாதகமாக்கி கொண்ட திவாகர் முல்லையின் ஆடை மீது கை வைக்க முயன்ற நேரம், அவன் பின் முதுகில் கனமான பொருளை க்கொண்டு ஒருவன் அடித்து இருக்க, அந்த நொடியில்
திவாகர் வலி தாங்காமல் தரையில் சரிந்தான்.
கண் இமைக்கும் நொடியில் என்ன நடந்தது என்ற அதிர்ச்சியில் உறைந்திருந்த முல்லையின் கண்களுக்கு முன்,
வாயில் சிகரெட் ஒளிர,
கருப்பு சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து,
மீனாவுடன் சேர்ந்து நின்றிருந்தான்
கதிர்வேலன்.
தொடரும்//