• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
137
தீமையே 🔱 வெ[கொ]ல்லும்.

✨படலம் - 11(1)

முல்லையை அழைத்துக்கொண்டு சித்ராவின் கார் சென்ற பாதையை கண்களில் கோபம் கொதிக்க முறைத்துக் கொண்டே நின்ற கதிர், அடுத்த நொடியே அதே கோபத்தை வேகமாக தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றி வீட்டை நோக்கி பாய்ந்தான்.

வழியெல்லாம் மனதிற்குள் சித்ராவை வசைபாடியவன்,
‘அவ தான் கூப்பிட்டானா… இவ எப்படி அவ கூட போவா!? அப்போ எனக்கு என்ன மரியாதை?’
என்று எண்ணியபடியே வந்தவன், திடீரென தன் வண்டியை VCR பங்களாவின் பக்கம் திருப்பினான்.

‘நான் யாருன்னு தெரியாம இவ என்கிட்ட ஓவரா ஆடுறா…’
இன்று இரண்டில் ஒன்று பார்த்தே ஆக வேண்டும் என்ற வெறியுடன், இயல்பை விட அதிக வேகத்தில் பைக்கை இயக்கினான்.
அந்த வேகத்திலேயே, ரோட்டில் இருந்த ஆழமான குழியை கவனிக்காமல் வண்டி அதில் இறங்கியது.

ஒரு விநாடி.
வண்டி கட்டுப்பாட்டை இழந்தது.
கதிரின் உடல் நிலை தடுமாறி, அடுத்த கணம் சாலையில் சத்தத்துடன் விழுந்தான்.
வலது கை முதலில் தரையைத் தாக்க…
தலையில் ஒரு மோதல்…
வலி தாங்க முடியாமல் அதே இடத்தில் அலறியபடியே கிடந்தான்.

“ஐயோ தம்பி…”
என்று பதறிய ஒருவர் ஓடி வந்து அவனை தூக்க முயன்றாலும், கதிரின் கத்தல் மட்டும் குறையவே இல்லை.

அக்கம் பக்கத்தினர் சிலர் கூடி, அருகில் இருந்த ஆட்டோவில் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அதே நேரம், கதிருக்கு அடிபட்ட செய்தி அவன் குடும்பத்தினரின் காதுகளையும் சென்று அடைந்திருந்தது.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

மறுபக்கம் …
ஈஷா இயக்கிய கார் VCR பங்களாவை நோக்கி விரைந்தது.

வழியெல்லாம் சித்ரா, முல்லையிடம் ஒரு கேள்வியும் கேட்காமல் மௌனத்தை மட்டும் கட்டியணைத்திருந்தாள்.

காலேஜுக்கு செல்லாமல் கதிருடன் முல்லை வெளியே வந்ததை நினைத்து, சித்ரா தன்னிடம் கோபப்படுவாள் என்று எண்ணிய முல்லைக்கு, அந்த மௌனம் இன்னும் அதிக பயத்தைத் தான் கொடுத்தது.

ஈஷா காரை பங்களாவிற்குள் செலுத்த…
வாட்ச்மேன் செல்வம் கேட்டில் நின்றிருந்தார்.

காரிலிருந்து இறங்கிய சித்ரா, ஈஷாவை ஒரு நொடி அழுத்தமாக பார்த்தாள்.
அந்த பார்வையில் வார்த்தைகள் இல்லை… ஆனால் அர்த்தங்கள் நிறைந்திருந்தன.

“முல்ல… நீ உன் ரூமுக்கு போ,” என்றாள் ஈஷா.
என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்துடன் முல்லை தன் அறைக்குள் நுழைந்து, கதவை மூட முயன்றாள்.

அவள் கதவை அடைப்பதற்குள்,
“சாப்பிட எதாவது எடுத்து வரட்டுமா?” என்று ஈஷா கேட்டாள்.

ஹாலில் அமர்ந்திருந்த சித்ரா, கையில் இருந்த ஸ்மார்ட் வாட்சில் வந்த சில தகவல்களை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை… ஆனால் அந்த அமைதி புயலுக்கு முந்தைய அமைதிபோல் இருந்தது.
“இல்ல… எனக்கு ஒன்னும் வேணா,”
என்று சொன்ன முல்லை, சட்டென்று கதவை அடித்து சாத்தினாள்.

மூடிய கதவை ஈஷா ஒரு நொடி உறுத்துப் பார்த்தாள்.
பிறகு எதையும் சொல்லாமல், ஒரு ஆழமான பெருமூச்சை மட்டும் இழுத்து விட்டாள்.

“மேடம்… நான் வேணும்னா அந்த கதிரை நம்ம பொண்ணுங்ககிட்ட சொல்லி நாலு தட்டு தட்டச் சொல்லவா?”
என்று ஈஷா கேட்டதும், சித்ரா அவளை ஒரு கணம் கடுமையாக பார்த்தாள்.

அந்த இம்மியளவு பார்வைக்குள்ளேயே எத்தனை அர்த்தங்கள் ஒளிந்து கிடக்கும் என்பதை நன்றாக அறிந்தவள் தான் ஈஷா.
ஆனால் இம்முறை… அந்த பார்வையின் அர்த்தம் அவளுக்கே புரியவில்லை.

சில நொடிகள் கனமான அமைதி.
அந்த அமைதியை உடைத்து,
“முருகன் அங்கிளுக்கு எப்போ ஆப்ரேஷன்?”
என்று சித்ரா கேட்டாள்.

“இன்னும் ரெண்டு நாளுல மேடம்,”
என்று ஈஷா மெதுவாக சொன்னாள்.

“இங்க நடக்குற எந்த விஷயமும் அங்க அவங்களுக்கு தெரியக்கூடாது,”
என்று திடீரென தீர்மானத்தோடு சொல்லிவிட்டு, சித்ரா வேகமாக எழுந்து மாடியில் இருந்த தன் அறைக்குள் சென்றாள்.

ஈஷா எதுவும் பேசாமல், மீண்டும் தன் வேலைகளில் கவனம் செலுத்தினாள்.
மாடியில், தன் அறையில் இருந்த சித்ரா கைபேசியை காதருகே வைத்தபடி, சில முக்கியமான விஷயங்களை தீவிரமாக பேசிக்கொண்டிருந்தாள்.

அதே நேரம், அதே அறையின் ஒரு மூலையில்…முல்லை.
பயம் கலந்த முகத்தோடு, மடக்கி வைத்த கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

வயதில் இன்னும் சின்னவள்.
நல்லதும் கெட்டதும் எது என்று தெளிவாக புரிந்து கொள்ளாத வயது தான் முல்லைக்கு.

அவள் பிடித்த முயலுக்கே மூன்று கால் இருக்கிறது என்று நம்பும் மனநிலையில்தான் அவள் இன்னும் இருந்தாள்.
“கதிர்… என்கிட்ட எவ்ளோ ஆசையா பேச வந்தாரு.
ஆனா இந்த கொலைகாரி… அவரை என்கிட்ட பேசவே விடல,”
என்று நினைத்ததும், அவளது நெஞ்சு இறுகியது.

மீண்டும் எப்போ கதிரை பார்க்க நேரிடும் என்ற ஏக்கம் அவளை முழுவதுமாக ஆட்கொண்டது.
அந்த ஏக்கத்தின் பாரமே, அவளது இரு கண்களையும் ஈரமாக்கி விட்டது.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

அதே நேரம்…
கதிரின் மொத்த குடும்பமும் அவன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ மனையை அடைந்து இருந்தனர்.

“கதிர் பேபி… என்னாச்சு பேபி?”
என்று பதறியபடியே, முதல் ஆளாக சிகிச்சை அறைக்குள் நுழைந்தாள் ரம்யா.

“கதிர்… என்ன டா இவ்ளோ பெரிய கட்டு?”
என்று அவனின் அம்மாவும் நெஞ்சு பதற கேட்டாள்.

“சின்ன அடிதான் அம்மா,”
என்று தன்னை சமாளித்துக்கொண்டான் கதிர்.

ஆனால் அவனை அந்த நிலையிலே பார்த்ததும்,
அவனின் அப்பா, பெரியம்மா, மற்ற உறவினர்கள்
அனைவரும் கலங்கி போனார்கள்.

“டேய்… நீ ஏன் டா எங்கள விட்டுட்டு தனியா போன?”
என்று தன் நண்பனை சந்தேகமும் வருத்தமும் கலந்த குரலில் கேட்டான் உதயா.

“அதானே… என்ன கதிர்?
இப்போ எல்லாம் எங்கள விட்டுட்டு, நீ மட்டும் எங்க தான் போற?”
என்று ரம்யாவும் உடனே கேள்வி எழுப்பினாள்.

கையில் கட்டுடன் படுக்கையில் இருந்த கதிருக்கு,
உடல் வலியை விட…
இவர்கள் மழை போல பொழியும் கேள்விகளால் ஏற்பட்ட தலைவலி தான் அதிகமாக இருந்தது.

“டேய் கதிர்…
எப்படி டா அடி பட்டுச்சு?”
என்று தன் தம்பியின் காயத்தை கவலையுடன் பார்த்தபடியே, வெங்கட் கேட்டான்.

“பள்ளம் இருந்தத கவனிக்காம,
வண்டியை அதுல இறக்கிட்டேன்,”
என்று சாதாரணமா சொல்லி வைத்தான் கதிர்.

“டாக்டர் என்ன சொன்னாரு?”
என்று கதிரின் பெரியம்மா பதற்றத்தோடு கேட்டாள்.

“ஆன்ட்டி…
நம்ம கதிரை எங்க ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகலாமே,”
என்று ரம்யா உடனே பரிந்துரைத்தாள்.

“ஏய்… அதெல்லாம் வேண்டாம்.
சின்ன அடிதான்.
ரெண்டு நாளுல சரியாகிடும்,”
என்று கதிர் உறுதியா சொன்னான்.

மருத்துவரின் ஆலோசனைப்படி,
அடுத்த இரண்டு மூன்று நாட்கள்
அதே மருத்துவ மனையிலேயே
முழு ஓய்வில் இருக்க வேண்டுமென்று
ஏற்கனவே கதிரின் அப்பா முடிவு செய்து இருக்க... கதிரோ தன் மொத்த கோவத்தையும் சித்ரா மீது திருப்பி இருந்தான்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

அன்றைய தினம் மாலை நேரம்.
மாறனும் கந்தனும் எதுவும் புரியாத நிலையில் கல்லூரியிலிருந்து VCR பங்களாவிற்கு வந்து சேர்ந்தார்கள்.

காலையில் தங்களுடன் வந்த முல்லை, இப்போது ஏன் தங்களுக்கு முன்னே இங்கே இருக்கிறாள் என்று மாறனின் மனதில் கேள்வி எழுந்தது.

“அண்ணா… அக்கா ஏன் முன்னாடியே வீட்டுக்கு வந்துட்டாங்க?” என்று கந்தன் கேட்க,
மாறன் வேகமாக முல்லையின் அறைக்குள் நுழைந்தான்.

அங்கிருந்த கட்டிலில் கவலை தோய்ந்த முகத்துடன் படுத்திருந்த தன் சகோதரியை பார்த்ததும், அவளுக்கு என்ன ஆனதோ, ஏது ஆனதோ என்று பயந்து போனான்.

“பாப்பா… என்னடா.. என்னாச்சு? நீ எப்படி எங்களுக்கு முன்னாடி இங்க வந்த?” என்று மாறன் கேட்க,
காலையில் நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் சொல்லினாள் முல்லை.
கதிரின் பெயரை கேட்டதும் மாறனின் முகம் மாறியது.

“அண்ணா… கதிருனா யாரு? அன்னைக்கு இங்க வந்து ரவுடித்தனம் பண்ணாரே… அவரா?” என்று கேட்டான் கந்தன்.

“ஆமாடா… அவரே தான். ஏன் பாப்பா… அந்த ஆளுக்கு கொஞ்சம் கூட புத்தியே இல்லையா?” என்று மாறன் கேட்க,
“முதல்ல முல்லை அக்காவுக்கு புத்தி இருக்கா?” என்று கந்தன் எதிர் கேள்வி கேட்டான்.

கந்தனின் வார்த்தைகளால் முல்லை எழுந்து உட்கார்ந்தாள்.
“அண்ணா… நீ வா. நம்ம இங்க இருந்து போகலாம். எனக்கு இங்க இருக்க பிடிக்கல,” என்றாள்.
“அக்கா… இப்போ எல்லாம் உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு போல. ஏன் நீ இப்படியெல்லாம் பண்ணிக்கிட்டு அலையுற?” என்று கந்தன் கேட்க,
முல்லை அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.

“அவனை ஏன் முல்ல முறைக்கிற?
அவங்க பணக்கார குடும்பம். ஊரையே அடிச்சு, அவங்க பத்து தலைமுறைக்கு பணம் சேர்த்து வச்சிருப்பாங்க,
ஆனா நம்ம யாரு?
நம்மள மாதிரி ஆளுங்க எல்லாருக்கும் கல்விதான் மா முதல் செல்வம்.

அப்படிப்பட்ட படிப்பை விட்டுட்டு, யாரோ கூப்பிட்டாங்கன்னு அவன் கூட போக தயாராகி இருக்கியே.
இது மட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சதுனா, அவரோட நிலைமை என்னன்னு யோசிச்சுப் பார்த்தியா பாப்பா?” என்று மாறன் கேட்க,
முல்லையின் கண்களில் கண்ணீர் பெருகியது.

தன் சகோதரியின் கண்ணீரை பார்த்ததும் மாறனின் கோவம் சற்று தணிந்து இருந்தது.

'பாப்பா...' என்று மாறன் அழைக்க. மேலும் அவள் அழுதுக்கொண்டு தான் இருந்தாள்.

'காதல் எல்லாம் நம்ம வாழ்க்கை புத்தகத்துல ஒரு பக்கம் தான். ஆனா நீ அந்த பக்கத்தை வாசிக்குறதுக்கு முன்னாடி நிறைய பக்கத்தை கிழிச்சி எறிஞ்சிடாத முல்ல' என்ற மாறன் எக்காரணத்தை கொண்டும் தன் சகோதரியிடம் கடுமையான வார்த்தையை உபயோகப்படுத்தி விடக்கூடாது என்று எண்ணி பேசினான்.

'உனக்கு சின்ன வயசுல இருந்தே டாக்டர் படிக்க தானே ஆசை! உன் ஆசைக்கு அப்பா எதாவது மறுப்பு சொன்னாரா!?.நீயும் இதுநாள் வரை படிப்புல எவ்ளோ கவனமா இருந்த. இப்போ உனக்கு என்ன தான் ஆச்சு' என்ற மாறனுக்கு அவன் மனதில் கதிர் மீது அளவுகடந்த கோவம் இருக்க தான் செய்தது.

'இந்த வயசுல படிப்பு மேல தான் நம்ம கவனம் இருக்கனும். நாளைக்கே நம்ம தேர்ந்தெடுக்குற வாழ்கை தப்பா போனா கூட உன் படிப்பு தான் உனக்கு நம்பிக்கையை கொடுக்கும். நான் சொல்றத கேளு. முதல்ல நல்லா படி. அப்புறமா இந்த காதல் கல்யாணத்தை பற்றி எல்லாம் யோசிக்கலாம்' என்ற மாறனின் வார்த்தைகள் மெல்ல மெல்ல முல்லையின் மனதை இழக செய்தது.

தொடரும். ✨

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top