• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 5, 2025
Messages
21
பாலைவனத்து முல்லை❣️

பகுதி- 7

கதிர்வேலனுடன் முல்லையும் ரோஜாவும் பாண்டியனின் வீட்டுக்குள் நுழைய, கேசவனின் தலையில் ரத்தம் கசிந்தது.

'டேய்... ஏன் என் தம்பி மண்டையை உடைச்ச' என்ற பார்வதி பதறிப்போய் கேசவனின் தலையில் தன் புடவையை கிழித்து கட்டு போட்டு விட்டார்.

'என் அண்ணன் மேல இவன் கை வச்சதுக்கு இவன் கையை தான் நான் உடைத்து இருக்கனும்' என்ற கதிர்வேலனின் பின்னே நின்று இருந்த முல்லையை பார்த்து முருகன் கோவமாக நெருங்கியவர் சட்டென்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார்.

முருகன் அறைந்த வேகத்தில் முல்லை கீழே விழுந்தவளை ஜீவானந்தம் பதறிப்போய் தூக்கியவாறு,'பொம்பள பிள்ளையை கையை நீட்டி அடிக்கிறீங்களே! உங்களுக்கு அறிவு இருக்கா?' என்றப்படி முல்லையை தன்னோடு அணைத்தப்படி பிடித்துக்கொண்டார்.

முல்லையின் ஒரு பக்க கன்னம் வீக்கமாக இருக்க, அவள் தேம்பி அழும் காட்சியை பார்த்து கதிர்வேலனுக்கு கோவம் எழுந்தது.

'ஏய் முல்லை... நான் அவ்வளவு கண்டித்தும் இந்த சண்டி பையன்கூட வீட்டை விட்டு ஓடி வந்து இருக்கியே!உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்' என்ற முருகன் மீண்டும் முல்லையை அடிக்க கை ஓங்கியதும், கதிர்வேலன் முருகனின் கையை பிடித்து வேகமாக தள்ளி விட்ட வேகத்தில் முருகன் இரண்டடி தள்ளிப்போய் விழப் போனவரை பார்வதி தாங்கி பிடித்துக்கொண்டார்.

'டேய்... என் மாமா மேலையே கை வைக்கிறியா!' என மீண்டும் கேசவன் கதிர்வேலனை அடிக்க வந்ததும்,இந்த முறை ஜீவானந்தம் கேசவன் மார்பில் எத்தி ஒரு மிதி மிதிக்க அவனோ நிலை தடுமாறி கீழே விழுந்தான்.

'அட பாவிங்களா! வீடு புகுந்து எங்க பொண்ணை தூக்கிட்டு போனது இல்லாமல்! இப்போ நியாயம் கேக்க வந்த என் தம்பியையும் என் புருஷனையும் இப்படி மாறி மாறி அடிக்கிறிங்களே! நீங்க நல்லா இருப்பிங்களா' என்று பார்வதி தன் அலப்பறையை ஆரம்பித்தார்.

'இங்க பாருங்க அத்த... நடு வீட்டுல நின்னுகிட்டு இப்படி சாபம் எல்லாம் விடாதீங்க, யாரும் முல்லையை தூக்கிட்டு வரல, முல்லைக்கு நீங்க கட்டாய கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணதால தான் அவ எங்ககூட கிளம்பி வந்து இருக்காள்' என்று ரோஜா சொன்னதும்,

'என்ன ரோஜா சொல்லுற! முல்லைக்கு கட்டாய கல்யாணம் பண்ண பார்த்தாங்களா!' என்ற ஜீவானந்தம் தன் அருகே கண்ணீருடன் நின்று இருந்த முல்லையின் கரங்களை ஆறுதலாக பற்றிகொண்டார்.

ஜீவானந்ததுடன் முல்லையை பார்த்த முருகனுக்கு இயல்புக்கு மாறாக கோவம் அதிகரித்தது.

முருகன் பொறுமையாக எடுத்து சொல்லியும் முல்லை அவர் பேச்சை மீறி இன்று பாண்டியனின் வீட்டிற்கு வந்ததை விரும்பாத முருகன் எப்படியாவது முல்லையை தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.

'முல்ல... இப்போ என்ன!? உனக்கு கேசவனை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லையா!? சரி வா நான் உனக்கு வேற மாப்பிளையை பார்த்து கல்யாணம் பண்ணி தரேன்' என்ற முருகன் தன் மகளின் கையை பிடிக்க வந்ததும், முருகனின் கையை தட்டி விட்டார் கதிர்வேலன்.

'டேய் கதிரு... என் மகளை நான் அழைச்சிட்டு போக போறேன்! இதுல நீ ஏன் டா இடையில வர' என்ற முருகனை பார்த்து,

'உங்க இடையில வடையில கொடையில எல்லாம் வர எனக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை,
முல்லை உங்க பொண்ணு தான், ஆனா இனிமே அவ இந்த வீட்டு மருமக' என்ற கதிர்வேலனின் பேச்சைக் கேட்டு பாண்டியன் ஜீவானந்தத்தை பார்த்தார்.

'டேய் தம்பி என்னடா சொல்லுற!' என்ற ஜீவானந்ததின் கேள்விக்கு,

'ஆமா... இனிமே முல்லை முருகன் மாமா வீட்டுக்கு போறதா இருந்தா அது பாண்டியன் வீட்டு மருமகளா தான் போகணும்' என்று தீர்க்கமாக சொன்னார் கதிர்வேலன்.

'டேய்... நீ வீடு புகுந்து இவங்க வீட்டு பொண்ணை தூக்கியதா உன் மேல இவங்க கம்பளைண்ட் பண்ணி இருக்காங்க, அதனால தான் நாங்க இங்க உங்கள விசாரிக்க வந்தோம், ஆனா நீங்க என்ன மருமக மருமகன்னு உங்க குடும்ப விஷயத்தை பேசிக்கிட்டு இருக்கீங்க' என்று காவலத்துறை அதிகாரி கதிர்வேலனை பார்த்து கோபத்துடன் கேட்டார்.

'சார்... இவன் எனக்கு மருமகன் எல்லாம் இல்லை சார்! நான் சொன்னது போல இவன் என் மகளை கடத்திகிட்டு தான் வந்து இருக்கான்'என்று முருகன் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.

'சார்... இவரு பொய் சொல்லுறாரு சார், நீங்க வேணா முல்லைகிட்டயே கேளுங்க, அவளே உண்மையயை சொல்லுவா' என்று ரோஜா சொல்ல,

'இந்தாமா! உன் அப்பா சொன்ன மாதிரி உன்னை இவன் கடத்திட்டு வந்தானா' என்ற காவல்துறையினர் கதிர்வேலனை சுட்டிக்காட்டி கேட்டார்.

காவலரின் கேள்விக்கு பதில் சொல்லும் முன்னே முல்லை தன் அப்பாவை பார்த்ததும், முருகனோ கண்களால் முல்லையை மிரட்டிக்கொண்டு இருந்தார்.

'சொல்லுமா... இவன் தான் உன்னை வீடு புகுந்து தூக்கிட்டு வந்தானா' என்று மீண்டும் காவலர் கேட்க,

'க்கும்... அதான் கடைசி வரைக்கும் இந்த ரவா லட்டை எவனுமே என்னை தூக்கவே விடலையே' என சஞ்சலப்பட்ட கதிர்வேலனின் காலை ஓங்கி மித்தித்தாள் ரோஜா.

காவலரின் கேள்விக்கு பதில் தராமல் நின்று இருந்த முல்லையை பார்த்து,
'முல்ல... என்னமா! கதிர் தான் உன் விருப்பம் இல்லாமல் உன்னை இங்க அழைச்சிட்டு வந்தானா' என்று பாண்டியன் கேட்க,

'ஹையோ இல்லிங்க பெரிய மாமா,
மாமா சார் என்னை தூக்கிட்டு வரல' என்றவள் தன் தந்தையின் கோவமான முகத்தை பார்த்து சற்று பயந்து தான் போனாள்.

'மாமா சார் என்னை தூக்கிட்டு வரல, என் விருப்பமே இல்லாமல் கேசவன் கூட எங்க அப்பா எனக்கு நிச்சயம் பண்ண ஏற்பாடு பண்ணாரு, அதனால தான் நானே இவங்க கூட இங்க கிளம்பி வந்துட்டேன்' என்ற முல்லையின் பார்வை இந்த முறை பாண்டியன் மீது பதிந்து இருந்தது.

'அப்புறம் என்ன சார்... அதான் என் மருமகளே உண்மையை சொல்லிட்டாளே, இனி உங்களுக்கு இங்க என்ன வேலை. நீங்க கிளம்புங்க' என்று காவலாளியிடம் பாண்டியன் சொன்னதும்,

'சார் சார்... எங்க வீட்டு பொண்ணை எங்க கூட அனுப்பி வைக்க சொல்லுங்க சார்' என்று பார்வதி காவலாலியுடம் கெஞ்சிகேட்டு கொண்டார்.

'அதான் அவங்க வீட்டு பொண்ணை அவங்க கூப்பிடுறாங்களே! அனுப்பி வையுங்க' என்று காவலர் பாண்டியணை பார்த்து சொல்ல,

'அதெல்லாம் அனுப்ப முடியாது சார், அடுத்த முகூர்த்தத்துல முல்லைக்கு இதே வீட்டுல கல்யாணம் நடக்க போகுது,வேணும்னா கல்யாணம் முடிந்த பின்னாடி மறுவீட்டுக்கு அவங்க பொண்ணை மாப்பிளைக்கிட்ட வந்து மரியாதையா முறையா பேசி அழைச்சிட்டு போக சொல்லுங்க' என்ற கதிர்வேலன் ஒரு பக்க சட்டை காலரை தூக்கிவிட்டப்படி தெளிவாக பேசி முடித்தார்.

'டேய்... யாரு பொண்ணுக்கு யாரு கல்யாணம் பண்ணி வைக்கிறது,
நான் ஒருத்தன் உயிரோட இருக்குற வரைக்கும் முல்லை கழுத்துல யாரும் தாலி கட்ட முடியாது' என்று கேசவன் வில்லத்தனமான வசனத்தை பேசிக்கொண்டு இருக்க,

'செத்து போ... அப்போ செத்து போடா பிக்காளி பையலே!' என்று கதிர்வேலன் கேசவனை பார்த்து சொன்னதும், ரோஜா சட்டென்று சிரித்துவிட்டாள்.

'டேய் கதிரு வேணா... என்னை பத்தி உனக்கு தெரியாது, நீ நினைக்கிற மாதிரி நான் சாதாரண ஆளு இல்லை, நான் நினைச்சா என்ன வேணாலும் பண்ணுவேன் டா' என்று கேசவன் கைகளை மடக்கி நாக்கை கடித்து கதிர்வேலனை அடிக்க கை ஓங்கியவனின் முகத்தின் எதிரே தன் அதரங்களை குவித்து uff என்று கதிர்வேலன் ஊதிய வேகத்தில் கேசவன் கண்கள் அசந்தவனின் உச்சி தலையயை பார்த்து நங் என்று குட்டு வைத்தார் கதிர்வேலன்.

'டேய் டேய்...என் தம்பியை அடிக்காத டா' என்று பார்வதி அலறியதும்,'அப்போ இந்த ஜந்துவை இங்க இருந்து உருட்டிகிட்டு போங்க' என்றார் கதிர்வேலன்.

முல்லையை கதிர்வேலன் கட்டாயப்படுத்தி அழைத்து வரவில்லை என்று முல்லையே சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில்,'சார்... உங்க பொண்ணு விருப்பதோடு தான் இவங்க கூட வந்து இருக்காங்க, இனிமே இதுல நாங்க ஏதும் பண்ண முடியாது' என்ற கவலாளிகள் பாண்டியனின் வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.

காவலரை அணுகினால் மட்டுமே முல்லையை தன்னுடன் அழைத்து செல்ல முடியும் என்று எண்ணிய முருகனுக்கு முல்லையால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

முருகனின் சொந்தக்கார்கள் நான்கு ஐந்து பேர் அவர்களுக்குள் எதையோ பேசியப்படி இருக்க,'யோவ்...உங்கள எல்லாம் நான் எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்தேன்!வாங்கயா! வந்து என் மகளை என்னோட அனுப்பி வைக்க சொல்லுங்க' என்று முருகன் தன் உறவினர்களை இவருக்காக பரிந்து பேச அழைத்து இருந்தார்.

'பாண்டியா... நீயும் இந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் தானே! அதுவும் இல்லாம உன் வீட்டுலயும் வயசு பொண்ணு இருக்குது பா, இதெல்லாம் யோசிச்சு பார்த்து முருகன் மகளை அவரோடு அனுப்பி வையுங்க பாண்டியா' என்றார் முருகனின் உறவுக்காரர் ஒருவர்.

'நீங்க சொல்லுறது வாஸ்துவம் தான், ஆனா என் தங்கச்சி மகளுக்கு விருப்பம் இல்லாத கல்யாணத்தை இவரு ஏற்பாடு பண்ணப் போய் தானே அவ தாய்மாமன் என்ற முறையில என்னை நாடி வந்து இருக்கா! நான் எப்படி அவளை மறுபடியும் இவங்க கூட அந்த நகரத்துக்கு அனுப்பி வைக்க முடியும்' என்று கேட்டார் பாண்டியன்.

'முருகா... பாண்டியன் சொல்லுறதும் நியாயம் தானே முருகா, உன் பொண்ணுக்கு ஏன் நீ விருப்பம் இல்லாத கல்யாணத்தை பண்ணி வைக்க துடிக்கிற' என்று பெரியவர்களில் ஒருவர் கேட்டதும்,

'யோவ்... அவ என் மக, அவ தலையை துண்டா சீவக் கூட எனக்கு உரிமை இருக்கு' என்ற முருகனின் பேச்சைகேட்டு முல்லை மேலும் கண்கள் கலங்கினாள்.

'ஹலோ மிஸ்டர் மீசை... உங்க தலை முடியை சீவ மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கு, உங்க மகளாகவே இருந்தாலும் முல்லை விருப்பம் இல்லாமல் நீங்க அவ தலை முடியில இருந்து ஒன்றை கூட பிடுங்க முடியாது' என்ற கதிர்வேலனை பார்த்து முருகன் கோவப்பார்வை வீசினார்.

'ப்ச் வாத்தி...நீங்க அமைதியா இருங்க,அப்பா... முருகன் மாமா இவ்ளோ பேசிய பின்னாடியும் இவர்கூட நம்ம முல்லையை அனுப்பி வைக்க வேண்டாம், பேசாம வாத்தி சொன்னது போலவே முல்லைக்கும பெரியவருக்கும் நீங்க கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணுங்க' என்று ரோஜா சொன்னதும்,

ஜீவானந்தம் காதலாக முல்லையை பார்க்க, முல்லை அந்த ஒரு பார்வையில் மகிழ்ச்சி அடைய, தன் காதல் நிறைவேற வில்லையென்றாலும் தன் அண்ணனின் காதல் கைக்கூட வேண்டும் என்று எண்ணினார் கதிர்வேலன்.

'ஏய்... யாரு பொண்ணுக்கு யார் கல்யாணம் பண்ணி வைக்கிறது' என்ற முருகனின் கோவமான கர்ஜனையில் ஒரு நொடி முல்லை அலண்டு போய் தன் தந்தையை பார்த்தவளை ஜீவானந்தம் தைரியம் சொல்லும் விதமாக அவள் கையை இறுக பற்றிகொண்டார்.
 
New member
Joined
Dec 5, 2025
Messages
21
முல்லை ஜீவானந்தத்தின் நெருக்கத்தை பார்த்த பாண்டியன் ஒரு முடிவோடு,'எல்லோரும் நல்லா கேட்டுக்கொங்க, என் தங்கச்சி பொண்ணு முல்லைக்கு அவங்க வீட்டுல கட்டாய கல்யாணம் ஏற்பாடு பண்ணதால அவளை என் வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு வர போறேன், அடுத்த முகூர்த்தத்துல என் பையனுக்கும் முல்லைக்கும் இதே வீட்டுல கல்யாணம் நடக்கப்போகுது, முடிஞ்சா ஒரு அப்பாவா அவரும் இந்த கல்யாணத்துல வந்து கலந்துகிட்டு போகட்டும்' என்ற பாண்டியனின் வார்த்தையைக் கேட்டு முருகனுக்கு எல்லையில்லாத கோவம் வந்தது.

'இந்தாயா பெரிய மனுஷா! உன் தீர்ப்பை எல்லாம் உன்னோட ஊர் மக்கள் கேட்கட்டும், உன் வார்த்தைக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ஒழுங்கு மரியாதையா என் பொண்ணை என் கூட அனுப்பி வச்சிடு இல்லன்னா இந்த வீட்ல எத்தனை உயிர் போகுமென்று எனக்கே தெரியாது என்று முருகனின் ஆபச்சொற்களால் அனைவரின் முகமும் மாறியது..

'இந்தாப்பா முருகா! ஏதோ உன் மகளோட விருப்பமில்லாம பாண்டியன் வீட்டு பையன் உன் மகளை தூக்கிட்டு வந்துட்டான்னு நீ சொன்னதால தான் உன் சொந்தக்காரங்க என்ற சார்பில் நாங்க பாண்டியன் கிட்ட நியாயம் கேட்க வந்தோம்,

ஆனால் இங்க வந்து பார்த்தா இந்த பிரச்சனைக்கு மூல காரணமே நீதான்னு தோணுது, உன் பொண்ணுக்கு விருப்பமில்லாத ஒரு கல்யாணத்தை நீ ஏற்பாடு பண்ணதால தான் உன் பொண்ணு வீட்டை விட்டு பாண்டியன் பையன் கூட வந்திருக்கா. அதுவும் இல்லாம இவங்க சொல்ற மாதிரி பாண்டியன் உடைய பையன உன் பொண்ணு கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதா தான் எங்களுக்கும் தெரியுது. அதனால பாண்டியன் சொன்ன மாதிரி அடுத்த முகூர்த்தத்தில் இவர்களுக்கு நடக்கப்போற கல்யாணத்துக்கு ஒரு அப்பாவா இருந்து நீ என்ன பண்ணனுமோ அதை பண்ணு' என்று முருகனின் சொந்தக்காரரில் ஒருவர் சொன்னதும் பார்வதிக்கு கோபம் அதிகரித்தது.

' போதும் நிறுத்துங்க...நீங்க எல்லாம் பெரிய மனுஷங்கன்னு உங்கள பஞ்சாயத்து பேச அழைச்சிட்டு வந்தோம்ல எங்கள சோட்டால அடிச்சுக்கணும். யார் பொண்ணுக்கு யாரு கல்யாணம் ஏற்பாடு பண்றது. என்ன என் புருஷனுக்கு சொத்து சுகம் அதிகமா இருக்குன்னு இவள வளைச்சு போட பாக்குறீங்களா' என்று பார்வதி பாண்டியணை பார்த்து கேட்க,

'சொத்து சுகத்துக்கு ஆசைப்படற ஜென்மங்கள் நாங்க இல்ல, வேணும்னா கண்ணாடிய பாத்து நீங்களும் உங்க தம்பியும் அந்த வார்த்தையை சொல்லிக்கோங்க' என்ற கதிர்வேலனை பார்த்து பார்வதி வன்மமாக முறைத்தாள்.

'கதிர்...பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கும்போது நீ அமைதியா இரு' என்று தன் இளைய மகனை பாண்டியன் எச்சரிக்க,

'அப்பா... நீங்க எல்லாம் பெரியவங்களா இருந்தாலும் சின்ன பசங்க பேசுவதையும் கேளுங்க, இவங்க பாட்டுக்குட்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்க!' என்று ரோஜா பார்வதியை முறைத்தவள்,

'எல்லா பெரிய மனுஷங்களும் இங்கதானே இருக்காங்க! முல்லைக்கு நம்ம வீட்டுக்கு மருமகளா வர விருப்பமானு இவங்க நடுவுல வச்சு கேளுங்கப்பா,முல்லைக்கு சம்மதம்ணா அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணலாம்.

அதுவும் இல்லாம இவங்க சொத்துல கடுகளவு கூட முல்லைக்கு வேண்டாம்னு பத்திரத்தை ரெடி பண்ண சொல்லுங்க.

முல்லை நீ என்கூட வா. உனக்காக உன் பாண்டியன் மாமா தீபாவளி பொங்கல்ன்னு எல்லா விஷேசத்திற்கும் இன்னவரைக்கும் புது துணி எடுத்து வச்சிருக்காரு.அதுல ஒரு துணியை போட்டுக்கிட்டு உன் அப்பா வாங்கி கொடுத்த டிரஸை கூட உன் சித்திகிட்டே கொடுத்து அனுப்பு' என்ற ரோஜா தனக்கு அண்ணியாக முல்லை தான் வரவேண்டும் என்று ஆசை கொண்டு முல்லையின் கையைப் பிடித்து அவள் அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

'அப்புறம் என்ன! எங்க வீட்டு அம்மாவை சொல்லிட்டாங்கல்ல! இனி கட்டுன புடவையோட என் பொண்ணு புகுந்த வீட்டுக்கு போய் இருக்கானு கூட நீங்க சொல்லக்கூடாது, ஏன்னா அந்த துணியை கூட உங்ககிட்டயே திருப்பி குடுக்க ஏற்பாடு பண்ணியாச்சு. இனி சும்மா இந்த மீசைய முறுக்கிவிட்டுகிட்டு வெட்டி பந்தாலாம் பண்ணிக்கிட்டு இல்லாம ஒழுங்கா கல்யாணத்துக்கு ஒரு அப்பாவா வந்து நிக்கிறதுக்கு உண்டான வழியை பாருங்க,

நீங்க ஊருக்கு போய் சேர்ரதுக்குள்ள உங்க சொத்து சுகத்துக்கும், முல்லைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லைன்னு முல்லை கையெழுத்துப் போட்ட பத்திரம் உங்க வீடு தேடி வரும்" என்று கதிர்வேலன் சொல்ல,ஜீவானந்தமும் தன் தம்பியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஆம் என்ற ரீதியில் தலை அசைத்தார்.

'அப்புறம் என்ன முருகா! சின்ன பசங்களா இருந்தாலும் விவரமாதானே பேசுறாங்க, உன் பொண்ணுக்கு பாண்டிய மகனை பிடிச்சிருக்கு, பாண்டியன் வீட்டு புள்ளைங்களும் உன் சொத்து சுகம் எல்லாம் தேவையில்லைன்னு உன் பொண்ண கையெழுத்து போட்டு அனுப்பி வைக்க சொல்லிட்டாங்க, இன்னும் உனக்கு என்ன பிரச்சனை,
அதுவும் இல்லாமல் தோலுக்கு மேல வளர்ந்த புள்ளைய நீ எங்க எதிர்ல அடிச்சதே முதல்ல தப்பு' என்று முருகனின் சொந்தக்காரர்களே முருகனை அருவருப்பாக பார்த்தனர்.

'மாமா நீங்க வாங்க நம்ம இப்ப கிளம்பலாம், இவங்க எப்படி இந்த கல்யாணத்தை நடத்துறாங்கன்னு நானும் பாக்குறேன்' என்று கேசவன் வீர வசனம் பேச

'எப்படி நடத்துவாங்கன்னா என்ன! நாங்க மட்டும் ஏர்ல பறந்துக்கிட்டா தாலி கட்ட போறோம்! நீ புதுசா ஜூம் பண்ணி பாக்குறதுக்கு, இங்க பாருடா கேசு...உன்கிட்ட எல்லாம் பேசுறதுக்கே எனக்கு இஷ்டம் இல்ல, ஒழுங்கா உன் அக்காவையும் உன் மாமாவையும் உருட்டிகிட்டு இந்த வீட்டை விட்டு கிளம்பு, இல்ல! இப்போ உன் மண்டை உடைஞ்ச மாதிரி அடுத்தது உன் வாயும் உடையும்' என்று கதிர்வேலன் எச்சரித்தான்.

இந்த தருணத்தில் என்ன பேசினாலும் பாண்டியன் குடும்பத்திற்கு தான் அது சாதகமாக முடியும் என்று எண்ணிய பார்வதியும்,'வாங்க நம்ம கிளம்பலாம்' என்றபடி முருகனின் கையைப் பிடித்து பாண்டியனின் வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல,

'அத்த ஒரு நிமிஷம்! இந்தாங்க முல்லை போட்டு இருந்த நகை துணிமணி எல்லாம் பத்திரமா நீங்களே வச்சுக்கிட்டு, உங்க சொத்து சுகத்தோட நிம்மதியா வாழுங்க' என்ற ரோஜா முருகனைப் பார்த்து,

'மாமா... எங்க அப்பாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது, ஆனா உங்களுக்கு முல்லை மேல பாசம் இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும், ஏன்னா என்னைக்குமே அப்பாவுடைய செல்லப் பிள்ளை என்றால் அது பெண் பிள்ளைதான், ஆனா கேட்பார் பேச்சைக் கேட்டு உங்க கோபத்துக்கும் உங்க போலி கௌரவத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல்! முல்லை விருப்பத்தை அறிந்து அவளுக்கு அவள் இஷ்டப்பட்ட வாழ்க்கையை அமைத்து கொடுப்பீங்கன்னு நினைச்சேன், ஆனா இப்பதான் தெரியுது நீங்களே உங்க வாழ்க்கையை உங்க எண்ணம் படி வாழல போல!' என்று ரோஜா சொல்ல...

'ஏய்! என்ன என் புருஷன் மூளையை கெடுக்கிறியா?இங்க... பார் உன் அண்ணன் சொன்ன மாதிரி ஒழுங்கா எங்க வீட்டு சொத்துக்கும் முல்லைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி எங்க வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கிற வேலைய பாரு' என்று பார்வதி, முருகனை அழைத்துக் கொண்டு பாண்டியனின் வீட்டில் இருந்து வெளியேறினார்.

என்னதான் முருகன் தன் மகள் முல்லை மீது கோபப்பட்டாலும், முல்லைக்கு தன் தந்தையின் செயலில் சங்கடம் ஏற்பட்டாலும், என்றுமே முல்லைக்கு தன் தந்தை முருகனை பிடிக்கும் என்பதால் இன்றும் முருகனை அனைவர் எதிரிலும் தலை குனிய வைத்ததை எண்ணி முல்லையும் கண்கள் கலங்கினாள்.

'என்னடா கதிர் இது! முல்லையை இங்க அழைச்சிட்டு வரத என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே!' என்று பாண்டியன் கேட்க,

'அப்பா... எங்களுக்கே இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரியாது' என்ற கதிர்வேலன் காலையிலிருந்து நடந்த எல்லா அசம்பாவிதங்களையும் சொல்லி முடித்தார்.

கதிர்வேலன் நடந்ததை சொல்லச் சொல்ல முல்லை மேலும் தேம்பி அழ,
'இப்ப எதுக்கு முல்லை அழுதுகிட்டு இருக்க, விடு எல்லாம் நல்லதுக்குன்னு நினைப்போம்' என்று ஜீவாவும் முல்லைக்கு ஆறுதல் சொல்ல,

'சரி! அப்போ கதிர் சொன்ன மாதிரி அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கும் முல்லைக்கும் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிடலாமா?' என்று பாண்டியன் சிரித்த முகத்துடன் கேட்டார்.

பாண்டியனின் கேள்விக்கு சம்மதமாக ஜீவானந்தம் தலை அசைக்கும் முன்னே, 'நான் ஒருத்தி உயிரோடு இருக்கிற வரைக்கும் ஜீவா முல்லை கழுத்துல தாலி கட்ட முடியாது' என்ற வசனத்தை பேசிக்கொண்டு கஸ்தூரி வீட்டுக்குள் நுழைந்தவருடன் மீனாவும் வந்திருந்தாள்.

'இப்பதான் ஒரு இம்சை போச்சு. இப்போ இன்னொரு இம்சை இடையில எதுக்கு வருது' என்று கதிர்வேலன் தன் தங்கையிடம் கேட்க,

'வாத்தி...கொஞ்ச நேரம் அமைதியா இருங்க, இப்போ கஸ்தூரி அத்தை என்ன பிரச்சனை பண்ணப் போறாங்கன்னு தெரியல' என்ற ரோஜாவை பார்த்து,

'என்ன பிரச்சனை பண்ணாலும் முல்லை ஆசைப்பட்ட வாழ்க்கை முல்லைக்கு கிடைக்கட்டும்' என்றார் கதிர்வேலன் பெருந்தன்மையாக.

கஸ்தூரியின் கோபமான முகத்தை பார்த்து,' என்ன தங்கச்சி இப்ப ஏன் அபசகுனமா பேசுற?' என்று பாண்டியன் கேட்க,

'ஏன் அண்ணா... உனக்கு மனசாட்சியே இல்லையா? ஜீவாவை மீனாவுக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் அவ்வளவு சொல்லியும் இப்போ என்னமோ முல்லைக்கும் ஜீவாவுக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ண போறேன்னு சொல்றியே, இதுதான் நீ தங்கச்சி மேல வச்சிருக்கற பிரியமா?' என்று கேட்டார் கஸ்தூரி.

'ஏன் அத்தை... உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதமே இல்லையா! நான் தான் சொல்றேனே! மீனா கதிரை காதலிக்கிறாள், அதை தெரிந்தும் மீனாவை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு ஆசைப்படுறீங்களே நீங்க பெரிய மனுஷி மாதிரியே நடந்துக்கவே மாட்டீங்களா' என்று ஜீவானந்தம் கேட்க,

'ஏன்! ஒருத்தவனை காதலிச்சிட்டு இன்னொருத்தவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அது என்ன தேச குற்றமா?' என்ற கஸ்தூரியின் வார்த்தையை கேட்டு அனைவரின் முகமும் அருவருப்பாக மாறியது.

'இங்க பாரு கஸ்தூரி...ஜீவாவும் முல்லையும் திருமணம் பண்ணிக்க ஆசைப்படுறாங்க, அதே மாதிரி மீனாவும் கதிரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படும்போது நீ ஏன் இந்த கல்யாணம் நடக்க கூடாதுன்னு நினைக்கிற' என்று பாண்டியன் கேட்க

'இந்த குடிகார பயல கட்டிக்கிட்டு என் பொண்ணு கஷ்டப்படுறதை நான் பார்க்க விரும்பல, அதனால என் பொண்ணுக்கும் ஜீவாவுக்கும் கல்யாணம் பண்ணி வையுங்க, இல்லனா இதோ இந்த விஷயத்தை நான் குடித்துடுவேன்" என்று கஸ்தூரி கையோடு எடுத்து வந்த விஷத்தை தன் வாயில் சரித்துக்கொள்ள முயன்ற தருணம்,

'அம்மா... நீ சாக வேண்டாம்! எனக்கு கதிர் மாமாவை கல்யாணம் பண்ணி வைக்கலனா நானே செத்துடுவேன்' என்ற மீனா சற்றும் தாமதிக்காமல் தன் அம்மாவின் கையில் இருந்த விஷ பாட்டிலை பிடுங்கி யாரும் எதிர்பார்க்காத படி அவள் விஷத்தை குடித்ததும் கூடி இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

-தொடரும்🌹
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top