Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 83
- Thread Author
- #1
மதுரா மற்றும் ரகுவம்சியின் தாய் காஞ்சனா பரம சாது. மிகவும் மென்மையான இதயம் கொண்டவர். வாலிப வயதில் அவரை துரத்தித் துரத்தி காதலித்த ராகவேந்தர் மீது காதலில் விழுந்தாள்.
அதிலொன்றும் தவறில்லை ஆனால் அந்த ராகவேந்தர் செல்வந்தராக இருந்ததுதான் தவறாகப் போனது. அதன் விளைவாக நடுத்தர குடும்பச் சூழலில் இருந்து வந்த காஞ்சனா,
ராகவேந்தரின் தாய் பத்மாவதிக்கு பாகற்காயாய் கசந்து போனாள்.
பத்மா தன் மகனுக்கு அவர்களைப் போல உயர்ந்த ஸ்டேடஸில் பெண் பார்த்து திருமணம் முடிக்க எண்ணியிருக்க,
திடுமென சாதாரண குடும்பத்து பெண்ணை மணந்து வந்து நின்ற மகனை கடிந்து கொள்ளாது மருமகள் மீது துவேஷம் வளர்த்தார்.
'ஆண்பிள்ளை அப்படி இப்படித்தான் இருப்பான்' என்ற வகையறாவை சேர்ந்த தாயான பத்மாவதி, தன் மகனை காஞ்சனா மயக்கி மணந்து வந்துவிட்டதாக குற்றஞ்சாட்டி குத்திக் காட்டினார்.
அனுதினமும் தவறாது வந்து விழும் பத்மாவதியின் குத்தீட்டிச் சொற்கள் அவளுக்கு வலித்தாலும் கணவனின் மீது கொண்ட காதலால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள்.
இந்த விசயம் தெரியவந்த ராகவன் தாயிடம் சண்டையிட, அதற்கும் இவள்தான் ஏற்றிவிட்டு தனது மகன் தன்னிடம் சண்டைக்கு வந்ததாக காஞ்சனாவை குறை கூறினார் பத்மாவதி.
இப்படியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் அவர்கள் காதலின் முதல் வரமாக வந்தவன் தான் ரகுவம்சி. பேரன் பிறந்தது மகிழ்ச்சி தான் எனினும், இல்லாதவள் வீட்டு வயிற்றில் அந்த குடும்பத்தின் வாரிசு வந்ததே என்ற சுணக்கம் கொண்டார் பத்மாவதி.
காஞ்சனாவிற்கு உடன்பிறந்த அக்கா ஜெயந்தி மட்டுமே. அவர்களது பெற்றோர் இவர்களின் சிறு வயதிலேயே இறந்திருக்க, அக்கா தங்கை மட்டுமே ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்தனர்.
அவர்களை வளர்த்த சொந்தகார பாட்டி, தன்னாலான அளவில் சாதாரண குடும்பத்து வரனை ஜெயந்திக்கு திருமணம் முடித்த பிறகு இறந்து விட, காஞ்சனாவின் பொறுப்பை மொத்தமும் சகோதரி மற்றும் அவளது கணவன் பார்த்து கொண்டனர்.
காஞ்சனாவின் காதல் திருமணம் அவர்களுக்கே அதிர்ச்சி தான். இருப்பினும் அதை ஏற்றுக் கொண்டு அவளுக்கான சீர்வரிசை செய்தாலும் பத்மாவதியின் ஆசைக்கு ஈடு செய்ய முடியவில்லை.
அவர்களை அவமரியாதை செய்யும் பத்மாவதியின் வார்த்தைகள் காஞ்சனாவை வருத்தம் கொள்ளச் செய்ய, அவர்களை அங்கு வர விடாமல் தானே சென்று தனது சகோதரியை பார்த்து வந்தாள்.
ஆனால் ரகுவம்சி பிறந்த பிறகு, திருமணம் ஆனது முதல் இதுவரை குழந்தை இல்லாத ஜெயந்தி தம்பதியினர், காஞ்சனாவின் பிள்ளையைக் காண அவ்வப்போது வந்து சென்றனர்.
சில வேளைகளில் வேலை விசயமாக வெளியூர் சென்று வரும் தேவநாதன் ரகுவிற்காக எதாவது வாங்கி வர, அதை தருவதற்காக அவர் மட்டும் தனியாக அந்த வீட்டிற்கு வந்து செல்வதும் உண்டு.
பிள்ளை இல்லாதவர்களின் மனநிலை காஞ்சனாவிற்கு புரிந்ததால் அவரது வரவிற்கு தடையாக எதுவும் சொல்லவில்லை. அதுதான் தவறாகப் போனது.
நாட்கள் வருடங்களாக உருள, பத்மாவதியின் இடைவிடாத தூபம் ராகவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இருந்ததை அறியாமல் போனாள் காஞ்சனா.
ரகுவின் ஆறாம் வயதில் காஞ்சனா மீண்டும் கருவுற, கணவன் காட்டிய விலகலையும் அவரிடம் தெரிந்த மாற்றத்தையும் கவனிக்க தவறி விட்டாள்.
பத்மாவதி மகனின் மனதில் விதைத்த விஷம் ஒவ்வொரு நாளும் காஞ்சனாவிடம் எரிந்து விழுவதில் தொடங்கி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தவரை அடிக்கும் அளவிற்கு சென்று விட்டது.
ராகவனின் அடி கூட காஞ்சனாவிற்கு வலிக்கவில்லை, 'உன் வயித்துல இருக்கறது யாரோட பிள்ளையோ?' என்று அதற்கிடையே சொன்ன வார்த்தைகள் அவளை மொத்தமாக சாய்த்தது.
அந்த ஷணமே மயங்கி விழுந்த காஞ்சனாவை, கடமையே என்று மருத்துவமனையில் சேர்த்து விட்டு அவளது சகோதரியை அழைத்து விட்டனர்.
அன்றைய பேச்சில், சந்தேகம் கொண்ட கணவனிடம் மரித்துப் போன காதலை உணர்ந்த காஞ்சனா மகள் பிறந்த பிறகு,
இனியும் அந்த வீட்டில் இருப்பது அவர்மீதான தனது காதலை காசிற்காக இருப்பதாக சொல்லி இழிவுபடுத்துவதாகி விடும் என்று ஒரேயடியாக சகோதரியின் வீட்டிற்கு வந்து விட்டாள்.
பத்மாவதியின் கட்டுப்பாட்டில் இருந்த ராகவனும் அவரை தடுக்கவில்லை. தாயும் மகனும் தொல்லை விட்டது என்று காஞ்சனாவை தலைமுழுகி விட்டனர்.
அவர்களிடம் சென்று நியாயம் கேட்பதாக சொன்ன ஜெயந்தியிடமும் தேவநாதனிடமும், 'இனி எக்காரணம் கொண்டும் என் பிள்ளைகள் அந்த வீட்டிற்குள் நுழைய மாட்டார்கள். அவர்களிடம் சென்று எதுவும் கேட்கக்கூடாது' என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்.
எட்டு வயதான ரகு தந்தையை கேட்டு ஒருமுறை அழுதபோது, 'இனிமேல் உங்களுக்கு இந்த அம்மா மட்டும் தான் கண்ணா.' என்று அவனை அமைதிப்படுத்திய காஞ்சனாவின் வேதனையான குரலில் என்ன உணர்ந்தானோ அதன்பிறகு தந்தையை பற்றி அவன் கேட்டதே இல்லை.
தன் பிள்ளைகளை வளர்க்க சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை வைப்பு நிதி போல வைத்திருக்க, 'என் உயிரே போனாலும் அந்த மனுசன் எனக்கு கொள்ளி வைக்கக் கூடாதுக்கா' தன் சகோதரியிடம் உறுதியுடன் சொல்லிக் கொண்டிருந்தார் காஞ்சனா.
அதன்பிறகு வருடங்கள் உருண்டோட,
மதுவின் ஐந்து வயதில் ஜெயந்தி சூல் தாங்க, அந்த வீட்டில் மகிழ்ச்சி பொங்கியது. ஜெயந்திக்கு சரண் மகனாக பிறந்த பிறகு ஓரிரு வருடங்களில் காஞ்சனா மரித்துப் போனார்.
வலிகளை மட்டுமே கண்ட மென்னிதயம் அதற்கு மேல் பாரம் தாங்காமல் ஒருநாள் தனது இயக்கத்தை நிறுத்திவிட, அதற்குள் ராகவன் எப்போதோ புது மாப்பிள்ளை ஆகி இருந்தான்.
ரகுவிற்கு விபரம் புரிந்த பதினேழாம் வயதில் தாய்க்கு நடந்த கொடுமையை, காஞ்சனா எழுதி வைத்த கடிதத்தின் மூலம் அறிந்தவன் தனது தந்தை வீட்டை அடியோடு வெறுத்து விட்டான்.
பிள்ளைகள் வளர்ந்த பிறகு எங்கே மீண்டும் தன் கணவனின் வீட்டில் வந்து அழைத்தால் அவர்களுடன் சென்று விடுவார்களோ என்றெண்ணி,
தனக்கு நடந்த அனைத்தையும் மகனுக்காக கடிதமாக எழுதி வைத்து, தனது ஆயுளுக்கு பிறகு படிக்கச் சொல்லிக் கொடுத்திருந்தார்.
உயிருடன் இருந்தபோது அந்த கடிதத்தை அவர் கொடுத்த சமயம் தாய்க்காக அழுத ரகுவிற்கு, அவரது வாழ்வில் இத்தனை ஏமாற்றமும் வேதனையும் இருக்கும் என்று தெரியாது.
இரண்டாம் மணம் முடித்த ராகவனுக்கு பல வருடங்களாக குழந்தையின்றி போகவே, அதற்கு அவரிடம் தான் குறை என்று குற்றம்சாட்டிய அந்த பணக்கார மனைவிக்கு,
காஞ்சனா மூலமாக தான் பெற்ற பிள்ளைகளை காட்டி அவளது கூற்றை தவறென நிரூபிக்க முயன்றார் ராகவன். தாயின் கடிதம் மூலம் நடந்தது அனைத்தையும் அறிந்த ரகு தந்தையை அடித்து விரட்டாத குறையாக துரத்திவிட்டான்.
தாயின் வாழ்க்கையால் காதலையும் பணக்காரர்களையும் அறவே வெறுத்தான் ரகுவம்சி. தங்கையிடம் சிறு வயது முதலே பணக்காரர்களை நம்பாதே என்று அறிவுரைத்தான்.
அவளது பருவ வயது வந்ததும், 'எந்த சூழ்நிலையிலும் நீ காதல் மட்டும் செய்யவே கூடாது. அது உன் வாழ்க்கையையே சீரழித்து விடும். அப்படி எதாவது நடந்தால் இந்த அண்ணன் இருக்க மாட்டான்' என்றெல்லாம் எச்சரித்திருந்தான்.
எத்தனை தடைகள் போட்டாலும் பிளாஸ்டிக் போல அழிக்க முடியாத காதல், யுவாவை கண்டதும் அவளுள் வந்ததும் முதலில் தன் அண்ணனை நினைத்து அதை ஆழத்தில் அமிழ்த்தி தான் வைத்தாள்.
யுவாவின் கனிவும் கண்ணியமும் அவளை அசைக்க, அவன் வந்து காதல் சொன்னதும் வேறு வழியின்றி அவனிடம் மறைக்க இயலாமல், அவளுள் மறைத்து வைத்த அவன்மீதான காதலை வெளிப்படுத்தி விட்டாள். விதி யாரை விட்டது?!
பொதுவான காதலர்களை போல, இருவரும் ஜோடி சேர்ந்து கைகள் கோர்த்து பீச்சில் நேரமறியாமல் நடை பயின்றதில்லை. பார்க்கில் அமர்ந்து பதியன் போட்டதில்லை.
பகல் இரவு தெரியாமல் ஃபோனில் பேசியே குடித்தனம் நடத்தியது இல்லை. மனதால் மட்டுமே உணர்ந்து கொண்டனர் தங்களது காதலை.
அதைமீறி என்றாவது அவளுடன் சிறிது நேரங்கழிக்க விரும்பிய யுவா பேச்சுவாக்கில் சொன்னால், அதற்கு அவளது ஒரு நொடி தயக்கத்தைக் கூட புரிந்து அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அந்த பேச்சையே மாற்றி விடுவான் யுவா.
யுவனியை பற்றி யுவாவின் பேச்சில் அறிந்த மதுரா அவளை பார்க்க வேண்டும் என்று விரும்பிய பிறகு அவர்களது சில சந்திப்புகள் கூட நிகழ்ந்தது.
நிமிடத்திற்கு ஒரு லவ் யூ சொல்லி, கிஸ்ஸிங், ஹக்கிங், மிஸ்யூ ஈமோஜிகள் அனுப்பி, வழிசலாக மணிக்கணக்கில் கடலை வறுத்து என்று எந்த அடையாளமும் இல்லாத அவர்களது காதல் அவளது அலைபேசியை வாங்கி தேடிப் பார்த்தால் கூட ரகுவிற்கு தெரியாது.
தங்களது காதலைப் பற்றி 'வெளியே சொல்லாதே' என்று யுவனியிடம் கெஞ்சலாக கேட்ட பிறகும் கூட,
இவரிடம் சொல்லி இருக்கிறாளே என்று
யுவனி மீது மனத்தாங்கல் கொண்டு வருத்தம் கொண்டிருந்த மதுராவிற்கு, குப்தா அடுத்து சொன்ன விசயம் அவளை வியப்புடன் விழிவிரிய செய்தது.