• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
82

காலையில் அழகான டிசைனர் புடவை உடுத்தி கல்யாணத்திற்கு செல்வது போல கிளம்பிய யுவனி, நேற்றைய இரவே வினோத்தை மிரட்டி மதுராவின் திருமணம் நடக்கும் இடத்தை அறிந்து கொண்டாள்.

நேற்றிரவு யுவனியின் கோபத்தை உணர்ந்து அவள் அறையை விட்டு சென்றதும் உடனே வினோத்திற்கு அழைத்த யுவா, மதுவின் திருமணம் நடக்கும் இடத்தை யுவனியிடம் எக்காரணத்தை கொண்டும் சொல்லக்கூடாது என்று உறுதியாக கூறியிருந்தான்.

அதனால் இரவு அவனை அழைத்த யுவனியிடம் மழுப்பலாக பதில் சொன்ன வினோத்தை சென்னை செந்தமிழில் அர்ச்சித்து 'ஒழுங்கு மரியாதையா இடத்தை சொல்லு' என்று மிரட்ட, யுவனியின் மிரட்டல் அவனிடம் வேலை செய்தது.

இதோ நாகரீகமாக அலங்கரிக்கப்பட்ட அந்த திருமண ஹாலின் முன் நின்று அந்த இடத்தை கண்களால் அளவிட்ட யுவனி, எதிர்ப்பட்ட பெண்மணியிடம் மணமகளின் தோழி என்று கூறி அவளது அறையை கேட்டு அங்கே சென்றாள்.

கதவு உட்புறம் தாளிடப்பட்டிருக்க, சுற்றிலும் பார்வையிட்ட யுவனி சற்று அழுத்தமாக தள்ளியதால் கதவு திறந்து கொள்ள, பூட்டிய கதவு திடுமென திறந்ததில் அதிர்ந்து விழித்தாள் மதுரா.

அலங்காரம் முடித்து அழகாய் மணமகள் கோலத்தில் இருந்தவளின் அருகே வேகமாக வந்த யுவனியின் பார்வை அவளது கையைப் பார்த்து விட்டு கண்களில் கனல் பறக்க தீயாக அவளை முறைத்தாள்.

பாவம்! ஏற்கனவே கதவு திறந்த அதிர்ச்சியில் இருந்த மதுரா கையிலிருந்த தூக்க மாத்திரைகளை சட்டென மறைத்து வைக்க மறந்து விட்டாள்.

மதுராவை உறுத்து விழித்தபடி புருவங்களை உயர்த்தி, "என்னது இது?" இடுப்பில் கையூன்றி அவளெதிரே நின்ற யுவனியின் கேள்வி அவள்மீது தோட்டாவாய் பாய, கண்ணீருடன் தலை குனிந்தாள் மதுரா.

"அங்க அவன் சாக பார்க்கறான். இங்கே மேடமும் அதே வேலையை செய்யப் பார்க்கறீங்க. உங்களுக்கு எல்லாம் பிரச்சனையை ஃபேஸ் பண்ண மட்டும் தோணாதுல. இடியட்ஸ்." என்று அவளது கையை தட்டி விட்டவள், சென்று கதவை நன்றாக அடைத்து விட்டு வந்தாள்.

அவள் முன் வந்து முன்கைகளை கட்டிக் கொண்டு நின்ற யுவனியை நிமிர்ந்து பார்க்கத் தயங்கி தலைகுனிந்து கண்ணீரோடு நின்றாள் மதுரா.

"இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தத்தை வச்சுட்டு இப்ப இப்படி ஒரு காரியம் பண்றேனா, உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. அப்படித்தானே?" யுவனியின் கேள்விக்கு அமைதி காத்தாள் அவள்.

"ஆன்ஸர் மீ!" மிரட்டலாக வந்த யுவனியின் சத்தத்தில் நடுங்கியவள் ஆமென்று மெதுவாக தலையசைக்க, "அப்றம் ஏன் இந்த மேரேஜ்க்கு ஒத்துக்கிட்ட மது?. " கூர்மையான பார்வையோடு கேட்க, மீண்டும் அவளிடம் அமைதி.

"உன்னோட பேச்சால யுவா பண்ணுன காரியம் தெரியுமா உனக்கு?" என்றதும் என்னவென்று தெரியாமல் நிமிர்ந்து பார்த்த மதுராவிடம்,

யுவா தற்கொலை முயற்சி செய்து அவனை காப்பாற்றிய விசயத்தை சொல்ல, "யுவன்!" என்று கதறி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள் அவள்.

"அவன்கூட மூணு வருசத்துக்கு மேல பழகுற. உன்னோட அந்த மாதிரி வெட்டிவிடுற பேச்சால அவன் எப்படிப்பட்ட முடிவு எடுப்பான்னு உனக்கு தெரியாதா?" அழுத்தமாக கேட்டாள் யுவனி.

" ப்ளீஸ் யுவனி. நான் இப்படி எல்லா நடக்கும்னு எதிர்பார்க்கலங்க. நான் ஹார்ஷ்ஆ பேசுனா, அதுல என்னை அவர் வெறுத்துடுவாருனு நினைச்சு தான் அப்படி பேசினேன்."

"எம்மேல கோபம் வரும், என்னை வெறுத்துட்டு கொஞ்ச நாள்ல என்னை மறந்துடுவாருனு தப்புக் கணக்கு போட்டுட்டேன். சத்தியமா நான் அப்படித்தான் யோசிச்சேன் யுவனி." கண்ணீருடன் தனது பேச்சிற்கு விளக்கம் அளித்தாள் மதுரா.

"அப்ப நீ அவனைப் பற்றி புரிஞ்சுக்கிட்டது அவ்ளோ தான். சின்ன பொருளோ, இல்ல உயிரோ அவன் மனசார விரும்பிட்டா உயிரையே வைப்பான். அதோட பிரிவை அவனால தாங்க முடியாது."

"அதனால்தான் அவனுக்கே ஆசையா இருந்தாலும் எங்க வீட்ல பெட்ஸ் கூட வளர்க்க கூடாதுனு நான் சொல்லி வைச்சு இருக்கேன். அவன் ரொம்ப சென்சிடிவ் மதுரா."

"உன்னை காதலிக்கிறேன்னு அவன் சொன்னப்ப கூட'அவ ஓகே சொல்ற வரை மனசுல பெருசா எதுவும் ஆசைய வளர்த்துக்காதே அமைதியா இரு'னு அவனை அடக்கி வைச்சேன்."

யுவனி சொன்னதைக் கேட்ட மதுரா தனது சொற்கள் யுவாவை எத்தனை வேதனையடைய செய்யும் என நினைத்து மேலும் அழுது கரைந்தாள்.

"ஜஸ்ட் ஸ்டாப் தட் க்ரையிங் மது. இட்ஸ் இரிட்டேட்டிங். உன்னை இன்னிக்கு ஒருவழி ஆக்கனும்னு தான் வந்தேன். பட் நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணல. "

"நவ் டெல் மீ வாட்டிஸ் த ரீஸன்? என்ன நடந்தது? " ஆளுமையாக கேட்டவளை நிமிர்ந்து பார்த்த மதுரா ஏதோ சொல்ல வர, சரியாக அதேவேளை கதவு தட்டப்பட்டது.

யுவனியை திரும்பிப் பார்த்த மதுரா மெதுவாக சென்று கதவை திறக்க, வெளியே நின்ற அவளது பெரியம்மா ஜெயந்தி," ரெடியாகிட்டியா மது? இன்னும் கொஞ்ச நேரத்துல மேடைக்கு கூப்பிடுவாங்க." என்றாள் சிறு பரபரப்பாக.

"இ..இதோ ரெடி ஆகிட்டு இருக்கேன் பெரிம்மா." தடுமாற்றதோடு மதுரா கூறி ஒருவழியாக அவரை அனுப்பி வைத்துவிட்டு ஆசுவாச மூச்சுடன் திரும்ப அவளையே முறைத்த வண்ணம் நின்றாள் யுவனி.

"அவங்கள நீ இப்ப வேணும்னா சமாளிச்சு அனுப்பிடலாம் மது. ஆனா மேரேஜ் ஆனபிறகு அந்த வீட்ல எப்படி சமாளிப்ப?" எனக் கேட்டவள், "ஓஓ, அதான் மேடம் ஸ்லீப்பிங் பில்ஸ் சாப்பிட்டு ஒரேயடியா போற முடிவுல இருந்தீங்கல அதை மறந்துட்டேன்." கிண்டலாகக் கூறினாள்.

"ஓகே. நமக்கு இப்ப டைம் இல்ல. அந்த ஆன்ட்டி மறுபடியும் வந்துட போறாங்க. அதுக்குள்ள ஷார்ட்ஆ சீக்கிரம் சொல்லு. உனக்கு விருப்பம் இல்லாம இந்த மேரேஜ்க்கு எதுக்கு ஒத்துக்கிட்ட மது?" எனக் கேட்டாள் யுவர்ணிதா.

நடந்தவற்றை கண்ணீரோடு மதுரா கூற, அதைக்கேட்ட யுவனிக்கு திகைப்பு தான் ஆனாலும் இதென்ன முட்டாள்தனம் என்ற கோபமேற ஒரு பெருமூச்சுடன், "சரி விடு. இனி நான் பார்த்துக்கறேன்." என்றாள்.

அதற்கு மதுரா,"ப்ளீஸ் எங்க காதலைப் பற்றி மட்டும் எதுவும் எல்லார் முன்னாலேயும் சொல்லிடாதீங்க யுவனி." அவள் கெஞ்ச, கண்கள் மூடி சரியென்று கூறியவள்,

"ஆனா இனியொரு முறை இந்த மாதிரி முட்டாள்தனமான காரியம் பண்ணாதே. சரி கிளம்பி மேடைக்கு வா. நான் வெளியே இருக்கேன்." அவளை எச்சரித்துவிட்டு, கதவைத் திறந்துக் கொண்டு சென்றாள்.

சற்று நேரத்திற்கு மேடையில் மணமக்கள் அமர வைக்கப்பட்டு இருக்க, மேடைக்கு அருகே சென்ற மணமகனின் தந்தையிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட யுவனி, மணமேடையில் இருப்பவர்களை பார்த்தவாறு அவரிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்தாள்.

அவள் இன்னாரென தெரிந்ததும் மிகவும் மகிழ்ந்த ரித்தேஷ் குப்தா, அவள் அழைத்ததும் யோசனையுடன் அவளோடு ஒரு அறைக்குள் சென்றார்.

சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்தவர் முகம் களையிழந்து சிறு கோபத்திற்கு மாறியிருக்க நேராக மேடைக்கு வந்து,

" இந்த கல்யாணம் இனி நடக்காது தேவநாதன்." இறுக்கமான குரலில் சற்று சத்தமாகச் சொல்ல, மதுவின் பெரியப்பாவான தேவநாதன் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் திகைத்தனர்.

மாலை வரவேற்பிற்கு மட்டுமே தொழில் தொடர்பான அனைத்து நண்பர்களும் அழைக்கப்பட்டு இருக்க, திருமணத்திற்கு இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர் சிலர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்

தற்போது குப்தாவின் பேச்சைக் கேட்டு சொந்தங்களுக்குள் சலசலப்பு ஏற்பட உடனே கூடியிருந்த சொற்ப உறவினர்களின் பக்கம் திரும்பியவர்,

" எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க. இந்த கல்யாணம் நடக்காது. உங்க சிரமத்துக்கு வருத்தப்படுறேன்." என்றதோடு,

"இஸ்கே பாத் ஏ ஷாதி ந ஹோ ஸகா. உட்டோ ப்ரணீத்." தன் மகனிடம் திருமணம் நடக்காது என்று கூறி எழும்பச் சொல்ல, குழப்பத்துடன் எழுந்து நின்றான் ப்ரணீத்.

அதுவரை நடப்பதை புருவ முடிச்சுடன் கண்டிருந்த மற்றொருவன், "ஒரு நிமிஷம். இந்த மேரேஜ் கால் ஆஃப்க்கு என்ன ரீஸன்னு தெரிஞ்சுக்கலாமா? " அழுத்தமான குரலில் கேள்வியோடு எழுந்து நின்றான்.

அவனை குற்றஞ்சாட்டும் பார்வை பார்த்த ரித்தேஷ் குப்தா, "இன்னொருத்தரை விரும்புறவங்கள எப்படி என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?!" சற்று காட்டமாகவே நேரடியாகக் கேட்டார்.

அவரது கேள்வியில் கொதித்தவன், "மதுரா யாரையும் காதலிக்க மாட்டா." என்று அத்தனை உறுதியான குரலில் மதுவை பார்த்தபடி சற்று அழுத்தமாக சொன்னான் ரகுவம்ஷி. மதுவின் சகோதரன்.

தன்மீதான தனது அண்ணனின் நம்பிக்கையை அழித்து காதலில் விழுந்த குற்ற உணர்வு மதுராவினுள் மலையளவு பொங்கி இதயம் கனத்தது.

கண்கள் கலங்க எழுந்து நின்றவளின் பார்வை யுவனியை தேட, அங்கே அவள் இருந்ததற்கான அடையாளமே இல்லை.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top