• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
102
பகுதி - 25

குளியலறையில் இருந்து வெளியே வந்த யுவனி அலைபேசியில் மின்னிய பல தவறிய அழைப்புகளை கண்டு திறந்து பார்க்கவும், அவளது செக்ரட்டரி அனிதா தான் அழைத்திருந்தாள்.

புருவ முடிச்சுடன் யோசித்த யுவனி வேகமாக அவளுக்கு அழைக்க, எதிர்முனையில் சொல்லப்பட்ட சேதியில், "வாட்!! ஐ வில் பி கமிங் சூன்." என்றபடி பரபரப்பாக தயாராகி அவளது அறையிலிருந்து கிளம்பிச் சென்று விட்டாள்.

காலை உணவை சமைப்பதற்காக அழைப்புமணியை அழுத்திய தேவிகா எப்போதும் கதவை திறக்கும் யுவனி இல்லாததால் கதவை திறந்த ரகுவிடம், "பாப்பா இல்லீங்களா தம்பி?" எனக் கேட்டார்.

ஒரு நொடி விழித்த ரகு, மற்றொரு அறை மூடி இருப்பதை நொடியில் கவனித்து "அவ தூங்குறாக்கா." என்ற பதிலோடு முடித்துக் கொண்டான். அவரும் அதற்கு மேல் தோண்டித் துருவிக் கேட்கவில்லை.

அவர் சென்றபின் யுவனி இருக்கும் அறைக்குச் சென்ற ரகு, அவள் அங்கு இல்லாததைக் கண்டு நேரமாகவே கம்பெனிக்கு கிளம்பி விட்டாள் போல என்றெண்ணி தனது அன்றாட பணிக்குச் சென்று விட்டான்.

கம்பெனிக்கு விரைந்து வந்த யுவனி காரிலிருந்து இறங்கியதும் வேகமாக வந்து எதிர்கொண்ட அனிதாவிடம், "எப்படி இதை கவனிக்காம விட்டீங்க? க்யூசி டிபார்ட்மெண்ட்ல என்னத்த தான் வேலை செய்து கிழிச்சாங்க?" பொரிந்து தள்ளினாள்.

புதிதாக வந்திறங்கிய மெஷினரியில் தயாரித்த ரெடிமேட் உணவுகளின் ப்ராஸஸிங்கில், ப்ரிசர்வேட்டிவின் அளவு கூடியதோடு வெப்பநிலை அதிகமாக வைத்த காரணத்தால் உணவின் தரமும் சுவையும் மாறிப் போன விசயம் காலங்கடந்து தெரிய வந்துள்ளது.

உணவின் தரத்தை சோதிக்கும் பணியாளர்களை அழைத்து அவள் விசாரிக்க, "நாங்க சாம்பிள் டெஸ்ட் செய்யும்போது நல்லா தான் மேம் இருந்தது. இடையில எப்படி மாறுச்சுனு தெரியல."

பதற்றத்துடன் அவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க, அந்த சமயத்தில் அவளது அலைபேசி அழைக்க அதை ஏற்றவளுக்கு, அது இன்சூரன்ஸ் கம்பெனியின் சர்வீஸ் அழைப்பு என்றதும் காண்டாகிப் போனாள்.

அதை துண்டித்து விட்டு அவர்களை அனுப்பி வைத்தவளிடம், "மேடம்! இன்னமும் ஒன் வீக்ல ப்ராடெக்ட் மார்க்கெட்ல வரப் போறதா ஆட் எல்லாம் செய்தாச்சு. இப்ப என்ன பண்றது?" பதற்றமாக அனிதா வினவிட சிந்தனையில் ஆழ்ந்தாள் யுவனி.

"எவ்ளோ க்வான்டிட்டி இப்படி ஸ்பாயில் ஆகி இருக்கு?" கேட்ட யுவனிடம் " கிட்டத்தட்ட ஒரு டன் இருக்கும் மேடம். ஸார் வேற ஊர்ல இல்ல. அதான் உடனே உங்கள கான்டாக்ட் பண்ணுனேன்." கையைப் பிசைந்து கொண்டு கூறினாள் அவள்.

ஆதிகேசவன் டெக்ஸ்டைல் கம்பெனியின் மெட்டீரியல் டீலிங் முடிப்பதற்காக ஜப்பான் சென்றிருக்க, தற்போதைய சூழலை யுவனி மட்டுமே சமாளிக்க வேண்டிய நிலை.

அவளது திருமணம் முடிந்தது முதலே மகளை தொல்லை செய்ய வேண்டாமென எண்ணிய கேசவன், கம்பெனியில் எதுவானாலும் தன்னிடம் முதலில் உரைக்க வேண்டும் என்றிருக்க,

அவரது ஆணையை மீறி யுவனியிடம் கூறி விட்டதால் அதற்கான விளக்கத்தையும் முன் வைத்தாள் அனிதா.

அதை எல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் யுவனி இல்லை அவள் புத்தியில் தற்போது இந்த பிரச்சினையை எப்படி சரி செய்வது என்ற சிந்தனை மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.

இன்னமும் ஒரு வாரத்தில் அத்தனை உணவையும் தயாரிக்க வேண்டும். அதற்கான ரா மெட்டீரியல் கிடைக்க வேண்டும். பணியாளர்கள் ராப்பகல் உழைக்க வேண்டும். எத்தனை பெரிய வேலை! மலைப்பாக இருந்தது அவளுக்கு.

புதிதாக அறிமுகம் செய்யும் பொருள் மார்க்கெட்டில் ஒருமுறை மதிப்பை இழந்தால் அடுத்து எத்தனை தரமாக பொருளை கொடுத்தாலும் மக்களின் நம்பிக்கையை மட்டும் பெற முடியாது. 'ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் பெஸ்ட் இம்ப்ரஷன்' என்பதைப் போல.

நல்லவேளை மார்க்கெட்டில் பொருட்கள் இறங்கும் முன்னராவது இந்த விசயம் தெரிய வந்ததே என்று அவளால் மகிழத் தான் முடியவில்லை.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த அனிதாவை வெளியேறுமாறு கூறியவள், அடுத்த வேலைகளை திட்டமிடத் தொடங்க மீண்டும் அலைபேசி அழைத்தது.

யோசனையில் இருந்தவள் கவனியாமல் அழைப்பை ஏற்க, வேறு எண்ணிலிருந்து மார்க்கெட்டிங் கால் என்ற விசயம் அறிந்து பல்லைக் கடித்தவள் அழைப்பை துண்டித்தாள்.

விசயம் அறிந்தவுடன் வேகமாக கிளம்பி வந்ததாலும் நிலைமையின் தீவிரமும் அவளது பசியைக் கூட மறக்கடிக்கச் செய்திருந்தது.

அலைபேசியில் ரா மெட்டீரியல் டீலர்களிடம் பேசிப்பேசி சோர்ந்து போய், மதிய உணவைக்கூட உண்ணாமல் இருந்தவளுக்கு ஒரு பழரசத்தை வந்து நீட்டினாள் அனிதா.

எதுவும் சொல்லாமல் அதைக் குடித்தவள் மீண்டும் யோசனையில் ஆழ்ந்து ஒவ்வொருவராக அழைத்து, ஒருவழியாக மாலை நெருங்கிய வேளையில் மூலப்பொருளுக்காக பேசி ஒரு ஏஜென்சியின் ஒப்புதல் வாங்கி விட்டாள்.

ஒரு பிரச்சினை தீர்ந்தது. இனி அடுத்ததை பார்க்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தவளிடம், "மேடம். சாப்பிட்டுட்டு யோசிங்க." அனிதா தயங்கியபடி உணவை நீட்ட,

உணவை கண்களில் கண்டதும் தான் பசியின் தாக்கம் தெரியவும், அவளிடம் தர்க்கம் செய்யாமல் வாங்கிக் கொண்டவள், ஒரு கவளம் எடுத்து வாயில் வைக்கப் போகும் முன்னர் அலைபேசி அழைத்தது.

அதில் ஒளிர்ந்த எண்களைக் கண்ட யுவனி காலையிலிருந்து கடுப்பேற்றிய அந்த மார்க்கெட்டிங் கால் என்றெண்ணி பொரிந்து தள்ள, அந்தோ பரிதாபம்! அது ரகுவின் எண்ணாக இருந்தது.

சில வேளைகளில் நெட்வொர்க் பிரச்சனையில் நாம் பெயரிட்டு சேமித்த எண்கள் கூட பெயரைக் காட்டாமல் வெறும் எண்களாக திரையில் ஒளிரும். இங்கே அதேதான் நடந்தது.

எதிர்முனையை பேசவிட்டு ரகுவின் குரலைக் கேட்டிருந்தாலாவது சுதாரித்திருப்பாள். அவளுக்கு இருந்த டென்ஸனில் திட்டுவது மட்டுமே பிரதானமாக இருக்க, பேசிவிட்டு வைத்து விட்டாள்.

எதுவும் அறியாத இவள் இங்கே பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேலையை முடிக்க வேண்டிய முனைப்பில் மூழ்கி இருக்க, அங்கே ரகுவோ யுவனியை மீண்டும் தவறாக கணித்து மனதிற்குள் கறுவிக் கொண்டிருந்தான்.

அவளிடம் மீண்டும் ஒரு வாக்குவாதத்திற்கு தயாராக இருந்தவன் அப்படியே உறங்கிவிட, கம்பெனியில் பிஸியாக இருந்த யுவனி இரவு வீட்டிற்கு தாமதமாக தான் வந்தாள்.

தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு திறந்து உள்ளே வந்த யுவனி, ஸோஃபாவில் உறங்குபவனை கண்டு புருவங்கள் நெறித்தவள் அசதியில் தனது அறைக்கு உறங்கச் சென்று விட்டாள்.

அடுத்த வந்த ஒரு வாரமும் இருவரும் சந்திக்க சந்தர்ப்பம் அமையவில்லை. தேவிகாவிடம் ரகுவிற்கு மட்டும் சமைக்கச் சொன்னவள் தனக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று அலைபேசியில் பேசியிருந்தது ரகுவிற்கு தெரியாது.

ஓரிரு நாட்களில் உணவின் அளவை கவனித்த ரகு தேவிகாவிடம் கேட்க, "பாப்பா உங்கள்ட்ட சொல்லலையா தம்பி?!" அவனிடம் பதிலளித்தவர் சிறு வியப்புடன் வினவவும் ஏதோ சொல்லி சமாளித்து விட்டான்.

'என்ன ஒரு திண்ணக்கம்! புருசன்னு ஒருத்தன் இருக்கிறேன் எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு இவளுக்கு தோணலை பாரேன். சரியான ரவுடி' அதற்கும் அவளுக்கு அர்ச்சனை செய்தான்.

நான்கு தினங்களுக்கு மேல் அவளை கண்ணில்கூட காணாமல், அவள் மீதான அவனது கோபம் வற்றிப் போய் தவிப்பாக மாற, 'நிஜமாவே என்னை வெறுத்துட்டாளா? டிவோர்ஸ் எதுவும் கேட்பாளோ?' மனதிற்குள் ஐயம் பரவியது.

'ச்சே! ச்சே! அப்படி எல்லாம் இருக்காது. அப்படி எதாவதிருந்தால் அன்னிக்கே வீட்டை விட்டு போயிருப்பாளே!' தனக்கு தானே அவன் சமாதானம் செய்து கொண்டாலும்,

'ஒருவேளை அவளோட சோஷியல் இமேஜ்க்காக எங்கூட இங்கேயே இருக்காளா?' இன்னொரு புறம் ஒரு குறுக்குக் கேள்வியும் மனதில் வந்து விழுந்தது.

இப்படியாக ஒருவாரம் என்பது பத்து நாட்களாக மாற ரகுவிற்கு அன்றாட பணிகள் அதேப்போல சென்றாலும் அவன்மனம் மட்டும் அவளை எண்ணி குழப்பம், தவிப்புடன் அலைப்புற்றது.

இரவும் பகலும் ஓயாமல் அலைந்து மூலப்பொருட்களை வரவழைத்து, பணியாளர்களிடம் அதிக சம்பளம் பேசி மொத்த வேலையும் முடியும் தருவாயில் ஆதிகேசவன் வந்து சேர்ந்தார்.

அவர் சென்ற வேலை சற்று இழுத்தடிக்க, இங்கே நடந்த குளறுபடியை அறிந்தும் அவரால் வர இயலாத நிலை, அவர் வந்து சேரும்போது யுவனியே ஏகதேசம் பிரச்சனையை சரி செய்திருக்க, மகளை எண்ணி பெருமை தாளவில்லை அவருக்கு.

"வெல் டன் யுவனி. நம்ம ரெபுடேஷனே கேள்விக்குறியாகி இருக்கும். ஒருவழியா நீ எல்லாத்தையும் சரி செய்துட்ட. ஐம் ப்ரௌட் ஆஃப் யூ மை டியர். இனி நான் பார்த்துக்கிறேன். நீ கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு." மகளை பாராட்டி ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

அவளுக்குமே இடைவிடாத பணி சோர்வுற செய்திருக்க, மேலும் சிறிது நேரம் மீதியிருக்கும் வேலைகளைப் பற்றி தந்தையிடம் பேசியவள் மாலை தாண்டியவேளையில் வீட்டிற்கு வந்தாள்.

சோர்வுடன் கதவைத் திறந்து உள்ளே வந்தவளின் கண்கள் ரகுவைத் தேடி, திறந்திருந்த அறையின் வாயிலில் நின்று அவள் பார்க்க, அவளைக் கண்டதும் விரைந்து வந்தவன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top