• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
100
பகுதி - 22

காலையில சமைப்பதற்காக தேவிகா அவளிடம் வந்து அபிப்ராயம் கேட்ட மெனுவில் வாய்மீது கைவைத்து வாயடைத்து நின்றாள் யுவனி.

"ரெண்டு பேர் தானே தேவிம்மா சாப்பிட போறோம் எதுக்கு இத்தன?! ஏதோ ஒன்னு செய்ங்க போதும். நிறைய செய்து சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக் கூடாது. மீதியை வேறொரு நாள் செய்துக்கலாம்." என்றுவிட்டு அவள் நகரப் போனாள்.

"அதுக்கில்ல பாப்பா. இட்லி, மசால் தோசையினா தம்பி கூடக் கொஞ்சம் சாப்பிடுவாரு. அதான் உங்களுக்கு பிடிச்ச இடியாப்பத்தோட அதையும் சொன்னேன்." விளக்கம் அளித்தார் தேவிகா.

"முதல் சொன்னதுல ஏதோ ஒன்னு மட்டும் செய்ங்க. நாளைக்கு எனக்கு பிடிச்சதை செய்துக்க.." அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "என்னோட பென்ட்ரைவ் எங்கே யுவி?!" என அலறினான் ரகுவம்சி.

கண்களைச் சுழற்றி பல்லைக் கடித்த யுவனி அப்படியே நிற்க," நீங்க போங்க. மாப்ள தம்பி எதையோ கேட்கறாப்ல போய் எடுத்துக் கொடுங்க. நான் சமையலை பார்க்கப் போறேன் பாப்பா." வேகமாக அகன்றார் தேவிகா.

பல்லைக் கடித்தபடி மூச்சை இழுத்து விட்ட யுவனி, "இவன.." முனகிக் கொண்டே அவனது அறைக்குச் சென்றவள் கதவை அடைத்துவிட்டு அவன் முன்பு கைகளை கட்டியபடி முறைத்து நின்றாள்.

மனைவியை ஓரக்கண்ணால் கள்ளப்பார்வை பார்த்தபடி டேபிளில் தீவிரமாகத் தேடுவதுபோல அவன் நடிக்க, "போதும் நடிச்சது. வாட் ஆர் யூ ட்ரையிங் மிஸ்டர் ரகு?" அழுத்தமான பார்வையோடு அவனைப் பார்த்து கேட்டாள் யுவனி.

தற்போது நிமிர்ந்து அவளைப் பார்த்த ரகு அப்பாவியாக "ஒன்னுல்லயே!" என்றிட, யுவனி அவனை தீவிரமாக முறைக்க, அவனது பார்வை மூடிய கதவில் படிந்து மீண்டதோடு,

"இப்ப வெளியே இருக்கற தேவிம்மா என்ன நினைப்பாங்க?" உதட்டில் ஒளித்த புன்னகையுடன் யோசனையாக எதுவுமே தெரியாதவன் போலக் கேட்டான் கள்ளன்.

சில நொடிகள் புருவங்கள் சுருங்க யோசித்தவள் சட்டென சென்று கதவைத் திறந்து விட, அவன் அதற்கு சத்தமாக வாய்விட்டு சிரிக்க, அந்த சிரிப்பில் அரைநொடிக்கும் குறைவாக மயங்கியவள் சட்டென சுதாரித்து,"யூ சீட்!" கோபமாகக் கூறி வெளியேறினாள்.

கடந்த இருபது நாட்களாக இப்படித்தான் அடிக்கடி எதையாவது சொல்லி அவளை அந்த அறைக்குள் வரவழைத்து விடுகிறான். அதுவும் தேவிம்மா இருக்கும் சமயத்தில்தான் அவனது ஒவ்வொரு தேவையும் சொல்லி வைப்பான்.

அவள் தங்களது சண்டையை வெளியே காட்டிக் கொள்ளாமலிருக்க முயற்சிக்க, அவர் இருக்கும் போது அவன் அழைத்ததும் வேறு வழியில்லாமல் அங்கே செல்ல வேண்டியுள்ளது.

இல்லையென்றால் இவர்களுக்குள் பிணக்கு என்று தாய் வீட்டிற்கு விசயம் சென்றால் எழும் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். முன்பிருந்த யுவனிக்கு அது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டமில்லை தான்.

ஆனால் இத்தனை ஆண்டுகள் யுவாவை நினைத்து கவலை கொண்ட தாய் ராஜலட்சுமி, மதுரா அவனது வாழ்வில் வந்தபிறகு அவனது மகிழ்வை கண்டு தற்போது தான் நிம்மதியாக இருக்கிறார்.

ரகுவுக்கும் அவளுக்கும் இடையில் பிணக்கு என்று தெரிந்தால், அவளைப் பற்றி அறிந்த தாய் மீண்டும் கவலையில் உழன்று கொண்டிருப்பதோடு தனது தந்தையும் வருந்துவார் என்றே அமைதி காக்கிறாள் யுவனி.

அவள் சென்ற பிறகும்கூட உதட்டில் உறைந்த புன்னகையுடன் இருந்த ரகு, பின்பு பெருமூச்சுடன் தனது வேலையை பார்க்கத் தொடங்க, அவனது எண்ணம் அன்றைய தினத்திற்கு சென்றது.

அன்று..

அவனை மட்டுமே காதலிப்பதாகக் கூறியவள் அவளது பொருட்களோடு வெளியேறவும் அவனை விட்டு சென்று விடுவாளோ என்று மனதில் வேர்விட்ட பதைபதைப்பில் அதுவரை உறைநிலையில் இருந்தவன் அவள் பின்னோடு வேகமாக வந்தான்.

எடுத்து வைத்த அவளது அனைத்து பொருட்களோடு யுவனி பக்கத்து அறைக்குள் செல்ல முனைய, அப்போது தான் அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

அவளது பின்னால் அவன் வருவதை உணர்ந்தவள் அங்கே நின்றபடி, "என்னடா என்னமோ வீட்டை விட்டு போற மாதிரி கிளம்பிட்டு, இங்கேயே டேரா போடுறாளேனு நினைக்காதீங்க."

"உங்க மேல இருக்கற லவ்வுலயோ, இல்ல அக்கறையிலேயோ நான் இங்க இருக்கல. இனிமே நாம ஜஸ்ட் ஹவுஸ்மேட்ஸ்! அவ்ளோ தான்!" என்றவள் பக்கத்து அறைக்கு செல்ல விழைய சரியாக அதேசமயம் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

தேவிகா அப்போது தான் வேலை முடித்து சென்று இருந்ததால் தாளிடாமல் விட்ட கதவு திறந்து உள்ளே வந்தனர் ராஜலட்சுமியும் ஆதிகேசவனும்.

யுவனி பெட்டிகளுடன் நிற்பதைக் கண்டு குழப்பமாக அவர்கள் பார்க்க, "வாங்கம்மா! வாங்கப்பா!" சட்டென வரவேற்றவள் பெட்டிகளை வேகமாக அறைக்குள் வைக்கச் சென்றாள்.

அவளது வரவேற்பில் சுதாரித்த ரகுவும் அவர்களை வரவேற்று அமரச் சொன்னதோடு அவர்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வருவதாகக் கூறி சமையலறைக்கு விரைந்தான்.

பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அறைக்குள் சென்ற யுவனி ஆழ மூச்சிழுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டு புன்னகையுடன் வெளியே வந்தாள்.

அதற்குள் ரகுவும் பழரசத்தோடு வந்துவிட இருவரது நலம் விசாரித்தவர்கள், அருகில் ஒரு விசேஷத்திற்கு சென்றதால் அப்படியே அவர்களையும் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்ததாகக் கூறினர்.

இரவு உணவை சாப்பிடச் சொல்லி ரகுவும் யுவனியும் வற்புறுத்த, "இப்பதான் ரிசப்ஷன்ல சாப்பிட்டுட்டு வர்றோம்டா. நீங்க சாப்டீங்களா?" என கேசவன் கேட்டதும் "ஆச்சுப்பா." வேகமாக பதிலளித்தாள் யுவனி.

சட்டென்ற அவளது பொய்யில் விழித்த ரகு சிரித்து சமாளித்தபடி 'ஆமாஞ்சாமி'போட்டவன் மனதிற்குள் 'அன்னிக்கும் இப்படித்தான் பொய் சொல்லி இருக்கா போல' சமய சந்தர்ப்பம் பாராமல் அந்த சிந்தனை வந்து சென்றது.

ரகுவிடம் ஆதிகேசவன் பணியைப் பற்றி பேசத் தொடங்கிவிட, நைஸாக யுவனியை அழைத்துக் கொண்டு கெஸ்ட் ரூமுக்குள் சென்றார் ராஜலட்சுமி.

"உண்மைய சொல்லு யுவனி. உனக்கும் மாப்பிள்ளைக்கும் எதாவது சண்டையா? அதான் பெட்டிய கட்டி ரெடி ஆகிட்டியா?" வினவிட, யுவனி மௌனம் சாதித்தாள்.

அவளது அமைதியே அவருக்கான பதிலைச் சொல்ல பெருமூச்செறிந்த ராஜலட்சுமி, "எனக்கு எப்பவுமே நிம்மதி நிலைக்காது போல. இத்தனை நாளும் யுவாவை நினைச்சு ஒவ்வொரு நாளும் வேதனைப்பட்டேன்."

"அவனுக்கு ஒரு நல்ல துணை அமைஞ்சு சந்தோஷமா இருக்காங்க. அதேமாதிரி நீயும் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை அமைஞ்சு சந்தோஷமா இருக்கனு நினைச்சு நிம்மதியா இருந்தேன்." வருத்தமாக உரைத்தார்.

" இப்ப என்ன நடந்துடுச்சுனு நீங்க இப்படி எல்லாம் ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க?" அவர் வருந்துவது பொறுக்க முடியாமல் அதை மறைக்க கோபத்தைக் காட்டினாள்.

"நான் சொல்றத மட்டும் மனசுல வைச்சுக்க யுவனி. புருசன் பொண்டாட்டிக்குள்ள என்ன சண்டை வந்தாலும் நாலு சுவத்துக்குள்ள தீர்க்கப் பார்க்கனும். பேசி சரிசெய்ய முடியாத பிரச்சனைனு பெருசா எதுவும் இல்ல."

"மாப்ளையை பார்த்தா கொஞ்சம் ரிசர்வ் டைப் மாதிரி இருக்கு. ஆனா நல்ல மனுசன் தான். என்னோட அனுபவத்துல பார்த்த மனுசங்கள வைச்சு சொல்றேன்." என்றவரை பார்த்து முறைத்தாள் மகள்.

"நீ முறைச்சா மட்டும் அப்படி இல்லனு ஆகாது. நீயே யோசிச்சு பாரு, பெத்தவங்க வளர்த்தறதே எத்தனை பிள்ளைக சோடை போகுது. இவங்க தாயன்பு இல்லாம வளர்ந்த பிள்ளைக. மது எம்மேல அவளோட அம்மா மாதிரி பாசம் காட்டுறா."

"பொண்ணு அவ சட்டுனு வெளியே காட்டுவா. ஆம்பளைங்க அப்படி இல்ல. நீதான் கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. அவர் கோபத்துல ஏதாவது வார்த்தை விட்டாக்கூட நிதானமான பிறகு அவருக்கு புரிய வை." என்றெல்லாம் பக்கம் பக்கமாக அட்வைஸ் மழை பொழிந்தார்.

அதேப்போல ரகுவிடமும் யுவனியின் குணத்தைப் பற்றி எடுத்துரைத்த கேசவன், வெளிப்படையான அறிவுரையாக சொல்லாமல் 'அவளைப் புரிந்து கொள். நீ நினைக்கும் பணக்கார பகட்டுப் பெண்ணல்ல அவள்.' என்று புரிய வைத்தார்.

சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் கிளம்பிவிட, அங்கே பேச்சற்ற அடர்ந்த மௌனம் தொடர்ந்தது. "சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது. நான் சாப்பிடப் போறேன்." என்று யுவனியே அதை கலைத்தாள்.

அவள் டைனிங் டேபிளுக்கு சென்றுவிட, அமைதியாக அங்கு வந்தவனும் உணவை முடிக்கும்வரை, அங்கே பாத்திரங்களின் சத்தம் மட்டுமே ஆட்சி செய்தது.

அதன்பின் "ஐ வான்ட் டூ பி அலோன் ஃபார் சம்டைம்." என்றவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல் அடுத்த அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

அவனுக்கும் சுய அலசல் செய்ய அவகாசம் தேவைப்படவே அவளிடம் எதுவும் மறுப்பு சொல்லவில்லை. அறைக்குள் வந்து படுத்தவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

அவனை காதலிப்பதாகச் சொல்லி பொய்யுரைத்த அவளைப் பழிவாங்க செய்த ஒவ்வொன்றையும்,

'எனக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை' எனுமளவுக்கு இயல்பாக ஏற்றுக் கொண்ட அவளது பாங்கில் மெதுவாக ஈர்க்கப்பட்டு, அவளது அக்கறையான அன்பில் மொத்தமாக அவளில் விழுந்து விட்டான்.

அவனை காதலிப்பதாக அன்று அவள் சொன்னது ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவள் ஒரு கோடீஸ்வரி என்பதையே மறந்து,

அவளுடன் இயல்பாக உரையாடி வந்தவன் ஒரு சரியான தருணம் பார்த்து அவளிடம் தன் மனதை வெளிப்படுத்தக் காத்திருந்தான்.

ஆனால் யுவாவுடன் அவளது உரையாடலைக் கேட்டவனுக்கு தன் சகோதரனின் காதலுக்காக இவனை காதலிப்பதாக பொய் சொல்லி இருக்கிறாள் என்பதை அறிந்து அதை ஜீரணிக்க முடியாமல் திணறினான்.

அவளால் காதல் என்ற பெயரில் தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணியவன், அதற்கு பிள்ளையார்சுழி போட்டதே அவன்தான் என்பதை வசதியாக மறந்து போனான்.

அன்றே அவள் செய்ததை சரியாகச் சொல்லி ஏன் அப்படி செய்தாய்?என்று நேரடியாகவே கேட்டு இருந்தால், இன்று அவனுக்கு இந்த வேதனை கிடையாது. தன்கையால் தன் கண்ணையே குத்திக்கொண்டது போலானது அவன்நிலை.

அதை எல்லாம் மறந்துவிட்டு அவள் அவனை ஏமாற்றி விட்டதாக அவளை குற்றஞ்சாட்டியது மட்டுமில்லாமல் அவளை இழிவாக பேசியதில் யுவனியின் சுயமரியாதையை சீண்டி விட்டான் என்பதை நன்றாக உணர்ந்தான்.

அடுத்து வந்த தினங்களில், அவள் காலையில் தேவிகா வரும்முன்பே எழுந்து வந்து விடுவதால் இருவரும் தனியாக இருக்கும் விசயம் அவருக்கும் தெரியாது. அவர்மூலம் அவளது வீட்டிற்கும் தெரியாதபடி பார்த்துக் கொண்டாள்.

இத்தனை ஆண்டுகளாக தனியறையில் ஒற்றையாக இருந்தவனுக்கு சிறிது நாட்களாய் ஒரே அறையில் அவனுடனிருந்த யுவனி அருகே இல்லாமல் உறக்கம் பிடிக்காமல் நாளுக்கு நாள் மிகவும் தவித்தான்.

கேசவன் யுவனியைப் பற்றி கூறியதை புரிந்து கொண்டவனுக்கு தனது பேச்சு அவளை வெகுவாக கோபப்படுத்தி இருக்கும் என்பதை உணர்ந்து தற்போது அவளை எப்படி சமாதானம் செய்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top