Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 79
- Thread Author
- #1
வீட்டிற்கு வந்த பிறகும் கூட அவளுக்கு மனமே ஆறவில்லை. தங்களது ஃபுட் இன்டஸ்ட்ரீக்கு புதிதாக வாங்கப் போகும் மெஷினரி விசயமாக டீலிங் முடிப்பதற்காக ஜெர்மனி சென்று விட்டாள்.
காதலின் வலியில் யுவா துவண்டு கிடக்கும் இந்த சூழ்நிலையில் அவனை தனித்து விட்டுச் செல்ல அவளுக்கு தயக்கமாகத் தான் இருந்தது.
ஆனால் கடமையின் பொருட்டு போயாக வேண்டிய கட்டாயம். அப்படி இருந்தும் அங்கிருந்த ஒவ்வொரு நாட்களும் அவனுடன் வீடியோ காலில் பேசி அவனுக்கு தைரியம் அளித்த வண்ணம் இருந்தாள்.
இரண்டு நாட்களாக அலைச்சலும், வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டிய முனைப்பும் அவளை அதில் மூழ்கடிக்க அவனிடம் அதிக நேரம் பேச முடியவில்லை.
ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசி வைத்ததோடு சில சமயங்களில் அவசரமாக 'அப்றம் கூப்பிடறேன்' என்று தான் அவளால் சொல்ல முடிந்தது.
அந்த இரு தினங்களில் அவன் இப்படி ஒரு முடிவெடுப்பான் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவே இல்லை. அப்படி என்ன காதலோ!?.
இதற்கு தான் இதெல்லாம் வேண்டாத வேலை என்று அப்போதே அடித்துக் கொண்டேன். இந்த கண்றாவி எல்லாம் எதற்கு இவனுக்கு? சுற்றி இருப்பவர்களை பற்றி மறக்க வைத்து, சுயம் தொலைக்கச் செய்யும் இந்த பாழாய் போன காதல் எல்லாம் இவனுக்கு தேவையா?
காதல் கைகூடவில்லை என்றால் உயிர் வாழ முடியாதா என்ன? ஊரில் எத்தனை பேர் காதல் தோல்வியில் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள் என்றெல்லாம் அவனை திட்டியபடி அவளது சிந்தனை ஓடியது.
'அப்ப இத்தன நாளா சிறு பிள்ளைக்கு பாடம் சொல்வது போல நான் சொன்ன எந்த புத்திமதியும் துளியும் அவன் மரமண்டையில ஏறவே இல்லயா?' என்ற கோபம் அவளுள் பொங்கியது.
வேலை முடிந்து ஜெர்மனியிலிருந்து கிளம்பும் முன்புதான் அவளால் மூச்சைக் கூட சற்று இயல்பாக விட முடிந்தது. உடனே சகோதரனுக்கு அழைத்து விட்டாள்.
அவனது அலைபேசி நீண்டநேரம் எடுக்காமல் இருக்கவும், அப்போதே அவளுக்குள் ஏதோ ஒரு உறுத்தல். அதற்குத்தக்க அழைப்பை ஏற்ற பணியாள் அங்கு நடந்ததைக் கூறி விட்டார்.
மருத்துவமனை சென்றவனுக்கு என்ன ஆனது? என்பது பற்றி அந்த பணியாளுக்கும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.
விமானம் ஏறியதிலிருந்து அடித்துக் கொண்ட மனதோடு தொடர்ந்து ஆதிகேசவன் எண்ணிற்கு முயற்சித்து அவரிடம் வாட்சப் காலில் பேசி, அவனுக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்று தெரிந்த பிறகு தான் அவளது மனதின் படபடப்பு சற்று மட்டுப்பட்டது.
அவனை அடித்து விட்டு வந்துவிட்டாளே தவிர, அந்த சில மணிநேரங்கள் பயணத்தில் அவளை ஆட்டிப்படைத்த அந்த வேதனையும் தவிப்புமாக மிகவும் துவண்டு போய்விட்டாள் யுவர்ணிதா. மூன்று நிமிடங்கள் அவனுக்கு முன்பு பிறந்தவள்.
இருவரும் பிறந்தது என்னவோ இரட்டையர்களாகத் தான். ஆனால் குணங்களில் அப்படியே எதிரெதிர் துருவங்கள். ஒன்றாக பிறந்த இருவரும் எப்படி இம்மாதிரி இருக்கிறார்கள் என்று அவர்களது பெற்றோருக்கே புரியாத விசயம்.
யுவ்ராஜ் மிகவும் மென்மையான இதயம் கொண்டவன். ஃப்ரஜைல். பேசும் சொற்கள் கூட யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்று பேசுபவன்.
ஆனால் யுவர்ணிதா அதற்கு நேரெதிர். மனதில் தோன்றும் எதையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் யாராக இருந்தாலும் பட்டென பேசி விடுவாள், செய்தும் விடுவாள். எந்த சூழ்நிலையையும் அசால்டாக எதிர்கொள்ளும் தைரியமும் துணிச்சலும் அதிகம்.
அப்படிப்பட்டவளுக்கு முதலில் தனது சகோதரன் காதலில் விழுந்ததே ஆச்சர்யம் என்றால், அந்த காதலுக்காக உயிரை விட துணிந்த அவனது தைரியத்தை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
**** **** **** ****
மருத்துவமனையில் மகன் விழித்த பிறகு அவனுக்கு உணவு புகட்டிக் கொண்டிருந்த ராஜலட்சுமியின் எண்ணம் பின்னோக்கி சென்றது. அவர் கருவுற்ற போது இரட்டை பிள்ளைகள் என்றறிந்து பூரித்துப் போயினர் அத்தம்பதியினர்.
ஒற்றை பிள்ளைக்கே தாய்மார்கள் பல அவுகர்யங்களை தாங்கும் போது இருவரையும் சுமக்கும் போது ராஜலட்சுமிக்கு சற்று கடினமாக இருந்தாலும் இரட்டை பிள்ளைகள் என்ற புள்ளியில் அனைத்து வலிகளும் மாயமானது.
பிரசவத்தில் பிள்ளைகள் பிறக்கும் போது "கன்க்ராட்ஸ். யூ அர் ப்ளஸ்ட் வித் ஃப்ரட்டர்னல் ட்வின்ஸ்" என்று மருத்துவர் வாழ்த்த, பெண்ணும் ஆணுமாக இருந்த அந்த இரட்டை பிள்ளைகளால் மேலும் மகிழ்ந்து போயினர்.
இருவரும் வளரும் போது அவர்களின் ஒவ்வொரு செயலையும் ரசித்துப் பார்த்து பூரிப்புடன் வளர்த்த ராஜலட்சுமிக்கு தற்போது மகனது தற்கொலை முயற்சி மனதை வெகுவாக காயப்படுத்தியது.
அவரால் ஜீரணிக்க முடியவில்லை. கண்களைத் துடைத்தபடி அவனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த அன்னையை கண்டதும் யுவராஜிற்கு குற்ற உணர்வாகிப் போனது.
ஏற்கனவே ' நாங்க எல்லாம் உனக்கு முக்கியமே இல்லையா?' என்று அவள் பேசி சென்றதில் இருந்து அவனுள் வேர்விட்ட குற்ற உணர்ச்சி, தற்போது தாயின் கண்ணீரில் வளரத் தொடங்கி விருட்சமாக கிளை பரப்பி அதிகரித்தது.
அதனால் அவரது முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்க முடியாமல் இருந்தவன், "ஸாரிம்மா" தயக்கத்துடன் சொல்ல, அதற்கு பதிலாக கண்ணீர் மட்டும் தான் வந்தது அந்த பாசமிகு தாய்க்கு.
அவர் அமைதியாக இருக்கவும், "ஸாரிம்மா. அது, ஏதோ ஹைப்ல அப்படி பண்ணிட்டேன்." தனது செயலை எண்ணி அவனுக்கே ஒருமாதிரி குற்ற உணர்ச்சியாக இருக்க, தாயின் பேச்சற்ற மௌனம் மேலும் வருத்தியது.
" சாப்பிடு." என்றதோடு சூப்பை ஒரு ஸ்பூனில் எடுத்து அவனது வாயில் வைக்க, அவரது கையைப் பற்றிக் கொண்டவன், "ஐ ஸ்வேர். இனிமே இப்படி பண்ண மாட்டேன். " கழுத்தில் இருவிரலால் பிடித்து கெஞ்சியதும் அவருக்கு மேலும் அழுகை தான் கூடியது.
வளர்ந்து வாலிபனாக இருந்தாலும் தன் கண்முன்னே சிறு பிள்ளை போல் கெஞ்சி நிற்கும் மகனிடம் மீண்டும் அதைப்பற்றி பேசி அவனை வருத்தம் கொள்ளச் செய்யாமல், அதை தவிர்க்க முனைந்தார்.
"இனிமே இந்த மாதிரி பைத்தியகாரத்தனமா எதுவும் செய்யக் கூடாது. அம்மாக்கு ஒரு நிமிசத்துல உயிரே போயிடுச்சு தெரியுமா?" கண்டிப்பான குரலில் கூறினாலும் அவரது கண்கள் கலங்கிய வண்ணம் இருந்தது.
வருத்தமான தாயின் முகத்தைக் கண்டு வருந்தியவன், உடனே சரியென தலையசைத்து அவரது கையைப் பிடித்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் உள்ளே வந்தார் ஆதிகேசவன்.
"ஒருநாள் அப்சர்வேஷன்ல இருந்துட்டு நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணச் சொன்னான் ராஜி. இப்ப தான் பிரபுகிட்ட பேசிட்டு வர்றேன்." என்றவர் பார்வை துளியளவும் மகன் மீது திரும்பவில்லை.
தந்தையின் பாராமுகத்தை கண்டு அவனுக்கு சங்கடமாக இருக்க, "ஸாரிப்பா." மெல்லிய குரலில் அவரிடமும் மன்னிப்பைக் கேட்ட மகனை பாராமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.
ராஜலட்சுமிக்கு நிகரான வலியும் வேதனையும் அவருள் இருக்கிறது. ஆனால் இயல்பாகவே பலாப்பழம் போல் இருக்கும் சராசரி தந்தையாக கோபத்தை மேற்பூச்சாக பூசிக் கொண்டார்.
"ஸாரிப்பா. நான் செய்தது தப்பு தான்ப்பா. மன்னிச்சுடுங்க ப்ளீஸ்!" என்று அவன் கெஞ்ச, கை முஷ்டியை இறுக்கியபடி அமைதியாக இருந்தார்.
'ஏற்கனவே மனம் நொந்து இருப்பவனை மேலும் காயப்படுத்த வேண்டாமே! ' எனும்விதமாக ராஜலட்சுமி கணவனிடம் கெஞ்சலாக கண்களைச் சுருக்கி மன்னிக்குமாறு சமிக்ஞை செய்தார்.
"ப்ளீஸ்ப்பா. எங்கிட்ட பேசுங்க." மீண்டும் மகன் கேட்க, மனைவியின் விழிமொழியை உணர்ந்து, அலுப்பாக தலையசைத்து சற்று இறங்கி வந்தார்.
"உன் இஷ்டத்துக்கு என்ன வேணும்னா செய்வ. எல்லாத்தையும் மறந்துட்டு நாங்க அப்படியே உன்னை கொஞ்சனும் அப்படிதானே?"அவரது கேள்வியில் தலைகுனிந்தான் மகன்.
பெருமூச்சுடன் மகனைக் கண்டவர், "இனிமே இப்படி கவர்ட் மாதிரி முடிவெடுக்காம எதுவானாலும் தைரியமா ஃபேஸ் பண்ணி பழகு." என்றதோடு வெளியேறி விட்டார்.
ஆதிகேசவன் வெளியே சென்றதும், வருத்தமாக அவர் சென்றதையே பார்த்திருந்த மகனிடம்," ஏன்டா கண்ணா இப்படி செய்த? தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு உனக்கு அப்படி என்ன பிரச்சினை?!" அதுவரை தனக்குள் முரண்டிய கேள்வியைக் கேட்டார் ராஜலட்சுமி.
தனது இரட்டையிடம் மட்டும் பகிர்ந்து கொண்ட தனது காதல் விசயத்தைப் பற்றி திடுமென எப்படி தாயிடம் தொடங்குவது என்ற பெரும் தயக்கத்துடன், "அது வந்தும்மா," என ஆரம்பித்தான்.