• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
97
பகுதி - 19

"எனக்கு இன்னிக்கு லன்ச் சமைக்க வேணாம். அதனால காலையில ப்ரேக்ஃபாஸ்ட் மட்டும் செய்தா போதும்." சொன்ன ரகு தங்களது அறைக்கு திரும்ப,

அவனை பின்தொடர்ந்து வந்த யுவனி, "இதை நேத்து நைட்டே ஏன் என்ட்ட சொல்லலை? அவங்க என்ன நினைப்பாங்க?" என்ற கேள்வியோடு முறைத்தபடி நின்றிருந்தாள்.

சமையலுக்கு அமர்த்தப்பட்ட தேவிம்மாவிடம் வந்து சொன்னவன், முதல்நாள் இரவு தன்னிடம் கூறியிருந்தால் அவளே அவரிடம் சொல்லி இருப்பாளே.

இப்போது கணவனின் தேவை கூட அவளுக்கு தெரியவில்லையென அவர் எதாவது நினைப்பாரே என்ற சங்கடத்தில் அவனது பின்னோடே வந்து சண்டைக்கு நின்றாள் யுவனி.

"யாராவது எதாவது நினைக்கறத பற்றி எல்லாம் ரொம்ப கவலைபட்ற ஆளுதான் பாரு நீ. சும்மா போம்மா அங்குட்டு, காலங்காத்தால காமெடி பண்ணிகிட்டு." அவன் அசால்டாக அவளை விலக்கி விட்டுச் செல்ல, வேகமாக அவனுக்கு முன்வந்து நின்றாள்.

"பேச்சை டைவர்ட் பண்ணாதீங்க புருசரே. எங்கிட்ட சொல்லி இருந்தா, நானே சொல்லி இருப்பேன்ல, ஏன் சொல்லலை?" அவள் மீண்டும் அதிலேயே வந்து நின்றாள்.

"அய்யே!! முதல்ல அப்படி கூப்டுறத நிப்பாட்டு. கேட்க சகிக்கல." அவளது கேள்விக்கு பதிலளிக்காமல் அவள் அழைப்பைப் பற்றி அவன் விமர்சனம் செய்ய,

"அப்ப ஒழுங்கா நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க புருசரே." அவளது இதழ்கடையில் சிரிப்போடு மீண்டும் அவ்வாறே இழுத்து அழைத்தாள்.

"ஷ்ஷப்பா! உன்னோட பெரிய ரோதனையா போச்சு. க்ராண்ட் ஹோட்டல்ல இன்னிக்கு ஒரு க்ளைன்ட் மீட் பண்ண வேண்டியது இருக்கு."

"எனக்கே காலையில தான் அந்த விசயம் ஞாபகம் வந்தது. போதுமா? இப்ப நீங்க உங்க கம்பெனி வேலைய பார்க்கப் போங்க பொண்டாட்டி." அலுப்புடன் பதிலளித்து அவளைப் போலவே கேலி செய்தான்.

அதைக்கேட்ட யுவனிக்கு ஜிவ்வென்ற உணர்வு தாக்க சில நொடிகள் அமைதியானவள் அவன் சொன்ன விசயம் புரிந்து இடுப்பில் கைவைத்து நின்று அவனை தீவிரமாக முறைத்தாள்.

"ஹோட்டல்ல சாப்பிட்டு அன்னிக்கு அவதிபட்டது எல்லாம் ஸாருக்கு அதுக்குள்ள மறந்துடுச்சா? மீட்டிங் முடிச்சுட்டு வந்து வீட்ல சாப்டா என்னவாம்?" அதே முறைப்போடு வினவினாள்.

அவள் கேட்டதும் அன்றைய தினம் அவனது நினைவிலாட அதை நினைத்து முகம் கனிந்தவன் "கடவுளே! இப்ப உனக்கு என்ன பிரச்சினை? நான் வீட்டுக்கு வந்து சாப்பிடனும் அதானே?" சலிப்பாக கேட்டவனிடம் ஆமென்று தலையசைத்தாள் அவள்.

" சரி வர்றேன். போதுமா? இப்ப என்னைய கிளம்ப விடுறியா?" என்றபடி இவளிடம் பேசினால் வேலைக்காகாது என்று அவளை தள்ளிநிறுத்தி விட்டு அறைக்குள் சென்றான்.

அவனது நினைவுகள் பின்னோக்கி பயணித்து ஒரு மாதத்திற்கு முன்பு யுவனி சொன்ன அந்த தினத்தில் வந்து நிலைத்தது.

°°°°°°°°°°°°

யுவனியிடம் சண்டையிட்டு வீம்பிற்காக வெளி உணவை சாப்பிட்டு அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, யுவனி சுத்தம் செய்ததை கண்டு திகைத்தவன் தன் உணர்வுகளை அவளுக்கு காட்டாமல் கலங்கிய விழிகளுடன் படுத்துக் கொண்டான்.

அவனது மனம் மிகவும் கலங்கி இருந்தது. பள்ளி படிக்கும்போது நண்பர்களுடன் இம்மாதிரி வெளி உணவை ஆசையில் உண்டுவந்து அவதியுற்ற நேரத்தில் அவனது தாய் காஞ்சனா உயிரோடு இருந்தபோது கண்ணும் கருத்துமாக பேணினார்.

அவரது மறைவிற்குப் பிறகு கல்லூரி காலங்களில் நண்பர்கள்
வற்புறுத்தலால் அந்த வயதிற்கே உண்டான தைரியத்தில் மீண்டும் அதைப்போல உணவை சாப்பிட்டு அவனுக்கு வயிற்று வலியும் வாந்தியும் வந்தபோது அருகில் யாருமின்றி தாயை இழந்த பிள்ளை தனியாக அவதியுற்றான்.

அவனுக்கும் மதுவிற்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசத்தில் அவளுக்கு தன் சகோதரன் மீது அளவு கடந்த பாசம் இருந்தாலும் எப்போதும் அவனை மதிப்போடு பார்ப்பதுடன் அவனிடமிருந்து விலகி இருந்துவிட,

அவனுக்கென இருந்த அறையில் தனியாக இருந்தவன் உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட சோர்வாக இருந்தாலும் சிரமத்துடன் சமாளித்துக் கொண்டிருப்பான்.

ஜெயந்தி அவனை கவனித்துக் கொண்டார்தான் இல்லையென சொல்வதற்கில்லை. ஆனால் உடல்நிலை சரியில்லை என்றால் அதற்கான மருந்துகளை நேரத்திற்கு கொடுப்பதோடு,'வேற எதாவது வேணும்னா சொல்லு ரகு' என்று முடித்து விடுவார்.

தாய் உயிருடன் இருந்திருந்தால் தன் பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் உடல்நிலை சரியில்லாமல் போனால் பதைபதைப்புடன் காட்டும் பாசமும் பரிவுடன் தலைகோதும் விரல்களும் இல்லாமல் எத்தனையோ முறை ஏங்கி இருக்கிறான்.

இம்மாதிரி சூழ்நிலையில்' என்னால முடியல, கொஞ்சம் ஓய்வு கொடு' என மன்றாடும் உடலோடு சிரமத்துடன் அத்தனையும் அவனே பார்த்துக் கொள்வான்.

ஆனால் இன்று, அவன் யோசித்த வேளையில் மீண்டும் வாந்தி வருவது போலிருக்க வேகமாக எழுந்து பாத்ரூமிற்கு விரைந்தான். அவனை எண்ணி கவலையில் உறங்காமல் இருந்த யுவனியும் பின்னோடே சென்றாள்.

அவசரத்தில் அவன் கதவை வெறுமனே சாத்தியிருக்க, அவனது பின்னால் வந்தவள் விரைந்து வந்து அவனது நெற்றியை அழுத்திப்பற்ற, அந்த நொடியில் அத்தனை இதமாக உணர்ந்தான்.

ஆனாலும் அவள்முன் அப்படி இருக்க மனமில்லாமல் அவளது கையை அவன் தட்டிவிட முயற்சிக்க அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எக்களித்துக் கொண்டிருக்கும் அவனிற்காக கவலையுடன் அவனது தலையை பற்றியபடி நின்றிருந்தாள்.

அவளது உடல்நிலை சரியில்லாத சமயங்களில் அவள் வேண்டாமென மறுத்தாலும் அவளது அறையில் துணைக்கு இருக்கும் ராஜலட்சுமி அவளை கவனிக்கும் போதெல்லாம் இதே போலொரு நெகிழ்வுடன் தான் அவளும் இருப்பாள்.

ஒருவழியாக முடித்து தன்னை சுத்தம் செய்து வந்தவன் அவளுக்கு தொல்லையாக இருக்குமே என்ற எண்ணத்தில், "ஸாரி! என்னால உனக்கு டிஸ்டர்ப்ஆ இருக்கும். நான் அந்த ரூம்ல போய் படுத்துக்கறேன்." என்றிட,

அவள் மனதில் முகிழ்ந்து மணம் வீசத் துவங்கிய அவன் மீதான நேசத்தை உணர்ந்திருந்த யுவனி, "அப்படினு நான் சொன்னேனா? கொஞ்சம் நேரம் உட்காருங்க. இதோ வர்றேன்." என்றபடி வெளியே சென்றாள்.

சற்று நேரத்தில் உள்ளே வந்தவள் தனது கைப்பையிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து வந்து அவனிடம் நீட்ட, புரியாமல் பார்த்தான் அவன்.

"இப்ப தான் டாக்டர் அங்கிள்ட்ட பேசினேன். அவர் இந்த டேப்லட் போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுத்தாலே போதும்னு சொன்னாரு. ஒருநாள் எதுவும் சாப்பிட வேணாமாம்." என்றவள் அவன் அதை உண்டபிறகே தானும் படுத்தாள்.

தூக்கத்தை கெடுத்து விட்டதற்காக சிறு முகச்சுளிப்பின்றி அவனுக்கான அவளது இத்தனை மெனக்கெடல் அவனுள் சுகமாய் இறங்கி அவன் மனதை மேலும் அவள்பால் ஈர்க்க, நிம்மதி விரவிய மனதுடன் "தேங்க்ஸ்!" உணர்ந்து கூறினான்.

அவள் அதை கண்டு கொள்ளாமல் தைலத்தை அவனது நெற்றியில் தேய்த்து விட்டு, " லெஃப்ட்ல சரிஞ்சு படுங்க. அப்பதான் மறுபடியும் வாமிட் வராம இருக்கும்."கூறிவிட்டு தனது இடத்தில் படுத்துக் கொண்டாள்.

மாத்திரை போட்ட பிறகும் மீண்டும் இருமுறை அவன் எழுந்து ஓட, சளைக்காமல் அவளும் சென்று அவனது தலையைத் தாங்க, அவளை தொல்லை செய்வதாக அவனுக்குத் தான் சங்கடமாக இருந்தது.

அவன் அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த,"இனியொரு முறை இதையே சொன்னீங்க, அப்றம் முதல்நாள் சாப்பிட்ட கார பிரியாணியை செய்து சாப்பிட வைச்சுடுவேன். ஜாக்ரதை!" என்று மிரட்ட, ஏனோ அவனுக்கு அந்த சோர்வில் கூட மெலிதாக சிரிப்பு வந்தது.

வாமிட் எடுத்து சோர்ந்து போய் படுத்தவன் எதையோ சொல்ல நினைப்பதை உணர்ந்தவள் என்னவென்று கேட்க," உன் கையை மட்டும் பிடிச்சிட்டு தூங்கவா?" பாவமாகக் கேட்க உருகிப் போனாள் பாவை.

அவனைப் பார்க்கும்படி படுத்தவள் தனது ஒருகையை அவனுக்கு நீட்ட அதை இதமாக தன் கழுத்தில் வைத்து தூங்கியவனுக்கு தன் அன்னையின் நினைவு வந்து போனது.

அவனது உணர்வை புரிந்து கொண்டவள் மறுகையால் அவனது சிகையை கோதிவிட இதமாக அதை உள்வாங்கியவன் அப்படியே உறங்கிப் போனான்.

மறுநாள் முதலில் கண்விழித்த யுவனி தனது தோளை அசைக்க முடியாமல் ஏதோ அழுத்துவது போலிருக்க, வேறு என்னவாக இருக்கப் போகிறது! அவன்தான்.

தூக்கத்தில் உடல் அசதியில் கையைப் பற்றி தூங்கியவன் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டு மண்ணில் தலையை புதைத்து எதிரியிடம் தப்பிக்க முயற்சிக்கும் ஆஸ்ட்ரிச் போல அவளது தோள் வளைவில் வாகாக புதைந்திருந்தான்.

அவனது வெப்ப மூச்சுக்காற்றில் சற்று தடுமாறியவள், மெதுவாக அவனிடமிருந்து விலகிக் கொண்ட பிறகுதான் அவளுக்கு இயல்பாக மூச்சே வந்தது.

அன்றைய தினம் முழுவதும் அவனது உடலை நீரேற்றமாக வைக்க இளநீர், உப்பு சக்கரை கலந்த நீர் என நீராகாரம் மட்டுமே கொடுக்க ஒருவழியாக தேறி வந்தான்.

அதன்பிறகு இருவருக்கும் இடையே இணக்கம் கூடிப்போக, இருவரும் ஒருமனதாக சமையலுக்கு ஆளை அமர்த்த முடிவு செய்து, அதற்காக அவளது தாய்வீட்டில் வெகு காலமாக வேலை செய்த தேவிகா என்பவரை அனுப்பி இருந்தார் ராஜலட்சுமி.

அதன்பின் இந்த ஒருமாத காலமாக எந்தவித வாக்குவாதங்களும், சண்டைகளும் இல்லாமல் இருவருக்கும் இடையே சுமூகமான அக்கறையுடன் கூடிய உரிமை கண்ணுக்கு புலப்படாத நூலிழையாக ஓடிக் கொண்டிருக்க, அதை ஊசலாட வைக்கவே வந்தது அந்நிகழ்வு.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top