• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
93
பகுதி - 16

காலையிலேயே ஏதோ மூக்கை துளைக்கும் வாசனை வந்து அவனது நாசியை அடைத்ததில் தூக்கம் கலைந்த ரகுவம்சி, 'மீண்டும்.. மீண்டுமா?' கண்கள் மூடியவாறே சலித்துக் கொண்டான்.

ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர, போர் நடந்து முடிந்த போர்க்களம் போல இருந்தது சமையலறை.

அங்கே கையில் கரண்டியுடன் நின்றிருந்த யுவனி வெற்றியுடன் நிற்கிறாளா இல்ல இவனுக்கான வினையுடன் நிற்கிறாளா என்பது அவளுக்கே வெளிச்சம்.

" என்ன செய்து வைச்சு இருக்க? " வேகமாக வந்த ரகு சற்று கோபமாக கேட்க, அவனை திரும்பி அசால்டாக பார்த்த யுவனி, " பார்த்தா தெர்ல. உங்களுக்கு தான் தோசை ஊத்தி வைச்சுட்டு இருக்கேன் புருசரே." படு நக்கலாக பதிலளித்தாள்.

மேடையை எட்டி பார்த்த ரகு, 'என்ன ஒன்னையுமே காணல?!' என்ற ரீதியில் யோசிக்க சற்று தள்ளி பீங்கான் தட்டில் குங்ஃபூ சிம்பளில் தோசைகள் கொலை செய்யப்பட்டு கிடந்தன.

'ஆத்தி!! இன்னிக்கு இதைத்தான் தோசைனு திங்கச் சொல்லப் போறாளா!!?' திகைத்தவனிடம், 'ப்ளீஸ் என்னை விட்டுட்டேன். நான் பசிக்குது சொல்லவே மாட்டேன்' என்று கெஞ்சி இரைந்தது அவனது வயிறு.

கடந்த ஒரு வாரமாக அவளுடன் இதே அக்கப்போர் தான். தயவு செய்து எதுவும் சமைக்காதே என்று அவனும் கிட்டத்தட்ட மன்றாடி விட்டான்.

திருமணமான மறுநாளே அவன் வீம்பில் விட்ட வார்த்தைகளுக்கான பலனை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். பையனுக்கு வாயில் தான் ஏழரை சிம்மாசனம் போட்டிருக்கிறது போல.

யுவாவும் மதுராவும் தேனிலவு பயணம் சென்றிருக்க, இவர்களையும் சென்றுவரச் சொன்னார் ஆதிகேசவன். ஆனால் இருவருமே இப்போது வேண்டாம் என மறுத்துவிட யுவா செல்லத் தயங்கினான்.

தன்னால்தான் அவளுக்கு பிடிக்காத வாழ்க்கையில் இணைந்து விட்டாளோ என வருந்தியவனுக்கு தனது மனநிலையை புரிய வைத்து கடைசியில் திட்டி மிரட்டி அனுப்பி வைத்தாள் யுவனி.

மறுவீட்டிற்கு அழைத்து வரப்பட்ட யுவனி புதிதாக ஒரு இடத்தில் வந்து நிற்பதில் குழப்பமாக பார்க்க, " என்ன மேடம் பார்க்கறீங்க? இனிமே இதான் நீங்க வாழப் போற வீடு மிஸஸ் ரகுவம்சி." உள்ளடங்கிய சிரிப்புடன் கூறினான் ரகு.

யுவனி அன்று பார்த்த வீடுதான் இவனுடைய வீடு என்றெண்ணி இருந்தாள். திடீரென இங்கே அழைத்து வரவும் குழம்பி விட்டாள். ரகு சொன்னதும் தோள்களை குலுக்கி இயல்பாக அவள் ஏற்றுக் கொண்டதில் அவனுக்குத் தான் புஸ்ஸென்றானது.

ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்து வந்த ஜெயந்தி, "இது இவனோட சம்பாத்தியத்தில வாங்கினதுடா. புதுசா கல்யாணம் ஆனவங்க நீங்க, உங்களுக்கும் கொஞ்சம் ப்ரைவஸி வேணும்ல."

"அதெல்லாம் வேணாம் அங்கதான் இருப்பேன்னு சொன்னவனை நாந்தான் அதட்டி உருட்டி இங்க கொண்டு வந்து தள்ளிட்டேன். இனி உன் சமர்த்து மருமகளே!" கண்கள் சிமிட்டி ரகசியமாக சொன்னவரை யுவனிக்கு மிகவும் பிடித்துவிட்டது.

ஜெயந்தியின் ஏற்பாடுதான் இது. தேவநாதன் மட்டும் எங்கே அவன் தன் கைமீறிப் போய்விடுவானோ என்று தயங்க, யுவனி அவனுடன் சந்தோஷமாக வாழ்ந்தால் தானே அவரது கனவு நிலைக்கும் எனக் கூறி சமாளித்து விட்டார்.

அவளது தந்தையும் சிறிது காலத்திற்கு கம்பெனியை தானே பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, 'கணவனுடன் மகிழ்ச்சியாக இரு.' என்றிட, அவளது தாய்க்கு சண்டை சச்சரவின்றி மகள் சந்தோஷமாக குடித்தனம் நடத்தினால் போதும் என்றிருந்தது.

சிறிது நேரத்தில் அவர்களும் சென்றுவிட, சமைத்து விட்டு செல்கிறேன் என்றவரை வேண்டாமென வலுக்கட்டாயமாக கூறி அனுப்பி விட்டான். மனைவியை சமைக்க வைக்கும் திட்டம்.

அவளிடம் வந்து மதிய சமையலை செய்யச் சொன்னவனை ஏதோ விசித்திரப் பிராணி போல பார்த்தாள் மனையாள்.

அவளது பார்வையை உணர்ந்து, "என்னை லவ் பண்ணி கல்யாணம் செய்து இருக்கீங்க மேடம். மிடில் கிளாஸ் லைஃப் ஸ்டைல்ல தானே இனி நீங்க வாழ்ந்தாகனும்." ரகு கேலியாகச் சொல்ல,

'ஷ்ஷப்பா! லூசா இருப்பான் போல. வில்லத்தனம் காட்டுறானாம்.' என்று தலையிலடித்துக் கொள்ளலாம் போலிருந்தது அவளுக்கு.

"நிறைய சினிமா பார்ப்பீங்களா ரகு? சகிக்கலை." கண்களை சுழட்டி அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு கோபமேற,

"ஹேய்! ஒழுங்கா மரியாதையா பேசு. இனிமே எல்லா நேர சமையலும் நீதான் செய்யனும். எனக்கு கடை சாப்பாடெல்லாம் ஒத்துக்காது. அதனால போய் இப்ப ஆக வேண்டிய வேலைய பாரு." என்று இரைந்தான்.

அவனை அசையாமல் பார்த்தவள், மையமாக தலையசைத்து விட்டு கிட்சனுக்கு சென்று விட, அவனது முகத்தில் வெற்றிப் புன்னகை தோன்றியது.

'பொய் சொல்லி சபையில என் பேரை கெடுத்ததும் இல்லாம அதான் உண்மைங்கற மாதிரி மாத்திட்டல, உனக்கு இன்னமும் நிறைய இருக்குடி.' மனதிற்குள் கருவியவன் வசதியாக அவன் சொன்ன பொய்யை மட்டும் மறந்து விட்டான்.

யுவனி தண்ணீரைப் போன்றவள். இருக்கும் இடத்திற்கு தக்க தன்னை மாற்றிக் கொள்பவள். கான்பூரில் படிக்கச் சென்றபோது, அவளது தந்தை தனியாக வீடு எடுத்து தங்கச் சொன்னதை தவிர்த்து ஹாஸ்டலில் தங்கிப் பயின்றவள்.

எல்லா சூழலிலும் தன்னை பொருத்திக் கொள்வாள். பெரிய பங்களாவில் மட்டும் தான் வாழ முடியும் என்றில்லை. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் எந்த இடமும் அவளுக்கு ஓகேதான்.

அவன் செய்வதைக் கண்டு அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. அவளுக்கு வேலையை கொடுத்து விட்டு படுக்கையறை சென்றவன் தனது மடிக்கணினியில் மூழ்கிவிட,

இரு படுக்கையறைகள், சமையலறை மற்றும் சிறிய பால்கனி கொண்ட அந்த வீட்டை முதலில் சுற்றிப் பார்த்தவள் பிறகு கிட்சனுக்கு சென்றாள்.

சமையலறையில் ஸ்டவ் மற்றும் சமைக்கத் தேவையான பாத்திரங்களோடு, அருகே இருந்த செல்ஃபில் மளிகை சாமான்களும் நிரப்பப்பட்டு இருக்க, வேலையை தொடங்கி விட்டாள்.

சிறிது நேரத்தில் யுவனி சமையலை முடித்து ரகு இருந்த அறைக்கதவை தட்ட, என்னவென்று கேட்டபடி வெளியே வந்தவனிடம், "சாப்பாடு ரெடி ஆகிடுச்சுங்க புருசரே." என்றிட, 'ஞே'வென்று விழித்து நின்றான் ரகு.

"கம் அகைன்" என்றவனை மீண்டும் அவ்வாறே அவள் அழைக்க, முகத்தை அஷ்டகோணலாக்கிய ரகு, "தாயே. பேர் சொல்லியே கூப்டுட்டு போ. அதுக்காக இவ்ளோஓஓ மரியாதை வேணாம்." என்றான் வேகமாக.

"அதெப்படிங்க புருசரே, நீங்க முதல்முறையா என்கிட்ட ஒரு விசயம் கேட்டு நான் செய்யாம இருந்தா அது நல்லார்க்குமா?" என்றவளிடம்,

"நீ செய்யவே வேணாம். நாந்தான் இப்ப சொல்றேன்ல இனிமே இதை செய்." கையெடுத்துக் கும்பிட்டு இயல்பாகவே அழைக்கச் சொன்னவன், 'அது!' புன்னகையுடன் நின்ற யுவனியை தாண்டி கிட்சனுக்கு சென்றான் அங்கே இருக்கும் அபாயம் அறியாமல்.

டைனிங் டேபிளுக்கு வந்த ரகு சாப்பிட அமர்ந்து விட, தட்டை வைத்து ரத்த சிவப்பில் ஒரு வஸ்துவை அதில் வைத்தாள் மனையாட்டி. அதில் முழித்த ரகு, "என்னாது இது!?" எனக் கேட்டான்.

" வெஜ் பிரயாணி." அவளது பதிலைக் கேட்டு பிரயாணி எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும் போல. ரகு பேய்முழி முழித்து எச்சில் கூட்டி விழுங்கினான்.

யோசனை வந்தவன் போல திடீரென பிரகாசமானவன், " நீ சாப்டியா?" வெகு அக்கறையாக கேட்க, சாப்பிட்டு விட்டதாக அவள் பெரிதாக தலையசைத்தாள்.

அவளே சாப்பிட்டு இருக்கிறாள் என்றால் ஒருவேளை நன்றாக இருக்குமோ?! என்ற நம்பிக்கை வர அசால்டாக எடுத்து வாயில் வைத்தவனுக்கு, அவசரத்தில் ஃபயர் சர்வீஸ் நம்பர் கூட மறந்து விட்டது.

பிரியாணி என்ற பெயரில் அவள் வைத்த வஸ்துவால் பற்ற வைத்த நெருப்பு நாக்கின் சுவைநாளங்களில் பற்றியெரிய ஓடிச்சென்று அப்படியே துப்பிவிட்டு,

நான்கு முறை நாக்கை சுத்தம் செய்தும் காரம் அடங்கவில்லை. ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ்கட்டியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு ஆசுவாசப்பட்டு வந்த ரகு, "இருந்த மெளகா பொடி எல்லாம் தீர்த்துட்டியா? ஆமா இதை எப்படி நீ சாப்ட?!" பெருத்த ஆச்சர்யத்துடன் கேட்டான்.

"ச்சே ச்சே! எனக்கு ஃபுட் ஆர்டர் பண்ணி சாப்டேன். உங்களுக்கு தான் கடை சாப்பாடு ஒத்துக்காதுனு சொன்னீங்கள்ல புருசரே, அதான் உங்களுக்காக நானே சமைச்சேன்." பெருமிதத்துடன் கூறினாள் அவள்.

"அப்ப உனக்கு சமைக்க தெரியாதா?" என்றவனிடம் இல்லையென அவள் தலையசைக்க, " ஃபுட் டெக்னாலஜி படிச்சு இருக்க, அந்த ஃபுட் எப்படி சமைக்கனும்னு கூட தெரியாதா? " காட்டமாகக் கேட்டான் ரகு.

அவனை முறைத்தவள்," அதுல ஃபுட் ந்யூட்ரிஷியன்ஸ், அது உடம்புக்கு எந்தளவுக்கு தேவைப்படும்னு தான் சொல்லித் தருவாங்க. கேட்டரிங் படிச்சா தான் சமைக்க கத்துக் கொடுப்பாங்க. இதுகூட உங்களுக்கு தெரியாதா புருசரே?"

"கடை சாப்பாடு ஒத்துக்காதுனு சொன்னீங்களேனு நானே கஷ்டப்பட்டு சமைச்சா, அதுல குத்தம் குறை சொல்லிட்டு இருக்கீங்க." போலியாக வருந்தியவளைக் கண்டு தலையிலடித்துக் கொண்டான் ரகு.

அவனது வார்த்தையை கொண்டு அவனையே மடக்கி விட்டாளென்று உள்ளுக்குள் குமைந்தவன் இனி வெளியிலும் சாப்பிட முடியாது. தலையெழுத்தே என அதை குப்பையில் கொட்டப் போனான்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top