• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
78
மனம் முழுவதும் படபடப்புடன் அந்த சில படிகளை ஏறுவதற்குள் அவளது இதயத் துடிப்பு ஏகத்திற்கும் எகிறி அவளது செவிகளில் கேட்கும் அளவிற்கு சத்தமாக துடித்தது.

"ரிலாக்ஸ். ஒன்னுமில்ல. எதுனாலும் ஃபேஸ் பண்ணு." தனக்குள்ளேயே தைரியம் சொன்னபடி, மூச்சை நன்கு இழுத்து விட்டு ஒருவழியாக தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அந்த அறை வாயிலை அடைந்தவள் மெதுவாக கதவைத் தட்டினாள்.

"யா. கெட் இன்." கம்பீரமான அந்த குரலைக் கேட்டு உள்ளுக்குள் சிறு நடுக்கம் தான் இருப்பினும் அதை கண்களில் காட்டாமல் மறைத்தவள், மெல்ல கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.

கதவு திறந்த சத்தத்தில் அதுவரை பால்கனியின் முழு கண்ணாடிக் கதவை ஒட்டி நின்று தன் பார்வையை தொலைதூர புள்ளி வெளிச்சத்தில் நிலைக்கவிட்டு இருந்தவன் திரும்பி வாயிலைப் பார்த்தான்.

வெள்ளை வெளேர் என்ற குர்தாவும் இலகுவான பலாஸோ பேன்ட்டும் அணிந்து கழுத்தில் புதுமஞ்சள் தாலி மின்ன, தும்பைப்பூ போல வந்து நின்றவளின் மீது உச்சி முதல் பாதம் வரை தனது லேசர் பார்வையை வீசிட, அவனை நிமிர்ந்து பாராமலே அதன் தாக்கத்தை உணர்ந்தாள் அவள்.

'வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி!' கவிஞர் வைரமுத்துவின் வரிகள் உண்மை என்பதை அவள் உணர்ந்த அந்த தருணத்தில்,

நிதானமாக அவளை நெருங்கி வந்தவன் அவள் மீதிருந்த ஆழமான பார்வையை அகற்றாமல், " நாட் பேட்." மேலிருந்து கீழாக ரசனையான பார்வையிட்டு, "ஆரம்பிக்கலாமா?" பின்னங்கழுத்தை இடதுகையால் வருடியபடி கேட்க, அந்த கேள்வியில் அவளுள் சர்வமும் ஆட்டம் கண்டது.

அதுவரை அவனை நிமிர்ந்து பாராமலே அத்தனையும் உணர்ந்து கொண்டிருந்தவள், அவனது பேச்சில் திகைத்து கண்களில் டன்கணக்கில் கலவரம் பொங்க, விழி விரிய எச்சில் கூட்டி விழுங்கி அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

**** **** **** ****

அரண்மனை போல பிரமாண்டமான அந்த பங்களாவை 'என்னைத் தாண்டி எதுவும் பார்க்க முடியாது' என்பதைப் போல மறைத்து நின்ற ராட்சத கதவின் வடிவமைப்பே அந்த பங்களாவின் செழுமையை காட்டியது.

அதைத்தாண்டி உள்ளே சென்றால் பெரிய தோட்டமும் அதன் நடுவே வளைந்து செல்லும் பாதையும் அந்த பங்களாவின் பெரிய போர்டிகோவில் சென்று முடிந்தது.

அந்த வீட்டின் பால்கனி போல இருக்கும் முகப்பில் பச்சை பசேல் என இடையிடையே வண்ண பூக்களோடு பெயர் தெரியாத செடிகள் சரங்களாக தொங்க அந்த பங்களாவின் முகப்பை மிக பிரமாண்டமாகக் காட்டியது.

அதன் நுழைவாயிலே அட்டகாசமாக இருக்க, உள்ளே நுழைந்தால் வீட்டின் இடப்புறம் வடிவமைக்கப்பட்டிருந்த சமையலறையே ஒரு படுக்கையறை வீட்டைப் போல இருந்ததோடு,

அந்த இடத்தை காண்போரின் கவனத்தை சில நொடிகள் வரை அகற்றாதவாறு அதன் இன்டீரியர் கட்டிப்போடுவதாக தோன்றியது.

வலப்புறம் இருபது ஆட்கள் ஒன்றாக சுவாதீனமாக அமரக்கூடிய அளவில் வெண்ணிற ஸோஃபாக்கள் சதுர வடிவில் போடப்பட்டிக்க, அதன் எதிர்ப்புறத்தில் முதுகெலும்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் பக்கவாட்டு நீட்சிகள் வடிவில் படிக்கட்டுகள்.

படிக்கட்டுகளிலேறி மேலே செல்ல, வேலைப்பாடு நிறைந்த பெரிய கதவு வரவேற்றது. அக்கதவை திறந்தால் 'அடேங்கப்பா!!' என வியக்கும் அளவில் உள்ளே சகல வசதிகளும் நிறைந்து அட்டகாசமான இன்டீரியர் வேலைப்பாடுகள் கண்களை நிறைக்க,

அந்த அறையின் பெரும்பகுதியை ஐந்து பேர் அசால்டாக படுக்குமளவு மாடர்ன் டிசைன் கட்டில் ஆக்கிரமித்து இருந்தது. ஆனால் அதில் ஒருவன் மட்டுமே ஒரு ஓரமாக கால்களை அகட்டி படுத்திருந்தான்.

கட்டுக்கோப்பான உடலழகோடு, லேசாக அழுத்தி பிடித்தாலே சிவந்து விடும் நிறத்தில் இருந்தவனது முகம் தற்சமயம் வெளிறிப் போயிருக்க, நேர்த்தியாக வெட்டப்பட்ட தலைமுடி கலைந்து கிடந்தது.

இல்லையேல், 'ச்சோ க்யூட்!' என காணும் இளம்பெண்கள் மனதிற்குள் அவனது கன்னங்கிள்ளி கொஞ்சத் தோன்றும் 'சாக்லேட் பாய்'ஆக எப்போதும் இருப்பவன் இப்போதும் அப்படியே இருந்திருப்பான்.

உறக்கத்தில் இருப்பவனைப் போல கண்கள் மூடிக் கிடந்தவனது வலதுகை, கட்டிலுக்கு வெளியே நீட்டி இருக்க, அதனடியில் அடர்சிவப்பு திரவம் சிறிதாய் குளம் கட்டி, அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தது.

அவனது வலக்கை மணிக்கட்டில் புதிதாக ஏற்பட்ட கீற்றாய் தெரிந்த வெட்டிலிருந்து துளிதுளியாய் சீராக அந்த ஊற்று கீழே வடிந்து கொண்டிருக்க,

"லவ் யூ ஹனி. ஐ மிஸ் யூ பேட்லி. ஐ கான்ட் பேர் திஸ் பெய்ன்." குழறலான சொற்களில் மற்றொரு கையால் இதயப்பகுதியை நீவியபடி மெதுவாக முணங்கிக் கொண்டிருந்தான்.

கடந்த இருபது நாட்களாக கதவை அடைத்துக் கொண்டு சிறையில் அடைப்பட்டது போல இருக்கும் மகன், தற்போது இரு நாட்களாக உணவு கூட உண்ணாமல் இருக்கவும்,

அவனது விரதத்தை இன்று முடித்தே தீரவேண்டும் என்ற உறுதியுடன் அவனுக்காக கொண்டு வந்த உணவுத்தட்டோடு அவனது அறைக் கதவை தட்டினார் ராஜலட்சுமி.

சற்று நேரத்திற்கு முன்பு அந்த அறைக்குள் அலைப்புறுதலுடன் எதையோ தேடி அலைந்தவன், வெளியில் தனக்கு தோதாக எதாவது கிடைக்கிறதா என்று பார்ப்பதற்காக கதவை திறந்து வெளியேற முயன்ற கடைசி நொடியில்,

தனதறைக்குள்ளேயே அவன் தேடிய பொருளுக்கு ஈடாக வேறொன்று கண்களில் அகப்பட்டதும் அவன் சரியாக மூடாமல் விட்ட அக்கதவு, மறுமுறை அவர் அழுத்தித் தட்டியபோது தானாக திறந்து கொண்டது.

அறைக்குள்ளே நுழைந்தவர் அவன் படுத்திருக்கும் தினுசைப் பார்த்து புருவங்கள் சுருங்க யோசனையுடன் அவனருகே வந்து பார்க்க, அங்கிருந்த கோலத்தை கண்டு மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தார் ராஜலட்சுமி.

கண்களில் அனுமதியின்றி கண்ணீர் நிறைந்து வழிய " கண்ணா யுவா!! என்ன காரியம் பண்ணிட்ட? கடவுளே!" என பதறிப்போய், "சீக்கிரம் யாராவது வாங்களேன்." உச்சபட்ச டெசிபலில் கத்தினார்.

அந்த சத்தத்தில் அந்த பங்களாவே பரபரப்பாக, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அடுத்து வந்த ஒருமணிநேரத்தில் உயர்தர மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டான், ராஜலட்சுமியால் 'யுவா' என்று அழைக்கப்பட்ட யுவ்ராஜ்.

மென்மையான மனம் கொண்டவன். யாரையும் புண்படுத்தும் வகையில் பேசத் தெரியாது, அதனால் எளிதில் காயப்பட்டு போவான். அப்படிபட்ட மென்மனதில் காதலால் ஏற்பட்ட பலத்த காயம் அவனையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு கொண்டு சென்று விட்டது.

வாயில் முந்தானையை வைத்து மூடியபடி கண்ணீரோடு மகன் உயிர்பிழைக்க வேண்டி ராஜலட்சுமி வைத்த வேண்டுதல், சற்று நேரத்தில் நிறைவேறினாலும் அவர் தொடர்ந்து அழுத வண்ணமாகவே இருக்க,

அவரை ஆறுதலாக தோளோடு அணைத்தபடி முகத்தில் கலக்கத்தை காட்டாமல் நின்றிருந்தார் அவரது கணவன் ஆதிகேசவன். ஏ.ஆர் குரூப் ஆஃப் கம்பெனிஸ் ஆணிவேர்.

சிறிது நேரத்திற்கு பிறகு அயர்வுடன் வந்த மருத்துவர் பிரபு, " ஹெவி ப்ளாட் லாஸ். நல்லவேளை அவனோட ப்ளட் குரூப் ரேர் இல்ல, அத்தோட ப்ளட் பேங்க்ல அது ஸ்டாக் இருந்ததால பொழச்சான்." என்றவர்,

நண்பன் ஆதிகேசவனின் தோளை தட்டி, " டேக் கேர் ஆஃப் ஹிம் ஆதி. சீக்கிரமே அவனோட மைன்ட் டைவர்ட் பண்ணி நார்மலுக்கு கொண்டு வாங்க." ஆறுதலாக சொல்லி விட்டுச் சென்றார்.

அவன் கண் விழிப்பதற்காக அவனது பெற்றோர் அங்கேயே தவம் கிடைக்க, அங்கே அவர்களுக்காக புக் செய்யப்பட்ட அந்த உயர்தர அறை காலியாகக் கிடந்தது.

சில மணித்துளிகளில், அந்த காரிடாரில் வேகமான காலடிகள் சப்திக்க, அணிந்திருந்த கார்டிகன் அவளது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்னால் சிறகைப் போல பறக்க,

காற்றைப் போல விரைந்து வந்தவள், "எங்கே அவன்?" என்று அழுத்தமாகக் கேட்க ராஜலட்சுமியின் பார்வை யுவா இருந்த அறைமீது பாய்ந்தது.

படாரென்று கதவை திறந்து அவள் வந்த வேகத்தில், அப்போது தான் எதையோ எழுதத் தொடங்கிய நர்ஸ் திடுக்கிட்டு பார்க்க, அவர் என்ன ஏதென்று உணரும்முன், சோர்வாக படுத்திருந்தவனின் கன்னத்தில் பளாரென விட்டாள் ஒரு அறை.

"மேடம். என்ன இது!!?" அந்த நர்ஸ் பதறி அவளை தடுக்க வர, கண்களில் அனல் பறக்க திரும்பிப் பார்த்த ஒரே பார்வையில் அவரை ஈரடிகள் தள்ளி நிற்கச் செய்தாள் அவள்.

"பைத்தியமடா நீ?. என்னமோ டீன்ஏஜ் பையன் மாதிரி கையறுத்துட்டு, ஸ்யூசைட் ட்ரை பண்ணி இருக்க. நான்சென்ஸ். அவ போயிட்டா, உடனே நீ செத்துடுவியா? எங்களைப் பற்றி எல்லாம் ஒரு செகண்ட் கூட யோசிக்க மாட்டியா நீ?" என்ற அவளது கேள்விக்கு எந்த எதிர்வினையும் இல்லாமல்,

எங்கோ வெறித்த பார்வையோடு தீயாய் எரிந்த கன்னத்தை பிடித்தபடி அவளை திரும்பியும் பார்க்காமல் அவனிருக்க, கண்களில் கோபம் கொப்பளிக்க முறைத்தபடி நின்றிருந்தாள் அவள்.

"அப்ப நான் அவ்ளோ தூரம் உங்கிட்ட பேசியும் ஒரு ப்ரயோஜனமும் இல்ல அப்படி தானே யுவா? ஏதோ ரெண்டு நாள் வொர்க் டென்ஸன்ல பேசாம இருந்துட்டேன்." ஆற்றாமையோடு கூறியவள்,

"அதுக்குள்ள லூசுத்தனமா செய்து வைச்சு இருக்க?. ஓகே. இனிமே நான் எப்பவுமே உங்கூட பேசப் போறதில்ல. எக்கேடும் கெட்டுப்போ. கோ டூ ஹெல்." என்று பொரிந்தவள் விறுவிறுவென வெளியேறி விட்டாள்.

அவள் சென்றபிறகு புயலடித்து ஓய்ந்தது போலிருக்க, கன்னத்தை பிடித்தபடி இருந்தவனருகே மெல்ல வந்த நர்ஸ், "ஆர் யூ ஓகே ஸார்? " எனக் கேட்டு அவனை பரிசோதிக்க,

கன்னத்தில் அவள் அறைந்த தடத்தை தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்றதும் பெருமூச்சுடன் சென்று தனது இடத்தில் அமர்ந்து கொண்டார்.

வெளியே வந்தவள் முகத்தை ஏறிட்டு பார்த்த ராஜலட்சுமியிடம் ஒரு பார்வையை மட்டும் வீசிவிட்டு, எதுவும் பேசாமல் விறுவிறுவென நடந்து சென்றவளது மனம் உள்ளே கொதித்துக் கொண்டிருந்தது.


வணக்கம் மக்களே🫡

மற்றுமொரு புதிய கதையுடன் உங்கள சந்திக்க வந்துட்டேன். டைட்டிலை பார்த்து ஏதோ sci- fi கதைனு நினைச்சுடாதீங்க🤭🤭

எப்பவும் போல குடும்பம், காதல்னு போற கதை தான்🙂🙃.. கண்டிப்பா உங்கள போர் அடிக்காத அளவுக்கு கொண்டு போக முயற்சிக்கிறேன் 🫡🙂👍.

என்னை மாதிரி குட்டி எழுத்தாளருக்கு உங்களோட சின்னச் சின்ன கமெண்ட் கூட ரொம்பப் பெரிய உற்சாகம் கொடுக்கும். அது தொடர்ந்து எழுதற உத்வேகத்தையும் தரும்.

நன்றி மக்களே💐

என்றும் நட்புடன்
புவி எம்ஆர்கே 💐🥰

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top