New member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
பகுதி- 6
பகுதி- 6
மறுநாள் காலை வழக்கம் போல் கிளம்பி நாகராஜன் தன் வீட்டில் இருந்து வெளியே வந்தவனின் மினி வேனில் டிரைவர் இருக்கையில் கதிர்வேலன் அமர்ந்து இருந்தார்.
'கிளம்பாலாமா வாத்தி?' என்றபடி தன் முன் வந்து நின்ற ரோஜாவை ஆயாசமாகப் பார்த்து,'ம்மா... நீங்க எங்க வரீங்க' என கேட்டார் கதிர்வேலன்.
'நேத்து நைட் நீ போதையில இருந்ததால உனக்கு எதுவும் நினைவில இருக்காது கதிரு, உன் அண்ணன் தான் உன் தங்கச்சியையும் நம்மகூட சிவகங்கைக்கு அழைச்சிட்டு போக சொன்னாரு' என்ற நாகராஜன், பொருட்களை எல்லாம் வண்டியில் சரியாக அடுக்கி வைத்தார்
'ஓகோ! நம்ம சிவகங்கைக்கு போக போறோமா' என கதிர்வேலன் கேக்க,
'எங்க போக போறோம்னு தெரியாம தான் மைனர் கணக்கா டிரைவர் சீட்ல உக்காந்து இருக்கியா?' என கேட்டான் நாகராஜன்.
'வாத்தி...முல்லை ஊருக்கு போனதுல இருந்து ஒரு போன் கூட பண்ணல, அதான் பெரியவரு உங்ககூட என்னையும் சிவகங்கைக்கு போய் முடிந்தால் முல்லையை பார்த்துட்டு வர சொன்னாரு'என்ற ரோஜா வேனில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்.
'அவளை போனதும் நான் கூட அண்ணனுக்கு போன் பண்ண சொன்னேனே! ஏன் அவ போன் பண்ணல' என்று கதிர்வேலன் கேக்க,'இதையே தான் பெரியவர் கூட கேட்டாரு' என்றாள் ரோஜா.
'சரி சரி... இங்கேயே நின்னு பேசிகிட்டு இருந்தா, அப்புறம் நம்ம நிச்சியதுக்கு போகாம கல்யாணத்துக்கு தான் போக வேண்டியது வரும்,சீக்கிரமா வண்டியை எடு கதிரு' என நாகராஜன் சொல்ல,
சிவகங்கையில் உள்ள முருகர் கோவிலுக்கு மினி வேன்னில் இவர்கள் மூவரும் பொருட்களுடன் பயணித்தார்கள்.
'ஆமா...சிவகங்கையில இருந்து எப்படி உனக்கு ஆர்டர் கிடைச்சுது' என்று கதிர்வேலன் கேக்க,'திடிர் நிச்சியமா கதிரு, அதான் என்னால வந்து பண்ணி தர முடியுமான்னு கேட்டாங்க, நானும் சரி வரேன்னு சொல்லிட்டேன்' என்றான் நாகராஜன்.
'ஏன் வாத்தி... அந்த ஸ்ரீனி மறுபடியும் எதாவது உங்ககிட்ட பிரச்சனை பண்ணினானா?' என்று ரோஜா கேட்க,
'அவன் கட்டில்ல இருந்து எழுந்து நடக்கவே மூணு மாசம் ஆகும்" என்று சொன்னார் கதிர்வேலன்.
'ஸ்ரீனியா! அது யார்?' என்று நாகராஜன் கேக்க, காலேஜ் படிக்கும் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் ஸ்ரீனிவாசனை பற்றியும், அவனை கதிர்வலன் அடித்ததை பற்றியும் ரோஜா சொன்னாள்.
'அடப்பாவி, படிக்க வந்த பொண்ணுகிட்ட இப்படியா பண்ணுவான் பாடையில போற பன்னாடை' என்று நாகராஜன் ஆதங்கத்துடன் ஸ்ரீனி என்கிற ஆசிரியரை கடிந்து கொண்டு வந்தவன்,ஆழ்ந்த யோசனையில் வண்டியை இயக்கும் கதிர்வேலனை கேள்வியிடன் நோக்கினான்.
'என்ன கதிரு என்ன யோசனை' என நாகராஜன் கேட்க,
'ரவா லட்டு ஏதோ பிரச்சனையில மாட்டிக்கிட்டாள்' என்றார் கதிர்வேலன்.
'என்னடா நீ! குறி சொல்லுற மாதிரி பேசுற!' என்று நாகராஜன் கேக்க,'இல்ல... எனக்கு உள்ளுக்குள்ள அப்படி தான் தோணுது' என்றவாறு மினி வேனை வேகமாக விரட்டினார்.
'என்ன வாத்தி சொல்லுறிங்க! அதனால தான் முல்லை யாருக்குமே போன் பண்ணலையா!' என்ற ரோஜா தன் அலைபேசியில் இருந்து மீண்டும் முல்லையின் அலைபேசிக்கு அழைத்து பார்க்க, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக பதில் வந்தது.
ஏதோ ஒன்று சரியில்லை என்ற மனநிலையில் கதிர்வேலன் மினி வேனை சிவகங்கை கோவில் வாசலில் நிறுத்தியதும்,' ஐயா வேன் வந்துடுது' என்று அங்குள்ள ஒருவர் இன்னொருவரை பார்த்து சத்தமாக சொன்னார்.
'கதிரு... நீ வண்டியில உக்காரு, நான் பொருளை இறக்கி வச்சிட்டு லிஸ்ட்டை கொடுத்து அட்வான்ஸ் வாங்கிட்டு வரேன்' என்றபப்டி நாகராஜன் கோவிலுக்குள் செல்ல,
அதே தருணம் தூரத்தில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் நின்று இருந்த தன் மாமன் முருகனை வேனில் அமர்ந்தப்படி பார்த்த ரோஜா,'வாத்தி அங்க பாருங்க முருகன் மாமா' என்றாள்.
'இந்த மீசைகாரன் இங்க என்ன பண்ணுறான். காலையில உண்டை கட்டி சாப்பிட வந்து இருப்பானா!' என்ற கதிர்வேலனுக்கு முருகன் என்றாலே ஆகாது.
அதுவும் முருகனின் இரண்டாவது மனைவி பார்வதி என்றால் அறவே ஆகாத பட்சத்தில், இந்த நொடி வரை முல்லைக்கு இன்று அவசர நிச்சயம் நடக்க போகிற விஷயம் பாண்டியனின் குடும்பத்துக்கு தெரியாமல் போனது.
நாகராஜன் அங்குள்ள ஆட்களுடன் சேர்ந்து வேனில் உள்ள பொருட்களை எல்லாம் இறக்கி வைத்தவன்,
அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு வேனுக்கு திரும்பியவன் காதில்,
'அவ அடம் பிடிச்சா சூடா கம்பியை காய வச்சி அவ காலுல சூடு வையு' என்று முருகன் அலைபேசியில் யாருடனோ கோவமாக பேசும் வார்த்தையைக் கேட்டு வேகமாக கதிர்வேலனை நோக்கி ஓடி வந்தான் நாகராஜன்.
'கதிரு... அந்த மீசைகாரர் உன் மாமன் தானே'என்று நாகராஜன் கேக்க,'அந்த ஆளு தான்' என்றார் கதிர்வேலன்.
'டேய்... அவரு யாருக்கோ சூடு வைக்க சொல்லி போன்ல பேசிகிட்டு இருக்காரு டா, நீ சொன்னது போல ஒருவேளை உன் மாமன் பொண்ணுக்கு எதாவது பிரச்சனையா' என்று நாகராஜன் கேட்க, கதிர்வேலனின் முகமோ இறுக்கமாக மாறியது.
வேனில் அமர்ந்து இருக்கும் கதிர்வேலனும் ரோஜாவும் முல்லைக்கு என்னானது என்று யோசிக்கும் தருணம்,
'கதிரு... அங்க பாரு காருல யார் வந்து இறங்குறாங்கன்னு' என்றான் நாகராஜன்.
பட்டு வேஷ்டி சட்டையில் ஜோராக கேசவன் வந்து இறங்கி இருக்க, அப்போது தான் கதிர்வேலனுக்கு மட்டுப்பட்டது இங்கே நிச்சியம் நடக்க போவதே கேசவனுக்கும் முல்லைக்கும் தான் என்று.
தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள எண்ணி கதிர்வேலன் வேனில் இருந்து இறங்க ஏத்தணித்தவரின் கையை பிடித்து அமர்த்தினாள் ரோஜா.
'என்னாச்சு வாத்தி!? இவ்ளோ வேகமா எங்க போறீங்க?'
'இந்த கேசவனும் மீசை காரனும் சேர்ந்து என்னமோ சண்டி தனம் பண்ண போறாங்க, அதான் நான் என்னன்னு கேக்க போறேன்'
'அவசரப்படாதீங்க, எனக்கும் அந்த சந்தேகம் இருக்க தான் செய்யுது. ஆனா இப்போ நம்ம துடுக்கு தனமா எதையாவது பண்ணினா அது தப்பா போக கூட வாய்ப்பு இருக்கு, அதனால இங்கேயே காத்து இருப்போம்"என்று ரோஜா சொல்ல, கதிர்வேலனின் மனதோ இயல்புக்கு மாறாக எதையோ உணர்த்திக்கொண்டே இருந்தது.
'இல்ல இல்ல... இங்க இருந்து நேரத்தை விரயமாக்க வேண்டாம். பேசாம நம்ம மீசைகாரன் வீட்டுக்கே போய் அங்க என்ன சூழ்நிலைன்னு பாப்போம்' என்ற கதிர்வேலன் யாருடைய பேச்சையையும் காதில் வாங்காமல் மினி வேனில் முல்லையின் வீட்டை நோக்கி பயணித்தார்.
********************************
முல்லையின் வீட்டில் பார்வதி ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டு இருக்க,
'எனக்கு உங்க தம்பியை பிடிக்கல, ஏன் அவரை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னை இம்சை பண்ணுறீங்க' என்று முல்லை கண்களில் கண்ணீருடன் வாதாடிக்கொண்டு இருந்தாள்.
'என்ன நீ!?
சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க!,
நீ மட்டும் என் தம்பியை கண்ணாலம் பண்ணிக்கலைனா உன் அப்பன் உன்னை கொன்னே போட்டுடுவான், பரவாயில்லையா' என்ற பார்வதியை பார்த்து கட்டில் இருந்து வேகமாக எழுந்தாள் முல்லை.
'என்னை அவரால ஒன்னும் பண்ண முடியாது, எனக்கு எதாவதுனா என் மாமா என் அப்பாவை சும்மா விட மாட்டாரு' என்ற முல்லையை பார்த்து ஏளனமாக சிரித்தாள் பார்வதி.
பார்வதியின் அந்த சிரிப்பில் நஞ்சு கலந்து இருந்தது.
எங்களை மீறி பாண்டியனால் என்ன பண்ணிட முடியும் என்ற ஆணவம் நிறைந்த சிரிப்பு அது.
'இங்க பாரு முல்லை, நான் பொறுமையா பேசிகிட்டு இருக்கேன், இதுவரை நான் உனக்கு சித்தியா நடந்துகொண்டது இல்லை, என்னை அப்படி பார்க்கணும்னு நீ ஆசைப்படாதே' என்ற பார்வதியை பார்த்து,
'நீங்க எனக்கு அம்மாவாக கூட தான் நடந்துகொண்டது இல்லை, ஏன்? இதே நான் உங்க சொந்த பொண்ணா இருந்தா இப்படி தான் என் சம்மதம் இல்லாம எனக்கு பிடிக்காத ஆளை கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணுவிங்களா' என்று கேட்டாள் முல்லை.
'நீ ரொம்ப பேசுற! என்ன எனக்கு பிள்ளை இல்லைனு குத்தி கட்டுறியா' என்று பார்வதி கோவமாக கேக்க,
'நல்ல வேளை உங்களுக்கு ஒரு பிள்ளை இல்லை, அப்படி மட்டும் உங்களுக்கு பிள்ளை இருந்திருந்தால்! அந்த குழந்தையுடைய வாழ்க்கையையும் நீங்க கேள்விக்குறியாக்கி இருப்பீங்க' என்று முல்லை சொல்லி முடிக்கும் முன்னே பார்வதி முல்லையை அறைந்திருந்தார்.
இதுவரை தன் மீது கை வைக்காத பார்வதியின் கோபத்தை முதல் முறை பார்த்த முல்லைக்கு அழுகைதான் வந்தது.
'இப்ப எதுக்கு என்ன அடிச்சீங்க' என்று முல்லை கேட்க,'என்னது அடிக்கிறதா!? உன் காலில் சூடு வச்சு! உன்ன கோவிலுக்கு இழுத்துட்டு வர சொல்லி இருக்கான். என்ன பண்ணவா!? சொல்லுடி சூடு வைக்கவா?' என்ற பார்வதி வேகமாக கொள்ளை பக்கம் சென்று, கொழுந்துவிட்டு எரியும் கட்டையை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தவரை பார்த்து முல்லைக்கு பயம் தான் வந்தது.
'இங்க பாரு...இப்போதைக்கு உனக்கும் என் தம்பிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிற திட்டமே எங்களுக்கு இல்லை. ஆனா நீ திருச்சில இருந்து நேரா இங்க வராம குன்னக்குடிக்கு போயி உன் மாமன் கூட கூத்தடிச்சிட்டு வந்திருக்க பாரு! அதனால தான் உன் அப்பா உனக்கு சீக்கிரமா என் தம்பி கூட கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி இருக்காரு' என்று பார்வதி சொல்லும் பொழுது தான் முல்லை குன்னக்குடி சென்ற விஷயம் முருகனுக்கு தெரிந்திருக்கிறது என்று அறிந்து கொண்டாள் முல்லை.
'ஓ!! அப்போ உங்களுக்கு எல்லா விவரமும் தெரிஞ்சு போச்சா?' என்று முல்லை கேட்க,
"தெரியும் தெரியும்...அந்த பாண்டியனுடைய இரண்டாவது பையன் கூட நீ அடிக்கிற கூத்தெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்' என்று பார்வதி சொல்ல,
'இங்க பாருங்க...நான் பாண்டியன் மாமா வீட்டுக்கு தான் மருமகளா போக போறேன், நீங்க யாரு என்ன சொன்னாலும் உங்க தம்பியை மட்டும் நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்' என்று முல்லை சொல்லி முடிக்கும் முன்னே,
'உனக்கு அவ்வளவு வாயா போச்சா!' என்ற பார்வதி சற்றும் தாமதிக்காமல் தன் கையில் இருந்து எரிக்கட்டையை எடுத்து முல்லையை சூடு வைக்க எத்தனித்தவளின் கையைப் பிடித்து தடுத்திருந்தார் கதிர்வேலன்.
**********************
இந்த சமயத்தில் யார் நம்மை காப்பாற்ற கூடும் என்று தவித்திருந்த முல்லைக்கு தன் கண்முன்னே கதிர்வேலனை பார்த்ததும்தான் நிம்மதி பிறந்தது.
கதிர்வேலனுடன் ரோஜாவும் வந்திருக்க 'ஐயோ முல்லை என்ன ஆச்சு?' என்ற ரோஜா, முல்லையை பார்த்து பதறினாள்.
'இங்க என்ன நடக்குது! என்னமோ சின்ன பிள்ளையை சூடு காட்டி பயமுறுத்துற மாதிரி அவளை பயமுறுத்திக்கிட்டு இருக்கீங்க...பெரிய மனுஷி தானே நீங்க!உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா' என்று கதிர்வேலன் பார்வதியை கேட்க,
'டேய்...கையை எடுடா, என்ன உன் காதலியை காப்பாத்த பெரிய ஆபத்து பாண்டவன் மாதிரி வந்து இருக்கியா' என்று கேட்டார் பார்வதி.