• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் – 14

“ம்ம்ம் கரெக்ட் தான். நீங்க என்னைய மறக்கலாம். ஆனால் நான் உங்கள என்னைக்கும் மறக்க முடியாது. என்னுடைய முக்கியமான நாள்ல என்னோட முக்கியமான ஆசைய நிறைவேற்றிக் கொடுத்த தேவதை நீங்கள். உங்களுக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாம வந்துட்டேன். மனசு உறுத்தலா இருந்தது. அதுனாலதான். ரொம்ப நன்றிங்க.”

“அதான் இப்போ சொல்லிட்டீங்கள்ல இனி உறுத்தாது. நான் கால் கட் பண்றேன்.”

“அழைப்பை என் விரல் துண்டித்தாலும் அவன் நினைப்பை என் மனம் துண்டிக்கவில்லை. அவன் என்னைத் தேடி வந்தபோது நான் ஏன் முரண்டு பிடித்தேன்? அவன் மறைந்த பின் ஏன் அவனைத் தேடி அலைகிறேன்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த உணர்வு தெளிவானதாக இல்லை. அவன் அதன் பிறகு அழைப்பானா என்று எதிர்பார்த்திருந்த எனக்கு, வரும் அழைப்பெல்லாம் அவனாக இருக்குமோ என்கிற ஆர்வம் குவிந்து பின் ஏமாற்றத்தினால் சரிந்தது.”

“இரண்டு நாட்களுக்கு மேல் என் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டு நானே அவன் எண்ணிற்கு அழைத்தேன். அவன் என்னைப் போல அல்ல. எதார்த்தமானவன். நான் அலட்டிக்கொண்டு அவனைப் புறக்கணித்தபோதும் அவன் என்னை ஒதுக்கவில்லை. உடனே அழைப்பை ஏற்றான்.”

அவன் வார்த்தை வித்தைக்காரன். பேசியே மயக்கிவிடுவான். ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் வெறும் வாயில் பேசியே எப்பேர்ப்பட்ட காரியத்தையும் சாதித்துவிடுவான். என்னையும் அப்படித்தான் அவன்வசம் இழுத்துக் கொண்டான் சதிகாரன். அழைப்பை ஏற்றதும் அவன் வேலையை ஆரம்பித்துவிட்டான்.
“மேடம் ஒரு வழியாக நான் யாரென்று கண்டுபிடித்துவிட்டீர்கள் போல?”

“நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளலாம் என்று அழைத்தேன்.”

“ஏன் இரண்டு நாட்களாக விழி மூட மறுத்துவிட்டதா?”

“அப்படியொன்றும் இல்லையே.”

“உங்களுக்கு வருகிற ஆயிரம் அழைப்புகளில் இந்த ஆண்மகனை மட்டும் நினைவில் வைத்துத் தெரிந்துகொள்ள துடிப்பதற்கு வேறு என்ன காரணம்?”

“அறக்கட்டளைக்கு உதவி செய்தவருக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். அன்றைக்கு என்னால் அடையாளம் காண முடியவில்லை. அதனால் தான் தேடி கண்டுபிடித்து அழைத்திருக்கிறேன். சரி மற்றவை இருக்கட்டும். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.”

“நன்றி வேண்டாமே.”

“பிறகு என்ன?”

“உங்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பு?”

“அதெல்லாம் வேண்டாத காரியம். இந்த நோக்கத்தோடு இனி உரையாடல் வேண்டாம்.”

“அன்றைக்கு நீங்கள் இருந்த அறையில் நிறைய பெரியவர்கள் இருந்தார்கள். நான் உதவி செய்ய எனக்கு உதவிய உங்களைப் பார்த்து விடைபெறல் கூறாமல் வந்தது உறுத்தலாக இருந்தது. உங்கள் கோபத்திற்கும் அதுதான் காரணம். மற்றபடி, நீங்கள் என்னைக் கண்ணால் விழுங்கியதும் அதே அழகிய வதையை நான் உங்களுக்குச் செய்ததும், உறக்கமும் உரையாடலுமின்றி தவிப்பதும் நம் இருவருக்கும் தெரிந்த விஷயம்தானே?”

“அப்படியொன்றும் இல்லையே.”

“அப்படியில்லை என்றால் நாளை மாலை பார்வதி துணிக் கடைக்கு வர வேண்டாம்.”

“சரி.”

“நான் சரியென்றதும் அவனுக்குக் குபீர் சிரிப்பு. மனதில் உள்ளதைப் புரட்டிப் படித்துவிட்டுப் பேசுவது போல நாசுக்காகப் பேசி என் மனதை அவனுடையதாக்கிக் கொண்டான். இடமும் நேரமும் சொல்லிக் காத்திருந்த அவனுக்குத் தெரியும் நான் அங்குக் கண்டிப்பாக வருவேன் என்று.”

“ஆட்டோவிலிருந்து நான் இறங்கும்போதே அருகில் வந்து நின்று பயணத்திற்கான பணத்தை ஆட்டோ அண்ணனிடம் கொடுத்தான். எனக்கு வழி சொல்லும் விதமாக எனக்கு ஒரு அடி முன்னால் நடந்தான். சேலையிலிருந்து ஷாப்பிங்கைத் தொடங்கினான். அவனுடைய எல்லா செய்கையுமே என்னுடைய விருப்பப் பட்டியலில் குடியேறியவையாக இருந்தது. எப்படி ஒருவனால் ஒருத்தியின் முழுமையான விருப்பமாக இருக்க முடியும் என்கிற வியப்பு இருந்தது.”

“அந்தக் கடை முழுவதும் என்னை யாரோ போலத் தள்ளியே இருந்தாலும், கண்களால் கரம்பிடித்துதான் ஆசா பாசம் காட்டிக்கொண்டிருந்தான். அவன் மதிப்பானவன். பொது இடங்களில் தன்மையாக நடந்துகொள்ளும் புத்திசாலி. அதனாலோ என்னவோ அந்தக் கடையிலிருந்த பாதி ஆட்கள் அவன் உள்ளே நுழைந்ததும் இன் முகத்தோடு அவனிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை சிறு புன்னகை செய்துவிட்டு வந்த வேலையில் கவனம் செலுத்தினான்.”

“அவனைச் சுற்றி முற்றி அவனுக்குத் தெரிந்த ஆட்கள் அதிகம் இருந்ததாலோ என்னவோ அவன் என் அருகில் கூட நிற்கவில்லை. சற்று தள்ளியே இருந்தான். அவன் கால்கள் ஓயாமல் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவனை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. கால் நோவெடுத்ததும் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். நான் பின்னே வருகிறேன் என்கிற நம்பிக்கையில் நடைபோட்டவன் என்னைக் காணாததும் புருவம் சுருங்கத் தேடி, என்னைப் பார்த்ததும் சிரித்தான்.”

“சட்டெனத் தலையசைத்துவிட்டு மாடிப் படிக்கட்டில் ஏறினான். அந்தக் கடையில் மாடியில்தான் பெண்களுக்கான துணிகள் இருக்கும். கிட்டத்தட்ட அறை மணி நேரம் கழித்துத் திரும்பக் கீழே இறங்கி வந்தான். அவன் என்னைக் கடந்து நடந்து சென்றதும் நானும் எழுந்து அவன் பின்னால் போனேன். அவன் பில் போடும் இடத்தை நெருங்கியதும் நான் கடையை விட்டு வெளியேறினேன்.”

“அவன் வருவான் வருவான் என்று காத்திருந்தேன் நான் திரும்பப் போகும் நேரம்தான் வந்ததே தவிர அவன் வரவில்லை. சரி ஹோமை நோக்கி மெல்ல நடக்கலாம் என்று முடிவு செய்தேன்.”
“நான் பாதி தூரம் சென்றபிறகு என்னைக் கடந்து பைக்கில் விறுட்டென்று போனான். ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் பைக்கை நிறுத்தி விட்டுப் பயங்கர ஸ்டைலாக அமர்ந்திருந்தான். அவனைத் தூரத்திலிருந்து பார்த்து ரசிக்கும் தைரியம் அவன் அருகில் செல்லச் செல்லக் குறைந்தது. அவனுக்கும் எனக்கும் இடையேயான தூரம் குறையக் குறைய என் நடையின் வேகமும் குறைந்தது. என் பார்வையும் தளர்ந்தது. பேச்சும் நின்றுதான் போனது. அத்தனையையும் மீறி எப்படியோ ஒரு வழியாக அவனை அடைந்தேன். அவன் மெல்லப் பேசத் தொடங்கினான்.”

“என்னங்க இப்படி பயப்படுறீங்க? ஃபோன்ல மட்டும் என்னையப் போட்டு அந்த மிரட்டு மிரட்டுனீங்க. இப்போ என்னாச்சு?”

“நீங்க மட்டும் என்னவாம்? ஃபோன்ல தைரியமா பேசிட்டு கடையில ஆளுங்க முன்னாடி என்னைய யாருனே தெரியாத மாதிரி இருந்தீங்கள்ல? அதுக்குப் பேர் என்னவாம்?”

“சரி சரி விடுங்க. பதிலுக்குப் பதில் கழிஞ்சு போச்சு. “

“எதுக்கு என்னைய வரச் சொன்னீங்க? அதை முதல்ல சொல்லுங்க?”

“நான் எப்போ உங்கள வரச் சொன்னேன்? வர வேண்டாம்னுதான் சொன்னேன். நீங்கதான் அதைத் தப்பா புரிஞ்சுகிட்டு வந்துட்டீங்க.”

“இங்க பாருங்க உங்களுக்காக நான் ஹோம்ல எல்லார்கிட்டையும் பொய் சொல்லிட்டு வந்திருக்கேன். இந்த மாதிரி எடக்கு மடக்கா பேசுனீங்கனா எனக்குக் கோபம் வரும். அப்புறம் நான் அப்படியே போயிருவேன்.”

“சரி கோபம் வேண்டாம். நானும் உங்கள மாதிரிதான் இப்போலாம் பொய் சொல்றேன் கொஞ்சம்.”

“என்ன பொய்?”

“கடையில தெரிஞ்சவர் ஒருத்தர் யாருக்குச் சேலை எடுத்திருக்கனு கேட்டாரு அம்மாவுக்குனு பொய் சொன்னேன்.“

“ம்ம்ம்.”

“சரி இந்தாங்க புடிங்க.” (அவன் எனக்காகத் தேடித்தேடி தேர்ந்தெடுத்த புடவையை நீட்டினான். என் ஒப்புதல் இல்லாமலே என் கைகள் தானாக அதைப் பெற்றுக் கொண்டது.)
“சேலை நல்லா இருக்கு. இது எனக்கா?”

“ம்ம்ம் உங்களுக்குதான். இது உங்களுக்கு எடுப்பா இருக்கும்.” என்று சொல்லி நிசப்தமானான். அதன்பிறகு அவன் எதுவும் பேசவில்லை. காரணம், நான் அவன் கொடுத்த சேலையைத் தொட்டுத் தடவி ரசித்துக் கொண்டிருந்தேன். அப்படி என்னைப் பார்க்கும்போது அவனது பின் மண்டையில் என்ன ஓடியதோ தெரியவில்லை ஆணியரைந்தார் போல நின்றிருந்தான்.

எனக்கு அவனுக்கு இதற்காக நன்றி சொல்வதா? இல்லை வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதே சமயம் நான் ஹோமிற்கு விரைவாகத் திரும்பிப் போகும் கட்டாயத்தில் இருந்தேன். அந்த வழியே வந்த ஆட்டோ ஒன்றினை நிறுத்திவிட்டு, அவனைப் பார்த்து “நான் உங்கள பாக்க வர்றதுக்கு முன்னாடி முக்கியமான ஒருத்தரப் பாக்க போறேனு சொன்னேன். அப்போ எல்லாரும் சொன்னாங்க, சரி போய்ட்டு வா மிஞ்சி மிஞ்சிப் போனா நீ எங்க போகப் போற? கோவிலுக்குதான? அப்படினு சொன்னாங்க நான் அதுக்கு எந்தப் பதிலுமே சொல்லாம அவங்களக் கடந்து வந்துட்டேன். என்னவோ தெரியல கோவில்ல கெடைக்குற சந்தோஷத்த விட இரண்டு மடங்கு சந்தோஷமாவும் நிம்மதியாவும் இப்போ இருக்கு. அப்படிப் பார்த்தால் நான் பொய் சொல்லல. நீங்களும் கடையில பார்த்த ஆள்கிட்ட சொன்னது பொய்யா இருக்கக் கூடாதுனு நான் வேண்டிக்குறேன்” என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறிவிட்டேன்.

“நான் பேசும்போது தன்னிலை மறந்து பிரம்மை பிடித்ததைப் போல நின்றிருந்தவனுக்கு நான் சொன்ன எதுவுமே மண்டையில் ஏறியிருக்காது என்று எனக்கு நன்றாகத் தெரியும். அவனுடைய குழப்பம் அவன் முகத்தில் பிரதிபலித்தது. அவனை அப்படிப் பார்க்கையில் கொஞ்சம் பாவமாக இருந்தது.”

“அவனைக் கடந்து வந்தபிறகும் அவனை முன்பைவிட மிக நெருக்கமாக உணர்ந்தேன். அந்த நாள் இரவு ஏதோ நான் ரசித்த காதல் பாடல்களில் நான் வாழ்வது போலத் தோன்றியது. அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த அதே வேளையில் என் செல்ஃபோனும் அவன் பெயர் சொல்லிச் சினுங்கியது. அழைப்பை ஏற்றேன். ஆனால், பேசமுடியவில்லை ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷமோ துக்கமோ என்னைக் கட்டிப் போட்டது.”

ஆனால் அவன் குரல் கேட்டதும், என்னைவிட அவன்தான் அதிகம் தவிக்கிறான் என்று புரிந்துகொண்டேன். அதனால் உடைப்புகளை மீறி வார்த்தைகளைச் சிந்தினேன்.

“ஹலோ! ம்ம்ம். எனக்கு… எனக்கு என்ன பேசுறதுனு தெரியல. நீங்க என்னைய பயங்கரமா குழப்பிவிட்டுப் போய்ட்டிங்க. அந்த நிலையிலிருத்து இம்மியளவு கூட என்னால நகர முடியல. நான் இன்னும் அதே இடத்திலேதான் நின்று கொண்டிருக்கிறேன்“ என்று அவன் சொன்னதும் என்னால் அமைதிகாக்க முடியவில்லை.

“என்ன சொல்றீங்க? இந்த நேரத்துக்கு அங்க என்ன பண்றிங்க?”

“தெரியலைங்க. நான் என்ன யோசிக்குறேன்? அடுத்து என்ன செய்யனும்? எனக்கு ஒன்னுமே புரியலை.”

“சரி நீங்க முதல்ல வீட்டுக்குப் போங்க. ரொம்ப நேரம் ஆச்சு பாருங்க. வீட்டுக்குப் போய்ட்டு எனக்குக் கால் பண்ணுங்க பேசலாம்.”

“ம்ம் சரி.”

…தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top