• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
620
25


காலையில் எழுந்து விரைவிலேயே கிளம்பியவன் கண்களில் காலண்டர் பட, ஒன்று மட்டும் விளங்கவில்லை அவனுக்கு.

“இன்னைக்கு என்னோட பர்த்டே. ஏன் யாரும் விஷ் பண்ணல? மறந்திருப்பாங்களோ? சே...சே அதெப்படி மறப்பாங்க. அதுவும் நம்ம வீட்டுல சான்ஸேயில்ல. அப்புறமா சர்ப்ரைஸா விஷ் பண்ணுவாங்களா இருக்கும்” என்று தனக்குத்தானே மனதைத் தேற்றி, முன்தினம் உண்ணாமல் சென்றதால், மனைவி கஷ்டப்பட்டதை நினைத்தவன், இன்று சீக்கிரமே கிளம்பினாலும் காலை உணவை முடித்தேக் கிளம்பினான்.

அவந்திகா விஷ்ணுவிற்கு போன் செய்து, தான் சொன்னதை செய்தானா என்று விசாரிக்க, எதிரில் ‘எஸ்’ என்ற பதில் வந்ததும், “சரி நான் வந்து கலக்ட் பண்ணிக்கிறேன்” என்றவள் மனதில், நேற்று காலை கணவனின் மூன்று வருட காதலி தான்தான் என அறிந்ததும், தன் அறைக்குச் சென்று கணவனின் புகைப்படத்தைப் பார்த்து பேசும்பொழுது, புவனேஸ்வரியிடம் இருந்து வந்த தகவலை எடுத்துப் பார்த்தவளுக்கு, “நாளை கார்த்திக் பிறந்தநாள்” என்றிருந்தது.

சந்தோஷத்தில் அவர்கள் சொன்னது உண்மையா? என கேட்டறிந்து கணவனின் பிறந்தநாளில், அவன் மறக்க முடியாத பரிசு கொடுக்க நினைத்து, சில வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள். வீட்டில் உள்ளவர்களையும் முடிந்தால் மாலை வேலை முடித்துச் சீக்கிரம் வரச்சொல்லி உத்தரவு போட்டுவிட்டாள்.

“இல்லண்ணி. நான் லீவு எடுத்துக்கறேன்.”

“நான் லீவ் தரலன்னா என்னடா பண்ணுவ” என்ற சந்திரனிடம்,

“லீவ் தரலன்னா பரவாயில்ல, என்னை டிஸ்மிஸ் பண்ணிருங்கப்பா. எனக்கும் தினமும் உங்க முகத்தைப் பார்த்து போரடிக்குது.”

“ஏன் சொல்லமாட்டே? உனக்குன்னு ஒரு ஆளு வந்திருச்சில்ல. அப்ப எங்களை பிடிக்காமல்தான் போகும்.”

“எங்கப்பான்னா அப்பாதான். சமத்து. எப்படி கப்புன்னு விஷயத்தை கேட்ச் பண்றீங்க” என தகப்பனைக் கொஞ்சினான்.

அவந்திகா மாமனார், மாமியாரிடம் வந்து மன்னிப்பு கேட்க, புரியாமல் ஏனென்று கேட்டதற்கு, “நைட் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவிடாமல் தடுத்ததுக்கு மாமா” என்றாள்.

கேட்ட மன்னிப்பிற்கு சுற்றி இருந்தவர்களின் முறைப்பையும் வாங்கிக் கொண்டு, சந்தோஷிடம் கார்த்திக்கிற்கு பிடித்த சுவையில் கேக் ஆர்டர் கொடுத்து வாங்கிவரச் சொன்னாள்.

அதே நேரம் நேத்ராவிடம் இருந்து வந்த போனை எடுத்தவன், “ஹாய் நேத்தி! என்ன காலையிலேயே என் நினைவா?”

“ஆமா. எங்களுக்கு வேற வேலையில்ல பாருங்க. காலையிலேயே கனவு கண்டுட்டிருக்காங்க. வீட்டுக்கு வரச்சொன்னீங்கள்ல. அதான் எப்ப வர்றதுன்னு கேட்டுக்கலாம்னு பண்ணினேன். அப்பா, அம்மாகிட்ட பர்மிஷன் கேட்டுட்டேன். நைட் என்னை வீட்ல ட்ராப் பண்றது. உங்க ட்யூட்டி. அப்படியே அவந்தி அக்காகிட்டேயும் பேசணும்” என்றாள்.

“நான் இன்னைக்கு லீவுதான்மா. எப்ப வேணும்னாலும் வா. உனக்காக என் இதயவாசல் போல், வீட்டுவாசலும் எப்பவும் திறந்திருக்கும்.”

“ஓஹ்ஹோ...” என கேலிச்சிரிப்புகள் ஒட்டு மொத்தமாக கேட்டது.

“சந்தோஷ்! பக்கத்துல எல்லாரும் இருக்காங்களா?”

அவனின் ‘ம்’ என்ற வார்த்தையில்,

“அச்சோ! மானம் போகுது. எல்லார் முன்னாடியுமா காதல் வசனம் பேசுவீங்க? ஈவ்னிங் அவங்க முகத்துல நான் எப்படி முழிக்கிறது?”

நடுவில் போனை வாங்கிய அவந்தி, “நீ முழிக்க வேண்டாம். நாங்க உன் முகத்துல முழிச்சிக்கிறோம். நீ பயப்படாம வா” என்றாள்.

“சரிக்கா. சாரிக்கா” என நாக்கு குழறி, பின் நிதானமாக, “வைஷு அக்கா உங்களுக்கு போன் பண்ணினப்ப, லைன் கிடைக்கலையாம். இனி த்ரீ மன்த் கழித்துதான் உங்களை மீட் பண்ணவாள்னு நினைக்கிறேன்.”

“ஏன் நேத்ரா? வைஷுவுக்கு உடம்பு சரியில்லையா என்ன?” என்று பதற்றத்துடன் கேட்க,

“இல்லக்கா வயிறு சரியில்லை. ஏன்னா வயித்துக்குள்ள ஒரு குட்டி உட்கார்ந்திருக்குமோன்னு சந்தேகத்துல, இன்னைக்குத்தான் ஹாஸ்பிடல் போயிருக்காங்க.”

“ஹேய்! நிஜமாவா? இந்த வைஷு சொல்லவேயில்ல பாரேன். சரி நீ கட் பண்ணு நான் பேசிக்கிறேன்” என்று வைஷ்ணவிக்கு அழைத்து வாழ்த்துச் சொல்லி, கைபேசியை சந்தோஷிடம் கொடுத்து தனியே சென்று, தன் கைபேசியில் இருந்து கணவனின் தனி எண்ணிற்கு அழைத்தாள் அவந்திகா.

அதிர்வு சத்தம் கேட்டு கைபேசியை எடுத்துப் பார்த்த கார்த்திக், “கார்த்திகவந்தி” என்றிருந்த பெயரைப் பார்த்ததும், மனைவியின் முதல் அழைப்பில் முகம் மலர, காதில் வைத்து “ஹலோ” என்றான்.

“எப்ப வீட்டுக்கு வருவீங்க கார்த்திக்? ஈவ்னிங் சீக்கிரம் வந்திடுறீங்களா?”

“வேலை இருக்கு அவந்திமா? எதாவது அவசரமா? யாருக்கும் எதுவுமில்லையே?” எனும்போதே, அவன் இன்னும் செய்தித்தாள் படிக்கவில்லை என்று தெரிந்து சற்று ஏமாற்றமாகக்கூட இருந்தது.

கார்த்திக்கோ, பிறந்தநாள் தெரிந்து வாழ்த்த அழைத்திருக்கிறாளோ என சந்தோஷப்பட்டவன், “இல்லங்க சும்மாதான்” என்ற மனைவியின் பதிலில் சப்பென்றானது.

“ம்... முடிஞ்சதும் வர்றேன்” என்று போன் வைக்கும்போது, கார்த்திக்கின் கையில் அன்றைய செய்தித்தாள் கிடைத்தது. மெல்ல விரித்து பார்த்தபடி வந்தவன் கண்களில் விழுந்தது, அவனுக்கான கவியழைப்பு. சி.என்னாக தன்னை மனைவி நேசிக்க வேண்டும் என்று, இத்தனை நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்ததை, நிறைவேற்றியிருந்தாள் அவனின் அழகி.

கே.கேயாக என் வாழ்வில் நுழைந்து

சி.என்னாக எனைக் கவர்ந்து

நாராயணனாக என் கரம் பிடித்தாயே!

என் காதலெனும் மனமீனை

நம் தினமீனில் அனுப்புகிறேன்,

உன்னிடம் தூது செல்லவே!

காலன் எனைக் காலிசெய்யும் முன்னே...

காதலெனும் வார்த்தை கொண்டு

காக்கும் காத(வ)லனாய் வா!”

கா(த்திருத்த)தலுடன்

என்.எ(உன்னுடைய எ)

படித்து முடித்ததும் அளவுகடந்த சந்தோஷத்தில் “யாகூ...” என தன் பதவியையும் மறந்து சிறுவனாக கூச்சலிட, மற்றவர்களின் வித்தியாசமான பார்வையில் அமைதியாகி, உடனே சென்று மனைவியைப் பார்க்க நினைத்தவன் எண்ணத்தில், கடமை வந்து மண்ணள்ளிப் போட்டது.

போன் செய்தாவது தன் மகிழ்ச்சியைப் பகிர எண்ணியவன், “வேண்டாம் நேரடி விசிட்தான் கரெக்ட்.” மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க, வீடு செல்லத் தடையாக இருந்த, அனைத்து வேலைகளையும் அவசரமாக முடித்து, மாலை ஆறுமணிக்கெல்லாம் வீட்டிற்கு கிளம்பினான் கார்த்திக்.

வரும் வழியெல்லாம், அவன் மனமெங்கும் சந்தோஷத்தின் சாரல்கள். “தேங்க்ஸ்டா அழகி. சி.என்னை நீ விரும்புவன்னு அப்பா, அம்மாகிட்ட நான் போட்ட சபதத்துல ஜெயிக்க வச்சிட்ட. உன் மனமீன் என்னை வந்து சேர்ந்திருச்சிடா. கே கே மீனிங் என்ன?” என்று யோசித்தவன், “ஹேய்! கார்த்திகேயன்! வாவ் சூப்பர். ஹா..ஹா காலன் உனை காலி செய்றானாடா அழகி! இரு வர்றேன். என்னை மீறி எப்படி காலி செய்றான்னு நானும்தான் பார்க்கிறேன.! இன்னும் கொஞ்ச நேரத்துல, இந்தக் காவலன், உன் காதலனாய், உன் எதிரில் இருப்பேன்.”

அதேநேரம் அவனின் அழகி, அவுட் ஹவுஸில் நகத்தைக் கடித்துக்கொண்டு தவிப்புடன் இருந்தாள். ‘இந்நேரம் தன் மனதை அறிந்திருப்பான் என்று தெரியும். கணவனின் வரவு எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். வந்தபின் எப்படி ஆரம்பிப்பது? என்ன பேசுவது?’ என ஒத்திகை பார்த்தபடி இருந்தாள்.

மாலை ஆறுமணிக்கெல்லாம் கார் வீட்டினுள் நுழைய, இறங்கி வேகமாய் உள்ளே போகுமுன், சந்தோஷ் தடுத்து சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தான்.

“என்ன சந்தோஷ் கொஞ்சம் வெய்ட் பண்ணு வந்து பேசுறேன்.” என்றவன் மனமோ, ‘இவன் வேற நேரங்காலம் தெரியாம’ என எரிச்சல்பட்டது.

“இதை மட்டும் கேட்டுட்டு போண்ணா.”

“முடியாது போடா” என்று விலகி உள்ளே செல்ல யத்தனித்தவனை, சந்திரன் தடுத்து, தன்னுடைய நிறுவன ஒப்பந்தம் பற்றிப் பேச, நொந்ததென்னவோ நம் கார்த்திக்தான்.

“அப்பா! இதெல்லாம் வெளியே நின்னே பேசணும்னு இருக்கா என்ன? நான் போய் ஃப்ரஷ்ஷாகிட்டு வந்திடுறேனே. அப்புறமா உட்கார்ந்து நிதானமா பேசலாம்.”

“என்னண்ணா நீ? ஆசையா உன்கிட்ட பேசலாம்னு வந்தா, ரொம்பத்தான் அவசரப்படுறியே?” என அலுத்துக்கொண்டான் சந்தோஷ்.

‘உன் ஆசையில் நாலு அடிபோட’ என பல்லைக்கடித்து, “விடுடா. நான் என் ஒய்ஃபை பார்க்கணும்” என்றான்.

“அப்படி வா வழிக்கு. இதை அப்பவே சொல்லியிருக்க வேண்டியதுதான?”

“சந்தோஷ் அவனை ஏன் மறிச்சிட்டு நிற்கிற?” என்று சின்ன மகனை அதட்டி, கார்த்திக்கிடம் திரும்பியவர், “அவந்தி ஏதோ டல்லா இருந்தா சி.என். என்னன்னு கேட்டா அவுட் ஹவுஸ்வரை போயிட்டு வர்றேன்னு போயிருக்கா. எதாவது சண்டையா சி.என்?” என கேட்டார் புவனேஸ்வரி.

“சண்டையா? நோ புவன்ஸ். உங்க பையன் ரொம்ப நல்லவன்னு தெரியாதா? இதோ இப்பவே போய் பார்க்கிறேன்” என்றவனுக்குள் வந்தபொழுது இருந்த சந்தோஷம் காணாமல் போயிருந்தது, மனைவி டல்லாக இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டதால். பத்தடி நடந்தவன் திரும்பி வந்து, “புவன்ஸ்! இந்த அவந்தி நீங்க சொன்னதா சொல்லி, அடிக்கடி என்னை ப்ளாக்மெய்ல் பண்றா? நீங்க என்ன சொன்னீங்கன்றதையும் சொல்ல மாட்டேன்றா. எனக்குத்தான் ஒண்ணும் புரியல. அப்படி என்ன சொன்னீங்க?”

புவனேஸ்வரிக்கு ஒன்றும் புரியவில்லை. “நானா? நான் என்னடா சொன்னேன்? எப்ப சொன்னேன்னு நியாபகமில்லையே.”

“அதான் புவன்ஸ். எங்க கல்யாணத்தன்னைக்கு, நான் பர்ஸ்ட் நைட் கலாட்டா பண்ணினேன்ல. அப்ப இருந்து சொல்லிக் காட்டுறா.”

என்னவென்று யோசித்தவர் முகம் புன்னகையில் மலர, “டேய் சி.என்! நான் சொன்னதை சரிதான்னு நிரூபிச்சிட்ட போல” என்று சிரித்தார்.

இரு மகன்களுடன் சேர்ந்து சந்திரனும் விவரம் புரியாமல் விழிக்க, ஈஸ்வரியின் சிரிப்பு அடங்காமல் போனது.

“புவன்ஸ் நீங்க கலெக்டரா? இல்ல கடுப்பேத்துற கடுப்பரா சொல்லுங்க? ப்ளீஸ். என் செல்ல அம்மால்ல. சொல்லுங்க புவன்ஸ்?” என கெஞ்சலில் இறங்க,

“என்ன சொன்னேன்?” என யோசனைக்குப்போன தாயை “ப்புவன்ன்ஸ்ஸ்..” என்ற கார்த்திக் குரலாலேயே சுட்டெரிக்க, “இவன் வேற கண்ணகி மாதிரி கண்ணாலயே எரிக்கிறான். இருடா நியாபகப்படுத்திக்க வேண்டாமா?”

“நியாபகம் வராமலா, இவ்வளவு நேரம் கிண்டல் செஞ்சி சிரிச்சீங்க?”

“ஓ... ஆமாம்ல மறந்துட்டேன்டா சி.என்” என்றவரை முடிந்தமட்டும் கார்த்திக் முறைக்க, “ஹான் நியாபகம் வந்திருச்சி. அப்பா, பிள்ளைங்க எல்லாம் வெட்டி பேச்சின்னு சொன்னேனா? வெட்டி ஜம்பம்னு சொன்னேனா? ஏதோ ஒண்ணு. பேச்சு மட்டும்தான் இருக்கும். செயல்ல ஒண்ணும் இருக்காது என்ற அர்த்தத்துல சொன்னேன்.”

விஷயத்தை உள்வாங்கியவன் புரிந்ததும், “புவன்ஸ்” என பல்லைக்கடிக்க,

“போடா! என் மருமகள் புத்திசாலி. கோடு போட்டிருக்கா. அதுல உனக்கு ரோடு போடத் தெரியலை. பேசுறான் பாரு பேச்சு” என முடிக்கக்கூட இல்லை, அதற்குள் அவுட் ஹவுஸ் வாசலில் நின்றிருந்தான்.

“டேய் சி.என்! நைட் எட்டு மணிக்கெல்லாம் கேக் கட் பண்ணனும். ரெண்டுபேரும் சீக்கிரம் வந்துருங்க. அங்கேயே செட்டிலாகிராதீங்க” என்று சத்தமாக சொல்லி உள்ளே சென்றார்கள்.

மெல்ல கதவு தட்ட, திறந்திருந்த கதவு தன்னாலேயே வழிவிட்டது. உள்ளே நுழைந்தவன் மனைவியைத் தேட, அவனின் அழகியோ, கணவனையே கண்சிமிட்டாமல் உதட்டில் புன்னகையுடன் பார்த்திருந்தவள், “என் மனமீனை பார்த்துட்டீங்க போல” என்றாள்.

விரிந்த புன்னகையுடன் ‘ஆம்’ என தலையசைத்ததற்கு மேல், பேச்சு வரவில்லை கார்த்திக்கிற்கு.

“இருங்க முழுசா என் மனமீனை அனுப்புறேன்” என்று கணவனைப் பார்த்தபடியே நடந்து வந்தாள்.

உன் வார்த்தையெனும் ஜாலத்தில்

வம்பாய் என்னுள் நுழைந்தவனே!

வீம்பாய் உனை

விரட்டிட நினைத்தாலும்,

என் உள்மனம் ஊடுருவி,

என்ன மாயம் செய்தாயோ!

நான் நானாயில்லாமல்,

நீயே, நானாகிப் போனேனே!

உன் ஆழ்ந்த வார்த்தைகளில்,

அசந்த எனை,

அசராமல் வீழ்த்தியடித்தாயடா!

உன் ஒவ்வொரு வார்த்தையும்,

வில்லாய் மாறி,

எனை அடியோடு சாய்த்ததடா!

கவிதையின் முடிவில், கணவன் முன் நின்று, அவன் முகம் தொட்டு எம்பி அவனறிய கன்னத்தில் முத்தமிட்டு, “என் இரண்டாவது முத்தம். எப்படியிருக்கு கார்த்திக்?” என்றாள் கண் சிமிட்டி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
620
அதுவரை மனைவியையே கண்கள் களவாடிக் கொண்டிருக்க, அவனுக்காகவே திருமண வரவேற்பு அன்று உடுத்திய, கணவனின் பரிசுச் சேலையை அணிந்து, மிதமான அலங்காரத்தில், இடுப்பு சேலையை இறக்கிவிட்டு, மச்சத்தை கணவனின் கண்களுக்கு விருந்தாக்கி, கண்களால் வசீகரித்து, முகம் முழுக்க மோக(ன) புன்னகையுடன், கவிதையோடு கவிதையாக வந்த, கவிதைப் பெண்ணை, சிறிது சிறிதாகக் களவாடிக் கொண்டிருந்தவன், மனைவியின், ‘இரண்டாவது முத்தம் எப்படியிருக்கு?” என்ற கேள்வியில் ஆச்சர்யத்துடன், “ஹேய் அழகி! என்ன சொன்ன? இரண்டாவது முத்தமா? இதான பர்ஸ்ட்?” என்றான்.

“ம்... அது நைட் உங்களுக்கு பர்த்டே விஷ் பண்ணினேன்ல, அதான் பர்ஸ்ட்” என வெட்கப்பட்டாள்.

‘எப்படா?’ என குழம்பியவனைப் பார்த்து, “என்ன பாஸ் நைட் பனிரெண்டு மணிக்கு ஷார்ப்பா கொடுத்தேன். நீங்கதான் தூங்கிட்டு இருந்தீங்க” என்று அவன் மீசையை உரிமையுடன் திருகினாள்.

“அடிப்பாவி! ஷாக் மேல ஷாக் கொடுக்கிற. தினமீன்ல, உன் மனமீன் தூது வருது.”

“தேங்க்ஸ்ங்க.”

“எதுக்குமா?”

“எப்படி சொல்றது? ம்.. உங்களோட மூணு வருஷ காதலுக்கு. எப்படி உங்ககிட்ட ப்ரபோஸ் பண்ணினேன்னு தெரியலை. அப்பவும் உங்களை தப்பா நினைக்கத் தோணலை. அதுக்கு அப்புறமும் உங்கமேல அவ்வளவு நம்பிக்கை. நீங்கதான் எனக்கு எல்லாமேன்ற, பலமான ஒரு எண்ணம் எனக்கு. ஒருவிதமான உரிமையுணர்வு கூடன்னு சொல்லலாம்.”

“தெரியும் அவந்திமா. நானே ஆச்சர்யப்பட்ட விஷயம் அது. இரண்டே சந்திப்புல, என்னை எப்படி நீ நம்பினன்னு தெரியலை. நீங்க இல்லன்னா, செத்துருவேன்னு சொன்னியே, அதுக்கு முன்னாடி என்னோட மூணு வருஷ காதலெல்லாம், தோற்றுப் போயிருச்சிடா. இந்த மூணு வருஷத்துக்குள்ள உனக்குக் கல்யாணம் அகிருக்கக்கூடாதுன்னு நினைக்கலை. ஏன்னா, அப்படி ஒரு ஏற்பாடு நடந்திருந்தா கூட, அங்க உனக்குப் பார்க்கிற முதல் மாப்பிள்ளை, நானாகத்தான் இருந்திருப்பேன்” என்று மென்மையாகத் தன் நிலைப்பாட்டை மனைவியிடம் சொன்னான்.

கணவனை இறுக்கியணைத்து “ஒன்ஸ் அகெய்ன் தேங்க்யூ” என்றாள்.

“வெறும் தேங்க்ஸ் மட்டும்தானா?”

தெரிந்தே தெரியாதது போல், “வேறென்ன வேணும் கார்த்திக்?” என்று கணவனின் அணைப்பிலிருந்து விடுபட்டு ஓடப் பார்க்க,

“நடிக்காதடி. உனக்குத் தெரியாதா?”

“ம்கூம்.. தெரியாது கார்த்திக்.”

“நான் இனிமேல் வெட்டி ஜம்பம் அடிக்கப்போறதில்லை. ஒன்லி ஆக்ஷன்தான்” என்றான்.

“அத்தைகிட்ட கேட்டீங்களா கார்த்திக்? கல்யாணமான அன்னையிலிருந்தே நான் சொல்லிட்டிருக்கேனே கார்த்திக்” என மயக்கும் புன்னகை விடுத்தாள்.

“அப்ப நான்தான் சொதப்பிட்டேனா. அம்மாகிட்ட கேட்கிறதுக்கு முன்னாடியே, ஆக்ஷன்தான் பெஸ்ட்னு முடிவு பண்ணிட்டேன் தெரியுமா?” என்றான் கண்சிமிட்டி.

“வெவ்வவ்வவ்வே...” என உதடு சுழித்தபடி ஓட,

மனைவியின் வாயில், ‘கார்த்திக்’ என்ற தன் பெயர் சர்வசாதாரணமாக வருவதை உணர்ந்தவனுக்கு, மனதிலிருந்த பாரம் முழுவதும் நீங்க, இரண்டே எட்டில் அவளைப் பிடித்து, செயலிலும் தான் அதிரடி நாயகன்தான் என மனைவிக்கு நிரூபித்தான்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் கார்த்திக்கின் கைபேசியில் அழைப்பு வர. எடுத்துப் பேசியவன், “கொஞ்ச நேரத்துல வந்திடுறோம்பா” என்று போனை வைத்து, தன்மீது தலைவைத்து படுத்திருந்த மனைவியின் முடியை ஒதுக்கி, “ஹேய் அழகி! அழைப்பு வந்திருச்சி. வா கிளம்பலாம்.”

“ம்கூம்.. நான் வரமாட்டேன் கார்த்திக். எனக்கு வெட்கமாயிருக்கு” என்றபடி கணவனை ஒண்டினாள்.

“வெட்கப்பட்டா வேலைக்காகாது அவந்திமா.”

“ம்ம்ம்... போங்க கார்த்திக்” என சிணுங்கினாள்.

“போகத்தான்மா கூப்பிடுறேன்” என இருவரும் வாதாடியபடியே குளித்துக் கிளம்பினார்கள்.

பிறந்தநாளிற்காக தான் வாங்கியிருந்த, ஜீன்ஸ், டிசர்ட்டை கார்த்திக் உடுத்தியிருக்க, லாங் ஸ்கர்டும், டாப்புமாக வந்தவளைப் பார்த்ததும் விசிலடித்து, “வாவ்! அழகி! உண்மையிலேயே நீ அழகிதான். யார் செலக்ஷன். சூப்பராயிருக்கு. நான் உன்னைப் பார்க்கிற அவசரத்துல கிஃப்ட் வாங்காம வந்திட்டேன்.”

கணவனின் புகழ்ச்சியில் வெட்கம் வர, ஈஸூமாதான், உனக்கு இந்தமாதிரி ட்ரஸ் அழகாயிருக்கும்னு எடுத்தாங்க. அப்புறம் என் லைஃப்ல, நீங்களே பெரிய கிஃப்ட் கார்த்திக். ஆயுளுக்கும் கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லுவேன். உங்களை எனக்காக அனுப்பியதுக்கு.”

மெல்ல மனைவியின் அருகில் வந்தவன் பின்புறமாக அணைத்துத் தோள் வளைவில் முகம் புதைத்து, “அப்ப நீ எனக்கு மூணுவருஷத்துக்கு முன்னாடியே கிடைச்ச கிஃப்ட் இல்லையா. ஓய் அழகி! கண்டிப்பா நாம வீட்டுக்குப் போகணுமா? கேக் நாளைக்கு கட் பண்ணிக்கலாம். இன்னைக்கு இங்கேயே ஸ்டே பண்ணிக்கலாமா?” என்றான் கிறக்ககுரலில்.

“கார்த்திக்” என்று சிணுங்கி, “நீங்கதான போகலாம் சொன்னீங்க. இப்ப இப்படிச் சொல்றீங்க? ஒரு சிஐடி ஆஃபீஸர், இப்படி வாக்கு மாறலாமா?”

“கண்டிப்பா. போலீஸ் வாக்கு மாறமாட்டான். ஆனா, உனக்கு வாக்குக் கொடுத்தது திருட்டுப்பயல் கார்த்திக்காச்சே!”

“ஹையோ! கார்த்திக்கை திருட்டுப்பயல் சொல்லாதீங்க, சொல்லி இருக்கேன்ல.”

“ஏன்டா? அவன் திருடன்தான. உன் இதயத்திருடன்” என்று கன்னத்தில் முத்தமிட, அவந்திக்கோ நாணம் வந்து அழையா விருந்தாளியாய் முகத்தில் குடியேறியது. அதை ரசித்து நச்சென்று இச்சொன்று வைத்து, “வா போகலாம்” என்றான்.

இருவரும் வீடு செல்ல, வீடே பளிச்சென்றிருந்தது.

நேத்ராவும் சீக்கிரமே வந்திருந்ததால், சந்தோஷ், நித்யாவுடன் சேர்ந்து அழகாக அலங்காரம் செய்து அசத்தியிருந்தார்கள். வீடு முழுக்க பலூன்களும், வண்க் காகிதங்களும் ஒட்டி அழகோவியமாகக் காட்சியளித்தது.

இவர்களின் வரவை அறிந்து வாசலிலேயே, ஸ்நோ ஒய்ட் ஸ்பிரே அடித்து வரவேற்பு கொடுத்து, உள்ளே வந்ததும், கார்த்திக் கேக் வெட்டினான். அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல, வெட்டிய முதல் துண்டு தாயின் வாயில் வைத்தான். அடுத்ததை அப்பாவிற்கு கொடுத்து அதன்பின்னே மனைவிக்குக் கொடுக்க, அனைவரும் பார்க்க அழகான முத்தமொன்றை கன்னத்திலிட்டாள் அவனின் அழகி.

“ஹோய்!” என சிறியவர்கள் சந்தோஷ கூச்சலிட, அவர்களிட்ட கூச்சலில் வெட்கம் வந்த அவந்திகா மாமியாரின் பின் ஒழிந்தாள்.

“அண்ணா இது டூ த்ரீ மச். மேரேஜ்கு அப்புறம் வர்ற முதல் பர்த்டே. அண்ணிக்கு இம்பார்ட்டண்ட் கொடுத்து, முதல்ல அவங்களுக்கு கேக் ஊட்டிவிடுவன்னு பார்த்தா சொதப்பிட்டியேண்ணா.”

“ஏன்டா?” மனைவி கொடுத்த முத்தத்தை முழுசா அனுபவிக்க விடமாட்டேன் என்கிறானே என சலித்து, “சரியா தாண்டா செய்திருக்கேன்” என்று தம்பிக்குப் பதிலளித்தான்.

‘இல்லை’ என்று மறுத்து பதிலளிக்க வந்த கொழுந்தனிடம், “இல்ல சந்தோஷ் அவங்க சொதப்பல. சரியாகத்தான் செய்றாங்க. எப்பவும் எங்களுக்கு ஃபர்ஸ்ட் மாமாவும், அத்தையும் தான். என்ன ஈஸூமா?” என்ற மருமகளை பாசத்துடன் அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

“நானும்” என அருகில் வந்த நேத்ராவையும் சேர்த்தணைத்து, “நீயும்தான்மா” என்றார்.

“ஷப்பா.. திருஷ்டி சுத்திப் போடணும் எங்க அண்ணிங்களுக்கு” என்று நித்யா கையால் சுத்தி, தானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

அந்த சந்தோஷத் தருணங்களை, தன் புகைப்படக் கருவியில், சந்திரன் புகைப்படம் எடுத்தார்.

பின் அவரவர் பரிசுப்பொருள் கொடுக்க, அவந்திகாவின் புறம் திரும்பியவனைப் பார்த்து சிரித்தபடி, ஒரு புத்தகத்தை நீட்டினாள். காலையில் விஷ்ணுவிடம் தயாரா என கேட்டது இந்த பரிசைதான்.

மனைவியைப் பார்த்துக்கொண்டே புத்தகத்தை வாங்கிப் பார்க்க, “சி.என்-ன் சிறப்புக் காதல் கவிதைகள்” என்ற தலைப்பில், கடந்த ஏழு மாதங்களாக அவந்திகாவுக்கு அனுப்பிய, கவிதைகளின் தொகுப்பு இருந்தது.

கண்கள் விரிய, “ஹேய் அழகி! இதெப்படி? இதையெல்லாம் பத்திரமா வச்சிருந்தியா?” என்றான் ஆச்சர்யமாக. அவனால் நம்ப முடியவில்லை. யாரென்ற தெரியாததால், அதையெல்லாம் அப்பொழுதே கிழித்து எறிந்திருப்பாள் என எண்ணியிருந்தான்.

“ம்... பொதுவா வர்ற லெட்டர்ஸை அவாய்ட் பண்றதில்லை. அன்னன்னைக்கு வந்த பைல்ல இருக்கும். அதையெல்லாம் தேடிப்பிடிச்சி, தேதி வாரியா வரிசையா விஷ்ணுகிட்டக் கொடுத்து, பிரிண்ட் பண்ணச்சொன்னேன். இப்ப இந்த கவிதைகள் எனக்கே எனக்கானது! இந்த கவிதைகளின் சொந்தக்காரனும் எனக்கே எனக்கானவன்! அதான் நமக்காக ஒரு புக் மட்டும் போட்டேன். எப்படியிருக்கு கார்த்திக்?” என்றாள் கண்களில் மின்னிய ஆர்வத்துடன்.

“என்னோட அழகி மாதிரியே, ரொம்பவே அழகாயிருக்கு அவந்திமா!” என்று மனைவியை நெருங்கி, ஆசையாக காதல் பார்வை பார்க்க,

“அச்சோ! பச்சப்புள்ளைங்க இருக்கிற வீட்ல, இவங்க ரொமான்ஸ் தாங்கலையே. நேத்திமா நீ இதெல்லாம் பார்க்காதடா. கெட்டுப்போயிருவ” என்று அவளின் கண்களை மூடி, “ரெண்டு வருஷம் கழிச்சி மேரேஜ் பண்ணிக்கலாம்னு பார்த்தா, இந்த ஜோடிங்க இப்பவே பண்ண வச்சிருவாங்க போலவே!” என்று அலுத்துக்கொண்டான்.

“சந்தோஷ்ஷ்ஷ்...” என நான்கு புறங்களில் இருந்தும் கண்டனக் குரல்கள் கேட்க,

“ஆத்தீ! நான் இல்லை” என்ற சந்தோஷின் அலறல் குரலில், அனைவரும் சிரித்தனர்.

இனிவரும் காலத்தையும், அவர்களுக்கு சந்தோஷமாக வழங்கி, சந்தோஷமாக விடைபெறுவோம்.



நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top