• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிறைவுப் பகுதி

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
620
20



“எங்க மருமகளை அப்படியே விட்டுருவோமா” என்றார்கள் சதாசிவம் ராகினி தம்பதி.

“அத்தை” என்றழுதபடி அவர் தோள் சாய்ந்து விசும்பினாள் பவானி.

“முதல்முறை நீ போட்டோ காட்டினப்பவே உன் பக்கத்துல இருந்தது யாருன்னு கண்டுபிடிச்சிட்டோம். அவசரத்துல வந்ததால அவன் அக்கா பிறந்தநாளுக்கு வாங்கிக் கொடுத்த சட்டையைப் போட்டுட்டு வந்துட்டான் போல. இல்லைனா இத்தனை நாள் உன் திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சைக் கிளறி உண்மையை வரவழைக்காம விட்டுருப்போமா? எவ்வளவு தூரம் போறீங்கன்னு பார்க்கத்தான் தள்ளி நின்னோம்” என்றார் ராகினி.

“அப்ப எதுக்கு அப்பா என்னை அடிச்சாங்க?” என்று இடையிட்டான் அதியன்.

“அது முன்ன செஞ்சதுக்கு. இல்லைனா வயசுப்பிள்ளையை கல்யாணமாகாத பையன் இருக்கிற வீட்டில் வைக்க முடியுமா? இவ்வளவுக்கும் நம்ம இரண்டு குடும்பத்துக்கும் பிரச்சனை வேற இருந்தது. இதையெல்லாம் விடு அதி. நீ என்ன முடிவு பண்ணியிருக்க?” என்றார் ராகினி.

அவ்வளவு நேரம் அமைதியாகயிருந்த செந்தூரன், “நான் பேசலாமா அத்தை?” என்று எழுந்தான்.

“உன் வீட்டுல பேச அனுமதி கேட்கலாமா செந்தூர் கண்ணா?” எனறார் அன்பைக்கொட்டி.

“பவி சொன்ன மாதிரி நடந்தது ஒரு ஆக்சிடெண்ட்தான் அத்தை. தவறு முழுக்க என் தங்கைகிட்ட இருக்கு. அவள் அதைச் செய்ய முழுக்காரணமும் நான்தான். தண்டனை எங்களுக்குதான் இருக்கணுமே தவிர, அதியனுக்கா இருக்கக்கூடாது. அவனை இதுல சிக்க வைக்குறதுல எனக்குமே இஷ்டமில்லை அத்தை. அவனுக்கும் ஆசை கனவு இருக்கும். வரப்போற மனைவி அவன் புரொபஷனல்ல எதிர்பார்த்திருக்கலாம். அவனை கட்டாயப்படுத்தாதீங்க அத்தை” என்றான் நிதானமாக.

“என்னங்க பவிக்குட்டி?” என நாத்தனாரின் வாழ்க்கை என்னாவது என்பதாய் பரிதவிப்புடன் கணவனிடம் கேட்டாள் அன்பழகி.

“அவளை இன்னொரு ராஜேஸ்வரியா மாற நானும் அனுமதிக்க மாட்டேன் அன்பழகி. கடைசிவரை நாம அவளைப் பார்த்துக்கலாம்” என்றவன் “இதோ வர்றேன்” என அன்பழகியின் அறைக்குள் சென்று ஒரு சில காகிதமடங்கிய கோப்பை எடுத்து வந்து மாமியாரிடம் கொடுத்தான்.

என்னவென்று படித்துப் பார்த்த ராகினி வியப்பாய் அவனைக்காண, “விவாகரத்துப் பேப்பர்ல கையெழுத்து வாங்கின அன்னைக்குதான் அத்தை, திரும்பவும் எங்க கல்யாணத்தைப் பதிவு செய்யுறதுக்கான இந்த பேப்பரிலும் கையெழுத்து வாங்கி ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல பதிவு பண்ணியிருந்தேன்” என,

“அதெப்படி ஒரே பெயருள்ளவங்களுக்கு இரண்டு முறை ரிஜிஸ்டர் பண்ணவாங்க? கம்ப்யூட்டர்ல போட்டாலே தெரிஞ்சிருமே?” என தன் சந்தேகத்தைக் கேட்டார் ராகினி.

“சாகாதவனுக்கு செத்ததாகவும், செத்தவனுக்கு சாகாதவனாகவும் சர்டிபிகேட் வாங்குற காலத்துல இருக்கோம் அத்தை. இது எம்மாத்திரம் சொல்லுங்க? அங்கங்க பணத்தைக் கொடுத்தா பழசை அழிச்சிட்டு புதுசை பதிவு பண்ணலாம்.”

“நல்ல ப்ளான்தான் மச்சான்” என்றான் அதியன்.

“ஒருவேளை என்னை மீறி கோர்ட் விவாகரத்து கொடுக்கிற மாதிரி இருந்ததுன்னா, இதை வச்சி அதை செல்லாமல் ஆக்குறதா ப்ளான். என் மனைவியை விட்டுட்டுப் போறதா கனவுல கூட நினைத்ததில்லை அத்தை. அவளை என்னோட இருக்க வைக்க என்னாலான முயற்சிதான் இது” என்றான்.

மனதினுள் சந்தோசம் குமிழ்ந்தாலும், “இவங்களும் இவங்க ப்ளானும். என்னை அழ வச்சாங்கதானம்மா. நீங்க அவங்க சொந்த அத்தைதான? இரண்டு அடி போடுங்கம்மா” என்றாள் கணவனை முறைத்தபடி.

“அது கல்யாணத்துக்கு முன்ன பொம்மு. இப்ப அவன்மேல கைவச்சா அவன் பொண்டாட்டி என்னைப் பிச்சிருவா. எதுவானாலும் அவளே செய்யட்டும்” என்று ராகினி தப்பித்துக்கொள்ள, “ம்மா” என்றாள் சிணுங்கலாக.

“அத்தை வர்ற புதன்கிழமை வளர்பிறை முகூர்த்தநாள் நல்லாயிருக்குன்னு ஜோசியர் சொன்னார். அன்னைக்கே அன்பழகியைக் கூட்டிட்டுப் போறோம். இன்னும் ஆறு நாள்தான் இருக்கு. இப்ப நாங்க வீட்டுக்குக் கிளம்புறோம். சித்தி சித்தப்பாவை வேற வீடு பார்த்துக்கச் சொல்லிட்டேன். எப்படியும் சித்தப்பாவுக்கு தண்டனை கிடைக்கும். அவர் வெளில வர்றது வரையோ, இல்லை பையன்கள் வேலைக்குப் போகும் வரையோ, மறைமுகமானாலும் நான்தான் அவங்களுக்கு உதவணும்.”

“அது உன் கடமை செந்தூர் கண்ணா. அவங்களை அப்படியே விட்டால்தான் தப்பு. பவி ஓரளவு பாதுகாப்பா இருந்திருக்காள்னா அவங்களும் ஒரு காரணம்தானே? நம்ம பவிக்காகவே செய்யலாம்” என்றார் ராகினி.

“தேங்க்ஸ் அத்தை. அப்புறம் அதியன் ஒரு சின்ன ரெக்வஸ்ட்.”

“சொல்லுங்க மச்சான்” என்றான் அமைதியாக.

“நடந்ததை மறந்துட்டு உன் வாழ்க்கையை வாழப்பார்” என்றவன் தங்கையின் தோளணைத்து, தன் துக்கத்தைத் தொண்டைக்குள் நிறுத்தி, “போகலாமா?” என்றவன் நிமிர்ந்து மனைவி முகம் பார்க்க, அவளோ கலங்கிய விழிகளுடன் கணவன் முகம் பார்க்க, “என் அன்பழகி எப்பவும் அழக்கூடாது. ஆறாவது நாள் காலையில் இருந்து என்கூடவே இருப்ப. சரியா?”

அவள் ‘ம்..’ என தலையசைத்ததும் வாசல் சென்றவனுக்கு திடீரென்று விக்கலெடுத்தது.

‘என்ன எப்பவும் அக்காவுக்கு விக்கலெடுக்கும். இப்ப மச்சானுக்கு எடுக்குது?’ அதியனுக்கு சிறு சந்தேகம் எழுந்தாலும் அங்கிருந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தான்.

இருந்தும் விக்கல் நிற்காமல் தொடர, “அன்புக்கா! நீங்க போகாம மச்சானுக்கு விக்கல் போகாது” என்ற ராகேஷ், “பவானிமா நீ ஃப்ரீ Nஷh பார்க்க வேண்டாம் கொஞ்சம் தள்ளிப்போய் திரும்பி நின்னுக்கோ” என்று கிண்டலடிக்க, அனைவரும் சிரிக்க, அன்பழகியோ வந்த வெட்கத்தில் ஒழிந்துகொள்ள இடம் தேடிக்கொண்டிருந்தாள்.

அனைவரும் இங்கிதமறிந்து விலகிச் செல்ல, வேறு வழியில்லாது கணவனருகில் சென்றவள், “என்ன விக்கல் எப்பவும் எனக்குத்தான் வரும். இப்ப என்ன இடம் மாறியிருக்கு?” என்றாள் சின்னதான குரலில்.

‘ஹக்...’ என விக்கல் எழ, “இங்கவுள்ள எல்லாமே இடம் மாறினதால, அங்கிருந்தும் இங்க மாறிருச்சோ என்னவோ” என்றான் இருபொருள்பட.

“அதெப்படி மாறுச்சாம்?” என்று கொஞ்சலாகக் கேட்க,

“இப்படித்தான்” என்று அவளிதழில் தன்னிதழால் தொட்டும் தொடாமல் முத்தமிட்டு விலகி, “வர்ற புதன்கிழமை வரை உனக்கு நேரமிருக்கு. அன்றைய நாள் இரவு நமக்கானது” என்று கண்ணடித்து மனைவியின் நாணச்சிவப்பை ரசித்தபடி, “எதையுமே யோசிக்காம நடக்குறதை அது போக்குல விட்டுட்டு அமைதியாயிரு அன்பழகி. பவி நிலை அவளா உருவாக்கினது. அவள் மனசு மாறும்வரைக் காத்திருப்போம்” என்றான்.

“அதி மேல உங்களுக்குக் கோபமில்லையாங்க?” என கேட்க,

“சுத்தமா கிடையாது. இப்பவும் அவன்கிட்ட என் தங்கச்சியை மனைவியா ஏத்துக்கோன்னு சொன்னா, உனக்காகன்னாலும் மறுக்கமாட்டான். கிடைச்சதுடா சான்ஸ்னு அவங்களை சேர்த்து வைத்த பின் பிரச்சனைன்னு வந்தா இரண்டு பேருக்குமே பாதிப்பு. அது எதுக்கு சொல்லு? அவன் நல்லாயிருக்கட்டும் அன்பழகி. கன்வின்ஸ் பண்ண முயற்சிக்காதீங்க. பிடித்தம்ன்றது தன்னால வரணும். வரவழைக்கக்கூடாது. அத்தை மாமாகிட்டேயும் சொல்லிரு” என தங்கையுடன் கிளம்பினான்.

தற்செயலாக அதைக்கேட்ட அதியன் மனதில் மதிப்பிற்குரிய இடத்தில் அமர்ந்தான் செந்தூரன்.

சொன்னாற்போல் புதன்கிழமை காலையிலேயே வந்தவன் மனைவியை ஆவலுடன் எதிர்பார்க்க, தன்னுடன் வருவதற்கென்றே புடவையை பார்த்துப்பார்த்துக் கட்டியிருந்தாளோ! அவளைக் கண்ட நிமிடம் இமை சிமிட்டாது பார்த்திருக்க, ‘எப்படி’ என்பதாய் புருவம் உயர்த்தியவளிடம், “சூப்பர். அள்ளிக்கலாம் போலிருக்கு” என்று உதடசைக்க, ‘பிச்சி பிச்சி’ என அவளும் கண்களால் மிரட்ட, சொல்லவும் வேண்டுமா அவனுக்கு.

மனைவியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, அவர்களை ஒரு காரில் தன்னைத் தொடரும்படி சொல்லி வண்டியை எடுக்க, தங்கையைக் கேட்ட மனைவியிடம், “உன் வரவிற்காக வாசல்ல காத்திருக்கா” என்றான்.

“ஓ.. ஆரத்தி எடுக்கவா” என்றதற்கு அவன் சிரிக்க, அப்பொழுதுதான் கவனித்தாள் கார் வேறு திசையில் செல்வதை. “இதென்ன ரூட் வேற மாதிரியிருக்கு?” என்று பதற,

“ஸ்ஸ்.. சத்தம் வரக்கூடாது. நான் எங்க போனாலும் நியும் வரணும்” என்றதுதான் தாமதம் இரு கைகள் வைத்து வாயை மூடிக்கொண்டாள்.

பவானி மருத்துவமனை நுழைந்து வண்டியை அதனிடத்தில் விட்டு வர, அடுத்து வந்த காரும் அவர்களருகில் நின்று அன்பழகி குடும்பத்தினரை இறக்கிவிட்டுச் செல்ல, “பவி வர்றா. அவளோட உள்ள ரிசப்ஷன் வந்திருங்க மாமா. ஒரு சின்ன வேலையிருக்கு முடிச்சிட்டு வந்திருறேன்” என்று செந்தூரன் செல்ல,

அவர்களைக் கண்டதும் வேகமாக வந்த பவானி, “வெல்கம் அண்ணி” என்று அன்பழகியைக் கட்டிக்கொண்டு விலகி, “வாங்க மாமா! வாங்க அத்தை! வாங்க அகில் அத்தான்! வாங்க அதியன் சார்” எனும்போது குரல் சற்றே இறங்க,

“கொடுத்தா வாங்குறதுல தப்பில்லை. கொடுக்கத் தயாரா?” என்றானவன்.

“எதை?” என்றாள் புரியாது.

“அதை நைட் சொல்றேன். இப்ப உள்ளே போகலாமா எலிக்குட்டி?” என்றான் சிரிப்புடன்.

“ஒருநாள் இல்லை ஒருநாள் நிஜ எலிக்குட்டியைப் பிடித்து உங்க கையில் வைக்குறேனா இல்லையா பாருங்க” என்று சிலிர்க்க,

“நிஜ எலிக்குட்டி நீதானே! உன்னை எப்படி கையில் வைக்குறது?” என்றான் கேலியாக.


“அத்தை பாருங்க” என சிணுங்கி ராகினியிடம் செல்லம் கொஞ்ச, “சும்மா இரேன்டா” என்று மகனை அடக்கி, “வா போகலாம்” என்று உள்ளே செல்ல, எதிரே வந்த செந்தூரனைப் பார்த்து அதிசயித்து நின்றார்கள்.
IMG-20230501-WA0003.jpg
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
620
மருத்துவர் உடையில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பைத் தொங்கவிட்டு, முகம் முழுக்கப் புன்னகையுடன் அவர்களை எதிர்கொண்டவன் மனைவியவளைப் பார்க்க, அவளோ பார்த்த விழிகள் பார்த்தபடி பூத்து இருக்க சிலையாகி நின்றுவிட்டாள். அவள் வீட்டினர் கணவனை வாழ்த்தி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்த எதுவும் அவள் காதில் விழவில்லை.

“என்ன மிஸஸ்.செந்தூரன்? இதுதான் அழகுல மயங்குறதா?” என்று அவள் கன்னத்தைத் தட்ட, ‘ஹான்!’ என சுயம் வந்து. “நீங்க எப்படி? சொல்லவேயில்லை” என்றாள் வியப்பு குறையாது.

“உன்கிட்ட சொல்லாமல் செய்வேனா? நீ வந்ததும் முறையா எல்லாருக்கும் சொல்லி பொறுப்பை எடுத்துக்கப் போறேன். மீட்டிங் ஹால் போகலாமா?” என்று கையை நீட்ட, மந்திரித்த கோழியாய் கையை அவன் கையில் வைத்து நடப்பவற்றை நம்பவியலாது அவனிழுத்த இழுப்புக்குச் சென்றாள்.

மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் அன்பழகி குடும்பத்தினரும் செந்தூரனின் நண்பர்கள் சிலரும் இருக்க, மேடையில் செந்தூரனின் அப்பா பெயருடைய டாக்டர்.செல்லத்துரையும், ஆதிகேவசனும் பவானியுமிருக்க, மனைவியுடன் அவர்களருகில் சென்றமர்ந்து நண்பனிடம் ஆரம்பிக்கச் சொல்லிக் கண்ணசைத்தான் செந்தூரன்.

“இவர் டாக்டர்.செந்தூரன். இந்த ஹாஸ்பிடலோட ஓனர்” என்றதும் கைதட்டி வாழ்த்து தெரிவிக்க, “டாக்டர்.செல்லத்துரை வெளிநாடு போய் செட்டிலாகுறதால இங்கயிருந்து கிளம்ப வேண்டிய சூழ்நிலை. இக்கட்டான நேரத்தில் அவர் செய்த உதவிக்கு நன்றின்னு ஒரு வார்த்தையில் முடிச்சிர முடியாது. எங்களுக்கு எப்பல்லாம் உங்க உதவி தேவைப்படுதோ அப்ப எங்களுக்கு உங்களோட நேரத்தைக் கொடுக்கணும் சார்” என்று அவருக்குக் கோரிக்கை வைக்க, அவரும் “கண்டிப்பா செய்யலாம்பா. உங்களோட வேலை செய்ததுல எனக்குமே சந்தோஷம்” எனவும் அனைவரும் கைதட்டினர்.

“இவங்க மிஸஸ்.செந்தூரன். உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். நம்ம ஹாஸ்பிடல்ல சைக்காலஜிஸ்டா ஒர்க் பண்றாங்க. இன்னையிலிருந்து பவானி ஹாஸ்பிடலோட அட்மினிஸ்ட்ரேட்டரா பிரமோட் ஆகுறாங்க” என்றதும் அதிர்ந்த அன்பழகி கணவனைக் காண, அவள் கைபிடித்து அழுத்தி ஏற்றுக்கொள்ளச் சொல்லி முன்னே காண்பிக்க, அவளுக்காகக் கைதட்டி வாழ்த்தியவர்களைக் கண்டு தலையசைத்து ஏற்றுக்கொண்டாள்.

“ஸ்பெஷல் லீகல் அட்வைசரா வக்கீல் அதியன் நியமிக்கப்படுகிறார்” என்று ஆதிகேசவன் சொல்ல, அதியனோ ஏனென்பதாய் மச்சானைக் காண, கண்மூடி அமைதிபடுத்தினான். “ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட், அக்கௌண்ட்ஸ் அன்ட் கேசியர் டிபார்ட்மெண்ட் இன்னுமொரு ஓனரான பவானி அவர்கள் நியமிக்கப்படுறாங்க” என,

“அண்ணா இவ்வளவு பெரிய பொறுப்பு என்னால முடியாது” என்று மெல்லிய குரலில் மறுக்க,

“அதெல்லாம் முடியும். முடியணும். எத்தனை நாள் குழந்தையாவே இருப்ப? இங்க பார்க்கப்போறதும் நீ பேங்க்ல செய்யப்போற வேலைதான். அப்படி பேங்க் வேலைதான் முக்கியம்னா, காலையும் மாலையும் இங்கே வந்து கணக்கு பார்த்துட்டு கிளம்பு” என்றான் வந்தே ஆகவேண்டுமென்ற கட்டளையுடன்.

“போ” என அண்ணனைத் திட்டி முகம் சுருக்கினாள்.

“மத்த போஸ்டிங் அவங்கவங்க மெயில் ஐடிக்கு வரும். எதாவது சந்தேகம்னா நான் ஆதிகேசவன் என்னைக் கேளுங்க. ஹாஸ்பிடல் போர்டுல என் நம்பர் இருக்கும். இப்ப அவங்கவங்க ட்யூட்டிக்குக் கிளம்புங்க” என்றனுப்பினான்.

“எல்லாம் சரியா சொல்லிருக்கேனா செந்தூர்?” என்றான்.

“நீ எதைடா தப்பா செய்திருக்க? நீ என்ன பண்ணுற பவி கூடயிருந்து பார்த்துக்குற” என்றதும் மறுத்தால் திட்டுவான் என்பதால் சம்மதித்திருந்தான்.

“மச்சான் நான் எதுக்கு?” என அதியன் கேட்க,

“எங்களோட பாதுகாப்புக்குன்னு வச்சிக்க மாப்ள. இப்ப வீட்டுக்குப் போகலாம்” என்று அனைவருடனும் வீட்டிற்குச் செல்ல, பவானி ஆரத்தியெடுத்து, “அண்ணி வந்தாச்சி. என்னோட கனவும் நனவாகிருச்சி” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

அதே நேரம் நேஹா தாயுடன் வர, “நீயும் இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்மா. நீயே வந்து நிற்கிற” என்ற ராகினி சம்பந்தியையும் மருமகளையும் வரவேற்று நலம் விசாரிக்க, மற்றவர்களும் தங்கள் பங்குக்கு விசாரிக்க, நல்ல நேரம் பார்த்து தம்பதிகளுக்குப் பால் பழம் கொடுப்பதில் ஆரம்பித்து சின்னச்சின்ன விளையாட்டுகளுடனும், கலாட்டாக்களுடனும் இடமே களைகட்டியது.

மதிய உணவு உணவகத்தில் வரவழைக்கப்பட்டு பரிமாறப்பட்டதும், “செந்தூர் கண்ணா சாயங்காலம் வெளில ஒரு இடத்துக்குப் போறோம். எதாவது வேலையிருந்தா ஐந்து மணிக்குள்ள முடிச்சிட்டு வந்திரு” என்றிருந்தார் ராகினி.

மூன்று மணியளவில் அழகுநிலையப் பெண்கள் இருவர் வந்து அன்பழகி பவானி இருவரையும் விழாவிற்குச் செல்வதுபோல் அழகாக அலங்கரிக்க, அண்ணியவளிடம் ஏனென்று கேட்க, “போனா தெரியும்” என்றுவிட்டாள் அன்பழகி.

இரண்டு குடும்பத்தினரும் சென்று இறங்கிய இடம் ஒரு திருமண மஹால். அதன் வாயிலின் விளம்பரப்பலகையில் திருமண வரவேற்பு என்று ‘செந்தூரன்-அன்பழகி’ பெயர் புகைப்படத்துடன் இருக்க, இன்னொன்றில் ‘அதியன்-பவானி’ பெயர் புகைப்படத்துடன் இருந்தது.

“என்ன அத்தை இதெல்லாம்?” என்றான் அதியனை வற்புறுத்தியிருப்பார்களோ என்ற எண்ணத்தில்.

“செந்தூர் கண்ணா! அவனை நாங்க யாரும் எதுவும் சொல்லலை. நீங்க கிளம்பின கொஞ்ச நேரத்துல அவனே வந்து மன்னிப்பு கேட்டு ஊரறிய திருமணம் செய்துக்குறேன்னு சொன்னான். நாங்க முதல்ல ஒத்துக்கலை. எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. கல்யாணம் செய்து வைங்கன்னு சொன்னதோடு அவனேதான் இந்த ஏற்பாட்டை செய்தது. இப்ப ரிசப்ஷன்! காலையில் அவங்களுக்கு திருத்தணி முருகன் சன்னிதியில் திருமணம்” என்றார்.

“நிஜமாவே அதியனுக்கு விருப்பம்தானே? கட்டாயப்படுத்தலைல்ல?” என்றான் திரும்பவும்.

“நீங்க வேற மச்சான். நான் கட்டாயப்படுத்தி இந்த ரிசப்ஷனை வைக்க பெர்மிஷன் வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சி” என்றான் நிறைய கடினமாக உழைத்ததுபோல்.

“ஆனாலும்...”

“ஆனாலும் ஆகும்” என்றவன் திகைத்து நின்றிருந்த பவானியிடம், “ஓய் எலிக்குட்டி!” என்று ஆரம்பிக்க,

“நீ கூட சொல்லலை பார்த்தியா?” என்று மனைவியை முறைத்த செந்தூரன் உள்ளே செல்ல, அவன் பின்னேயே சென்றவள், “சர்ப்ரைஸ் செந்தூரா! இந்த வேலையா அலைந்ததாலதான் ஹாஸ்பிடல் வந்து நீங்க செய்த மாற்றத்தைப் பார்க்க முடியலை. வந்திருந்தா கெஸ் பண்ணிருப்பேன்” என்று கணவன் கையை இறுகப் பற்றிக்கொண்டு நடந்தாள்.

“என்னைக் கல்யாணம் செய்துக்குறியா எலிக்குட்டி?”

“என்ன திடீர்னு?” குரல் சற்று குழைந்து வந்ததோ!

“திடீர்னு இல்லை. இருபத்துநாலு வயதுதானே ஆகுது. நான் இருபத்தேழு இல்லை இருபத்தொன்பதுல கல்யாணம் செய்துக்கலாம்னு இருந்தேன். ஆனா, இந்த எலிக்குட்டி இடையில் வந்துட்டா. தாலி கட்டியதை நீ டேக் இட் ஈஸியா எடுத்துப்பன்னு நினைத்தேன். அந்தத் தாலிக்கு இவ்வளவு மதிப்பு கொடுப்பன்னு நினைக்கலை.”

“அப்பப் பரிதாபப்பட்டுதான் இந்த ஏற்பாடா?” என்றாள் இயலாமை கலந்த ஆதங்கத்துடன். அவளுக்கு அவனைப் பிடிக்கும்! அவனை மட்டுமே பிடிக்கும் என்ற நிலை! அது எக்காலத்திலும் மாறாதது. பிடித்தவனே என்றாலும் அவனின் பரிதாபத்தில் வாழ்வதா என்ற கோபம்.

“நிஜமா இல்லைமா. என்னதான் நடந்ததை இல்லை இல்லைன்னு மறுத்தாலும், கண்ணு முன்ன நெற்றியில் குங்குமமும் கழுத்தில் நான் கட்டிய தாலியுமா அங்கயிங்க நடக்குறப்ப, நம்ம உரிமைன்னு ஒரு ஈர்ப்பு வருமில்லையா? அன்னைக்கு நீ நடந்ததை விவரிச்சப்பதான் நமக்கு நடந்தது உண்மையான கல்யாணம்னு முழுசா உணர்ந்தேன். அதோட நீ கொஞ்சம் அழகா வேற இருக்க” என்றதும் வந்த சந்தோஷத்தை வெளியில் காட்டாது அவனை முறைக்க, “நிஜமா. இப்ப நாம கல்யாணம் செய்துக்கலாம். உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா இரண்டு வருஷம் கழித்து வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். ஆட்சேபணை இருந்தா நாளைக்கேனாலும் ஓகே” என்று ஏதுமறியாதவனாய் கையை விரித்து ராகமாய் சொல்ல,

அவளும் அவனின் உள்ளர்த்தத்தில் வந்த வெட்கத்தை உதட்டின் உள்சதையைக் கடித்து நிறுத்தி, “உங்களுக்குப் பிரச்சனை இல்லைன்னா நாம கல்யாணம் செய்துக்கலாம். இன்னும் மூணு வருஷத்துக்கு நீங்க தனியறை! நான் தனியறை!” என்றாள் புன்னகையுடன்.

“ஏய் எலிக்குட்டி! இன்னும் ஒரு மாசத்துல என் பிறந்தநாள் வருது. நான் இரண்டு வருஷம் சொன்னா, நீ மூணு சொல்லி எஸ்கேப்பாகலாம் பார்க்குறியா? அப்படில்லாம் விடமுடியாது” என்றான் வேகமாக.

“அது அப்படித்தான் சார். வாங்க நமக்காக எல்லாரும் காத்திருக்காங்க பாருங்க” என்று சிரித்தபடி செல்ல, வாயில் வைத்த கையை எடுக்காது உள்ளே சென்று அனைவரின் கேலியையும் அதியன் அமைதியாய் ஏற்றுக்கொண்டான்.

இருவருக்கும் சொந்தம் ஒன்றே என்பதால் முடிந்தளவு உறவினர்கள், நண்பர்கள் வரை அழைப்பு விடுத்திருக்க, செந்தூரன் சார்பாக ஆதிகேசவன் மூலம் மருத்துவமனை ஊழியர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் வரை அழைத்திருந்தனர் அதியனும் அகிலனும்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
620
இரவு பத்து மணிக்கெல்லாம் விழா முடிய, மறுநாள் காலை அதியன்-பவானி திருமணம் என்றிருக்க, அன்றைய இரவு மகள் மருமகனுக்கு முதலிரவிற்கான ஏற்பாடுகளைச் சத்தமின்றி செய்து, அதிகாலையிலேயே திருத்தணி செல்ல வேண்டுமென்பதால், பவானியைத் தங்களுடன் அழைத்துச் செல்வதாகச் சொல்லி, அவர்களை விரைவில் வரச்சொல்லி கிளம்பிவிட்டார்கள்.

ராஜலட்சுமி குடும்பம் வெளியேறிவிட்டதால் மொட்டை மாடியிலிருந்த தன்னுடைய ஜாகையை, அறைக்கு மாற்றிவிட்டான் செந்தூரன்.

தன்னறைக்குள் நுழைகையில், “வாவ்! என்னோட ரூம்ல இத்தனை வாசமா? அடடா அன்பழகி வந்ததும் நான்தான் மாறினேன்னு நினைச்சா, வீடே கமகமக்குது” என தன்னால் பேசியபடி அறைக்குள் நுழைந்தான்.

அவனுக்கு முன்னே அங்கிருந்த அன்பழகி, நீங்க மாறினதுக்கு வேணும்னா இந்த அன்பழகி காரணமாயிருக்கலாம். இந்த ரூம்ல உள்ளதுக்கு அன்பழகி பொறுப்பில்லை. அது ஃப்ளவர்ஸ் அன்ட் ஃப்ராக்ரன்ஸால வந்தது.”

“இந்த ஃப்ளவர்ஸ், ஃப்ராக்ரன்ஸ் வரவும் நீதான காரணம். நீ வந்த, உறவு வந்தது! நீ வந்த, சொந்தம் வந்தது! நீ வந்த, இதோ முதலிரவும் வந்துருச்சி! நீ வந்த, அடுத்து நம்ம வாரிசுகளும் வந்துருவாங்க” என்று மனைவியின் வரவை ஆராதிக்க,

“ஹான் அப்புறம்?” என்றவளுக்கு உள்ளுக்குள் சொல்ல முடியா சந்தோசம்.

“அப்புறம் உன் கண்ணு இருக்கு பாரு. அது ஏன் தண்ணியில மிதக்குது? முதல் முறை பார்த்தப்ப அழுறியோன்னு நினைச்சி இன்னும் ஊன்றிப் பார்த்தா உன் கண்ணே அப்படித்தான். உள்ள விழப்போன என்னை அந்தம்மா சீண்டி விழவிடாமல் பண்ணிருச்சி” என்றான் இப்பொழுது நடந்ததுபோல்.

“அப்புறம்?” என சுவாரசியமாகக் கேட்டாள்.

“அந்த வீட்டுல பார்த்தப்பவும் இந்தக் கண்ணுதான் உன்னை அடையாளம் காட்டிச்சி. இருந்தாலும் அது நீதானான்னு சந்தேகம்.”

“ஏன்?”

“முகத்தை முழுக்க மூடிட்டு கண்ணை மட்டும் காட்டினா குழப்பம் வராதா?”

“அது சரி.”

பவியைக் கூட்டிட்டு வந்து சண்டை போட்ட பாரு, இதோ இந்தக் கண்ணை மட்டும்தான் பார்த்துட்டேயிருந்தேன். அப்பதான் உன்பக்கம் தவறு இருக்காதோன்னு யோசிக்க ஆரம்பிச்சதும்.

ஹ்ம்.. அப்புறம்?

“இப்பல்லாம் எவ்வளவு புளிப்பாயிருந்தாலும் கருப்புத் திராட்சை எனக்குப் பிடிக்குது அன்பழகி” என்றான் காதலோடு.

“என்ன காரணமாம்?” என்றாள் சிறு மயக்கத்துடன்.

“இந்த தண்ணீர்த் திராட்சைக் கண்கள்தான் காரணம்னு என் இதயம் சொல்லுது” என்று மென்புன்னகை பூக்க,

“அ..அப்புறம்?” என அவள் இழுக்க,

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டேன்

அதற்குள் எனையே ஒழித்துவிட்டேன்

சின்னஞ்சிறு சிரிப்பையும் எனக்களித்தாய்

சிதறிய இதயத்தைத் திருடிக்கொண்டாய்

யாரென்று நான் யாரென்று மறந்தே போனதே!

தனக்காக மாற்றிப் பாடிய பாடலிலும் அதிலுரைத்த கணவனின் காதலிலும் மயங்கி நின்றவள், “நீங்க டாக்டர்தான செந்தூரா?” என்றாள் கிறங்கிய குரலில்.

“என்ன திடீர் சந்தேகம்?” என்றபடி அவளருகில் அமர,

“இல்லை. வார்த்தையிலேயே எப்படி இம்ப்ரஸ் பண்றதுன்னு தெரிந்து வச்சிருக்கீங்களே!”

“அப்ப இம்ப்ரஸ் ஆகிட்டியா?” என்றான் முக வடிவை விரல்களால் அளந்தபடி.

“அப்படித்தான்னு நினைக்கிறேன்” என்றாள் அவன் கண் பார்க்காது.

“அந்த நினைப்பை கன்பார்ம் பண்ணிரலாமே” என்று அவளைத் தன்னுடன் சேர்த்தணைக்க, அவள் விலக, அவன் அணைக்க என சின்னச்சின்ன ஊடல்களாகி, கடைசியில் அது கூடலாகிப்போனது.

காலை ஐந்து மணிக்கு வந்த கைபேசி சத்தத்தில் கண்விழித்த செந்தூரன் யாரென்று பார்க்க, “மச்சான்! காலை எட்டு மணியிலிருந்து ஒன்பதரைக்குள்ள முகூர்த்தம். உங்க வீட்டிலிருந்து இங்க வர்ற டிராவல் டைம் ஒன்றரை மணிநேரம். முகூர்த்தத்துக்குள்ள வந்திருங்க” என தகவலை அவசரமாகத் தெரிவித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அகிலன்.

கணவனின் பேச்சுக்குரலில் கண்விழித்த அன்பழகி, “இந்நேரத்துல போன்ல யாருங்க?” என்று அவனை நெருங்கிப் படுக்க, அவளைத் தன்னோடு சேர்த்தணைத்து முகம் வருடி நெற்றியில் முத்தமிட்டு, “அகில்தான் போன் செய்தது. முகூர்த்த நேரமும், டிராவல் டைம் சொல்லி வரச்சொல்றாப்ல” என்க,

“ஏன்?” என்றாள் புரியாது. ‘’காலை திருமணமென்பது தங்களுக்குத் தெரியும்தானே? பின்னே ஏன் ஞாபகப்படுத்த வேண்டும்?’ என்ற அர்த்தத்தில் கேட்டாள்.

“ஏன்னா?” அவள் கண்பார்த்து, “நீ இம்ப்ரஸ் ஆகிட்டியான்னு தெரிஞ்சிக்கத்தான்” என்று அவள் விழிகளில் மென்மையாக முத்தமிட்டான்.

கண்மூடி அதை ரசித்து, “கழுத்துல தாலியேறின நொடியிலிருந்து இம்ப்ரஸ் ஆகிதான நிற்கிறோம். இதோ முழுக்க முழுக்க இந்த செந்தூரனின் அழகியாகிட்டேன். இன்னும் நம்பிக்கை இல்லைன்னா, டெஸ்ட் பண்ணிப் பார்த்துக்கோங்க” என்றாள் உணர்ச்சி வேகத்தில்.

“அப்பப் பரிசோதனை பண்ணலாம்னு சொல்ற?” என்றதில் வந்த இரட்டை அர்த்தத்தை உணராது, “அதான் சொல்லிட்... ஹேய்! என்ன அர்த்தத்...” வார்த்தைகள் அனைத்தும் பாதியில் நிற்க, பரிசோதனை மட்டுமே அங்கே!

“உங்களை! எவ்வளவு நேரமாகுது. நல்லவேளை மலை ஏற கார் வசதி இருக்கு. இல்லைன்னா முன்னூற்று அறுபத்தைந்து படி ஏறணும் தெரியுமா?” விடாது கணவனவனைத் திட்டிக்கொண்டே வர,

“அதனாலதான் செல்லம் கார்ல கூட்டிட்டு வந்தேன். முகூர்த்தத்துக்கு இன்னும் இருபது நிமிஷமிருக்கு. அதுக்குள்ள போயிரலாம்” என்று சொன்னாற்போல் அங்கு செல்ல, அவர்கள் வந்ததும் கையில் அட்சதையைக் கொடுத்த ராகினியிடம், “அண்ணி எங்கம்மா?” என்றாள்.

“இதுதான் மாசம். எப்ப வேணும்னா டெலிவரி ஆகலாம். அதான் வீடியோல லைவா பார்த்துட்டிருக்கா” என்று அகிலன் மனைவிக்கு அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்வதைக் காண்பித்தார்.

அடுத்த சில நிமிடங்களில் பவானியின் கழுத்தில் தங்கத் தாலியிட்டு, உறவுகள் முன் முறைப்படி மீண்டும் பவானியை மனைவியாக்கிக் கொண்டான் அதியன்.

பெற்றவர்கள் காலில் ஆசீர்வாதம் வாங்கப்போக, “முதல்ல திருத்தணி முருகன் கால்ல விழுந்து வணங்குங்க. கோலில்ல சாமிதான் பிரதானம். ஆசாமியில்லை. என்ன பொம்மும்மா?” என்றார் சதாசிவம்.

“ஹன்ட்ரர்ட் பெர்சன்ட் கரெக்ட்பா. வீட்டுல வந்து திரும்பத்திரும்ப விழுந்தாலும் நோ ப்ராப்ளம். என்ன செந்தூரா?” என்று கணவனை இழுத்தாள்.

தங்கையின் வாழ்வு இப்படியே போய்விடுமோ என்ற கவலையில் இருந்தவனுக்கு, கழுத்தில் தாலியேறிய சந்தோசத்தில் கண்கலங்கி நின்றிருந்தவன், “நீ சொன்னா சரிதான் அன்பழகி” என்றவன் தங்கை கணவனாக முழுவதும் மாறியிருந்த அதியனைக் கட்டியணைத்து, “தேங்க்ஸ்” என்றான்.

“ஒரு நிஜ எலிக்குட்டியை என்னை நம்பி எனக்கே கொடுத்ததுக்கு நான்தான் மச்சான் தேங்க்ஸ் சொல்லணும். நான்தான் தாலி கட்டினேன்னு தெரிந்தும், என் தங்கச்சியை ஏமாத்திட்டன்னு ஒரு வார்த்தை, வார்த்தை என்ன ஒரு பார்வை கூட நீங்க பார்க்கலை. என் இடத்துல இருந்துதான் யோசிச்சீங்க. இதே வேற மாதிரி பேசியிருந்தா, இவள்மேல எனக்குள் இருந்த கொஞ்சம் விருப்பும் போயிருக்கும். அக்கா உங்களுக்காகப் பேசும் போதெல்லாம் கோபமா வரும். உங்களுக்காக எவ்வளவு வேணும்னாலும் இறங்கலாம் மச்சான். மலையேற எனக்கு நல்ல மச்சான் கிடைச்சிருக்கார். அதுக்கு நான்தான் தேங்க்ஸ் சொல்லணும்” என்று மனதிலுள்ளதைக் கொட்டினான்.

“இத்தனை வருஷம் நீங்க கஷ்டப்பட்டதுக்கு நல்ல லைஃப் பார்ட்னர் அமைஞ்சிருக்காங்க செந்தூர்” என்று நண்பனின் தோள்தட்டினான் ஆதிகேசவன்.

“நட்புன்றது வார்த்தையில் இல்லைன்னு நிரூபிச்சவன்டா நீ. தேங்க்ஸ்டா” என்று நண்பனை அணைத்து விடுவித்தான்.

திருத்தணி முருகன் சன்னிதியில் அவரின் கண்பார்த்து நின்று, தங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டுமென்ற வேண்டுதலுடன், தெய்வத்தின் ஆசியை வாங்கினார்கள் இரண்டு தம்பதியினரும்.

சற்று நேரம் உட்கார்ந்து செல்ல இடம் பார்த்து கொஞ்சம் இடைவெளியில், புதுமணமக்கள் தனித்தனியாக அமர, “ரொம்ப சந்தோசமாயிருக்கேன் அன்பழகி” என்ற கணவனின் கைகோர்த்து தோள்சாய்ந்து, “அதுதான் எனக்கும் வேணும்” என்றாள் மனநிறைவுடன்.

“சந்தோசத்துல கூட கண்ணீர் வரும்னு உணரவச்சிட்ட அன்பழகி. என் வாழ்க்கையில் இப்படியொரு திருப்பம் வரும்னு கனவுல கூடக் கண்டதில்லை. நீ வந்து எல்லாத்தையும் வண்ணமயமா மாத்தி அமைச்சிட்ட! இப்ப நான் சந்தோசமாயிருக்கேன். நீ சந்தோசமாயிருக்கியா அன்பழகி?” என்றான் கோர்த்திருந்த கைகளைப் பார்த்தபடி.

மெல்ல தலை உயர்த்தி கணவன் முகம் பார்த்து, “ரொம்ப ரொம்ப சந்தோசமாயிருக்கேன். கானல் நீரா போயிருமோன்னு நினைத்த வாழ்க்கையை மாற்றி, நமக்குள் காதல் மட்டும்தான் நிரந்தரம்னு உணர வச்சிருக்கீங்க. இது போதும் செந்தூரா. சந்தோசமான, நிறைவான வாழ்க்கை வாழுறேன்” என்று பழையபடி சாய்ந்து கண்மூடினாள் செந்தூரனின் செந்தூர அழகி!

மனைவியின் உச்சிதனை முகர்ந்து அவளின் தலையில் கன்னம் வைத்து, இந்த உறவையும், வாழ்வையும் கொடுத்த கடவுளுக்கு மனதார நன்றியுரைத்தான் செந்தூரன்.



என்றும் நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top