• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
620
27


சரத் படிக்கச் சொன்ன பேப்பர் அவனின் அக்கா மகள் ஹரிப்ரியா தன் கடைசி நிமிடங்களில் எழுதியது. ராசிக்கு அதைப் படிக்கும்பொழுதே மகிழ்ச்சியில் கண்ணீர் பொழிந்தது.

“ப்ரியான்னு சொல்லி கஷ்டப்பட வேண்டாம் மாமா. எப்பவும் போல உங்க பாப்பாவா இருக்கத்தான் ஆசை. என்னை மன்னிச்சிருங்க மாமா. என்னை எப்பவும் போல பாப்பான்னே கூப்பிடுங்க. ப்ரியான்னு கூப்பிட முயற்சிக்கிற தண்டனையை உங்களுக்குக் கொடுக்க விரும்பலை. உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும்னு இப்ப நான் புரிஞ்சிக்கிட்டேன். என்னோட மானத்தைக் காப்பாத்த தன்னுயிரை பணயம் வச்ச, கிரி மாமாதான் புரிய வச்சாங்க. என்னடா மாமான்றேனே பார்க்கறீங்களா! நிஜமாகவே அவங்களைப் பார்த்தப்ப மாமான்னுதான் அறிமுகமானாங்க. அந்த உறவுக்கான அர்த்தத்தை புரிஞ்சதால மாமா சொன்னேன். சொந்தமேயில்லாத பெண் மனைவியா வந்தும், சின்ன பொண்ணுன்றதால தன்னோட பொண்ணா பார்க்க முடிஞ்சதுன்னா. பிறந்ததிலிருந்து கூடவே வளர்ந்த உங்களோட தாய்ப்பாசத்தை என்னால உணர முடியுது மாமா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த உண்மை புரிஞ்சிருந்தா எனக்கு தாலி கட்ட வேண்டிய தர்மசங்கடத்தை கொடுத்திருக்க மாட்டேன். விதின்னு நினைச்சிக்கோங்க மாமா.”

“நீங்க கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனும் மாமா. அது ஹரிப்ரியான்ற ராசாத்தின்ற ராசியா இருந்தா இன்னும் சந்தோஷப்படுவேன். அவ யாருன்னு பார்க்கறீங்களா? உங்க பக்கத்தில தான் நிற்கிறா பாருங்க. கிரி மாமாவோட ஒய்ஃப். சந்தர்ப்பவசத்தால பொண்டாட்டியாக வேண்டிய சூழல்தான் அவளுக்கும். உங்களை நல்லா பார்த்துக்க என்னைவிட்டா யாரும் கிடையாதுன்னு நினைச்சிருக்கேன். ஆனா, என்னைவிட உங்களை நல்லா பார்த்துப்பா. உங்க குணத்துக்கு ஏத்தவ. ஜோடிப்பொருத்தமும் சூப்பர். நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில ஒண்ணு சேர்ந்தா எனக்கும் கிரி மாமாவுக்கும் ஆன்மசாந்தி. கிரி மாமா பார்வையிலேயே தெரியுது உங்களை ரொம்ப பிடிச்சி ராசிக்கு ஜோடியா நினைக்கிறது. சொல்ல முடியாது விதியிருந்தா நானே உங்க பொண்ணா வந்து பிறப்பேன். வாழ்க வளமுடன். எப்பொழுதும் உங்களின் பாப்பா.”

படித்து முடித்ததும் ராசியால் எப்படி உணர்கிறோம் என்பதை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை. கண்கள் அதை உணர்ந்ததோ ஆனந்தமாக வழிந்தது கண்ணீர்.

முன்னப்பின்ன தெரியாத தன்னை நம்பி, ஆசைப்பட்டு மணந்த தன் மாமா ஹரியை, கடைசி நிமிட மனமாற்றத்தில், தனக்காக விட்டுச்சென்ற பெண்ணை என்னவென்று சொல்வாள். மனைவியாக வந்து மகளாக மாறியவள். தன்னைப்போல் ஒருத்தி. ‘கண்டிப்பா உங்களோட மன்னிக்கணும்... என்னோட ஹரி மாமாவை நல்லாவே பார்த்துப்பேன். ஹரி என்னோட புருஷன். இதை தீர்மானிச்சது கிரி மாமாவுமே! இதுது போதும் எனக்கு.’

‘நீ பெருசானதும் மாமாவே உனக்கு நல்ல அழகான பையனா, இந்த குட்டி தேவதைக்கு ஏத்தவனா பார்க்கிறேன். ஓகேவா!’ கிரிதரனின் வார்த்தைகள் காதில் ஒலித்தது. ‘உங்களோட கடைசி நிமிடங்கள்ல கூட, எனக்காகன்னு என்னோட எதிர்கால புருஷனையும் முடிவு பண்ணிட்டீங்களா மாமா. ஐ மிஸ் யூ மாமா. ஐ மிஸ் யூ’ மனம் அரற்றியது ராசிக்கு.

“ராசாத்தி” என்ற அழைப்பிற்கு பதிலில்லாமல் போக மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாள் என்றுணர்ந்தவன், “என்னமா ழுறியா?” என்றான்.

‘ஹ்ம்’ என்ற சத்தம் மெல்லிய விசும்பலாக வர...

“முதல்ல கண்ணீரைத் துடை. மாமா இருக்கும்போது அழக்கூடாது சரியா. என்னை நம்பிதான உன்னை என்கிட்ட கொடுத்துட்டு ரெண்டு பேரும் போயிருக்காங்க. இப்படி அழுதா அவங்க ஆத்மா சாந்தியடையுமா சொல்லு.”

“இல்ல மாமா. நான் அழலை” என்று கண்ணீர் துடைத்தவள், “என்னால நம்பவே முடியலங்க” என்றாள்.

“நம்பித்தான்டா ஆகணும். நீ.. நான்.. நாமளாகுறது அவங்களோட கடைசி ஆசை.”

“எனக்கு உடனே உங்களைப் பார்க்கணும் போலிருக்கு மாமா. சீக்கிரம் வர்றீங்களா?” என்றாள் தன் காதலை குரலில் காண்பித்து.

அதை உணர்ந்தவனோ, “இதோ பைக் பக்கத்துல வந்துட்டேன்மா. கால் மணிநேரம் தான் அப்படியே பற... ராசாத்தீஈஈஈ...” என்ற சரத்தின் அலறல் கேட்டது. அதன்பின் போனின் கீங்கீங் சத்தமே வர...

“மாமா என்னாச்சி? மாமா பேசுங்க. ஏன் அமைதியாகிட்டீங்க? நீங்களும் என்னை விட்டுட்டுப் போயிறாதீங்க மாமா. எனக்கு நீங்க வேணும். ஏற்கனவே உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். மாமா பேசுங்க” போனை காதில் வைத்தபடியே அலறிக்கொண்டிருக்க...

விஜி போன் செய்து ஏதோ ப்ராப்ளம் என்றிருந்ததால் லோஜி ராசியைத் தேடி வர அவளின் அலறல் சத்தம் கேட்டதும் வேகமாக அவளருகில் வந்தவர், “பாப்பா என்னாச்சி? ஏன் கத்திட்டிருக்க? யார் போன்ல?”

அவரின் இடுப்பைக் கட்டிக்கொண்டு, “ஆச்சீ.. ஆச்சீ மாமாவுக்கு ஏதோ ஆகிருச்சி. எனக்கு பயமாயிருக்கு. எனக்கு அவங்க வேணும் ஆச்சி. அவங்க இல்லன்னா... நான்...” என தேம்ப...

முடிக்காமல் நிறுத்திய வார்த்தையை புரிந்ததும், “பாப்பா என்ன உளறிட்டிருக்க. ஒரு பையன்தான் ஏதோ அல்பாயுசுல போயிட்டான். இன்னொரு பைய... இல்லடா அவனுக்கு ஒண்ணும் ஆகாது. உனக்காக கண்டிப்பா எதுவும் ஆகியிருக்காது” எனும்போது அவர் குரலிலும் நடுக்கம்.

“நான் இப்பவே அங்க போறேன் ஆச்சி.”

“பாப்பா இடம் தெரியுமா? இந்த நிலையில எப்படி ட்ரைவ் பண்ணுவ?”

அதற்குள் தன்னை சிறிது கட்டுப்படுத்தியவள், “இல்ல அம்மாஆச்சி மாமாவைப் பார்க்கிறது வரை எனக்கு எதுவும் ஆகாது. மாமா நல்லாயிருந்தா அவங்களோட சேர்ந்து வாழ வேண்டாமா? அதுக்காகவேணும் நான் ஜாக்கிரதையா இருப்பேன்” என்றவள் கீழிறங்கி வந்தாள்.

அவளின் போன் மணியின் பெயர் தாங்கி என்னிடம் பேசு என்றது. சட்டென்று எடுத்தவள் “அண்ணா அவங்களுக்கு என்னாச்சி? அலறல் சத்தம் கேட்டிச்சே? எதுவுமில்லைதானே. உங்க பக்கத்துல தான நிற்கிறாங்க. ப்ளீஸ் கொடுங்கண்ணா” என்றவளுக்கு அவன் பதில் சொல்ல எடுத்துக்கொண்ட சில வினாடிகளில் என்னென்னவோ யோசிக்க ஆரம்பித்தது மூளை.

“அ..அது எப்படிச் சொல்றது தெரியலமா. நீ கொஞ்சம் டாக்டர்.தியாகு ஹாஸ்பிடல் வர்றியா?”

“அங்க ஏன்? அவர் சைக்யாட்ரிஸ்டாச்சே!” என்ன ஏதென்று முழுவதும் தெரியாததால் புரியாமல் கேட்டாள்.

“இல்லமா அவரோட ஒய்ஃப் எம்பிபிஎஸ்.”

“என்ன சொல்றீங்கண்ணா? அப்ப நிஜமாவே அவங்களுக்கு அடியா? உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே?” என்றாள் கேள்வியாய் குரலின் கலக்கத்தை மறைத்து.

“இல்லமா உயிருக்கு ஆபத்தில்லை. ஆனா...” என நிறுத்த...

“உயிருக்கு ஆபத்து இல்லல்ல. அது போதும் அண்ணா. மத்தபடி எப்படியிருந்தாலும் என்னோட ஹரியை நான் பார்த்துப்பேன்” என்று உறுதியாக அவள் சொன்ன தொணியில் அசந்துதான் போனான் மணி. “என்ன மாதிரியான அன்பு. இந்த அன்பை நண்பன் முழுசா அனுபவிக்கவிடாம பண்ணிட்டேனே” என்று வருந்தினான்.

இதோ வர்றேன்” என்றபடி கார் சாவியை எடுத்து, “ஆச்சி நான்...” கண்களில் நீர் ஊற்ற வார்த்தைகள் வராமல் தவிக்க...

“பாப்பா என்னடா?”

“மா..மாமாவுக்கு ஆக்சிடெண்டாகிருச்சி. நான் ஹா..ஹாஸ்பிடல் போறேன்” என்று வெளியே வர, அதே நேரம் சேவியர் வந்ததும், காரை எடுக்கவிடாமல் ராசியைத் தடுத்த லோஜி அவனிடம் விஷயம் சொல்லி, இருவரையும் அனுப்பினார்.

மணியிடம் இடம் கேட்டு மருத்துவமனை வந்ததும் விவரம் கேட்க... அவர்கள் கைநீட்டிய பகுதியில் வந்தவள் கண்களில் தவிப்புடன் நின்றிருந்த மணியும், விஜியும் பட்டார்கள்.

வேகமாக அருகில் வந்தவள், “என் மாமா எங்கண்ணா? நீங்க இருந்துமா அவங்களை விட்டுட்டீங்க? இதான் தங்கச்சி புருஷனை பார்த்துக்கிற லட்சணமா” என்றதும் மணி தலைகவிழ... “உங்ககிட்ட அப்புறம் பேசிக்கிறேன்” என்று அறைக்குள் நுழையப் போனவளை விஜி தடுக்க... ஏனென்று விழியுயர்த்தி பார்த்தவளுக்கு, தன்னுள்ளேயே இருந்த பயம் கைகள் வந்து ஜில்லிட்டிட, “ரொ..ரொம்ப அடியா அண்ணி?” என்றாள் கண்களில் வலியுடன்.

‘ம்...’ என்று தலையாட்டி, “நீ காலையில் ஒரு கேள்வி கேட்டியே. அதுக்கு பதில் தர்றேன் அதையும் கேட்டுட்டுப் போ ராசி.”

“அண்ணி எந்த நேரத்துல என்ன உளறல் இது உள்ள அவங்க அடிபட்டு கிடக்கிற நேரத்துல எப்பவோ நடந்து முடிஞ்சதை... ப்ச் விடுங்க அண்ணி நான் மறந்துட்டேன்.”

“ராசி ப்ளீஸ் ஒரு நிமிஷம் எனக்காக!”

“என்னவோ சொல்லுங்க” என்பது போல் கை உயர்த்தி அனுமதி கொடுக்க... மணியின் விளையாட்டுத்தனத்தால் வந்த வினையத்தை விஜி சொன்னாள்.

அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மணியை ஒரு பார்வை பார்த்தவளுக்கு, ‘அன்று தான் சொன்ன சொதப்பல் இதுதானா!’ என்றிருந்தது.

“சாரிமா. எல்லாம் என்னால தான்” என்று மணி மன்னிப்பு கேட்க...

அதைக் கண்டுகொள்ளாமல் “சரிங்கண்ணி பேசி முடிச்சிட்டீங்கள்ல. இப்ப நான் உள்ள போகவா?”

“ராசிமா எங்க மேல கோபம்...” என இழுக்க...

“எதுவும் இல்லண்ணா. இதுதான் நடக்கணும்னு விதி இருக்கும்போது அதுக்கு ஒரு கருவிதான் நீங்க. இது கடவுள் கணக்கு. நீங்க இப்பவும் எப்பவும் என்னோட அண்ணா, அண்ணிதான்” என்று அறையினுள் நுழைந்ததும் கணவனைத் தேட அவன் படுத்திருந்த விதம் பார்த்து அரண்டு விட்டாள். ஏற்கனவே மனதை திடப்படுத்தி வந்ததுதான் என்றாலும் அந்த கோலத்தில் உயிரே போனாற்போல் வலித்தது அவளுக்குள்.

கணவன் படுத்திருந்த கோலத்தில் மனதில் வலியெழ, வாய் தன்னாலேயே “மாமா” நாமம் சொல்ல, கண்கள் அதன்போக்கில் நீரைப் பொழிய மெல்ல நடந்து அவனருகில் வந்தாள். அடிபடாத கையில் ட்ரிப்ஸ் ஏறுவதைப் பார்த்து மெல்ல கையை நீவிவிட, தலையைச் சுற்றிலும் ஆங்காங்கே கட்டுக்களையும் மீறி இரத்தக்கறைகள். வலது கையிலும் வலது காலிலும் சரியான அடிபோலும் அதைப் பார்த்தவளுக்கு உடல் தளர்ந்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
620
வலதுபுறம் வந்து அருகில் அமர்ந்தவள், கணவனுக்கு வலிக்காமல் மெல்ல முகம் தொட்டு “ஹரி” என்றழைத்தாள். “ஹரி உங்களுக்கு எதுவும் ஆகாது. நான் இருக்கேன். நீங்க இல்லைன்னா நா...நானும் இல்ல. நீங்க என் உயிருக்கும் மேல ஹரி. இது உங்களுக்கு புரியுதா தெரியாது. புரிஞ்சிக்கிற நிலையிலும் நீங்கள் இல்லை” எனும்போது அவன் கண்களிலிருந்தும் புரிந்தாற்போல் கண்ணீர் வடிந்தது.

“நான் பேசுறது புரியுதா மாமா? யாரோ என்னவோ சொன்னா அதுக்கு சேலஞ்ச் பண்ணுவீங்களா. ஏன் மாமா.. நம்ம உணர்வை அடுத்தவங்க காயப்படுத்தினா, ஆமா அப்படித்தான்னு வரணும். இல்லையா திட்டிட்டாவது வந்திரணும். அதை விட்டுட்டு, என்ன மாமா இது சின்னப்பசங்க மாதிரி. இதனால எவ்வளவு கஷ்டம் பார்த்தீங்களா?”

நெற்றியில் மெல்ல முத்தமிட்டு, கன்னத்திலும் இதழ் பதித்து “நீங்க எனக்கு எப்பவும் வேணும் ஹரி. எனக்கே எனக்குன்னு! நமக்கே நமக்கான வாழ்க்கை வாழ. ஐ லவ் யூ ஹரி! ஐ லவ் யூன்ற வார்த்தையை நானா சொல்லணும்னு தான எதிர்பார்த்தீங்க சொல்லிட்டேன். எழுந்து வாங்க ஹரி. உங்க ஒய்ஃப் பாவம்ல. நீங்க இல்லன்னா அவ ஒண்ணுமே இல்ல ஹரி” என்று அழுதபடி சொன்னவள், பின் நிதானமாக...

“உங்களுக்கு உடம்பு சரியானதும் நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். புதுசா, புத்தம் புதுசா முழுக்க முழுக்க காதலோட! ம்.. இதை விட்டுட்டேன் பாருங்க. நல்ல வேளை இந்த ஒன் அன்ட் ஆஃப் மன்த்ல குழந்தை எதுவும் பார்ம் ஆகல. அதுக்காக உங்க குழந்தையை சுமக்க இஷ்டம் இல்லாமல்லாம் இல்ல. அப்படி இருந்திருந்தா உங்களோட பிடிக்காம வாழ்ந்த அந்த வாழ்க்கை நினைவு வரும். அது ஒரு மூலையில இருந்து சுருக்குன்னு குத்திட்டிருக்கும் அதான் வேண்டாம் சொன்னேன். அதுக்காக என்மேல கோவப்படாதீங்க சரியா. இப்பக்கூட உங்களுக்கு அடிபட்டதால எதாவது ஆகியிருந்தா நமக்கு நாமே குழந்தை. இல்லன்னா தத்து எடுத்துக்கலாம். எப்படி என் ஐடியா. எனக்கு நீங்க... நீங்க மட்டும் போதும் ஹரி” என்று கணவனின் முகம் நோக்கி குனிந்தபடி சொல்லிக் கொண்டிருந்தவள் காதில்,

“அப்ப உன்னோட லோஜி முக்கியமில்லையா ராசி” என்ற வார்த்தை விழ... சட்டென்று நிமிர்ந்து பின்னால் திரும்பியவள், “அம்மாஆச்சி!” என அதிர்ந்து, “அது வந்து” என்று தயங்கினாள்.

“ஹ்ம் பரவாயில்லை விடு. உன் புருஷனை ஏத்துக்கிட்டியே அதுவே போதும்.”

கொஞ்சம் தைரியம் வந்தவள், “நான் எப்ப விலகியிருந்தேன் ஏத்துக்கிறதுக்கு. கொஞ்சம் தள்ளியிருந்தேன் அவ்வளவுதான்.”

“ரெண்டுக்கும் ரொம்ப வித்தியாசம் போல” என கேலியாக கேட்டார்.

“ஏன் ராசி ஒருவழியா ஐ லவ் யூ சொல்லிட்ட போல” என்று விஜி அவளை வாரினாள்.

“என்னது சொல்லிட்டாளா? அச்சோ என்னால பார்க்கவோ கேட்கவோ முடியலையே” என்று பாபு வர...

“மாமா” என்று சிணுங்கினாலும், “எஸ். ஐ லவ் ஹிம்” என்றாள் திடமாக காதலாக.

“நானும் லவ் யூ ராசாத்தி” என்று அவளின் பின்புறமிருந்து இடையோடு சேர்த்தணைத்து காதோரம் கிசுகிசுத்தது சரத்தின் குரல்.

ஆம். சரத்தே தான். அவளாக ஐ லவ் யூ சொல்ல வேண்டுமென்று ஆரம்பித்த விளையாட்டில், மனைவிக்கு தன்மேலுள்ள காதல் தந்த புலம்பல்கள் ஆரம்பித்த பொழுதே கண்களில் நீர் வந்து காட்டிக் கொடுத்தது. அதை கவனிக்காமல் அவள் மேலும் புலம்ப அவை அனைத்தும் சங்கீதமாக தன் உயிர்வரை பாய்ந்து தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னுடைய நாடகத்தை தானே முடித்துக்கொண்டான் ராசியின் ஜெர்ரி பாய்.

சரத்தின் குரலில் சட்டென்று திரும்பியவளின் உதடுகள், அவள் முகம் அருகேயிருந்த கணவனின் உதடுகளை நொடியில் தீண்டி நகர்ந்தது. அந்த சிலிர்ப்பில் விழி உயர்த்தி புருவம் நெறிய பார்த்து, அவனின் நடிப்பை உணர்ந்ததும் நெற்றிக்கண்ணால் எரித்தாள்.

எரித்த தீயை இதழ் கொண்டு கண்களில் அழுந்த முத்தமிட்டு சரத் அணைக்க, மற்றவர்கள் நாசூக்காக மெல்ல வெளியேறினார்கள்.

“மாமா” என்று ஆசையாக அழைத்தவளின் குரலில் மயங்கி, “ஏன்மா” என... “உங்களை!” பல்லைக் கடித்தபடி கணவனுக்கு அடிகளால் அபிஷேகம் செய்ய...

அந்த பெட்டைச் சுற்றிச்சுற்றி வந்தவன் உடம்பிலுள்ள கட்டுகளை ஒவ்வொன்றாய் கழற்றி எறிந்தபடி, “ராசாத்தி ஐம் சாரிடா. போதும் உன் மாமா பாவம்லயா. ப்ளீஸ்டா” என்று அவள் கைகளைத் தடுத்து அவளைத் தனக்குள் சிறை செய்து, முகம் நோக்கிக் குனிந்து தன் முத்தத்தை மொத்தமாக கொடுத்து, இதழ்களில் மெல்லிய கவிதை படித்தான்.

கணவனின் அணைப்பில் மெல்ல தொலைந்தவள் இதழ் ஸ்பரிசத்தில் முழுவதும் தொலைய, சிறிது நேரத்தில் அவளை விடுவித்து, “ஐ லவ் யூ ராசாத்தி! தமிழ்ல சொல்லணும்னா கண்ட நாள் முதலா நான் உன்னைக் காதலிக்கிறேன். இன்றும் என்றும் எப்போதும். உனக்கு நான் எவ்வளவு முக்கியம்னு சொன்னியோ அதைவிட அதிகமா நீ எனக்கு வேணும் ராசாத்தி. உன்னோடான என் வாழ்வு வாழணும். ஐ லவ் யூ!” என்றான் மொத்த காதலையும் குரலில் கொண்டு.

சில நிமிடங்கள் பேசும் மொழியெல்லாம் ஊமையாக அமைதியாக அவனின் காதலை ரசித்தாலும், அதையும் மீறிய மெல்லிய முறுவல் வேறெதோ கதை சொல்லியது.

“என்ன ராசாத்தி ஏன் இந்த விசித்திர புன்னகை?” என்றான்.

“ப்ச்... உங்களுக்குப் புரியாது மாமா.”

“பரவாயில்லை புரியவை.”

“போதும்டா. இது ஹாஸ்பிடல் வீட்ல போயி எல்லாத்தையும் புரிய வச்சி, புரிஞ்சிக்கோங்க” என்று மணி சொன்னதும்... ராசி வெட்கத்தில் சரத்தின் பின்னால் நகர்ந்தாள்.

“ராசிமா நீ வெட்கப்படுறியா என்ன?”

“ச்சோ! போங்க அண்ணி” என்றாள் தன் வெட்கத்தை குரலில் காட்டி.

“விஜிமா இன்னைக்குக் காலையில் அவளோட வெட்கத்துல நகமே பிஞ்சிருச்சின்னா பாத்துக்கோயேன்” லோஜி தன் பங்கிற்கு கால்வார...

“அம்மாஆச்சி நீங்களுமா! பாருங்க மாமா உங்கம்மா என்னைக் கேலி பண்றாங்க” என்று சிணுங்கியபடி சரத்திடம் புகார் அளித்தாள்.

“ஆக மொத்தம் தான் போட்ட சபதத்துல சரத் ஜெயிச்சாச்சி போல. உன்னை விட கலர்ன்ற ஒரே காரணத்துக்காக, உன் புருஷன்கிட்ட, நீ கவுந்திட்டியே பாப்பா” என்றான் பாபு முகத்தை சோகமாக வைத்து.

மற்றவர்களும் அவனுக்கு ஆமா சாமி போட்டனர்.

அப்பொழுதும் ராசி அதே முறுவலைத் தொடர... “இல்ல ப்ரதர். இவ சிரிப்பே சரியில்லை. வேற எதுவோ இருக்கு. அவ சொன்ன பிறகுதான் நான் ஐ லவ் யூ சொன்னேன். அதைச் சொன்னதுல இருந்துதான் நக்கலா சிரிக்கிறா” என்றான் புரியாமல்.

ஹா..ஹா என சத்தமாக சிரித்தவள், “நான் தோத்துட்டேனா. மாமா நான் எப்பவோ ஜெயிச்சாச்சி.”

“என்னது! எங்களுக்குத் தெரியாம ஏற்கனவே சொல்லியாச்சா?” என அனைவரும் வாய் திறக்க...

“ஷப்பா! என்ன ஒரு எக்ஸ்ப்ரஷன். க்ளோஸ் யுவர்ஸ் மௌத்ஸ். கல்யாணம் முடிஞ்ச அன்னையிலிருந்து ஒரு நைட்கு பத்து ஐ லவ் யூ. இருபது ஐ லவ் யூ சோ மச் பேபி வந்திரும். சார் ரொம்ப ஃபீலிங்கா சொல்லிட்டு ஹாயா தூங்கிருவாங்க” என்று அவர்களுக்கு பதிலளித்து கணவனிடம் திரும்பி கண்ணடித்தாள்.

மலங்க மலங்க விழித்தபடி அசட்டுத்தனமாக வழிந்தவனை...

“அடப்பாவி! மாட்டேன் மாட்டேன்னு சீன் போட்டு எங்களை ஏமாத்திட்டியேடா. உன்னையெல்லாம் நம்ப முடியாதுடா. வேணும்னே சொல்லிட்டு தூங்குறது மாதிரி நடிக்கக்கூட செய்திருப்ப” என்று அவனை அடிக்க விரட்டினார்கள்.

ராசி ஆர்வமாக கணவன் முகம் காண, உண்மையிலேயே இல்லையென்று தலையசைத்தான் அந்த நல்லவன்.

“யோவ் மாம்ஸ்! உண்மையிலேயே அடிபட்ட நான் பக்கத்துல பெட்ல இருக்கேன். ஆக்டிங் பண்ணின நீங்க ஜாலியா அரட்டை அடிக்கிறீங்களா?” என்ற கூக்குரலுடன் கிரி வந்தான்.

அந்த ராசாத்தீஈஈஈ... அலறல் சரத்துடையது தான். ஆனால், நிஜமாக அடிபட்டது அவனோட மச்சினன் கிரி என்ற கிருபாவுக்கு.


28


கிரிக்கு அடிபடுவதற்கு முன், சரத் அந்த அரசியல்வாதியின் பிரச்சனையை முடித்து, அப்படியே அந்தப் பெண்ணை மாலின் உள்ளே சந்தித்து வெளியூர் செல்ல அனுப்பிவிட்டு வெளியே வரும் பொழுதுதான் ராசி போன் செய்தது. எதிரில் வந்து கொண்டிருந்த கிரி அவனைப் பார்த்து கையசைக்க, கிரியைப் பார்த்தபடி “அப்படியே பறந்து வர்றேன்” என்று சொல்ல வந்த வார்த்தைகள், ‘கிரி வர்றான்’ என்று சொல்லும் முன்னே... கிரி ரோட் க்ராஸ் செய்கையில் பார்கிங்கிலிருந்து வெளியேறிய பைக் ஒன்று தடுமாறி அவன் மேல் இடித்தது. அதே நேரம் மணியும் வர... வண்டி மோதியதைப் பார்த்து கீழே விழுந்தவனை தூக்குவதற்கு, சரத்தின் பின்னிருந்து வேகமாக வந்த ஒருவர் கையைத் தட்டிவிட்டுப் போக, இடித்த வேகத்தில் போன் விழுந்து நொறுங்கியது.

இவையனைத்தும் பத்து வினாடிகளில் நடந்து முடிந்திருந்தது. கிரியைத் தூக்கியவர்களுக்கு காயம் பெரிதில்லை என்றதும் மருத்துவமனையில் சேர்க்க நினைத்தபடி, மனைவி ஏற்கனவே பயத்திருந்தாள். இதில் இன்னும் பயப்படுவாள் என்று விஷயம் தெரிவிக்க மணியிடம் செல்போன் கேட்டான்.

அவனோ அதை விவகாரமாக்கி தன் நண்பனை சேர்த்து வைக்கும் விளையாட்டை ஆரம்பித்து வைத்தான். ராசியை கிளப்பிவிட்டு, தியாகுவிடம்உதவி கேட்டு, அவள் பதற்றத்தில் இருப்பாளென்று சேவியரை நேரத்திற்கு அனுப்பி, ரோகிணிக்கும் போன் செய்திருந்தான் மணி. அந்த இடைவெளியில் சரத்திற்கு உடலெங்கும் கட்டுக்களைப் போட்டு படுக்க வைத்தார்கள்.

வந்தவள் ட்ரிப்ஸ் ஏறும் லட்சணத்தைப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். எங்கே அவள்தான் அப் அன்ட் டௌன் பார்வையாலேயே மாமனை முழுங்கிக்கொண்டு இருந்தாளே.

ராசி கிரியிடம் நலம் விசாரித்து, பின் தன் குறும்பு தலைதூக்க, “ஏன்டா அப்பாவுக்கும், பையனுக்கும் ஆஸ்பத்திரியை அம்புட்டு பிடிச்சிருக்கா என்ன? கொஞ்சம் கேப் விடுங்கபா ரெண்டு பெட்டாவது மிச்சமாகட்டும். நோயாளிகள்லாம் இப்ப அதிகமாகிட்டாங்க” என்று கலாய்க்க...

“அக்கா! வேண்டாம் நான் காலேஜ் ஸ்டூடண்ட். கடி எடுத்து விட்டேன் நீங்க தாங்க மாட்டீங்க.”

“போடா, டேய் போடா நாங்களும் அதைத் தாண்டினவங்க தான்.”

“ராசிமா அப்பாவை மன்னிச்சிட்டியா” என்று அங்கே வந்த ரோகிணி கேட்டார். ராசி அவரை ஒரு பார்வை பார்க்க, அந்தப் பார்வைக்கு அர்த்தம் புரியாமல் விழித்த ரோகிணியிடம்,
‘ம்கூம்’ என தலையாட்டி, “எனக்கு அப்பா அம்மா எல்லாம் என் லோஜிதான். அம்மான்ற உங்க உறவை ஏத்துக்கிட்ட என்னால அப்பான்ற உறவை ஏத்துக்க முடியல. விட்டது விட்டதுதான். என்னைக்கும் ஒட்டாது முயற்சி பண்ணாதீங்க. தோத்துருவீங்க!” என்றாள் முடிவாக.
கிரியிடம் திரும்பியவள், “டேய் தம்பி! ஆரம்பத்திலிருந்தே உனக்கு அவர் நல்ல அப்பாவா இருந்திருக்கார். என்னை நினைச்சி அவரை வெறுக்கிறது எனக்குப் பிடிக்கலை. அம்மா நீங்களும் தான். அவரைப் பொருத்தவரை நான் காணாமல் போனவ அப்படியே இருந்திருறேன். எனக்கு என் லோஜி, என் மாமா போதும். ஸோ, எனக்காகன்னு அவருக்கு நீங்க தண்டனை கொடுக்காதீங்க. இது என்னோட ஆர்டர்” என்றவள் சரத்திடம் திரும்பி “என்ன மாமா இது ஓகே தான” என்று சிரித்தபடி கணவனின் கையோடு கை கோர்த்து, “போலாமா மாமா” என்றாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
620
“ஓகே பேபி டன்” என்றவன், மீனலோஜினியிடம் திரும்பி, “லோஜிம்மா உங்களுக்கு இரண்டு நாள் லீவு. சௌந்தரி அண்ணி விதவிதமா டிஷ் செஞ்சி தர்றாங்களாம். ஸோ, அங்க போயிருங்க. நல்லா கேளுங்க ரெண்டு நாள் தான் லீவு. எங்களுக்கு ப்ரைவசி கொடுக்குறேன்னு அங்கேயே செட்டிலாகலாம்னு கனவு காணாதீங்க. தூக்கிட்டு வந்திருவோம். என்னடா ராசாத்தி” என மனைவியை பார்த்துக் கேட்டான்.

“நீங்க சொன்னா சரிதானுங்க மாமோய்!” என்றாள் கிராமத்துக் கிளியாய்.

“என்னது சௌந்தரியோட டிஷ்ஷா?” என்றலறிய பாபு, “இல்ல தம்பி நானே எங்கம்மாவுக்கு சமைச்சிப் போட்டு பார்த்துக்கறேன். யூ என்ஜாய்” என்றான்.

“மாமா இருங்க அத்தைக்கு போன்ல தூது அனுப்புறேன்” என்ற ராசியிடம்,

“ஆத்தா ராசாத்தி! ஆளை விடு தாயே! எனக்கு அவகிட்ட அடிவாங்குற அளவுக்கு ஒர்த் இல்லை” என... அங்கே ஒரு சிரிப்பலை அனைவரையும் ஆக்ரமித்தது.

“ராசிமா நைட் அம்மாஆச்சி இல்லன்னா தூங்க மாட்டியேடா. நீயும் என்னோட வந்திடுறியா?”

‘ஹான்’ என விழித்தவள், “ஹ்ம்.. நல்லாயிருக்கே கதை. பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு உங்ககூடவே வச்சிப்பீங்களா? அதுக்காகவா கல்யாணம் பண்ணி வச்சீங்க? அதெல்லாம் முடியாது எனக்குன்னு புருஷன் இருக்கும் போது நான் ஏன் தனியா உங்ககூட வரணும். கல்யாணம் முடிஞ்ச புள்ளைய புருஷன்கிட்டயிருந்து பிரிச்சி வைக்கிறது பாவம் லோஜி” என்றாள் அப்பாவியாக முகம் வைத்து.

“பாருங்கப்பா! எப்படில்லாம் அப்பாவி லுக் குடுக்கிறா” என்று விஜி கலாய்க்க,

“அண்ணி உங்க குழந்தையோட விளையாட, தம்பி இல்ல தங்கச்சிப் பாப்பா வேணுமா, வேணாமா? நீங்க இப்படியே பேசிட்டிருந்தா நாங்க எப்ப ஹனிமூன் போறது? எப்ப குழந்தை பெத்துக்கறது? வெரி பேட் அண்ணி நீங்க” என்றாள் குறும்பாக.

“ஹையோ! அண்ணா! சீக்கிரம் இவளை கூட்டிட்டுப் போயிருங்க. இல்லன்னா இங்கேயே எதாவது ரூம் அரேஞ்ச் பண்ணித்தரச் சொல்லி நம்ம டாக்டர்.தியாகு கிட்ட நேரடியா கேட்டு மானத்தை வாங்கிரப்போறா!” என்று விஜி அலறினாள்.

“ஹான் அது. அந்த பயம் இருக்கட்டும். ஆனாலும், இவ்வளவு சொல்லிட்டிருக்கீங்களே, கொஞ்சமாவது உங்கண்ணா காதுல விழுதா பாருங்கண்ணி. பொண்டாட்டியை சைட்டடிச்சிட்டிருக்காங்க. இவங்களை..” என்று சரத்தின் கையை இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.

அதுவரை மனைவியின் பேச்சுக்களை, முக்கியமாக அந்த கண்களை ரசித்திருந்தவன், ராசி இழுத்ததும் அவளிழுத்த இழுப்பிற்கு பின்னாடியே சென்றவன், பின் நினைவு வந்து, “ஹேய் டாம் விடு” என்று அவளின் கையை உருவி, தன் கைகளுக்குள் அவளை அடக்கி முன்னே சென்றான்.

அவர்கள் இருவரையும் மனமார வாழ்த்தினார்கள் அவர்களின் நலம் விரும்பும் நல் உள்ளங்கள்.

பைக்கை ஸ்டார்ட் செய்ய, பின்னால் அமர்ந்திருந்த ராசி கணவனை இறுக்கியணைத்தவள், பின் பொது இடம் என்பதால் வலது கையை கணவனின் வயிற்றுப்புற சட்டை பட்டன் உள்ள பகுதியை பிடிக்குமாறு அமர்ந்து, “ஐ லவ் யூ ஜெர்ரி பாய் மாமா” என்றாள் காதின் ஓரம்.

அதைக் கேட்டதும், “ஹேய் டாம்! யாஹூ” என்ற சத்தத்துடன் உடலில் இன்ப ரத்தம் ஓட பைக்கும் வேகமெடுத்தது வீட்டிற்கு. அவர்களின் ஹனிமூன் கொண்டாட!

ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு:

திருச்சி விராலிமலை சுங்கச்சாவடியில், கிரி - ஹரிப்ரியா சம்பவம் நடந்த இடத்தில் கையில் ஏழுமாதக் குழந்தை பிரியதர்ஷினியுடன் நின்றிருந்தார்கள், ஜெர்ரி பாய் ஹரிசரத்தும், அவனின் அழகான அன்பான டாம் ஹரிப்ரியா என்ற ராசாத்தி என்ற ராசியும்.”

“ப்ரியதர்ஷினி.” சரத்தின் அக்கா சாந்தியின் பெண்ணுக்கு முதலில் வைக்கவிருந்த பெயர். ஹரியால் தான் ஹரிப்ரியா ஆகியிருந்தாள். அவளே தங்களுக்கு மகளாக பிறந்திருப்பதாக ஒரு எண்ணம். விழிகள் கருப்பாக இருந்தாலும் இடது கண்ணிலிருந்த அந்த மச்சமோ ஹரிப்ரியாவை நியாபகப்படுத்தியது. கடிதத்தில் கூறியிருந்தது போல் பெண்ணாகவே பிறந்திருக்கிறேன் என்ற நம்பிக்கையை உறுதிபடுத்தியது அந்த மச்சம்! லெட்டரைப் படித்ததில் ஹரிப்ரியா சொன்னதை நியாபகம் வைத்து தன் மகளுக்கு அந்த பெயரை சூட்டிவிட்டாள் ராசி.

தற்பொழுது தங்கள் பெண்ணிற்கு மொட்டையிட, மேலூருக்கு அருகிலுள்ள தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படியே மதுரை சென்று ராசியின் சித்தி சரிதாவையும் அவர்களது பிள்ளைகளையும் சந்திக்கவும் இந்த பயணம். ஏனென்றால், தனது ஏழ்மையிலும் தன் பிள்ளைகளுக்கு சமானமாக வளர்த்தவராயிற்றே. சந்தர்ப்ப சூழ்நிலையில் திருமணம் செய்வித்தாலும் நல்ல எண்ணத்தில் செய்த திருமணம் என்பதால், அந்த தவறை மன்னித்து மறக்க வைத்தது.

தீபாவும் பிரசவத்திற்காக இந்தியா வந்திருந்ததால் இந்த ஏற்பாடு. ஏற்கனவே மற்றவர்கள் அனைவரும் மேலூருக்கு சென்றுவிட, வேலைப்பளுவின் காரணமாகவே இவர்களின் காலதாமதம்.

அந்த காலதாமதம் தானே முதன்முறையாக இருவர் மனதையும் அறிய வைத்து ஒன்றாக பயணிக்க வைத்தது. இன்று அதை நினைத்ததும் மெல்லிய முறுவலுடன் கணவன் தோள் சாய்ந்தாள் அந்த பாவை.

தந்தை மேல் சாய்ந்த தாயின் தலையை அந்த விவரம் தெரியாத வயதிலும் தள்ளிவிட்டு சரத்தை சேர்த்தணைத்தாள் அவர்களின் மகள்.

“ஏய் எனக்கு முதல்ல புருஷன். அப்புறம் தான் உனக்கு அப்பா ஓகே. எங்களுக்கு இடையில் வந்த மகளே தொலைச்சிருவேன்” என்று விரல் நீட்டி மகளை எச்சரிக்க...

அந்த விரல்களைப் பிடித்தவன், “உன்னோட டாம் வேலையை பொண்ணுகிட்ட காட்டாதடி. புள்ள பயந்துரப்போகுது. பொண்ணுகிட்ட கூடவா போட்டி போடுவ?”

“யாரு இவ பயப்படப் போறாளா? சும்மா சீன் போடாதீங்க. இப்பவே உங்ககிட்ட வந்தா தள்ளி விடுறா. அதுவுமில்லாம, டாம் இருந்தால்தான் மாமா ஜெர்ரிக்கு வேலையே. ஒண்ணுவிட்டு ஒண்ணு இல்லன்னா டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூனே ரசிக்காதுன்னும் போது, நானில்லாமல் நீங்களோ! நீங்களில்லாமல் நானோ எப்படி மாமா?”

“ஆக மொத்தம் நாம ரெண்டு பேரும் மனுஷ லிஸ்ட்ல சேரல” என்றவனுக்குள், மனைவியின் ‘நீயில்லாமல் நானேது!’ என்பது எப்பொழுதும் போல் மனதில் இனித்தது சுகமாய்.

சட்டென்று கையில் தண்ணீர் பட, “ஸ்ஸ்.. ராசாத்தி பாப்பா பாத்ரூம் போயிட்டா பாரு” என்றதும் குழந்தையின் ஜட்டியைக் கழற்றி கவருக்குள் வைத்து காரைச் சுற்றி வந்து உள்ளே வைத்து, வேறு எடுத்து நிமிர, எவனோ ஒருவன் அவளை இடித்துச் சென்றான்.

சரத் குழந்தையிடம் கவனம் வைத்ததால் இதைக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் ஒன்றும் செய்யாமல் மனைவியிடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பான் என்பது வேறு.

இடித்துச் சென்றவன் தன்னைத் தாண்டுவதற்குள், சட்டையைப் பிடித்திழுத்து “பொறுக்கி இவ்வளவு இடத்துல தேடி வந்து இடிச்சிட்டுப் போறியே அறிவில்லை உனக்கு” எனும்போது நிமிர்ந்த சரத் அவர்களை பதற்றமில்லாமல் பார்த்தான்.

“ஹலோ தெரியாம பட்டதுக்கு இந்த குதி குதிக்கிறீங்க. தெரியாமல் பட்டிருந்தாலும் சாரி” என்று தன் மேல் தவறில்லாதது போல் சொன்னான் இடித்தவன்.

‘சாதாரணமா பேசினாலே நம்மாளு துள்ளுவா. இவன் எகிறிக் குதிக்கிறான். நேரம் சரியில்லைன்றது இதுதானோ?’ என்றது சரத்தின் மனம்.

“என்னடா தெரியாமல் இடிக்கிறதுக்கும், தெரிஞ்சி இடிக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாத மக்குன்னு நினைச்சியா. தெரியாம பட்டிருந்தா உன்னை இழுத்திருக்கவே மாட்டேன். நீ வேணும்னுதான் பண்ணின” என்று அவனை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்க...

கூட்டம் கூடியதைப் பார்த்ததும், போதும் என நினைத்த சரத் மனைவியை நோக்கி வர. “அக்கா இனிமேல் இந்த தப்பு பண்ணமாட்டேன் கா” என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான் இடித்தவன்.

“ஆமா இடிக்க வேண்டியது. மாட்டிக்கிட்டா அக்கான்ற வேண்டியது. ஏன்டா அந்த வார்த்தையை அசிங்கப்படுத்துறீங்க” எனவும் சரத்தைவிட பத்து வயதாவது அதிகமிருக்கும் ஒருவர் திறந்த வாய் மூடாமல் அதிர்ச்சியில் பார்த்திருந்தார்.

அதைக் கவனித்த சரத் “என்ன ப்ரதர் அப்படிப் பார்க்குறீங்க?” என்றான் அருகில் சென்று.

அவனை பார்த்தவர், “ஏன் தம்பி செம அடியில்ல. அடி பின்னிட்டா அந்தப் பொண்ணு. அநேகமா அந்த பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன். அதான் இந்த துள்ளு துள்ளுறா” என்றதும் சரத்திற்கு சன்னமாக சிரிப்பு வந்தது.

இரண்டாம் முறை காஃபி ஷாப்பில் அவளைப் பார்த்தபோது தன் எண்ணமும் அதுதானே. அன்று அது உண்மையே. இப்பொழுது மனைவியின் இயல்பு மாறா தன்மையில் முகம் மலர்ந்து ஜொலிக்க, அதற்கு தான் தான் காரணம் என்ற எண்ணமே இல்லாமல் மனைவியைப் பார்த்திருந்தவன் அவரிடம், “அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சி ப்ரதர்” என்றான்.

“இந்த ராட்சச... இல்ல இந்த டாமைக் கட்டிக்கிட்ட அந்த ஜெர்ரி பாய் பாவம்பா” என்றார் உண்மையிலேயே வருத்தத்தில்.

“ஹ்ம்.. நிஜம்தான் ப்ரதர். அவன் பாவம்தான்” என்றான் அவரின் வருத்தத்தைத் தன் குரலில் கொண்டு வந்து.

“இந்த இடத்துல கையில குழந்தையோட நிற்கிற. ஆமா நீ யாருப்பா?”

“நீங்க சொன்ன அந்த டாமைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட ஸ்மார்ட்டான, சூப்பரான ஜெர்ரி நான்தான்” என்றான் காலரைத் தூக்கியபடி.

அசடு வழிந்தவர் மன்னிப்பு கேட்டு, விட்டால் போதுமென்று அவ்விடம் விட்டு அகன்றார்.

அதற்குள் ராசி அவனை அனுப்பிவிட்டு வந்து குழந்தையை வாங்கி, “ஒருத்தி தனியா ஒருத்தனை அடிச்சிட்டிருக்காளே.. என்ன ஏதுன்னு கேட்கத்தோணுதா உங்களுக்கு?” என்றாள் கோவமாக.

“எதுக்கு நடுவுல வந்து நான் வாங்கி கட்டவா” என்று தன் மார்பைத் தடவினான்.

அவன்மேல் ஊற்றிய சுடுநீர் நினைவு வந்ததும், “நீங்க இன்னும் அதை மறக்கலையா?” என்றாள் அவன் சட்டையைத் திருகியபடி.

“மறக்கிறதா நோவே. நீ செஞ்ச ஒவ்வொண்ணும் இங்க ஆழமா பதிஞ்சிருக்கு. அதெல்லாம் ப்யூச்சர்ல நம்ம பிள்ளைங்களுக்கு சொல்லித்தரப்போற ஸ்வீட் மெமோரீஸ்டா செல்லம்” என்றான்.

“நீங்க இருக்கீங்களே!” என சின்னதாக அடி போட்டவள், “டைமாச்சிது மாமா. போகலாம் கிளம்புங்க” என்றாள்.

“ஏன் ராசாத்தி? முத்தம் குழந்தைக்கு மட்டும்தானா?” என ஏக்கத்தோடு கேட்டான்.

அவனின் சட்டையைப் பிடித்து தன்னருகே இழுத்து, “உன் ராசாத்தி மொத்தமுமே உனக்குத்தான் மாமா. முத்தமெல்லாம் எம்மாத்திரம்” என்று கண்ணடித்து சுற்றிலும் பார்வையை சுழற்றி கணவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.


அவர்களின் சந்தோஷத்தைத் தனதாக்கி, அங்கிருந்த பெரிய மரம் காற்றிற்குக் குலுங்கி, அவர்களுக்கு தன்னுடைய பூக்களைத் தூவி வாழ்த்தியது!



நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top