• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
105
நிறைவுப் பகுதி - 28

'நம்ம வீட்டு கல்யாணம் நாம தான் முன்ன நின்னு செய்யனும்.' என்றபடி மகளை அழைத்துக் கொண்டு யுவனி உள்ளே செல்ல, அவள் பின்னோடு விரைந்து வந்த ரகு,

"அது எங்களுக்கும் தெரியும். அதுக்குத்தான் தி பெஸ்ட் இவன்ட் மேனேஜ்மெண்ட் கிட்ட கொடுத்து இருக்குல. அவங்க பார்த்துக்க மாட்டாங்களா? " புருவம் உயர்த்திய கேள்வியுடன் அவளை நிறுத்தினான். அவளை மடக்கி விட்டானாம்!

அதற்கு நின்று அவனை திரும்பி முறைத்துப் பார்த்த யுவனி," உங்க ஆஃபிஸ்ல எல்லாருமே நல்லா தானே கணக்கை டேலி செய்றாங்க. அப்ப அப்படியே டாக்ஸ் ஃபைல் செய்யறதுக்கு அனுப்ப வேண்டியது தானே?" வினவினாள்.

"அது, எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு தானே அனுப்ப முடியும். எதாவது மிஸ்ஸாகி இருந்தா எல்லாம் தப்பாயிடும்ல." வேகமாக விளக்கம் அளிக்க,

"அதேமாதிரி தான் இதுவும். அவங்க எல்லாம் செய்தாலும் நல்லா செய்து இருக்காங்களான்னு பார்க்க நாம கூட இருக்கனும்." சிலுப்பிக் கொண்டு சென்றாள் மனையாள்.

'இந்த வாய்ல மட்டும் இவளை பீட் பண்ண முடியாது போல.'உள்ளுக்குள் மூண்ட புகைச்சலோடு அவன் நிற்க, "என்ன அண்ணா இங்கேயே நின்னுட்டீங்க?" அவனை எதிர்கொண்டான் டாக்டர்.சரண்!
தேவநாதன் ஜெயந்தியின் மகன்.

" ஒன்னுமில்லடா. பெரியம்மா, பெரியப்பா ரெடியா?" ரகுவின் கேள்விக்கு "அங்க பாருங்க." என்று மேடையை கை காட்டினான் சரண்.

பட்டுவேஷ்டி சட்டையில் தேவநாதனும் அடர்பச்சையில் மெரூன் நிற பார்டர் கொண்ட பட்டுப்புடவையோடு அதற்கேற்ற நகைகளோடு நாணத்தை பூசிய படி ஜெயந்தியும்,

அவர்களுக்கு இருபுறமும் மதுராவும் யுவனியும் சேர்ந்து அவர்களை அழைத்துவர, அங்கு போடப்பட்டிருந்த மனையில் மணமக்களாக அமர வைக்கப்பட்டனர்.

ஆம். இன்று அவர்களது அறுபதாம் திருமணம். அதற்காக வெளிநாட்டில் தனது எம்.எஸ் செய்து கொண்டிருந்த சரணும் வந்திருக்க, யுவனியின் பெற்றோரும் உறவினர்கள் சிலரோடு அவர்களது நண்பர்களும் குழுமி இருந்தனர்.

தனது சுய லாபத்தை மட்டுமே யோசிக்கும் தேவநாதனின் மனம், யுவனியின் குடும்பத்துடன் கொண்ட உறவால் அவர்களது குணத்தை உணர்ந்து, பணத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடுவதை என்றோ மறந்திருந்தது.

இன்று இவர்களது இந்த சஷ்டியப்த பூர்த்தி கூட யுவனியின் குடும்பம் முன்னின்று எந்தவித பாகுபாடும் பார்க்காமல் தங்களது இல்ல விழா போல நடத்துவதில் மிகவும் மனம் நெகிழ்ந்து நின்றார்.

என்னதான் அவரது தொழில் சிறுகச்சிறுக முன்னேற்றம் கண்டாலும், சரணின் படிப்புக்கான அத்தனையும் முன்னெடுத்து பார்த்துக் கொண்டது யுவனியும் ரகுவும் தான்.

அவனது மருத்துவப் படிப்பு விருப்பத்தை அறிந்து, தந்தையின் பொருளாதார நிலையால் யோசித்தவனை, உடன்பிறந்தவள் போல அதட்டி படிக்க வைத்தாள் யுவனி. ரகுவும் அறிவுரைத்து அவனுக்கு பிடித்ததை படிக்கச் செய்தான்.

தன் தங்கையின் பிள்ளைகளாக இருந்தாலும் தங்களது இந்த திருமணத்தை முன்னெடுத்து நடத்தும் ரகுவையும் மதுராவையும் மனம் நிறைந்த வாஞ்சையுடன் கண்ட ஜெயந்திக்கும் கண்கள் கலங்கியது.

இருவரது மனநிலையை மாற்ற, "ரெண்டு பேருக்கும் திரும்ப அதே ஆளையே கல்யாணம் செய்யனும்னு ஃபீலிங்ஆ இருக்கா? வேணும்னா இந்த மண்டபத்துல எதாவது புதுசா ஆளு கிடைக்குதானு பார்க்கலாமா ஆன்ட்டி!?" ஜெயந்தியிடம் விளையாட்டாகக் கேட்டாள் யுவனி.

அவளது கன்னத்தை செல்லமாக கிள்ளி முத்தம் வைத்தவர், " நீ கொஞ்சம் டேன்ஜரான ஆளு தான்டா. பாவம் ரகு உங்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறான் போல." அவளை கேலிசெய்து உண்மையை உரைத்தார் ஜெயந்தி.

"ஆமா பெரியம்மா. எப்படி கண்டுபிடிச்சீங்க? நீங்களாவது என்னை காப்பாத்தக் கூடாதா?." என்றபடி ரகு அங்கே வர, அவனது பேச்சில் புருவம் உயர்த்தி அவனை அழுத்தமாக யுவனி பார்க்க,

"அதெல்லாம் முடியாது மகனே! நீயே இழுத்து விட்டிருக்கிறது தானே. இனிமே உனக்கு நோ அதர் சாய்ஸ்." உதட்டில் மறைத்த புன்னகையுடன் கூறினார் அவர்.

அவன் ஏதோ விளையாட்டாகப் பேச அதற்கு யுவனியின் எதிர்வினையில் டரியலாகிப் போன ரகு," என்ன பெரியம்மா உங்க மருமகளை இப்படி சொல்லிட்டீங்க? அவளைப் போல மருமக கிடைக்கறது எல்லாம் உங்க அதிர்ஷ்டம்." உடனே பல்டி அடித்தான்.

"அதுசரி. அப்படித்தான் ரகு உடனே சரண்டர் ஆகிடனும். இல்லனா சேதாரம் நமக்குத்தான்." தேவநாதன் ரகுவை கலாய்க்க, அனைவரும் சிரித்து விட்டனர்.

அதன்பிறகு புரோகிதர் சொன்ன மந்திரங்களை உச்சரித்து, சுப தருணத்தில் தேவநாதன் தன் மனைவியின் கழுத்தில் மீண்டும் மூன்று முடிச்சிட, சிறியவர்கள் மணமக்களிடம் ஆசிர்வாதம் வாங்க, பெரியவர்கள் வாழ்த்து கூறிவிட்டு சென்றனர்.

பஃபே உணவுமுறை என்பதால் பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லை. அவரவர்களுக்கு தேவையானதை அவர்களே வைத்து உண்ணத் துவங்கினர்.

யுவா மற்றும் மதுராவின் ஐந்து வயது மகன் யுவதீரன் மற்றும் மின்னொளிக்கும் சேர்த்து இருபிள்ளைகளுக்குமான உணவை மதுரா ஊட்டிக் கொண்டிருந்தாள்.

அனைத்தையும் சரிபார்த்தபடி வந்த யுவனி, யுவாவிடம் பேசிக் கொண்டிருந்த ரகுவின் கரத்தில் அனைத்து வெரைட்டியிலும் துளியூண்டு உணவை வைத்த ஒரு தட்டை கொண்டு வந்து திணித்தாள்.

"என்ன மச்சான் அவகிட்ட எதாவது வாய் விட்டு மாட்டிக்கிட்டீங்களா? சோறு போடாம பழி வாங்கறாளா?" நமட்டுச் சிரிப்போடு யுவா கேட்க, சட்டென அவனது பின்னந்தலையில் தட்டியது ஒருகரம்.

அதில் உற்பத்தியான புன்னகையை உதட்டில் மறைத்தபடி ரகு நிற்க, "ஸ்ஸ்ஆஆ!" சிறு அலறலுடன் திரும்பிய யுவாவிற்கு சர்வ நிச்சயமாக தெரியும் அது யுவனி என்று.

"ஒன்னுல்ல யுவனி. மச்சானுக்கு உடம்பு சரியில்லையோனு விசாரிச்சுட்டு இருந்தேன். அவ்ளோ தான்." சமாளிக்கப் பார்த்தான்.

"ம்ம்ம்! நீ அதான் கேட்டன்னு நல்லா தெரியுதே. பொய் சொல்லாதடா." சகோதரனை இடித்தவள், "அவருக்கு இவ்ளோ மசாலா போட்ட ஃபுட் எல்லாம் ஒத்துக்காது. அதான் அளவா கொடுக்கறேன்."

"அப்படி இருந்தும் என்னை அப்பப்ப ஏமாத்திட்டு மினுகுட்டி கேட்டாள்னு எங்கேயாவது போய் எதையாவது சாப்பிட்டுட்டு வந்து ரெண்டு பேரும் படுத்தறபாடு எனக்குத்தானே தெரியும்." யுவாவிற்கு பதிலைச் சொல்லி ரகுவைப் பார்த்து உதட்டைச் சுழித்துவிட்டுச் சென்றாள்.

"இவளோட உங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான் போலயே!" ரகுவிற்காக யுவா பரிதாபப்பட, ஒரு கையில் யுவனி கொடுத்த தட்டோடு மற்றொரு கையை அவனது தோளில் போட்ட ரகுவம்சி,

"மாப்ள! அவள் என்னை இழுத்ததே இந்த அக்கறையில தான்டா. எம்மேல கோபத்துல தான் இருக்கா, இருந்தாலும் எனக்கான அவளோட அன்பும் அக்கறையும் எப்பவும் இருக்கும்." அனுபவித்து சொன்னவனை பார்த்து,

"சரித்தான்!" தலையசைத்து சிரித்த யுவ்ராஜ், "அப்ப கோபத்தை தீர்க்க நான் சொன்ன மாதிரி ஐடியா தான் ஃபாலோ பண்றீங்க போல?!" கேட்க,

ரகசியமாக புன்னகைத்த ரகு, "நீ இன்னமும் வளரனும் மாப்ள! ஏதோ என் தங்கச்சி புத்திசாலியா இருக்கப் போய்தான் தப்பிச்ச போல." என்றிட, முறைத்தான் யுவா.

திருமணம் இனிதே நிறைவடைந்து அனைத்து பணிகளுக்கும் பணம் கொடுத்து எல்லா வேலைகளும் முடிந்து வீடுதிரும்ப மாலையாகி விட, மின்னொளி அங்கு யுவதீரனோடு ஓடியாடி விளையாடிய களைப்பில் உறங்கி விட்டாள்.

மகளை படுக்கையில் அலுங்காமல் படுக்க வைத்த யுவனி, ரகுவை முறைத்தபடி வெளியேற முயல, அவள் கதவை நெருங்கும் முன்பு விரைந்து வந்து அணைத்துக் கொண்டான் கணவன்.

"விடுங்க என்னை. எங்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறீங்களோ?! அதுவும் பப்ளிக்ல சொல்லிட்டு இருக்கீங்க. போக வேண்டியது தானே. உங்கள யாரு தடுத்தா இங்கே." முறுக்கிக் கொண்டாள் மனைவி.

"அது ஏதோ சும்மா விளையாட்டுக்கு சொன்னது யுவி. இதுக்கெல்லாம் சீரியஸ் ஆகலாமா என் செல்லம்?" வழக்கம் போல திமிறியவளை தன் கைகளுக்குள் அடக்கியபடி விளக்கினான்.

பிறகென்ன! சிறிது நேரம் அவனது கெஞ்சலும் அவளது மிஞ்சலுமாக கழிய, இறுதியில் தனது கொஞ்சலில் இறங்கி அவளிடம் சரணடைந்தான் ரகுவம்சி.


🌺சுபம்🌺
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top