• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிலவாக உனக்குள் - 7

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
34
அத்தியாயம் - 7
மெல்ல மெல்ல நகர்ந்து நாள்கள் பத்தை கடந்திருந்தது. நகுல் வரவும் இல்லை. வினோத்தைத் தொடர்பு கொள்ளவும் இல்லை.

இரண்டு மூன்று நாள்கள் காத்திருந்த வினோத் அதற்கு மேல் தாமதிக்காமல் காவல்துறையில் வேலை செய்யும் தன் நண்பனைச் சந்தித்து விபரங்கள் கூறி, சங்கவி கொடுத்திருந்த நகுலின் கைப்பேசி எண்ணை வைத்து அவன் வீட்டு முகவரியைத் தெரிந்து கொண்டான்.

முகவரி தெரிந்த பிறகு பொறுமை என்பது இருக்குமா வினோத்துக்குச் சிறுத்தையாகப் பாய்ந்து சென்று நகுல் வீட்டுக் கதவைத் தட்ட, ஒரு பெண் எட்டிப் பார்க்க, அவள் புடவையைப் பிடித்து இரு குழந்தைகள் நிற்க, “நகுல் வீடுதானே அவர் இருக்காரா?” என்றான்.

“ஆமா அவர் வீடுதான். அவர் ஆபீஸ் போயிருக்கார். நான் அவரோட மனைவிதான் நீங்க யாருன்னு விபரம் சொன்னா அவரிடம் சொல்றேன்” அவன் முகம் வாடியதைக் கண்டு கேட்டாள்.

மனைவி என்ற வார்த்தை காதில் விழுந்ததும் மனம் எரிமலையாகக் குமுற, அதை மறைத்து, “நகுலோட ஃப்ரெண்ட் நான். பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு பார்க்க வந்தேன். அவனுக்குக் கால் பண்ணேன் அவன் எடுக்கலை. அதான் வீட்டுக்கு வந்துட்டேன். வினோத்துன்னு சொல்லுங்க” என்று வெளியில் வந்தவன் கோபத்தை இரண்டு சக்கர வாகனத்தில் காட்டினான்.

எதையோ எதிர்பார்த்து வந்தவன் ஏமாற்றமாகச் செல்வதைக் கண்டு வினோத்தையே பார்த்திருந்தாள் நகுலின் மனைவி செல்வி.

ஒரு கயவனை நம்பி ஏமாந்துவிட்டாளே! ஆத்திரம் தலைக்கேற உள்ளே வந்த வினோத், “சங்கவி!” எனக் கத்தினான். அவளைத் தவிர மற்ற அனைவரும் பதறியடித்து வந்தனர்.

“வினோ, ஏன் கத்துற? பக்கத்து வீட்டுக்குக் கேட்கப் போகுது. எதுனாலும் அமைதியா பேசு” கலக்கமாக தெய்வானைச் சொல்ல.

“அவளை முதல்ல வெளிய வரச் சொல்லுங்கம்மா” மனதில் சுமந்திருக்கும் வேதனையைச் சொல்ல முடியாமல் சோபாவில் அமர்ந்தான்.

திவ்யா, இலக்கியா வந்துவிட்டால், உலகமே கையில் வந்தது போல் துள்ளிக் குதிக்கும் ஆட்டுக் குட்டியைப் போல் துள்ளி துள்ளிக் குதிப்பாள். பத்து நாள்களாக வீட்டிற்குள் உலா வருபவர்களைக் கண்டு காணாமல் இருந்தாள்.

சங்கவியின் பேச்சு, செயல், அன்பு எல்லாமே மாறிவிட, அவளின் பாராமுகமும் இவர்கள் விலகிச் செல்வதும் மனதில் முள்ளாகக் குத்தியது. பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தனர்.

வினோ தொண்டைக் கிழிய கத்தியும் வெளிய வராத சங்கவியிடம் ஆத்திரம் வந்தாலும், அதைக் காட்டும் நேரம் இதுவல்ல என்று சங்கவியிடம் சென்று வெளியில் வரச் சொன்னாள்.

சங்கவி நிமிர்ந்து திவ்யாவின் முகம் பார்க்க, அவளோ சன்னலைப் பார்த்திருக்க, ஏளனச் சிரிப்பு சிரித்தவள் வெளியில் செல்ல, அவள் பின்னாடியே திவ்யாவும் சென்றாள்.

“இப்ப எதுக்குக் கத்திட்டு இருக்க? நகுல் வரேன்னு சொல்லியிருக்கார்ல. அதுக்குள்ள நீ ஏன் அவர் வீட்டுக்குப் போன? இப்ப என்ன அவர் கல்யாணம் ஆனவர். ரெண்டு குழந்தைங்க இருக்குன்னுதானே கத்துற? அதெல்லாம் தெரிஞ்சுதான் காதலிச்சேன். நகுல் எதையும் மறைக்கலை எல்லா உண்மையையும் சொல்லியிருக்கார். அவ சரியில்லைன்னுதான் அவர் என்னையே காதலிச்சார்.”

மனசாட்சியை விற்றுவிட்டுச் சுயநலமாகப் பேசும் சங்கவியை, ‘பாளார்! பளார்!’ என அறைந்தாள் திவ்யா.

“நீ இவ்ளோ கேவலமா எப்படி மாறின? ஒரு குடும்பமே உன்னால நாசமாகும்னு தெரிஞ்சும் எப்படித் துரோகம் பண்ண மனசு வந்தது?” அதற்கு மேல் பேச முடியாமல் தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் திவ்யா. இலக்கியாவும் அமர விழிகள் நீரில் நனைந்தன.

காதலால் தெரியாமல் தவறு செய்துவிட்டாள். அவள் வாழ்க்கை நன்றாக அமைந்தால் போதும் என நினைத்திருந்தவர்களுக்கு, செய்வது தப்பு என்று தெரிந்தும் செய்திருக்கிறாளே என்பதை மனம் ஏற்க மறுத்தது. தன்னைக் கட்டுப்படுத்த நினைத்தும் முடியாமல் அடித்துவிட்டாள்.

‘பட்! பட்!’ எனத் தலையில் அடித்துக் கொண்டு சந்திரன் அழ, சரவணன் ஓடி வந்து கையைப் பிடிக்க, ஏற்கனவே அழுது அழுது ஓய்ந்த போன தெய்வானை, இதைக் கேட்டதும் மயங்கிச் சரிந்தார்.

சந்துருவும் வள்ளியம்மையும் அவரைத் தாங்கிப் பிடிக்க, இலக்கியா தண்ணீர் எடுத்து வர உள்ளே ஓட, திவ்யா தலையணையை எடுத்து வந்து தெய்வானை தலையைத் தூக்கி வைத்தாள்.

குழந்தையாகவே பார்த்திருந்தவள் இன்று பூதாகரமாக நிற்பதைக் கண்டு அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், நடப்பதை எல்லாம் பார்த்தவாறே ஆடாமல், அசையாமல் அமர்ந்திருந்தான் வினோத்.

ஒரு நிமிடமும் பல யுகமாகக் கரைய, எழுந்த வினோத், “சரி உன்னோட முடிவுதான் என்ன? அந்த ரெண்டு குழந்தைங்க முகமும் அவங்க சிரிச்ச சிரிப்பும் இன்னும் என் கண்ணில் நிற்கு. ஆனால், நீ மனசாட்சியே இல்லாம இருக்க, உன்னிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை. இனிமே நீதான் சொல்லனும்” விரக்தியாகக் கேட்டான்.

“நகுல் விவாகரத்து வாங்க ஒரு வருஷம் ஆகும்னு சொல்லியிருக்கார். அதுவரை கல்யாணம் பற்றிப் பேச வேண்டாம்னு சொல்றார். விவாகரத்து வாங்கிட்டு அவரே வீட்ல வந்து பேசுற வரைக்கும் நீங்க பொறுமையா இருங்க” ஏதோ சாதனைச் செய்யப் போவது போல் கட்டளையிட்டாள். மயங்கிச் சரிந்திருந்த தெய்வானையை மனதில் ஈரம் இல்லாமல் பார்த்துச் சென்றாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
34
இரண்டு நாள்கள் வீட்டில் ஆள்கள் இருக்கும் அறிகுறியே இல்லாமல் நிசப்தமாக இருந்தது. பல மணி நேர யோசனைக்குப் பிறகு சரவணன் சங்கவியைக் கூப்பிட, “நகுல் விவாகரத்து வாங்கிட்டு வரட்டும். வந்தபிறகு உங்க கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கலாம். அந்த ஒரு வருஷத்தில் நீ உன் படிப்பை முடித்து நல்ல வேலையில் சேரு. நகுல் உன்னை ராணி மாதிரி வச்சிப்பான்” என அழுத்தமாகச் சொன்னவர், “படிப்பு ரொம்ப முக்கியம் ஏதோ ஒரு நேரத்தில் இந்தப் படிப்பு உனக்குக் கைக்கொடுக்கும். அதை முடிக்கும் வரை நகுலை பார்ப்பதை குறைச்சிக்கோ. அதுதான் நல்லது” என்றார்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு, சரவணன் சொல்வது சரிதானென நினைத்து, ‘சரி’ எனத் தலையை ஆட்டினாள்.

சரவணன் சொல்வது மற்றவர்களுக்குக் குழப்பமாக இருந்தாலும், அதில் ஏதாவது காரணம் இருக்குமென்று அமைதியாகி விட்டனர்.

தாய்மாமன் சொன்னதைத் தப்பாமல் நகுலிடம் உரைத்து விட்டாள். அவளிடம் சரியென்றாலும் மனம் ஏற்க மறுத்திருந்தது. தன் தேவையை நிறைவேற்ற ஆசை வார்த்தைகளால் ஜாலம் புரிந்து, சங்கவி கல்லூரி செல்வதைத் தடுத்து தன் தாகத்தைத் தீர்த்து வந்தான்.

தான் முடியாதென்று முரண்டு பிடித்தால் தன் மீது சந்தேகம் வரக் கூடுமென்று அவள் கல்லூரி செல்வதற்குச் சம்மதித்தான்.

நகுல் சரியென்றுவிட்டானே அந்த ஒரு வார்த்தைக்கு மீண்டும் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தாள். சரவணனும் குடும்பத்தோடு ஊருக்குச் செல்ல, தினமும் வினோத்தும், சந்துருவும் கல்லூரியில் விடுவதும் கூட்டி வருவதுமாக மாற்றி மாற்றிச் செய்து வந்தனர்.

இருவருமே நகுலைச் சந்திக்க வாய்ப்புக் கொடுக்காமல் முட்டுக் கட்டையாக நின்றனர். ஆனால், கைப்பேசியில் பேசுவதை மட்டும் அவர்களால் நிறுத்த முடியவில்லை.

தெய்வானையும் சந்திரனும் அவளுடன் பேசுவதை அறவே நிறுத்தியிருந்தனர். மூவருக்கும் பாலமாக வினோத், சந்துரு இருக்க, நாள்கள் வேகமாக நகர்ந்தது.

வினோத் மட்டும் சரவணனைத் தொடர்பு கொண்டு இங்கு நடக்கும் விபரங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி வந்தான்.

அடிக்கடி அவன் தனியாகப் பேசுவதைக் கவனித்த சங்கவி அவன் அருகில் வர, அவள் வருவதைக் கவனித்த வினோத், திவ்யாவின் பெயரைச் சொல்ல, அவள் பெயர் காதில் விழவும் வினோத்திடம் எதுவும் கேட்காமல் நகர்ந்துவிட்டாள்.

தோல்வியுற்ற பாடங்களையும் சேர்த்து படிக்க வேண்டுமென்பதால் சங்கவியின் கவனம் முழுவதும் படிப்பில் திரும்ப, ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? சங்கவியை நேரில் வர வைக்கப் பல முறை தூண்டிலை வீசியும் அகப்படாமல் சங்கவி தவிர்த்தாள்.

பரீட்சை நேரம் நெருங்க நெருங்க நகுலிடம் பேசுவதைவிடத் தேர்வு முக்கியம் என்பதால் அவனிடம் கைப்பேசியில் பேசுவதையும் தவிர்த்தாள். முழு நேரமும் வீட்டினரின் கண்காணிப்பில் இருப்பவளின் ஒவ்வொரு அசைவையும் அறிந்தவர்கள் இருவரும் பேசாமல் இருப்பது எல்லோரின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

சங்கவியின் முகம் பாராமல் சென்ற தெய்வானை, இரவு பகலென்று பாராமல் விழித்திருந்து புத்தகமும் கையுமாக இருந்தவளுக்கு மனம் கேளாமல் இரவு தேநீர் போட்டு வந்து கொடுத்தாள்.

ஆச்சரியமாகத் தாயைப் பார்த்தவள் இதழ்களில் புன்னகை அரும்பியது. வீட்டின் பழைய சூழ்நிலை மெல்ல மெல்ல திரும்பியது.

நகுல் விவாகரத்து வாங்க ஒரு வருடம் ஆகும் என்றதை சாதகமாக எடுத்துக் கொண்ட சரவணன், இந்த ஒரு வருடத்தில் அவள் கவனத்தைப் படிப்பில் மாற்றி விட்டால், அதற்குப் பிறகு வேலை என்று நகுலிடமிருந்து மெல்ல மெல்ல பிரித்துவிடலாமெனத் தான் போட்ட கணக்கை வினோத்திடம் சொல்ல, அவன் சரியென்றதும் சரவணன் ஊருக்குப் புறப்பட்டுவிட்டார்.

சங்கவி கல்லூரி சென்ற நேரம் தங்கள் திட்டத்தை நிறைவேற்றப் பேசிக் கொண்டனர். எல்லோரின் ஒரே எண்ணம் சங்கவிக்கு நல்ல வாழ்க்கை அமையனும். அவளால் ஒரு குடும்பம் அழியக் கூடாது என்ற என்பதே பெரிதாக இருந்தது.

நாம் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றி விட்டால் கடவுளுக்கு வேலை இல்லாமல் போய்விடும். சங்கவி தூங்கிய பிறகு சரவணனுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தான்.

அன்றும் சங்கவி தூங்கிவிட்டாளா என்று பார்க்க வந்தவன் அவள் சும்மா கண்ணை மூடியிருப்பதைக் கவனிக்காமல் வெளியில் சென்றுவிட்டான்.

கண்ணை மூடி இருந்தவள் வினோத் தன் அறைக்கு வந்து எட்டிப் பார்த்துச் செல்வதைக் கண்டு சந்தேகம் கொண்டவள் வினோத்தைப் பின் தொடர்ந்து சென்றாள். எல்லோரும் தூங்கிவிட்டதால் சங்கவி வினோத் பின்னாடி சென்றதை யாரும் கவனிக்கவில்லை.

சரவணன், வினோத் பேசுவதைக் கேட்டவளுக்கு முதுகில் குத்துப்பட்டது போல் உணர்ந்தாள். வினோத் பேசி முடிக்கும் நேரம் பூனைபோல் நடந்து தன் அறைக்குள் முடங்கி விட்டாள்.

எனக்குத் தெரியாமல் நீங்க எல்லோரும் போட்ட திட்டத்தைத் தவிடு பொடியாக்குகிறேன் எனத் தனக்குள் கர்ஜித்தவள், அவளுக்கு எல்லாம் தெரிந்து தங்களுக்கு இடியை இறக்கப் போகிறாள் என்பதை அறியாமல் நிம்மதியான உறக்கத்தில் இருந்தனர்.

ஐந்து முறை தொன்டை கிழிய கத்திய பிறகே தெய்வானை எழுந்து வர, மணி ஐந்தை தாண்டியிருப்பதைக் கண்டு மடமடவெனச் சமையல் அறைக்குள் நுழைந்தவர் பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்தார்.

வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது சங்கவியின் அறையையும் எட்டிப் பார்த்தார். அவள் அறையில் மின் விளக்கு எரியாததைக் கண்டு சந்தேகம் வந்தாலும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் வினோத்தை அனுப்பி எழுப்பலாமென வேலையில் மும்முரமாகி விட்டார்.

சங்கவியை அழைத்துச் செல்ல வினோத் புறப்பட்டு வர தெய்வானை சங்கவியின் அறையைப் பார்த்தபடியே இருந்தார்.

“என்னம்மா, சங்கவி இன்னும் கிளம்பலையா? எதுக்கு அவ ரூமையே பார்த்துட்டு இருக்கீங்க? எதுவும் பிரச்சனையா?” தயக்கத்துடன் வினோத் கேட்க.

“அதெல்லாம் இல்லை. அவளுக்கு ஏதோ உடம்புக்கு முடியலை போல, அதான் கிளம்பி வர லேட்டாக்குறான்னு நினைக்கேன்” என்றவரின் மனம் நிம்மதியற்று இருக்க, கண்கள் சங்கவி அறைக் கதவையே பார்த்திருந்தது.

பட்டென்று கதவைத் திறந்து வந்த சங்கவியைக் கண்டதும், இருவரும் சாதாரணமாகப் பேசிக் கொள்வது போல் பேச, சாப்பிடாமல் வினோத் வண்டியின் அருகில் நின்றாள்.

“வினோ, சாப்பிடாம போறா என்னன்னு கேளு” என விரட்டினார் தெய்வானை.

‘இந்த அம்மாக்களே இப்படித்தான். வேண்டாம்னா ஒரேடியா ஒதுக்கிற வேண்டியது. வேணும்னா தலைமேல் தூக்கி வச்சு கொண்டாட வேண்டியது’ உள்ளுக்குள் முனங்கியபடியே, “அதை நீங்களே நேரா கேளுங்கம்மா. நான் எதுக்கு இடையில்?”

தோசை கரண்டியை ஓங்கியவர், “வம்பு பண்ற நேரமா இது போப்போய்ச் சாப்பிட கூட்டிட்டு வா” வெண்பற்கள் தெரிய வினோத்தை தோசை கரண்டியால் குத்திக் கொண்டே இருந்தார்.

தாயின் இடும்பில் சிரிப்பு வர, “சங்கவி, சாப்பிடாம போற. வா வந்து சாப்பிடு. அதுக்குப் பிறகு கிள்மபலாம்” என உள்ளிருந்தே குரல் கொடுத்தான்.

“நான் கேண்டீன்ல சாப்பிட்டுக்கிறேன். இப்ப எனக்குப் பசியில்லை” வெளியில் நின்றபடியே பதில் கொடுத்தாள். சில நேரங்களில் நடப்பதுதானே என நினைத்த வினோத் தெய்வானையைக் கிண்டலாகப் பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்பினான்.

சங்கவி கல்லூரியில் இறங்கியதும் உள்ளே செல்ல, அவள் கண்ணிலிருந்து மறையும் வரை அவளையே பார்த்துவிட்டு வண்டியைத் திருப்பிச் சென்றான் வினோத்.

ஒரு வழியைக் கண்காணித்த வினோத் இன்னொரு வழி இருப்பதை மறந்து போனான். மறு வழியில் சென்று வெளியில் காரில் காத்திருந்த நகுலுடன் கிளி பறந்து விட்டது.

எப்போது கொத்திச் செல்லலாம் என்று கழுகு வட்டமிட்டுக் கொண்டிருந்த கழுகு, தானாக வந்து மாட்டும் கிளியை விடுமா? தனக்கு யோகம் வந்துவிட்டது என்று கொத்திச் சென்றுவிட்டது.

சங்கவியின் துணியைத் துவைக்க எடுக்க, அவள் அறைக்குள் சென்ற தெய்வானை, மேசையில் இருந்த கடிதத்தைப் படித்துவிட்டு, வேகமாக வெளியில் ஓடி வந்தவர், “சந்துரு, வினோத்துக்கு கால் பண்ணு அவளைக் காலேஜ்ல விட வேண்டாம், வீட்டுக்குக் கூட்டிட்டு வரச் சொல்லு” பதற்றத்தில் கத்தினார்.

சந்திரனும் சந்துருவும் என்னவென்று கேட்க அவர்களும் பயந்து ஓடி வர, வினோத்தின் வண்டிச் சத்தம் காதில் கேட்க மூவரின் தலையும் தானாக வெளியில் திரும்ப, “போச்சு! போச்சு! எல்லாம் போச்சு!” எனத் தலையில் அடித்து அழுதார் தெய்வானை.

தெய்வானை கையிலிருந்த கடித்தத்தைப் படித்துவிட்டு, “இன்னையோட அவ செத்துட்டான்னு நினைச்சிக்கோங்க. இனிமே அவளைப் பற்றி யாரும் இந்த வீட்டில் பேசக் கூடாது” கோபம் தலைக்கேற கடுமையாக எச்சரித்தார்.

தங்கையின் வாழ்க்கை பாழாவது மட்டுமில்லாமல், அவளால் எந்தக் குடும்பமும் சீரழிந்துவிடக் கூடாதென்று அவளைத் திருத்த எடுத்த முயற்சி வீணாகிப் பாழுங் கிணற்றில் போய்தான் விழுவேன் என்பவளை மறந்து இரண்டரை வருடங்கள் கடந்தும் போயிருந்தது.
தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top