- Joined
- Aug 31, 2024
- Messages
- 34
- Thread Author
- #1
அத்தியாயம் - 6
இரவு நடந்த கலவரத்தின் பயம் அடங்காமல் வெளிறிய முகத்தோடு திவ்யா, இலக்கியா இருக்க, எதுக்கு நம் குடும்பத்தை அழிக்கத் துடிக்கு? நாம் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கலையே என்ற கவலையில் மற்றவர்கள் ஆழ்ந்திருந்தனர்.
“வினோ, யாரோ சினிமாவில் வர மாதிரி கிராபிக்ஸ் பண்ணி நம்மைப் பயமுறுத்தற மாதிரியே தெரியுது. எனக்கென்னமோ இதெல்லாம் அந்தச் சங்கவி வேலையாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்” என்ற சந்துருவை அடிக்கக் கையை ஓங்கினான் வினோ.
“சந்திரன், சந்துரு சொல்ற மாதிரி சங்கவி கோபத்தில் செய்வினை எதுவும் வைத்திருப்பாளோ? அதான் அசுத்த ஆவி சுற்றிச் சுற்றி வருதா?” சரவணன் சொல்ல, ஓங்கிய கையைக் கீழே இறக்கினான் வினோத்.
‘மகேஷ் மருத்துவமனையில் சங்கவியை எங்கேனு ஏன் கேட்டான்? அவள் திருமணம் முடித்து மாமியார் வீடு போயிட்டானு சொல்லியும் நம்பாமல் பார்த்தவன் ஏன்? எனக் கேட்டதற்கு ஒன்றுமில்லைன்னு சொன்னானே. அப்படின்னா அவன் எதையும் மறைத்திருப்பானா? இல்லைன்னா, மகேஷ் சொன்னதில் வேறு எதுவும் இருக்கா?’ எல்லோரும் சங்கவியைப் பற்றியே சொல்வதால் சந்தேக வலுக்க மாற்றி யோசிக்க ஆரம்பித்தான் வினோத்.
சட்டென்று எழுந்தவன், “சந்துரு, என் கூட வா” என அவன் பதிலை எதிர்பார்க்காமல் வெளியில் சென்று இருசக்கர வாகனத்தைக் கிளப்பினான்.
‘இவன் என்ன தலையும் இல்லாம வாலும் இல்லாம திடீர்னு கூப்பிடுறான்’ என நினைத்தாலும் அவன் பின்னாடியே ஒடி அமர்ந்தான்.
வேகமாகச் சென்ற இருவருக்கும் பூட்டிய வீடு வரவேற்க, பக்கத்து வீட்டில் மகேஷ் பற்றிக் கேட்க, அவன் சற்று முன்புதான் வந்த வேலை எல்லாம் முடித்துப் பெங்களூர் புறப்பட்டுச் சென்றான் என்றனர்.
பேருந்தா, இரயிலா? என விபரங்கள் கேட்டுக் கொண்டு அசுர வேகத்தில் இரயில் நிலையம் பறக்க, பின்னாடி இருந்த சந்துரு பலமுறை கேட்டும் மகேஷை பார்த்தபிறகு சொல்கிறேன் என்றுவிட்டான் வினோத்.
இரயில் நிலையம் வந்ததும் சந்துருவிடம் வண்டியை நிறுத்திவிட்டு வருமாறு கூறிவிட்டு இரயில் நிலைய படிக்கட்டுகளில் தாவித் தாவி ஓடி நடை மேடை வரவும், பெங்களூர் இரயில் நடைமேடையிலிருந்து வெளியில் செல்லவும் சரியாக இருக்க, ஒற்றைக் கையைத் தன் தலையில் வைத்தபடி செய்வதறியாது நின்றிருந்தான்.
வண்டியை நிறுத்திவிட்டு வந்த சந்துரு காலியாக இருக்கும் நடைமேடையைக் கண்டு எதுவும் புரியாது விழிக்க, “என்ன வினோ, எதுக்கு மகேஷை தேடி ஓடி வர, எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கிற? சொல்லலைன்னா விடமாட்டான் என்று வினோத் சொல்ல,
“இதுக்கு எதுக்கு இப்படிப் பதறி அடிச்சு ஓடி வர? மொபைல்ல கேட்டிருக்க வேண்டியதுதானே” வினோத் தலையில் தட்ட,
சந்துருவை முறைத்தபடி, “அது தெரிஞ்சா நான் ஏன் இங்க முழிச்சிட்டு இருக்கப் போறேன். அது இல்லாமதானே குழம்பிட்டு இருக்கேன்” என்றபடி அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
தன் கைப்பேசியில் மகேஷை அழைத்து வினோத்திடம் கைப்பேசியை நீட்ட, “மகேஷ் லைன்ல இருக்கான் பேசு.”
“உன்னிடம் நம்பர் இருக்குன்னு முதல்லையே சொல்றதுக்கென்ன” எனச் சலித்த வினோத், மகேஷிடம் பேச, முதலில் சொல்லத் தயங்கிய மகேஷ், பின் அனைத்தையும் சொன்னான்.
மகேஷ் கைப்பேசியைத் துண்டித்ததும் அருகிலிருந்த இருக்கையில் இரு கைகளையும் நெற்றியில் வைத்து அமர்ந்தபடி தலை குனிந்திருந்தான். சந்துரு விபரம் கேட்க, வினோத் சொன்னதும் அதிர்ச்சியில் எழுந்துவிட்டான்.
******
“நாங்க என்ன நடக்குமோன்னு பயந்துகிட்டு இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் ஹாயா எங்க சுத்திட்டு வரீங்க?” திவ்யாவின் பயம் அவள் கண்களில் தெளிவாகத் தெரிந்தது.
“ம்ம்… இராத்திரி அந்தப் பேய் கூட எங்கெல்லாம் சுத்தலாம்னு இடம் பார்த்துட்டு வரோம்” அவள் பயம் தெரிந்தாலும் சந்துரு எடக்காகப் பதில் சொல்ல.
“அது சுடுகாட்டுக்கு அனுப்ப வழி தேடிட்டு இருக்கு. இந்த நேரத்தில் உனக்கு எல்லாம் கிண்டலா இருக்கா?” சந்துருவின் கேலியை ரசிக்கும் மனநிலை யாருக்கும் இல்லை என்பது இலக்கியாவின் கேள்வியிலே தெரிந்தது.
“எப்படியும் சுடுகாட்டுக்குக் கூட்டிட்டுப் போகப் போகுது. அதான் குடும்பமா சுத்த எந்தச் சுடுகாடு நல்லா இருக்கும்னு பார்த்துட்டு வரோம்” இறுக்கமான சூழ்நிலையை இலகுவாகா மாற்றிவிடலாமென நினைத்தவனுக்குத் திவ்யா, இலக்கியாவின் கோபமே பரிசாகக் கிடைத்தது.
“ஐயோ! இவனோட கொஞ்சம் சும்மா இரேன். எப்பப் பாரு ஏதாவது வம்பு பண்ணிட்டு இருக்கிறதே வேலையா போச்சு. வினோ, எங்க போனீங்க ரெண்டு பேரும்? எங்களுக்கு வயிற்றில் புளியைக் கரைச்சிட்டு இருக்கு. இவன் எடக்கு மடக்கா பதில் சொல்லிட்டு இருக்கான்” பொறுமையிழந்த தெய்வானை சீறினார்.
எங்கோ ஒரு மூலையில் அவள் விருப்பப்படி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறாள் நிம்மதியாக இருந்தவர்களுக்கு வினோத் சொன்னதைக் கேட்டதும், பெற்ற மகளே பேயாக வந்திருக்கிறாள் என்ற அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் கண்களில் நீர் திரண்டு வடியத் தொடங்கியது.
“உயிரோடு இருக்கிறவ எப்படிப் பேயா வர முடியும்! என்ன உளரீட்டு இருக்க?” நம்ப முடியவில்லை என்றாலும் அது பொய்யாக இருக்கக் கூடாதா என்ற எண்ணமும் குழப்பமும் சந்திரனிடம் நன்றாகத் தெரிந்தது.
“அதான்பா எனக்கும் புரியலை. நேற்று இராத்திரி பேசிட்டு இருந்தப்போ ஏதோ நிழல் தெரியுதுன்னு மேலே பார்த்தேன். அப்ப எனக்குத் தெரிந்ததும் சங்கவிதான். எதுவும் பிரம்மையோன்னு நினைச்சேன். காலையில் எல்லோரும் சங்கவின்னு சொன்னதும், மகேஷிடம் விசாரிக்கப் போனேன்.”
சங்கவி உயிரோடு இருக்கிறாளா? இல்லையா? என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், எப்படி இறந்தாள்? ஏன் நம்மைக் கொலை செய்ய நினைக்கனும் என்ற குழப்பம் வேறு குடைந்தது.
மகளின் நிலை கண்டு பெற்ற வயிறு பரிதவிக்க, ‘ஓ’ வென்று அழத் தொடங்கினார் தெய்வானை. சங்கவி செய்தது பிடிக்காமல் போயிருந்தாலும் சிறு வயதிலிருந்தே தங்களுடன் வளர்ந்தவள் ஆயிற்றே. கோபத்தில் மறைந்து போன பாசம் அவள் இவ்வுலகில் இல்லையோ என்ற எண்ணம் திவ்யா, இலக்கியா இருவரின் விழிகள் வெள்ளத்தில் நிறைந்திருக்க, தெய்வானையின் இரு பக்கமும் தோளைப் பிடித்து அமர்ந்தார்கள்.
“அம்மா, அப்படி எதுவும் இருக்காது. அவ கோபத்தில் ஏதோ பண்ணிட்டு இருக்கான்னு நினைக்கேன். இந்தக் காலத்தில் பேய் பிசாசுன்னு பயந்துகிட்டு இருக்கீங்க” கலக்கமுற்றவர்களைச் சமாதானம் செய்துவிடலாமெனப் பேசியவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வீடே அமைதியாகிவிட ஒவ்வொருவரின் மனமும் சஞ்சலத்தில் உழன்று கொண்டிருந்தது. சங்கவி வீட்டை விட்டு வெளிய போனது எல்லோரின் மனதிலும் காட்சிகளாகக் ஓடிக் கொண்டிருந்தது.
கல்லூரி படிப்பின் மூன்றாம் வருடத்தில் இருந்தாள் சங்கவி. அந்த வயதுக்கே உரிய இந்தக் காலத்துப் பிள்ளைகள் போலக் கல்லூரி விட்டால் கைப்பேசியும் கையுமாகவே இருந்தாள். அதுவும் கடைசி வருட படிப்பில் அவள் கவனம் முழுவதும் கைப்பேசிலையே இருந்தது.
சங்கவியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட வினோத் அவளைக் கேட்க, கல்லூரி பாடம் சம்பந்தமான அனைத்தையும் கைப்பேசியில் அனுப்பவதால் அதை வைத்தே படிக்க வேண்டியிருக்கு என்றுவிட, அதுவும் உண்மைதான் என்று மேற்கொண்டு தீர விசாரிக்காமல் விட்டுவிட்டான்.
உண்மையை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்? என்றாவது ஒரு நாள் வெளியில் வந்துதானே ஆகும். ஆறு பாடத்தில் ஒரு பாடத்தில் கூடத் தேர்ச்சி பெறவில்லை.
எண்பது சதவீத மதிப்பெண்கள் எடுப்பவள் எல்லாவற்றிலும் தோல்வியைத் தழுவியிருந்தது, வீட்டினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் கல்லூரியில் எதுவும் பிரச்சனை இருக்கலாமென நினைத்து வினோத் கல்லூரிக்கே சென்றுவிட்டான்.
அங்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது, அவள் கல்லூரிக்கே சரியாக வருவதில்லை என்பது. தினமும் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறி எங்குச் சென்றிருப்பாளெனக் கேட்க வீட்டிற்கு வந்தான்.
“நீ இத்தனை நாளா காலேஜுக்கு போறேன்னு சொல்லிட்டு எங்க போன?” வினோத்தின் கேள்வியில் சற்று அதிர்ந்தாலும், என்றாவது இந்தக் கேள்வி வரும் என்று எதிர்கொள்ளத் தைரியமாகவே இருந்தாள்.
வினோத் கேட்ட கேள்வியில் விக்கித்துப் போன தெய்வானை, சங்கவியைப் பலம் கொண்டு அடிக்க ஆரம்பித்தார்.
“இராத்திரி தூங்காம மொபைலே கதியா இருக்கியேன்னு கேட்டதுக்கு. படிக்கிறேன்னு சொல்லி எங்களை ஏமாத்தியிருக்க. காலேஜுக்குப் போகாம எங்க போன?” எனத் திரும்பவும் கைகளைச் சுழற்றினார்.
தெய்வானை கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் வாய்த் திறக்காமல் இருந்தவளால் அவரின் அடியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் கையை எதிர்த்துப் பிடித்துத் தள்ளிவிட்டாள். மகளின் எதிர்ப்பைக் கண்டிராதவர் சிலையாக நின்றார்.
அம்மாவை எதிர்த்ததும் இல்லாமல் தள்ளிவிட்டு விட்டாளே என்ற ஆத்திரம் தலைக்கேற கை ஓங்கிய சந்துருவை தடுத்து நிறுத்திய வினோத், “அம்மாவுக்கே மரியாதை இல்லை. உன்னைத் தூசி அளவு கூட மதிக்கமாட்டா” என்றவன் சங்கவியிடம், “உன் மொபைலைக் கொடு” எனக் கேட்க, தன் கைப்பேசியை இறுக்கிப் பிடித்தவள், வினோத் கேட்டதுக்குப் பதில் சொல்லாமல் தன் அறைக்குள் நடந்தாள்.
பாசமாகத் தன்னைச் சுற்றி சுற்றி வந்த தங்கை திமிராகத் தன்னைக் கடந்து செல்வதைக் கண்டு மனம் வருந்தினாலும், எட்டி நடந்து அவள் கையிலிருந்த கைப்பேசியைப் புடுங்கினான்.
சற்றும் எதிர்பாராத சங்கவி கைப்பேசியை வினோத்திடமிருந்து வாங்க அவனுடன் மல்லுக் கட்டினாள். ஆனால், அவனோ அவள் ஒற்றை விரலைப் பிடித்துக் கைப்பேசியைத் திறந்தவன் புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்கக் கண்கள் கூசியது.
அண்ணனாகத் தங்கயை வேறொரு ஆணுடன் பார்க்க முடியா படங்களைப் பார்த்ததும் ஒரே அடியில் கைப்பேசியைப் போட்டுடைத்தான்.
காதலனோடு சேர்ந்து விதவிதமாக, அந்தரங்கமாக, ஆசையாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் அழித்துவிட்டானே என்று வினோத்தின் சட்டையைப் பிடித்து வெறியாட்டம் ஆட ஆரம்பித்தாள்.