- Joined
- Aug 31, 2024
- Messages
- 19
- Thread Author
- #1
அத்தியாயம் - 2
"என்ன பார்த்துட்டு இருக்க? வண்டியை எடு அந்த நாய் திரும்ப வந்திடப் போகுது” எனப் படபடத்தான் வினோத்.
“நீ மதியம் ஆபீஸ்க்கு போறப்போ நல்லாதானே இருந்த? அங்க எதுவும் மண்டையில் அடிபட்டு உனக்கு மூளை குழம்பி போயிட்டா?” சந்துரு கேலியாகக் கேட்க.
“ஏய்! நீ அடி வாங்க போற. நீ முதல்ல வண்டியை எடு எதுனாலும் வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம்” என்ற வினோத்துக்கு உள்ளுக்குள் உதறல் அதிகமாகவே இருந்தது.
“ஐயோ! இவனோட… ஐயா சாமி வீட்டுக்கு வந்தாச்சு. நீ இறங்கினாத்தான் நான் இறங்க முடியும். ஷ்ஷ்ப்பா முடியலைடா சாமி” என்று சந்துரு சொன்னதும் அலறியடித்து உள்ளே ஓடும் வினோத்தை புன்னகையோடு பார்த்திருந்தான்.
வேகமாக வெளியில் வந்த சந்திரன், “என்ன நடந்துச்சு சந்துரு? உன் அம்மாவிடம் என்னென்னமோ உளறிட்டு இருக்கான் வினோத்” வண்டியை நிறுத்தி விட்டு சந்திரன் அருகில் வந்தான் சந்துரு.
“எனக்கும் அதான்பா புரியலை. நாய்ங்கிறான். இராமசாமி மாமாவைப் பார்த்தேங்கிறான். அவன் பண்றதைப் பார்த்தா பைத்தியம் முத்தின மாதிரி இருக்கு” எனத் தலையில் அடித்துக் கொண்டான்.
“இராமசாமியை பார்த்தானா! எப்போ காலையிலா?”
“ம்கூம்” எனத் தலையை ஆட்டிய சந்துரு, “இப்ப வரப்போ பார்த்தானாம்.”
“இப்பவா! அதெப்படி பார்க்க முடியும்? இராமசாமி மதியமே இறந்துட்டானே” சந்திரனும் அவனைப் பைத்தியம் என்றே நினைத்துவிட்டார்.
இருவரும் உள்ளே வர, தன் தாய் தெய்வானையிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவரின் முகமோ கலவரத்தைத் தத்தெடுத்துதிருக்க, கலங்கிய மனதோடு கேட்டுக் கொண்டிருந்தார்.
வினோத் சொல்லி முடித்ததும், “நீ முதல்ல போய்க் குளிச்சிட்டு வா. அப்புறம் பேசிக்கலாம்” மனதில் கலக்கம் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தார் தெய்வானை.
அம்மா எதுவும் சொல்லாமல் குளித்து வரச் சொல்கிறாரே என்று தயக்கமாக எழுந்து அறைக்குள் செல்ல, சந்திரனும் சந்துருவும் தெய்வானை அருகில் வந்து நின்றனர்.
“என்னங்க, காலையில் அவன் எழுந்ததும் இனிமே நைட் வேலைக்குப் போக வேண்டாம், பகல் வேலைக்கு மட்டும் போகச் சொல்லுங்க. முடியாதுன்னா வேற வேலை தேடச் சொல்லுங்க” தெய்வானை கறாராகச் சொல்ல.
“வேலை கிடைக்கிறதே குதிரைக் கொம்பா இருக்கிற நேரத்தில் அவனுக்குக் கிடைத்த வேலைக்கு ஆப்பு வைக்கிற மாதிரி சொல்ற!” சந்திரன் திகைத்துக் கேட்க.
“வேலைன்னு பார்த்தா உங்க பிள்ளை உயிர் போயிடும். இல்லை, பைத்தியமாகிடுவான். அதனால், அவனிடம் பக்குவமா சொல்லுங்க” என்ற தெய்வானை குளித்துவிட்டு வந்த வினோத்தை பூசை அறைக்கு அழைத்துச் சென்று நெற்றியில் திருநீறும் இரண்டு தாயத்தை எடுத்துச் சாமியின் பாதங்களில் வைத்துக் கையில் ஒன்றும் கழுத்தில் ஒன்றும் கட்டிவிட்டார்.
தெய்வானை பேருக்கு ஏற்றார் போல் தெய்வத்திடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஏதோ அசுத்த ஆவி வினோத்தை அண்ட நினைத்திருக்கு என்று பயந்திருந்தார்.
“எதுக்கும்மா இதெல்லாம்? தாயத்தைக் கட்டிகிட்டு ஆபீஸ் போனா எல்லாம் கேலி பண்ணுவாங்கம்மா” எனக் கழற்றப் போனான்.
“சாமிகிட்ட வேண்டிகிட்டு கட்டினது. கேலிக்குப் பயந்துகிட்டு கழட்டிப் போட்டின்னா, உனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும். மனுஷனை பகைச்சிக்கலாம். தெய்வத்தைப் பகைச்சிக்காதே. இன்னைக்கு தெய்வத்தை வைத்து மக்கள் விளையாடுற விளையாட்டைப் பார்த்தா, கடவுள் மக்களை எங்க போய் நிறுத்த போறாரோ!” எனப் புலம்பியபடி தாயத்தைக் கழற்ற விடாமல் தடுத்தார்.
தாய் புலம்பத் தொடங்கி விட்டால் அவ்வளவு எளிதில் நிறுத்தமாட்டார் என்று வினோத்துக்குத் தெரிந்ததே அதனால், “அம்மா, நான் இராமசாமி மாமாவைப் பார்த்துட்டு வரேன்” என்ற வினோத்தைப் பிடித்து நிறுத்தினார் தெய்வானை.
“காலையில் போய்ப் பாரு. இப்ப வேண்டாம். ஏன், எதுக்குன்னு உடனே கேள்வி கேட்காதே. சொல்றதை மட்டும் செய்” தெய்வானை கட்டளையாகச் சொல்லிவிட்டு மீண்டும் சாமி அறையின் முன் நின்று கண்களை மூடினார்.
மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறிப் பார்த்துவிட்டு இருகைகளையும் சந்திரன் விரிக்க, தன் தோள்களைக் குலுக்கிவிட்டு வினோத், சந்துரு இருவரும் உறங்கச் சென்றனர்.
புரண்டு புரண்டு படுத்த தெய்வானைக்குத் தூக்கமே வரலை. எழுந்து அமர்ந்து தண்ணீர் குடிக்க, திரும்பவும் படுக்க என மாறி மாறிச் செய்து கொண்டே இருந்தார். அவரின் இந்தச் செய்கையைக் கண்ட சந்திரன், “என்ன ஆச்சு தெய்வா? இன்னும் தூங்கலையா?” எனக் கேட்க.
“என்னென்னு தெரியலைங்க. தூக்கமே வரமாட்டேங்குது. வினோத் சொன்னது மனசைப் போட்டுப் பிசையுது. கண்ணை மூடினா சங்கவி முகம்தான் தெரியுது. என்னைக்குமே இப்படி இருந்தது இல்லை” எனக் கவலையாகச் சொல்ல,
“அவளைப் பற்றி இப்ப ஏன் நினைக்கிற? நாம எவ்வளவோ சொல்லியும் கேட்காம போனவளைப் பற்றி நினைத்து என்ன ஆகப் போகுது?” சந்திரனின் முகம் கோபத்தில் தகதகத்தது.
“ஐயோ! நீங்க படுங்க. அவ பேச்சை எடுத்தாலே உங்களுக்குக் கோபம் மூக்கு மேல நிற்கும். அமைதியா படுங்க. காலையில் இராமசாமி அண்ணனுக்குச் செய்ய வேண்டிய காரியங்களுக்கு எல்லா ஏற்பாடும் செய்யனும். அவர் பிள்ளைங்க எப்ப வராங்கன்னு தெரியலை. அப்படியே சீக்கிரம் வந்தாலும், இங்க யாரைப் பார்க்கனும் என்ன செய்யனும்னு என்ன தெரியும்?”
“ஆமா தெய்வா சொந்தங்களும் பக்கத்தில் இல்லை. எதையும் எடுத்துச் செய்ய யாருமில்லாம சாரதா ஒத்த ஆளா என்ன செய்வா? சரி நீயும் எதையும் யோசிக்காம படு. நானும் கொஞ்ச நேரம் தூங்குறேன்.” என இருவரும் கண்களை மூடினார்களே தூக்கம் கண்ணை அண்ட மறுத்து நின்றது.
******
மறுநாள் காலைச் சங்கூத, சாவு மேளம் அடிக்க, பச்சை ஓலை கட்டிய பாடையில் இராமசாமி உடல் கிடத்தப்பட்டது. பெற்ற பிள்ளைகளின் ஓலமும், சாரதாவின் அழுகையும் காண்போரின் மனதையும் கரைத்தது.
அங்குமிங்கும் ஓடி ஒவ்வொரு வேலையாகச் செய்த வினோத், இராமசாமியின் முகத்தைப் பார்க்கவே இல்லை. பாடையில் கிடத்தப்பட்டதும் அவர் முகத்தை உற்று பார்த்த வினோத், ‘மதியம் இறந்தவர் இராத்திரி என்னிடம் எப்படிப் பேசினார்!’ பலமுறை யோசித்தும் குழப்பமாக இருக்க, அதற்கு மேல் யோசிக்க முடியாமல் பாடையைத் தூக்க சந்திரனின் அழைப்புத் தடுத்தது.
சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் குளித்து முடித்து வந்து ஆசுவாசமாக நாற்காலியில் அமர்ந்தான். கண்களை மூடிச் சாய்ந்தவன் அசதியில் தூங்கிப் போனான்.
ரெண்டு மணி அலராம் அடிக்க அந்தச் சத்தத்தில் அடித்துப் பிடித்து எழுந்த வேகத்தில் நாற்காலி கீழே விழ, அந்தச் சத்தத்தில் மற்றவர்களும் பதறியடித்து எழுந்தனர்.
மற்றவர்கள் எழுந்து அதிர்ச்சியில் இவனைப் பார்க்க, இவனோ திருதிருவென முழித்தபடி நிற்க, “என்ன வினோத்? எதுவும் கனவு கண்டியா?” எனச் சந்திரன் கேட்க.
“இல்லைப்பா” எனத் தலையை இருபக்கமும் ஆடியவன், “மணி ரெண்டாகிட்டு. மூனு மணிக்குக் கார் வந்திரும். நான்தான் நல்லா தூங்கிட்டேன். நீங்க யாராவது எழுப்பி விட்டிருக்கலாமில்ல” எனப் படபடத்தவன் குளியலறை நோக்கி ஓட,
“வினோத் நில்லு. இதுக்குத்தான் அலறியடித்து எழுந்தியா? இன்னைக்கு உன்னை லீவு போட சொன்னேனே… என்னங்க அவனிடம் எதுவும் சொல்லலையா?” தெய்வானை சந்திரன் பக்கம் திரும்ப,
“இல்லை தெய்வா. வேலையில் சொல்ல மறந்துட்டேன்.” சந்திரன் அசடு வழிந்தார்.
“அம்மா, எதுக்கு லீவு? அதான் எல்லாம் முடிஞ்சிட்டே. இனிமே மாமா பிள்ளைங்க பார்த்துப்பாங்க” என்று அவசர கதியில் நின்றிருந்தான்.
“சாயங்காலம் கோயிலுக்குப் போய் உன் பேரில் பூஜை பண்ணிட்டு சாமியாரைப் பார்த்துப் பேசிட்டு வரனும். அதுக்கு நீயும் கூட வரதுதான் நல்லது” என்று கறாராகச் சொன்னார்.
அம்மா முடிவெடுத்துவிட்டால் அதிலிருந்து மாறுவது என்பது ரொம்பவே கஷ்டம். அதுவும் கடவுள் சம்மந்தமான விஷயம் என்றால், தலைகீழாக நின்றாலும் அவர் பிடியில் உறுதியாக இருப்பாரே தவிரத் தன் பிடியிலிருந்து இறங்கி வந்ததாகச் சரித்திரம் கிடையாது. வேறு வழியின்றி அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிய பிறகு ஓட்டுநருக்கும் தகவல் கொடுத்தான்.
கீழே விழுந்திருந்த நாற்காலியை எடுத்துப் போட்டு அமர, “தூங்குறதுன்னா உள்ள போய்ப் படுத்துத் தூங்கு” எனத் தெய்வானை அதற்ற, அடுத்த நொடி அறைக்குள் புகுந்து கொண்டான்.
மாலை நான்கு மணியளவில் நால்வரும் கோயிலுக்குப் பூசை முடித்துச் சாமியாரின் முன் அமர்ந்து வினோத் சொன்னதை தெய்வாணைச் சொல்ல, கண்களை மூடிக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த சாமியார், மெல்ல கண்களைத் திறந்தார்.
“சிலர் நிறை வேறாத ஆசையால் இறந்திருக்கலாம். இல்லை, வேறு ஏதாவது வகையில் இறந்திருக்கலாம். அப்படி இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையாமல் சுத்திட்டு அலையும். அதுங்க நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற ஏதாவது வழியைத் தேடி இரவு நேரங்களில் சுற்றும். அசுத்த ஆவிகள் பல உருவங்களில் வந்து பயமுறுத்தும். அதைக் கண்டு நாம பயப்படாம வந்துட்டா அது வழியில் அதுபாட்டுக்கு போயிடும்” என மெல்ல புன்னகைத்தார்.
“சாமி, எனக்கு இரவு நேர வேலை அந்த நேரத்தில்தான் வந்தாகனும் வேற வழியில்லை…” என வினோத் இழுக்க,
“பயப்படுறதுக்கு ஒன்னுமில்லை. அது தினமும் உன்னைத் தேடி வராது. அன்று மோசமான எண்ணத்தில் வந்திருக்கலாம். அதான் இராமசாமி ஆன்மா உன்னை காப்பாற்ற வந்திருக்கு. கடவுள் துணையிருக்கும் போது ஏன் பயப்படனும்?”
“மாமா காப்பாற்ற வந்துட்டு ஏன் விட்டுட்டுப் போகனும்?”
மெல்ல புன்னகை சிந்திய சாமியார், “அசுத்த ஆவியால் உனக்குப் பிரச்சனை வராதுன்னு நினைச்சிருக்கலாம். இல்லை, அவரால் ஒன்னும் செய்ய முடியாமல் போயிருக்கலாம்” என்று கண்களை மூடினார்.
“சாமி, புரியலையே முடியாம போயிருக்கலாம்னா…” தெய்வானை சந்தேகத்தில் கேட்க.
“அசுத்த ஆவி பலம் வாய்ந்ததா இருக்கலாம். அதைக் கட்டுப்படுத்த இராமசாமி முடியாமல் பயந்திருக்கலாம்” என்றதும் நால்வரும் அதிர்ந்து அதற்குமேல் என்ன கேட்பதென்று எழுந்தனர்.
சாமியார் கொடுத்த கயிற்றைக் கையில் கட்டிக் கொண்டு, மீண்டும் கோயிலுக்குள் சென்று, ‘எந்தப் பிரச்சனையும் வரக் கூடாதென்று வேண்டிக் கொண்ட தெய்வானை, வெளியில் வந்து மூவருடன் சேர்ந்து வீட்டிற்குக் கிளம்பினார்.
நால்வரும் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த சாமியார் கண்களை மூடித் தன் கையிலிருந்த ருத்ராட்ச மாலையை உருட்டத் தொடங்கினார்.
“சாமி, எதுக்கு அவங்களை இப்படிப் பயமுறுத்தி அனுப்பறீங்க? அதுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா செய்யச் சொல்லலாமில்ல” எனச் சீடன் கேட்க,
“இது பயமுறுத்தல் இல்லை. வரும் முன் காப்பது நலம் இல்லையா? அதான் அவங்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறேன்.”
“என்ன சாமி எச்சரிக்கை பண்றேன்னு சொல்றீங்க. அதுக்கு அவங்களுக்கு வரப் பிரச்சனையிலிருந்து அவங்களைக் காப்பாற்ற வழி சொல்லலாமில்ல. அதைச் சொல்லியிருந்தா அதுக்கு என்ன செய்யனுமோ அதைச் செய்வாங்கல்ல.”
மெல்லிய புன்னகையை உதிர்த்த சாமியார், “யாரும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் இருக்கனும்னா… கடவுள் எதுக்கு எல்லோருக்கும் பிரச்சனையைக் கொடுக்கப் போறார்? மண்ணில் பிறந்த ஒவ்வொருத்தரும் சில கஷ்டங்களை அனுபவிக்கத்தான் வேணும். அதை மாற்றும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே இருக்கு. நமக்கு இல்லை.”
“அதுவும் சரிதான் கொடுப்பதும் அவனே எடுப்பதும் அவனே இடையில் யார் என்ன செய்ய முடியும்?” எனப் புலம்பியபடியே கோயிலுக்குள் சென்றான் சீடன்.
தொடரும்...