• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிலவாக உனக்குள் - 12

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
34
அத்தியாயம் - 12

காரிலிருந்து இறங்கிய ஐஜி தேவன் மின் தூக்கியை எதிர்பாராமல் படிகளில் தடதடவென ஏறி அவசர சிகிச்சை பிரிவுக்கு விரைந்தார். கண்ணனும் அவர் வேகத்துக்குச் சரிசமமாக நடந்தான்.

இருவரையும் எதிர்கொண்டு வந்த முகிலன் சல்யூட் அடித்து அவர்களுக்கு முன் சென்று அவசர சிகிச்சை பிரிவின் கதவைத் திறந்துவிட்டான்.

காவல் கண்காணிப்பாளர் சீருடையில் மிடுக்காக வரும் கண்ணனைக் கண்ட வினோத் திகைத்து நின்றாலும் தன்னை வேவு பார்க்க வந்திருக்கிறாரெனச் சட்டென்று புரிந்து கொண்டான்.

ஆனால், ஏன் தன்னை வேவு பார்க்கனும் என்ற சந்தேகம் எழ யோசனையில் இருந்தவன், “ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? விஷயம் தீவிரமாகுறதுக்குள்ள கொலைகாரனை கண்டுபிடிக்கச் சொன்னா, இதுவரை எந்தப் பதிலும் இல்லை. ஒரு உயிர் போற நிலைமைக்கு வந்தாச்சு” எனத் தேவன் குரலில் நினைவுக்கு வந்தான் வினோத்.

“சார், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. நகங்களால் மட்டுமே கீறியிருப்பதால் பிரச்சனை இல்லைன்னு சொல்றாங்க. நகுலை பிடிச்சதும் சொல்லலாம்னு இருந்தோம். அதுக்குள்ள சங்கவி பேயா வந்து இப்படிப் பண்ணுவான்னு எதிர்பார்க்கலை. பேயின்னு நம்ப முடியலை. நகுல் ஏதோ சதி வேலை பண்ணியிருப்பான்னு தோனுது”

“பேய் இருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ற நேரம் இது இல்லை முகிலன். நகுலை சீக்கிரம் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு வாங்க” கண்ணனுக்கும் முகிலனுக்கும் முழு அதிகாரம் கொடுத்து, தேவைப்பட்டால் சுட்டுப் பிடிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

சரியெனத் தலையசைத்த இருவரும் வினோத்தை அறிமுகப்படுத்த, “தங்கச்சி தப்புப் பண்ணியிருந்தாலும் அவ எப்படி இருக்கான்னு கொஞ்சம் விசாரிச்சிருந்தா, இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்காது. கவலைப்படாதீங்க. கொலையாளியை சீக்கிரம் கண்டுபிடிச்சிரலாம்” என்றவர் கண்ணன் பக்கம் திரும்பி, “இப்ப கேஸ் என்ன நிலைமையில் இருக்கு?” என்றார்.

“சார், நகுல் நம்பர், முகவரி கிடைச்சதும் அவனைத் தேடி போனோம். நாங்க போறதுக்குள்ள குடும்பத்தோட தப்பிச்சிட்டான். அலுவலகம் போய் விசாரிக்கலாம்னு போனா, அவனோட சேர்த்து பத்து பேர் திடீர்னு லீவ் எடுத்து இருக்காங்க. அதில் கரணும் இருக்கான். அவங்க எல்லோரும் அலுவலகத்தில் ஒரே குழு. ஒரேநேரத்தில் பத்து பேரும் லீவுன்னதும் சந்தேகத்தில் பத்து பேரோட முகவரியும் மற்ற விபரங்களையும் தெரிஞ்சிகிட்டு வந்திருக்கோம்” கண்ணன் சொல்ல,

“வரதன், கரண் வீட்டைக் கண்காணிச்சிட்டுதானே இருக்கார். எப்படிக் கரணை கோட்டை விட்டார்?”

“வழக்கம்போல ஆபீஸ் போற மாதிரிதானே போயிருக்கான். அதுவும் இல்லாம அவன் மனைவி பதினோரு மணிக்கு மேல் கடைக்குப் போய்ப் பொருட்கள் வாங்கி வரதுண்டு. இது வழக்கமா நடக்கிறதுதானேயென அசால்டா இருந்திருக்கார்” தேவன் முறைக்கத் தலைகுனிந்து நின்றான் முகிலன்.

“அடுத்து உன் நகர்வு என்ன கண்ணன்?”

“அலுவலகத்தில் வாங்கிய பத்து பேரோட புகைப்படத்தை விமானம், பேருந்து, இரயில் நிலையம் எல்லா இடத்துக்கும் அனுப்பியிருக்கேன். யாரைப் பார்த்தாலும் உடனே கைது பண்ணி ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கேன். அவங்க இந்தச் சென்னை நகரத்தைத் தாண்ட முடியாது சார்.”

மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணனின் கைப்பேசி ஒலிக்க, எடுத்துக் காதில் வைத்தவன் முகம் பிரகாசிக்கக் கைப்பேசியைத் துண்டித்துவிட்டு, “சார், ட்ரெயின் ஏறப் போன ரெண்டு பேரைப் பிடித்து ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்திருக்காங்க”

“முகிலன், நீ இங்கயே வினோத்துக்கும் அவன் குடும்பத்துக்கும் பாதுகாப்பா இரு. மற்றவங்க எங்க?” அவர்கள் இருந்த பக்கம் முகிலன் கை நீட்ட, “நல்லதா போச்சு. எக்காரணம் கொண்டும் அவங்க ஹாஸ்பிடலைவிட்டு வெளிய போக வேண்டாம்னு சொல்லு. அவங்க கூடவே மூனு பேரை இருக்கச் சொல்லு. ஹாஸ்பிட்டலை நம்ம கன்ட்ரோல்ல வச்சுக்கோ” கட்டளையிட்ட தேவன் கண்ணன் பக்கம் திரும்பி, “பிடிப்பட்ட ரெண்டு பேரயும் விசாரிக்க நானும் கூட வரேன்” கண்ணனுடன் அவசரமாக மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.


******
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
34
கண்ணனும் தேவனும் காவல்நிலையம் போய்ச் சேருவதற்குள் மேலும் மூவரை பேருந்து நிலையையத்திலிருந்து கைது பண்ணி அழைத்து வந்திருந்தனர். ஐவர் பிடிபட்டாலும் முக்கியக் குற்றவாளியான நகுலும் கரணும் இல்லை. அதனால், மற்ற ஐவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தினான் கண்ணன்.

ஐந்து பேரிடமும் விடுமுறை எடுத்தது ஏன் என விசாரித்த தேவனிடம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்ல, அவர்கள் சொல்வது உண்மையாயென அவர்கள் மனைவிகளிடம் கைப்பேசி மூலம் விசாரிக்க, அவர்கள் பதில் வேறாக இருந்தது. ஆனால், ஐவரும் சொன்ன ஒரே பதில், ‘அவசரம் திடீர்னு கிளம்பச் சொன்னதாக’ கூறியிருந்தார்கள்.

பொய் சொல்லியிருக்கிறார்கள் எனத் தெரிந்ததும் தங்கள் விசாரணை விதத்தை மாற்றினார்கள். அதில் ஒவ்வொருவராக உண்மையைச் சொல்ல, அதைக் காணொளி காட்சியாகப் பதிவு செய்தனர். அவர்கள் சொன்னதைக் கேட்கக் கேட்கக் கண்ணனும் தேவனும் உடனிருந்த காவலர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

“உங்க வீட்ல பெண் பிள்ளைகளே இல்லையா? அவங்களுக்கு இப்படியொரு கொடூரம் நடந்தா பார்த்துட்டு இருப்பீங்களா?“ என லத்தியை எடுத்த காவலர் ஒருவர் சாரமாரியாக விளாசினார்.

மற்ற காவலர்கள் அவரை இழுத்து வெளியே கொண்டு வருவதற்குள் படாதாபாடு பட்டுவிட்டனர். தன்னைவிட மூத்த அதிகாரிகள் உடன் இருந்தாலும், நடந்த கொடூரத்தை தாங்க முடியாமல் லத்தியைச் சுழற்றிவிட்டார்.

“எங்களைவிட அனுபவத்தில் மூத்தவர் எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி நடந்துக்கலாமா?” எனக் கடிந்தார் தேவன்.

“இந்த மாதிரி மிருகங்கள் எத்தனை பேரைப் பார்த்திருக்கேன். ஆனால், இந்த மாதிரி வெறி பிடித்த நாய்கள் பண்ணது கொடூரத்தின் உச்சம். வெட்ட வெட்ட முளைச்சிட்டே இருக்கானுங்களே” அவருக்கும் ஒரு மகள் இருக்கிறாளே என்ற எண்ணம் காவலராக இருந்தாலும் அவர் கண்களில் நீர்த் துளிகள் வடிந்தது.

தேவன் தேடுதல் வேட்டையைத் தீவிரமாக்க கண்ணனை அழைத்துக் கொண்டு களத்தில் இறங்கினார். போக்குவரத்துக் காவலர்கள் உதவியோடு காரில் சென்ற மூவரை மடக்கியிருந்தார்கள்.

சென்னை மாநகரமும் அதன் சுற்று மாவட்டம் முழுவதும் காவலர்கள் கட்டுப்பாட்டில் இருந்தும் நகுல், கரண் இருவர் மட்டும் தண்ணி காட்டிக் கொண்டிருந்தனர்.

“சார், ரெண்டு பேரும் சென்னையை விட்டு வெளிய போக வாய்ப்பே இல்லை. இங்கதான் பதுங்கியிருக்கனும். ரெண்டு பேரும் வீட்டிலிருந்து கிளம்பின வழி முழுவதும் உள்ள சிசிடிவியைக் கண்காணிச்சா தெரிஞ்சிரும். அதனால், ஏற்கனவே ஒரு டீமை அதுக்கு அனுப்பியிருக்கேன். அவங்களிடமிருந்து இன்னும் எந்த விபரமும் வரலை” எனக் கண்ணன் சொல்லி முடிப்பதற்குள் அவன் கைப்பேசி அழைத்தது.

கைப்பேசியில் வந்த செய்தியைக் கேட்டதும் முகம் மலர்ந்த கண்ணன், “உடனே நாங்க ஸ்பாட்டுக்கு வரோம்” எனத் துண்டித்துவிட்டு, “சார், கரண் இருக்கும் இடம் தெரிஞ்சு போச்சு” என்றான்.

தப்பிச் செல்ல நினைத்த கரண் எப்படிப் போனாலும் கண்டிப்பாக மாட்டிக் கொள்வோம் என்று வீட்டிலிருந்து அலுவலகம் சென்ற கரண். அலுவலகம் செல்லாமல் அருகில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்துவிட்டு மீனுவை அழைத்து ஆட்டோ பிடித்து வரச் சொன்னான்.

மீனு வந்ததும் அங்கிருந்து வேறு ஆட்டோ பிடித்துக் கடற்கரை சாலையில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் தங்கிவிட்டான்.

கரண் அந்த விடுதியில் இருக்கிறானா என்பதை உறுதி செய்து கொண்ட காவலர்கள் கண்ணனை அழைத்து விபரத்தைக் கூறிவிட்டார்கள்.

தேவன் உடனே உல்லாச விடுதியைச் சுற்றி காவலர்களை மறைந்திருக்கும்படி உத்தரவிட்டார். முகிலனை அழைத்து வேறு ஒருவரை மருத்துவமனையில் இருக்கச் சொல்லிவிட்டு உடனே உல்லாச விடுதிக்கு வரும்படி சொன்ன அடுத்த நொடி அங்கிருந்து புறப்பட்டுவிட்டான் முகிலன்.

உல்லாச விடுதிக்குள் காவலர்கள் மக்களோடு மக்களாகக் கலந்திருக்க, கண்ணனும் தேவனும் வர அவர்களை அழைத்துக் கொண்டு வரவேற்பு அறைக்குச் சென்றான் முகிலன்.

“முகிலன், விசாரிச்சிட்டியா? ஆள் இங்கதான் இருக்கானா?” கண்ணன் கேட்க,

“ஆமா சார், ‘டி’ பிளாக் நம்பர் இருபதில் குடும்பத்தோடு இருக்கான்.”

“எல்லோரையும் அலெர்ட் பண்ணிட்டியா முகிலன். நீயும் கண்ணனும் போக ரெடியா?” தேவனின் கேள்விக்கு ஆமாமெனத் தலையை ஆட்டினான்.

கண்ணனும் முகிலனும் கரண் இருக்கும் அறைக் கதவைத் தட்டியதும் திறந்த மீனு இருவரையும் கண்டு திகைக்க, “நீங்க எப்படி இங்க?” என இழுக்க,

“கரண் உள்ள இருக்கானா? வெளிய கூப்பிடு” கண்ணன் சொல்ல,

திருதிருவென முழித்த மீனு உள்ளே திரும்பிப் பார்க்க, “நகுலைத் தேடி வந்தீங்க. அவரைப் பற்றித் தெரிஞ்ச எல்லா விபரத்தையும் கொடுத்துட்டோம். அப்புறம் எதுக்கு இங்கயும் வந்து தொல்லை பண்றீங்க” என மீனு கேட்க.

“உன் எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைக்கும். முதல்ல அவனை வெளிய வரச் சொல்லு” என்றான் முகிலன்.

ஒரு வாரம் உல்லாச விடுதியில் இருந்துவிட்டு காவல் துறை அசந்த நேரம் சென்னையை விட்டுத் திருச்சி சென்று அங்கிருந்து மலேசியா செல்லத் திட்டமிட்டிருந்தான்.

தன்னைக் கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லையென நினைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். உள்ளே எட்டிப் பார்த்த முகிலன், “அவனை எழுப்பி வெளிய கூட்டிட்டு வா. நாங்க உள்ள வந்தா குழந்தைங்க பயந்திருவாங்க” என்றதும் தயங்கி தயங்கி உள்ளே சென்ற மீனு கரணை எழுப்பி வெளியில் வரும்படி சொன்னாள்.

தூக்கக் கலக்கத்தில் வெளியில் வந்தவன் கண்ணன் முகிலனைக் கண்டதும் இருவரையும் தள்ளிவிட்டுப் படபடவெனப் படிகளில் இறங்கி ஓடினான்.

தேவனும் மற்ற காவலர்களும் துப்பாக்கியை ஏந்தியபடி நிற்க, “ஒரு அடி நகர்ந்தாலும் எல்லாத் துப்பாக்கியிலிருந்து குண்டுகள் வெளிய வரும்” என்றார் தேவன்.

மீண்டும் படிகளில் ஏறக் கண்ணனும் முகிலனும் மற்ற அறைகளில் மறைந்திருந்த காவலர்கள் துப்பாக்கியுடன் வர, தான் தப்பிச் செல்வதற்கு எந்த வழியும் இல்லை என்பதைப் புரிந்தவன் மண்டியிட்டு உட்கார்ந்துவிட்டான்.

நகுல் என்ன தப்பு செய்தான்னு தெரியலை அதுக்குக் கரணை ஏன் கூட்டிட்டுப் போகனும்? இவர் ஏன் இரண்டு பேரையும் தள்ளிவிட்டு ஓடுறார்? நடப்பது எதுவும் புரியாமல் படிகளில் இறங்கியவளின் கண்களில் விலங்கு மாட்டப்பட்ட கரண் தெரிந்தான்.

மீனு அதிர, “நகுலைத் தேடி வந்த நீங்க இவரை எதுக்கு அரெஸ்ட் பண்ணியிருக்கீங்க?” என மறித்து நின்றாள்.

“உனக்குப் பதில் சொல்ல நேரமில்லை. ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போறோம். அங்க வந்து பேசிக்கோ. உனக்கு அங்க கார் நிற்கு குழந்தைகளைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போ” என்ற கண்ணன் கரணை இழுத்துச் சென்றான்.

ஒரு மணி நேரமாகப் பொறுமையாக விசாரித்தும் நகுல் எங்கு இருக்கிறான் என்ற கேள்விக்குத் தெரியாது என்ற பதிலை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தான்.

பொறுமையிழந்த தேவன், “கண்ணன், இன்னும் பத்து நிமிஷத்தில் அவன் நகுல் எங்க இருக்கான்னு சொல்லலைன்னா சுட்டுத் தள்ளிடு” என்றார்.

“சார், நீங்க என்னைக் கொன்னாலும் நான் தெரியாதுன்னுதான் சொல்வேன். ஏன்னா, எனக்கு நிஜமாவே தெரியாது. நாங்க ஒவ்வொருத்தரும் எங்க போறோம்னு சொல்லிக்கவே இல்லை.” எனப் பதறினான்.

முகிலன், கண்ணனையும் தேவனையும் கூப்பிட்டுக் காதில் ஏதோ சொல்ல உடனே வெளியில் வர, “நகுல், அவன் வீட்டிலையே ஒளிஞ்சிருக்கான்னு நினைக்கிறேன்” என்றான்.

“எதை வைத்து அப்படிச் சொல்ற?” கண்ணன் கேட்க. தன் மடிக் கணினியை இருவர் பக்கமும் திருப்பிக் காண்பித்தான். நகுல் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவியில் அவசர அவசரமாக வீட்டிற்கு வந்து தன் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினான்.

ஆட்டோ செல்லும் இடம் எங்கும் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருக்க, தாம்பரம் இரயில் நிலையத்தில் கடைசியாக வந்து நிற்க, அதிலிருந்து நகுல் மனைவி குழந்தைகள் மட்டுமே இறங்கினார்கள் அவன் இல்லை.

“முகிலன், ஏறும்போது நகுலும் ஏறினான்தானே? இறங்கும்போது அவன் இல்லை. வழியில் எங்கும் இறங்கின மாதிரி தெரியலை.” தேவன் குழப்பமாகக் கேட்க.

“சார், இந்த வீடியோ பாருங்க. அவன் ஆட்டோவிலிருந்து இறங்கவே இல்லை. அவன் உள்ள இருக்கிறது நல்லா தெரியுது பாருங்க. அவன் இறங்குறது தெரிய கூடாதுன்னு கூட்டமா இருக்கிற இடத்தில் ஆட்டோ போறப்ப இறங்கி கூட்டத்தோட கூட்டமா கலந்துட்டான். தன் முகத்திலும் முகமுடி போட்கிட்டான்.”

“சரி முகிலன், அவன் வீட்டில் இருக்கான்னு எப்படிச் சொல்ற” இருவரும் மேலும் குழப்பத்தில் கேட்க.

ஆட்டோவிலிருந்து இறங்கிய நகுல் பஸ் பிடித்து வீட்டிற்கு வர, முன் வாசல் வழியாகச் செல்லாமல், அடுத்தத் தெரு வழியாகச் செல்வது வீடியோவில் பதிவாகியிருக்கு. அதுக்கு மேல் அவன் எங்குச் சென்றான் என்ற எந்தப் பதிவும் கிடைக்கவில்லை.

“சார், அவன் வீட்டுத் தெருவில் போகாமல் அடுத்தத் தெருவில் போயிருக்கான்னா, கண்டிப்பா பின் பக்க வழியா வீட்டுக்குள் போய்ப் பதுங்கியிருப்பான். அப்படி அவன் வீட்டுக்குள்ளயே இருந்தால், இரவு முழுவதும் இருட்டில் இருக்க முடியாது. கண்டிப்பா லைட் ஆன் பண்ணுவான். அப்படி ஆன் பண்ணா அவன் உள்ளதான் இருக்கான்னு அர்த்தம். அதனால், அதைக் கண்காணிக்க அவன் வீட்டைச் சுற்றி மஃப்டியில் நிற்காங்க” என்றான் முகிலன்.

“சபாஷ் முகிலன். நகுல் உள்ள இருக்கிறது உறுதியான அடுத்த நொடி எங்களுக்குத் தகவல் சொல்லிட்டு ஸ்பாட்டுக்கு போயிடு. அவனை இன்னைக்கு நைட்டுக்குள்ள அரெஸ்ட் பண்ணியே ஆகனும்” என்றார் தேவன்.


மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே காவலர் சல்யூட் அடித்து நிற்க, மூவரும் என்னவென்பது போல் நிமிர்ந்து பார்த்தனர். கைதான ஒன்பது பேரின் மனைவிகளும் உறவினர்களும் வக்கீலுடன் வந்திருப்பதாகக் கூறினான்.

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top