- Joined
- Aug 31, 2024
- Messages
- 34
- Thread Author
- #1
அத்தியாயம் - 11
விடிந்ததும் வினோத், முகிலன் முகத்தில் விழித்தான் கரண். அன்று போன வினோத் திரும்ப வரமாட்டானென நினைத்த கரண், காவலரோடு வந்து நிற்கும் வினோத்தைக் கண்டதும் உள்ளுக்குள் உதறல் எடுத்த கலவரத்தை மறைக்க முயன்று தோற்று போய் நின்றிருந்தான்.
இருவரும் கேள்வி கேட்கும் முன், தான் பதில் சொல்லி அனுப்பிவிட வேண்டுமென நினைத்து, “நான்தான் அன்னைக்கே சொல்லிட்டேனே சார். எனக்கு எதுவும் தெரியாதுன்னு. போலீஸைக் கூட்டிட்டு வந்தா மட்டும் எனக்குத் தெரியாததை நான் எப்படிச் சொல்ல முடியும்” கடுகடுவெனச் சொன்னான்.
“நாங்க எதுக்கு வந்திருக்கோம்னு கேட்காமாலே நீயே பதில் சொல்றன்னா, உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்குன்னு அர்த்தம். நீயா சொல்லிட்டா நல்லது. இல்லை, கேட்கிற விதத்தில் கேட்டா உனக்குத் தெரியுமா தெரியாதான்னு தெரிஞ்சிரப் போகுது” என்ற முகிலன் தன் கை விரல்களை மடக்கி முறுக்கினான். பேச்சில் தைரியத்தைக் காட்டினாலும் கரணின் கண்களில் இருக்கும் பயம் அவனைக் காட்டி கொடுத்தது.
முகிலன் பார்வை தன் மீதே படிந்திருப்பதைக் கண்ட கரண், “என்ன சார் மிரட்டிப் பார்க்கீங்களா? அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நானில்லை” என எகிறிப் பேச,
“வினோ, இவன் சரிபட்டு வரமாட்டான். நான் சாருக்கு கால் பண்ணிட்டு வரேன். உள்ள கொண்டு போய் நாலு தட்டுத் தட்டினாத்தான் எல்லாத்தையும் வெளிய கக்குவான்.” கைப்பேசியை முகிலன் காதில் வைக்க.
“சார், ஒரு நிமிஷம். கரண், நீங்க ஏன் நகுலுக்காகச் சிக்கலில் மாட்டனும். அவர் பிரச்சனையை அவர் பார்த்துக்கட்டும். சார், நீங்க எதுக்காக நகுலை தேடி வந்திருக்கீங்க?” கரணை முறைத்த மீனு முகிலனிடம் கேட்டாள்.
நகுல் சங்கவியைத் திருமணம் செய்ததைச் சொல்லி, அவளையும் நகுலையும் கூட்டிட்டு போக வந்ததாகச் சொன்னான். இங்கு இல்லை என்றதும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததாகச் சொன்னான்.
“சங்கவியா? நகுலோட மனைவி பேர் ஹரிணியாச்சே” மீனு குழப்பத்தில் கேட்க.
“அவங்க முதல் மனைவியா இருப்பாங்க. அவங்களை விவாகரத்துப் பண்ணிட்டுதான் சங்கவியைக் கல்யாணம் கட்டிக்கிட்டார் நகுல்.”
மீனு அதிர, “சார், நாங்க ஃபேமிலி டூர் போறப்ப நகுல் ஹரிணியையும் அவர் குழந்தைகளையும்தான் கூட்டிட்டு வருவார்.”
“மீனு நீ போ. நான் பேசிக்கிறேன். சார், ஹரிணிதான் நகுல் மனைவி சங்கவி இல்லை. நீங்க தப்பா யாரையோ தேடிட்டு வந்திருக்கீங்க. எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு. நீங்க கிளம்புங்க” எனச் சொல்லி முடிப்பதற்குள் அவன் கன்னம் தகதகவெனத் தீப்பட்டது போல் எரிந்தது.
ஒரு அடியில் கரண் கலங்கி நிற்க, கைகளை முறுக்கியபடி நின்ற முகிலன், “நானும் பார்த்துட்டே இருக்கேன் ரொம்ப அதிகமா பேசிட்டு இருக்க. நகுலைப் பற்றித் தெரிஞ்சும் விபரங்களைக் கொடுக்காம எங்களையே அதிகாரம் பண்றீயா? கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டு போறதுக்குள்ள எல்லாத்தையும் சொல்லியிருக்கனும்” முகிலன் திரும்பவும் கையை ஓங்க.
கரணை முறைத்துவிட்டு உள்ளே சென்று வெளியில் வந்த மீனு, “சார், இவர்தான் நகுல். இவங்கதான் ஹரிணி. இவங்க உங்க தங்கச்சியா?” வினோத்திடம் மீனு கேட்க, இல்லையெனத் தலையை ஆட்ட, “சார், நகுலோட நம்பர் தரேன் குறிச்சிக்கோங்க” என கரண் கைப்பேசியிலிருந்து நகுல் எண்ணைப் பார்த்துச் சொன்னாள்.
நகுல் படத்தை மட்டும் தன் கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்ட முகிலன் கண்ணனுக்கும் ஹெட்கான்ஸ்டபில் வரதனுக்கு அனுப்பி வைத்தான்.
இருவரும் சென்ற அடுத்த நொடி கரண் மீனுவிடம் சண்டை போட, அவளுக்குப் பதிலுக்குப் பேச, குழந்தைகள் இருவரும் அழ ஆரம்பித்தனர்.
சாலைக்கு வந்த வினோத்தும் முகிலனும் அடுக்குமாடி குடியிருப்பைத் திரும்பிப் பார்க்க, திவ்யாவும் இலக்கியாவும் வெளியில் வர, இன்னொரு பக்கமிருந்து சந்துரு வந்தான். ஐவரும் அவரவர் வந்த வாகனத்தில் ஒருவரையொருவர் தெரியாதது போல் சென்றனர்.
உணவகம் ஒன்றில் ஐவரும் ஒரே மேசையில் அமர்ந்திருக்க, “வினோ, ஒவ்வொரு வீட்டிலும் நாங்க விசாரிச்ச வரை நகுலைப் பற்றி நல்லவிதமாத்தான் சொல்றாங்க” என்றாள் திவ்யா.
“எல்லோரும் ஒன்னு போல நகுல் வீட்டை விற்கலை, வாடகைக்கு விட்டிருக்கிறான்னு சொல்றாங்க” எனச் சந்துரு சொல்ல.
“அது ஒரு பெரிய விஷயம் இல்லை சந்துரு. ஏன்னா, விற்கிறோம்னு சொன்னா கௌரவக் குறையும்னு அப்படிச் சொல்லியிருப்பான். பசுத் தோல் போர்த்திய புலியா இருப்பான்” என்றான் முகிலன்.
வினோத்தின் கைப்பேசி ஒலிக்க, காதில் வைத்ததும் வள்ளியம்மை பதற்றத்தில் பேசியதைக் கேட்டு எழுந்த வினோத், நால்வரிடமும் விபரத்தைக் கூற, அவசர அவசரமாக அங்கிருந்து ஓடினர்.
******