Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
வீரா நண்பர்களிடம் சொன்னது போல தனது தந்தைக்கு அழைப்பு விடுத்து விஷயத்தை சொன்னான். அவர் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கு சென்றாலும் மோகனை நினைத்து வருந்தவும் செய்தார்.
" வீரா மோகனு பாவம் இல்ல டா "
" அத அவன்கிட்டயே கேட்குறீங்களா ப்பா? "
" அவன் கூடவா டா இருக்கான்? "
" கூட இருக்கானா அவன் தான் உங்க கிட்ட வந்து பேச போறேன்னு சொன்னான், கூடவே ராஜாவும் கிளம்பிட்டான், நான்தான் அப்பாக்கு எல்லாம் தெரியும் டா நானே அப்பாட்ட பேசுறேன்னு சொல்லி நிப்பாட்டி வச்சுருக்கேன். "
" நிஜமாவா டா? "
" அட ஆமாம் ப்பா, நான் என்னைக்கு உங்க கிட்ட பொய் சொல்லிருக்கேன் "
" ஆனா எப்படி டா மனமேடை வரைக்கும் போனவன் உன்மேல கோப படமா இருக்கான்? "
" அதான் ப்பா நட்பு " வீராவிடம் பெருமை மிதமிஞ்சி இருந்தது...
" ம்ம்ம் சூப்பர் டா, கேட்கவே சந்தோசமா இருக்கு டா பசங்க புரிதல் இல்லாம என்ன என்னவோ செஞ்சு வம்பா போயிடுறாங்க அந்த மாதிரி தப்பு எல்லாம் செய்யாம ஒருத்தனுக்கு ஒருத்தன் உண்மையை பேசி ஒன்னு மண்ணா இருக்கிறீங்கன்னு கேட்கவே பெருமையா இருக்குடா "
" ஹலோ பாதர் நீங்க பெருமை எல்லாம் அப்புறம் பட்டுக்கோங்க அங்க உங்க வீட்டம்மா இருக்காங்க இல்ல அதாவது என்னை பெத்த தாய் அந்த தாயை சமாளிச்சு கூட்டிட்டு வந்து எனக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணி வைக்க பாருங்க புரியுதா? "
" அது புரியுது மை டியர் சன், அந்தப் பொண்ணு வீடு எப்படி? "
" பொண்ணு வீட்ல ஒரு பிரச்சனையும் இல்ல எல்லாத்தையும் பேசி சம்மதம் வாங்கிட்டோம். அவங்களும் சம்மதம் சொல்லிட்டாங்க இப்போ நீங்க தான் சம்மதம் சொல்லணும் அதனால சீக்கிரம் அம்மாகிட்ட பேசிட்டு கூப்பிட்டு வாங்க "
" சரி டா இரு பேசிட்டு உனக்கு லைன்ல வாரேன் "
" லைன்ல எல்லாம் வர வேண்டாம் ப்பா அம்மா கூட கூப்டுட்டு நேர ஊருக்கே வந்துருங்க "
" சரிடா வந்துடறேன் உங்க அம்மா தான் என்ன சொல்றான்னு தெரியல "
" எல்லாம் நல்லதா தான் சொல்லுவாங்க மனச தளர விடாம தைரியமா போய் பேசுங்க பாதர் "
வீரா கூறியது போலவே அவனது தந்தை அன்னையிடம் பேசி சம்மதம் வாங்கி இருந்தார்.
அவராலும் கனவு என்ற விஷயத்தை நம்ப முடியவில்லை என்றாலும் தனது மகனின் சந்தோசம் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தில் அவர் அந்த திருமணத்திற்கு சம்மதித்தது அவனைப் பார்க்க கிளம்பி இருந்தார்.
இரண்டு குடும்பமும் பரஸ்பரம் ஒன்று சேர்ந்து வீரா அஞ்சலி திருமணத்தை நிச்சயம் செய்திருந்தார்கள் சுபயோக சுபதினம் கூடிய அந்த நன்னாளில் திருமணத்தை ஏற்பாடு செய்திருக்க,
அந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று கூறி மோகனின் அப்பா அம்மா மட்டும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அவர்களின் நிலை அறிந்து மோகன் விட்டு விட வீராவுக்கு அப்படி விட மனமில்லாததால் அவர்களை தேடி மோகன் வீட்டிற்கு சென்றிருந்தான்.
வீரா வீட்டின் உள்ளே நுழைந்திருக்க அவனது முகத்தில் கூட முழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார் மோகனின் அம்மா மோகனின் அப்பாவும் சரியாக பேச்சுக் கொடுக்கவில்லை
" அப்பா ப்ளீஸ் ப்பா இப்படி இருக்காதீங்க கல்யாணத்துக்கு வாங்க "
" இல்ல வீரா அப்பாவை தப்பா நினைக்காத என்னால வர முடியாது ப்பா "
" நீங்க வந்து ஆசீர்வாதம் பண்ணாம என் கல்யாணம் எப்படி ப்பா நடக்கும். ஆரம்பிக்கப் போற என்னோட வாழ்க்கை உங்களோட ஆசிர்வாதம் இருந்தா தான் நல்லா இருக்கும்? உங்களையும் அம்மாவையும் தவிக்க விட்டுட்டு என்னால எப்படி ப்பா நிம்மதியா உட்கார்ந்து தாலி கட்ட முடியும்ன்னு நினைக்குறீங்க? நீங்க வந்து ஆசீர்வாதம் பண்ணுனா தான் ப்பா என் வாழ்கை சிறப்பா இருக்கும்,
அந்த ஆசீர்வாதம் இல்லனா அந்த வாழ்க்கையே எனக்கு வேண்டாம் ப்பா " வீராவின் பேச்சில் உணர்ச்சி கூடியிருக்க, பக்கத்து அறையில் நின்று அவனது பேச்சை கேட்டு கொண்டிருந்த மோகனின் அன்னை எண்ணத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, அதே உஷ்ணத்தில்,
" ஆரம்பிக்க இருந்த என் பிள்ளையோட வாழ்க்கையை கெடுத்துட்டு இப்போ ஆரம்பிக்க போற உன் வாழ்க்கையை பத்தி பேசுறதுக்கு வந்துட்டியா? " கோபமாக வந்தது மோகனின் அம்மா குரல்.
அதைக் கேட்டு திரும்பிய வீரா அதிர்ந்து அவரை பார்க்க,
" என்னடா பாக்குற என் புள்ளைக்கு அமைய போற வாழ்க்கையை கெடுத்துட்டு இன்னைக்கு உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு எங்கள வந்து பார்த்து பேச வந்திருக்கியே நீ எல்லாம் மனுஷன் தானா?
உனக்கு எல்லாம் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?
உன் நண்பன் தானே அவனோட வாழ்க்கையை கெடுக்கிறதுக்கு உனக்கு எப்படி தான் மனசு வந்ததோ தெரியல,? " அவர் வெடிக்க வீரா அமைதியாக நின்றான்
" என்ன மாயம் செஞ்சியோ மந்திரம் செஞ்சியோ தெரியல என் புள்ள அவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை மறந்துட்டு உன் பின்னாடி உன் கல்யாணத்துக்கு வேலை பார்த்துகிட்டு அலையுறான் இந்தக் கொடுமையெல்லாம் நாங்கள் எங்க பொய் சொல்ல, " வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டார்,
" மணமேடை வரைக்கும் வந்து என் பிள்ளையோட கல்யாண நின்னு போச்சு இதுக்கு மேல அவனுக்கு எப்படி புதுசா ஒரு வாழ்க்கையை அமைச்சு வைக்குறது, பாக்குறவங்க எல்லாம் அவங்க அவங்க இஷ்டத்துக்கு ஒரு கற்பனையை மனசுல வச்சிட்டு இஷ்டம் போல பேசுறாங்க உன்னோட ஆசைக்காக என் புள்ள வாழ்க்கையை கெடுத்த நீ நல்லாவே இருக்க மாட்ட டா " என்று அவர் கொதித்து பேச
" வார்த்தைக்கு வார்த்தை என் புள்ள என் புள்ளன்னு பேசுற ம்மா அவன் உன் புள்ளன்னா அப்போ நா யாரு ம்மா உனக்கு? " வீரா கேட்க அவரது வார்த்தை அடங்கி போனது...
" வார்த்தைக்கு வார்த்தை என் மூத்த புள்ள வீரா என் முதல் புள்ள வீரான்னு சொன்னது எல்லாம் மறந்து போச்சா ம்மா உனக்கு....
ஆத்திரம் இருக்க வேண்டியது தான் அதுக்காக எல்லாத்தையும் மறந்துருவியா ம்மா சொல்லு ம்மா என் புள்ள வாழ்க்கையை கெடுத்துட்ட நீ நல்லா இருப்பியான்னு கேட்ட இல்ல இப்போ ஏன் மா உன் வாயில இருந்து வார்த்தை வர மாட்டேங்குது,
அன்னைக்கு நடக்கற போற விளைவை அறியாம காந்தாரிங்குற ஒரு தாய் யாதவர்களும் தனக்கு பிள்ளைங்கதாங்குறத மறந்து சாபம் கொடுத்தா அவளோட சாபத்துல துவாரகை யாதவ வம்சம் முழுசா அழிஞ்சு அந்த நகரமே கடல் உள்ள போச்சு, சாபம் கொடுத்துட்டு அந்த அம்மா அழுதா அய்யயோ ஆத்திரத்தில என்ன செய்யுறதுன்னு தெரியாம செஞ்சுட்டேனேன்னு,
அதே மாதிரி தான் ம்மா நீயும் செய்யுற,
நானும் உன் பிள்ளைதாங்குறத மறந்து நீயும் பேசுற பேசு ம்மா பேசு நாளைக்கு இந்த புள்ளை அழிஞ்சு போன பின்னாடி அதிகமா அழ போறதும் நீதான், ஐயோ என் பிள்ள வாழ்க்கையை நான் தான் அழிச்சிட்டேனோன்னு பின்னாடி வருத்தப்பட்டு ஆக போறது ஒன்னும் இல்ல ம்மா. இப்பவும் நா சொல்லுறேன் ம்மா நீயும் அப்பாவும் வராம என் கல்யாணம் நடக்காது,
இன்னைக்கு நீ கோபத்துல நா உன் புள்ள இல்லன்னு சொல்லிட ஆனா எனக்கு என்னைக்கு இருந்தாலும் நீங்க தான் அம்மா அப்பா அத மட்டும் மறந்துராதீங்க, நீர் அடிச்சு நீர் விலகாது, கோழி மிதிச்சு குஞ்சும் சாகாது, அம்மா அப்பா பேசி பிள்ளையும் பெருசா வருத்தபடாது ம்மா " என்று சொல்லிய வீரா கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்க அவனது கையை பற்றினார் மோகனின் அம்மா.
வீராவின் நிதானம் நிறைந்த பேச்சு அவரது கோப தீயை அனைத்தது என்று தான் சொல்ல வேண்டும். விளைவு அவரின் மனமாற்றம்
" அய்யோ என் தங்கம் அம்மாவை மன்னிச்சுரு ய்யா,
அம்மாக்கு வயசு ஆனதும் அறிவு கெட்டு போச்சு போல அதான் ஒரு கண்ணுல வெண்ணையும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பையும் வச்சுட்டேன் கெட்டு போறது என் கண்ணு தானன்னு அறிவு இல்லாமலே, எனக்கு ரெண்டு பேருமே புள்ள தான் யா என் ரெண்டு புள்ளையும் நல்லா இருக்கனும், நீ தான ய்யா என் மூத்த புள்ள உனக்கு கல்யாணம் முடிஞ்ச பின்னாடி தான அவனுக்கு முடிக்க முடியும். அந்த அறிவு இல்லாம அவனுக்கு முதல்ல முடிக்க நினைக்க போய் தான் ஆண்டவன் அதை தடை பண்ணிட்டான் போல மூத்தவன் இருக்க இளையவனுக்கு என்ன அவசரம்ன்னு.
இந்த உண்மை புரியாம தான் உன் அம்மா அழுது புலம்பி உன்ன திட்டிட்டு இருந்து இருக்கேன் ய்யா, அம்மாவை மன்னிச்சிரு தங்கம் நீ போய் கல்யாண வேலையை பாரு அம்மா இப்போ குளிச்சிட்டு உடனே கிளம்பி வரேன் " என்று சொல்லியதோடு நில்லாமல்,
" என்னங்க என்ன மச மசன்னு நின்னுட்டு இருக்கீங்க, புள்ளைக்கு கல்யாணம் ஆயிரம் வேலை கிடக்கு போய் ஆக வேண்டிய வேலைய பாருங்க, எந்திரிச்சி சட்டையை போட்டுட்டு அவன் கூட போய் ஆகுற வேலைய பாருங்க நா ஆட்டோல பின்னாடி வந்து சேருறேன் " என்று சொல்லி அவசரபடுத்தி தனது கணவனை கிளம்ப செய்து சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த எதிர்மறை உணர்வும் எதுவும் இல்லாமல் மாறி இருந்தார் மோகனின் அம்மா.
நமக்கு நெருங்கிய உறவிடம் தானே அதிகம் கோபம் காட்ட முடியும் அதை புரிந்து கொண்டு அவர்களிடம் நிதானம் காட்டினால் இங்கு நிறைய உறவுகள் கெட்டு போவதை தவிர்க்கலாம், வீராவின் நிதானம்,
சிறுவயதில் இருந்தே தன்னை பார்த்து நண்பனோடு சேர்த்து தன்னையும் பிள்ளையாய் நினைத்து வளர்த்த அவனது அன்னையை அவனுக்கு மீண்டும் திருப்பி கொடுத்தது, நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.
மனம் கொடுத்த மன்னவன் வருவான்......