Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
" டேய் மோகனு, உண்மைய சொல்லு டா நிஜமாவே உன் மனசு மாறிட்டா டா? "
" ஆமா டா, அதுல உனக்கு என்ன டா சந்தேகம் "
" இல்ல டா என் மனசு அத உறுதியா நம்ப மறுக்குது "
" ஏன் டா அப்படி? "
" ஏன்னா உனக்கு அந்த புள்ளைய அந்த அளவுக்கு புடிச்சு இருந்தது டா, அந்த புள்ள மேல நீ எந்த அளவுக்கு ஆசையோடும் பாசத்தோடும் இருந்தன்னு எனக்கு நல்லாவே தெரியும் டா "
" சரி "
" அப்படி இருந்த உன்னால எப்படி டா அந்த புள்ளைய மறக்க முடியும்? "
" ஏன் டா முடியாது? "
" எப்படி டா முடியும்? "
" அவ நமக்கு உரிமை இல்லனு ஆன பின்னாடி அவளை எப்படி டா மனசுல நினைக்க முடியும்? "
ராஜா அவனை பார்த்தான்.
" என்ன டா பாக்க, வீராவோட அஞ்சலிய பாக்கவுமே என் மனசுல இருந்த கொஞ்சம் நஞ்சம் ஆசையும் காணாம போய்ட்டு டா, எப்படின்னு சொல்லுறேன் கேளு.
அஞ்சலிய இதுக்கு முன்னாடியே நா பாத்துருக்கேன் டா, நா பார்த்த அப்போ இருந்த அஞ்சலிக்கும், வீரவோட பார்த்த அஞ்சலிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு டா. அத எப்படி சொல்ல.... " சிறிது யோசித்து விட்டு தொடங்கினான்,
" ம்ம்ம் ஒருத்தங்க சந்தோசமா இருக்குறதுக்கும், ஆத்ம திருப்தியோட சந்தோசமா இருக்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு தெரியுமா டா? " அவன் தெரியும் என்பதற்கு அறிகுறியாய் தலை ஆட்ட,
" அந்த மாதிரி தான் டா அவ இருந்தா, நான் பாக்கும் போதெல்லாம் அவ சந்தோசமா இருந்தா ஆனா அந்த சந்தோசமே பிடித்தம் இல்லாத சந்தோசம் தானோன்னு கூட இப்போ தோணுது டா " அவனது உதட்டில் ஒரு வேதனை சிரிப்பு,
" ஆனா வீராவை பார்த்த உடனே அவளுக்கு வந்த சந்தோசம் இருக்கே, அப்பப்பா அதெல்லாம் வார்த்தையில சொல்ல முடியாது டா, அந்த மாதிரி ஒரு சந்தோசம், அவ்ளோ நிறைவா நா அவளே பார்த்ததே கிடையாது டா, அப்படி பார்த்த அந்த நொடியே என் மனசுல இருந்த எண்ணம் அத்தனையும் காணாம போய்ட்டு டா, அப்போவே முடிவும் பண்ணிட்டேன் இதுக்கு மேல அவளை நாம நினைக்குறது பாவம், அப்படி நினைச்சா அது நம்ம நண்பனுக்கு செய்யுற துரோகம்ன்னு.
நா பாவியா இருக்கவும் விரும்பல, துரோகியா இருக்கவும் நினைக்கல " என்று அவன் சிரித்து கொண்டே சொல்லும் போதே அவனை அணைத்து கொண்டான் ராஜா.
" நிஜமாவே உஷந்துட்ட டா "
மோகன் சிரித்தான் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே,
" நிஜமா மோகனு இதெல்லாம் பெரிய விஷயம் டா, அடுத்தவங்க உணர்வை புரிஞ்சு அதுக்கு மதிப்பு கொடுக்குறவங்க இப்போ ரொம்ப கம்மி டா, அவங்களுக்கு என்ன தேவையோ அத மட்டும் யோசிக்கிறவங்க மத்தியில நாம அப்படி இல்லன்னு நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு டா "
" டேய் யார்டா இவன், அந்த புள்ள நம்ம வீராவுல பாதி ஆக போகுது அப்புறம் அந்த புள்ள மட்டும் எப்படிடா அடுத்ததாகும்?
அதுவும் நம்மளோட சேர்ந்தது தான் டா. நம்ம கூட சேர்ந்தவங்கள நாம தானடா பாத்துக்கணும், "
" கண்டிப்பா டா ஆனா உன்ன மாதிரி நிஜமா வேற யாரும் நினைப்பாங்களான்னு எனக்கு தெரியல மோகனு. "
" சரி வா போவோம் நாம வந்து ஏற்கனவே லேட் ஆகி போச்சு இன்னும் லேட் ஆச்சுன்னு வச்சுக்கோ நாம சரக்கை போட போய்ட்டோம்ன்னு அங்க ஒருத்தன் மூஞ்சில மிளகாய் பொடி அள்ளி தட்டிக்கிட்டு உட்கார்ந்து இருப்பான். வெயிட் பண்ணுன கடுப்புல அப்புறம் நாம போனதும் நம்ம முகத்திலேயே துப்பிருவான் " என்று மோகன் சிரிக்க,
" ஆமாம் ஆமாம் அவன் செய்ய கூடியவன் தான் " என்று ராஜாவும் சேர்ந்து சிரித்தான்.
சிரித்துக் கொண்டே அவர்கள் நகர அந்த கடைக்காரன் அழைத்தான்,
" தம்பி தம்பி நல்லா சிரிச்சீங்க நல்லா பேசுறீங்க அதே மாதிரி காசும் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் பா " என்று அவர் பங்குக்கு அவரும் அவர்களது கலகலப்பில் கலந்து கொள்ள,
" ஐயோ ஐயோ அண்ண அண்ண மன்னிச்சிடு மன்னிச்சிடு நாங்க உண்மையிலேயே நல்ல குடும்பத்தில் பிறந்த நல்ல பையங்க ண்ண " என்று ராஜா ஒரண்டையை கொடுத்து இனொரு சிகரெட்டை எடுத்து பையில் போட,
" டேய் காச கொடுத்துட்டு வாடா டைம் ஆயிடுச்சு "
" எவ்ளோ அண்ண "
" 120 ரூபா தம்பி "
" அப்போ சிகரெட் பாக்கெட் எடுத்தத பார்த்துட்ட "
" ம்ம்ம் பார்த்துட்டேன் "
" சரி இந்தா " என்று பணத்தை கொடுத்து விட்டு நண்பர்கள் இருவரும் அறைக்கு வர குளித்து முடித்துவிட்டு பிரஷ்ஷாக அமர்ந்திருந்தான் வீரா,
" என்னடா வீரா ஆளு குளிச்சு கிளிச்சு ஜம்முன்னு உக்காந்து இருக்க போல இருக்கு "
" டேய் விளக்கெண்ணெயலா பசியில உட்கார்ந்து இருக்கேன் டா ஒழுங்கா சோத்தை குடுங்கடா " என்று வீரா கேட்க அவர்கள் இருவரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து கொண்டார்கள்,
" என்ன டா முழிக்கீங்க சோறை எங்க டா? "
அப்போது தான் நினைவில் வந்தது டீக்கடையில் இருந்து தம்மை அடித்து விட்டு அப்படியே அவர்கள் அறையை நோக்கி வந்தது
" சாரிடா வீரா அத வாங்க மறந்துட்டோம் " இருவரும் கோரஸ் பாட அவர்கள் இருவரையும் அக்னி பார்வை பார்த்தவன் எழுந்து துரத்த ஆரம்பித்தான்.
அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியே வந்து லாட்ஜின் வராண்டாவில் ஓட ஆரம்பித்தார்கள்,
" டேய் நில்லங்க டா சோறு வாங்கிட்டு வரேன்னு போயிட்டு இப்படி ஒன்னும் இல்லாம கைய வீசிட்டு வந்து இருக்கீங்க, அப்போ வெளிய போய் என்னடா பண்ணுனீங்க, கொய்யால உங்க ரெண்டு பேரையும் கொல்லாம விடமாட்டேன் டா டேய் " என்று கத்திக்கொண்டே அவர்களை விரட்ட அவர்களும் திடு திடு வென்று ஓட ஆரம்பித்தார்கள்.
அந்தத் திடு திடு சத்தத்தை கேட்டு அருகில் இருந்த அறையில் இருந்தவர்கள் எல்லாம் வெளியே பதறி அடித்துக் கொண்டு வந்து பார்க்க, நண்பர்கள் மூன்று பேரும் யாரையும் கண்டுகொள்ளாமல் கலகலப்பாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள் சிறுபிள்ளையைப் போல....
அங்கிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை என்றாலும் கூட இத்தனை வயதிற்கு பிறகு சிறு பிள்ளை போல் ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் நண்பர்களை பார்க்க அவர்களுக்கு தன்னால் சிரிப்பு வந்தது, அவர்களது பார்வையிலும் சிறுவயது நினைவு வந்ததோ என்னவோ தெரியவில்லை அந்த நிகழ்வை கண்டவர்கள் அனைவரும் அவர்களை ரசிக்க தவறவில்லை.
அவர்கள் இருவரையும் பிடித்து வீரா ஆளுக்கு ஒரு அடி அடித்துக் கொண்டு மூச்சு வாங்க அவர்களும் அந்த விளையாட்டான அடியை வாங்கி கொண்டே மூச்சு வாங்கினர், அந்த நிகழ்வு அவர்களது நெஞ்சம் நிறைத்தது அந்த நிறைவு மனதில் இருந்த இறுக்கத்தை எல்லாம் சுத்தமாக துடைத்து போட்டது....
மனம் கொடுத்த மன்னவன் வருவான்......