Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
டாக்டரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வீரா முழித்தான், அந்த நிகழ்வு நடக்கும் பொழுது தான் தூங்கிக் கொண்டிருந்தோமா அல்லது விழித்துக் கொண்டிருந்தோமா என்பதை அவன் அறியவில்லை அதை அறியும் பொருட்டு அவன் யோசிக்க ஆரம்பித்தான்.
" அன்னைக்கு மோட்டர் போட்டு விட்டோம், வாய்க்கால் வெட்டி விட்டுட்டு அப்படியே மரத்து அடியில வந்து படுத்தோம், கண்ணு மூடி தான் இருந்தோம், அப்புறம் அந்த சத்தம், கட கடவென மீண்டும் பழைய நினைவுகளுக்குள் எண்ணம் அடைபட தூங்கினோமா இல்லையா என்ற கேள்விக்கு விடை அறியவில்லை, தூங்கினால் இந்த விஷயம் எல்லாம் எப்படி நினைவு இருக்கும்? விழித்து இருந்திருந்தால் இந்த உணர்வு எல்லாம்... "
அதை எப்படி சொல்வது என்று புரியாமல் மீண்டும் முதலில் இருந்து யோசிக்க அவனது யோசனை அவனுக்கு கை கொடுக்காமல் போகவே ராஜா இடையில் புகுந்தான்,
" டாக்டர் அன்னைக்கு நானும் இவனும் பேசிட்டு இருக்கும்போது திடீர்னு அப்படியே ஒரு மாதிரி நின்னுட்டான், கொஞ்சம் நேரம் அப்படியே தான் இருந்தான் அசைவு ஏதும் இல்லாம,
அப்புறம் அவனை உலுப்பி என்னடான்னு கேட்டா அஞ்சலி பேசிச்சுடா அவ கூட பேசிட்டு வந்தேன் அப்படின்னு சொல்லி சொன்னான். "
என்று ராஜா சொல்ல மற்ற மூவரின் பார்வையும் அவனின் மீது பதிந்து இருந்தது.
" ம்ம்ம் மேல சொல்லு ப்பா " டாக்டரின் குரல்,
மீண்டும் லேசான சிந்தனைக்கு சென்று ராஜா பேசினான்,
" அப்போ இவன் தூங்கல டாக்டர், ஆனா அதே நேரம் அவன் வேற எந்த வேலையும் செய்யல அப்படியே ஒரு மாதிரி ஸ்டக் ஆன மாதிரி இருந்தான் "
அதை கவனமாக கேட்டு தான் வைத்திருந்த டைரியில் குறித்து வைத்துக் கொண்ட டாக்டர் மேலும் கேட்டார்,
" சரி நீ சொல்லு தம்பி அந்நேரம் அவனை பார்த்த இல்ல அப்ப அவன் என்ன செஞ்சான்? எப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணுனான்? "
" அதான் சொன்னேனே டாக்டர் அப்படியே தான் இருந்தான், வேற ஒண்ணுமே செய்யல, சரியா சொல்லணும்ன்னா கொஞ்ச நேரம் அப்படியே புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி சிலையா நின்னுகிட்டு இருந்தான் டாக்டர்.
ஆனா அவனோட முகத்தில் மட்டும் ஏதோ ஒரு சின்ன மாற்றம் இருந்துச்சு. சிரிப்பா இல்ல சிந்தனையான்னு சரியா சொல்ல தெரியல டாக்டர் ஆனா முகம் பிரகாசமா இருந்துச்சு. கொஞ்சம் நேரம் பார்த்தேன் அவனோட நிலையில எந்த மாற்றமும் இல்லாம போக மறுபடியும் உலுப்பி விட்டேன் டாக்டர்,
" டேய் என்னடா பண்ற? "
" ஒன்னும் இல்ல டா "
" அட ச்சீ சொல்லு "
" சொன்னாலும் உனக்கு புரியாது டா "
" எனக்கு புரியாதா? ஒழுங்கா என்னன்னு சொல்லு டா "
" அது வந்து டா நானும் அம்முவும் பேசிட்டு இருந்தோம்ன்னு " சொன்னான் எனக்கு ஒன்னுமே புரியல, அப்புறம் அதை கிளியர் பண்ண,
" எப்படிடா பேசின, நானும் இங்க தான டா இருக்கேன் எனக்கு தெரியாம எப்படி பேச முடியும்?
" நாங்க எப்பவும் இப்படி தான்டா பேசுவோம் "
" இப்படி தான்னா? "
" அதான் சொல்லிட்டேன்ல டா உனக்கு புரியாதுன்னு அப்படியே அந்த பேச்சை விடுன்னு சொல்லிட்டான் டாக்டர் "
" அதுக்கப்புறம் அத பத்தி அவன் கிட்ட பேச டைம் கிடைக்கல நானும் பேசல அவனும் பேசல " என்று ராஜா சொல்ல அதையும் குறித்து வைத்துக் கொண்டார் டாக்டர்.
வீரா அமைதியாக இருந்தான் ஏனென்றால் அவனது நிலை அவனுக்கே தெரியவில்லை என்ற யோசனை அவனிடம்,
இத்தனை நாள் கனவு என்று தெளிவாக இருந்தவனை குழப்பி விட்டிருந்தார் டாக்டர். யோசிக்க யோசிக்க அவனுக்கு தலை வலிப்பது போன்று தோன்ற தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்.
டாக்டர் அவனுக்கு தண்ணீர் கொடுத்தார் அதை வாங்கி குடித்தவன் சற்று நிதானத்திற்கு வந்து அவரை பார்த்தான் குழப்ப முடிச்சுக்கள் நிறைந்த முகத்தோடு.
" யப்பா வீரா ஏன் இப்படி மண்டைய உடைக்க? "
" வேற என்ன டாக்டர் பண்ண, நீங்க கேள்வி கேக்குற வரைக்கும் அத நான் கனவுன்னு முழுசா நம்பிகிட்டு இருந்தேன், ஆனா நீங்க கேள்வி கேட்கவும் அந்த எண்ணம் எனக்குள்ள மாறுபடுது தெளிவான ஒரு முடிவுக்கு என்னால வர முடியல.
இப்படியா அப்படியா
அதுவா இதுவா என்னால சொல்ல முடியல,
சொல்ல தெரியல.
பிரிச்சு அறியவும் முடியல.
இதுவரைக்கும் இப்படி ஒரு நிலை எனக்கு வந்ததில்ல,
ஆனா இன்னைக்கு இது புதுசா இருக்கு. இந்த எண்ணம் எனக்கு தெளிவில்லாமல் இருக்கு இதுவரைக்கும் இப்படி ஒரு தெளிவில்லாத நிலையை நான் சந்திச்சதே கிடையாது டாக்டர்... "
டாக்டர் சிரித்தார்,
" மூணு பேரும் ஒரே மாதிரி தான் டா இருக்கீங்க. " அவர்கள் அவரை பார்க்க,
" ஏன்டா ஏதாவது ஒரு சம்பவம் நடந்தா அந்த சம்பவத்துக்கு வெளியே நின்னு யோசிக்கணும் டா அத விட்டுட்டு அந்த சம்பவத்துக்குள்ளேயே மூழ்கி யோசிச்சிங்கனா உங்களுக்கு எப்படி விடை தெரியும்? "
டாக்டர் சொன்னது புரியாமல் அவரைப் பார்க்க,
" சரி உனக்கு புரியற மாதிரி விளக்கமா சொல்றேன் கண்ண மூடு "
வீரா கண்களை மூடினான் தனது அலைபேசியை வீராவின் கண்களுக்கு முன்னால் கொண்டு போய் வைத்துவிட்டு,
இப்போ கண்ணை திறந்து பாரு என்றார்.
அவனும் கண்ணை திறந்து பார்க்க, மொபைல் திரையில் என்ன இருக்கிறது என்று டாக்டர் கேட்க அவனால் அதை சொல்ல முடியவில்லை.
பின்னர் அந்த அலைபேசியை கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு கொண்டுவர அந்த அலைபேசியில் என்ன இருக்கிறது என்பது தெளிவாக புலப்பட ஆரம்பித்தது.
இப்ப தெரியுதா டா அதில் இருப்பது என்னன்னு என்று கேட்க தெரிகிறது என்று வீரா தலையை ஆட்டினான்.
" இப்போ தெரியுற விஷயம் அப்போ ஏன் டா தெரியாம போச்சு இத விட கிட்டத்துல உன் கண்ணு முன்னாடி தான இருந்துச்சு. "
" ம்ம் ஆமா "
" அப்போ ஏன் தெரியல? "
" அது என் மேல ஒட்டிட்டு இருந்துச்சு டாக்டர் "
" இவ்ளோ தான் டா விஷயம் கண்ணுக்கு முன்னாடி இருக்கிற விஷயம் தெரியும் கண்ணுக்குள்ள இருக்குற விஷயம் தெரியாது அந்த மாதிரி தான் விஷயத்துக்குள்ள இறங்கி நீ கண்டுபிடிக்க நினைச்சா அது உன்னால கண்டுபிடிக்க முடியாது அந்த விஷயத்துக்குள்ள இறங்காமல் வெளியில நின்னு அந்த விஷயத்தை வேடிக்கை பாரு கண்டிப்பா உன்னால கண்டுபிடிக்க முடியும் நீ நினைக்கிற மாதிரி உனக்கு வர்றது கனவு எல்லாம் கிடையாது... " என்று டாக்டர் சொல்ல அவர்கள் மூவரும் அதிர்ந்து போய் திரும்பினர்,
மனம் கொடுத்த மன்னவன் வருவான்.......