New member
- Joined
- Feb 16, 2025
- Messages
- 10
- Thread Author
- #1
உன் விழியோடு நானாகிறேன் -1
அழகான நாட்கள் உங்களை தேடி வருவதில்லை நீங்கள் தான் அவற்றை நோக்கி நகர வேண்டும் என்ற அழகிய வார்த்தைகளோடு அன்றைக்கான வானொலி நிகழ்ச்சியில் நேரலையை கேட்டுக் கொண்டே தன் அன்றாட வேலைகளை முடித்து அலுவலகத்துச் செல்வதற்காக வாசலில் வந்தவளை ஒருநொடி கைப்பேசியின் அழைப்பு நிறுத்தியது.
கைப்பேசியை எடுத்து தொடுதிரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் முகத்தில் தோன்றிய சிறு புன்னகை உதட்டோரமாய் முற்றுப் பெறவும் அழைப்பினை எடுத்தவள் “ஹலோ சிந்தியா எப்படி இருக்கே?”
மறுமுனையில் சிரித்தப்படி “ம்ம்… நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கே?”
“நல்லா இருக்கேன்”
“முக்கியமான விஷயம் கேட்கனும் நான் கேட்கிற இந்த உதவிக்கு முடியாதுன்னு சொல்லக் கூடாது”
அவளோ சிரித்துக் கொண்டே “முதல்ல என்னன்னு சொல்லு அப்புறம் முடியுமா? முடியாதான்னு பார்க்கலாம்” என்றாள் அசட்டையாக…
சிந்தியா “கல்யாணப் பொண்ணோட விருப்பம் நிறைவேறாதா?” என்று கேள்வியாக கேட்கவும் அவள் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒருசேர “என்னச் சொல்றே சிந்தியா? உண்மையாகவே உனக்கு கல்யாணமா?” ஆனந்தமாய் கேட்டாள்.
அவளோ வெட்கமாக “இன்னும் பத்து நாளுல கல்யாணம் நீ தான் மணப்பெண் தோழியா இருந்து என்கூட இருந்து என்னை என்னவரோடு சேர்ந்து வைக்கனும்” என்ற போது பெருமூச்சை ஒன்றை விட்டாள் சிந்தியா.
அதைக் கேட்டதும் உற்சாகம் முழுமையும் வற்றிப் போனவளாக இவளோ “சிந்தியா உனக்கு கல்யாணம்னு சொன்ன பாரு அப்போவே எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால்…” என்று இழுக்கவும்,
சிந்தியா “இந்த ஆனா ஆவன்னா என்ற பேச்செல்லாம் தேவையில்லை” என்றாள் கண்டிப்பாய்.
இவளோ “சிந்தியா உன் கல்யாணத்துக்கு வந்து ரெண்டுநாள் நான் இருந்துட்டு போகிறேன் ஆனால் கல்யாணப் பெண்ணோட தோழியாக வருவதற்கு எனக்கு தகுதியில்லை” என்றாள் கவலையோடு…
தன் தோழி சொன்னதைக் கேட்டு கோபமடைந்த சிந்தியா “ஆதிரா என் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு உன்னை விட அதிகமாக எனக்காக யாருமே நினைக்கலை அந்த இடத்துல எப்பவும் நீ தான் இருக்கே இப்போ இந்த கல்யாணம் பண்ற தைரியமே நீ கொடுத்தது தான் எல்லாம் இழந்து நின்றபோது நீ மட்டும் தான் எனக்கு துணையா இருந்தே ஆதிரா அதனால உன்னைத் தவிர வேற யாரும் எனக்கு மணப்பெண் தோழியாக இருக்க முடியாது அதனால சாக்குபோக்கு சொல்றதை விட்டுட்டு ஒழுங்கா கல்யாணத்துக்கு வர்ற வழியைப் பாரு நீ வந்த பிறகு தான் எல்லாம் செலக்ட் பண்ணனும் நினைவிருக்கட்டும் ஒழுங்கா இன்னும் ஒருவாரத்துல கேரளா வந்து சேருல வழியைப் பாரு” என்று முடித்தாள் சிந்தியா.
அவள் பேசியதை விட கடைசியாக சொன்ன இடத்தைக் கேட்டு அதிர்ச்சியான ஆதிரா “ஹேய் என்ன கேரளாவுலயா கல்யாணம்?”
“ஆமாம் என் புருஷன் பேமிலி அங்கேத் தான் இருக்காங்க அதனால எல்லாம் மலையாளி முறையில் தான் டிக்கெட் புக் பண்ணிட்டேன் வந்து சேரும் வழியைப் பாரு முக்கியமான விஷயம் உன்னை மணப்பெண் தோழியாக வரச் சொல்லி இருக்கேன் நினைவிருக்கட்டும் ஏனோ தானோன்னு வந்துடாதே!” என்றாள்.
ஆதிரை கோபமாக “என்னால வர முடியாது”
சிந்தியா சிரித்துக் கொண்டே “என்ன கோவிச்சுகிட்டியா?”
அவளோ “ஆமாம்” என்றதும் சிந்தியா “நல்லா கோவிச்சுக்கோ அப்போத் தான் ஒழுங்கா வருவே இன்னும் ஒருவாரம் தான் ஆபிஸ்ல சொல்லி லீவுக்கு சொல்லிடு” என்றாள்.
ஆதிரை “நான் சொல்றநை எதையும் கேட்கக் கூடாதுன்னு முடிவு செய்து இருக்கியா சிந்தியா?”
“ஆமாம் இந்த முறை மட்டும் அம்மாக்கு மற்ற ப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் வாட்ஸ்அப்ல மேரேஜ் இன்வடேஷன் அனுப்பி விடுறேன் எல்லோரையும் அழைச்சிட்டு வந்திடு மறக்காமல் வியன்காவை கூடிட்டு வா” என்றாள்.
“வியன்கா,அப்பா,அம்மா எல்லோரும் ஊருக்கு போயிருக்காங்க சித்தி பொண்ணுக்கு கல்யாணம் அதோட திருவிழாவும் இருக்கு நான் வர மாட்டேன்னு சொல்லிட்டேன் எல்லோரும் ஒரு இருபது நாள் அங்கேத் தான் இருப்பாங்க அம்மாவைப் பத்தித் தான் தெரியுமே ஊருக்கு போனா சட்டுன்னு வர மாட்டாங்க” என்றாள்.
சிந்தியா “ம்ம்… புரியுது அப்போ எந்த தொந்தரவும் இல்லாமல் கிளம்பி வர்ற வழியைப் பாரு வீட்ல காரணம் சொல்றதுக்கு உனக்கு சொல்லித் தரனும்னு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்” என்றாள் சிரித்துக் கொண்டே.
ஆதிரை “ஹேய் நானும் எதுவும் சொல்ல வேண்டாம்னு அமைதியா இருக்கேன் என்ன எப்போ பார்த்தாலும் நான் தான் உன்னை வழி கெடுக்கிற மாதிரி பேசுறே நேர்ல வந்து உன் புருஷன்கிட்ட நீ காலேஜ்ல பண்ண கலாட்டாவை எல்லாம் சொல்லி உன்னை மாட்ட வைக்கல்ல அப்புறம் இருக்கு என்கிட்ட வந்து மீ பாவம் விட்டுடுன்னு கெஞ்சப் போறே”என்றாள் சிரித்துக் கொண்டே.
சிந்தியா “ஷ்ப்பா… வரேன்னு ஒரு வார்த்தை உன் வாயில வர வைக்கிறதுக்குள்ளே என்னாலாம் பேச வேண்டி இருக்கு சீக்கிரமா வா ஆதிரா உன்னை ஞான் மிஸ் செய்யு சந்திச்சு எத்தனை வருஷமாச்சு” என்ற போது அவளின் கவலையை அறிந்துக் கொண்டாலும் “உன் புருஷர் மலையாளின்னு அடிக்கடி நினைவுப்படுத்து” என்று பேசி முடித்திருந்தனர்.
முகம் முழுக்க புன்னகையோடு அலுவலகத்திற்கு தன் இருசக்கர வாகனத்திற்கு சென்றாள் ஆதிரா.தன் பள்ளி முதல் கல்லூரித் தோழியான சிந்தியாவுடன் பேசியதில் ஏதோ இந்த நிஜ உலகத்தை விட்டு தங்களுக்கான உலகில் சஞ்சரித்ததில் பேரானந்தம்.
முக்கியமான சில நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பார்க்கும் கணக்காளர் பதவியில் உதவி மேலாளராக பணிபுரிகிறாள் ஆதிரை.அவளுடைய கண்காணிப்பில் கீழ் சில முக்கிய நிறுவனங்களும் நாலைந்து கணக்கீட்டார்களும் இருக்கிறார்கள்.
என்றைக்கும் இல்லாமல் இன்று சிரித்த முகத்தோடு வரும் தங்களின் உதவி மேலாளரைப் பார்க்க எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.எப்போதும் கண்டிப்பும் கோபமும் ஆளைத் துளைக்கும் பார்வையோடு இருப்பவளை சாந்தமாக பார்ப்பது அரிது.
அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் இதைப் பற்றி தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.அதை எல்லாம் கவனிக்காது தன் வேலையில் கவனமாக இருந்தாள் ஆதிரா.
இதற்கிடையில் சிந்தியா தன் கல்யாண பத்திரிக்கையை கைப்பேசியில் அனுப்பி வைத்திருந்தாள். அதைப் பார்த்தவளுக்கு இன்னும் ஆனந்தமாக இருந்தது.தன் ஆருயிர் தோழி புன்னகை முகமாக காண்பதற்கு அழகு தேவதையாக மிளிர்ந்தவளை இன்னும் ஒருமுறை விழிகளில் நிரப்பிக் கொண்டாள் ஆதிரா.
இதற்கு மேலும் தாமதிக்காமல் தன் மேலாளரிடம் சென்று தனக்கு அடுத்த வாரத்திலிருந்து பத்து நாட்கள் விடுமுறை வேண்டுமென்று கேட்கச் சென்றாள்.அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் சரியென்று ஒத்துக் கொண்டார்.அவ்வளவாக விடுமுறை ஆதிரை எடுத்துக் கொள்ளாததால் அவளுக்கு விடுமுறைக் கொடுக்க ஒத்துக் கொண்டார்.
வேலை முடியும் தருவாயினில் ஆதிரையின் அம்மா கைப்பேசியில் அழைத்தார்.அழைப்பை எடுத்தவள் “ஹலோ அம்மா”
“சிந்தியாவுக்கு கல்யாணமாமே போன் போட்டு பேசுனா”
“ம்ம்… எனக்கு முதலிலேயே சொல்லிட்டா”
“அப்படியா! ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆதிரை இப்போதாவது அவளுடைய வாழ்க்கையை அவள் வாழட்டும் என்ற கடவுளிடம் பிராத்தனை அதிகமாக இருக்கு நீ போறத் தானே” என்றதும் அவளிடம் பதிலில்லை.