• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
30


“நான் கொலை முயற்சி பண்ணல லாயர் சார்.”

“என்கிட்ட ப்ரூஃப் இருக்கு சித்தார்த். பார்க்குறீங்களா?”

“இல்ல நிஜமாவே நான் எதுவும் செய்யலை.”

“ஓ... அப்ப இதுக்கென்ன அர்த்தம்” என்று ஒரு ஆடியோவை ஓடவிட்டான் அரிச்சந்திரன்.

“ஹலோ! யார் பேசுறீங்க? என்னங்க பதிலைக் காணோம். ஹலோ ஆர் யூ தேர்?” சஞ்சித்தின் குரல் தெளிவாகக் கேட்க,

“நான் சித்தார்த்” என்று அழுத்தமாக வந்தது எதிர்க்குரல்.

“எந்த சித்தார்த்?”

“ம்... உன்னோட எமன்.”

“அப்படித் தெளிவா சொல்லுங்க எமன் சார். சரி இப்ப எதுக்கு போன் பண்ணியிருக்கீங்க? பாசக்கயிறோட வந்துட்டு இருக்கீங்களா என்ன?” என்றான் விளையாட்டாகவே.

“பாசக்கயிறு இல்லடா. பாசக்காரோட வந்துட்டு இருக்கேன்.” சித்தார்த் சொல்ல,

“ஆல்வேஸ் வெல்கம் எமன் சார்” என்றான் சிரிப்புடன்.

“சஞ்சித் ப்ளீஸ் பீ சீரியஸ். நட்சத்திரா என்னோட ஒய்ஃப். இந்தக் கல்யாணத்தை நிறுத்து.”

“பதினாலு வயசுக் கல்யாணம் சட்டப்படியும், தர்மப்படியும் செல்லாது எமன் சார். சோ, போகாத ஊருக்கு வழி தேடாம, அவளுக்கு வாழ வழிவிட்டு நீங்களும் உங்க வாழ்க்கையைப் பாருங்க” என்றான்.

“அவள் என் கௌரவம் சஞ்சித். கல்யாணத்தை நிறுத்தலன்னா உன்னைக் கொன்னுருவேன்” என்றான் மிரட்டலாய்.

அனைவரும் இதற்கு என்ன சொல்கிறாய் என்பதாய் சித்தார்த்தைப் பார்க்க, “அ...அது கோவத்துல அவரை மிரட்டணும்னு விட்ட வார்த்தை. நிஜமா அப்படி எதுவும் பண்ணலை” என்று தலைகவிழ்ந்தான்.

தொடர்ந்து ஆடியோவில், “வாங்க சித்தார்த் ஐம் வெய்ட்டிங். ஆனா, நதி உங்களுக்குக் கிடையாது. அதே மாதிரி எனக்கும் கிடையாது. அவள் அவளோட சந்துருவுக்குச் சொந்தம். அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பா” என்றிருந்தான்.

“என்ன உளர்ற? இரண்டு நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு யாருக்கோ சொந்தம் சொல்ற? என்ன என்னை டைவர்ட் பண்ணப் பார்க்குறியா?”

“டைவர்ட்டும் பண்ணல. டைவர்ஸும் பண்ணல” என்ற நக்கலான பதில் சஞ்சித்திடமிருந்து.

“என்ன சஞ்சித் நக்கலா? இதுக்கெல்லாம் ஏமாற வேற ஆளைப்பாரு. நான் உன்னை பாலோ பண்ணிட்டே இருப்பேன்.”

“பார்றா! அவ்வளவு பெரிய ஆளா நான். ப்ளாக் கேட்ஸ் பதிலா நீயா? சூப்பரு” என்றான் அப்பொழுதும் விளையாட்டைக் கைவிடாமல்.

“உன்னை... இன்னைக்கு உனக்கு சங்குதான்டா” என பல்லைக்கடித்து கோவத்துடன் சித்தார்த் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

“அப்ப சஞ்சித் அத்தான் ஆக்சிடெண்ட்ல சாகலையா?” என்றாள் குரல் நடுங்க.

“அச்சோ! இல்ல நட்சத்திரா” என்றான் சித்தார்த் ஆடியோவைக் காண்பித்து.

“நதி அமைதியா இரு.”

“எதுக்கு அமைதியா இருக்கணும்? அது உயிர்ங்க. ஒரு குடும்பத்தோட சந்தோஷம் போயிருக்கு. அதுவும் எனக்காக! என்னைக் காரணமா வச்சி. மனசெல்லாம் வலிக்குதுங்க. ஒரு கொலை பண்ணிட்டு இப்படி இருக்க முடியுமா?” என்று சித்தார்த்தை வெறுப்பாக நோக்கினாள்.

“அக்கா! கொலை செய்யுறளவுக்கு போயிருக்க மாட்டாங்க. அந்தளவு மோசமான குணம் நம்ம குடும்பத்து ஆளுங்களுக்கு கிடையாது” என்று வெண்மதி கணவனுக்காகப் பேசினாள்.

“அப்ப இதுக்கென்ன அர்த்தம் பாப்பு?”

“நான் கூடதான் அண்ணனோட சண்டை போடுறப்பல்லாம் கோவத்துல, நான் உன்னைக் கொன்னுருவேன்னு சொல்வேன். அதுக்காகக் கொலை செய்திருவேனா? பேசிக்கலாம்கா” என்று கணவன்புறம் திரும்பினாள்.

“தேங்க்ஸ் வெண்மதி. எங்க நீ தப்பா எடுத்துக்குவியோன்னு பயந்தேன்” என்றான் மனதார.

“ஒருத்தரைப் பிடிக்கலைன்றதுக்காக அவங்க செய்யுறது எல்லாத்தையும் தப்பான கண்ணோட்டத்துல பார்க்கணும்னு கிடையாதுக்கா” என்று அவனைவிட்டு அக்காவிற்கு பதிலளித்தாள்.

திரும்பவும் “தேங்க்ஸ்” என்றவன் மனைவியின் நம்பிக்கையில் முகம் தெளிவாக நட்சத்திராவிடம் திரும்பி, “நான் அன்னைக்கு மிரட்டினது நிஜம். அவர் எல்லாத்தையும் ஜாலியா எடுத்துட்டுப் பேசினது கோவத்தை அதிகப்படுத்தின அதேநேரம், என்னோட கோவம் குறைஞ்சதும் உண்மை. நம்மளால ஏன் இப்படி இருக்க முடியலன்னு சின்ன ஏக்கமும் வந்தது நிஜம். கொன்னுருவேன் சொல்லி மிரட்டினாலும், லைட்டா ஆக்சிடென்ட் பண்ணி ரெண்டு நாள் பெட்ல இருந்தா, கல்யாணம் நின்னுரும் என்பது என்னோட நினைப்பு. அதனாலதான் அவரை ஃபாலோ பண்ணினேன்.”

“கார் வேகம் இருந்தாலும் கைகாலுக்குப் பதிலா உயிர் போயிட்டா என்ன செய்வன்னு, மனசாட்சி எச்சரிச்சிட்டே இருந்தது. ஆக்சிடெண்ட் வேண்டாம் பேசாம பொண்ணைக் கடத்திரலாம்னு முடிவு செய்து ஸ்லோ பண்ண நினைச்சப்ப, சஞ்சித் எதிர்ல வந்த கார்ல முட்டிட்டார். ஒரு நிமிஷம் அதிர்ச்சியில என்ன பண்றதுன்னு தெரியாம அவங்களைத் தாண்டிப் போயிட்டேன். இறங்கி என்ன ஏதுன்னு பார்க்கிறதுக்குள்ள ஆட்கள் வந்துட்டாங்க. சென்னை அதிகம் பழக்கமில்லாத இடம். சின்னதா சந்தேகம்னாலும் மொத்த கேஸையும் என்மேல தூக்கிப்போட்டு கேஸை முடிச்சிருவாங்க. அதுவுமில்லாம நான் எதுவும் பண்ணலையேன்ற நிமிர்வுன்னும் சொல்லலாம். அதான் எதையும் யோசிக்காமல் கிளம்பிட்டேன்” என்று விளக்கம் அளித்தான்.

“சஞ்சித் விஷயத்துல தப்பு செய்யாமலேயே உங்களைத் தூக்குக்கு அனுப்பியிருக்க என்னால முடியும் சித்தார்த். உங்ககிட்ட பழகினவரை தப்பானவரா தெரியல. அதான் இந்த ஆதாரம் கோர்ட்டுக்குப் போகாமல் பார்த்துக்கிட்டேன். இருந்தாலும் நீங்க செய்யவிருந்த தவறு உங்களுக்குத் தெரியணுமே சித்தார்த். அதுக்குதான் இந்த ஆடியோ வச்சிருந்தேன்.”

“தேங்க் யூ லாயர் சார். சஞ்சித்கிட்ட அப்படிப் பேசியிருக்கக்கூடாதுன்னு ஒரு குற்றவுணர்ச்சி அப்பப்ப எழும். நல்ல மனுஷன். அவர்கிட்ட பழகுற சந்தர்ப்பம் இல்லாமலே போச்சிது” என்றான் வருத்தமாய்.

“உங்க ஒய்ஃப்கு உங்கமேல நிறைய நம்பிக்கை இருக்கு. அதை கடைசிவரைக் காப்பாத்துங்க. நாங்க கிளம்புறோம். போகலாமா நதி?”

“போகலாம்ங்க. சாரி சித்தார்த். கொஞ்சம் பேசிட்டேன்” என்றாள் வருந்திய குரலில்.

“நீ அடிச்சா கூட தப்பில்லை நட்சத்திரா. நான் அந்தளவுக்கு கொடுமைப்படுத்தியிருக்கேன்” என்றான்.

“அந்தக் கொடுமையெல்லாம் எங்க வெண்மதி திருப்பித் தருவா அண்ணா. உங்கமேல உள்ள நம்பிக்கையில்தான் உங்க சார்பா கேஸ் எடுத்தேன். அவளுக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு. அதைக் காதலா மாத்துறது உங்க சாமர்த்தியம். நாங்க வர்றோம்” என்று மூவரும் கிளம்ப, கதவைத் தாளிட்டு உள்ளே வந்த சித்தார்த்திற்கு, மலைபோல் மனதிலிருந்த பாரம் மனைவியின் வார்த்தையில் மணலாய் சரிய, ஆர்வமாய் அவளைக் கண்டான்.

அவன் பார்வை உணர்ந்து, “அண்ணி சொல்ற மாதிரிலாம் எனக்கு உங்களைப் பிடிக்கலை. நியாயம்னு தோன்றியதைப் பேசினேன். அவ்வளவுதான்!”

“பரவாயில்ல நான் ஐ லவ் யூ. நீ மட்டும் அதைச் சொல்லிராத” என்றான்.

“சொன்னா என்ன செய்வீங்களாம்?”

“சொல்லாதேன்னு சொன்னா சொல்லாதேதான். சொன்னா என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது” என்றான் குரலை உயர்த்தி.

“நான் சொல்வேன்” என்று அவளும் குரல் உயர்த்த,

“நீ ஐ லவ் யூ சொல்லவே கூடாது சொல்லிட்டேன்.” பதிலுக்கு அவனும் கத்தினான்.

“ஐ லவ் யூ! ஐ லவ் யூ! ஐ லவ் யூ! ஆயிரம் முறை சொல்வேன். என்ன செய்ய முடியும் உங்களால?” என்று வேகத்தில் உணராது கத்தினாள்.

கோவத்தில் முகம் சிவக்கத் தான் சொன்னதை உணராது நின்றிருந்த மனைவியின் அருகில் வந்து, “என்ன செய்வேன்னா கேட்ட? நானும் ஐ லவ் யூ சொல்லி...” பேசிக்கொண்டே ஒரு கையால் அவளை தன்னுடன் அணைத்து, மறு கையை கூந்தல் நுழைத்து, மதியவளின் மதிமுகம் தனை அருகில் இழுத்து, இதழோடு இதழ் சேர்த்து அழுந்த ஒரு முத்தம்!

அதிர்ந்து! தெளிந்து! முறைத்து! கடைசியில் முத்தத்தின் பிடியில் அவனுடன் தானும் சிறிது சிறிதாகக் கரைய “ஐ லவ் யூ வெண்மதி” என்ற கிசுகிசுப்பான வார்த்தைகள் அவள் காதோரம் கேட்டது.

அதை ரசித்தாளோ! கண்மூடிய நிலையிலேயே, “ஐ ஹேட் யூ” என்ற வார்த்தை அவளிடமிருந்து மென்மையாக வர, “நானும்” என்று இன்னும் இறுகக் கட்டிக்கொண்டான்.

“நிஜமாவே என்னை லவ் பண்றீங்களா?”

அவளைத் தன்னிடமிருந்து விலக்கி முகம் நிமிர்த்தி அலைபாயும் கண்களுள் தானும் பாய்ந்து, “என்மேல நம்பிக்கையில்லையா? நான் உன் அத்தான் வெண்மதி.”

“இருந்தாலும் பயமாயிருக்கு.”

“ஏன்டா?”

“தெரியலைங்க.”

“உன்னை லவ் பண்றதா சொன்னது வெறும் வாய் வார்த்தையில்லை. உள்ளத்திலிருந்து உணர்ந்து சொல்றது. அந்த வார்த்தையை விளையாட்டுக்குப் பயன்படுத்துற அளவு.. நான் பக்குவம் இல்லாதவன் கிடையாது. சரி உன் பயம் போக நான் என்ன செய்யணும்?”

“ஜட்ஜ் கொடுத்த ஒன் மன்த் நாம ஃப்ரண்ட்ஸ். நம்மை நாமே புரிஞ்சிக்க.. தாம்பத்தியம் தவிர்த்த மீதி நாட்கள்.”

“அப்புறம்?”

“அப்புறம் ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்.”

“என்னை... சாரி இந்தக் கருங்குரங்கைப் பிடிச்சிருக்கா?”

“ஹையோ அதெப்படி உங்...” அவளை முடிக்க விடாது, “தெரியும். லாயர் உங்க வீட்டுக்கு வந்தப்ப உள்ள அனைத்தும் நானறிவேன். காதல்ன்ற மாயவலையில் சிக்கியிருந்த என்னை, நீ பேசிய வார்த்தைகள்தான் உண்மையை உணர்த்தி யோசிக்க வச்சது வெண்மதி.”

“நீங்க யோசிச்ச லட்சணம்தான் கடத்தினதிலேயே தெரியுதே.”

“பொண்ணு மாறிருச்சோன்னு அப்பவே எனக்கு சந்தேகம்தான். அது எவ்வளவு அழகான தவறுன்னு இப்ப உணர்ந்தாலும் வருத்தம் கிடையாது. அதே டைம் உன்கிட்ட மன்னிப்பு கேட்கமாட்டேன். வேணும்னா தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்” என்றான்.

“நானும் தேங்க்ஸ் உங்களோட அழகான தவறுக்கு” என்று அவன் நெற்றித் தளும்பைத் தொட்டுப்பார்க்க,

“நீதான்னு தெரியும்” என்று மனைவியின் அசட்டு முகச்சுளிப்பில் சிரித்தபடி கட்டிக்கொண்டு, நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

இருவேறு இதயங்கள் ஒரே நேர்கோட்டில் நடையிடத் துவங்கியதோ! கடவுளின் ஆசி அவர்களுக்கு என்றும் இருக்கட்டும்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
“ஒரு மாசம் அவங்களுக்கு அதிகம் இல்லையா நதி?”

“ஆமா கொடி. என்னமா சப்போர்ட் பண்றா. உங்கண்ணா இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லியிருந்தா நம்ம மேலயே பாய்ஞ்சிருப்பா போல. எப்படி இருந்தவ?” திருமணத்தன்று சில நிமிடங்கள் தங்கையிடம் பேசியபொழுது...

“அக்கா அவன் மனுஷனே இல்லக்கா. உன்னை சின்னப் பொண்ணுன்னு பார்க்காம என்ன செய்தான். அதான் அவன் நெற்றியைப் பதம் பார்த்தேன்.”

“அது நீ எறிஞ்சதாலயா? நான்னு நினைச்சேன்.”

“உன்னோட ஸ்பீட் அளவு தெரியாதா” என்று அக்காவின் கால்வாரி அவள் முறைப்பைக் காணாது, “அவனை எனக்குச் சுத்தமா பிடிக்கலக்கா. அவனைப் பார்த்தாலே நாம கஷ்டப்பட்டதுதான் ஞாபகம் வருது. அப்புறம் எப்படி அவனோட வாழ்றது? டைவர்ஸ் பண்றதுதான் என் முதல் வேலை” என்று அன்று கோவத்தில் புலம்பியவள் இன்றோ, ‘நம்ம உறவுக்காரங்க தப்புப் பண்ணமாட்டாங்களாம்!’ புன்னகை மட்டுமே நட்சத்திராவிடம்.

“என்ன நதி உலகத்தை நினைச்சியா? இல்ல உன் தங்கையை நினைச்சியா?”

“ரெண்டையும்தான். என் முகத்தைப் பார்க்காம வண்டி எடுங்க.”

நட்சத்திராவை வீட்டில் விட்டு வேலை இருப்பதாகச் சொல்லி இருவரும் கிளம்ப தலையசைத்து அவர்களுக்கு விடைகொடுத்து உள்ளே வந்தவளிடம் “வெண்மதி எப்படியிருக்கா நட்சத்திரா? அவங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையில்லையே?” என்றார் பாக்கியவதி.

“இதுவரை இருந்தாலும் இனிமேல் இருக்காது பாட்டி. ஒருத்தருக்கொருத்தர் கேர் எடுத்துப்பாங்க. ஆமா பாட்டி. அந்த நதீராவை நீங்க பார்த்திருக்கீங்களா? எப்படி இருப்பாங்க? இந்த கொடி போட்டோ கூட காண்பிக்கலை” என்று குறை சொல்வது போல் போட்டு வாங்க,

“நதீரா யார்னு உனக்குத் தெரியாதா? உன் புருஷன் இன்னும் சொல்லலையா?” காஃபியுடன் வந்த சகுந்தலா மருமகள் கையில் கொடுத்தபடி கேட்க,

“எங்க கல்யாணத்தில் நிறைய குழப்பம் இருக்கு அத்தை. நதீரான்னு கல்யாணத்துக்கு முன்தினம் அறிமுகமானவங்க பேரு வேற. உங்க பையன்கிட்ட கேட்டா வீட்ல வந்து சொல்றேன் சொல்றாங்க. கொடி என்னடான்னா எனக்குத் தெரியவே தெரியாது சொல்றா. உங்களுக்காவது தெரியுமா? எதுவா இருந்தாலும் சொல்லுங்க அத்தை. யார் நதீரா?”

குழம்பித் தவிக்கும் மருமகளிடம் உண்மை சொல்ல முடியாதளவு மகன் செய்திருக்கும் குழப்பங்கள் புரிய, “அவன் வந்ததும் உன் மனசுல பட்டதைக் கேளுமா. உங்களுக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருக்கிறது வாழ்க்கைக்கு நல்லது” என்றார்.

“வந்ததும் கேட்கிறேன் அத்தை” என்றதோடு முடித்துக்கொண்டாள்.

“சரிமா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. உங்கம்மா போன் பண்ணியிருந்தாங்க. ஐந்து மணிக்கு இங்க வர்றாங்களாம்.”

“இப்பவே டைமாகிருச்சி. நான் கொஞ்ச நேரம் கல்யாண வீடியோ பார்க்கிறேன் அத்தை” என்று திருமண காணொளியை அங்கிருந்த தொலைக்காட்சியில் போட, அவர்களின் பெயரைத் தொடர்ந்து காணொளி தயாரித்த நிறுவன விளம்பரம் முடிந்து, மண்டபத்தின் வாயிலில் தன் அப்பா, அம்மா, சித்தி குடும்பம், அத்தை குடும்பம் என அரிச்சந்திரனை ஆரத்தி எடுத்து வரவேற்றது கண்ணில்பட அதிர்ந்துதான் போனாள்.

திருமணத்திற்கு முந்தின தினம், “நதிமா கொஞ்சம் வெளில போயிட்டு வர்றோம்” என்ற தாயிடம்,

“ம்மா... சந்துரு கல்யாணத்துக்குப் போகலையா? இந்த நேரத்துல எங்க கிளம்புறீங்க?” என கேட்டிருந்தாள்.

“ஒரு அர்ஜெண்ட் வேலைமா. அரைமணி நேரத்துல வந்துருவோம். நீ பத்திரமா இரு.” வெளியே சென்று கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து வந்தது தற்பொழுது நினைவு வர, ‘இதற்காகத்தான் சென்றார்களா? ஆனால், ஏன்? நதீரா குடும்பம் எங்கே? இல்லை என் சந்தேகம் சரியா?’ கேள்வி மனதில் ஓட, டிவியில் கேமராவும் நகர்ந்து அந்த ப்ளக் போர்டை கவர் செய்ய, சட்டென்று எழுந்து நின்றுவிட்டாள்.

அரிச்சந்திரன் எம்.ஏ பி.எல், வெட்ஸ் நட்சத்திரா எம்.சி.ஏ! ‘என்னிடம் காலையில்தானே சம்மதம் வாங்கினாங்க. இது எப்படி? கல்யாணம் நடக்கப்போறது பொண்ணுக்கும், பையனுக்கும் தெரியாது. ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்கப்போறோம்.’ மின்னல் சொன்னது காதில் விழுந்தது.

மாமியார் சொன்ன பதிலிலேயே அவர் எதுவும் சொல்லமாட்டார் என்று உணர்ந்து தன்னுள் எழுந்த கோவத்தை மறைத்து, “அத்தை கொஞ்சம் வெளியில போயிட்டு வர்றேன்” என்று தன் அறைக்குச் சென்று ஸ்கூட்டி சாவியை எடுத்து ஐந்து நிமிடத்தில் தாய்வீடு வந்து சேர்ந்தாள்.

“ஹேய் நதிமா வா வா. நான் உங்க வீட்டுக்குதான் கிளம்பிட்டிருந்தேன். உன் மாமியார்கிட்ட போன்ல சொல்லியாச்சி. வா அங்க போயி பேசிக்கலாம்” என்றார் யசோதா.

“அங்க போயி பேசுறது இருக்கட்டும்மா. எங்க கல்யாணம் திடீர்க் கல்யாணமா? இல்ல பத்திரிக்கை அடிச்சி ஊரறிய நடந்த கல்யாணமா?” தாயை தீர்க்கமாகப் பார்த்துக் கேட்க,

‘ஆண்டவா! தெரிஞ்சிருச்சா? இவள் குரலே சரியில்லையே. இந்நேரம் பார்த்து இவள் அப்பா வேற வெளியில போயிருக்காங்க. என்ன சொல்லி சமாளிக்கிறது?’

“எப்படிடா இவளைச் சமாளிக்கிறதுன்னு காரணம் தேடுறீங்களாம்மா?”

“நதிமா அ...அது...”

“உண்மை மட்டும் வேணும்” என்று பிடிவாதமாய் நிற்கும் மகளைப் பீதியுடன் பார்த்தவர், “அது நதிமா உங்க இரண்டு பேருக்கும் தெரியாம, சர்ப்ரைஸா இந்தக் கல்யாணம் நடக்கணும்னு உன் மாமனார் சொன்னதால மறைச்சிட்டோம்” என்று உண்மையைச் சொன்னார்.

“அன்னைக்கு கோவிலுக்கு இரண்டு குடும்பமும் வந்தது யதேச்சையா கிடையாதா? அதுவும் உங்க ப்ளானா?”

“அ...அது பத்திரிக்கை வச்சி சாமி கும்பிடுறதுக்காக...” என்று இழுத்தார்.

“அப்ப நதீரா யார்னு உங்களுக்குத் தெரியும்?” என்றவள் குரலில் ஒரு அழுத்தம்.

“எ...எனக்கெப்படி தெரியும்? அதெல்லாம் யாருன்னு தெரியாது” என்றார் வேகமாக.

“ஓ... உங்களுக்குத் தெரியாது” என நம்பிக்கையில்லா குரலில் கூறி, “அப்ப அந்தப் பொண்ணு நிலை? ஏன் முந்தின நாள் வரை அவங்க இரண்டு பேருக்கும்தான் கல்யாணம்னு சொன்னீங்க? நீங்க பரவாயில்லை. உங்க மருமகன்...” என நிறுத்தி, “இன்னொரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்து, அதுல நான் எப்படிம்மா சுகமா வாழ முடியும்?” என்றாள்.

“அந்தப் பொண்ணுக்குக் கல்யாணமாகிருச்சி நதி.”

“உங்களுக்கு எப்படித் தெரியும்? இப்பதான் நதீரா யார்னு தெரியாது சொன்னீங்க?” என்று தாயை மடக்கினாள்.

“தெரியாம சொல்லிட்டேன்டி.” ‘என்னை விட்டுவிடேன்’ என்ற முகபாவம் அவரிடம்.

“இப்பத் தெரிஞ்சே சொல்லுங்க. நதீரா யாரு? அவளுக்குக் கல்யாணமாகிருச்சின்னு உங்களுக்கு யார் சொன்னது?”

“வக்கீல் மாதிரி குறுக்கு விசாரணை பண்ணாதடி. உன் புருஷன்தான் வக்கீல். நீ கிடையாது” என்றார் வேகமாக.

“பேச்சை மாத்தாம நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்கம்மா?”

“அ...அது நீ என்னை ரொம்ப கேட்டுக் குழப்புற. அப்பா இப்ப வந்துருவாங்க. அவங்ககிட்டயே கேளு” என்றவருக்குப் பதற்றம் மட்டுமே.

“ஏன்மா எதாவது உளறிருவோம்னு பயப்படுறீங்களா?” என்றாள் அவளும் விடாது.

“யார் யார்கிட்ட பயந்துட்டு இருக்கா?” என்று கேட்டபடி நந்தகுமார் வந்தார்.

‘தெய்வமே வந்துட்டீங்களா?’ என்ற எண்ணம்தான் யசோதாவிற்கு. “வாங்கங்க. போன வேலை நல்லபடியா முடிஞ்சுதா” என்று அளவிற்கு அதிகமான பாவத்துடன் கேட்க,

மனைவியின் அதீத கவனிப்பில் “யசோ என்ன வித்தியாசமா பிஹேவ் பண்ற?” என்றார் புருவ சுளிப்புடன்.

“அது நெஞ்சம் முழுக்க பயம்ப்பா. எங்க உண்மையை உளறிடுவோமோன்னு திணறிட்டு இருக்காங்க. நீங்க வரவும் எஸ்கேப்பாகுறாங்க. நீங்க சொல்லுங்கப்பா? நதீரா யார்னு உங்களுக்குத் தெரியுமா?” என கேட்டாள்.

“நீ சொல்லிதான்மா எங்களுக்கேத் தெரியும். நீயே எங்ககிட்டக் கேட்கிற? என்னாச்சி எதாவது பிரச்சனையா?” என்றார் நிதானமாக.

அசராமல் தனக்குப் பதிலளிக்கும் தந்தையை சற்று நிதானித்துப் பார்த்து, “எனக்கு நீங்க சின்ன வயசுலயே காது குத்திட்டீங்கப்பா. ஏன் என் கல்யாணத்தை என்கிட்ட இருந்து மறைச்சீங்க?”

“சஞ்சித் சாகுறதுக்கு முன்ன சொன்னதுதான் நதிமா. உனக்குப் பிடிச்சவன் கையால தாலி வாங்கும்போது, உன் முகத்துல பார்க்கிற அந்த சந்தோஷத்தை அனுபவிக்கணும். அதனால நதி கல்யாணத்தை சஸ்பென்ஸா வைக்கணும் சொல்வான்.”

“ஓ... அது இருக்கட்டும்பா. நதீரா யார்னு சின்னதா ஒரு குழப்பம். நீங்க சொல்லுங்க. யார் அது?” என்றாள் திரும்பவும்.

“சாரிமா. அதை நீ மருமகன்கிட்ட கேட்டுக்கோ” என்றார் உண்மையை உரைக்காது.

“ஏன் நீங்க சொல்லமாட்டீங்களா?”

“ம்கூம் மாட்டேன்.”

“சரிப்பா நானே கேட்டுக்கறேன். பை” என நடக்க ஆரம்பிக்க,

“நதிமா. நதீ...” அப்பாவின் அழைப்பினில் திரும்பாமல் அப்படியே நிற்க, “என் பொண்ணு எதையும் ப்ராக்டிகலா யோசிச்சி முடிவெடுக்கத் தெரிஞ்சவள்ன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றார்.

“நம்பிக்கைக்கும், நம்பிக்கைத் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்குப்பா.”

“நதிமா...” என்றவர் குரலில் ஒரு தயக்கம்.


“போதும்பா. வாழ்க்கையை அதன் போக்குல விட்ரணும். எதையும் தலையில தூக்கி வைக்கக்கூடாதுன்னு சொல்லிக் கொடுத்தது நீங்க. இதுவரை அதன்படிதான் நடந்துட்டிருக்கேன். ஆனா, எல்லா விஷயத்தையும் தட்டிவிட்டுட்டுப் போக முடியாதில்லையா. எனக்காக இந்த வீட்டுக் கதவு எப்பவும் திறந்திருக்கும் என்ற நம்பிக்கையில், நானே பார்க்காத என் கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துட்டுப் போறேன்” என்று அங்கு இருந்த பத்திரிக்கையை எடுத்து ஸ்கூட்டியில் கிளம்ப, பெற்றவர்கள் இருவரும் அதிர்ந்து நின்றுவிட்டார்கள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top