• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
25


“இதே அலறல்தான் சுற்றிலும். அதுவரை பயமில்லாத பொண்ணு வீட்டுக்காரங்க என்னை பயத்தோட பார்த்ததும் எனக்கு இன்னும் குஷியாகிருச்சி. அப்படியே மிரண்டு நின்ன பொண்ணுகிட்டப் போயி, நாளைக்கு நாங்க வர்றப்ப நீ எங்களோட வர்ற. நீ என் பொண்டாட்டின்றதை மறந்து உன் அப்பா பின்னாடி போன, ஒரே வெட்டுதான்னு அருவாளை அவள் அப்பாவை நோக்கி ஓங்கினேன்.”

“இல்ல வேண்டாம். அப்பாவை எதுவும் பண்ணாதீங்கன்னு கத்தினா. இது.. இந்த பயம் எப்பவும் இருக்கணும். உன் அப்பா, அம்மா எல்லாரும் உயிர் வாழணும்னா நீ என்னோட வரணும். சரியா? சரின்னு சொல்லுன்னு அதட்டல் போடவும், சம்மதமா தலையாட்டிட்டு அழ ஆரம்பிச்சிட்டா. நாளைக்கு நான் வரும்போது தயாரா இருக்கணும். இல்லன்னு வையி... நீ எந்த ஊர், எந்த மாநிலம் போனாலும், ஏன் வெளிநாடே போனாலும் தேடிக் கண்டுபிடிச்சி இழுத்துட்டு வந்திருவேன்னு மிரட்டினதுல ரொம்பவே மிரண்டுட்டா.”

“அவள் அப்பாகிட்ட திரும்பி, மாமா திரும்பவும் சொல்றேன். எங்க போனாலும் விடமாட்டேன். என்னை அடிச்சி அவமானப்படுத்தாம இருந்திருந்தா விட்டுருப்பேனோ என்னவோ! ஆனா இப்ப.. உங்க பொண்ணு மேல உள்ள ஆசையையும் தாண்டி, என் கௌரவம் பெருசா தெரியுது. நான் பட்ட அவமானத்துக்கு உங்க பொண்ணு மட்டும்தான் பதில். ஏய் பொண்டாட்டி! நாளைக்கு வர்றேன்னு சொல்லி அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போயிட்டேன்.”

“அவங்க போனதும் ஒரு நிம்மதி எழுந்தாலும் அந்த அடியாளுங்க அங்கிருந்து நகரல. எல்லாருக்குள்ளயும் பயம் பயம் மட்டும்தான். என் பொண்ணை எப்படிப் பாதுகாக்கப் போறேன்னு தெரியலையேன்னு அப்பா அம்மாவுக்கு வேதனை.”

“அப்புறம் அப்பா சித்தப்பாகிட்டப் பேசி ஸ்கூலையும், நிலத்தையும் ஆள் வச்சி பார்த்துக்கச் சொன்னாங்க. பொறுப்பைச் சித்தப்பா பார்த்தா ரெண்டு பேருக்கும் சம்பந்தம் இருக்குன்ற கணக்குல, அவங்க குடும்பத்துக்கு பிரச்சனை வரக்கூடாதுன்ற எண்ணம்தான். அப்படியே ஸ்கூல் பிரின்ஸிபால்கிட்டயும் பேசி.. தேவைக்கு பணம் எடுத்துட்டு எங்க போறோம்னு கூட சொல்லாம நைட்டோட நைட்டா ஊரைக் காலி பண்ணிட்டு நார்த் சைடு அப்பா ஃப்ரண்ட் வீட்டுக்குப் போயிட்டோம்.”

“சித்தப்பா இறந்தது தெரியாது. ஒருவேளை அப்பாவுக்குத் தெரிஞ்சிருக்கலாம். சித்தார்த்னால பிரச்சனை வரும்னு போகாம இருந்திருக்கலாம். இல்ல யாருக்கும் தெரியாம பார்த்துட்டு வந்திருக்கலாம். நான் எம்.சி.ஏ படிக்கிற டைம்லதான் சென்னை வந்தது.”

“தமிழ்நாடு வந்து வருஷம் ஆகியும் அம்மாவுக்கு பயம். அதனால காலேஜ்ல தொடங்கி எங்க போனாலும் முக்காடு மாதிரி துப்பட்டாவை சுத்தி போட்டுட்டுப் போகணும். கோவிலுக்குக் கூட நிம்மதியா போகமுடியாத நிலை. அப்படி இருந்தும் என்னைக் கண்டுபிடிச்சிட்டான்.”

“மறுநாள் காலையில அத்தை வீட்டுக்கு மேளதாளத்தோட போனா அங்க யாருமே இல்லை சிஸ்டர். அத்தை மாமாவோ நாங்க தூங்கிட்டோம். நைட்டோட நைட்டா எங்க போறோம்னு சொல்லிட்டுப் போகல. ஏன் போனைக்கூட வச்சிட்டுப் போயிட்டாங்கன்னு சொன்னாங்க. அவங்களை ஓரளவுக்கு மேல மிரட்டவும் மனசு வரல.”

“சுத்திலும் விசாரிச்சியும் பிரயோஜனம் இல்லாமல் போக, எப்படியும் சொந்த ஊருக்கு வந்துதான ஆகணும்னு நட்சத்திரா ஊருக்குப் போய் அவங்க ஸ்கூல் முதற்கொண்டு விசாரிச்சும் எதுவும் தெரியல. ஒரு குடும்பத்தை அதுக்காகவே அந்த ஊர்ல குடிவச்சோம். அவங்க எங்களை ஏமாத்தின கோவம் ஆத்திரமா மாறி, அவளைத் தேடிப்பிடிச்சி கூட்டிட்டு வந்து போன கௌரவத்தை மீட்டெடுக்க முயற்சித்தேன்.”

“அன்னைக்கு மகாபலிபுரத்துல எதேச்சையாதான் பார்த்தேன். அந்தப் பொண்ணு என்னைப் பார்த்துட்டுத் திரும்பவும், நமக்கு தெரிஞ்ச பொண்ணோன்னு விசாரிக்க அவள் பக்கத்துல போனா என்னைப் பார்த்ததும் ஓடினா. அப்பதான் மனசுல ஒரு சந்தேகம் இது அவளோன்னு. அதை அவள் ஊர்ஜிதப்படுத்தினா. உண்மையிலேயே அவள் என்னைப் பார்த்து ஓடலைன்னா அவளைக் கண்டுபிடிச்சிருக்கிறது ரொம்பக் கஷ்டம். அப்ப சின்னப்பொண்ணு. இப்ப அப்படியிருக்க சான்ஸ் இல்லைன்னு நமக்குத் தெரியாதா என்ன?”

மின்னல் பெண்ணோ பல்லைக்கடித்து, “இந்த நதியே போய் வான்டடா நான்தான்னு மாட்டிட்டு, என்கிட்ட நிறைய சொல்லி... ஹ்ம்ம் வரட்டும் பார்க்கிறேன்” என்றவள், “இருந்தாலும் உங்க கதை ஓகேதான்” என்றாள் விஷமத்தனமாக.

“என்ன செய்து என்ன புண்ணியம். ஒரு ராட்சஷிகிட்ட வந்து மாட்டிக்கிட்டேனே” என்று வெண்மதியைப் பார்த்தபடி சொல்லி, “அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் எந்தப் பொண்ணையும் சைட்டடிச்சதில்லமா. என் சார்ந்த பெண்கள்கிட்ட கேட்டுப் பாருங்க. அவங்க வீட்ல என்னோட தனியா அனுப்புற அளவுக்கு நம்பிக்கை என்மேல.”

“அதுக்குக் காரணம் சின்ன வயசுல நான் பண்ணின கல்யாணம். சாரி கல்யாணம்னு சொல்லக்கூடாது. நான் செஞ்ச அந்த கூத்துதான். சரியோ தப்போ அந்தச் சம்பவம் என்னைத் தப்பான வழியில போகவிடல. நமக்கு கல்யாணமாகிருச்சின்னு ஒரு எண்ணம் மனசுல இருந்ததால, நான் பொறுப்பா இருந்தேன்னும் சொல்லலாம். அதுக்குப் பின்னாடிதான் நண்பர்கள் பேச்சைக் கேட்கிறதை விட்டுட்டு, எதையும் யோசிச்சி செய்ய ஆரம்பிச்சேன்.”

“நினைக்கிறதெல்லாம் நடந்திருமா என்ன? நினைக்காதது நடந்திருக்கு. அதை தவறவிடாம பிடிச்சிக்கணும்னு மனம் முழுக்க ஆசையும் இருக்கு” என்றான் மனைவியவளைக் கண்களால் களவாடியபடி.

“வெண்தியை சித்தார்த் மேரேஜ் பண்ணினதைப் பற்றி என்ன நினைக்கிற நதி?”

“அது தப்புதானங்க. அதென்ன எப்பப்பாரு பொண்ணு சம்மதம் இல்லாமல் தாலி கட்டுறது. தாலின்னா விளையாட்டுப் பொருளா. நல்லா நாலு வைக்கிறதை விட்டுட்டு பேசிட்டிருக்கீங்க?”

“அப்புறமா வைக்கலாம். நான் அவங்களுக்கு டைவர்ஸ் வாங்கித் தர்றேன்னு கேஸை எடுக்கிறதா சொன்னதும் எல்லாரும் விஷ் பண்ணாங்க. உன் முகம் மட்டும் ஏன் ஒரு மாதிரியாகிருச்சி? அப்ப இந்தக் கல்யாணத்துல இஷ்டம்னுதான அர்த்தம்.”

“அ...அதுங்க முதல்முறையா தனி கேஸ் எடுத்து வாதாடப் போறீங்க. அப்படி இருக்கிறப்ப முதல் கேஸே விவாகரத்துன்னதும் மனசுக்கு கஷ்டமா இருந்திச்சி.”

அவளை மெல்ல தோளோடு அணைத்து, “அப்படின்னா அவங்களைச் சேர்த்து வச்சிருவோமா?” கண்சிமிட்டிக் கேட்டான்.

“அச்சோ! அதெப்படிங்க முடியும்? அவன் நல்லவன் இல்லையே. அன்னைக்கு அப்பா கழுத்துல அருவாளை வச்சது இன்னமும் நினைவில் இருக்குது.”

“அது எமோஷனல்ல பண்ணினதுமா. இப்ப வயசுக்கேத்த பக்குவம் வந்திருக்கலாம். எப்பவும் ஒருத்தன் தப்பானவனா இருக்கணும்னு அவசியமில்லையே?”

“அப்ப இன்றைக்கு நடந்ததுல எந்த வகையில் அவன் நல்லவனாகிட்டான்? இந்நேரம் வெண்மதி இடத்துல நான் இருக்க வேண்டியது. கடவுளே! நினைச்சாலே மனசெல்லாம் பகீர்னுது. அப்படி நடந்திருந்தா செத்தே போயிருப்பேன்ங்க” என்றவள் உடல் நடுங்கினாலும் குரல் உறுதியுடன் ஒலித்தது.

“நதி! அப்படி நடக்க நான் விட்டுருவேனா” என்றவனுக்குள் ‘அப்ப சஞ்சித்தை திருமணம் செய்திருந்தாலும் இதே எண்ணம்தானே இருந்திருக்கும். சஞ்சித் இப்ப உயிரோடு இருந்திருந்தா என் நதி நிலைமை? அவள் உலகில் இல்லை’ என்ற உண்மை உரைக்க, மனம் துடிக்க அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

கணவனின் திடீர் அணைப்பில் புரியாது பார்க்க. “நீ எனக்குன்னு இருக்கிறப்ப, உன்னை எதுவும் அண்ட விடமாட்டேன்” என்று உச்சியில் இதழ் பதித்தான்.

கணவனின் முதல் முத்தம் கண்மூடி அதை மனதில் பூட்டி வைத்து தலை நிமிர்ந்து அவன் கண்கள் காண, “என்னடா?” என்றான்.

“தேங்க்ஸ். அப்ப சஞ்சித்தை எப்படி கல்யாணம் பண்ணியிருப்பன்னு கேட்காம இருந்ததுக்கு. இன்னொரு தேங்க்ஸ்.”

“இன்னொன்னு எதுக்குமா?”

“கடைசி நிமிஷம் வரை மனம் மாறாம இருந்திருந்தா, என்னோட முடிவு மாறியிருக்...” சட்டென்று அவள் வாய்மூட, தான் நினைத்தது சரிதான் என்றதும் சொல்ல முடியா வேதனை மனதிற்குள்.

அவன் கையை விலக்கி, “ஏனோ தெரியலங்க. உங்களைத் தவிர என்னோட யாரையும் சேர்க்கத் தோணலை. நம்ம கல்யாணம்! உங்களோட இந்த அணைப்பு, எல்லாம், எல்லாமே கனவோன்னு இருக்கு. கனவுன்னா கலைஞ்சிரும்ல? கலையக்கூடாதுன்னு மனசெல்லாம் அடிச்சிக்குதுங்க” என்றாள்.

“இது நிஜம் நதி. உன் சந்துருதான் உனக்கு கணவன். கனவு இல்லைன்னு நிரூபிக்கவா?

“எப்படி?” என்றாள் பார்வை மாறாது.

“ம்... எப்படி?” யோசிப்பதுபோல் செய்து, தன் வலது கையால் அவளின் கண்மூடி, “இந்த லிப்ஸ்டிக் ஒட்டுமா?” என கேட்டான்.

“ஒட்டாது. ஏன் கேட்குறீங்க?”

“இல்ல நதி. சில நிஜங்களை உணர வைக்க அடையாளம் வேணுமேன்னு பார்த்தேன். ஹ்ம் அடையாளம் தெரியாது போலயே!” என்றான் சலிப்பாக.

“எ... என்ன நிஜம்?” அவளோ ஹஸ்கியாகக் கேட்க,

மெல்லக் குனிந்து அவள் இதழில் இதழ் பதித்து மூடிய கண்களிலிருந்து கையை எடுக்க, நம்பமுடியா பார்வையை கணவனிடம் செலுத்துகையில் உடலில் தோன்றிய உணர்வுகள் அதை உண்மையென்று பரைசாற்ற, கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வுகளுக்குள் தொலைந்து கரைந்து காணாமல் போனாளோ!

அவ்விடத்தில் நாமும் கண்மூடிக் கொள்வோம்!

கனவென்னும் மாய வலைக்குள் அவள் முழுவதுமாக சிக்கியதைக் கண்டு புன்னகைத்தான் அரிச்சந்திரன்.

அடுத்து நடந்த அனைத்திலும் திருமண வரவேற்பு உட்பட அவள் அவளாக இல்லாமல் போக, கேலி செய்தே அவளை ஒரு வழியாக்கினார்கள் இளையவர்கள்.

வரவேற்பு முடிந்து மற்ற ஏற்பாடுகள் அனைத்தும் அந்த மண்டபத்திலேயே செய்திருந்ததால், நெருங்கிய உறவுகளைத் தவிர அனைவரும் சென்றிருந்தனர்.

நட்சத்திராவிடம் வந்த பாக்கியவதி அவள் முகம் வருடி திருஷ்டி கழித்து, “ரொம்ப சிரமத்துக்குப் பிறகு உங்க கல்யாணம் நடந்திருக்குமா. நீங்க காலத்துக்கும் நல்லாயிருக்கணும்” என்றார்.

நட்சத்திரா அவரைக் குழப்பமாக நோக்கினாலும், திருமணத்தில் நதீராவால் நடந்த பிரச்சனைகளைச் சொல்கிறார் போலும் என நினைத்தாள். நினைத்ததை வெளியே கேட்டிருக்கலாம். கேட்டிருந்தால் அவள் கணவனுடன் சேர்த்து, இரு குடும்பங்களும் செய்த தகிடுதத்தங்கள் தெரிந்திருக்கும். நட்சத்திரப் பெண்ணவள் எரிநட்சத்திரமாக மாறும் விந்தையும் நடந்திருக்குமோ! எதிர்பார்ப்போம் அதையும்!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“அரியோட சேர்த்து ஆறு தலைமுறையைப் பார்த்துட்டேன்மா. ஏழாவது தலைமுறையா சீக்கிரமே ஒரு கொள்ளுப் பேரனோ பேத்தியோ பெத்துக்கொடுமா?” என்றார்.

“ஏழாவது தலைமுறையா? எப்படி பாட்டி?”

“நான் சொல்றேன்” என்று சகுந்தலா வர, மரியாதைக்கு எழுந்து நிற்கப்போனவளைத் தடுத்து தன்னருகே உட்காரவைத்து, “அத்தையோட கொள்ளுப்பாட்டி! பாட்டி! அம்மா! அத்தை! உங்க மாமா! அப்புறம் அரி! அடுத்து உங்களுக்குப் பிறக்கும் குழந்தை” என்றதும் மனம் தடுமாற தலை தானாகத் திரும்பி யாரிடமோ பேசிக்கொண்டிருந்த கணவனைக் கண்டாள்.

மனைவியவளைக் கண்டு கொண்டவன் சைகையால் என்னவென்று கேட்க, வேகமாகத் தலையசைத்துத் திரும்பிக் கொண்டாள். அவளின் வேகத் தலையாட்டலே அரிச்சந்திரனை அவளை நோக்கி வரவைத்தது.

“என்ன நதிமா? நான் சொல்ற கணக்கு சரியா இருக்கா? அந்த ஏழாவது தலைமுறையைக் கொடுக்க வேண்டியது உன் கையிலதான் இருக்கு” என்றார்.

“ம்...” என்று மெல்லிய குரலுடன் தலையாட்டலையே பதிலாகக் கொடுக்க, ஓரப் பார்வைதனில் கணவனின் வருகையை உணர்ந்தாளோ! தரையில் பதிந்த பார்வை மேலே எழவில்லை

மனைவியின் அருகில் உள்ள இருக்கையில் வந்தமர்ந்து அவளின் தோளில் கைபோட, பதைத்து நிமிர்ந்து அவன் முகம் காண, அவனோ அவளைக் காணாது, “என்ன க்ரேன்மா, ரொம்ப தீவிரமா எதைப்பற்றிப் பேசிட்டிருக்கீங்க?” என்றான்.

தன் தோளில் விழுந்த கணவனின் கையை யாருமறியாமல் தட்டிவிட முயற்சித்து தோற்றுப்போய், திரும்பவும் அவன் முகம் பார்க்க, “நதி இப்ப நாம ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப். எதுக்கு பதட்டப்படுற? அமைதியா இரு” என காதோரம் மென்குரலில் சொன்னான்.

சாதாரணமாகச் சொல்லிவிட்டான் அவன். அவளோ..?

பெரியவர்கள் புன்னகையுடன் அவர்களின் விளையாட்டைப் பார்த்திருக்க, “என் கேள்விக்குப் பதில்” என மறுபடியும் ஆரம்பித்தான். ‘கடவுளே!’ என்று மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டாள் நட்சத்திரா.

“நான் அம்மா பார்த்துட்டு வர்றேன்.” எழுந்தவளின் தோளை அழுத்தித் தடுத்து ‘எங்க ஓடுற? அவங்களை அப்புறமா பார்க்கலாம். நீங்க சொல்லுங்க க்ரான்மா?” என்றான்.

“நான் என்னத்தைடா சொல்லப்போறேன். சீக்கிரம் பேரப்புள்ளையைப் பெத்துக் கொடுங்கன்றதைத் தவிர.”

‘இதுக்குதான் அந்தப் பார்வை பார்த்தாளா? அர்ஸ் அழகா ஒரு பதில் கொடு.’ மனம் சொல்ல, “அதுக்கு உங்க பேத்தி என்ன சொல்றா?” என்று மனைவியைப் பார்த்தான்.

“அவள் எப்பவோ சம்மதம் சொல்லிட்டா” என்றார் பாக்கியவதி.

“நிஜமாவா?” இன்னும் ஆழ்ந்து பார்க்க, அவன் பார்வையின் வீரியம் தாளாது கையைத் தட்டிவிட்டு அவ்விடம் விட்டு ஓடிவிட்டாள்.

“ஹேய் நதி! நானும் சம்மதம்” என்று கத்திச் சொல்ல, கணவன் குரல் காதில் விழுந்த போதிலும் நிற்காமல் மின்னலின் அருகில் சென்று அமர்ந்துவிட்டாள்.

“எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலம்மா. நீங்க எல்லாரும் என் வாழ்க்கையைத் திருப்பித் தந்திருக்கீங்க. நான் இல்லன்னா அவளோ, அவள் இல்லன்னா நானோ, வாழ்ற வாழ்க்கை நினைச்சிக்கூட பார்த்திருக்க மாட்டோம்” என்று மனதார தாய்க்கு நன்றியுரைத்தான்.

“அதுக்கு முழுக் காரணம் உன் அப்பன்தான்டா. அவன் வசதிக்கு கௌரவம் ஈகோன்னு பார்த்திருந்தா எதுவும் சாத்தியமில்லை.”

“உண்மைதான் க்ரேன்மா” என்று தூரத்தில் கைபேசியில் பேசிக்கொண்டிருந்த தந்தையிடம் வந்தவன் அவர் தோள்சாய்ந்து, “தேங்க்யூப்பா. தேங்க்யூ சோ மச்” என்று உணர்ந்து சொன்னான்.

மகனின் தோள் வருடி, “உனக்கு சந்தோஷம்தான அரி?” என்றார்.

“ரொம்பவேப்பா.”

“அதான் எனக்கு வேணும். லைஃப்ல பிடிச்ச வேலை. பிடிச்ச வாழ்க்கை எல்லாருக்கும் அமையுறதில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் உனக்கு அமைஞ்சிருக்கு. நட்சத்திரா மாதிரி பொண்ணுங்க இந்த காலத்துல கிடைக்கிறது கஷ்டம். பார்த்து புரிஞ்சி நடந்துக்க. பொண்ணைப் பற்றிச் சின்னதா சந்தேகம் வந்திருந்தால் கூட சம்மதிச்சிருக்க மாட்டேன். நீ அவளுக்கு இல்லன்னு தெரிஞ்சும் உன் வாழ்க்கையை உனக்குத் திருப்பித் தர, மின்னல்கிட்ட சண்டை போட்டா பாரு, அதுல தெரிஞ்சதுடா அந்தப் பொண்ணோட காதல். அதைவிட உன்னைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ண முடியாதுன்னு என் காதுபட சொன்னா பாரு, யாருக்குடா கிடைக்கும் இப்படி ஒரு மருமகள். உன்னைவிட அவளோட காதல் பலமடங்கு அதிகம்னு சொல்வேன். தவறவிடாமல் தாங்கிப் பிடிச்சிக்கோ அரி” என்று மகளின் கேலிக்குச் சிறிது வெட்கமும், புன்னகையும் போட்டிபோட பேசிக்கொண்டிருந்த மருமகளை வாஞ்சையுடன் பார்த்திருந்தார் ரவிச்சந்திரன்.

“கண்டிப்பா நல்லா பார்த்துக்குவேன்பா” என்றான் மனைவியின் மீது பார்வையைச் செலுத்தியபடி.

“ஹேய் கொடி! என்னடி உங்கண்ணா இப்படிப் பண்றாங்க? என் மானமே போகுது.”

“அப்படியா? எப்படிங்க போச்சி?”

“கொடி” என சிணுங்கி, “கேலி பண்ற பார்த்தியா? உன் அண்ணாதான்...”

“ஹேய் நட்டுமா நிறுத்து. அண்ணா மானத்தை வாங்குனதை அப்புறமா பார்க்கலாம். நீ ஏன்டி ஈவ்னிங்ல இருந்து ஒரு மார்க்கமா சுத்தின?”

“நானா? அப்படிலாம் இல்லையே. நான் எப்பவும் போலதான் இருந்தேன்.”

“அச்சா ஜி! நீயே பாரேன்” என்று காணொளி ஒன்றை ஓடவிட்டாள். “நதிமா காஃபி எடுத்துக்கோ” என்று யசோதா அனைவருக்கும் கொடுத்தது போல் அவளிடமும் நீட்ட, அதை வாங்கிக் குடித்தபடி, “தண்ணி ஏன்மா காஃபி மாதிரியிருக்கு?” என கேட்டாள்.

“ம்... இப்பல்லாம் தண்ணீர் டேஸ்ட் மாத்தியாச்சாம். கவர்ன்மெண்ட் அறிக்கையைப் பார்க்கலையா நீ? குடிச்சி முடிச்சிட்டு க்ளாஸைக் கொடு” என்று கடுப்பாகச் சொன்னார்.

நட்சத்திரா, “சரிம்மா” என்றதுடன் முடிந்தது அந்தக் காணொளி. அடுத்ததில் “நதி” என்று சஞ்சய் கூப்பிடக் கூப்பிடத் திரும்பாமல் போக, சஞ்சயிடம் வந்த ஆர்த்தி என்னவென்று கேட்க, “நாலைந்து தடவைக்கும் மேல நதியைக் கூப்பிட்டுட்டேன். திரும்பவே மாட்டேன்றா. நம்ம கிஃப்ட் பிடிக்கலைன்னா ரிசப்ஷனுக்குள்ள மாத்திட்டு வந்திரலாம்னு நினைச்சேன்” என்றான் குழப்பத்துடன்.

“சரி இருங்க நான் கூட்டிட்டு வர்றேன்” என்ற ஆர்த்தி “நதி” என்ற அழைப்புடன் அவள்புறம் செல்ல, நட்சத்திராவோ கையிலிருந்த கைபேசியில் கணவனின் புகைப்படத்தை வருடிக்கொண்டிருந்தாள். அவளின் தோள்தொட்டு, “நதி” என்றழைக்க,

“சொல்லுங்க சந்துரு” என்றாளே பார்க்கலாம், சட்டென்று வந்த சிரிப்பை அடக்கிய ஆர்த்தி, “நதி நான்...” என முடிக்கும் முன், “சொல்லுங்க சொன்னேன்ல சந்துரு?” என்றதும் அடக்க வழியில்லாது பெரிதாகச் சிரித்துவிட்டாள் ஆர்த்தி.

சிரிப்பு சத்தத்தில் திரும்பிய நட்சத்திரா, “ஏன் சிரிக்கிற? ஆமா சந்துரு எங்க?” என்று கேட்டதில் சஞ்சய், ஆர்த்தி தாண்டி காணொளி எடுத்த மின்னலும் சிரிக்க, “லூசாடி நீ. சந்துரு கூப்பிட்டாங்க. நான் பார்க்கிறேன் போ” என்று நகர்ந்ததுடன் அந்தக் காணொளி முடிந்திருந்தது.

அடுத்த காணொளியை தொடப்போனவள் காலில் விழாத குறையாக, “வேண்டாம் மயிலு. இதுவே ஓவர் டோஸா இருக்கு. எல்லாம் உன் அண்ணனால் வந்தது. ரெஸ்ட் எடுக்கச் சொன்னா அதை மட்டும் செய்ய வேண்டியதுதான. அதை விட்டுட்டு...”

“ஐயையோ” என மின்னல் அலற,

“ஏய் லூசு ஏன் கத்துற? நீ நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்லை” என்று வெட்கப்பட்டாள்.

“நான் எதுவும் நினைக்கலையே நட்டுமா” என்று கண்ணடிக்க,

“சீ... பே...” என தன் வெட்கம் மறைத்து தோழியின் தோளில் தலைசாய்த்து, “உன் அண்ணன் கையால தாலி கட்டிப்பேன்னு நான் நினைச்சிக்கூடப் பார்க்கலை கொடி. கனவோன்னு நினைச்சேன். அப்படி இல்லைன்னு உன் அண்ணா நிரூபிச்சிட்டாங்க. அதுக்காக உனக்கு தேங்க்ஸ்லாம் சொல்லமாட்டேன்.”

“ம்... நானும் கேட்கலை. நீ ஹேப்பியா இருக்கியே அதுபோதும் எனக்கு. அண்ணா உன்னை நல்லா பார்த்துப்பான். அவனுக்கு உன்மேல அவ்வளவு கா... அன்பிருக்கு” என்றாள் காதல் என்று சொல்ல வந்ததை மாற்றி.

“அது எனக்குத் தெரியும் கொடி. ஆனாலும், மனசுல ஒரு பயமும், சில சந்தேகமும் இருக்கு.”

“இப்ப என்ன பயம் உனக்கு? அதுதான் எல்லாம் சரியா நடந்திருக்கே?”

“அ...அது அந்த நதீரா பற்றிய பயம்தான் கொடி. அவள் திடீர்னு வந்துட்டா?”

“அவள் வரமாட்டா நதி. அவளது முடிஞ்ச அத்தியாயம். அப்படியே வந்தாலும் நீ அரிச்சந்திரன் மனைவின்றது நிஜம். உன் வாழ்க்கையை நீ வாழப்பாரு. உன் சந்துரு உனக்கு மட்டும்தான். இதை எந்த காலத்திலும் மறந்திராத.”

“ம்...”

“நல்லா ம் போடுற நட்டு. சரி என்ன சந்தேகம்?”

“அது எப்படி கேட்கிறதுன்னு தெரியலை. நான் நினைக்கிறது சரியா தப்பான்னு கூடப் புரியலை கொடி.”

“எதுவாயிருந்தாலும் கேட்டுரு நதிமா. மனசுக்குள்ள போட்டு குழப்பிக்கிட்டா டென்சன்தான் மிஞ்சும்.”


“அது சந்துருவால எப்படி நதீராவை உடனே மறக்க முடிஞ்சது? அவளுக்காக வீட்ல சண்டை போட்டு வெளிய போகக்கூட கிளம்பினாங்க. அவ்வளவு தீவிரமா இருந்தவங்க, நேத்து நைட் எங்களைச் சந்தேகப்பட்ட ஒரே காரணத்தால வேண்டாம்னு விட்டாங்கன்னா, எப்படி முடியும் கொடி? நதீராவுமே எப்படி சடனா கல்யாணத்தை நிறுத்தினாங்க? சந்துருவோட காதல் இப்படி ஒரே நிமிஷத்துல உடைஞ்சி போற அளவு பலகீனமானதா? எப்படி என்னை உடனே ஏத்துக்க முடிஞ்சது? என்னை நெருங்க டைம் எடுக்கும் நினைச்சா, இயல்பா ஹக் பண்றாங்க. கிஸ் பண்றாங்க. அவங்களை என்னால புரிஞ்சிக்க முடியலை” என்று தன் சந்தேகங்கள் அனைத்தையும் அடுக்கினாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top