- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
24
“காலையிலயே அப்பாவும் அம்மாவும் என்னைக் கூப்பிட வந்துட்டாங்க. மதியம் இருந்து சாப்பிட்டுப் போகணும்ன்றது சித்தியோட அன்புக்கட்டளை.”
“நானும் வெண்மதியும் அதுக்குள்ள சைக்கிள் எடுத்துட்டு ரௌண்ட்ஸ் கிளம்பிட்டோம். அப்ப சித்தி வீட்டுப் பக்கத்துல இருக்கிற அண்ணா வந்து, உன் அண்ணன் கோவில்ல மயக்கம் போட்டுக்கிடக்கிறான். நின்னுட்டிருக்காம சீக்கிரம் போன்னு சொல்லவும், பெரியவங்ககிட்ட சொல்லத் தோணாம கிளம்பினோம். கோவில்ல சுத்திலும் தேடிப்பார்த்தும் அண்ணனைக் காணலன்னதும் அழ ஆரம்பிக்க அப்பதான் அவன் வந்தான்.”
“எனக்கு ரொம்ப படபடப்பு ப்ளஸ் பயம் வேற. கோவில்ல ஆள்கள் இல்ல. அங்கல்லாம் செவ்வாய் வெள்ளிதான் கோவில் போவாங்க. மற்ற நாள் காலை, மாலை பூஜை நேரம் தவிர கோவில் பூட்டிதான் இருக்கும். நாங்க அப்பா பெயர் சொல்லி பூசாரிகிட்டப் பேசி சாவி வாங்கிக்கிட்டோம். நான் செய்யுறது தப்புன்னு ஒருபக்கம் மனசாட்சி தடுக்குது. கொஞ்ச வருஷம் கழிச்சிச் பொண்ணு கேட்டு முறையா முடிக்கலாம்னு சொன்னா, ஃப்ரண்ட்ஸ் ஏற்கனவே உங்களுக்குள்ள பிரச்சனைன்னு சொல்ற. அப்புறம் எப்படி பொண்ணு தருவாங்க? நாங்க சொல்றதைக் கேளு. யோசிக்காம தாலி கட்டிரு. எல்லாம் சரியாகிரும்னு என்னை சரிகட்ட முயற்சித்தாங்க.”
“நான் படிச்சே முடிக்கலைடா. ஏன் இருபது வயசு கூட ஆகலைன்னு முடியாது சொல்லி தப்பிக்கப் பார்த்தேன். விட்டானுங்களா என்னை. அவளை விட்டா பிடிக்கவே முடியாது. அப்ப உன் காதல் பொய்யான்னு ஒரு மாதிரி ப்ரெய்ன் வாஷ் பண்ணிட்டாங்க. நான் பொய் சொல்லலன்னு அவனுங்களை நம்ப வைக்கவே, தாலி எடுக்கிற வரை போச்சிது.”
“அவனுங்களைப் பொறுத்தவரை ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சதா, அவங்க சரித்திரம் சொல்லணும்னு ஆசையோன்னு இப்பத் தோணும் சிஸ்டர். அப்படித்தான் நிறைய பசங்க இருக்காங்க. காதல்னு ஒருத்தன் வந்து நின்னா, வயசு, வேலை, குடும்பம்னு எதையும் பார்க்கிறதில்லை. காதலிச்சிட்டியா? அப்ப வா கல்யாணம் முடி. அப்படின்னு அவனுங்களே எல்லாத்தையும் முடிச்சி வச்சிட்டுப் போயிடறானுங்க. அதுக்கப்புறமான அவங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு யோசிக்கிறதில்லை. ஒருநாள் இரண்டு நாள் அவங்க உதவுவாங்க. அப்புறம்?”
“அப்புறம்தான் அவளோட அண்ணனுக்கு மயக்கம்னு சொல்லி கோவிலுக்கு வரவழைச்சோம்.”
“அவனைக் கோவில்ல பார்த்ததும் பேசாமல் போயிரலாம்னு பார்த்தா, அண்ணன்கிட்ட கூட்டிட்டுப் போறேன்னு சொன்னான். பக்கத்துல தங்கச்சியும் இருக்கிறதால தைரியமா போயிட்டோம். சாமி சன்னதிக்கு வந்ததும் இங்கதான் இருந்தான்னு எங்கிட்டச் சொல்லி, வெண்மதி நீ அந்தப்பக்கம் பாருன்னு அனுப்ப, அவளோட நானும் கிளம்பவும் என்னை நிறுத்தி, கண்மூடி சாமி கும்பிடு. உன் அண்ணன் வந்திருவான்னு சொன்னான். நானும் கண்மூடி சாமி கும்பிட...”
“கண்மூடின செகண்ட் தாலி கட்டிட்டேன் சிஸ்டர். அப்படியே போட்டோவும் ஃப்ரண்ட்ஸ் எடுத்துட்டாங்க. முதல்ல புரியாமல் முழிச்சவ தாலியைப் பார்த்ததும் அலறி அழுது கழட்டப்போக, நான் தடுத்து அவள் கையைப் பிடிச்சிக்கிட்டேன்.”
“சரியா அதே நேரம் முகிலோட, வெண்மதியும் வந்தாள். என்னடா பண்றீங்க? என் தங்கச்சியை விடுடான்னு பக்கத்துல வர, அதுக்குள்ள ஃப்ரண்ட்ஸ் அவனைப் பிடிக்கன்னு சத்தம் கேட்டு கோவில் தாண்டிப்போன சிலர் உள்ளே வரவும், சின்னது ஓடிப்போய் பெரியவங்களைக் கூட்டிட்டு வந்துட்டா.”
அவங்க வீட்ல இருந்து வந்தவங்க அதிர்ச்சியானாலும், “கல்யாணமாகுற வயசாடா என் பொண்ணுக்கு?” அப்படின்னு நட்சத்திரா அம்மா அழ, “என்ன சித்தார்த் இதெல்லாம்?” திலகவதி அத்தை கோவமா கேட்டாங்க.
“அத்தை எனக்கு இந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு. பொண்ணு கேட்டா தரமாட்டீங்கன்னு நா... நாங்களே இங்க வந்து...”
அவனை முடிக்கக்கூட விடாமல், நந்தகுமார் அவனையும் அவன் நண்பர்களையும் போட்டு அடித்து, “கல்யாணம்னா விளையாட்டுன்னு நினைச்சீங்களாடா? பொண்ணுக்கே இருவத்தோரு வயசுன்னா, பையனுக்கு குறைஞ்சது இருவத்தைந்தாவது இருக்க வேண்டாம். அப்படி என்ன அவசரம் உங்களுக்கு? படிக்கிற வயசுல காதல் கல்யாணம்னு அதுவும் பச்சப்புள்ளை கழுத்துல தாலியைக் கட்டி, உன்னை...”
“சரியான அடி சிஸ்டர். மத்தவங்க முன்னாடி ரொம்ப அவமானமா போச்சி. எங்க அப்பா, அம்மா அதுவரை அடிச்சதில்லை. ஏன் ஸ்கூல்ல டீச்சர்கிட்டயே என் பையனை யாரும் அடிக்கக்கூடாது. அவனுக்கு என்ன வருதோ அதைப் படிக்கட்டும்னு மிரட்டி வச்சிருந்த ஆளு எங்கம்மா. அடிச்சதோட இல்லாம நான் கட்டின தாலியைக் கழட்டி என் முகத்துல வீசி எறிஞ்சிட்டார்.”
“முகத்துல வீசினதால கோவத்துல திரும்பவும் இதே தாலியை அவளுக்குக் கட்டுவேன்னு சபதம் போட்டீங்கதான? அந்தத் தாலிதான இப்ப நீங்க கட்டினது. எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா? நான் வக்கீலாச்சே” என்று இல்லாத காலரை தூக்க, சித்தார்த் சட்டென்று சிரித்தான்.
அங்கே ஒருவன் இவர்கள் பேசுவதைக் கோவத்தில் பார்த்தானானால், இன்னொருத்தியோ கண்ணால் கற்களை விட்டெறிந்து அவன் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தாள். ஏற்கனவே மண்டை உடைத்துப் பழக்கமோ! ஹா... யாருக்குத் தெரியும்!
“என்ன சார் சிரிக்கிறீங்க? சரியாகச் சொல்லிட்டேனா?”
“இந்த சாரை விடலாமே” என்றவனைக் காண, “ஒருவேளை அக்கா தங்கையோட பிறந்திருந்தா தப்பு செய்ய யோசிச்சிருப்பேனோ என்னவோ!”
“அதுக்காக நான் அக்காவாக முடியாது” என்று வேகமாக சொல்லவும், சித்தார்த் புரியாது பார்க்க, “வேணும்னா அண்ணன் சொல்றேன்.” பிழைத்துப் போ என்பதுபோல் சொல்ல, அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்ததும் திரும்பவும் அவன் சிரித்தான்.
அவனை நேராகப் பார்த்து, “அக்கா தங்கைகளோடப் பிறந்தவன் தப்பு செய்யமாட்டான்னு உங்களுக்குத் தெரியுமா? இப்பல்லாம் குடும்ப அமைப்புக்குள்ள இருந்துட்டு தப்புப் பண்ணினால் யாராலயும் கண்டுபிடிக்க முடியாதுன்னு, பக்கா ப்ளானிங்ல ரெட்டை வேஷம் போடுறாங்க. என்ன அந்த மாதிரி ஆளுங்களைக் கண்டுபிடிக்க நாளாகும். என்ன ஒண்ணுன்னா சிங்கிளா வளர்ற பசங்களோட கம்பேர் பண்ணும்போது, அவங்க கொஞ்சம் கம்மிதான். சரி அடுத்து என்ன நடந்தது?” என்று கதை கேட்க ஆரம்பித்தாள்.
“நான் என்ன கதையா சொல்றேன்” என்று அவளைப் பார்க்க,
“இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு அண்ணா. நான் பேசல. நீங்க சொல்லுங்க?” என வாய் மூடிக்கொண்டாள்.
ஏனோ மின்னல் மேல் பாசம் எழ, “கோவத்துல தாலி கழட்டினாலும் அவள்தான் என் பொண்டாட்டி. அவளை விடமாட்டேன்னு சொன்னேன். அவர் என்னை முறைச்சி, இந்த வயசுல அவ்வளவு திமிரான்னு திரும்பவும் அடிச்சார். அவரோட ஒவ்வொரு அடிக்கும் மனசுல ஒரு வைராக்கியம்.”
“அது வைராக்கியம் இல்லண்ணா திமிரு, தெனாவெட்டு இப்படிச் சொல்லலாம்” என்று மின்னல் இடையிட, சித்தார்த் முறைக்க, வாயை மூடிக்கொண்டு ‘யூ கன்டினியூ’ என்றாள் சைகையில்.
“அப்ப எனக்கு அப்படித்தான் தோணிச்சி. சோ, அப்படியே இருக்கட்டும்” என்றவன், “அவள்தான் வேணும்னு பிடிவாதம். சுத்தி ஆள்கள் வேற.. அதுவும் நிறைய சொந்தக்காரங்களா இருந்தாங்களா, அதுவரை ஊருக்கு வந்தா பந்தாவா திரியுறதை எல்லாருமே மரியாதையா பார்ப்பாங்க. அந்த நிமிடம் அவங்க பார்வையில ரொம்ப அசிங்கமா போக, பின்னாடி அதுவே கௌரவப் பிரச்சனையாகிருச்சி.”
“அவன் அப்படி செய்ததும் எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியலைங்க. ‘பே’ன்னு நின்னட்டிருந்தேன். கை காலெல்லாம் பயத்துல நடுங்க ஆரம்பிச்சது. முகில் அண்ணா வரவும் பயம் குறையுற மாதிரி தெரிய, அவன் செய்த அடாவடியில் திரும்பவும் பயம் வந்திருச்சி. அதுக்குள்ள ஒன்றிரெண்டா ஆள்கள் வர, அம்மாவைக் கண்டதும் அவன் கையைக் கடிச்சிட்டு ஓடிட்டேன். அப்பா கோவத்துல அவனை அடிச்சி உதைச்சி கழுத்துல இருந்ததை அவன் மேலயே விசிறியடிக்க, அப்ப அவன் முகத்தைப் பார்க்கணுமே. நிஜமாவே நான் அரண்டுட்டேன்ங்க. அப்படி ஒரு வெறி. அவள்தான் என் பொண்டாட்டி. அவளை விடமாட்டேன்னு சொன்னப்ப, அவன் பார்த்த பார்வை... ஹப்பா... இப்பவும் கண் முன்ன வந்து கதிகலங்க வைக்குது.”
“அது அடிபட்ட அவமானத்துல சொல்லியிருக்கலாம் நதிமா. தப்பே செய்தாலும் தனியா அடிக்கவோ, புத்தி சொல்லவோ செய்திருக்கலாம். அவனும் வயசுப்பையன். நீயே பாரு பப்ளிக் ப்ளேஸ்ல சொந்தங்கள் நிறைஞ்சிருக்கிற ஊர்ல, தனக்கு ஒருத்தர் தண்டனை கொடுத்தா, அதனால வர்ற வலி அவமானத்துல இப்படிதான் பேசத்தோணும். நானாயிருந்...”
சட்டென்று கணவன் வாய்மூடி, “அவனோட உங்களை கம்பேர் பண்ணாதீங்க. அடுத்தவங்களோட கம்பேர் பண்றது உங்களுக்கு பிடிக்காத விஷயம்கூட.” என்றாள்.
“அப்ப என்னை நிறைய தெரிஞ்சி வச்சிருக்க சொல்லு?”
“அ...அது காற்றுவாக்குல காதுல விழந்தது” என்றவள் வார்த்தைகள் திணற,
“எந்த காற்றுமா உன்கிட்ட வந்து சொன்னது. உன்னைப் பற்றி மட்டும் என்கிட்ட எதுவும் சொல்லாமல் விட்டுருச்சி?”
“ஸ்ஸ்... நான் பேசிட்டிருக்கேன்ல சைலண்டா இருங்க” என்று உதட்டில் விரல் வைக்க, கணவனின் அமைதியைக் கண்டு புன்னகைத்து, “எல்லாரும் கோவிலை விட்டு வெளியே வர்றப்ப கொஞ்சம் தடுமாறி வந்தவன், மாமா என் பொண்டாட்டியை எங்க கூட்டிட்டுப் போறீங்க கேட்டான்.”
“சித்திக்குக் கோவம் வந்து அவனை அடிச்சி, உன்னை என்னவோ நினைச்சேன்டா. இப்படி கேவலமா வளர்ந்திருப்பேன்னு நினைக்கலைன்னு தன்னோட கோவத்தைக் கொட்ட, நான் பக்கத்துல இருந்த கல்லை எடுத்து அவன் முகத்தை நோக்கி எறிய, அவன் முகமெல்லாம் இரத்தம். அதுல இன்னுமே பயம் எனக்கு.”
“நீ அடிச்சதால காயமா? ம்... அவ்வளவு ஒர்த் இல்லையே நீ.” அரிச்சந்திரன் யோசனை செய்வதுபோல் சத்தமாக பேசினான்.
“பொண்டாட்டின்னு சொன்னதும் அக்கா, தங்கை இரண்டு பேரும் கல்லைத்தூக்கி என்மேல் எறிய, தடுக்கறதுக்குள்ள நெத்தில பள்ளம் விழுந்திருச்சி. சரியான அடி. பம்ப் செட்தான் என் நெத்தியில. இதோ...” என்று அந்தத் தளும்பை மின்னலிடம் காண்பித்தான்.
“ஐ திங்க் இந்தத் தளும்புக்குச் சொந்தக்காரி என் அண்ணி கிடையாது. உங்க ஒய்ஃபாதான் இருக்கணும்” என்றாள் மின்னல்கொடி.
“காலையில ரெஜிஸ்டர் ஆபீஸ்ல நடந்ததை வச்சிப் பார்க்கும்போது எனக்கும் அப்படிதான் தோணுது” என்றான் புன்னகைத்து.
“அதுல சார் ப்ளாட்டாகிட்டீங்க போல?”
“அப்படியும் வச்சிக்கலாம். இன்னைக்குக் கல்யாணத்துக்கு ரெடி பண்ணினப்ப, கௌரவத்துக்காக இல்லாம அன்பா பார்த்துக்கணும்னு முடிவு பண்ணியிருந்தேன்.” சற்று திரும்பி வெண்மதியைத் தேடிய கண்கள் அவள் முகம்தனைக் கண்டதும் ஒரு ஈர்ப்பு எழ, “இப்ப அவள் மனசுல ப்ளாட் போட்டு, பில்டிங் கட்டி, நிரந்தரமா குடியிருக்க முடிவே பண்ணிட்டேன்” என்றான் புன்னகையுடன்.