- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
23
“ஏன் டைவர்ஸ்கு ஒத்துக்க முடியாது சித்தார்த்? இது கட்டாயக் கல்யாணம். கேஸ் போட்டு நிரூபிச்சா மியூச்சுவல் இல்லாமலே விவாகரத்து கிடச்சிரும். ஆனா, எனக்கு ஒரு சந்தேகம்?” என்றதும் அனைவரும் அவனைக் காண, “ஒரே ஊர்க்காரங்களா சொந்தமா இருந்தும், எப்படி வெண்மதிக்கும்,, நட்சத்திராவிற்கும் அடையாளம் தெரியல? தாலி கட்டும்போது பக்கத்துல பார்த்தப்ப கூடவா தெரியல?”
‘விதி என்ன பண்றது’ என மனதினுள் நினைத்து, “இல்ல லாயர் சார் பார்த்ததில்லை. இன்னைக்குதான் நேர்ல பார்க்கிறேன். ஏன் நட்சத்திராவையுமே சின்ன வயசுல பார்த்ததுதான். இவ்வளவு பக்கத்துல பார்த்ததில்லை. அதனால ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான் தெரிஞ்சாங்க.”
“அப்புறம் எப்படி நட்சத்திராவைத் துரத்துனீங்க?”
“அ...அது ஒரு சந்தேகத்துலதான் பார்த்தேன். அவளின் பயமும் ஓட்டமும்தான் நட்சத்திரான்னு தோணிச்சி. என்னை அடையாளம் கண்டு ஓடுறாள்னு துரத்தினேன்” என்றான் சித்தார்த்.
‘நானாதான் போய் சிக்கினேனா’ என்று நட்சத்திரா விழிவிரிக்க, “நீ ரொம்ம்ம்ப நல்லவள் நட்டுமா” என கேலி செய்தாள் மின்னல்.
“நீங்க சித்தார்த்தைப் பார்த்திருக்கீங்களா வெண்மதி?”
“ம்... எதிரியைத் தெரிஞ்சி வச்சிருக்கணுமே. நேர்ல போய் திட்டுறதுக்கு பலமுறை நினைச்சி, பக்கத்துல போனதும் யோசனையைக் கைவிட்டிருக்கேன். ஆனா, இப்படி ஒரு சந்திப்பு, ப்ச்... சத்தியமா எதிர்பார்க்கலை” என்று கழுத்திலிருந்த தாலியைப் பார்த்தபடி கலங்கிய குரலில் சொன்னாள்.
“முடிவா நீங்க இரண்டு பேரும் என்னதான் பண்ணலாம்னு இருக்கீங்க? யோசிக்க டைம் வேணும்னாலும் எடுத்துக்கோங்க. நாங்க வெய்ட் பண்றோம்” என்றான் அரிச்சந்திரன்.
“டைம்லாம் வேண்டாம். எனக்கு அவள் வேணும்” என்று சித்தார்த்தும், “எனக்கு அவன் வேண்டாம்” என்று வெண்மதியும் ஒரே நேரத்தில் சொல்லி ஒருவரை ஒருவர் பார்க்க, அவள் கண்களில் கனலும், அவன் கண்களில் அன்பும், ‘என்னை மன்னிக்க மாட்டாயா’ என்ற கேள்விப் பார்வையுமே இருந்தது.
“நீங்க சொல்லுங்க ஆன்ட்டி?” என்று வெண்ணிலாவின் தாய் திலகவதியிடம் கேட்டான்.
தாய் என்ன சொல்வார் என்று உணர்ந்த பிள்ளைகளோ. “அம்மாகிட்ட ஏன் கேட்குறீங்க? நாங்கதான் வேண்டாம்னு சொல்றோம்ல. ஒரே ஆப்ஷன், அதுவும் டைவர்ஸ் மட்டுமே!”
“ரைட்! அப்ப கேஸ் பைல் பண்ணிரலாம்” என்றான்.
“அப்ப நான் சித்தார்த்துக்கு ஆதரவா வாதாடுவேன்” என்று சொன்ன தங்கையைப் பார்த்து, “உனக்கு என்ன அனுபவம் இருக்குன்னு கேஸ்ல ஆஜராகப்போற?” என்றான்.
“ரெண்டு பெரிய தலைங்ககிட்ட ஜுனியரா இருந்த அனுபவம் இருக்கு. இது போதாதா வாதாட? ஏன்ணா உனக்குத் தெரியாது? சான்ஸ் கிடைத்தால்தான் என்னுடைய முழுத்திறமையையும் நிரூபிக்க முடியும். இதை எனக்கான படிக்கட்டா எடுத்துக்குறேன்” என்றவள் சித்தார்த்திடம் திரும்பி, “என்ன ப்ரோ, உங்களைக் கேட்காமலே கமிட்டாகிட்டேன். இதுல உங்களுக்குச் சம்மதமா?” என்றாள்.
“நீ எடுமா. எதுவானாலும் நாங்க உன்கூட இருக்கோம்” என்று ரெங்கசாமி செல்லம்மா சொல்ல, அவர்கள் அருகில் வந்த திலகவதி, ‘நானும்’ என்பதை செய்கையால் சொல்லிவிட்டார்.
“ஏன்மா இப்படி இம்சை பண்றீங்க? பெத்த பொண்ணை விட, நம்மளை நடுத்தெருவில் நிப்பாட்டின இவங்க பெருசா?” வெண்மதி கடுப்போடு கேட்க,
“பெத்த பிள்ளையோட நல்லதுக்காகத்தான் இங்க நிற்கிறேன் வெண்மதி. எனக்கு உன் வாழ்க்கை முக்கியம். எப்படியோ உன் வாழ்க்கை சித்தார்த்தோடன்னு கடவுள் முடிச்சி போட்டுட்டார். அது அப்படியே இருக்கட்டும் என்பது என் ஆசை” என்றார் அழுத்தமாக.
“ம்மா... அவங்க என்மேல உள்ள பாசத்துல கூப்பிடலை. சொத்துக்காகம்மா! நான் மருமகளாகிட்டா அந்த கேஸை வாபஸ் வாங்கிடலாம்ன்ற எண்ணத்துலமா.”
“அப்படிப் பண்ணினாலும் தப்பில்லையே. யார் அனுபவிக்கிறது? என் அண்ணன், அண்ணிதான. அதை சந்தோஷமாதான் இதுவரை கொடுத்தேன். வேணும்னா இன்னும் கொடுப்பேன்” என்று தெளிவாக உரைத்தார்.
சித்தார்த் ஆச்சர்யப்பட்டான் என்றால், அவனின் அடாவடிப் பெற்றோருக்கோ திலகவதிக்கு தாங்கள் செய்த துரோகம் உறுத்தத் தொடங்கியது.
“இல்ல அத்தை. கேஸை வாபஸ் வாங்க வேண்டாம். அது எப்பவும்போல நடக்கட்டும். எங்க கல்யாணத்துக்கும், கேஸ்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்றான் சித்தார்த்.
‘அட நீயென்ன அவ்வளவு நல்லவனா’ என்ற எள்ளல் பார்வை வெண்மதியிடம் இருந்து.
“சித்தார்த் ஏன்டா” என்ற செல்லம்மாவின் கைபிடித்து, “இதுக்கு மேல கௌரவம் கொளரவம்னு அது பின்னால ஓட முடியாதும்மா. அதுக்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். இது கடவுளா போட்ட முடிச்சி. வேணும்னா அவரே அவிழ்க்கட்டும். நாம வேடிக்கை மட்டும் பார்க்கலாம்” என்றபடி மின்னலிடம் திரும்பியவன், “நீங்க என் சார்பா ஆஜராக நான் சம்மதிக்கிறேன் சிஸ்டர். என்னோட முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு” என்றான்.
“கொடி எனக்கு எதிரா நிற்கப்போறியா? வேண்டாம்” என்றான் அரிச்சந்திரன். நட்சத்திராவும் தோழியிடம் அதையே சொல்ல, முகில் குமாரோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
தற்செயலாகத் திரும்பிய மின்னல் அவனின் பார்வை உணர்ந்து, ‘என்ன?’ என்று லேசாக தலையை அசைத்துக் கேட்க,
‘நீயெல்லாம் என்ன பொண்ணு?’ என்றான் பார்வையால்.
‘அடப்பார்றா!’ என கேலியாக உதடு சுளித்து, “நான் மின்னல் பொண்ணு. ரொம்ப முறைச்சா பொசுக்கிருவேன்” என்று உதடசைவில் சொல்ல,
“போடீ” என அவனும் உதடசைத்தான்.
“அடிங்க...” சட்டென்று எழுந்த கோவத்தில் அவனிடம் சென்றவள், “என் இடத்துல என்னையே சீண்டுறியா? இந்தக் கேஸ்ல நீ நினைக்கிற எதுவும் நடக்காது” என்றாள் சவாலாக.
“பார்க்கலாம் பார்க்கலாம். போ... போய் வேலையைப் பார்” என நக்கலாக உரைத்தான்.
“மின்னல் பெண்ணே! எனி ஹெல்ப்” என்று வந்த விஜயையும், அவளையும் பார்த்து அதே நக்கல் மாறாது, “இதுவே ஒரு ஆழாக்குப் படி. இதுக்கு சப்போர்ட் வேறையா. பொண்ணு பின்னாடி சுத்தாம போயி பொழைப்பைப் பாரு” என்றான் விஜயிடம்.
“ஏய் நான் யார்னு தெரியாமல் பேசுற?” என்று விஜய் எகிற,
“விடுங்க விஜய். சாருக்கு நாகரீகம்னா என்னென்னு தெரியாதுபோல” என்றாள் கிண்டலாக.
“பழங்கால நாகரீகம் தொட்டு, உச்சக்கட்ட நாகரீகம் வரை பார்த்தவன் நான். என்கிட்ட நாகரீகத்தைப் பற்றிப் பேசுறியா?” சண்டைச் சேவலாய் அவன் சிலிர்த்து நின்றான்.
அவனின் தெனாவெட்டான பதிலில் “அப்ப சாருக்கு ஏகப்பட்ட மங்கைகளைத் தெரியும் சொல்லுங்க.” தன் நக்கலைத் தூக்கலாக்கினாள் மின்னல்.
“மின்னல்மா வேண்டாம் வா. மண்டபத்தில் உள்ள எல்லாரும் உன்னைத்தான் பார்க்கிறாங்க” என்று மகளைப் பேசவிடாது தடுத்தார் ரவிச்சந்திரன்.
“அவன் எப்படிப் பேசுறான் பார்த்தீங்களாப்பா?”
“எப்படிப் பேசிட்டோமாம்? ஏர்லைன்ல ஏகப்பட்ட மங்கையர்கள் வர போகதான் செய்வாங்க. அதைத் தப்பா அர்த்தம் எடுத்தா தப்பு என்கிட்ட இல்ல. உன்கிட்ட... உன்கிட்ட மட்டும்தான்” என்றான் கோவமாக.
“நீ யோக்கியமா பேசுனியா? நாம எதைக் கொடுக்கிறோமோ அதுதான் திரும்பக் கிடைக்கும்” என்று அவளின் பதிலும் புல்லட்டாய் முகில் மேல் பாய,
“வக்கீல்ல சொல்லியா கொடுக்கணும்.” அதே கேலிக்குரல் அவனிடம்.
“நியாயத்தைக் கேட்க வக்கீல் தேவையில்லை. அன்ட் என் வாதத்தை கோர்ட்ல தெரிஞ்சிக்கோ.”
“மின்னல்மா விடுடா” என்றார் ரவிச்சந்திரன்.
“நீங்க ஏன்பா, தப்பு செஞ்சவனை விட்டுட்டு என்னை சமாதானப்படுத்துறீங்க?”
“தப்பு செஞ்சவங்களை தான் அமைதியா இருக்கச் சொல்வாங்க” என்று திரும்பவும் இடையிட்டான் முகில்.
“நான் என்ன....”
“நீ இருடா அப்பா பேசிக்கிறேன்” என்று மகளைத் தன் கைக்குள் அடக்கி “நீங்க அதிகம் பேசுறீங்க தம்பி. என் பொண்ணை குறை சொல்ற உரிமை யாருக்கும் கிடையாது. குறை சொல்ற மாதிரி அவள் நடந்துக்கவும் மாட்டா” என்றார் சற்று கடுமையான குரலில்.
“என்ன அண்ணா நீ. அவளைப்போய் தப்பா பேசுற? அவள் எனக்கு நாத்தனார் மட்டும் கிடையாது. என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். எனக்கு இன்னொரு அம்மா மாதிரி.”
நட்சத்திராவின் வார்த்தையில் மின்னல் கண்கலங்க, தோழியிடம் திரும்பியவள் அவள் கைபிடித்து, “சாரிடி. அண்ணா எதோ கோவத்துல பேசிட்டாங்க. இனிமேல் அப்படிச் செய்யமாட்டாங்க” என்றாள்.
அவர்களை வெறிக்கப் பார்த்திருந்த முகிலிடம் வந்த அரிச்சந்திரன், “நீங்க நதி அண்ணன்றதால எதுவும் பேசாம நிற்கிறேன்னு நினைக்காதீங்க. இந்த இடத்தில் பேசினா நிறைய பிரச்சனையாகும்னுதான் பார்க்கிறேன். கோவம் நல்லதுதான், அது மற்றவர்களைப் பாதிக்காத வரையில். உங்க தங்கை வாழ்க்கை இப்படியாகிருச்சின்னு குழப்பத்துல இருக்கீங்க. அதனாலதான் நானும் பொறுத்துப் போறேன். யோசிச்சிப் பேசுறது நல்லது.”
“நமக்கு எதிரா வாதாடினா அவங்க எதிரி கிடையாது. தொடர்ந்து இப்படியே பிஹேவ் பண்ணினா... சாரி நீங்க வேற யாரையாவது பார்க்க வேண்டி வரும். குடும்பமா தொழிலா கேட்டா, எனக்குக் குடும்பம்தான் முக்கியம். அப்புறம் இவன் பொறுக்கி கிடையாது. இன்ஸ்பெக்டரா இருக்கான். அதான் பிரச்சனைன்னதும் உதவவான்னு கேட்டான். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்று நகரந்தான்.
தன் தவறு புரிந்த முகில் மின்னலின் அருகே சென்று, “மன்னிச்சிருங்க” என்றுவிட்டு வேகமாகச் சென்றிட, சிறு அமைதிக்குப் பின் அனைவரும் சகஜமாகினார்கள்.
மாலை திருமண வரவேற்பு என்பதால், அன்றைய பொழுது அனைத்தும் மண்டபத்திலேயே செலவழிக்க எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் சித்தார்த்தும் திலகவதியின் வேண்டுகோளுக்காக, குடும்பத்துடன் மண்டபத்திலேயே தங்கிவிட்டான்.
இருந்த பிரச்சனையில் நட்சத்திராவிற்கு நிறைய விஷயங்கள் நினைவிலேயே இல்லை. ‘எப்படி தன் உறவினர்கள் திருமணத்திற்கு வந்தார்கள்? எப்படி அனைவரும் வித்தியாசம் இல்லாமல், அதாவது பெண் மாறியதைப் பற்றி எந்த சலசலப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்? இத்தனை ஆண்டுகள் தொடர்பில் இல்லாதவர்களும் இங்கே எப்படி?’ என்பதையும் உணரவில்லை.
மதியம் உணவு முடித்து மாப்பிள்ளை பெண்ணை ஓய்வெடுக்கச் சொல்ல, காலையிலிலிருந்து இருந்த பரபரப்பு போய் ஒரு படபடப்பு வந்தது அவளுள்.
அவளைப் பார்த்தபடி உள்ளே வந்தவன் கதவைத் தாழிட்டபடி, “என்ன நதி டென்ஷனா தெரியுற?” என்று கேட்க,
“அ...அப்படிலாம் எதுவுமில்லையே. நான் எப்பவும் போலதான் இருக்கேன்” என்று சிரித்தாள்.
“இல்ல பொய் சொல்ற? வா வந்து உட்கார்” என்றான் பேந்த விழித்தபடி நின்றிருந்தவளைப் பார்த்து.
“அதுக்கு முன்ன, ஏன் நான் பொய் சொல்றதா சொன்னீங்க?” என்று வீம்பு செய்ய,
மென்னகையுடன் அவளை அராயும் பார்வை பார்த்து. “எப்பவும் போலனா அமைதியா என் பக்கத்துல வந்து உட்கார்ந்திருப்ப” என்றான்.
சிறு புன்னகையுடன் கணவன் அருகில் அமர அவளின் கையை தன் கைகளுள் வைத்து, “உன் சின்ன வயசுல நடந்த எல்லாமே தெரியும். சில விஷயங்கள் உன்னோட பாய்ண்ட் ஆஃப் வியூல நீ சொன்னா மட்டுமே புரியும். இது சந்தேகத்தைத் தீர்க்கக் கேட்கலை நதி. ஒரு ஆர்வம்னு வச்சிக்கோயேன்.”
“என் சந்துரு பற்றி எனக்குத் தெரியும். அதுவும் என் வாழ்க்கையில் நடந்த எதையும் பெருசுபடுத்தாத குணம்.”
மனைவியின் முகத்தில் தெரிந்த அன்பும் காதலும் அவனை அசரடிக்க அவளைப் பிடித்திருந்த கையை விலக்கி அவளைக் கட்டியணைத்து “தேங்க்ஸ்” என்றான்.
உடலில் எழுந்த பரவசமான உணர்வுகளுடன், அவனை அணைத்துக்கொள்ள எழுந்த கைகளையும், மனதையும் அடக்கி, “தேங்க்ஸ் பேக்டரி வச்சிட்டிருக்கீங்க போலிருக்கு?” கேலியாகக் கூறி அவனிடம் இருந்து விலக முயன்றாள்.
“உன்னால்தான் அந்த பேக்டரி அப்பப்ப ஓபன் பண்ணி வேலையையும் நடத்துது” எனவும் அவள் செல்லமாய் முறைக்க, அவன் அதைக் கள்ளமாய் ரசித்துச் சிரித்து, “சொல்லு?” என்றான்.