• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
64
அத்தியாயம் -1

“மாப்பிள்ளை நான் வேணா சம்மந்திகிட்ட பேசிப் பாக்குறேன். என் மகளை கை விட்டுடாதீங்க. உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்” என்று ரோஜாவின் அப்பா நீதிமன்றத்தின் வாசலில் நின்று மருமகனைக் கணவனை கெஞ்சுவதைப் பார்த்த ரோஜா மௌனமாக நின்றிருந்தாள்.
“டேய்! இந்த ட்ராமா எல்லாம் பார்த்து மறுபடியும் இந்தக் குடும்பத்தை கூட்டிட்டு வந்து நடு வீட்டுல நிக்க வச்சிடாத. இன்னைக்கு இவளுக்கும், உனக்கும் விவாவகாரத்து முடிந்ததும், உன் அக்கா மகளை உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று தன் மகனுக்கு உபதேசம் செய்தாள் ரோஜாவின் மாமியார்.

“என்ன ரோஜா இது? ஐந்து வருட கல்யாண வாழ்கை, இன்னும் ஐந்தே நிமிஷத்துல முடிவுக்கு வர போகுது. ஆனா, நீ என்ன அமைதியா நிக்குற?” என்று அங்கலாய்த்தான் ரோஜாவின் உயிர் நண்பன்.
“இனி யாரு பேசியும் எதுவும் ஆகப் போறது இல்ல. ஐந்து வருஷம் போகாத கோவில் இல்ல. ஏறாத ஹாஸ்பிட்டல் இல்ல. இனியும் இவளுக்கு பிள்ளை பிறக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்ல. அதனால, வேற எதாவது காரணம் சொல்லி இவளை இன்னைக்கு என் தம்பி வாழ்க்கையில இருந்து அப்புறப்படுத்த நாங்க முடிவு பண்ணிட்டோம்” என்று தன் பங்குக்கு வசனத்தை அள்ளி தெளித்தாள் ரோஜாவின் நாத்தனார்.
“இங்க இவ்வளவு கலவரம் நடக்குது. ஆனா உன் புருஷன் அப்படியே சிலையா நிற்கிறான். என்ன மனுஷன் அவன்? நீ பாவம் என்று அவன் அவங்க அம்மாகிட்ட சொன்னா என்ன குறைஞ்சா போயிடுவான்” என்று ரோஜாவின் தோழி ஒரு பக்கம் கோபத்தில் கொதித்தாள்.
இன்னும் சற்று நேரத்தில் ரோஜாவும், அவளின் கணவனும் நீதிபதி முன் ஆஜராக வேண்டும் என்று ரோஜாவின் வக்கீல் சொன்னதும், “நான் உங்ககிட்ட ஒரு ஐந்து நிமிஷம் பேசணும்” என்று தயங்கியப்படி ரோஜா தன் கணவனிடம் கேட்டாள்.
“அவன்கிட்ட இனி பேச உனக்கு என்ன இருக்கு? அதெல்லாம் நிறையவே பேசியாச்சு. சும்மா இங்க நின்னு சீன்லாம் கிரியேட் பண்ணாம, உனக்கும் இந்த விவாகரத்துல சம்மதம்ன்னு சொல்லு புரியுதா?” என்று மீண்டும் ரோஜாவை மிரட்டினாள் அவளின் மாமியார்.
இங்கே யார் பேசுவதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், எனக்கும் இங்கே நடக்கும் எந்த நிகழ்வுக்கும் சம்மந்தம் இல்லை என்பதைத் தன் நடத்தையில் தெரிவித்தப்படி நின்று இருந்த ரோஜாவின் கணவன் கைபேசி ஒலித்தது.
“ஹலோ” என்று அவன் பேசத் தொடங்கியதும் முகம் இறுகிபோய் தன் கைபேசியைக் கீழே தவற விட்டான்.
மகன் தவறவிட்ட கைபேசியை எடுத்து, “ஹலோ! யாரு பேசுறது?உங்களுக்கு யாரு வேணும்?” என்று அதட்டலாக கேள்வி கேட்ட ரோஜாவின் மாமியாருக்கு, ஒருவர் பதில் சொல்ல, ரோஜாவின் மாமியார் முகம் பிரகாசமாக ஒளி வீசுவதை பார்த்து அனைவரும் குழம்பி போனார்கள்.
“என்னாச்சும்மா? தம்பி போன்ல யாரு பேசுனாங்க? நீ என்ன திடிர்னு இவ்வளவு சந்தோஷமா இருக்க” என்று மகள் கேட்கும் கேள்விக்குப் பதில் தராமல், தன் மருமகளை கட்டி அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டவள், “என் ராஜாத்தி. என் தங்கமே. என் குலம் செழிக்க வந்த மகாலக்ஷ்மியே. ஏன் நீ என்கிட்ட இந்த நல்ல செய்தியைச் சொல்லவே இல்ல” என்று ரோஜாவின் மாமியார் உரிமையுடன் ரோஜாவைக் கேட்டார்.

கூடி இருக்கும் அனைவரின் முகத்திலும் சந்தேகக் கேள்வி அப்பட்டமாக தெரிந்த நேரத்தில், “என்ன சம்மந்தி? என்ன சொல்றிங்க நீங்க? என்ன சந்தோஷமான விஷயம்?” என்று ரோஜாவின் அப்பா எதையோ உணர்ந்து ஏக்கத்துடன் கேட்க,
“சம்மந்தி! நம்ம தாத்தா பாட்டியாகப் போறோம். உங்க பொண்ணு... இல்ல இல்ல, என் மருமக மசக்கையா இருக்கா சம்மந்தி” என்று சொன்ன ரோஜா மாமியாரின் முத்தம் மீண்டும் இலவசமாக ரோஜாவிற்கு கிடைத்த தருணம்.
“என்ன சொல்றிங்க அம்மா? அப்போ நம்ம ரோஜா மாசமா இருக்காளா? டேய் தம்பி வாழ்த்துக்கள்டா” என்று தன் தம்பியின் வலது கையை குலுக்கிய வேளை, சட்டென்று தன் அக்காவின் கையை உதறியவன் தனக்கு நேராக நிற்கும் ரோஜாவின் கழுத்தைப் பிடித்தான்.
கூடி இருக்கும் அனைவரும் திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், “என்னடா நீ? பைத்தியமா பிடிச்சிருக்கு? என் மருமக இப்போ தான் நல்ல செய்தியை சொல்லி இருக்கா. நீ என்னடானா அவளைத் தலையில் தூக்கி வைத்து கொஞ்சாமல் அவ கழுத்தை பிடிக்கிற” என்று கோவமாக ரோஜாவின் மாமியார் தன் மகனைக் கேட்க,
“என் கழுத்தை பிடிக்கிறேனா? இவ பண்ண காரியத்துக்கு நான் இவளை துண்டு துண்டா வெட்டி போட்டாலும் என் மனசு ஆறாது.” என்று கடுங்கோபத்துடன் கத்திய கணவனை சற்றும் பயம் கொள்ளாமல் பார்த்த ரோஜா, “நீங்க என்னைக் கொல்லும் அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்?” என்று அமைதியாகக் கேட்டாள்.
“என்ன பண்ணுனியாவா? இன்னும் நீ பண்ண என்ன இருக்கு? உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா எவன்கூடவோ போய் உன் வயத்துல பிள்ளையை வாங்கிட்டு வந்துருப்ப?” என்று இவன் ஆங்காரமாக கத்தும் சத்தம் கேட்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்த சில நபர்கள் இவர்களை திரும்பி பார்த்தனர் ...
“மாப்பிள்ளை என் மகளைப் பார்த்து என்ன வார்த்தை பேசிட்டிங்க. அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல மாப்பிள்ளை” என்று கண்கள் கசக்கிய தன் அப்பாவை அமைதிப்படுத்திய ரோஜா, “என்னங்க சொல்றிங்க? நான் என்ன தப்பு பண்ணேன்? ஐந்து வருஷமா நமக்கு பிள்ள இல்லைனு, எனக்கு மலடி, பிள்ளை பெக்க வக்கு இல்லாதவள், இவ வந்தா நல்ல சடங்கு எதுவும் நல்ல விதமா நடக்காதுன்னு, உங்க அம்மா, அக்கா, சொந்த பந்தம் எல்லாம் எவ்வளவோ பேசி இருக்காங்க. அப்போ எல்லாம் கோவப்படாத நீங்க, நான் நம்ம பிள்ளையை என் கருவுல சுமக்குறேன்னு சொன்னதும் மட்டும் ஏன் கோவப்படுறிங்க.? என்று தன் கணவனின் கோவத்துக்கு அதிராமல் மிரளாமல் திருப்பி கேள்வி கேட்டாள்.
“நீ பேச்சை மாத்தாத. இது எப்படி சாத்தியம்? நீ எப்படி என் பிள்ளையயை உன் கருவுல சுமக்க முடியும்? எனக்கு தான் பிள்ளை பிறக்க வாய்ப்பே இல்லைனு, டாக்டர் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாரே” என்று ஆதங்கத்தில் அவன் சொன்ன உண்மையை கேட்டு, குடும்பத்தினர் அனைவரும் கரண்ட் கம்பத்தில் கை வைத்தது போல ஷாக்கில் நின்று இருந்தனர்.
“ஒருவருக்கு பிள்ளை பிறக்காது என்பது குறை அல்ல. ஆனா, அதை ஒரு குறையாக என் மீது உன் குடும்பம் திணித்த பழிக்குத் தீனி போட்டது உன்னோட இந்த மௌனம் தான். உனக்குப் பிள்ளை பிறக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும் என்னை நீ திருமணம் செய்து கொண்டதை கூட நான் மன்னிச்சிடுவேன். ஆனா, மலடி என்ற ஒரு பட்டத்தை எனக்கு பரிசா தந்துட்டு, உன் அக்கா மகளை கல்யாணம் பண்ண புது மாப்பிள்ளையாக தயாரான பாரு. அப்போ முடிவு பண்ணேன், உன் வாயால உன்னை பற்றிய உண்மை வெளிய வர வைக்கணும்னு. ஹ்ம்... உன்னால ஒரு நல்ல புருஷனா மட்டும் இல்ல. ஒரு நல்ல தகப்பனா கூட இருக்க தகுதி இல்லாதவன் நீ. தேங்க் காட் உன் பிள்ளையயை சுமக்கும் பாவம் எனக்கு வாய்க்கவில்லை. நீ என்னடா எனக்கு விவாகரத்து தருவது. நான் உன்கிட்ட இருந்து விடுதலை அடைகிறேன். குட் பை” என்றாள் ரோஜா.🌹
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top