• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 26, 2024
Messages
30
அத்தியாயம் 10

கண்மணியை சூழ்ந்து கொண்ட அந்த கிராமத்து மக்கள், அவளை மலர்களால் அலங்கரிக்க தொடங்கினர். ஒப்பனைகள் முடிந்த பிறகு ஒரு மனையில் அமர வைக்கப்பட்டவளுக்கு மஞ்சள் குங்குமம் பூசி பல சடங்குகள் ஆரம்பமானது.

தேவ்வுக்கு என்ன ஆனது அவன் பாதுகாப்பாக இருக்கிறானா என்று கூட அவளுக்கு தெரியவில்லை, நேரம் ஆக ஆக அவள் மனதில் பயம் படரத் தொடங்கியது.

இதற்கு மேல் முடியாது என்று அந்த சடங்கு செய்யும் இடத்திலிருந்து எழுந்தவள் வெளியே ஓடப் பார்க்க, அவளை சுற்றி இருந்தவர்கள் அவள் கைகளை பிடித்துக் கொண்டனர்.

உடனே அவளுக்கு அருகே வந்து நின்ற கங்கம்மா பல்லைக் கடித்துக் கொண்டு சிரித்தபடியே, அவளுக்கு மட்டும் கேட்கும்படி தமிழில் பேசத் தொடங்கினாள்.

“இங்க பாரு முரண்டு பிடிக்காம நான் சொல்றபடி கேட்டு நடந்தா தான் உன் கூட வந்தவன் உயிரோட இருப்பான். இல்ல அவனை குடிசையோட வைச்சு எரிச்சிடுவேன் ஜாக்கிரதை.”

கண்மணியின் கண்களில் அச்சம் பரவியது, அவள் அதிர்ந்து போய் நின்றிருக்க கூட்டத்தை நோக்கி திரும்பிய கங்கம்மா, அவர்களது மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

இவளுக்கு அந்த பாஷை புரியவில்லை, தன்னுடைய நிலையை எவ்வாறு இங்கு உள்ளவர்களுக்கு புரிய வைப்பது? யாரிடமும் உதவி கேட்பது? சோர்ந்து போனவள் தேவ் எங்காவது தெரிகிறானா? தன்னை காக்க வந்து விட மாட்டானா என்று மிரட்சியோடு சுற்றி முற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் மாப்பிள்ளை அலங்காரத்தோடு கூடிய ஒருவனின் கைகளை பிடித்தபடியே, கண்மணியின் அருகே வந்து கொண்டிருந்தாள் கங்கம்மா.

திடீரென்று அவளை சுற்றி நின்று கொண்டிருந்த அனைவரும் சற்று விலகி வெளியே செல்லத் தொடங்கினர். அவள் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவள் அருகே வந்த கங்கம்மா வேலையாளை பார்க்க, உடனே அவன் கைகளில் இருந்த மணப்பெண்ணுக்கான ஆடையை, கைநடுக்கத்தோடு அந்த ஆடவனை நோக்கி நீட்டினான்.

ஆனால் அவனோ அதில் இருந்த பொருட்களை கொண்டு கண்மணியை தாக்கி விட்டு, அருகில் நின்றிருந்த வேலையாளை நோக்கிப் பாய்ந்தவன், அவனது கழுத்தை ரத்தம் வரும் அளவுக்கு அழுத்தமாக கடிக்கத் தொடங்கினான்.

சிறிது நேரத்தில் அருகில் இருந்த ஆட்களின் உதவியோடு தன் மகனை வேலையாளிடம் இருந்து பிரித்தாள் கங்கம்மா.

அடுத்த நிமிடம் பற்களுக்கு இடையே ரத்தம் ஒழுக தன்னை நோக்கி வருபவனை கண்டு கண்மணி உறைந்து போய் நிற்க, அதற்குள் கங்கம்மா தனது மகனை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே சென்றார்.

அரண்டு போய் நின்றிருந்தவளை உள்ளே அழைத்துச் சென்ற சில பெண்கள், சிறிது நேரத்திலேயே கண்மணியை மணப்பெண் அலங்காரத்தோடு குடிலுக்கு வெளியே அழைத்துக் கொண்டு வந்தனர்.

மணமேடையில் அமர்ந்திருந்தவனை கண்டு மிரண்டு போன கண்மணி நகர மறுத்தாள். கங்கம்மா அவள் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து மணமேடையில் அமர வைத்தாள்.

காலையில் மழைக்காக ஒரு வீட்டில் ஒதுங்கிய இடத்தில் இருந்து கிடைத்த போனின் மூலம், தனது தற்போதைய சூழ்நிலையையும், காவல் நிலையத்தை நோக்கி தான் செல்ல இருப்பதை பற்றியும், மெசேஜ் மூலமாக தனது நண்பன் நவீனுக்கு தெரிவித்திருந்தான் தேவ்.

சிறிது நேரத்திலேயே நவீனுக்கு இந்த செய்தி கிட்ட, மொபைலின் லொகேஷன் மூலமாக அவன் இருந்த இடத்தையும், அவன் செல்லவிருக்கும் அந்த காவல் நிலையத்தை பற்றியும் அறிந்து கொண்டவன், நேராக அங்கு சென்று விட்டான்.

ஆனால் மாலையான பிறகும் கூட தேவ் அங்கு இன்னும் வராமல் இருக்க, உடனே மொபைலின் உரிமையாளரான ஜெகதீஷ்க்கு போனில் அழைத்த நவீன் தேவ் பற்றி விசாரிக்க,

“அவரும் அவர் மனைவியும் காலைலயே வீட்ல இருந்து கிளம்பிட்டாங்களே? இன்னும் அங்க வந்து சேரலையா?”

“மனைவியுமா?”

“ஆமாங்க அவர் அவங்களை இங்கேயே பத்திரமா இருக்க சொல்லிட்டு, போலீஸ்ஸோட திரும்ப வந்து கூட்டிட்டு போறதா தான் சொல்லிட்டு போனார். ஆனா அந்த பொண்ணு அவர் கிளம்பின கொஞ்ச நேரத்துலேயே நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்காம கிளம்பிட்டாங்க.இன்னுமா அங்க வந்து சேரல.. ஒருவேளை காட்டுக்குள்ள எங்கேயும் வழி தவறி போயிருப்பாங்களோ?

சார், எப்படியும் இந்த காட்டு வழியா போனா அடுத்து இருக்கிற கிராமத்துக்கு தான் போய் சேருவாங்க. நீங்க போட்டு பாதை வழியா அங்க வந்து சேருங்க. நானும் என் அண்ணாவும் காட்டு வழியா அந்த கிராமத்துக்கு போய் பார்க்கறோம், ஒருவேளை அவங்க காட்டுக்குள்ள வழி தவறி இருக்கவும் சான்ஸ் இருக்கு.”

நவீன் சில காவலர்களை அழைத்துக் கொண்டு ஒரு வழியாக செல்ல, ஜெகதீஷ் தனது அண்ணனோடு காட்டு வழியாக கண்மணியையும் தேவ்வையும் தேடிச் சென்றனர்.

கிராமத்தில் கல்யாண சடங்குகள் ஆரம்பமானது, கண்மணி மணமேடையில் இருந்து எழுந்து ஓட முடியாதபடி ஆட்களை நிறுத்தி வைத்திருந்தாள் கங்கம்மா. கண்மணியின் உடல் வெளிப்படையாக நடுங்கியது.

அதே நேரம் வாசலில் ஏதோ சலசலப்பு கேட்க திரும்பி பார்த்தவள், அங்கு கங்கம்மாவின் ஆட்களோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த தேவ்வை கண்டு, மணமேடையில் இருந்து வேகமாக எழுந்தவள் தன்னை தடுக்க வந்தவர்களை தள்ளிவிட்டு விட்டு, ஓடிச்சென்று அவனை இறுக்கமான அணைத்துக் கொண்டாள்.

அவளது உடல் நடுக்கத்திலேயே எவ்வளவு தூரம் அவள் பயந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன், ஆதரவாக அவளது முதுகினை வருடிக் கொடுத்தபடியே,

“ரிலாக்ஸ் பட்டர் ஸ்காட்ச் பயப்படாத நான் இருக்கேன்.”

கோபத்தோடு அவர்களை நோக்கி வேகமாக வந்த கங்கம்மா, கண்மணியின் கைகளை பிடித்து இழுக்க முற்பட, தேவ் கண்மணியை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கங்கம்மாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top