• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
956
8

“கர்ப்பிணிப் பொண்ணு இப்படி அதிர்ச்சியாகக் கூடாது அனு. வயித்துல பிடிச்சிக்கிட்டா ரொம்ப கஷ்டம். முதல்ல உட்காரு” என்று அதட்டலைப் போட்டு அமர வைத்தவர், “வந்ததுல இருந்து ஒரு டம்ளர் தண்ணீர் கூடத் தரலை. இதுல தமிழர் பண்பாடு வரவேற்பதுன்னு மனசுல நினைச்சி உட்கார வைக்குறீங்க” என்று அவரே அடுப்படி சென்று தண்ணீர் எடுத்து வந்து அனுரதியிடம் கொடுத்து, “குடிச்சிட்டு உணர்ச்சிவசப்படாம அமைதியா பேசணும் சரியா?” என்றார்.

சாரதா அவரின் செயலில் வாயடைத்துப்போய் அமர்ந்திருக்க, “ஆனால், நீங்க பேசினது சரியில்லை” என்றாள் அவரின் செல்லமகள்.

“சரி தப்பு நாம எடுத்துக்குற விதத்தைப் பொறுத்து அனுமா. நம்மைப் பேசுறவங்க எப்படியிருந்தாலும் பேசத்தான் செய்வாங்க. அவங்களுக்காக நாம வாழ முடியாது. அப்படிப் பேசுறவங்களுக்காக வாழ நாம பிறக்கலை. அதனால கல்யாணம் பண்ணிக்க” என்றதும் அனுரதி ஏதோ சொல்ல வர,

அவளைத் தடுத்த சாரதா, “கல்யாணம் சின்ன விஷயம் கிடையாதுங்க. சின்னப்பிள்ளைங்க விளையாடுற அப்பாம்மா விளையாட்டும் கிடையாது இது. ஏற்கனவே நடந்த மாதிரி திரும்பவும் நடக்காதுன்னு சொல்ல முடியுமா? கல்யாணத்தால பாதிக்கப்பட்டிருக்கா என்பதைத் தாண்டி, அதுவும் இந்த நிலையில்...” என்று மகளின் வயிற்றைக் காண்பித்தார்.

“எந்த நிலையிலும் ஏத்துக்க ஆள் இருந்தா?” என கேள்வியாய் நிறுத்தினார் அபிராமி.

“இந்த மாதிரிக் கல்யாணம் கற்பனைக் கதைக்கும், கனவுலகச் சினிமாவுக்கும் சரியா வரும். நிஜத்துல அப்படி யாரும் கிடையாது” என்றார்.

“அம்மா!” என இடையிட்ட மகளை, “கொஞ்ச நேரம் அமைதியாயிரு அனு” என அதட்டியவர் அபிராமியிடம், “அப்படியே வந்தாலும் என் பொண்ணு மனம் புரிந்து நடப்பானா? அவள் சொல்லுவா காதலுக்கும், கல்யாணத்துக்கும் அடிப்படைக் காரணம் காமம்தான்னு. அதில் கண்ணியத்தைக் காட்டுறவன் இருக்கானா? அந்தளவு பொறுமைசாலிங்க இப்பல்லாம் இல்லைங்க” என்று பொங்கிவிட்டார் சாரதா.

“அம்மா... அம்மாஆஆ... என்ன பேசிட்டிருக்கீங்க புரியுதா?” என தாயைப் பார்த்து கத்தி பல்லைக்கடித்தாள்.

“நான் உன்னை அமைதியா இருக்கச் சொன்னேன்” என்று மகளை அதட்டி அபிராமியைப் பார்த்தார். பார்வையில் சிறு எதிர்பார்ப்பு இருந்ததோ! அது அவர் மட்டுமே அறிந்த இரகசியம்.

“என் பையனோட வாரிசுக்கு என் பையன்தான் அப்பாவாக முடியும். வேறொருவனைக் கொண்டு வர நான் என்ன பைத்தியமா? உங்க பொண்ணு என் வீட்டுல, என் பாதுகாப்புல நல்லபடியா பிள்ளையைப் பெற்றெடுப்பா” என்றார்.

“புரியலைங்க. உங்க பையன்னா?”

“சின்னவன் இருக்கான். பொறுமையின் சிகரம்னு சொன்னால் மிகையாகாது. அவ்வளவு நல்லவன்” என்று சொன்னவருக்குதான் தெரியும் அவனின் பொறுமையின் அளவு. உள்ளுக்குள், தான் சொன்ன, சொல்லும் பொய்யிற்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்டு, “யாரையும் அதட்டியோ, மனம் நோகவோ பேசமாட்டான் என் மகன். வீணான வம்புக்கு போகமாட்டான்.” ‘என்ன வர்ற வம்பை விடவும் மாட்டான்’ என்பதை மனதினுள் நினைத்து, “நல்ல பொசிஷனில் இருக்கான். நல்ல திறமைசாலி. பொறுப்புன்னு வந்துட்டா அவங்களை எந்த நிலையிலும் கைவிடமாட்டான்” என உண்மையைச் சொன்னார்.

“அண்ணன் குழந்தைக்காகன்னு பரிதாபத்துல முடிக்கலாம்னு பார்த்தா, எனக்கு வேண்டாம்” என்று தட்டிக்கழிக்கக் காரணம் தேடினாள் அனுரதி.

“உன்னுடைய எண்ணம் எனக்குப் புரியுது அனுமா. ஆனா பாரு, அவ்வளவும் வேஸ்ட். பாவம் பரிதாபம் பார்க்க நீ என்ன நோயாளியா? இல்லை செய்யக்கூடாத தப்பைச் செய்து திருந்தி இருக்கிற பொண்ணா. உன்னைக் கண்டு பாவப்பட?”

“அப்புறம் ஏன்? நல்ல பொண்ணா பார்த்து கட்டிவைக்கலாமே. நான் வேஸ்ட்னு தெரிந்தும் எதுக்கு?” என்றாள் உள்ளார்ந்த கோவத்துடன்.

“வேஸ்டா? இதை என் பையன் முன்னாடி சொல்லிராத. அப்புறம் பொறுமைசாலியும் பொங்கி எழுந்துருவான். எதுக்கு உன்னை நீயே தாழ்த்திக்குற அனுமா. அறியாது செய்யுற தப்புக்கு கடவுள் கோர்ட்டுல மன்னிப்பு உண்டு. நீ அறியாது கூட எதுவும் செய்யலையே அப்புறம் ஏன் வேஸ்ட், பாவம்னு உன்னை நீயே கீழா பார்க்கிற? இதையெல்லாம் நான் அவன்கிட்ட பேசாமலா உன்கிட்ட வந்திருக்கேன். அவனுக்கும் எல்லாம் தெரியும். என் வளர்ப்பு பொண்ணுங்களை மதிக்கதான் செய்யும். அவனை எந்த இடத்திலும் நான் கட்டாயப்படுத்தலை” என்றார் அழுத்தமாக.

“ஆனா, என்னைக் கட்டாயப்படுத்துறீங்க” என்று முகம் சுருக்க,

“உன் சூழ்நிலை அப்படி. குழந்தைக்கு மருந்து கொடுக்கணும்னா, அமுக்கிப்பிடித்து ஊத்துறதில்ல. அது மாதிரிதான் இதுவும். வேண்டாம்னு மறுக்கிற ஒண்ணு உனக்கு நல்லதுன்றதால மருந்தை கட்டாயப்படுத்திக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை” என்று அடமாக நிற்க,

அபிராமியையும், அனுரதியையும் பேசவிட்டு வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தனர் சாரதாவும், ஆனந்தனும். ஏனோ சாரதாவிற்கு மகளின் நல்வாழ்வு கண்ணில் தெரிய முகத்தில் தெரிந்த பூரிப்பை மறைத்தபடி அமர்ந்திருந்தார்.

“நான் குழந்தையில்லை” என்று இவளும் தன் பிடிவாதத்தை நிறுத்தவில்லை.

“நானும் குழந்தைத் திருமணம் செய்யலை. குழந்தையோட அம்மாவுக்குதான் திருமணம் செய்யப்போறேன். இந்த மாதம் முகூர்த்த மாதம்தான் வளர்பிறை கூட. வர்ற வெள்ளிக்கிழமை திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்ல வச்சி கல்யாணம். அன்னைக்கு சாயங்காலம் ரிசெப்ஷன். கல்யாணப்புடவை தாலி எல்லாம் வாங்கிரலாம். பத்து மணிக்கெல்லாம் வந்திருவேன். எங்கேயும் போயிராத. இப்ப கிளம்புறோம். வாண்ணே போகலாம்” என்று ஆனந்தனை அழைத்தபடி எழ,

“மன்னிக்கணும்” என கூடவே எழுந்த அனுரதியை மூவரும் கேள்வியாய்ப் பார்க்க, “நீங்க பேசின எல்லாம் ஓகே. அதுல எங்களுக்குச் சம்மதமான்னு, எங்களை, முக்கியமா என்னைக் கேட்கவே இல்லையே? அதெப்படி எங்க சம்மதம் இல்லாமல் ஒரு கல்யாணம்?” என்றாள் நேரடியாகவே.

“ம்... அனுமா. எங்களுக்குன்னு சேர்த்து சொல்லாத. உன் அம்மாவுக்குச் சம்மதம்னு அவங்க மௌனம் சொல்லுது. பொண்ணுங்க சம்மதம் கேட்டுதான் கல்யாணம் செய்யணும்னு எனக்கும் தெரியும். நீ அந்த கேட்டகிரியில் வரலை” என்றார்.

“வாட் யூ மீன்?”

“ஐ மீன், நீ ஒரு தாய். ஒரு தாய் தன் குழந்தைக்கு எது நல்லதோ, அது பிடிக்காத கசப்பு மருந்தா இருந்தாலும் அதைத்தான் கொடுப்பா. நீயும் அப்படித்தான்னு தெரியும். உன் வயிற்றில் உள்ள பிள்ளைக்கு சமூகத்திலும், உன் இதயத்திலும் அங்கீகாரம் கொடுக்கதான் இந்தக் கல்யாணம். உனக்காகவோ என் பையனுக்காகவோ இல்லை” என்றார் தெளிவாக.

‘இவ்வளவு நேரம் எனக்காகன்னு சொல்லிட்டு இந்தம்மா எப்படி பேச்சை மாத்துறாங்க பாரேன்’ என மனதினுள் திட்டிவிட்டு, “அதெல்லாம் சரிங்க மேடம். இப்ப உங்க பெரிய பையன் உயிரோட இருந்திருந்தா?” என்று கேள்வியாக நிறுத்தினாள்.

“அப்பவும் இந்தக் கல்யாணம் நடந்திருக்கும்” என்றார் அழுத்தமாக.

“எப்படி? அதுவும் கல்யாணத்தால பாதிக்கப்பட்ட என்னை உங்க பையன் கல்யாணம் பண்ணியிருப்பார்? யார்கிட்டக் கதை விடுறீங்க” என்றாள் கிண்டலாக.

“ஆமா பண்ணியிருப்பான். எங்களால் ஒருத்தர் வாழ்ந்ததா இருக்கணுமே தவிர, வீழ்ந்ததா இருக்கக்கூடாது. கல்யாணத்தால நீ பாதிக்கப்பட்டது விதி. விதியைத் தவிர வேறெதுவும் சொல்றதுக்கில்லை. இப்பல்லாம் மறுமணம்ன்றது சகஜமான ஒண்ணு. கோர்ட்ல பாதி கேஸ் விவாகரத்துதான் போகுதாம். அதுல பாதிக்கப்பட்டவங்க கம்மியாதான் இருப்பாங்க. மத்ததெல்லாம் உப்புப் பெறாத காரணமாயிருக்கும். இவங்க எல்லாரும் மறுமணம் செய்யாமலா இருக்காங்க. இங்க டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டு, அங்க வேற வேற ஆளை மேரேஜ் பண்ணி செட்டிலானவங்களை உனக்குக் காட்டவா? அதனால முதல் கல்யாணம் பெய்லியராகிருச்சி. இனிமேல் கல்யாணமே என் வாழ்க்கையில் இல்லைன்னு பிடிவாதம் பிடிக்காத. வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்குத் தயாராயிரு” என்றவர் சாரதாவிடம் வந்து, “நாங்க வர்றோம் சம்பந்தியம்மா. அண்ணே போகலாம்” என்று கைகுவித்து புன்னகையுடன் வணக்கம் வைத்தார் அபிராமி.

“நா...” என பேச வாயெடுத்த மகளிடம், “பாப்பா எல்லாரும் அவனை மாதிரி இருக்கமாட்டாங்கடா” என்றார் சாரதா கனிவாக.

“ம்மா... கல்யாணம்னா அதோட முடிஞ்சிராது. கடைசிவரை இவங்க பையன் பிரம்மச்சாரியா இருப்பானா? என்னால கல்யாணம்னா கட்டில் என்ற கான்செப்ட்ல வாழ முடியாது. தயவுசெய்து அவங்க நினைப்பை மாத்திக்கிட்டு போகச் சொல்லுங்க” என்றாள் எரிச்சல் குரலில்.

ஏனோ அவளுக்கு தண்ணீருக்குள் மூழ்கி மூச்சித் திணறும் நிலை இப்போது. இந்தத் திணிப்பை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

“நானும் அந்த கான்செப்ட்ல வாழச் சொல்லலையே அனுமா. பிள்ளைக்காகக் கல்யாணம் செய்யுறீங்க. பிடிச்சா சேர்ந்து வாழுங்க. பிடிக்கலைன்னா புரிந்து பிடிக்க ஆரம்பித்ததும், அதாவது உங்களுக்குள்ள காதல் வந்ததும் வாழ ஆரம்பிங்க. கடைசிவரை உன் மனசு மாறலைன்னா, இந்தக் குழந்தை மட்டுமே உங்க வாழ்க்கைன்னு இருந்துக்கோங்க. உன் மனசை மாற்றி உன்னோடு வாழுறது என் மகன் சாமர்த்தியம். புருஷன் பொண்டாட்டி உறவுக்கு நடுவில் நான் எப்பவும் வரமாட்டேன்” என்றார் விளக்கமாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
956
“காதலா! கருமம் சான்ஸேயில்லை. எந்தத் தாயும் அவ்வளவு சீக்கிரம் தன் பிள்ளையை விட்டுக்கொடுத்திர மாட்டாங்களே. நீங்க என்ன இப்படிப் பேசுறீங்க?” என்று கேள்வியாய் நிறுத்தினாள்.

“நான் செய்வேன். அப்படிச் செய்தால்தான் என் மகன் நல்லா இருப்பான்னா, கண்டிப்பா அதைச் செய்வேன். இல்ல இங்க உன் வீட்டுல வீட்டோட மாப்பிள்ளையா அவனை வரச்சொல்றியா, தாராளமா அவனை அனுப்புறேன், நீ என் மருமகளானால். அவன் எந்தளவு முக்கியமோ அதே அளவு நீயும் முக்கியமாகிருவ அனுமா. ஹ்ம்... உனக்குக் கேள்வி இருந்துகிட்டே இருக்கும். எனக்குப் பதில் சொல்லதான் நேரமில்லை. நாளைக்குப் பார்க்கலாம். அண்ணே!” என திரும்ப,

“அவர் அப்பவே வெளிய போயிட்டார்” என்றார் சாரதா.

“ஓ... சரிங்க சம்பந்தி நான் வர்றேன்” என்று காரில் ஏறிய நிமிடம் கார் மெல்ல நகர, “அந்தப் புள்ளையைப் பேசவிடாம பண்ணிட்டியேமா. புள்ள திணறுதுல்ல” என்று சிரித்தார் ஆனந்தன்.

“பொறுமைல்லாம் இந்த ஸ்டேஜ் பொண்ணுங்களுக்கு சரியா வராதுண்ணே. அவள் அனுபவித்த வலி, அவளை அதிகம் பேச வைக்கும். நல்ல பொண்ணுண்ணே! ஏதோ முதல்ல அமைந்தது அரக்கனா போயிருச்சி. பதிலுக்குப் பதில் என்ன பேச்சின்னு பார்த்தீங்கதான? என்ன உங்க மருமகன்தான் கத்துவான்னு பார்த்தேன். அவன் என்னடான்னா எதுவுமே கேட்காம சம்மதிச்சிட்டான்” என்று சிரித்தார்.

“என் மருமகனை பொறுமைசாலின்னு சொன்னப்ப, சட்டுன்னு சிரிப்பு வந்திருச்சி அபிமா” என்று அப்பொழுது முடியாததை இப்பொழுது சொல்லிச் சிரித்தார் ஆனந்தன்.

“நானே கடவுள்கிட்ட மானசீகமா மன்னிப்பு கேட்டுட்டேண்ணே! அவன் அடாவடி கேரக்டர்னு சொன்னா, பயந்து கல்யாணம் வேண்டாம்ன்றதுல பிடிவாதமா நிற்பா. இவள் நிற்கிறாளோ இல்லையோ, சாரதா நிற்பாங்க. இவள் விசயத்துல உங்க மருமகன் அப்படிப் பண்ண மாட்டான்ற நம்பிக்கை இருக்கிறதால சொல்லி வச்சிட்டேன். அவளைப்பற்றி பேசுறப்ப ரொம்ப அமைதியா உன்னிப்பா சொல்றதை கேட்டுக்குறான்.”

“இந்தப் பொண்ணு அவனோட சேர்ந்து வாழமாட்டேன், கடமைக்காக இருப்பேன்னு சொல்லுதேம்மா. அதான் கொஞ்சம் கவலையாகிருச்சி” என்றார் வருத்தமாக.

“இரண்டாம் திருமணம் இல்லையாண்ணே! வருஷக்கணக்கா ஆகியிருந்தா ஒருவேளை அந்த பாதிப்பு கம்மியாகி இருக்கும். இங்க மாதக்கணக்குதான ஆகுது. அதனால அதன் பாதிப்பு அதிகம் இருக்கதான் செய்யும். முதல்ல இன்னொரு ஆணை ஏத்துக்கவோ, நம்பவோ தோணாது. மீறி அவள் மனசை மாத்துறது உங்க மருமகன் திறமை. இஷ்டம்னு வந்துட்டா கஷ்டம்லாம் தூசிக்குச் சமம். அவனுக்கு அனுவை ஏதோவொரு வகையில் பிடிச்சிருக்குண்ணே. அதான் அமைதியா சம்மதம் சொல்லிட்டான். இல்லைன்னா அவனை மலையிறக்க முடியுமா? அவன் அன்பு அவளை மாத்திரும்ணே. நம்ம கடமை எப்பாடுபட்டாவது இந்தக் கல்யாணத்தை நடத்திரணும். நம்ம வீட்டு வாரிசும் உரிமையோட நம்ம வீட்டுக்கே வந்திரும்” என்றார்.

“அதுக்காகத்தானம்மா இத்தனை பாடு” என்ற பெருமூச்சோடு காரை ஓட்டினார் ஆனந்தன்.

“அம்மா! அவங்க பேசுறதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டு அனுப்பியிருக்கீங்களே இது நியாயமா?” தாயிடம் நியாயம் கேட்டு கத்திக்கொண்டிருந்தாள் அனுரதி.

“நியாயம் அநியாயம் பார்த்தா உன்னை வாழவைக்க முடியுமா?” என்றார் அவரும்.

“என்னம்மா நீங்களும்?”

“என் பொண்ணு நல்லா வாழ ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. கடவுள் கொடுக்கிற சந்தர்ப்பத்தை நழுவவிட நான் தயாராயில்லை.”

“எனக்கு சுத்தமா பிடிக்கலைம்மா. ஏன் கட்டாயப்படுத்துறீங்க?”

“அப்ப, அந்த ரவிசங்கரோட குழந்தைதான் இதுன்ற மத்தவங்க எண்ணத்துக்கு தீனி போட்டு, கல்யாணம் செய்யாம வாழப் போறியா?” என்றார் அதிரடியாக.

“ம்மா...” என கத்த,

“முடியாதுல்ல. அப்ப அடுத்த சாய்ஸ் இதுதான். அவங்க சொல்றதைப் பார்த்தா பையன் நல்லவனாதான் இருப்பான். இல்லைன்னா அண்ணன் குழந்தைக்காகனாலும், இந்தக் காலத்துல தன்னை வேண்டாம்னு மறுக்கிற பொண்ணை எவன் கட்டிப்பான். அதுவும் கடைசிவரை பிரம்மச்சாரியா வாழணும்னாலும் சம்மதம்னு சொல்லுற ஆண் யாராவது ஒருத்தரைக் காட்டு பார்ப்போம். நான் முடிவு பண்ணிட்டேன் அனுமா. நீயும் மனசை மாத்திக்கோ. இல்லையா கடைசிவரை ரவிசங்கர் உறவு உன்னை ஒட்டிட்டேதான் இருக்கும். காலத்துக்கும் மாறாது. முடிவு உன் கையில்” என்று உள்ளே சென்றார்.

தலையைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்தவள் நடந்ததை ஓட்டிப்பார்த்து எதிலும் பிடித்தமில்லாமல் போக, தன்னை மீறி நடக்கப்போவதைத் தடுக்க முடியாமலும் இருந்தாள். என்னவோ மனமெல்லாம் பாரமானது. ‘எப்படி இன்னொருவனை?’ இந்தக் கேள்வியே மனதைக் குடைந்து உயிரைக் கொன்றது.

அவளின் இந்நிலையைப் போக்கி வாழ்வை சோலையாக்கி, வசந்தத்தைக் கொடுத்து, ஒளியாய் மிளிர்வானா அவளின் அழகன்!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top