- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
5
“அனு! பு...புரியலை நிழல், நிஜத்துக்கான வித்தியாசம்னா?” ஏதோ புரிவதுபோல் தோன்ற, ‘கடவுளே அதுவா மட்டும் இருந்திரக்கூடாது’ என உடனடி வேண்டுதல் வைத்தாள், அதுவே உண்மை என்றறியாது.
தோழியின் முகம் பார்த்து அவள் எண்ணம் புரிந்த அனுரதி, அதுதான் உண்மையென்று சொல்லி, திருமணத்திற்கு முன்தினம் இரவு நடந்ததில் இருந்து அனைத்தையும் சொல்லி முடிக்க, மாலினி கண்களில் கண்ணீருடன் தோழியை இறுக்கி அணைத்திருந்தாள்.
“சாரி. சாரிமா. நீ என்னை எவ்வளவு தேடியிருப்ப? என்னால உன் பக்கத்துல இருக்க முடியலையே. நைட் உன் கூட இருந்திருக்கணும் அனுமா. இருந்திருந்தா அப்பவே அவனைப் பிடிச்சி விசாரிச்சிருப்பேன். தப்பிச்சிருந்தால் கூட, சிசிடிவி செக் பண்ணியாவது இவன்தான்னு கண்டுபிடிச்சிருப்பேன். இந்தக் கல்யாணமும் நடந்திருக்காது. உன்னை இக்கட்டான நிலையில் விட்டுட்டேனே” என்று புலம்பினாள்.
“உன்னுடைய சூழ்நிலை மானி? இதுதான் நடக்கணும்னு இருந்திருக்கு. அதுக்காக உன்னை ஏன் குற்றவாளியாக்குற?” என்று முதுகை நீவி விட,
“எனக்கேத் தெரியலை அனு. உன்கூடவே இருக்கணும்னுதான் ட்ரெஸ்லாம் எடுத்துட்டு வந்தேன். ஏன் வீட்டுக்குத் திரும்பிப் போனேன்னு தெரியலை. மனசே ஆறமாட்டேன்னுது. நீ இதிலிருந்து மீண்டு வந்ததே போதும்னு இருக்கு” என்றாள் வருத்தம் மேலிட்ட குரலில்.
தோழியைத் தன்னில் இருந்து பிரித்து அவள் கண்ணீர் துடைத்து, “இதையெல்லாம் அனுபவிக்கணும்னு இருந்திருக்கு மானி. இல்லைனா என்னுடனே ஒட்டித் திரியும் நீ, அப்பப் பார்த்து விட்டுட்டுப் போயிருப்பியா? அந்த ஆக்சிடெண்ட்தான் நடந்திருக்குமா? எல்லாம் விதின்னு விட வேண்டியதுதான் மானி” என்றாள் விட்டேற்றியாக.
“அவன் மேல சின்னதா சந்தேகம் வந்திருந்தாலும், உன்னை விட்டுட்டுப் போயிருக்கமாட்டேன் அனு. பக்காவா நடிச்சி ஏமாத்தியிருக்கான். ஏதோ கண்கட்டி வித்தை மாதிரி எதோவொரு மாயை எல்லாத்தையும் தடுத்திருச்சி” என்று புலம்பலைத் தொடர,
“மானி இது ஆஃபீஸ். இன்னைக்குதான் முதல் நாள் வேலைக்கு வந்திருக்கோம். யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க. முடிஞ்சது முடிஞ்சிருச்சி. நான் அதிலிருந்து வெளில வந்துட்டேன். இனி அதைப்பற்றின பேச்சு வேண்டாமே” என்றாள் கெஞ்சலாக.
“சரிடி சரி. இனி அதைப்பற்றிப் பேசமாட்டேன்” என்றாள்.
“மானிமா எனக்கொரு உதவி செய்யுறியா?” என்றவள் குரலில் அத்தனை இறுக்கம்.
“சொல்லுடி. என்ன செய்யணும்?”
“இனிமேல் ‘டி’ போட்டுப் பேசாதே. அந்த வார்த்தையைக் கேட்டாலே உடம்பெல்லாம் தீப்பிடிச்ச மாதிரி பத்திக்கிட்டு எரியுது. அந்த எரிச்சலோட சேர்ந்து அளவுக்கதிகமான கோவமும் வருது மானி. தயவுசெய்து அப்படி மட்டும் கூப்பிட்டுராத. இல்லைன்னா என்னை மீறி என்ன செய்வேன்னே தெரியாது. அந்தளவு அந்த வார்த்தையை வெறுக்கிறேன்” என்றவள் கண்களில் அக்னி தெரிக்குமளவு கோவம்.
“அனு!” என அதிர்ந்து விழித்தவளைப் பார்த்து கோவம் தணிந்து, “அட வா நட்பே” என எழுப்பி கூட்டிச் சென்றாள் அனுரதி.
வேலையில் சேர்ந்து ஒரு வாரமாக, வேலையில் ஓரளவு கற்றுத் தேர்ந்திட, சகஜ நிலைக்கு வந்திருந்தனர்.
“அனு ஒருமாதிரி அன்ஈஸியா இருக்கு. ஐ திங்க், பீரியட்ஸ் டைம்னு நினைக்கிறேன். நாப்கின் வச்சிருக்கியா?”
“பீரியட்ஸா?” எதையோ யோசித்து, “நாப்கின் என்கிட்ட இல்லடா. இரண்டு மாசமா வரலைன்றதால அதை வச்சிக்கத் தோணலை. சாரி மானி” என்றவள், “ஹ்ம்... மானி ஏன் இரண்டு மாசமா வரலை? டி.என்.சி பண்ணினா ரெகுலரா வரணுமே” என்று கேட்டு யோசனையிலாழ்ந்தாள்.
“ஆமா அனுமா. இரண்டு மாதம் ஆகுதுன்னா உடனே செக் பண்றது நல்லது. இந்த சண்டே நாம போய்ப் பார்த்துட்டு வரலாம்” என்றாள்.
அந்த வாரம் ஞாயிறும் வர, தனக்கு மருத்துவம் பார்த்த இடத்திலேயே பார்க்க வேண்டும் என்பதால், காலை பதினோரு மணியளவில் இருவரும் மருத்துவமனை சென்று வரவேற்பறையில் உள்ள பெண்ணிடம், “டாக்டர்.வர்ஷாவைப் பார்க்கணும்” என்றாள் அனுரதி.
பரிச்சயமான ஒரு பார்வை பார்த்து, “நீங்களா? அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியாச்சா?” என கேட்க,
“இல்லமா. என் பெயர் சொன்னா தெரியும். கேட்டுச் சொல்லுங்க” என்று தன் பெயரைச் சொன்னாள்.
“கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க மேம்” என்று தொலைபேசியில் மருத்துவரை அழைக்கையில், அவரே அங்கு வந்து வரவேற்புப் பெண்ணிடம் எதோ சொல்ல வாய் திறந்தவர், அங்கு நின்ற அனுரதியைப் பார்த்து அதிர்ந்தார்.
பின் அவளிடம் என்ன கண்டாரோ, முகத்தைச் சாதாரணமாக வைத்து, “அனுரதி! இங்க எங்க? எதாவது பிரச்சனையா?” என கேட்டார்.
“செக்கப் பண்ணணும் டாக்டர்.”
“சரிமா என் ரூமுக்கு வாங்க” என்றழைத்துச் சென்று, “சொல்லுமா?” என்றார்.
“டாக்டர் இங்க இருந்து போனதில் இருந்து பீரியட் வரலை. மாசம் இரண்டாகுது. டி.என்.சி பண்ணினதுல ஐந்து நாள் போல வந்தது. அதுக்கப்புறம் வரலை. சில நேரம் இருந்தாப்ல தலை சுத்துது. அதீத டென்சனால பிரசர் வந்திருச்சி நினைக்குறேன். அதான் கேட்டுட்டு செக்கப் பண்ணிக்க வந்தேன் டாக்டர்” என்றதில் மருத்துவர்.வர்ஷா எச்சில் விழுங்க அவளைப் பார்த்தார்.
அருகிலிருந்த பாட்டில் தண்ணீரை எடுத்து தொண்டைக்குள் சரித்து, தன்னை நிதானப்படுத்தியவர், ஸ்டெதஸ்கோப் எடுத்து காதில் மாட்டி அனுரதியின் கைபிடித்து நாடியில் வைத்து, மூச்சை இழுத்துவிடச் சொன்னவரோ, நாடி கூறிய செய்தியில் மூச்சடைத்துப் போனார்.
அவரின் செயலில் புரியாது பார்த்து, “என்ன டாக்டர்?” என பெண்கள் கேட்ட கேள்விக்கு, “ஒண்ணுமில்லை. சரியான ஓய்வு கிடைக்காததால சின்னதா ஹெல்த் இஷ்யூ எனக்கு. அதேதான் உனக்கும். நல்ல புக்ஸ் மோட்டிவேஷனல் ஸ்பீச், ஏன் வேலைக்குக் கூட போகலாம். எப்பவும் சுற்றிலும் பாசிட்டிவ் வைப்ரேட் இருக்கிற மாதிரி பார்த்துக்கோ. சீக்கிரமே எல்லாம் சரியாகும்” என்றார்.
“ஓ... சரிங்க டாக்டர்” என்றதும் அங்கிருந்த பெட்டில் படுக்கச்சொல்லி சோதித்துப் பார்த்து தன் இடத்திற்கு வந்தவர் அனுரதி வந்ததும், “ஒண்ணுமில்ல அனு. சிலருக்கு இப்படி நடக்குறதுதான். மூணு நாளைக்கு டேப்லட் தர்றேன் ரெகுலரா போடுங்க. அப்படியும் வரலைன்னா நெக்ஸ்ட் மன்த் ஸ்கேன் பண்ணிப் பார்த்திரலாம்” என்று மாத்திரை எழுதிக் கொடுத்து, “அப்பறம் அனு வெய்ட் தூக்காதீங்க. லாங் டிராவல் போகணும்னா என்னை கன்சல்ட் பண்ணிக்கோங்க. ஹெல்தி ஃபுட் எடுத்துக்கோங்க” என்றவர் சில பழங்களின் பெயர் சொல்லி அதை எடுத்துக்க வேண்டாம் என்றார்.
“மேக்சிமம் அம்மா எதையும் செய்ய விடுறதில்லை டாக்டர். உடம்புக்கு எது நல்லதோ அது மாதிரிதான் சாப்பாடு, பழம்னு கொடுக்கிறாங்க. அதனால பிரச்சனை இல்லை” என்றாள்.
“குட். ஆட்டோவில் போகும்போது ஸ்பீடா போகவேண்டாம் சொல்லிருங்க. என்னதான் அம்மா பார்த்துக்கிட்டாலும், நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்” என்று மாத்திரை எழுதிக்கொடுத்து அவளை அனுப்பினார்.
மாத்திரை வாங்கி வந்து எதை எப்பொழுது போடா வேண்டுமென செவிலியிடம் கேட்டு வெளியே வர, “ஏன் அனு, ஒரு டி.என்.சிக்கு இவ்வளவு ரூல்ஸா? ஆனாலும், ரொம்ப கேர் எடுத்துக்குறாங்க” என்றாள் மாலினி.
“அது நிஜம்தான். நர்ஸை விட இவங்கதான் கூடயிருந்து பார்த்துக்கிட்டாங்க. ஒருவேளை என்னோட கேஸ் வித்தியாசமா இருந்ததால எக்ஸ்ட்ரா கேர் எடுக்குறாங்களோ என்னவோ. நல்லதுக்குத்தானே சொல்றாங்க. ஃபாலோ பண்ணிக்கலாம். ஆமா வீட்டுக்கு வர்றியா?”
“இல்ல அனு. இப்படியே ஆட்டோ பிடிச்சி வீட்டுக்குப் போயிர்றேன். இல்ல உங்கண்ணன் எனக்கு தீபாவளி கொண்டாட சான்ஸ் இருக்கு” என்றாள்.
“எது... உன்னையா? ஹ்ம்... எங்கண்ணாவுக்கு நீ கொண்டாடாம இருந்தா சரி” என அவரவர் வீடு சென்றனர்.
அடுத்த இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஏதோ ஒரு வித்தியாசத்தைத் தன்னுடலில் கண்டவள் தாயிடம் கேட்க, “மாதம் மாதம் சரியா தலைக்கு ஊத்துறதான அனுமா?” என கேட்டார் சாரதா.
“இல்லையேம்மா. இரண்டு மாதம் முன்ன டாக்டர்கிட்ட செக்கப் பண்ணி டேப்லட் வாங்கிட்டு வந்தேன். போன மாசம் வரச்சொன்னாங்க. வேலைப்பளுவில் போக மறந்துட்டேன். ஆனாம்மா, வயிறு லேசா தொப்பை போட்டிருக்கு” என்றாள் வருத்தக்குரலில்.
“நாள் தள்ளிப்போனா, ஒவ்வொரு மாதத்திலும் வெளிவரும் இரத்தம் நிறுத்தப்படுறதால, வயிறு கொஞ்சம் உப்பலாதான் இருக்கும். நேரத்திற்கு சரியா வந்தா உடல் ஒரு நிலைக்கு வந்திரும். சனி இல்லை ஞாயிறு அப்பாய்ண்ட்மெண்ட் போட்டுரு. இன்னும் நாள் போனா பக்க விளைவு எதுவும் வந்திரப்போகுது” என்றார்.
“சரிம்மா” என்று அலுவலகம் வர, அவள் அமரும் இடத்தில் இருந்த காகிதத்தை வினோதமாகப் பார்த்துக் கையில் எடுத்து அமர்ந்தபடி காகிதத்தில் உள்ளதைப் படிக்கப் படிக்க கோபமேறி, “ஏய்! ச்சீ...” என்று அதைத் தூக்கிப் போட்டாள்.
“என்னாச்சி அனு? ஏன் டென்சனாயிருக்க?” என்றபடி வந்த மாலினியிடம் அந்த காகிதத்தைக் காண்பிக்க, அதை எடுத்துப் படிக்கலானாள் மாலினி.
அனு! தினம் விழித்தே கனா
திரளுது நெஞ்சில் வினா
ஒரு துளிப் பார்வை தனா
தூண்டிடும் காதல் சனா!
சுற்றும் முள்ளெனச் சுற்றி வருகிறேன்
சற்று நிமிர்ந்தென்னைப் பார்ப்பாயா?
ரெட்டை விழிகளில் பார்வையாகிட
லஞ்சம் ஏதும் நீ கேட்பாயா?
இதுவரை கேட்டிராத பாடல் வரிகள் நீண்டுகொண்டே செல்ல, அதைக் கிழித்தெறிந்த மாலினி தோழியைப் பார்க்க, “நான் நிம்மதியா இருக்கிறது யாருக்கோ பிடிக்கலை போல மானி. காதல் கண்றாவின்னு சே...” என முகம் சுளித்தாள்.
“காதல் அழகான உணர்வு அனுமா” என்ற மாலினி கனவுலகிற்குச் செல்ல,
“ஏய்! லூசு! முதல்ல கனவை விட்டு வெளியே வா. எங்கண்ணன் நல்லவர்ன்றதால நீ அதை காதல்னு பிணாத்துற. இதுவே சரியில்லாத ஆளா இருந்தா என்ன பண்ணியிருப்ப?” என்று திட்டினாள்.