- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
4
அதன் நுழைவாயிலில் “கொயட் சாஃப்ட்வேர் கம்பெனி” என்ற பெயருக்குக் கீழ், “மனிதனால் முடியாதது எதுவுமில்லை! முயலாமை தோல்வியளிக்கும்!” என்ற வாசகமிருக்க “ம்... உழைப்பாளி போல” என்ற எண்ணம் அவளுக்கு.
உள்ளே பதினெட்டு பேர் இருக்க, பத்தொன்பதாவதாய் அனுரதி அமர, அடுத்த அரைமணி நேரத்தில் நேர்முகத் தேர்வு ஆரம்பிக்கப்பட்டது.
ஏ,பி,சி வரிசையில் பெயர்கள் அழைக்கப்பட்டதால் இவள் பெயர் இரண்டாவதாக வர பதற்றம் சொல்லாமலே வந்தது. அந்த ஏசி அறையிலும் வியர்ப்பதாகத் தோன்ற மானசீகமாகத் தனக்குத்தானே ‘ரிலாக்ஸ்’ என்றுரைத்து தன்னைத் திடப்படுத்தி, “மே ஐ கம் இன் சார்?” என உள்ளே வர அனுமதி கேட்டாள்.
“எஸ் கம் இன்” என்றதும் உள்ளே வந்தவளை உட்காரச் சொன்னார் ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்த நபர். அவருக்கு நன்றி சொல்லி, கையிலுள்ள கோப்புகளை அவரிடம் கொடுக்க, அனைத்தையும் சரிபார்த்தவர், “இதுக்கு முன்ன நீங்க வேலை பார்த்த கம்பெனி, நல்ல நேம் உள்ளதாச்சே. பெரிய கம்பெனி. நிறைய சாலரி வேற. அதை ஏன் விட்டீங்க?” என கேட்டார்.
“மேரேஜ் நடந்ததால நின்னுட்டேன் சார்.”
“மேரேஜ்னா லீவ் எடுத்துட்டு மறுபடியும் போயிருக்கலாமே?” என்றார் சந்தேகத்துடன்.
“வீட்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க சார்.” என்றாள் நிதானமாக.
“ஓகே. இப்ப ஏன் திரும்பவும் வேலை தேடுறீங்க? பழைய கம்பெனியில் வேகன்சி இருந்தா பார்த்திருக்கலாமே” என்றார்.
‘அது என் பெர்சனல்யா. அதையேன் தோண்டுற?’ என மனதிற்குள் திட்டி எரிச்சல்பட்டவள், “அங்க போக விருப்பமில்லை சார். என் மேரேஜ் லைஃப்கு ஆயுள் நான்கு நாள்கள்தான். இப்ப நான் மிஸ்தான்! மிஸஸ் இல்லை. பழைய கம்பெனிக்குப் போனா பெர்சனலா நிறைய கேள்வி வரும். அதைத் தவிர்க்கதான் இங்க வந்தேன்.” ‘இங்கேயும் இப்படி செய்கிறாயே’ என்று அவரை அவரறியாமல் முறைத்து, “தப்பு நம்ம மேல இல்லைன்னு தெரிஞ்சாலும் புறணி பேசுறவங்க பேசிட்டுதான் சார் இருப்பாங்க. அதைத் தட்டிவிட்டு திடமா நின்றாலும், எதிர்மறையான இடத்துல எதுக்குன்னுதான் வேற வேலை பார்த்தது” என்றாள் நிமிர்வாகவே.
“குட்” என்றவர் அடுத்த கேள்வியைக் கேட்க ஆரம்பிக்கும்போது, “லேட்டாகிருச்சா பாஸ்? எத்தனை பேர் இன்டர்வியூ போயிருக்கு” என்று அனுரதிக்கு அடுத்திருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான் அவன்.
பக்கத்து இருக்கைதான் என்றாலும், சட்டென்று எழுந்துவிட்டாள் அனுரதி. அதற்கு அவனின் தோற்றமும் ஒரு காரணம் என்றாள் மிகையாகாது.
“ஏன்மா உட்காருங்க” என்றவர் அவள் இருக்கையின் நுனியில் அமர்ந்ததும், “இவங்க இரண்டாவது. இன்னும் பதினெட்டு பேர் இருக்காங்க” என்றதும் அனுரதியின் கோப்பை எடுத்துப் பார்த்தவன், “மிஸ்.அனுரதி எம்.பி.ஏ” என்றான் அவள் முகம் பார்க்காது.
“எஸ் சார்” என்றாள் பயத்தை மறைத்து.
“ம்... காலேஜ் டாப்பர். கோல்ட் மெடலிஸ்ட். எம்எஸ் சாஃப்ட்வேர் கம்பெனியில் இருந்து வந்திருக்கீங்க” என்றவாறு வேலை சம்பந்தாகவும், பொது அறிவு சம்பந்தமாகவும் கேள்விகள் கேட்டு, அதற்கான பதிலாக அவள் சொன்னதையும், கம்பெனி முன்னேற்றத்திற்கான வழியென்று அவள் தரப்பு விளக்கத்தையும் கேட்டு, அவள் பதிலில் மனதார பாராட்டி, “இன்னைக்கு ஈவ்னிங் உங்களுக்கு மெயில் வரும். நீங்க செலக்டாகிட்டா நாளைக்கே வந்து ஜாயின் பண்ணிக்கலாம்” என்று அவளைப் பற்றிய குறிப்புக்கான காகிதத்தை எடுத்து மற்றதை அவளிடம் திருப்பிக் கொடுத்து, “செலக்டாக வாழ்த்துகள்” என்றான் இதழ்பிரியா புன்னகையுடன்.
“தேங்க்யூ சார்” என்று திரும்புகையில், அழைப்பு மணி சத்தத்தில் உள்ளே வந்த ப்யூனிடம் “கணேஷ் வரச் சொல்லுங்க” என்றான்.
கணேஷ் என்பவன் உள்ளே வருகையில் அனுரதி வெளியே செல்ல, வரவேற்பறையைக் கடக்கும் வழியில், மின்னல்போல் தன்னைக் கடந்து சென்ற பெண்ணை, யாரென பார்க்க முயற்சித்து முடியாமல் தோளைக்குலுக்கி நடக்க ஆரம்பித்தாள் அனுரதி.
வீட்டிற்குச் சென்றும் சாப்பிடக் கூட இல்லாமல் மின்னஞ்சலுக்காகக் காத்திருக்க, “சாப்பிட்டு அப்புறமா பாரேன்மா” என சாரதா சொல்லிப்பார்த்தும் கேட்காது நகத்தைக் கடித்தபடி இருக்க, வேறு வழியில்லாது தானே ஊட்டிவிட ஆரம்பித்தார். வேண்டாமென மறுத்தும் கேட்குமா தாய் மனம், மகளின் வயிற்றை நிறைத்தே விலகியது.
மாலை ஆறு மணியளவில் ‘செலக்டட்’ என வந்திருந்த உறுதிப் படிவத்தைப் பார்த்தவளுக்கு அவ்வளவு சந்தோஷம். நிறுவனத்தின் விதிமுறைகள், நிபந்தனைகள் இருந்ததைப் படித்துப் பார்த்து, “அம்மா சம்பளம் நாற்பதாயிரம் வரை வரும்னு எதிர்பார்த்தேன். இதில் அறுவது போட்டுருக்காங்க. இவ்வளவுக்கும் நான் வேலை பார்த்த கம்பெனியை விட இது சின்ன கம்பெனிதான். என்னோட எக்ஸ்பீரியன்ஸ்னு பார்த்தா ஒன் இயர்தான் ஆகுது. ம்... பரவாயில்லை நல்ல ஆஃபர்தான். இதைவிட சிறந்த ஆஃபர் கம்பெனி வண்டி வாசலுக்கே வந்துருமாம்” என தாயிடம் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்தாள்.
“சந்தோஷம் அனுமா. உனக்கும் பஸ்ல போகணும், ஸ்கூட்டியில் போகணும் என்ற அலைச்சல் இருக்காது. இரு உனக்கு ஸ்வீட் செய்து தர்றேன்” என்று உள்ளே சென்றார்.
மறுநாள் மின்னஞ்சலை வரவேற்புப் பெண்ணிடம் காண்பித்துக் கேட்க, “உங்களோட செலக்டான நான்கு பேர் ஃபிப்த் ஃப்ளோர்ல வெய்ட் பண்றாங்க பாருங்க. லிஃப்ட் இந்தப்பக்கம்” என்று வலதுபக்கம் கைகாட்டினாள்.
“தேங்க்ஸ் சிஸ்டர்” என்று உதட்டில் ஒட்டாத சிறு புன்னகையைக் கொடுத்து அந்த தானியங்கி இயந்திரத்தில் ஏற, “எக்ஸ்க்யூஸ்மி கொஞ்சம் உள்ள தள்ளி நில்லுங்க” என்று வந்து நின்றான் முந்தைய நாள் நேர்முகத்தேர்வு செய்தவன்.
அந்நெருக்கமான குரலிலும், அவனின் தோற்றத்திலும் சட்டென்று பதற்றம் தொற்றிக்கொள்ள, திரும்பி நின்றவள் வேகமாக வெளியேறப் பார்த்தாள். “மிஸ்.அனுரதி! அனுரதிதான நீங்க? எஸ். எனக்கு ஞாபக சக்தி அதிகம். ஏன் வெளிய போறீங்க? நான் போனதும் மீட்டிங் ஸ்பாட்ல நியூ ஜாய்னீஸ் இருக்கணும். பங்க்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் மிஸ். உள்ள வாங்க” என்று அழைத்தான்.
தயக்கத்துடன் உள்ளே நுழைந்தவள் ஓரமாக நிற்க, கதவு சாத்தப்பட்டதும் பயம் தன்னால் வந்தது. முகமெல்லாம் வியர்க்க ஆரம்பிக்க கையிலுள்ள கோப்பை இன்னும் இறுகப்பற்றினாள். தலைசுற்றி மயக்கம் வருவது போலிருக்க, கைப்பையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தினாள். அதேநேரம் ஐந்தாம் தளம் வந்து கதவு திறந்ததும், பாய்ந்து வெளியே சென்றவளை, ஆராய்ச்சியாய்ப் பார்த்தபடி வந்தான் அவன்.
அவனுக்கான அறைக்குள் சென்றவன், புதிதாய்ச் சேர இருப்பவர்களை உள்ளே அழைத்தான். ஏற்கனவே வந்திருந்தவர்கள் அனுரதிக்கு முன்னே சென்று இருவர் இருவராக அடுத்தடுத்த இருக்கையில் அமர, இவள் அவர்களுக்குப் பின்னால் உள்ள இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
“வணக்கம்! நான் ஜெகதீஷ். இந்த கொயட் சாஃப்ட்வேர் கம்பெனி சிஇஓ. இவர் மிஸ்டர்.அறிவழகன்! மேனேஜர்” என்று அறிமுகப்படுத்தி, “என்னடா சின்னக் கம்பெனியில் இவ்வளவு சம்பளம் கொடுக்குறாங்களா? அதுவும் அதிகம் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத நம்மளுக்குன்னு யோசிச்சிருக்கலாம். இதனோட ப்ரான்ச் பெங்களூர்ல ஆரம்பிச்சிருக்கிறதால, இங்க உள்ள அனுபவசாலிகளை அங்க அனுப்ப வேண்டிய நிலை. இப்ப செலக்டான ஐந்து பேரும் ஒன் ஆர் த்ரீ இயர்ஸ் மட்டுமே எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்க. இருந்தாலும் திறமைசாலிகள்னு இந்த வாய்ப்பை உங்களுக்குக் கொடுத்திருக்கோம். இதை நல்லவிதமா பயன்படுத்திக்கிடணும். சரியா?” என்றதும்,
“கண்டிப்பா சார்” என்றனர்.
“உங்க உழைப்போட, நேர்மையையும் அதிகமாகவே கொடுக்கணும். எதாவது பிரச்சனை வந்தா, உடனே என்னை இல்லைன்னா அறிவழகன் சாரை கான்டாக்ட் பண்ணுங்க. டிராவல் பற்றிய பயம் உங்களுக்குத் தேவையில்லை. பாதியில் வண்டி நின்னுட்டாலும், அடுத்த அரைமணி நேரத்துக்குள்ள மாற்று வண்டி வந்து நிற்கும். உங்களுடைய பாதுகாப்பு எங்க பாதுகாப்புன்னு சொன்னாலும், நீங்க எப்பவும் அலார்ட்டா இருக்கிறது நல்லது. நீங்க எங்களுக்குச் செய்ய வேண்டியதெல்லாம் கடின உழைப்பு, உண்மை, நேர்மை, பொறுப்புடன் செயல்படுவது. செய்வீங்கதான?” என்று கேட்க,
“செய்வோம் சார்” என்றனர் கோரஸாக.
“மிஸ்டர் அறிவழகன் நீங்க பேசுங்க” என்று அருகில் இருந்தவனிடம் சொல்லி அமர்ந்துவிட்டார்.
“ஹாய் யங்க்ஸ்டர்ஸ்! என்னடா இவன் என்னவோ கிழவன் மாதிரி உங்களை யங்க்ஸ்டர் சொல்றேன் பார்க்குறீங்களா?” என்றதில் துடுக்கான பெண்ணொருத்தி எழுந்து, “ஆமா சார். நீங்க யங்தான். என்ன உங்க ப்யூட்டியை தாடி கொண்டு மறைச்சிருக்கீங்க. அது மட்டும் இல்லைன்னா செம ஹேண்ட்சம் சார் நீங்க” என்று அசடு வழிந்தாள்.
அவள் சொல்வது உண்மைதான் என்றபோதும், தைரியமாகப் பேசும் அப்பெண்ணை ஆச்சர்யமும், அதிர்ச்சியுமாகப் பார்த்தனர் புதியவர்கள்.
“ஹாஹா... உங்க ஹ்யூமர் சென்ஸ் சூப்பர் லாவண்யா. எனக்கு வரப்போறவளைத் தவிர மத்தவங்களுக்கு என்னைக் காட்டக்கூடாதுன்ற எண்ணம். என்னவள் வந்து இந்த தாடியைப் பார்த்துப் பிடிக்கலைன்னு சின்னதா முகம் சுளித்தால் போதும். அப்புறம்...” என நிறுத்தி புன்னகைத்தான்.
“புரியுது சார். நாங்களும் அந்த நாளுக்காக வெய்ட்டிங்” என்றனர் இளசுகள்.
அவர்கள் பேசுவதை கவனமாகக் கேட்டாலும் உதட்டளவு புன்னகை கூட அனுரதியிடம் இல்லை. அவளைப் பொறுத்தவரை தானுண்டு தன் வேலையுண்டு என்ற அளவுகோலில் நிற்கிறாள்.
“போதும் யங்க்ஸ்டர்ஸ். இங்க ஃப்ரண்ட்லியா கம்பர்டபுளா உங்களுக்கு இருக்கும். எதிரி கம்பெனிக்கு விலை போறதோ, வேலையில் அஜாக்கிரதையா இருக்கிறதோ, முக்கியமா ஆண்கள் பெண்களை மதிக்கணும். லவ் கிவ்னு வந்து பொண்ணு நோ சொன்னா நோதான். அப்புறம் அவங்களை எந்த வகையிலும் தொந்தரவு பண்ணக்கூடாது. உடன் வேலை பார்க்கும் பெண்களுக்கு ஒரு பாதுகாவலனா இருக்கணும். இதையெல்லாம் மீறி உங்கமேல புகார் வந்து அது உண்மைன்னு நிரூபிக்கப்பட்டா, நான் உங்க வாழ்க்கையை மொத்தமா முடிச்சிருவேன்” என்றதில் அனுரதி நிமிர்ந்து ஒருமுறை அவனைப் பார்த்து, பின் குனிந்து கொண்டாள்.
“நீங்க அப்படிக் கிடையாதுன்னு தெரிந்துதான் எடுத்திருக்கேன். என் நம்பிக்கையைக் காப்பாத்திருங்கப்பா” என்று விளையாட்டு தொணியில் முடித்தான்.
“நம்பிக்கை அதானே சார் எல்லாம்” என்றான் நரேன்.
“ஹா...ஹா அதேதான். லாவண்யா, நரேன், கணேஷ் மூன்று பேரும் டீம் லீடரா ஒர்க் பண்ணப் போறீங்க. எதாவது முக்கியமான ப்ராஜக்ட்னா எங்களோட இரகசியக் குழுவிலும் நீங்க இருப்பீங்க. சந்தோஷம்தானே” என்றான்.
“எஸ் சார்” என்றனர் மூவரும் சேர்ந்தாற்போல். அப்பொழுது அனுமதி கேட்டு உள்ளே வந்த பெண்மணியுடன் அவர்கள் மூவரையும் அனுப்ப, ஜெகதீசும் அவர்களைத் தொடர்ந்து சென்றுவிட்டார்.
“அனுரதி அன்ட் மாலினி! நீங்க எங்களோட...” பெயர்களைக் கேட்டதும் சட்டென்று இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்து நின்றனர்.